எல்லாம் அம்பாளோட க்ருபை,

தேனம்பாக்கத்தில் பெரியவா… கிணற்றின் பக்கத்திலிருந்து தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்.சின்ன குயில்களின் கானமும், காக்கைகளின் எசப்பாட்டும் தவிர வேறு சத்தமில்லா நிசப்தம். “காமாட்சி… காமகோடி பீடவாஹினி..”- ஒரு பெண்மணி, மிக மதுரமாக பாடிக்கொண்டிருந்தார். அவர் அருகில், வேறொரு பெண், இடுப்பில் 3 வயது குழந்தையை வைத்தபடி பெரியவாளையே தரிசனம் செய்துகொண்டிருந்தார்.

“கமலேச சோதரி கமலாக்ஷி நாராயணி….” என்று பாடியவர், அடுத்த வரி மறந்து சற்று தடுமாறினார்…உடனே, “நாத பிந்து கலா ஸ்வரூபிணி..காத்யாயனி..”என்று, மழலையின் குரல் எடுத்துக்கொடுத்தது.. கண்ணில் நீர் பொங்க, அந்தப்பெண்மணி, கைகளாலேயே அந்த குழந்தையின் கன்னத்தை வருடி, முத்தமிட்டு, பாடலை பாடி முடித்தார்.”யாரோட குழந்தை அது…”- பெரியவா உள்ளிருந்தபடியே கேட்டார்.”என்னோட பையன் தான்.. பெரிவா…” – கையில் குழந்தையை வைத்திருந்தவர், சற்று தூக்கி காண்பித்தார்..”உனக்கு, எப்படி இந்த பாட்டு தெரியும்?..- குழந்தையை கேட்டார்.”எங்க அம்மா தினமும் பாடுவாளே….””சந்தோஷம்.. ” – ஒரு ஆப்பிளை எடுத்து, குழந்தைக்கு ப்ரசாதமாக கொடுத்தார்.குழந்தையை வைத்திருந்தவருக்கு, உலகமே தனக்கு கிடைத்த ஒரு சந்தோஷம்..

அப்பொழுது, ஒரு வயதான தம்பதி, கையில் ஒரு பழ தட்டுடனும், கண்களில் மிகுந்த ஏக்கத்துடனும், பெரியவாளை நெடுஞ்சாண்கிடையாக நமஸ்கரித்தார்கள்..”என்ன வேண்டும்..”- கண்களாலேயே கேட்டது, பரப்ரம்மம்.”பொண்ணுக்கு நிச்சயம் பண்ணியிருக்கோம். சொந்த மாமாவையே, கல்யாணம் செய்து வைக்கிறோம்.””உறவு விட்டு போய்ட கூடாதுன்னா?…””அது மட்டும் இல்ல.. பெரிவா., வேற இடத்துல செஞ்சு வெக்க வசதியும் இல்ல…””சரி… என்ன வேணுமாம்?.. – கேளுடா.”கல்யாணம்னு செஞ்சு வெக்க அடிப்படை தேவைகளுக்கு கூட பணம் இல்ல.. பெரியவா தான் ஏதாவது வழி காட்டணும்.” – கண்ணீர் மல்க நின்றனர் அந்த தம்பதியர்.சற்று நேரம் அங்கு மிகப்பெரும் மௌனம்…”அவாள, அந்த மரத்தடில போய் கொஞ்ச நேரம் உக்கார சொல்லு.” தம்பதியர், பெரிவாளுக்கு நமஸ்காரம் செய்து விட்டு, அழுது கொண்டே, மரத்தடிக்கு சென்று அமர்ந்து கொண்டனர்.

அதுவரை, இதை பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு, என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவல். குறிப்பாக, கையில் குழந்தையை வைத்திருந்த அந்த பெண்ணுக்கும், பாடியவருக்கும்.ப்ரசாதம் வாங்கிக்கொண்டு, வீடு திரும்ப நினைத்தவர்கள், அங்கேயே நின்றுவிட்டனர்..சரியாக, பதினைந்து நிமிடம் சென்றிருக்கும்.. ஒரு கார் வந்து நிற்கும் சத்தம். அதிலிருந்து, ஒரு மார்வாடி குடும்பம் இறங்கியது..கையில், மிக பெரிய தட்டு, அதில் ஒரு துணியில் மூடி எதையோ கொண்டு வந்தனர்.பெரியவா முன் அதை வைத்துவிட்டு, கை கூப்பி நின்றனர்”என்னது?…” சைகையாலேயே கேட்டார் அனைத்தும் அறிந்த அந்த ஆதி மூலம்.”இவருக்கு போன மாசம், ஹார்ட் ஆபரேஷன் நடந்தது.. ஆபரேஷ நல்ல படியா முடிஞ்சு இவர் குணமானா, ஒரு ஏழை பெண்ணுக்கு கல்யாணத்துக்கு உதவறதா வேண்டிண்டோம். பெரியவர், யார சொல்றீங்களோ, அவங்களுக்கு இதை அப்படியே கொடுக்கறோம்.

“அந்த மரத்தடில இருக்கறவாள, வரச்சொல்லுடா”உத்தரவு கிடைத்தவுடன், ஓடிவந்தார்கள் அந்த தம்பதியர்.”இதை அப்படியே அவாள எடுத்துக்க சொல்லு…” – உத்தரவிட்டார்கொண்டுவந்தவர், பெற்றுக்கொண்டவர், இதை கண்டவர் என, எல்லாரும் கண்கள் குளமாக நின்றனர்.அனைத்தையும் நடத்திய அந்த பரப்ரம்மம், ஆசிர்வதித்தது… “எல்லாம் அம்பாளோட க்ருபை, க்ஷேமமா இருங்கோ…”

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

கடவுளின் அருள் வேண்டுமானால், குரு பாதை காட்ட வேண்டும்.

ஒரு சமயம் காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயிலில் கருடசேவை நிகழ்ந்து கொண்டிருந்தது. சென்னையை சேர்ந்த கணவன், மனைவி விழா காண வந்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்ததால், சமூக விரோதிகள் உள்ளே புகுந்து விட்டனர். ஒருவன், அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த ஆறு பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு கூட்டத்தில் மறைந்து விட்டான்.

பெருமாளைத் தரிசிக்க வந்த இடத்தில், இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதை எண்ணி அந்த தம்பதியரின் மனம் மிகவும் நொந்தது. அவர்கள் காஞ்சி மடத்திற்கு வந்து மகாபெரியவரைத் தரிசித்தால், தங்களுக்கு தீர்வு கிடைக்குமென நம்பி வந்தனர். பெரியவரைத் தரிசிக்க பெரிய கூட்டம் வரிசையில் நின்றது. தம்பதிகளும் வரிசையில் இணைந்து கொண்டனர். அந்த பெண்ணின் கண்களில் நீர் கோர்த்திருந்தது. வரிசையில் வந்தவர்கள் சுவாமியை வணங்கி விட்டு, நகர்ந்து கொண்டே இருக்க, அந்தப் பெண்ணைக் கவனித்த பெரியவர் அவரை அழைத்து, “”ஏன் அழுகிறாய்?” என்று ஏதும் அறியாதவர் போல் கேட்டார்.

முக்காலமும் உணர்ந்த அந்த நடமாடும் தெய்வத்திற்கா இந்த சம்பவம் தெரியாமல் போயிருக்கும்! இருப்பினும், பெண்ணிடம் அந்தக் கேள்வியைக் கேட்டு வைத்தார்கள்.அந்தப் பெண் நடந்த விபரங்களை ஒன்று விடாமல் சொன்னார். உடனே பெரியவர் அவரிடம்,””மடத்துக்கு எதிரே இருக்கிற கங்கைகொண்டான் மண்டபத்தில் தெற்கு நோக்கி ஒரு ஆஞ்சநேயரும், ஏகாம்பரநாதர் கோயில் மண்டபத்தில் மேற்கு நோக்கி தூணில் எழுந்தருளியிருக்கும் இரண்டு ஆஞ்சநேயர்களையும் தரிசிக்கச் செல். 

