ஸ்ரீ கிருஷ்ண உணர்வு

ஸ்ரீ கிருஷ்ண உணர்வு என்னும் நெருப்பு எரியத் தொடங்கிய உடனேயே கடந்த கால பாவ விளைவுகள் அனைத்தும் சுட்டெரிக்கப்படுகின்றன..!..

இன்றைய மனிதர்கள் இருபத்துநான்கு மணி நேரத்தில் பன்னிரண்டு மணிநேரம் உறங்குகின்றனர், மீதி பன்னிரண்டு மணி நேரத்தில் பத்து மணி நேரம் பொருள் ஈட்டுவதில் செலவிடுகின்றனர்.

எஞ்சியிருப்பது இரண்டு மணிநேரம் மட்டுமே, அதில் எங்கிருந்து ஆன்மீகத்தைப் புரிந்துகொள்வது? அவர்களுக்கு நேரமே இருப்பதில்லை.

மேலும்,  இந்த யுக மக்களோ, இருப்பிடம், உணவு, மனைவி போன்றவற்றை அடைவதற்குக்கூட மிகவும் சிரமப்படுகின்றனர்.

இறுதியாக, மேற்கூறிய எல்லா வற்றையும்விட, மக்கள் எப்போதுமே வியாதிகளாலும் எண்ணற்ற பிரச்சனைகளாலும் கவலை அடைந்துள்ளனர்.

இதுவே இன்றைய யுக மக்களின் நிலையாகும். எனவேதான், வழக்கமான விதிகளின் மூலமாக முக்தியடைதல் மக்களுக்கு கடினம் என்று எண்ணிய கிருஷ்ணர், அவதரித்து வாழ்வின் மிகவுயர்ந்த பக்குவத்தை, ஆன்மீகப் பேரின்பத்தை எல்லா மக்களுக்கும் விநியோகிக்கின்றார். 

உத்தமம் என்றால் “சிறந்தது” என்று பொருள். உத்தமம் என்பதற்கான பொருளை பத்ம புராண ஸ்லோகம் ஒன்றின் மூலமாக விளக்கலாம்:

 *அப்ராரப்த-பலம் பாபம்  கூடம் பீஜம் பலோன்முகம்* 

 *க்ரமேணைவ ப்ரலீயேத  விஷ்ணு-பக்தி-ரதாத்மனாம்* 

உன்னத அறிவாகிய கிருஷ்ண உணர்வைப் பெறுபவரின் அனைத்து பாவ விளைவுகளும் அதன் விதைகளும் படிப்படியாக அழிந்துபோகின்றன என்பதே இதன் பொருளாகும்.

இதற்கான உதாரணத்தை நாம் பகவத் கீதையில் படித்துள்ளோம்—நெருப்பில் போடப்படுபவை சாம்பலாக்கப்படுவதைப் போலவே, ஸ்ரீ கிருஷ்ண உணர்வு என்னும் நெருப்பு எரியத் தொடங்கிய உடனேயே கடந்த கால பாவ விளைவுகள் அனைத்தும் சுட்டெரிக்கப்படுகின்றன.

வாழ்க வையகம்    வாழ்க வையகம்  வாழ்க வளமுடன்

Leave a comment