சொக்கப்பனையும் மாவளியும்

.

அருகிவரும் பாரம்பரியங்கள்.இரண்டுக்கும் பனைமரமே ஆதாரம். (பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும்)கார்த்திகைத் திருநாளில் சிவப்பரம்பொருள்  ஆலயங்களிலும் முருகன் ஆலயங்களிலும் சொக்கப்பனை கொளுத்துவார்கள்.

சிவப்பரம்பொருள்  அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்குக் காட்சி அளித்ததை நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.கற்பகத் தருவான  பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றன. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு. பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்து விட்டு எரியும் தன்மை உடையது.பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது.

பெரிய புராணத்தில் அற்புதமான பாடல் உண்டு.

“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணாய

நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்

நாணாது மேடிய மால் நான்முகனும் காண நடுச்சேணாலும்

தழல் பிழம்பாய் தோன்றியது தெளிந்தார்”

இதுதான் அந்தப் பாடல்.

திருமாலும் பிரம்மனுமே அடிமுடி தேடிக் கண்டடைய முடியாத வண்ணம், நெருப்புத் தழலாகக் காட்சியளித்த பரமேஸ்வரனை அக்னிமயலிங்கமாக வழிபடுவதே சொக்கப்பனையின் தாத்பரியமாகும்.திருக்கார்த்திகை தினத்தில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன் வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றி பனை ஓலைகளைப் பிணைத்துக் கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பை உருவாக்குவார்கள். மாலை வேளையில் இந்தப் பனைக்கூம்பின் முன் ஸ்வாமி எழுந்தருள்வார். சில கோயில்களில் அம்பாளும் ஸ்வாமியும் எழுந்தருள்வார்கள். சில கோயில்களில் பஞ்சமூர்த்திகள் (விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர்) எழுந்தருள்வார்கள். அவர்களுக்குத் தீபாராதனை முடிந்ததும், சொக்கப்பனை கொளுத்தப்படும்.கொழுந்துவிட்டு எரியும் அந்த ஜோதியை சிவமாகவே எண்ணி வழிபடுவார்கள். சுமார் முப்பது, முப்பத்தைந்து அடி உயரத்துக்கு (முழுப் பனையையே சொக்கப்பனைக்குப் பயன்படுத்துவார்களாம்) அமைக்கப்படும் சொக்கப்பனை  உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலின் தனிச்சிறப்பு.சில ஊர்களில், சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை தைலத்துடன் சேர்த்து ரட்சையாக, காப்பாக பூசிக் கொள்வார்கள். சாம்பலை எடுத்துச் சென்று வயற்காடுகளிலும் தூவுவார்கள். இதனால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

 விஷ்ணு ஆலயங்களிலும் சொக்கப்பனை விழா நடைபெறுகிறது.அதே நேரத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் திருவண்ணாமலையில், சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஏனெனில் அங்கு மலையே பிரம்மாண்டமான சொக்கப்பனை. கார்த்திகைத் தீப நாளில் “மாவளி” சுற்றுதல் என்ற விளையாட்டும் நிகழும்.அதற்கும் பனம்பூ தான் உதவுகிறது. கார்த்திகை தீப நன்னாளில், கோயில்களில் தீபமேற்றுவார்கள். வீட்டுப் பூஜையறை துவங்கி, வாசல், மாடிப்படிப் பகுதிகள், என வரிசைக் கட்டி தீப ஒளி ஜொலிப்பதே பேரழகு. இப்படி வீடும் கோயிலும் ஒளிமயமானதாக இருக்க… தெருவில் சிறுவர்களும் சிறுமிகளும் மாவளி சுற்றி விளையாடுவார்கள். இதிலென்ன ஆச்சரியம் தெரியுமா… இந்த மாவளியிலிருந்தும் வட்டமாக ஒளிச் சுடர் பிரகாசித்துச் சுற்றும்.

நீங்கள், உங்கள் சிறுவயதில் மாவளி சுற்றியிருக்கிறீர்களா?கார்த்திகைத் தீப நாளில் ‘மாவளி’ சுற்றுதல் என்ற விளையாட்டும் நிகழும், ஞாபகம் இருக்கிறதுதானே? இன்றைக்கு உள்ள சிறுவர்களுக்கு இந்த விளையாட்டெல்லாம் தெரியாது. அதாவது, பனம்பூவினை (பனம் பூக்கள் மலரும் காம்பு.)  நன்கு காய வைத்து, காற்றுப்புகாமல் (பள்ளத்துக்குள் வைத்து) தீயிட்டுக் கரியாக்கிவிடுவார்கள்.பிறகு, அதை நன்கு அரைத்துச் சலித்துத் துணியில் சுருட்டிக் கட்டுவார்கள். அடுத்து, பனை ஓலை மட்டைகள் மூன்றை எடுத்து அதன் நடுவில் கரித்தூள் சுருணையை வைத்துக் கட்டுவார்கள். . பிறகு அதை உறியைப் போல் நீண்ட கயிற்றில் பிணைப்பார்கள்.இதையடுத்து, துணிப்பந்தில் நெருப்பை வைத்து கனலை ஏற்படுத்துவர். கயிற்றைப் பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும் சுற்றுவர். இருளில் அது தீப்பொறிகளைச் சிதறவிட்டு, எரிநட்சத்திரம் வேகமாகச் சுழன்று ஓடினால் எப்படி இருக்குமோ… அப்படியாகக் காட்சி தரும்.அப்போது மாவளியோ மாவளி என்று சத்தமிடுவர் சிறுவர்களும் சிறுமிகளும்!வீடு, கோயில். வீதி என எல்லா இடங்களிலும் ஒளி வடிவில் நீக்கமற நிறைந்து, ஈசன் அருள்கிறான் என்பதாக ஐதீகம்!

