வாக்தேவி ஏன் வெட்கப்பட்டாள்?

வீணையில் ஒரு ரகம் உண்டு.  அதாவது தெய்விக வீணை. அதற்கு கச்சபீ என்று பெயர். ஸ்ரீ சரஸ்வதி தேவியின் கையில் இருப்பது அந்த வீணைதான்.  கச்சபீ வீணையில் பொதுவாக ஸ்வரம் மட்டும் தான் கேட்கும். சாகித்யம் கேட்காது.  ஆனால் ஸ்ரீ கலைமகள் கையில் இருக்கும் வீணையில் மட்டும் தான் ஒரு குழந்தையின் மழலைச் சொற்கள் போல சாகித்யமும் இனிமையாகக் கேட்குமாம்.

ஒரு முறை வாக்தேவியானவள் ஸ்ரீ மஹாதேவரின் பொருமைகளை தன்னை மறந்து கச்சபீ வீணையில் வாசித்துக்கொண்டிருந்தாள்.  அவளது வாசிப்பின் ஒலித்த சாகித்யமானது மிகவும் ரம்மியமாக இருந்ததைக் கேட்ட ஸ்ரீ பார்வதி தேவி ஸ்ரீ சரஸ்வதி தேவியின் நாதத்திற்கு இடையூறு செய்யாமல் அந்த இன்ப ரசத்தில் மூழ்கி இருந்தாள்.   வாசிப்பின் லயம் கூடக் கூட  சாகித்யத்தில் மழலை சொற்களும் இழைந்தோடின.  மிகவும் ரசித்த நிலையினில் ஜகதம்பா தன்னை மறந்து ஸாது என்று கூறி விட்டார்.  அதாவது பேஷ் என்று பொருள்.

ஸ்ரீ பார்வதி தேவியின் குரலின் இனிமையைக் கேட்ட வாக்தேவி தன்னுடைய கச்சபீயை  உரையில் போட்டு மூடினாள்.  என்ன காரணம் தெரியுமா?  அதுவரை ஸ்ரீ சரஸ்வதி வாசிக்கும் கச்சபீ வீணையின் ஒலிதான் மிகவும் இனிமை வாய்ந்த்தாகக் கருதப்பட்டது.   ஆனால் அன்னையின் குரல் இனிமையைக் கேட்ட பிறகு தன்னுடைய வீணா கானத்தில் இனிமை இல்லை என்று வெட்கினாளாம். அதனால்தான் கச்சபீயை உறையிலிட்டு மூடினாளாம்

நவராத்திரியில் லலிதா சகஸ்ர நாமம் படித்தல் மிகவும் சிரேஷ்ட்த்தினைக் கொடுக்கும்  அதில் நிஜ சல்லாப மாதுர்ய விதிர் பர்த்சித கச்சபீ என்னும் வரிகள் இருப்பதையும் அறிவீர்கள் அல்லவா?

 

 

 

Advertisements

எது பக்தி?

புலி ஒன்று உறுமும் சத்தம் கேட்டதும் அந்த மூன்று  இளைஞர்களும் திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தனர். உறுமும் சத்தம் இன்னும் அதிகமானது.  செத்தோம் என்றான் முதலாமவன்.  சாக மாட்டோம் கடவுள் இருக்கிறார் அவரை வேண்டுவோம் என்றான் இரண்டாமவன்.  கடவுளை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்? இதோ இந்த மரத்தில் ஏறி ஒளிந்து கொள்ளலாம் என்றான் மூன்றாமவன்,

முதலாமவன் மூடன் ஏனெனில் கடவுள் இருக்கிறார் என்ற நினைப்பே அவனுக்கு இல்லை.  இரண்டாமவன் அறிவாளி உயிர்களைப் படைத்து காத்து அழிப்பவர் கடவுள் ஒருவரே என்ற நினைப்பு இருந்தது.  ஆனால் மூன்றாமவனுக்கு மட்டுமே கடவுள் மீது உண்மை பக்தியும் தான் நேசிப்பவருக்கு துன்பம் தரக்கூடாது என்ற நல்லெண்ணமும் இருந்தது. அவர் நம்மைக் காப்பாற்றுவார் என்ற தெளிவும் இருந்தது. இந்த தெளிவு நம் எல்லோருக்கும் தேவை. கோயிலுக்கு சென்று கடவுளைத் தரிசித்து பக்தி செலுத்த பலருக்குத் தெரியவில்லை.  இது வேண்டும்  அது வேண்டும் என்று மனதில் எழும் ஆசைகளை மட்டும் வெளிப்படுத்துகிறார்களே  தவிர அன்பை அவரிடம் வெளிப்படுத்துவதில்லை.

