தை மாத மகிமை பெறும் திருத்தலங்கள்

இல்லம் செழிக்க வரம் தருவாள்! – தைப்பொங்கல் தரிசனம்!*

ஆதவனை, இயற்கையை, இறையைப் போற்றும் அற்புத தினம் தைப்பொங்கல் திருநாள். இந்நாளில் வீட்டில் அதிகாலையில் பொங்கலிட்டு, கரும்பும், காய்-கனி, கிழங்கு வகைகளும் படைத்து மனதார மகிழ்ச்சி பொங்க வழிபாடு நிகழ்த்துவது நம் வழக்கம். அத்துடன், சிறப்புமிகு தை மாதத்தில் மகிமைபெறும் ஆலயங்கள் குறித்தும் அறிவது அவசியம். அவ்வகையில் சில தலங்களும் தகவல்களும் இங்கே உங்களுக்காக!

வெள்ளெருக்கு மரத்துக்கு வழிபாடு

தைப்பொங்கல் என்றதும் நம் நினைவுக்கு வருவது சூரியன் அல்லவா? தமிழகத்தில் சூரிய வழிபாட்டுக்குப் பிரசித்தி பெற்ற திருத்தலம் சூரியனார்கோயில். கும்பகோணத்திலிருந்து கிழக்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் தலம். நவகிரகங்களே தங்களின் சாபம் நீங்க விநாயகர் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்ற தலம் இது. இங்கு, உஷாதேவி- சாயாதேவியுடன் அருளும் சூரியனாரைத் தரிசிக்கும் அதே நேரம், குருபகவானின் அருட் பார்வையும் ஒரு சேர பெறலாம். சூரிய பகவானைச் சுற்றி நவகிரக நாயகர்களும் தனிச் சந்நிதிகளில் அருள்வது விசேஷம்.

இங்கே சூரிய பகவானுக்கு கோதுமை சர்க்கரைப் பொங்கல், கரும்பு, வாழை, தேங்காய் கொண்டு நைவேத்தியம் செய்து சிவப்பு வஸ்திரம், செந்தாமரைப் பூக்கள் அணிவித்து வழிபடுவது சிறப்பு. இதனால் சத்ரு நாசம், சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். கண் கோளாறுகள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்தத் தலத்தின் விருட்சமான வெள்ளெருக்கு மரத்தில் சிவப்புத் துணி சாற்றி, மஞ்சள் கட்டி, புதுமண தம்பதிகள் வழிபட்டால், சூரியகடாட்சம் நிறைந்த குழந்தைகள் பிறக்கும். தீராத தோல் நோயும் தீரும் என்பது ஐதிகம்.

*சூரிய தேவனுக்கு 11 வார வழிபாடு!*

சூரிய பகவான் வழிபாடு செய்ததால் சிறப்பு பெற்ற தலங்களும் தமிழகத்தில் உண்டு. அவற்றில் ஐந்து தலங்களைப் பஞ்சபாஸ்கர தலங்கள் எனப் போற்றுவர். அவை: 

1 திருவாரூர் – தலைஞாயிறு,  2 நீடாமங்கலம் – திருப்பரிதி நியமம், 

3 ஆடுதுறை – திருமங்கலக்குடி,  4 நன்னிலம் – திருச்சிறுகுடி, 

5 சென்னைக்கு அருகில் உள்ள ஞாயிறு!

இவற்றில் ஞாயிறு எனும் திருத்தலம், சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகில் உள்ளது. சூரியன் வழிபட்ட தலம் என்பதால் இந்த ஊருக்கு ஞாயிறு என்றும், மலரில் வெளிப்பட்டவர் ஆதலால், இங்குள்ள இறைவனுக்கு புஷ்பரதேஸ்வரர் என்றும் திருப்பெயர் அமைந்ததாகச் சொல்கிறது தல புராணம். இங்கே சூரியன் நீராடி வழிபட்ட தடாகம், சூரிய தீர்த்தம் என வழங்கப்படுகிறது. அம்பாள் இங்கு சொர்ணாம்பிகை என்று போற்றப்படுகிறார்.ஞாயிற்றுக்கிழமை, ரத சப்தமி, தைப்பொங்கல் போன்ற சூரியனுக்கு உகந்த நாள்களில் இந்தத் தலத்தில் வழிபட்டு வருவது சிறப்பு. 11 வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் இக்கோயிலுக்குச் சென்று வழிபடுவது விசேஷ பிரார்த்தனை ஆகும். 11-வது வாரத்தில், செந்நிற ஆடையை பகவானுக்குச் சார்த்தி, செந்தாமரை மலரால் அர்ச்சித்து வழிபடவேண்டும். இயன்றால் அன்னதானம் செய்யலாம். இதன் பலனாகப் பார்வைக் கோளாறு, தீராத நோய், திருமணத் தடை ஆகியவற்றைத் தீர்த்து அருளுவார் சூரிய பகவான். பதவி உயர்வு, பிள்ளை வரம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள். இங்கே, கோதுமையால் நைவேத்தியம் செய்வது விசேஷ பலன் தருமாம்.

