கிரிவலம் செய்தவர் மேன்மை

அருணாசலத்தை கிரிவலம் வந்தவர்கள் கயிலையை  அடையும்போது சந்திரன் வெண்கொற்றக்குடை பிடிப்பான்; சூரியன் விளக்கை ஏந்தி நிற்பான்; தருமதேவன் கையைத் தாங்கி வருவான் (கைலாகு கொடுப்பான்); இந்திரன் செல்லும் வழியெங்கும் மலர்களைத் தூவுவான்; குபேரன் வணங்கிக் கொண்டு உடன் வருவான்; அட்டவசுக்கள் மலர்மழையைப் மொழிவார்கள்; மேனகை முதலிய தெய்வமகளிர் வீணையிசைப்பார்கள்; அவர்களுள் சிலர் பாடி ஆடுவர், கங்கையும் இயமுனையும் கவரி வீசுவர்; மேகமானது, அமுதத்தையும் ஆடைகளையும் எடுத்துக் கொண்டு எதிரில் செல்லும், திருமகள் மலர்களையும் கத்தூரி முதலிய நறுமணப் பொருட்களையும் எடுத்து வருவாள்; வேதங்கள் புகழ்பாடிக் கொண்டு முன்னால் நடக்கும். 

கிரிவல பலன்கள்.

நல்ல பெட்டியை மனையாளாக அடைய வேண்டுமானாலும் அரசர்கள் கைவசமாக வேண்டும் என்றாலும் பகைவர்கள் உடனே நீங்க வேண்டும் என்றாலும் பாலச்சந்திரனைப் போல நல்ல புதல்வரைப் பெற வேண்டினாலும் சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் எனும் மூவினைகளும் நீங்க வேண்டும் என்றாலும் அரக்கர், பேய்கள், பூதங்கள் முதலியவற்றை விரட்ட வேண்டினும் துன்பம் தரும் நோய்களையும் சோகத்தையும் தொலைக்க வேண்டினாலும் இயலையும் இசையையும் அறிந்து புலமைபெற வேண்டினும் அழகை வேண்டினாலும் புகழை விரும்பினாலும் பெரியோர்கள் அருணாசலத்தை வலம்வருவார்கள்.

கிழமைப் பலன்கள்

சிறப்புடைய ஞாயிற்றுக்கிழமையில் மலை வலம் செய்வோர் சூரியமண்டலத்தைப் பிளந்துசென்று சிவகதிக்கு அதிபதி ஆவார்கள். திங்கட்கிழமையில் வலம்வந்தவர், இந்திரனைப் போல ஏழு உலகங்களையும் ஆண்டு முடிவில் சிவசாரூபம் பெறுவார்கள். செவ்வாய்க்கிழமையில் வலம் செய்தவர்கள், கடன், வறுமை ஆகியவற்றிலிருந்து விடுபட்டுப் பிறவிப்பிணியையும் தொலைப் பார்கள். புதனன்று வலம் வந்தோர், நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள் ஆகியவற்றில் தெளிவுபெற்று முத்திக்குப் பாத்திரமாவார்கள். வியாழனன்று வலம்புரிந்தோர் தேவர், முனிவர்க்கு குரு ஆவார்கள். வெள்ளியன்று வலம்வந்தோர் திருமால் பதவியை அடைவார்கள். சனிக்கிழமை உதயகாலத்தில் வலம்புரிந்தோர்க்கு, ஒன்பது கிரகங்களும் பதினோராம் இடத்தில் (இலாபத்தானம்) இருந்த பலனைத் தரும்.

மிகுந்த பலன் பெறும் வழி

மகாசிவராத்திரியிலும் வருடப்பிறப்பிலும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி எனும் மூன்று மாதங்களிலும் வலம் வருவோர்க்கு மேற் சொன்ன பலன்களிலும் அதிகமான பலன்கள் சேரும். உத்தராயனப் பிறப்பு, தட்சிணாயனப் பிறப்பு, மாசிமகம், அர்த்தோதயம், சூரியகிரகணகாலம், விதிபாதயோகம் ஆகிய காலங்களில், விரும்பியதை அடைய வேண்டி வலம் வருவோர்க்குப் பலன்கள் கோடிமடங்கு அதிகமாகக் கிடைக்கும். சலிப்பின்றி நாள்தோறும் வலம்வருவோர் பெறும் பேறுகளை யார் அறிந்து சொல்ல முடியும்?

கிரிவலம் செய்யும் முறை

அண்ணாமலையை வலம்வரும் முறையாவது: வலம் செய்யும் நாளில் பெண்ணின்பம் துய்க்காமல், நீராடித் தூய ஆடை உடுத்தித்திருவெண்ணீறு உருத்திராக்கம் அணிந்து, அவ்விடத்தில் தானம் செய்து, தாம் பிறரிடம் தானம் பெறாமல், காலினால் நடந்து வரவேண்டும். வலம்வரும் போது இந்திரலிங்கம் முதலிய இலிங்கங்களை வணங்கிக் கொண்டு வர வேண்டும்.

