மகாபாரதத்தில்மிகச்சிறந்தகதாபாத்திரம்அர்ஜுனன்:

                        இந்திரனின் அருளால் குந்திக்கு மகனாகப் பிறந்த அர்ஜுனன் உலகில் சிறந்த வில்வீரன். குந்தி தேவியின் சகோதரரே வசுதேவர். எனவே அர்ஜுனனின் தாய்மாமன் மகனே ஶ்ரீகிருஷ்ணர். கிருஷ்ணரின் சொந்த அத்தையே குந்தி.  சிறுவயது முதலே கிருஷ்ணரும், அர்ஜுனனும் நண்பர்கள் மற்றும்  உறவினர்கள்.

    போரில் என்னைத் தவிர வேறு யாராலும் வெல்ல முடியாதவன் என சிவபெருமானாலேயே புகழப்பட்டவன் பார்த்தன்;  சிவபெருமானிடமிருந்து பாசுபதம் என்ற அஸ்திரத்தைத் தவம் செய்து பெற்றவன்.  பகவத்கீதையை காண்டீபனுக்கு  உபதேசிக்கும் பொழுது  பாண்டவர்களுள் நான் அர்ஜுனன்  என்கிறார்!   ஶ்ரீகிருஷ்ணர். எனவே மகாவிஷ்ணுவின் அம்சம்அர்ஜுனன். இவன் தனது குருவான  துரோணரைத் தெய்வமென மதித்தான்.  அவர் கற்றுக் கொடுத்ததைக் கவனமாகக் கற்றுக் கொண்டான். இருளிலும் அம்பு விடுதல்,  இரு கைகளாலும் அம்பெய்தல்(ஸ்வயஸாசி= இருகைகளாலும் அம்பு எய்பவன்) போன்றவற்றை  தனது இடைவிடாதப் பயிற்சி மூலம் குரு கற்றுத்தராமலேயே தானே முயன்று மேலும்  அறிந்துக் கொண்டான்!   அர்ஜுனன்.

           குருகுலத்தில் ஒருமுறை துரோணர்  ஒரு மரத்தின் மீது வைக்கப்பட்டிருந்த மரத்தாலான கிளியின் தலையைக் குறி பார்க்கும்படி கௌரவ, பாண்டவர்களிடம் கூறினார். உங்களுக்கு என்ன தெரிகிறது எனக் கேட்ட குருவிடம்  ஒவ்வொருவரும் கிளி தெரிகிறது, மரம் தெரிகிறது! என்றனர். அர்ஜுனனோ குருவே! எனக்கு அந்த கிளியின் கண் மட்டுமே தெரிகிறது என்றான். துரோணர் அம்பை விடச் சொன்னார். அம்பானது கிளியின் கண்ணைத் தைத்து, அதை வீழ்த்தியது. 

         இதில் மாணவர்களுக்கு மிகப் பெரிய பாடம் உள்ளது. கல்வி கற்கும் காலத்தில் எண்ணங்கள், செயல்கள் அனைத்தும் ஒருமுகப்பட்டு கல்வியைக் கற்பதிலேயே இருக்க வேண்டும். மாணவர்களின் கற்கும் ஆர்வத்தைப் பார்த்து ஆசிரியர்களே மென்மேலும் சிறப்பாகக் கற்றுத்தர ஆசைப்பட வேண்டும்.

           அர்ஜுனனின் கற்கும் திறன் மட்டுமல்ல அவனது அளவற்ற குருபக்தி, சகோதரப் பாசம்,தாய் சொல்லைத் தட்டாமை, வீரம், நல்லொழுக்கம் போன்ற நற்பண்புகள் அனைவரும் பின்பற்ற தக்கவை. அவனுக்குத்  திரௌபதி,  நாக கன்னியான உலூபி,  பாண்டிய ராஜ குமாரி சித்ராங்கதை  (இவளையே அல்லி என்பர்) மற்றும் கிருஷ்ணரின் தங்கை  சுபத்திரை ஆகிய நான்கு மனைவியர் இருந்தனர். அனைவரையும் சமமான அன்புடனும், மரியாதையுடனும் நடத்தினான்.    தனது புதல்வர்களிடமும் மிகுந்த அன்பு வைத்திருந்தான். அர்ஜுனன். 

          அர்ஜுனனின்  நுண்ணறிவு  மற்றும்  தெய்வ பக்தி அளப்பரியது.  சிவபூஜை செய்யாமல் உணவருந்துவதில்லை என்ற  உறுதிக் கொண்டிருந்தான்!  அர்ஜுனன்;  கிருஷ்ணரின்   சிறந்த நண்பனாகவும் விளங்கினான்.  பாரதப் போரில் கிருஷ்ணரின் பெரும் படை வேண்டாம்,அவர் ஆயுதம் ஏந்தாவிட்டாலும் என் தேரில் அமர்ந்து என்னை வழி நடத்தினாலே போதும்! என்று  வேண்டி. கிருஷ்ணரின்  துணையைப்  பெற்ற   சிறந்த  அறிவாளி.  அர்ஜுனன்.  

             ஶ்ரீகிருஷ்ணரின் மீது அவன் வைத்திருந்த அளவற்ற பக்தி, அன்பு,  மன உறுதி ஆகியவையே பாண்டவர்களின் வெற்றிக்குக் காரணமாயிற்று.   “நம்மை வழி நடத்திச் செல்லும் பொறுப்பை இறைவனிடம் விட்டுவிட்டு நம் கடமையை மட்டும் செய்தால் வெற்றி நிச்சயம்” என்பது இதன் தத்துவமாகும். 

           தேவலோக ஊர்வசி    அர்ஜுனனிடம் மயங்கிய போது     நீ என் தாய்க்குச் சமமானவள்!  என மறுத்துரைத்து அதனால் சாபமும் பெற்றவன்!  அர்ஜுனன். விராட மன்னன் மாளிகையில் பிருகன்நளையாக   இளவரசி உத்தரைக்குப் பரத நாட்டியம் கற்றுக் கொடுத்தான்  அர்ஜுனன். பின்னர் வனவாசம் முடிந்த பிறகு அர்ஜுனனுக்கு உத்தரையை மணம் செய்து தர விரும்பினான் விராட மன்னன்.  

       உத்தரை என் மாணவி!   எனவே என் மகளுக்குச் சமமானவள்!  என மறுத்துரைத்து தன் மகன் அபிமன்யுவிற்கு மணம் செய்து வைத்தான்!  அர்ஜுனன்.  அர்ஜுனனின் வாழ்க்கை மாணவர்களுக்கு மட்டுமல்ல!  ஆசிரியர்களுக்கும் சிறந்த முன் உதாரணம். தன்னிடம் பயிலும் மாணவியை மணம் முடிக்க கூடாது; மாணவி என்பவள் மகளுக்குச் சமமானவள் என்று வாழ்ந்த அர்ஜுனன் மிகச்சிறந்த குரு.  கீதையைக் கண்ணபிரானிடமிருந்து  உபதேசிக்கப்  பெற்ற அர்ஜுனன்  மிகச் சிறந்த உதாரண புருஷன்.   

நன்றிகள் சனாதன தர்மம். 

Leave a comment