அந்த ஆஞ்சநேயர்களை 21 தடவை பிரதட்சணம்(வலம்) செய். பிறகு வீட்டிற்கு போ,” என்றார்.அந்தப் பெண்,””போலீசில் புகார் கொடுக்க வேண்டாமா?” என்று கேட்டார்.””வேண்டாம்…வேண்டாம்…நீ பிரார்த்தனை முடிச்சுட்டு வீட்டுக்குப் போ,” என்றார் பெரியவர்.பெரியவர் சொன்னபடி, அந்த அம்மையாரும் அவரது கணவரும் ஆஞ்சநேயர்களைத் தரிசித்த பிறகு பஸ்ஸ்டாண்ட் சென்றனர். 

அப்போது இவர்களுடன் சென்னையில் இருந்து வந்தவர்கள், “”மாமி..மாமி…உங்களைத் தான் தேடிக் கொண்டு இருந்தோம். உங்கள் செயினைப் பறித்தவனை போலீஸ் பிடிச்சு நகையை கைப்பற்றிட்டாங்க. நீங்க ஸ்டேஷனுக்குப் போய் அடையாளம் சொல்லி வாங்கிக்கலாம்,” என்றனர்.அவர்களும் ஸ்டேஷனுக்குச் சென்று பொருளைப் பெற்ற பிறகு, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினார்கள். 

கடவுளின் அருள் வேண்டுமானால், குரு பாதை காட்ட வேண்டும். காஞ்சி மகாபெரியவரை நமது குருவாக ஏற்று வேண்டுதல்களை வைத்து விட்டால் போதும்! நமது கோரிக்கைகள் உரிய தெய்வங்களின் உதவியுடன் நிறைவேறி விடும். காஞ்சிபுரம் சென்றால், இனி நீங்களும் இந்த ஆஞ்சநேயர்களிடம் உங்கள் வேண்டுதலை வைத்து வரலாம்… 

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர மகாபெரிவா சரணம் சரணம் சரணம் சரணம் 

அன்புடன் உங்கள் SV 

இந்த பதிவை நமக்கு அனுப்பி தந்தவர்  Krishnan S S  .. நன்றி 

உன் பூர்வ ஜன்ம பலன்

மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்துவந்த மடத்தின் மூத்த ஊழியர்களில் ஒருவர் பாலு. மகா பெரியவர் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தபோது நடந்த சிலிர்ப்பான சில சம்பவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

”கேரளத்தில் இருந்து பெண்ணொருத்தி பெரியவாளைத் தரிசிக்க வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தபோது, தரையில் தடுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு விட்டதாம். அதிலிருந்து அடிக்கடி ஃபிட்ஸ் மாதிரியான பாதிப்பால் அவஸ்தைப்பட்டு வந்தாள்.

அவளின் கண்பார்வையும் பறிபோனதாம். காலக்கிரமத்தில் குழந்தை பிறந்தது என்றாலும், அவளின் பார்வை திரும்பவில்லை. இந்த நிலையில் அவர்களின் குடும்பத்துக்குப் பரிச்சயமான நண்பர் ஒருவர் பிரஸ்னம் பார்க்கச் சொன்னாராம். அவரே நம்பூதிரி ஒருவரையும் அழைத்து வந்திருக்கிறார். 

பெண்ணின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த நம்பூதிரி, ‘கவலைப்படாதீங்க, கண்பார்வை கிடைச்சுடும். ஆனால், நீங்க க்ஷேத்திராடனம் செய்யணும். குருவாயூரில் துவங்கி, கும்பகோணம், திருவிடைமருதூர்னு புண்ணிய தலங்களுக்கெல்லாம் போயி வேண்டிக்கோங்க. முடிந்தால் அந்தத் தலங்களில் தீர்த்தமாடுறதும் விசேஷம்’னு சொல்லியிருக்கார்.

அதன்படியே க்ஷேத்திராடனம் கிளம்பிய அந்தப் பெண்மணி, வைத்தீஸ் வரன் கோயிலுக்கும் சென்றாளாம். அங்கே ஸ்வாமி சந்நிதியில், குருக்கள் தீபாராதனை முடிந்து தட்டை நீட்டிய தும், ஆரத்தி எடுத்துக்கொண்டவள், தட்டில் நூறு ரூபாய் தட்சணை வைத்தாளாம். 

குருக்களுக்கு ஆச்சரியம். இவளுக்குப் பார்வை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டவர், ‘அம்மா… இது பத்து ரூபாய் இல்ல; நூறு ரூபாய் நோட்டு’ என்று சொல்லி யிருக்கிறார். இவளும், ‘பரவாயில்லை…எடுத்துக்கோங்க’ என்றாளாம். உடனே அந்தக் குருக்கள், ‘நீங்க பெரியவாளைப் பார்த்ததில்லையா?’ என்று கேட்டாராம். 

அவர் யாரைச் சொல்கிறார் என்று இந்தப் பெண்மணிக் குத் தெரியவில்லை. குருக்களிடமே விசாரித்திருக்கிறாள். ‘காஞ்சிபுரத்தில் இருக்காரே, சங்கர மடத்தில்… அவரை தரிசனம் செய்யுங்கோ’ என்று அறிவுறுத்தியிருக்கிறார் குருக்கள். இவளும் உடனே அங்கிருந்து புறப்பட்டு, சிதம்பரம் சென்றுவிட்டு, அப்படியே காஞ்சிபுரத்துக்கும் வந்தாளாம். 

அன்று, சென்னையில் ஒரு பிரமுகர் வீட்டில் உபநயனம். அவர்களுக்குப் பிரசாதம் எல்லாம் அனுப்பிவிட்டு, மடத்தில் அமர்ந்திருந்தார் பெரியவா. அந்த நேரம் அங்கே வந்த இந்தப் பெண்மணி, தான் கொண்டு வந்த பழங்களை அருகில் இருந்த நாற்காலியில் வைத்துவிட்டு, தனது நிலைமையை விவரித்தாள். 

வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்னபடி, காஞ்சி முனிவரைத் தரிசிக்க வந்திருக்கும் விஷயத் தையும் கண்கலங்கச் சொன்னாள். உடனே அவளின் புருஷனைக் கூப்பிட்ட பெரியவா, ‘என்னைத் தெரியறதான்னு உங்க சம்சாரத்துக்கிட்டே கேளுங்க!’ என்றார். 

அத்துடன், அருகிலிருந்த டார்ச் லைட்டை எடுத்து, தன் முகத்தில் வெளிச்சம் அடித்துக் கொண்டார் மகா பெரியவா. அதே நேரம் அந்தப் பெண், ‘குருக்கள் சொன்ன சந்நியாஸி இதோ தெரிகிறாரே!’ என்றாளாம் சத்தமாக… பரவசம் பொங்க!

ஆமாம்… காஞ்சி தெய்வம் அவளுக்குக் கருணை புரிந்தது. ‘நம்பினார் கெடுவதில்லை…இது நான்கு மறைத் தீர்ப்பு’ என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்! காஞ்சி முனிவரின் சந்நிதானத்தில் அந்தப் பெண்மணிக்குப் பார்வை கிடைத்தது.

அவளுக்கு கண்பார்வை மீண்டும் கிடைக்க பிராப்தம் இருந்தது. அதற்கும் மேலாக தெய்வத்தின் மீதும், வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்ன பிறகு மகா பெரியவா மீதும் அவள் வைத்திருந்த அதீத நம்பிக்கையும் வீண்போகவில்லை.