வலம் செய்யும் போது சட்டையையும் போர்வையையும் நீக்கி, குடைபிடிக்காமல், செருப்பு அணியாமல், அச்சம், கோபம், சோகம் முதலியவற்றை நீக்கி, யானை, குதிரை போன்ற எந்த வாகனங் களிலும் ஏறாமல் வழியில் உணவையும் தாம்பூலத் தையும் வெறுத்து (தவிர்த்துக் கொண்டு) கைகளை வீசாமல், சோர்வு கொள்ளாமல், மகிழ்ச்சியோடு தலைமேல் கைகூப்பிக் கொண்டு, பெண்களையும் பாவிகளை ளையும் நீசர்களைமும் உடல் உறுப்புக் குறைந்தவர்களையும் பார்க்காமல், நடக்கும் ஓசை செவிகளில் விழாதபடி பத்துமாத கருப்பமுடைய அரசகுலத்துப் பெண்கள் நடப்பதைப் போல மெல்ல நடக்க வேண்டும்.

அத்திருமலையைத் எட்டுத்திசையிலும் விழுந்து வணங்கி அங்கு தவம் செய்யும் முனிவர்களைப் பணிந்து அம்மலையை அருவமாக வலம் வரும் சித்தர்களையும் தேவர்களையும் மனத் தால் வணங்கி அவர்கள் மேல் நம் கை, கால்கள் பட்டு விடுமோ என்று ஒதுங்கி, அருணகிரியைப் பொன்மலையாகவும் படிகமணி மலையாகவும் நினைத்து மௌனமாக நடக்க வேண்டும். அல்லது சிவபிரான் புகழைக் கேட்டபடி நடக்க வேண்டும். இம்முறைப்படி மலைவலம் புரிந்து திருக்கோயிலை அடைந்து அண்ணாமலை அண்ணலை வணங்கித் தம் இருப்பிடம் திரும்ப வேண்டும்.

திரும்பி வந்ததும் குணக்குன்றுகளாய் இருக்கும் சிவனடியார்களோடு சேர்ந்து பாலும் பழமும் உண்ணவேண்டும். அல்லது புலால் அல்லாத உணவையும் உண்ணலாம். இது அத்திருத்தலத்தில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய முறையாகும். வெகுதொலைவில் இருந்து அங்கு வருவோர் உடல்வருத்தம் முதலியவற்றால் எவ்வகையில் வலம் செய்தாலும் அது நன்மையாகும்.

அருணாசல தலத்தின் இலிங்கங்கள்

ஞானம் நிறைந்த சனகனே! (பிரமன் கூற்று) அருணாசலத்தைச் சுற்றி எண்திசைக்காவலர்கள், தம் பெயரில் எட்டு சிவலிங்கங்களைத் தாபித்து வழிப்படுள்ளனர். (இந்திரலிங்கம், அக்கினிலிங்கம், இயம லிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம்,வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானலிங்கம் என்பன.) அந்த இலிங்கங்கள் கிழக்குத் திசை தொடங்கி, வடகிழக்குத் திசைவரை எட்டுத் திசையிலும் விளங்குகின்றன.)

கிழக்குப் தாபித்து மலைமகளான பார்வதிதேவி, அண்ணாமலைக்குக் பகுதியில் உள்ள பவளக்குன்றில் சிவலிங்கத்தைத் வழிபட்டாள். வச்சிராங்கத பாண்டியன் அருணகிரியின் தெற்கில் ‘புழுகணிஇறைவர்’ என்ற ஒர் இலிங்கத்தைப் பிரதிட்டை செய்து பூசித்தான். தீராத தீவினைகளைத் தீர்க்க நானும் (பிரமன்) அம் மலையின் மேற்குத்திசையில் ‘அணிஅண்ணாமலையான்’ என்னும் பெயர்கொண்ட  ஒர் இலிங்கத்தைப் பிரதிட்டை செய்து வழிபட்டேன்.

முன்னொரு காலத்தில் சூரியன், அருணகிரியைத் தாண்டிச் சென்றதால் ஏற்பட்ட பெரும்பாவத்தைத் தீர்க்க, அத்தலத்தில் தன்பெயரில் ஒரு இலிங்கப்பிரதிட்டை செய்து பூசித்தான். அத் தலத்தில் விளங்கும் திருக்கோயில் முழுதும் தேவர்கள், நாகர்கள், சித்தர்கள், முனிவர்கள் முதலியோர் தாபித்த இலிங்கங்கள் இவ்வளவு என்று சொல்ல முடியாது. அருணகிரியின் எல்லையைச் சூழ்ந்து மூன்றுயோசனை தூரம் வரை சிவலிங்கங்கள் நிறைந்திருக்கும்.

சைவ எல்லப்ப நாவலர் அருளிய அருணாசல புராணம் – உரைநடைச் சுருக்கம் என்னும் நூலில் உள்ள திருமலை வலம்புரி சருக்கத்தில் இருந்து…

Leave a comment