ஸஹிஷ்ணவே நம

ஸ்ரீ ராமாநுஜருக்கு முதலியாண்டான், நடாதூர் ஆழ்வான் என இரண்டு மருமகன்கள் இருந்தார்கள்.அவர்களுள் நடாதூர் ஆழ்வான் என்பவருடைய பேரன் வரதகுரு.வரதகுரு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் சந்நதியில் தினமும் வேத பாராயணம் செய்து வந்தார்.ஒருநாள் அவர் வேத பாராயணம் செய்து கொண்டிருக்கையில், அர்ச்சகர் பெருமாளுக்கு நிவேதனம் செய்வதற்காகப் பால் எடுத்து வந்தார்.

அடுப்பில் இருந்து சுடச்சுடக் கொண்டு வந்ததால், பாலில் இருந்து ஆவி பொங்கி வந்து கொண்டிருந்தது.அதைக் கண்ட வரதகுரு, “சுவாமி!” என்று அர்ச்சகரை அழைத்து, “அந்தப் பாலை இங்கே தாருங்கள்!” என்றார்.“இது பெருமாளுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய பால்!” என்றார் அர்ச்சகர்.“அது தெரியும்! இங்கே தாருங்கள்!” எனக் கேட்டு வாங்கினார் வரதகுரு. ஒரு தாய் எப்படிக் குழந்தைக்குப் பாலை ஆற வைத்துக் கொடுப்பாளோ, அது போல் பாலை ஆற்றி, பொறுக்கக் கூடிய சூட்டுக்கு வந்தபின் அர்ச்சகரிடம் கொடுத்து,“இப்போது பெருமாளுக்கு இதைச் சமர்ப்பிக்கலாம்!” என்றார்.

“ஏன் பாலை ஆற வைத்தீர்கள்?” என்று கேட்டார் அர்ச்சகர். அதற்கு வரதகுரு, “பெருமாள் எவ்வளவு மென்மையான, அழகான திருமேனியை உடையவர்? இவ்வளவு சூடான பாலைக் கொடுத்தால் அவரது நாவைச் சுட்டு விடாதா?” என்று கேட்டார்.“நீங்கள் வேதங்களை நன்கு கற்றவர். எம்பெருமானின் நாவில் இருந்து தான் நெருப்பு தோன்றியது என்கிறது வேதம்.

அவ்வாறிருக்க அவரது நாவை இந்தப் பால் எப்படிச் சுடும்? அவர் பரம்பொருள் அல்லவா?” என்று கேட்டார் அர்ச்சகர். “அவனது பெருமைகளை நோக்குகையில், அவனது நாவை இந்தப் பால் சுடாது என உணர முடிகிறது.எனினும் அவனது வடிவழகையும் மென்மையையும் நோக்குகையில், ஒரு தாய் தன் குழந்தையிடம் காட்டுவது போன்றபாசத்தைத் தான் காட்ட முடிகிறதே ஒழிய, அவனது பெருமைகளும் வலிமையும் நம் நெஞ்சில் நிற்பதில்லை!” என்று சொன்னார் வரதகுரு.

வரதகுரு ஆற்றிக் கொடுத்த பாலைப் பெருமாளிடம் கொண்டு சென்றார் அர்ச்சகர்.அப்போது “அம்மா!” என்றொரு குரல்! எங்கிருந்து அக்குரல் வந்ததென்று ஆவலுடன் எல்லோரும் பார்த்தார்கள்.என்ன விந்தை? வரதராஜப் பெருமாளே, வரதகுருவை உரத்த குரலில் “அம்மா!” என்று அழைத்திருக்கிறார்.வியந்து போன அர்ச்சகர், “இந்த வரதகுருவை நீ ‘அம்மா’ என்று அழைத்தாயா?” எனப் பெருமாளிடம் கேட்டார்.

“அனைத்துலகங்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் நான் இருக்கிறேன். அனைத்துயிர்களிடமும் நான் அன்பு காட்டிய போதும்,அர்ச்சகரே….என்மீது யாரும் இத்தகைய தாய்ப்பாசத்தைக் காட்டியதில்லை. ஆனால் அத்தகைய பாசத்தை இந்த வரதகுரு என்மீது இப்போது காட்டியபடியால், அவரை நான் அம்மா என்றழைத்தேன்!” என்றார் வரதராஜப் பெருமாள்.அன்று முதல், வரதகுரு என்ற பெயர் மறைந்து ‘நடாதூர் அம்மாள்’ என்றே அனைவரும் அவரை அழைக்கத் தொடங்கினார்கள்.(அவர் அவதரித்த ஊர் நடாதூர் என்பதால் பெருமாள் தந்த ‘அம்மா’ என்ற பெயரோடு அவர் ஊரை இணைத்துநடாதூர் அம்மாள் என்று வழங்கப்பட்டார்.)

மறுநாள் அந்த அர்ச்சகர் நடாதூர் அம்மாளிடம், “சுவாமி! எனக்கொரு சந்தேகம். பெருமாள் மேல் அன்பு கொண்டுநீங்கள் பாலை ஆற வைத்து அவருக்குச் சமர்ப்பித்தீர்கள்.ஆனால் இத்தனை நாட்களாக நாங்கள் சூடான பாலைத்தான்பெருமாளுக்குச் சமர்ப்பித்து வந்தோம். அதனால் பெருமாள் கோபம் கொண்டு எங்களுக்கு ஏதாவது தண்டனை தருவாரா?” என்று கேட்டார்.அதற்கு நடாதூர் அம்மாள், “நிச்சயம் தண்டிக்க மாட்டார். நாம் தினமும் பூஜையைத் தொடங்குகையில் பதினாறு விதமானஉபசாரங்கள் செய்யப் போவதாகச் சொல்லிவிட்டு, முடிவில் முப்பத்திரண்டு விதமான அபசாரங்களைத் தான் செய்கிறோம்.ஆனால் அதையும் பெருமாள் பொறுத்தருள்கிறார். அவ்வாறே சூடான பாலை நீங்கள் சமர்ப்பித்தாலும் அதற்காகப்பெருமாள் கோபம் கொள்ள மாட்டார். பயப்படாதீர்கள்!

தண்ணீருக்கும் சந்திரனுக்கும் எப்படிக் குளிர்ச்சி என்பது இயற்கையாகவே உள்ளதோ,அது போல பெருமாளுக்கும் பொறுமை எனும் குணம் இயற்கையாகவே உள்ளது!” என்று கூறினார்.‘ஸஹிஷ்ணு:’ என்றால் பொறுத்துக் கொள்பவர் என்று பொருள்.தனது பக்தர்கள் அறிந்தோ அறியாமலோ, முன்னும் பின்னுமாகச் செய்யும் பூஜைகளையும், அவற்றிலுள்ள பிழைகளையும்

பொறுத்துக் கொள்வதால் *‘ஸஹிஷ்ணு:’* என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே என்பது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 146-வது திருநாமம்.*“ஸஹிஷ்ணவே நம:”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த அனைத்துப் பிழைகளையும் திருமால் மன்னித்து, அவர்களை நல்வழிப் படுத்துவார்

Leave a comment