ஆனால் இதுகுறித்து மகா பெரியவாளிடம் கேட்டபோது, அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன் பூர்வ ஜன்ம பலன், உன்னோட நம்பிக்கை, நான் தினம் தினம் தியானம் செய்யற அம்பாள் காமாட்சியோட கருணை… எல்லாம்தான் காரணம்!’ என்றார்” ..மகாபெரியவா ..!!

ஜயஜய சங்கர !!  ஹரஹர சங்கர !!

அன்புதான் பெரியது

காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகளின் வாழ்வில் ஒரு நிகழ்வு .  சுவாமிகள் அடிக்கடி மௌன விரதம் இருப்பதுண்டு  .  சில நாட்களில் சாதாரண மௌன விரதம் இருப்பார்கள் .  அப்போது ஜாடையால் பேசுவார்கள் .  பக்தர்கள் யாராவது தரிசிக்க வந்தால் கைகளை உயர்த்தி ஆசி கூறுவார்கள்.

      சில நாட்களில் காஷ்ட மௌன விரதம் இருப்பார்கள் அன்று ஜாடையால் பேசுவது கூட கிடையாது . பக்தர்களை பார்க்கவும் மாட்டார்கள் .      அன்று அப்படித்தான் சுவாமிகள் 

காஷ்ட மௌன விரதம் மேற்கொண்டிருந்தார் .  ஒரு அறையில் அமர்ந்து இருந்த சுவாமிகளை பக்தர்கள் ஜன்னல் வழியாக பார்த்துவிட்டுப் போனார்கள் .      பல வருடங்கள் நெறி தவறாது காஷ்ட மௌன விரதம் இருப்பார்கள்.சுவாமிகள்  , நாட்டின் தலைவர்கள் ,ஜனாதிபதிகள் போன்றவர்கள் வரும்போது கூட சுவாமிகள் தன் விரதத்திலிருந்து தவறியதில்லை.      ஆனால் அன்று திடிரென்று சுவாமிகள் கத்தினார்கள் .      ” அதோ போறான் பாரு , அவனை கூப்பிடு .  உடனே கூப்பிடு .  ”      மடத்தில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சி சைகையால் கூடப் பேசாத சுவாமிகள் ஏன் வாய் திறந்து பேசுவானேன்   ?

அதுவும் ஒரு பதற்றத்தோடு பேசுவானேன்  ?  அவர் கூப்பிடச் சொன்ன நபர் அப்படி ஒன்றும் முக்கியமான நபர் இல்லையே  ! அந்த நபரை இன்று இல்லாவிட்டால் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாமே .  ஒரு தனிமனிதனுக்காக சுவாமிகள் ஏன் பல வருடங்களாகக் கட்டிக் காக்கும் ஒரு விரதத்தைக் குலைத்துக் கொள்ள வேண்டும்  ? பொதுவாக உத்தமத் துறவிகளின் விரதத்திற்கு பங்கம் நேர்ந்தால் அது நாட்டிற்கு நல்லதில்லை என்று சொல்வார்கள் .  சுவாமிகள் ஏன் இப்படிச் செய்ய வேண்டும். ?      மடத்தில் இருந்தவர்களின் மனதில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள்  .  என்றாலும் சுவாமிகள் சொன்ன நபரை அழைத்து வந்தனர் .      சுவாமிகள் அந்த நபரோடு அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள் .  பின் ஆசிகள் வழங்கி அனுப்பி வைத்தார்கள் . அந்த நபர் போனதும் மடத்தில் இருந்த ஒருவரிடம் தன்னிலை விளக்கம் கொடுத்தார்கள் சுவாமிகள் .      ”  அவன் யார் தெரியுமா  ?  சுதந்திர போராட்டத்துல ஈடுபட்டவன் .  போலீஸ் அவனைக் கன்னா பின்னான்னு அடிச்சதுலே அவன் இரண்டு கண்ணும் போயிடுச்சு .  என்னைப் பார்க்கனும் என்று ரொம்ப தூரத்துலருந்து வந்திருக்கான் .  கண்ணு தெரியாதவன் கிட்டே நான் எப்படி சைகை பாஷையில் பேச முடியும்  ?   அதான் விரதத்தை தள்ளி வச்சிட்டு அவன்கிட்ட பேசினேன் .

எவ்வளவு சந்தோஷமாகத் திரும்பிப் போறான் பார்த்தியா  ?   இந்த நாட்டுக்காக தன் கண்ணையே பறிகொடுத்த உத்தமண்டா  அவன் .  அவனுக்காக ஒரு சன்னியாசி ஒரு நாள் விரத்த்த விட்டுக் கொடுக்கறது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை .      இந்த அன்பு இறைவனுக்கு சமமான அன்பு , இந்த அன்பு சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் பார்க்காது .       சுவாமிகள் விரதத்தைக் குலைத்து கொண்டார் என்றவுடன் , அங்கு உள்ளவர்கள் முகத்தில் ஒரு மெல்லிய சுலிப்பு உண்டானது என்னவோ‌ உண்மைதான் .  அதற்குண்டான காரணம் தெரிந்தவுடன் நம்மிடம் ஒரு தீர்க்கமான சிலிர்ப்பு தான் ஏற்பட்டது . அதற்கு எத்தனை கோடி கொடுத்தாலும் தகும் .      தான் கட்டிக்காக்கும் நோன்பை விட அன்புதான் பெரியது என்பதை சுவாமிகள் போன்ற துறவிகள் தவிர வேறு பலரும் உணர்ந்திருந்தனர் .

~   வரலொட்டி  ரெங்கசாமி  எழுதிய

      கண்ணா  வருவாயா  , 

      புத்தகத்திலிருந்து  , பக்கம் :  192 – 194

கும்பகோணம் ரயிலடியில் உள்ள ரயில்வே பிள்ளையாரின் மகத்துவம்

கும்பகோணம் ரயிலடியில் கற்பக விநாயகர் கோயில் உள்ளது. 

இந்த கோயில் மிக பழமையானது. 1955ல் திவான் ஸ்ரீனிவாச ராவ் கடைசியாக கும்பாபிஷேகம் செய்ததாக ரயில்வேயில் வேலை பார்த்த சீனியர் சிடிசென்ஸ் கூறுவர் . இக்கோயிலில் மதுரை சோமு, ராதா ஜெயலட்சுமி, சீர்காழி Dr. சிவசிதம்பரம் உள்ளிட்ட பல புகழ் மிக்க பாடகர்கள் விநாயக சதுர்த்திக்கு கச்சேரி செய்துள்ளார்கள். ரயிலுக்கு செல்பவர்கள் பலர் இக்கோயிலுக்கு வந்து குட்டிக்கொண்டு உண்டியலில் காசு போட்டு செல்வது வழக்கம்.  பிள்ளை வரம் தரும்  பிள்ளையார் என்று இவர் பக்தர்களால் நம்பப்பட்டு இங்கு வேண்டியபின் பிறக்கும் குழந்தையை பிள்ளையார் சன்னதியில் முதன் முதலில் போடும் வழக்கமும் உள்ளது. இப்படி பிரபலமான பிள்ளையார் கோவிலை ரயில்வே போர்ட்டர் ஒருவர் சிறிது காலம் பராமரித்து பின் அந்த கோயில் தனக்கு சொந்தம் என கோர்ட்டில் வழக்கு போட்டார். சில காலம் பூஜை  நின்றது. HR &CE துறையினர் வந்து கோவில் உண்டியலை திறந்து பணம் எடுத்துச்செல்வது மட்டும்  தவறாமல் நடந்தது. இந்நிலையில்,இந்த கோயில் ரயில்வேக்கு தான் சொந்தம் என கோர்ட் தீர்ப்பு சொன்னது.ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். போர்ட்டரும் போயாச்சு ,HR &CEம் போயாச்சு.வழக்கம் போல் குருக்கள் பூஜை தொடர்ந்து வந்தது. 