*இல்லம் செழிக்க வரம் தருவாள்!*

பொங்கல் என்றதும் நம் நினைவுக்கு வரும் விஷயங்களில் பிரதானமானது கரும்பு. கரும்பு என்றதும் நம் நினைவுக்கு வரும் தெய்வங்களில் முதன்மையானவள் காஞ்சி காமாட்சி அன்னை.

`கா’ என்றால் `விருப்பம்’ என்று பொருள். மனிதர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவள் என்பதால் அம்பிகைக்கு காமாட்சி என்று திருப்பெயர். திருமகளையும் கலைமகளையுமே கண்களாகக் கொண்டவள் காமாட்சி என்று பெரியோர்கள் கூறுவர். காமாட்சி அன்னை ஒன்பது வயது சிறுமியாகத் தோன்றி, பண்டாசுரன் என்னும் அசுரனை வதம் செய்தாள். பின்னர் ஆகாயத்தில் மறைந்திருந்தாள்.

அசுரனை வதைத்தது யார் என்று தெரியாமல் தேவர்கள் திகைத்து நிற்க, ஓர் அசரீரி ஒலித்தது. `காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை 24 தூண்களாகவும், நான்கு வேதங்களை நான்குச் சுவர்களாகவும் கொண்டு ஒரு மண்டபம் எழுப்புக. அந்த இடத்தில் சுமங்கலிப் பெண், கன்றுடன் கூடிய பசு, கண்ணாடி, தீபம் ஆகியவை இருக்கட்டும். அப்போது நான் யார் என்று காட்டுகிறேன்’ என்று அசரீரியாக அம்பிகையின் குரல் ஒலித்தது.தேவர்களும் அப்படியே செய்ய, அன்னை சிறுமியாக அவர்களுக்கு காட்சி தந்தாள். பின்னர் அவளின் உத்தரவுப்படி கதவுகளை மூடிவிட்டு, வெளியில் இருந்தபடியே தேவர்கள் அம்பிகையை ஸ்தோத்திரம் செய்தனர். மறுநாள் காலையில் கதவுகளைத் திறந்த போது, அன்னை காமாட்சியாக அவர்களுக்கு தரிசனம் தந்தாள். கருவறையில் அம்பிகை பத்மாசன கோலத்தில் கரும்பு வில்லும், புஷ்ப பாணமும் கொண்டு எழிலார்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பிகை பத்மாசன கோலத்தில் வீற்றிருப்பது மிகவும் விசேஷமாகும். இங்கே அம்பிகையின் அருள் பிரசாதமாகத் தரப்படும் குங்குமப் பிரசாதத்தை அப்படியே நெற்றியில் அணிந்து கொள்ளாமல், கருவறைக்கு வெளியில் அம்பிகையின் இடப்புறத்தில் உள்ள மாடத்தில் காட்சி தரும் திருவடிகளில் வைத்து எடுத்த பிறகே அணிந்துகொள்ள வேண்டும். காமாட்சி அம்மன் ஆலயத்தில் அரூபமாக லட்சுமி அருள்வதுடன், அன்னபூரணியும் சரஸ்வதியும் சந்நிதி கொண்டிருக்கின்றனர்.

