முருகப் பெருமானுக்கு ஆட்டுக்கடா வாகனமா?

முருகப் பெருமானுக்கு ஆட்டுக்கடா வாகனமா? (கந்தபுராண நுட்பங்கள்): நாரத முனிவர் நிலவுலகில், எண்ணிறந்த தவமுனிவர்களும் அந்தணர்களும் சூழ்ந்திருக்கச் சிறந்ததொரு சிவவேள்வியினைப் புரியத் துவங்குகின்றார். எதிர்பாராத விதமாக அவ்வேள்வியினின்றும் சிவந்த நிறமுடைய ஆட்டுக்கடாவொன்று வெளிப்பட்டு, விண்ணிலும் மண்ணிலும் எண்திசைகளிலும் எதிர்ப்படுவோர் அனைவரையும் அழித்தொழிக்கத் துவங்குகின்றது. எவரொருவராலும் அதனைத் தடுக்க இயலாத நிலையில் அனைவரும் திருக்கயிலை மலைக்கு அபயம் வேண்டி விரைகின்றனர்.

அங்கு திருவாயிலுக்கருகில் லட்சத்து ஒன்பது வீரர்களுக்கு நடுவில் திருவிளையாடல்கள் புரிந்து மகிழ்ந்திருக்கும் ஆறுமுகக் கடவுளைத் தரிசிக்கின்றனர். கந்தவேளிடமே இதுகுறித்து முறையிடுவோம் என்று கருதி சிவகுமரனின் திருமுன்பு சென்று முறைமையாகப் பணிந்து, ‘ஐயனே, மறைவழி நின்று வேள்வியொன்றினைப் புரிந்து வருகையில் அதனின்று ஒரு ஆட்டுக்கடா தோன்றி காண்பவரையெல்லாம் கடும் சீற்றத்துடன் கொன்று குவித்து வருகின்றது. இன்னமும் ஒரு நாழிகை நேரம் தாமதித்தால் இப்படைப்பிலுள்ள உயிர்கள் யாவையுமே அது அழித்து விடும், நீங்களே காத்தருள வேண்டும்’ என்று விண்ணப்பிக்கின்றனர்.  முருகப் பெருமான் ‘அஞ்சேல்’ என்று அவர்களுக்கு அபயமளித்து வீரவாகுவிடம், ‘அந்த ஆட்டுக்கடாவினை இவ்விடம் கொணர்க’ என்று கட்டளையிட்டு அருள் புரிகின்றான். வீரவாகுவும் விரைந்து சென்று கந்தப் பெருமானின் திருவருளால் அக்கடாவினை அடக்கி அதனுடன் குகக் கடவுளின் சன்னிதிக்கு மீள்கின்றார். அது கண்டு திருவுள்ளம் மகிழும் வேலவன் விண்ணோர்களை நோக்கி, இனி நீங்கள் இது குறித்து அஞ்சாமல் நிலவுலகு சென்று உங்கள் வேள்வியைத் தொடர்வீர்’ என்றருளிச் செய்கின்றான்.

தேவர்கள் அகமிக மகிழ்ந்து நன்றிப் பெருக்குடன், ‘பெருமானே, இன்று நீங்கள் எங்களைக் காத்து அருள் புரிந்துள்ள தன்மையினை யாவரும் உணருமாறு இந்த ஆட்டுக்கடாவினை உங்களது வாகனமாக ஏற்று அதன் மீது எழுந்தருளி வருதல் வேண்டும்’ என்று விண்ணப்பித்துப் பணிகின்றனர். குமாரக் கடவுளும் அதற்கு இசைந்தருளி அன்று முதல் அக்கடாவின் மீது பெருவிருப்புடன் ஆரோகணித்து வலம் வருகின்றான், 

(உற்பத்தி காண்டம்: தகரேறு படலம் – திருப்பாடல் 25) நவையில்சீர் முனிவர் தேவர் நயப்ப நாரதன் என்றுள்ளோன்புவிதனில் வந்து முற்றப் புரிந்தனன் முன்னர் வேள்விஅவர்புரி தவத்தின் நீரால் அன்றுதொட்(டு) அமல மூர்த்திஉவகையால் அனைய மேடம் ஊர்ந்தனன் ஊர்தியாக (சொற்பொருள்: மேடம் – ஆட்டுக்கடா)

நன்றிகள் திரு தேவராஜன் நடராஜன் ஜயா அவர்கள்.   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s