அப்போது திடீரென 2010ல் திருச்சி ரயில்வே கோட்ட  பொறியாளர் ஒருவர் ரயில்நிலைய மேம்பாட்டு பணிகளுக்காக அந்த பிள்ளையார் கோவிலை இடித்துவிட்டு வேறு இடத்தில் புதிய கோயில் கட்ட உத்தரவிட்டார். அவர் கோவிலுக்கு ஒதுக்கிய பகுதி  ரயில்வே குடியிருப்பு டிரைனேஜ் சங்கமிக்கும் இடம். இது தொடர்பாக இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தியது. ஒரு நாள் நான் அந்த கோவிலுக்கு வழக்கம்போல் விநாயகரை தரிசனம் செய்ய சென்றபோது, ரயில்வே கேன்டீன் காண்ட்ராக்டர் ரயில் நிலைய மேலாளருடன் வந்து என்னிடம் எப்படியாவது கோயில் இடிப்பதை தடுக்க வேண்டும்  என்று கேட்டுக்கொண்டனர்.  நான் திருச்சி ரயில்வே கோட்ட  ரயில் உபயோகிப்பாளர் ஆலோசனை குழு உறுப்பினர் என்பதால் என்னால் எதாவது செய்ய முடியும் என்று (தவறாக) நினைத்தனர். நானும் முயற்சி செய்கிறேன் என்று கூறிவிட்டு கண்களை மூடி பிள்ளையாரையே வேண்டிக்கொண்டேன். ” பிள்ளையார் யாரையோ தேடுகிறார்; அவர் கிடைத்தவுடன் பிரச்சனை முடிந்துவிடும்.  பிள்ளையாரை யாராலும் ஒரு அங்குலம் கூட அசைக்க முடியாது” என்று ஆறுதலுக்காக ஒரு வார்த்தையை  கூறிவிட்டு வந்தேன்.  எனக்கு மிகவும் பரிச்சயமான மணி சங்கர் ஐயர் அப்போது 

மத்திய அமைச்சர். அவரிடம் பிரச்னையை சொன்னேன். அவரும் DRM  ராம் சந்திர ஜாட் என்பவருடன் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்து கோவிலை இடிக்காமல் ரயில்வே மேம்பாட்டு  பணிகளை செய்ய வலியுறுத்தினார்.  ஆனால் அந்த  பொறியாளர் மட்டும் மசியவே இல்லை. கோவிலை இடிக்க நாள் குறித்தாகி விட்டது.காலை 6 மணிக்கு இடிக்க ஏற்பாடு.  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மயிலாடுதுறையில் உள்ள section engineer வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இரவு நிலைய மேலாளர் என்னை கோவிலுக்கு அழைத்தார்.” சார், எல்லாம் கை  மீறி போய்க் கொண்டிருக்கிறது; நாளை நான் லீவ் சொல்லிவிட்டு  வந்துள்ளேன்; கோயில் இருந்தால் மீண்டும் வேலைக்கு வருவேன் இல்லையென்றால் resign  செய்துவிடுவேன்” என்று வருத்தத்தோடு கூறிவிட்டு சென்றார். அப்போது நான் அவரிடமும் “கண்டிப்பாக கோவிலுக்கு ஒன்றும் ஆகாது என்று தோணுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூற ஒரு சிதறு காய் போட்டுவிட்டு வந்தோம். 

மறு  நாள் காலை 5.30 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து எங்கள் வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோவிலில்  விளக்கேற்றி மனமுருக வேண்டினேன்.  முதல் நாள்காலை பூஜையின்போது  பிள்ளையார் கிரீடத்தில் வைத்திருந்த  பூ சட்டென்று கீழே விழுந்தது.நல்ல சகுனம் என்று சற்று நிம்மதியாக இருந்தாலும் மனம் பதைபதைத்து. உண்மையில்  நமது  JC ஐயர் அளவிற்கு நான் தைரியசாலி கிடையாது. 

காற்றில் கம்பு சுத்துபவன் தான். சரியாக  7 மணிக்கு மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எனக்கு தெரிந்த ரயில்வே போலீஸ் நண்பருக்கு போன் செய்து நிலைமை குறித்து கேட்டேன். அவர் இதுவரை யாரும் வரவில்லை, இந்து அமைப்பினர் சுமார் 20 பேர் தூரத்தில் நிற்கின்றனர் என்றார்.  இடிக்க தொடங்கினால்  போன் செய்யுங்கள் என்று சொல்லி வைத்தேன். என்ன ஆச்சர்யம்! கோயில் இடிக்கப்படவில்லை; காரணம் கேட்டபோது அப்பணிக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட பிரிவு பொறியாளருக்கு இரவு திடீரென பக்க வாதம் வந்துவிட்டதாம். அவர் சிறப்பு ஆம்புலன்ஸில்   சென்று பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் காலை அதே 6 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்தது.கோவில் இடிபடாத காரணம் புலப்படாவிட்டாலும், பிள்ளையார் தேடும் நபர் அவரல்ல என்பது மட்டும் தெரிந்தது. அதனால் கோவிலில் அவருக்காக 

சிறப்பு அர்ச்சனை செய்து பிரசாதம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தோம். அதன் பிறகு கும்பகோணம் ரயில் நிலைய ஆய்விற்கு எந்த உயர் அதிகாரி வந்தாலும் கோவில் பக்கம் செல்லவே மாட்டார்கள்.  இருப்பினும் கோயில் இடிக்கும் முடிவை ரயில்வே நிர்வாகம் மாற்றவேயில்லை. மீண்டும் கோயில் இடிப்புக்கு நாள் குறிக்கப்பட்டது.  இந்த முறை பிள்ளையார் யாருக்கும் suspense  வைக்கவே இல்லை.  நாள் குறித்து ஆர்டர் வெளியான  

மறு நாளே லஞ்ச ஊழல் ஒன்றில்,  கோவிலை இடிப்பதில் கங்கணம் கட்டிக்கொண்டு  முழு முனைப்பு காட்டிய தெலுங்கு  கோட்ட  பொறியாளர் கையும் களவுமாக பிடிபட்டார்.  அவரை மாட்டிவிட்ட  காண்ட்ராக்டர் *விநாயகம்* ; கைது செய்த சிபிஐ ஆபிசர் *கணேசமூர்த்தி* ஒரு வழியாக பிள்ளையார் தேடிய நபர் கிடைத்தவுடன் பிரச்சனை முடிவுக்கு வந்தது. திருந்த வாய்ப்பு கொடுத்தும்  

திருந்தாமல் இருந்த அந்த பொறியாளரை  வேறு வழியின்றி  பிள்ளையார் தண்டிக்க வேண்டியதாயிற்று.   