அம்பாள் காமாட்சி பாசம்-அங்குசம் ஆகியவற்றுடன் கரும்பு வில்லும் புஷ்ப பாணங்களும் ஏந்தியபடிக் காட்சித் தருகிறாள். அரவிந்தம், அசோகம், சூதம், நவமல்லிகா, நீலோத்பலம் ஆகிய ஐந்து புஷ்ப பாணங்களை அவள் ஏந்தியிருக்கிறாளாம். `அம்பிகையின் கரத்தில் இருக்கும் கரும்பு வில் மற்றும் புஷ்ப பாணங்கள், நம் மனோவிருத்தியையும் இந்திரிய விவகாரங்களையும் அடக்குபவை’ என்பது காஞ்சி மகா ஸ்வாமிகளின் திருவாக்கு.தை மாதம் இங்கே கணு உற்சவம் விசேஷம். இதையொட்டி ஒரு வாரம் காஞ்சி காமாக்ஷி அம்பிகை ஆலயத்தைச் சுற்றி வீதியுலா வருவது சிறப்பாகும். அப்போது அன்னையைத் தரிசித்து வழிபட்டால், சகல சுபிட்சங்களும் உண்டாகும்; நம் இல்லத்தில் செல்வம் செழிக்க அருள் தருவாள் அந்த அம்பிகை!

*கரும்புடன் அருளும் கந்தன்!*

காமாட்சி அம்பிகையைப் போன்றே முருகப் பெருமானும் கையில் கரும்புடன் அருளும் திருத்தலம் செட்டிக்குளம். பெரம்பலூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கே ஊருக்குள் காமாட்சியம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயில் அமைந்திருக்க, மலைக்குமேல் கையில் கரும்பு ஏந்தியபடி தண்டாயுதபாணியாக அருள்கிறார் முருகன்.

அகத்தியருக்கு, வளையல் விற்கும் செட்டியார் உருவில் வந்து முருகன் காட்சி தந்ததால், இந்தப் பகுதிச் செட்டிகுளம் எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கின்றனர். மலையடிவாரத்தில் உள்ள விநாயகரை வணங்கிவிட்டு, சுமார் 240 படிகள் ஏறிச் சென்றால் மலைக்கோயில் முருகனைத் தரிசிக்கலாம். ஏராளமான பக்தர்கள், அலகு குத்தியும் காவடி எடுத்தும் பால் குடம் எடுத்து வந்தும் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். சேவல், கோழிகளை ஆலயத்துக்குத் தருபவர்களும் உண்டு! முருகன் அருளால், பிள்ளைப் பாக்கியம் பெற்றவர்கள், கரும்புத் தொட்டிலில் குழந்தைகளைத் தூக்கியபடி, பிராகார வலம் வந்து வணங்கிச் செல்கிறார்கள். இவரை வழிபட்டுவிட்டு நிலத்தில் விதை விதைத்தால், அமோக விளைச்சல் நிச்சயமாம். நல்ல மகசூல் காணும் விவசாயிகள், தங்களின் நிலத்தில் விளைந்த பொருள்களை இந்த முருகனுக்குக் காணிக்கையாகச் செலுத்தி வழிபடுகிறார்கள்!

*மஞ்சள் குளி உத்ஸவம்*

`எங்கள் வயலுக்கு வரணும்!’

நாகை மாவட்டம், சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருநகரி. ஆரம்பத்தில், திருவாலி திருநகரி என ஒரே ஊராகப் போற்றப்பட்ட இந்தத் தலம், திருவாலி மற்றும் திருநகரி என இரண்டு ஊர்களாக வளர்ந்திருக்கிறது. திருமங்கை ஆழ்வாரின் அவதாரத் தலமான இங்கு, தை அமாவாசை யொட்டி நிகழும் மஞ்சள் குளி உத்ஸவம் மகத்துவமானது.

திருமங்கையாழ்வார், வருடந்தோறும் திருவரங்கம் மஞ்சள் குளி உத்ஸவத்தைக் காணச் செல்வாராம். அவர் பரமபதம் அடைந்த பிறகு, திருநகரியை ஆட்சி செய்த சோழ மன்னன், கங்கையின் கிளை நதியாக மணி கர்ணிகா இருப்பது போல், காவிரியின் கிளை நதியை உருவாக்கினான். அருகில், மஞ்சள்குளி மண்டபத்தையும் அமைத்தான். திருமங்கையாழ்வார், மஞ்சள்குளி உத்ஸவத்தைக் காணும் திருவிழாவை விமர்சையாக இங்கேயே நடத்தி மகிழ்ந்தான்.

