
*எல்லோரும் ஸ்ரீராமர்* *பட்டாபிஷேகப்படத்தை* *பார்த்திருப்போம்*ஆனால் *ஸ்ரீ சிவ* *பெருமானின்* பட்டாபிஷேகம் படத்தை அனேகம் பேர் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை.சிவபெருமான் தன்னுடைய திருவிளையாடல்கள் அனைத்தையும் நிகழ்த்திய இடம், மதுரை. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் புகழ் மிக்க தலம் மதுரை. இங்கு சிவபெருமான் தன் அடியார்களுக்கு அருள்புரிய 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார். பக்தர்களைக் காப்பதற்காக தமிழ்ப் புலவராக, சித்தராக, பிட்டுக்கு மண் சுமக்கும் தொழிலாளியாக, விறகு விற்பவராக பல வேடங்களைத் தாங்கி வந்தார். அவரே பாண்டிய நாட்டின் மன்னராகவும் வீற்றிருந்து ஆட்சி புரிந்தார்.இங்கு மீனாட்சியாக அவதரித்திருந்த பார்வதி தேவியைக் கூட, அவர் திருவிளையாடல் புரிந்தே திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் அவர் தன்னுடைய மனைவி மீனாட்சியோடு மதுரையம்பதியின் அரசராக முடிசூடிக் கொண்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன. மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை மீனாட்சி அம்மன் ஆட்சி. சித்திரைத் திருவிழாவின் 8ம்நாள் விழாவில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. ஆவணி மூலத்திருவிழாவின் 7ம் நாளில், அம்மனிடமிருந்து சுவாமிக்கு ஆட்சி அதிகாரம் மாறும் வகையில்அம்மனிடமிருந்து செங்கோலை வாங்கி சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு, அதுவரையான அம்மன் ஆட்சி நிறைவுற, சுவாமியின் ஆட்சி அரங்கேறுவதாக பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது. ஆவணி முதல் சித்திரை மாதம் வரை எட்டு மாதத்துக்கு சுந்தரேசுவரரின் ஆட்சி நடக்கும் என்பது ஐதீகம். ஆணும், பெண்ணும் சமம் என்பதையும், அவர்கள் சேர்ந்து வாழ்ந்தால் தான் உலகத்தில் நற்பலன்கள் நடக்கும் என்பதையும் உணர்த்தும் விதத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.*ஸ்ரீசிவ பெருமானின்* *பட்டாபிஷேக. திருக்கோலம்*
சிம்மாசனத்தில் நான்கு கரங்களுடன் வீற்றிருக்கும் சிவபெருமான், இரு கரங்களில் மழு,மான் தாங்கியும், ஒரு கரத்தால் அருளாசி வழங்கியபடியும், ஒரு கரத்தால் தனது இடது பக்கம் மடி மீது வீற்றிருக்கும் மீனாட்சி தேவியை அணைத்தபடியும் அருள்கிறார். இடது காலை மடக்கி, வலது காலை தொங்க விட்டிருக்கிறார். வலது காலை, சிம்மாசனத்தின் கீழே வீற்றிருந்து நந்தியம்பெருமானும், காரைக்கால் அம்மையாரும் தாங்குகின்றனர். சிம்மாசனத்தைச் சுற்றிலும் விநாயகர், ஆறுமுகப்பெருமான் மற்றும் முனிவர்களும், ரிஷிகளும் வீற்றிருப்பதே, ‘சிவ பட்டாபிஷேக’ திருக்கோலம் ஆகும்.