அதன் பிறகு 2016ல் கோயில் விஸ்தரிக்கப்பட்டு (பிள்ளையார் மட்டும் ஒரு அங்குலம் கூட நகராமல்)  நோய்வாய்ப்பட்டு  நன்கு குணமடைந்த  செக்ஷன் என்ஜினீயர் உடபட ஓய்வு பெற்ற  பல ரயில்வே நிலைய அதிகாரிகள் , ஊழியர்கள்,   பயணிகள், பக்தர்கள் புடை சூழ  வெகு விமர்சையாக  கும்பாபிஷேகம் நடைபெற்றதை கூறவும் வேண்டுமோ     கோவில் கட்டிட பணிகள் கும்பாபிஷேக  செலவீனங்கள் தோராயமாக 5.50 லட்சத்திற்கு மேல் ஆனது. பிள்ளையாரை வேண்டி புத்திர பாக்கியம் பெற்ற ஒரு NRIன்   கனவில் பிள்ளையார்தோன்றி கோவில் கட்டச் சொல்ல,  திடீரென்று  வந்த அவர் கொடுத்த தைரியத்தில் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. 4 லட்சம் வரை  செலவுகளை அவர் தானாகவே  ஏற்றுக்கொண்டார்.  உட்கார்ந்த இடத்திலேயே  அணு அளவும் அசைந்து கொடுக்காத   _ கற்பக விநாயகர் இன்றும்   அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார்                                       

*சரணம்  கணேசா*!!!

* சாமியாவது பூதமாவது என்பவர்களுகான பதிவு

நன்றி:indu balaji fb timeline post dt 2 July 2020.  ஓம்கணபதயேநமக 

படித்ததில் பிடித்தது     (இணையத்தில் படித்த பகிர்வு)

தமிழ் சுருக்கெழுத்து நூல்

“*

தம் சிரசில் இருந்த வில்வ மாலையை எடுத்து அந்த நூலின் மேல் வைத்து திரும்பக் கொடுத்தார்கள் பெரியவா. 

1957-58-ம் ஆண்டு சென்னைக்கு காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகள் விஜயம் செய்தார்கள். வியாஸ பூஜை. சென்னை, மயிலாப்பூர் சம்ஸ்கிருத கல்லூரியில் நடை பெற்றது.

இரவு பூஜை ஆனவுடன் அவர்கள் உபந்நியாசம் செய்வார்கள். அவரது அமுத மொழியினை, நான் அப்படியே ஒரு வார்த்தைக்கூட விடாமல் சுருக்கெழுத்தில் எழுதிக்கொண்டு, பின்னர் நேர் நடையில் செய்து வந்தேன். அவைதான் பின்னர், ‘ஆசாரிய ஸ்வாமிகள் உபந்நியாசங்கள்’ என்ற தலைப்பில் கலைமகள் வெளியீடாக வந்தன.

ஒருநாள், ஸ்ரீ மஹாஸ்வாமிகள் ராஜா அண்ணாமலை புரத்துக்கு விஜயம் செய்யும் நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. போகும் வழியில் நாங்கள் நல்லப்பன் தெருவும், ஆடம் தெருவும் இணையும் இடத்திற்கே சென்று, பெரியவாள் வருகைக்குக் காத்திருந்தோம். ‘மேனா’ வந்தது. பூர்ணகும்பம் கொடுத்து பெரியவாளை வணங்கிக் கொண்டோம்.சட்டென்று பெரியவாள் என்னை அழைத்து, ‘நீ எங்கே இருக்கே?’ என்றார்கள். “இந்தத் தெருவில் தான் குடியிருந்து வருகிறேன்” என்றபடி நல்லப்பன் தெருவைக் காட்டினேன். மேனாவை எங்கள் தெருவழியாகப் போகச் சொல்லி விட்டார்கள். காரணம் புரியவில்லை. நாங்கள் ஓடோடி வந்து, வீட்டுக் கதவுகளைத் திறந்து விளக்கேற்றுவதற்குள் மேனா வந்துவிட்டது.

என்னைத் தன்னருகில் அழைத்து, “தமிழ் சுருக்கெழுத்து நூல் ஒன்றை நீ எழுதியிருப்பதாகச் சொன்னாயே?அதை எடுத்துவா பார்ப்போம்” என்றார்கள். வீட்டினுள் சென்று, நூலின் கையெழுத்துப் பிரதியை எடுத்து வந்து அவரிடம் சமர்ப்பித்தேன். ஒவ்வொரு பக்கமாக – அவசரமே காட்டாது – குறுஞ்சிரிப்பு முகத்தில் தவழ அந்நூலை அவர்கள் கடைசிப் பக்கம் வரை பார்வையிட்டார்கள். அவர் முகம் தாமரை போல் சிவக்க – ஆங்கில பிட்மனில் P என்றுள்ளதை ‘ப’ என்றும், M என்றுள்ளதை ‘ம’ என்றும் அப்படியே தமிழுக்கு ஏற்றாற்போல நூலைத் தமிழில் எழுதியிருக்கிறாய்” என்று சொன்னபோது, எதையும் பார்த்தவுடன் கிரகித்துக் கொள்ளும் அவரது நுண்ணிய அறிவுத்திறன் எங்களை சிலிர்ப்படையச் செய்தது. 

“இந்நூல் அச்சாகிவிட்டதா?” என்று கேட்டார்கள். 

“இல்லை” என்றேன். தம் சிரசில் இருந்த வில்வ மாலையை எடுத்து அந்த நூலின் மேல் வைத்து திரும்பக் கொடுத்தார்கள்.

தமிழக அரசே அந்நூலை அச்சிட்டு 1964-ல் வெளியிட்டது. 1998-ல் 4ம் பதிப்பு வெளிவந்து தமிழுக்கும், தமிழ் உலகுக்கும் பயன்படும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.

என்னே! அந்த தெய்வத்தின் அருளாற்றல்!!

சொன்னவர்; அனந்தன்- சென்னை-29

பக்திக்கு வயது…


பக்தி என்பது எந்த வயதிலும் ஏற்படலாம்.
முக்திக்கும் பக்திக்கும் சம்பந்தம் உண்டா…?
இல்லை என்பது தான் புராணங்களும் வரலாறுகளும் காட்டும் உண்மையாக உள்ளது.


திருநாவுக்கரசர் தனது 81-ஆவது வயதில் உழவாரப் பணி செய்யும்போது இறைவன் முக்தி கொடுத்தார். சதய நட்சத்திரத்தில் இறைவனோடு ஐக்கியமானார்.


சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அவரது 16-ஆவது வயதில் திருமணத்தின் போது இறைவன் தடுத்தாட்கொண்டார்.18 வயதில் கைலாயம் சென்றார்.

மிகவும் குறுகிய காலத்தில் ஆறே நாட்களில் கண்ணப்ப நாயனாரின் பக்தியை மெச்சி அவரை இறைவன் ஆட் கொண்டார்.
இப்போது சிந்தித்துப் பார்ப்போம். 81 வருடம்,18 வருடம், 6 நாட்கள் இதுதான் பக்திக்கு வயது.
இங்கே அனுபவம் முக்கியம் இல்லை. பக்தியின் ஆழம், கொண்ட கொள்கையில் தீவிரம், இவை தான் முக்திக்கு வழி வகுத்தவை.

சித்தப்பிரமை பிடித்த பெண்ணுக்கு அருள்

மகாபெரியவாள்,காஞ்சியில் சாதுர்மாஸ்ய விரதம் இருந்த காலம். அப்போது வயதான ஒரு தாயார், எப்போதுமே மகானைத் தியானித்துக் கொண்டு இருப்பவர். அவருக்கு இரண்டு பெண்கள். அங்கே தன் பெண் ஒருத்தியுடன் வருகிறார். இங்கே வந்த இரண்டாவது பெண் எம்.ஏ. வரை படித்து வேலையில் இருப்பவள்.திடீரென ஒருநாள் இந்தப் பெண்ணுக்கு சித்தப்பிரமை பிடித்துவிட்டது. முன்னுக்கு பின் முரணாக பேசுகிறாள். அவள் வயதுக்கேற்ற பேச்சு இல்லை. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாள்,நடந்து கொள்கிறாள். இவ்வளவு இளம் வயதில், அதாவது திருமணம் செய்யப் போகும் வயதில் ஒரு பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டால். எந்ததாய்தான் கவலைப்பட மாட்டாள்?

