சாதனையான வாழ்க்கை

பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கூறிய வார்த்தைகளின்  சூட்சுமத்தை நாம்  புரிந்து கொண்டால், நம்மால் ஒவ்வொரு நொடியும்  சிறப்பாக சிந்திக்க முடியும்

வார்த்தைகள் எனும் கூரிய ஆயுதத்தை வைத்து (நாட்டை) ஆண்டவர்களும் உண்டு, மாண்டவர்களும் உண்டு (கவுரவர்கள்). காலம் உள்ள வரை கம்பனும், கவியரசரும் மறக்கவே முடியாத ஜீவன்களாக இருப்பதற்கு அவர்களின் வார்த்தைகள் தான் காரணம்.  ​சகுனியின் தந்திரமான வார்த்தைகள் – போர் முனை வரை போக வைத்ததை யாரும் மறைப்பதற்கில்லை. 

என்ன துன்பம் வந்தாலும் உண்மையை மட்டுமே பேசுவேன் என்ற கொள்கையோடு இருந்த அரிச்சந்திரனின் வார்த்தைகள் – மிகப் பெரிய ஒரு மரியாதையை அவருக்கு பெற்றுத் தந்திருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. சுவாமி விவேகானந்தர் உச்சரித்த வார்த்தைகள் “My Dear Brothers & Sisters” இன்றளவும் ஒவ்வொரு இந்தியனும் தன் மீதும், தன் தாய் நாட்டின் மீதும், தன் சக பிரஜையோடும் கொள்ள வேண்டிய பற்றை பறை சாற்றுவதே அந்த வார்த்தைகளின் சிறப்பு. 

கவியரசர் சொன்னது போல் “போற்றுவார் போற்றுதற்கும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றுதற்கும்” உதவுவது வார்த்தைகள். ஒருவர் வாழ்த்தும் போது மனம் மகிழ்கிறது – அதே போல் கடிந்து கொள்ளும் போது மனம் வருந்துகிறது.  

வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். ஒரு வார்த்தை வெல்லும்.  ஒரு வார்த்தை கொல்லும். உங்களை இந்த உலகம் கோமாளியாக பார்க்கிறதா அல்லது அறிவாளியாக பார்க்கிறதா என்பது நூற்றுக்கு நூறு நீங்கள் உச்சரிக்கும் வார்த்தைகளில் தான் உள்ளது. வாழ்க்கை பயங்கரம் சூழ்ந்த சாகசமும் இல்லை – எதுவுமே இல்லாத வெற்றிடமும் இல்லை !கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கூறிய வார்த்தைகளின்  சூட்சுமத்தை நாம்  புரிந்து கொண்டால், நம்மால் ஒவ்வொரு நொடியும்  சிறப்பாக சிந்திக்க முடியும். திட்டமிட முடியும்.  செயல்பட முடியும். கையாள முடியும்  சாதிக்கவும் முடியும்.

அந்த சாதனையான வாழ்க்கை நமக்கு  அமைய ஸ்ரீ கிருஷ்ணன் அருள் என்றென்றும் கிடைக்கட்டும்

Leave a comment