காவிரியும்  மூஞ்சூறும்

உருவத்தில்தான் குறுமுனியே தவிர ஆற்றலில் இமயமலை போன்றவர் அகத்தியர்.  அவர் தன் தவ வலிமையால் காவிரி நதியைச் சுருக்கி கமண்டலத்தில் அடைத்து தான் போகுமிடமெல்லாம் எடுத்துச் சென்றார்.  அதைப் பார்த்த வினாயகருக்கு அந்தக் காவிரி மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.  அகத்தியரிடம் நேரிடையாகச் சொன்னால் அவர் அதை ஏற்பாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.  ஒரு வேளை தாம் கேட்டும் அவர் காவிரியை பூமியில் ஓடவிட மறுத்தால் என்ன செய்வது  மாற்று உருவத்தில் ப்போய் அவரிடமிருந்து காவிரியை மீட்போம் என்று கருதினார்.

உடனே ஒரு காக்கை உருவெடுத்துக்கொண்டு முனிவர் அருகே பறந்து வந்தார். அகத்தியர் தன் கமண்டலத்தை ஒரு பாறை மீது விட்டு தரையில் அமர்ந்தபடி ஜபம் செய்ய ஆரம்பித்தார்.  அப்படி அவர் ஜபத்தில் ஆழ்ந்து விட்டாரென்றால் அவ்ருக்கு எளிதாக கவனம் கலையாது.  இது தான் தருணம் என்பதை உணர்ந்த காக்கை வடிவ வினாயகர் அந்த கமண்டலத்தைத் தன் சிறகால் தட்டி விட உடனே காவிரி பெருகி பூமியில் ஓட ஆரம்பித்தது.

இதற்கிடையில் ஜபம் கலைந்த அகத்தியருக்கு கோபம் வந்தது.  கமண்டலத்தைத் தட்டிவிட்டது யாரெனப் பார்த்தார்.  அப்போது காக்கையாக வந்த வினாயகர் ஒரு அப்பாவி சிறுவனாகத் தோன்ரி பரிதாபமாக முனிவரை பார்த்தார்.  உடனே இச்சிறுவன் தான் விளையாட்டுத்தனமாகச் செய்திருக்கிறான் என்பது புரிந்தது. நேராகப் போய் அவன் தலையில் இரண்டு குட்டு குட்டினார்..

அப்போது பளீரென ஒரு ஒளி தோன்றியது.  பையன் மறைந்து அங்கே வினாயகர் தன் சுய உரு காட்டினார்.  அகத்தியர் அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டார்.  அடடா வினாயகரை குட்டி விட்டேனே என்று வருத்தப்பட்டார்.   அதற்குப் பிராயச்சித்தமாக இரு நெற்றி பொட்டிலும் குட்டிக்கொண்டார்.  அதாவது தான் செய்த தவறுக்கு பரிகாரம்.  அதோடு தன் கமண்டலத்துக்குள் அடக்கி வைத்திருந்த காவிரி உலகத்துக்கு பயன்பட வெண்டும் என்ற வினாயகரின் பெருங்கருணை புரிந்தது.  அவரிடம் மன்னிப்பு கேட்டார்.

இதன் பிறகே பக்தர்கள் தம் தலையில் இரு பக்கங்களிலும் நெற்றி பகுதியில் குட்டிக்கொள்ளும் பழக்கம் உருவானது.  அதாவது தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழைகளுக்கு  பிராயசித்தமாக தன் மூளையைத் தண்டிக்கும் விதவிதமாகக் குட்டிக்கொள்ளும் வழக்கம்   அது நாளடைவில் தவறான எந்த எண்ணமும் மூளைக்குள் புகுந்துவிடக்கூடாது என்ற வேண்டுதலாகவும் அமைந்துவிட்டது. இதை மூளைவளர்ச்சிக்கான பயிற்சி என்றும் சொல்லலாம்.

  பெரிய வினாயகருக்கு சிறிய எலி வாகனமாக அமைந்தது எப்படி.?  மூஞ்சூறு முற்பிறவியில் ஒரு அரக்கனாக இருந்தது.   அப்போது பெயர் கயமுகாசுரன்.  அனைவரையும் அடித்துத் துன்புறுத்தி வேதனைப்பட வைத்தான் அவன்.  தேவர்கள் முனிவர்கள் உள்ளிட்ட அனைவரும் அவனைக் கண்டு ஒளிந்தனர். பிறகு வேறு வழியில்லாமல் வினாயகரிடமே சரணடைந்து அரக்கனிடமிருந்து  காக்க வேண்டும் என வேண்டினர்.  உடனே வினாயகர் அவனுடன் போரிட்டார். அரக்கன் உருமாறி அவரை எதிர்த்தான்.  அப்படி அவன் கொண்ட ஒரு உருவம் தான் பெருச்சாளி  அந்த தோற்றத்தில் அவன் பயமுறுத்த நினைத்தான்  ஆனால் ஆனைமுகத்தான் அசரவில்லை.  தும்பிக்கையால் அவனைத் தூக்கிப்போட்டு தன் காலால் ஒரேயடியாய் மிதித்து நசுக்கப் பார்த்தார்.  வேறு வழியில்லாமல் கயமுகாசுரன் அவரைச் சரணடைந்தான்.  தன்னை காப்பாற்றும்படியும் தான் அவரை விட்டு பிரியாமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான்.  உடனே அவனை சிறு எலி உருவத்தில் வாகனமாக ஆக்கினார்.  அவனுக்கு அசுர பலம் இருப்பதால் பல மடங்கு பருமனான வினாயகரை எளிதாகத் தாங்கிக் கொண்டு அவர் விரும்பும் இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றான்.

Leave a comment