தாய், பெரிய டாக்டர்கள் எல்லோரிடமும் மகளை அழைத்துப் போனார். மாறி .மாறி பல சிகிச்சைகள் தொடர்ந்து நடந்தன. எந்த வைத்தியத்திலும் பலனே இல்லை.”நீங்கள் உங்கள் மகளை வேலூருக்கு அழைத்துப்போய் அங்கே மூளையில் ஒரு ஆபரேஷன் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்று ஒரு வைத்தியக் குழுவே அந்த அம்மாளிடம் சிபாரிசு செய்தனர். அப்படிச் செய்ய அந்தத் தாய்க்கு மனம் இல்லை.சதா சர்வகாலமும் காஞ்சிமகானே கதி என்று இருந்தவர், வைத்தியர்கள் இவ்வாறு சொன்னவுடன், காஞ்சி மகானிடம் போய் முறையிட நினைத்து தன் மகளுடன் காஞ்சிக்கு வந்தார். அன்று இரவு அவர்களுக்கு மகானின் தரிசனம் கிடைக்கவில்லை. இரவு முழுவதும் , “ஜய ஜய சங்கரா, ஹர ஹர சங்கரா” வாய் ஓயாமல அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தனர்.நினைவே இல்லாமல்,அந்தப் பெண் கத்திக் கத்தி மயக்கமடைந்து விழுந்துவிட்டாள்.மறுநாள் மகானின் தரிசனம் கிடைக்கவே, அந்த தாய், சர்வேஸ்வரனிடம் தன் மனக்குமுறலை கதறித் தீர்த்து விட்டாள்.

மகானின் அருள் கடாக்ஷம் அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கவே மூன்றாவது நாள் தரிசனம் செய்ய வந்தாள்.மகாபிரபு அவளை நோக்கி உற்றுப் பார்த்து, “அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி” என்று உத்தரவு போட்டது போலச் சொன்னார்.அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

மகானின் திருவடியை தரிசனம் செய்த வண்ணம்,அந்தப் பெண், அபிராமி அந்தாதியைச் சொல்லஆரம்பித்துக் கொண்டிருக்கும்போது இடையில் மயக்கமடைந்தாள். சற்று நேரத்தில் மயக்க நிலை தெளிந்து சகஜமாக இருக்க ஆரம்பித்தாள். அவளுக்கு உடம்பில் அசதி இருந்ததே தவிர, அவள் அப்போதே பூரண குணமடைந்து விட்டாள். தாய் அடைந்த ஆனந்தத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.”மகாபிரபு” என்று இருவராலும் அலறத்தான் முடிந்தது.

குரு கடாக்ஷம் நம்மீது படுவதற்கு நாம் எந்தத் தவமும் செய்ய வேண்டியதே இல்லை.சதா அவரது நினைவாகவே இருந்து நமது மனதை அவரிடம் சமர்ப்பித்து விட்டால் அதுவே போதும். குரு நம்மை ஆட்கொண்டு நமது லௌகீகத்தைப் பார்த்துக் கொள்வார்

(டாக்டர்களால் முடியாதது, காஞ்சி மகானால் முடிந்தது!)

கட்டுரை ஆசிரியர்-ரா.வேங்கடசாமி

புத்தகம்-காஞ்சி மகானின் கருணை நிழலில்.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

கெளதலா, ஸ்ரீ ரங்கண்ணா

கெளதலாவில் வசித்து வந்த லஷ்மம்மா என்பவருக்கு 1687ம் வருடம், தெய்வ அம்சம் பொருந்திய மகன் பிறந்தான்.அவனுக்கு ரங்கா எனப் பெயரிட்டனர்.அவன் மற்ற சிறுவர்களைப் போலன்றி,எப்பொழுதும் இறைச் சிந்தனையிலும்,தனிமையிலும் இருந்தான். அவனை ஒத்த சிறுவர்களுடன் விளையாடாமல்,கடவுளை சதா நேரமும் சிந்தித்து, திடீர்என அழுவதும் சிரிப்பதுமாக இருந்தான். அனைவரும் அவனுக்கு பைத்தியம் என்று பட்டம் கட்டினர்.

ஓர் நாள் காலை, ரங்கன் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கெளதாலாவிலிருந்து 6 கிமீ தூரமுள்ள தோவி எனும் கிராமத்தை நோக்கிச் சென்றான். அவ்வாறு செல்கையில், ஓர் குழியில் வீழ்ந்து மயங்கினான். பகவான் அவன் முன் தோன்ற, ரங்கன் அவரை நோக்கி நீயா இச்செயலை செய்தது என வினவினார். பகவான் அவனை நோக்கி, உனக்கு ஞானம் அளிக்கவே வந்தேன் எனக் கூற, ரங்கனின் உள்ளத்தில் ஓர் மாற்றம் ஏற்ப்பட்டது. பகவானும், ரங்கனுக்கு திருப்பதி வேங்கடவன் ௹பத்தில் காட்சி அளித்து, அவன் தலையில் தன் கரங்களால் ஆசீர்வதித்து, அவனது நாவில் பீஷாட்சர மந்திரத்தை எழுதி , அங்கிருந்து மறைந்தார். மாலை நேரம் நெருங்கியது. கடவுள் அருளால் ரங்கனுக்கு பசி, தாகம் எதுவும் இல்லை.அவனுக்கு உலக பந்தல்களிலிருந்து விடுபடும் நேரம் வந்துவிட்டது. 

ஒரு முறை, ரங்கன் தனது தாயாருடனும்,பக்தர்களுடனும் திருப்பதிக்கு, 15 நாட்கள்  ஆடிப்பாடி, பஜனை செய்து, நடந்து சென்று திருப்பதியை அடைந்தனர். சற்று நேரத்தில்,பகவான் ரங்கன் முன் தோன்றி ” என்ன நீ இங்கிருக்கிறாய்? உன் நெருங்கிய சொந்தத்தில் ஒருவரது மகன்இறந்து விட்டான்” எனக் கூற, ரங்கன் இறைவனை வேண்ட, அடுத்த நொடியில், கெளதலாவில் அவனுடைய உறவினர் வீட்டில் இருந்தான். அவனைக் கண்ட அனைவரும், அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஒரு சேர, உன் தாயார் எங்கே? என வினவ, ரங்கனோ, தன் தாயார் திருப்பதியில் இருப்பதாகக் கூறினார். இதன் பிறகு, அவ்வூர் மக்கள், ரங்கனை,மரியாதையுடன் ரங்கண்ணா என்று அழைத்தனர். மக்கள் தங்களது துயரம் போக்க ரங்கண்ணாவை நாடுவது வழக்கமாயிற்று. அவரும், கடவுள் அருளால் அவர்களது துயரைப் போக்கினார். 

வெகு நாட்கள் கழித்து ஊர் திரும்பிய ரங்கண்ணாவின் தாயாரிடம்,ஊர் மக்கள் நடந்ததைக் கூறினார்கள். அதைக் கேட்டதாயார், ரங்கன்னாவிடம், ” நீ எங்கிருந்தாய்?” எனக் கேட்க, ரங்கண்ணா ஸ்ரீ ஸ்ரீனிவாசன் அருளால், நான் இரண்டு இடத்திலும் இருந்தேன் என உரைத்தார்.கெளதலாவிலிருந்து 4 மைல் தூரத்தில் சிருட்டப்பள்ளி எனும் ஊர் இருந்தது. அவ்வூர் மக்கள் மழையின்றி, கடும் பஞ்சத்திற்கு ஆளாயினர். அவர்கள்ரங்கண்ணாவின் அருமை அறிந்து, அவரிடம் தஞ்சமடைந்தனர். அவர்களுடன் ரங்கண்ணா அக்கிராமத்திற்குச் சென்று,இறைவனைப் ப்ராத்தித்தார். திடீரென்று, அனைவரது வீட்டுக் கிணறுகளில் ஊற்றுப் பெருக்கடுத்து நீர் நிரம்பியது. நீர் நிலைகளும் தளும்பியது. அவ்வூர் மக்கள் மகிழ்ச்சியால் ஆனந்தக் கூத்தாடினர்.

