அனந்தபுரி கிராமத்தில் ஏழ்மை நிலையில் வசித்து வந்தான் முருகன். மிகவும் நேர்மையானவன். பழ வியாபாரம் செய்து பிழைத்து வந்தான். அதே ஊரில் வசித்தவன் பூபதி. பலசரக்கு வியாபாரி நேர்மையின்றி வாணிபம் செய்வான். கலப்படம் செய்து பணம் ஈட்டினான். நாட்கள் நகர்ந்தன. முருகனின் வியாபாரம் படுத்து விட்டது. வீட்டுச் செலவிற்கே பணம் இன்றி திண்டாடினான் ஆனாலும் நேர்மை குறையவே இல்லை. மனமுருக இறைவனை வேண்டி தொழிலை கவனித்து வந்தான்.

அவன் முன் தோன்றிய முனிவர் உன் பக்தியை மெச்சினேன் கூடை நிறைய பழங்களை தருகிறேன் அதில் ஒன்று உன் வாழ்வை சீராக்கும்……….என்று கூறி மறைந்தார். பழங்களைக் கண்டு ஆனந்தம் அடைந்தான் முருகன். மனைவியிடம் எடுத்துச் சென்று நடந்ததை கூறினான். நீங்கள் செய்த புண்ணியத்துக்கு பலன் இது. பூஜை செய்த பின் வியாபாரத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்………என்றாள். முருகனும் அவ்வாறே எடுத்துச் சென்றான். எதிர்பார்த்ததை விட சீக்கிரமே பழங்கள் விற்றது கண்டு மகிழ்ந்தான். நல்ல வருமானம் கிடைத்தது. ஒரே ஒரு பழம் விற்காமல் மீதம்ம் இருந்தது. குழந்தைக்கு கொடுக்கலாம் என்று எண்ணி புறப்பட்டான். வீட்டில் பழத்தை வெட்டியதும் ஆச்சரியம் ஏற்பட்டது. அதில் முத்தும் வைரங்களும் கொட்டின. முனிவருக்கு நன்றி செலுத்தினான். அவற்றை விற்று செல்வ செழிப்படைந்தான்.
இதை கேள்விப்பட்டு தினமும் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான் பூபதி. அவன் முன் முனிவர் தோன்றி ஒரு கூடை பழம் தருகிறேன் வீட்டிற்கு சென்று சாப்பிடு என்று மறைந்தார். ஆனந்த கூத்தாடிய பூபதி பழக்கூடையுடன் வீடு திரும்பினான். குடும்பத்தினருடன் சாப்பிட உட்கார்ந்தான். பழங்களை அறுத்தான். வண்டுகளும் புழுக்களும் வந்தன. முனிவரை திட்டியபடி எல்லாவற்றையும் குப்பையில் போட்டான். அங்கு தோன்றிய முனிவர் அர்ப்ப புத்தியுள்ளவனே ………..உனக்கு காத்திருக்க விருப்பம் இல்லை. இதோ பார்……….உனக்கு தந்த பழம் ஒன்றில் முத்துக்களும் வைடூரியங்களும் இருந்தன. அதை குப்பையில் போட்டதால் பறவை தூக்கி சென்று விட்டது. இனி மேலாவது பொறாமை இன்றி பொறுமை நேர்மையுடன் வியாபாரத்தில் கவனம் செலுத்து ,,,,,,,,,,,, என்று அறிவுரைத்து மறைந்தார்.