வாலீஸ்வரர்

திரேதாயுகத்தில் இந்திரனின் மகனாகத் தோன்றியவன் வாலி. அவன் மிகச் சிறந்த சிவபக்தன். நாளெல்லாம் நாதன் நமசிவாயனை பூஜிப்பதையே தன் பிறவிக் கடனாகக் கருதி, உதயகாலம் முதல் சந்தியாகாலம் வரை கடல் நீராடி, சிவ பெருமானை வழிபடுவது வாலியின் வழக்கம். ஒருமுறை, சிவ பூஜையில் திளைத்திருந்த போது, தன்னைப் பின்புறம் இருந்து தாக்க வந்த ராவணனைத் தன் விரல் இடுக்கில் பற்றிக்கொண்டு, (வாலில் சுற்றிக் கொண்டு என்றும் சொல்வதுண்டு) ராவணன் அலறித் துடிக்கும்படியாக எட்டு திசைகளையும் சுற்றி வந்து, ராவணன் மன்னிப்பு கேட்ட பிறகே, அவனை விடுவித்தான். அந்த அளவுக்கு வலிமை கொண்டிருந்தவன் வாலி.

வாலியின் சிவபக்தியைப் போற்றும் வகையில், அவனுக்கும் அவனைக் காரணமாகக் கொண்டு உலக மக்களாகிய நமக்கும் அருள்புரியும்பொருட்டு சிவ பெருமான் ஓர் அருளாடல் புரிந்தார். அந்த அருளாடல் நிகழ்ந்த திருத்தலம்தான், இதோ நாம் இப்போது தரிசித்துக் கொண்டிருக்கிறோமே, இந்த எச்சூர் திருத்தலம். ஆதியில், இந்த ஊருக்கு லக்ஷ்மிநிவாசபுரம் என்று பெயர்!

ஒருநாள், வழக்கம்போல் காலையில் கிழக்குக் கடலில் நீராடி சிவபெருமானை வழிபட்ட வாலி, மாலையில் மேற்குக் கடலில் நீராடி சிவபூஜை செய்வதற்காக வான் வழியே இந்த இடத்துக்கு மேலாக வந்த போது, அவன் பயணம் தடைப்பட்டது. தாம் அங்கே சுயம்புவாக பூமியில் புதைந்து இருப்பதாகவும், தம்மைக் கண்டெடுத்து வழிபடும்படியாகவும், அசரீரியாக ஈசனின் குரல் ஒலித்தது. அதன்படி, வாலி பூமியில் புதையுண்டிருந்த சிவலிங்கத்தை எடுத்து, முறைப்படி ஓர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். வாலி வழிபட்டதால் இந்த ஈசன் வாலீஸ்வரர் என்று திருப்பெயர் கொண்டார். பச்சை நிறக் கல்லால் ஆன அம்பிகையின் திருநாமம் – ஸ்ரீஅபீதகுசாம்பாள்.

 இங்கு வந்து ஸ்ரீவாலீஸ்வரரை வழிபட, வாழ்க்கையில் எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்றும், வழக்குகளில் வெற்றியே கிடைக்கும் என்றும் ஊர்மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.  

Leave a comment