ரங்கண்ணாவின் வேண்டுகோளுக்குஇணங்கி, அவ்வூர் மக்கள் அன்ன தானத்திற்காக ஓர் சத்திரம் அமைத்தனர். அருகிலிருந்த ஓர் பாழடைந்த கிணற்றை தூர் வாரி சீரமைத்தனர். கிணற்றின் அடியில் சாளக்கிராமத்தை வைத்துரங்கண்ணா பூஜை செய்ய, கங்கை நீர்,

இனிய சுவையுடன் பீறிட்டெழுந்தது.இந்த சந்தர்ப்பத்தில் ரங்கண்ணாவின்தாயாரும் உடன் இருந்தார். அக்கிணறு, இன்றும் “ரெங்கண்ணன பாவி ” என்று அழைக்கப்படுகியுது.அவரது தாயார், ஸ்ரீ ஸ்ரீனிவாசனின் ப்ரம்மோற்ஶவத்தைப் பார்க்க விருப்பம் தெரிவித்தார். ரங்கண்ணா, திருப்பதி வேங்கடவனை வேண்ட, இருந்த இடத்தில் இருந்தே, ஸ்ரீ ஸ்ரீனிவாசன் அருளால் விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றார்.இறைவனின் அடியார்கள், மக்களின்

துயர் துடைப்பதற்காக, தங்களை தனிமைப் படுத்திக் கொண்டு, ஒர் இடத்தில் தங்காமல், புனித யாத்திரையாக, பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வர். அவ்வாறே,ரங்கண்ணவும், சில அடியார்கருடன்காசிக்குச் சென்றார். கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரை தரிசித்து மகிழ்வுடன் சில நாட்கள் அங்கிருந்தார். ஒரு முறை, அவர் கங்கையில் ழூழ்கி எழுந்த போது, ஓர் சிவலிங்கம் கிடைத்தது. அவரது வம்சாவளியினரால் இன்று வரை அது பூஜிக்கப்பட்டு வருகிறது.

காசியிலிருந்து திரும்புகையில், அவர் பல த்வ்ய தேசங்களைத் தரிசித்து, கர்னூல் வந்தடைந்தார். அப்போது கர்னூல் மிகவும் கொடிய நோயின் தாக்கத்தில் இருந்தது. மக்கள் தண்ணீர் பற்றாக் குறையால்,போதிய விளைச்சல்இன்றி துன்பத்தில் இருந்தனர். 

கிருஷ்ணராய இனத்தினர் அங்கு மிக்கசெல்வாக்குடன் விளங்கினர். அவர்களில் சிலர் மந்திரிகளாகவும் இருந்தனர். ரங்கண்ணாவின் மகிமையைக் கேள்விப்பட்ட அவர்கள், தங்கள் தலைவருடன் ரங்கண்ணாவிற்கு சிறந்த வரவேற்பளித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ஊர்வலம் பள்ளிவாசல் வழியாக சென்ற போது, அவ்வூர் நவாப் அதை ஆட்சேபித்தான். கடவுள் அனைவருக்கும் பொதுவானவர், அவர் யாரையும் வெறுப்பதில்லை என்று ரங்கண்ணா கூற, நவாப் மனம் மாறினார். கர்னூலின் துயரம் துடைக்க,மழையை வருவிக்க, அனைவரும் ரங்கண்ணாவை வேண்டினர்.

அவரும், அவர்களிடம் இன்னும் மூன்றுநாட்களில் மழை பெய்து, உங்கள் நாடுசுபிட்சமடையும் என்று உரைத்தார்.நாட்கள் இரண்டு கடந்தது.மழைக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

மந்திரிகளும், நவாபும், மக்களும் மிக்க கலவரத்தில் இருந்தனர். ரங்கண்ணா,கடவுளை நீங்கள் நம்பவில்லையா எனக் கேட்டவாறு,ஸ்ரீ ஸ்ரீனிவாசன் மேல் நம்பிக்கை வைத்து ப்ராத்தித்தார். பின்

ஓர் இனிப்புத் துண்டை வானத்தை நோக்கி வீசினார். இவ்வாறு அவர் இரண்டு முறை வீசியதும், வானத்தில்கருமேகங்கள் சூழ்ந்தது. சற்று நேரத்தில், இடியுடன் கூடிய மழை, இரவு முழுவதும் விடாமல் பெய்தது. நகரமே வெள்ளக்காடானது. ஏரி, குளங்கள் நிரம்பி வழிந்தது. பல வீடுகள் இடிந்து வீழ்ந்தன. நவாபும், மந்திரிகளும், ரங்கண்ணாவிடம் மழைையைக் கட்டுப்படுத்த வேண்டினர்.அவரும் இறைவனைத் துதிக்க மழைகட்டுக்குள் வந்தது. மக்கள் மகிழ்ந்தனர்.இச்செய்கையால் மனமகிழ்ந்த நவாப்,ரங்கண்ணாவிற்கு பொன்னும், பொருளும் அளித்து கெளரவித்தான்.

நவாப் அளித்த செல்வத்தைக் கொண்டு, கெளதலாவில் ஓர் மண்டபத்தை நிர்மாணித்தார். அப்போது, பூமியைத் தோண்டுகையில் அவருக்கு ஓர் கேசவப்பெருமாள் விக்ரகம் கிடைத்தது. அதை அவர் மிகவும் போற்றி ஆராதித்து வந்தார். ரங்கண்ணாவிடம் பொறாமை கொண்ட புருஷோத்மாச்சார்யா என்பவர், இவரைப்பற்றி அவதூறு பரப்பினார். இருவரும் நேருக்கு நேர் , கேசவப் பெருமாள் ஆலயத்தில் விவாதிக்க ஏற்பாடானது.விவாத நாளன்று, ரங்கண்ணாவை, புருஷோத்மாச்சார்யா நேரில் கண்ட போது, ரங்கண்ணா உடல் முழுவதும்சக்கரங்கள் இருப்பதைக் கண்டு விக்கித்து நின்றார். அவரின் உன்னதநிலை கண்டு ஆரத் தழுவினார்.