பெயர்க் காரணம்:

மாவளி மா + ஒளி = மாவொளி மா – என்றால் பெரிய என்று பொருள்.ஒளி – என்றால் வெளிச்சம்.மாவொளி என்பதே மருவி மாவளி என்று அழைக்கப்படுகிறது.

மாவளியின் பயன்கள்:

சுற்றுச்சூழல் மாசற்ற இயற்கைக் கரிமருந்து.காண்பவருக்கு  களிப்பை உண்டாக்கக் கூடியது.முற்றிலும் பாதுகாப்பான தீக்காயம் ஏற்பட வாய்ப்பே இல்லாத விளையாட்டு.பொருட்செலவே இல்லாத வானவேடிக்கை.

நாம் செய்ய வேண்டியது:மறந்தும் மறைந்தும் வரும் மாவளி சுற்றும் கலையை மிகப்பெரிய அளவில் திருவிழாவாக முன்னெடுப்பது.தமிழனின் இயற்கை வானவேடிக்கையை உலகறியச் செய்வது.நச்சுப் புகையையும் , தீக்காயங்களையும் உண்டாக்கும் பட்டாசுக்கு மாற்றாய் மாவளியைப் பயன்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது.

பண்டைய பாறை ஓவியத்திலும் மாவளி சுற்றுவது பதிவாயிருக்கிறது என்பது மிகவும் வியப்பில் ஆழ்த்தும் செய்தியாகும். ஆம்.கிருஷ்ணகிரி மாவட்டம்,ஐகுந்தம் என்னும் இடத்தில் இவ்வோவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனில்,பண்டையக் காலங்களிலே மாவளி சுற்றுவது தமிழக மக்களிடையே தொன்றுதொட்டு வந்த பாரம்பரியம் என்பது விளங்கும். `’பூலோக கற்பகவிருட்சம்’’ என்று புராணங்கள் போற்றும் பனைக்கு உரிய ஆன்மிக மகத்துவங்களைத் தெரிந்துகொள்வோம். பனை ஓலைகள் கூரை வேய, ஓலையின் அடிக்காம்புகள் நார் எடுக்க, பழங்கள் (நுங்கு) உணவாக, பனைமரத்தின் பாளையை வெட்டினால் பதநீர்… இப்படி பனையின் அனைத்து பாகங்களும் நமக்குப் பயன்படுவதால், இதை `’பூலோகக் கற்பகவிருட்சம்’’ என்று சிறப்பிப்பார்கள். பனையில் தாலி, கல்பனை, தாடகை எனப் பலவகைகள் உள்ளன.

 பல திருத்தலங்களின் ஸ்தல விருட்சமாகவும் திகழ்கிறது பனை. திருப்பனந்தாள், வன்பார்த்தான் பனங்காட்டூர், பனையபுரம், திருவோத்தூர் ஆகிய தலங்களை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். `’கன்றாப்பூர்’’ எனும் தலத்தில் கல்பனை தலமரமாக உள்ளது என்பார்கள். திருவோத்தூர் தொண்டைநாட்டு சிவத்தலம். இங்கே, சிவபெருமானுக்குப் பனம் பழங்களைப் படைக்க விரும்பிய அடியார் ஒருவர் பனைமரங்களை நட்டுவைத்தார். ஆனால், அவை யாவும் ஆண் மரங்களாக இருந்ததால் காய்க்காமல் போயின. பின்னர் அவ்வூருக்கு வந்த திருஞான சம்பந்தர், ‘’பூர்த்தேர்ந் தாயென’’ எனும் பதிகம் பாடி சிவபெருமானைத் துதிக்க, ஆண் பனைகள் பெண் பனைகளாகி பூத்துக் காய்த்துக் கனிந்து கனிகளை உதிர்த்தன என்கிறது தல வரலாறு. ‘`கூந்தற்பனை’’ என்றொரு வகை உண்டு. இதன் பாளைகள் பெண்களின் கூந்தலைப் போன்று சடை சடையாகத் தொங்கும். பார்ப்பதற்கு மிக அழகான இந்தப் பாளைகளைத் தோரணம்கட்டப் பயன்படுத்துவார்கள்.

 `’தாடகை’’ என்பதும் பனைவகைகளில் ஒன்று. தென் மாவட்டங்களில் இவ்வகைப் பனை அதிகம் உண்டு. தெய்வாம்சம் மிகுந்ததாகக் கருதப்பட்ட இந்த மரத்தின் பெயரைப் பெண்பிள்ளைகளுக்குச் சூட்டும் வழக்கமும் உண்டாம். இராவணனின் சகோதரிக்கு, `தாடகை’ என்று பெயர். தாடகை மரங்கள் நிறைந்த தாடகை மலையில் பிறந்து வளர்ந்ததால், அவளுக்கு `தாடகை’ என்று பெயர் வந்ததாகத் தகவல் உண்டு.திருப்பனந்தாள் எனும் ஊர் பிரசித்திப்பெற்ற சிவத்தலம். இங்கே பனங்காட்டின் மத்தியில் அமைந்த சிவாலயம், `’தாடகேச்சுவரம்’’ எனச் சிறப்பிக்கப்பட்டது. இங்கே சிவனாரை வழிபட்ட தாடகை என்ற பெண்ணுக்காக, அவள் சூடிய மாலையை சிவனார் தலைகுனிந்து ஏற்றதாக திருக்கதை உண்டு. அவரே, பிற்காலத்தில் குங்கிலியக்கலய நாயனாரின் பக்தியை ஏற்று தலைநிமிர்ந்தாராம்.

.

Leave a comment