தை அமாவாசை நாளன்று, அதிகாலையிலேயே புறப்படும் திருமங்கையாழ்வார், சுற்றியுள்ள 11 திவ்ய தேசங்களுக்கும் சென்று, அங்கேயுள்ள பெருமாளின் அழகுத் திருமேனியை தரிசித்து, அந்திசாயும் வேளையில், ஊருக்குத் திரும்பும் வைபவம் நடைபெறும். இந்தத் திருவிழாவின்போது, எந்த வயலில் திருமங்கையாழ்வாரின் உத்ஸவத் திருமேனி இறங்கிச் செல்கிறதோ, அந்த வயலில் அமோக விளைச்சல் உறுதி என்பது நம்பிக்கை.

*செவ்வாய்ப் பொங்கல் வழிபாடு!*

வழிநெடுக உள்ள அம்மன் தலங்களுக் கெல்லாம் சென்று வழிபட்டுவந்தார் அந்த வணிகர். விதிப்பயனோ என்னவோ அவருக்குப் பார்வை பறிபோய் விட்டிருந்தது. ஜோதிடர்கள் கூறியபடி விமோசனம் வேண்டி அம்மன் தலங்கள் தோறும் வழிபட்டபடி பயணித்துக் கொண்டிருந்தார். வழியில் சிவகங்கை சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்ட இந்த ஊருக்கும் வந்துசேர்ந்தார்.

அங்கிருந்த குட்டையில் அவர் முகம் கழுவ உதவினார், அவரின் வண்டிக்காரர். முகம் கழுவி, கைகளை எடுத்தால், எதிரே தேங்கிக் கிடந்த நீரில் மூக்குத்தி மின்னக் காட்சி தந்தாள் அம்பிகை! ஆம், பார்வை மீண்டது வணிகருக்கு. சிலிர்த்துப்போனார். “அம்மா, தாயே! எனக்குக் கண் கொடுத்த கண்ணாத்தா நீதானா’’ என்று நெக்குருகி வழிபட்டார். மகிமையோடு வெளிப்பட்ட கண்ணாத்தாளுக்கு அந்த இடத் திலேயே அற்புதமாய் கோயில் எழும்பியது. கண்ணுடைய நாயகி, கண்ணாத்தாள், ஆயிரம் கண்ணுடையாள் எனத் திருநாமம் கொண்டாள் அம்பிகை என்கிறது தல வரலாறு. இந்தத் தலத்தின் பெயர் நாட்டரசன்கோட்டை. சிவகங்கையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

அஷ்டபுஜங்களுடன் அசுரனை அழித்த கோலத்தில், ஆனால் சாந்த சொரூபினியாகக் காட்சி தருகிறாள் கண்ணாத்தாள். இவளுக்குக் கண்மலர் சார்த்தி வழிபட்டால், கண் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த அன்னையின் கோயிலில், நாட்டரசன் கோட்டையில் வாழும் நாட்டுக்கோட்டை செட்டிமார்கள், வருடந் தோறும் தை மாதத்தின் முதல் செவ்வாய்கிழமை அன்று பொங்கல் வைத்துப் படையலிட்டு பிரார்த்திக்கின்றனர். இதனால், இந்த விழாவை, ‘செவ்வாய் பொங்கல் திருவிழா’ என்கின்றனர்.

*பொங்கல் வைக்க உகந்த நேரம்!*

சூரியன், தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்வதால், தை முதல் நாளை ‘மகர சங்கராந்தி’ என்றும் போற்றுவார்கள். இந்த நன்னாளில், பொங்கல் படையலிட்டு சூரிய பூஜை செய்வது அவசியம். இந்த வருடம் தைப்பொங்கல் திருநாள் சூரியனுக்கு உகந்த ஞாயிற்றுக் கிழமையிலேயே வருவது கூடுதல் விசேஷம்.

பொங்கல் திருநாநாளில், பொங்கல் பானை வைக்கும் நேரமும் பொங்கும் நேரமும் யோகமுடைய நேரங்களாக இருக்க வேண்டும் என்பது நம்பிக்கை. அவ்வகையில் அன்று காலை 8 முதல் 9:00 மணிக்குள் (புதன் ஹோரையில்) பொங்கல் வைத்து வணங்கலாம்

பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Leave a comment