அப்போது ரங்கண்ணாவிற்கு வயது 60.அவர் தனது அந்தரங்க சிஷ்யனிடம்தனக்காக ஓர் ப்ருந்தாவனத்தை அமைக்கக் கூறினார். அதைக் கேட்டுகதறியழுத சிஷ்யனிடம், ” மனிதராய்ப்பிறந்த யாவரும் ஒர் நாள் இறப்பது உலக நியதி. அறிவுள்ள மாந்தர் அதை வரவேற்பார்கள். எனவே நீ வருத்தம் கொள்ள வேண்டாம்”, என அவனைசமாதானப் படுத்தினார். AD 1746ம் ஆண்டு அவர் தம் இறைச்சிந்தனையில்,இறைவனடி சேர்ந்தார்.அவருடைய சீடர்கள் , அவரது உடலை,ப்ருந்தாவனத்தில் வைக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் ஊரில் செல்வாக்குமிக்க நபர்கள், அதை ஆட்சேபித்து, அவரது உடலை எரியூட்டச் செய்தனர்.அன்று இரவே, ரங்கண்ணா அவர்கள் முன் தோன்றி, அவர்கள் தனக்கு எதிராகசெயல்பட்டதை உரைத்து, தான் எரிக்கப்பட்ட சாம்பலில் தனது விரல் நகம், உள்ளாடை மற்றும்   பூ மாலை இருக்கும் என எடுத்துரைத்தார்.கலவரமடைந்த அவர்கள், ரங்கண்ணாவை எரியூட்டிய இடத்திற்குச் சென்று சாம்பலைக் கிளறினார்கள். அங்கே அவர்கள் ஆச்சரியப் படும்படி, ரங்கண்ணாவின் கட்டை விரல், உள்ளாடை மற்றும் துளசி மாலை கருகாமல் இருந்தது. அதை அவர்கள் எடுத்துச் சென்று, முன்னர் சீடர்கள் தயாராக வைத்திருந்த ப்ருந்தாவனத்தில் ஸ்தாபிதம் செய்தனர். அவர் மறைந்து பல வருடங்கள் சென்றாலும், இன்றும்அவர் பக்தர்களுக்கு அருள் பாலித்துவருகிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன், ஓர் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த தனது பந்து குளத்தில் விழுந்ததை,எடுக்கச் சென்று, குளத்தில் மூழ்கி இறந்து போனான். சில மணி நேரம்கழித்து அவனது உடல் குளத்தில் மிதந்தது. அதனை மீட்ட சிறுவனின்தந்தை வழிப் பாட்டி, சிறுவன் உடலுடன்ரெங்கண்ணாவின் ப்ருந்தாவனத்தின்

முன் சிறுவனுடன் படுத்து விட்டாள்.அனைவரும் ஆச்சரியப் படும்படி, சில மணித் துளிகள் கழித்து, சிறுவன்  உறங்கி எழுபவன் போல் எழுந்து,

 தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது அறியாமல் வியந்தான். அங்கிருத்த அனைவக்கும்  ரெங்கண்ணாவின் மகிமை விளங்கியது.

 இன்றும் பலர், பல இடங்களிலிருந்து தங்கள் குறை தீர்க்க, கெளதலாவிற்கு வந்து ரெங்கண்ணனை ப்ராத்தித்து தங்கள் குறை நீங்குவதை கண்கூடாக அனுபவிக்கிறார்கள். நாமும் அவரைத்

 துதித்து அவர் அருள் பெறுவோமாக.

என் வாயைப் பார்த்தியோ ?”- பெரியவா


“நீ பாலைச் சூடா வச்சிட்டு அவசரம் அவசரமாக் கிளம்பி வந்துட்டே இல்லியா… அதான்! ”
திருச்சியில் ஒரு பக்தர். புகைப்படக்காரர். சிறிய ஸ்டுடியோ வைத்திருந்தார். வீட்டு பூஜையறையில் காஞ்சி மகானின் படம் பிரதானமாக இருக்கும்.
தினமும் காலையில் எழுந்து குளித்த பிறகு, ஏதாவது ஒரு படையலை, மகாபெரியவர் படத்துக்கு முன் வைத்து வணங்கிவிட்டுத்தான் தன் வேலையை ஆரம்பிப்பார். பெரியவாளின் நாமத்தை அவரது உதடுகள் உச்சரித்துக்கொண்டே இருக்கும்.
ஒரு தடவை பெரியவா, ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூலுக்கு விஜயம் செய்திருந்தார். அதுவோ உஷ்ணப் பிரதேசம். வெயில் கடுமையாகக் கொளுத்திக் கொண்டிருந்தது.
திருச்சியில் இருந்த இந்த புகைப்படக் கலைஞருக்கு ‘பெரியவாளைத் தரிசிக்க வேண்டும்’ என்று மனதில் ஆசை வந்தது. அன்று காலை ரயிலில் புறப்படும்முன் வழக்கம்போல் பெரியவா படத்துக்கு முன்னால் படையலாக சூடான பாலை ஒரு டம்ளரில் ஊற்றி வைத்துவிட்டுப் போனார்.
கர்நூலில் அளவுக்கு அதிகமான பக்தர் கூட்டம். எங்கு திரும்பினாலும் மக்கள் வெள்ளம். நமது புகைப்பட நிபுணர் எந்தப் பக்கமும் உள்ளே செல்ல முடியவில்லை. சற்றுத் தூரத்தில் இருந்த மணற்குவியல் ஒன்றின்மீது ஏறி நின்று மகா பெரியவாளைத் தரிசிக்க முயன்றார். வெயிலின் கொடுமையால் கால் ஒரு பக்கம் சுட்டது. கும்பல் குறைந்தவுடன் மாலையில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று மனதில் கவலையோடு புறப்பட்டார். இவ்வளவு தூரம் வந்தும் மகானை உடனடியாகப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு.
சற்றுத் தூரம்தான் நடந்திருப்பார். யாரோ அவரைக் கூப்பிடுவதுபோல் தோன்றவே, திரும்பிப் பார்த்தார்.
ஒரு பக்தர் வேகமாக இவரிடம் ஓடி வந்தார். “நீங்க திருச்சியிலிருந்துதானே வந்திருக்கீங்க ?”
“ஆமாம்”
“பெரியவா உங்களை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்.”
“என்னையா ?” — பக்தருக்கு வியப்பு.
“நீங்க ஃபோட்டோகிராபர் தானே ?”
“ஆமாம்”
“அப்படியென்றால் வாருங்கள்….”
விடாப்பிடியாக அவரை அழைத்துக் கொண்டுபோய் பெரியவா முன் நிறுத்தினார், அந்தச் சிஷ்யர். கைகளைக் கூப்பியவாறு, கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட, புகைப்பட நிபுணர் தன்னை மறந்து அங்கே நின்றார்.
அவரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்த மகான், “என்னைப் பார்க்கணும்னு இவ்வளவு தூரம் கிளம்பி வந்திருக்கே… கடைசியில் பார்க்காமலே போனால் என்னப்பா அர்த்தம் ?” என்றார்.
“கும்பல் நிறைய இருந்தது… அதான் கொஞ்சம் குறைஞ்சவுடனே வரலாம்னு….” என்று தடுமாற்றத்துடன் இழுத்தார் புகைப்படக்காரர்.
“சரி. சரி.. சாப்பிட்டியோ ? “
“சாப்பிட்டேன் !”
சில வினாடிகள் தாமதத்துக்குப் பின் மகான் பேசினார். “என் வாயைப் பார்த்தியோ ?”
நாக்கை வெளியே நீட்டுகிறார். சூடுபட்டது போல் சிவந்திருக்கிறது. பிறகு கேட்டார். “உதடெல்லாம் கூடப் புண்ணாகி விட்டது.. ஏன் தெரியுமா ?”
புகைப்பட நிபுணருக்குப் புரியவில்லை.
“நீ பாலைச் சூடா வச்சிட்டு அவசரம் அவசரமாக் கிளம்பி வந்துட்டே இல்லியா… அதான்! ” என்றார்.
திருச்சிக்காரருக்குப் புறப்படும்போது தான் வைத்த படையல் அப்போது தான் நினைவுக்கு வந்தது.
சாஷ்டாங்கமாக மகானின் திருவடியில் விழுந்து, “மஹா பிரபு, என்னை மன்னியுங்கள் ” என்று கதறினார்.
எந்தளவுக்கு பக்தி இருந்திருந்தால், காஞ்சி மகான் அந்த பக்தரின் பாலை ருசித்திருப்பார் என்பதைச் சற்றே எண்ணிப் பாருங்கள். அது சாத்வீகமான பக்தி ! “ஆண்டவனே, நீதான் எனக்கு எல்லாம்!” என்று மனதார நினைக்கும் பக்தி !