பழம் சொன்ன பாடம்

நபிகள் நாயகத்தை பார்க்க ஒரு பெண் பழங்கள் கொண்டு வருவாள்.  அதில் ஒன்றிரண்டை எடுத்துவிட்டு மற்றதை சீடர்களிடம் கொடுப்பார்.  அன்புடன் தருவதை சாப்பிடாமல் சீடர்களுக்கு கொடுக்கிறாரே……………… என்ற வருத்தம் ஏற்பட்டது.  தான் வருவதை விரும்பவில்லையா அல்லது பழங்களின் சுவை இல்லையா என சிந்தித்தாள்.

ஒரு நாள் திராட்சை பழங்களுடன் வந்தாள்.  ஆசி பெற்றாள். அதில் இரண்டை எடுத்து சுவைத்தார் நாயகம்.  மீதியை சீடர்களிடம் கொடுப்பார் என நினைத்தாள்.  ஆனால் அவரே தொடர்ந்து சாப்பிட்டார்.  இதைக் கண்ட அவள்  மகிழ்ந்தாள்.

நான் கொடுப்பதை விருப்பமுடன் ஏற்றுத்தான் வந்திருக்கிறார். உண்மையை உணராமல் நான் தான் தவறாக கருதிவிட்டேன் என நினைத்தாள்.  அவளுடன் பேசிக்கொண்டே பழங்கள் முழுவதையும் சாப்பிட்டார். மகிழ்ச்சி தாங்கவில்லை அவளுக்கு  மீண்டும் ஆசி பெற்று விடை பெற்றாள்.  ஐயா……………………. பேருக்கு ஒன்று இரண்டை எடுத்துவிட்டு மீதியை எங்களுக்குக் கொடுப்பீர்களே………….. ஆனால் இன்று மட்டும் முழுவதையும் சாப்பிட்டு விட்டீர்களே ………………. என சீடர்கள் கேட்க நாயகம் சிரித்தார்.

வழக்கமாக உங்களின் வயிற்றுப்பசியை ஆற்ற விரும்புவேன். இன்று அவளின் மனப்பசியை ஆற்றினேன்  என்றார் நாயகம்.  சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.  சரி உங்களுக்கு புரியும்படி சொல்கிறேன். அவள் கொடுத்த பழங்கள் மிகப் புளிப்பானவை. அதை வாயில் வைத்ததும் துப்பிவிடுவீர்கல். அதைக் கண்டால் அவள் வருந்துவால். இவ்வளவு நாள் கொடுத்ததற்கும் அர்த்தம் இல்லாமல் போகும். நான் சாப்பிடவில்லையே எனக் கருதும் அவளின் சந்தேகமும் தீர்ந்தது. என்றார்.

நாயகத்தின் பெருந்தன்மை கண்டு சீடர்கள் வியந்தனர். தற்செயலாக அவள் வாசலில் மறைந்து நின்று கேட்க நேர்ந்தது. அவளையும் அறியாமல் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது.

 

நீங்களும் ராஜராஜர் தான்

பதவியேற்ற நாள் முதல் தொடர்ந்து போரில் ஈடுபட்ட சோழமன்னர் ராஜராஜருக்கு சலிப்பு வந்தது.  அவருக்குள் இருந்த சிவபக்தி வேறுவிதமாக சிந்தித்தது.  சந்திர சூரியர் உள்ள வரை உலகில் புகழ் நிலைக்க திருப்பணி செய்ய விரும்பியது.

ஏழுபனை உயரத்திற்கு பெரிய கோவில் கட்ட முடிவு செய்தார்.  சாத்தியமில்லை என அனைவரும் மறுத்தனர். கோயில் பணியில் ஈடுபட்டால் நிர்வாகத்தில் குளறுபடி ஏற்படும் என இளவரசர் ராஜேந்திரனும் தயங்கினார். இந்த நிலையில் ராஜராஜரின் மனதில் திருப்பணி செய்வது சிவனின் எண்ணம் அதனால் அவனே முன் நின்று முடித்து வைப்பான் என்ற எண்ணம் எழுந்தது.

பெருந்தச்சரான குஞ்சரமல்லர் மன்னரின் எண்ணத்தை ஓவியமாக்கினார்.  அதைப் பார்த்தவர்கள் அதன் பிரம்மாண்ட்த்தை எண்ணி ஆச்சர்யப்பட்டனர்.  இக்கோயிலால் சோழ நாடு மங்காத புகழுக்கு சொந்தமாகும் என மகிழ்ச்சி ஏற்பட்டது.   சிற்பிகளும் அடிமைகளும் தஞ்சையில் குவிக்கப்பட்டனர். கல் எடுக்க நார்த்தாமலை தேர்வு செய்யப்பட்டது.  கற்களை சுமந்து வர காளை மாடுகள் குதிரைகள் யானைகள் வரவழைக்கப்பட்டன.  ஏழாண்டுகளில் கோயில் முழுவடிவம் பெற்றது. கோபுரம் பெரிதாகவும் கருவறை விமானம் சிறிதாகவும் கட்டுவது  மரபு.  ஆனால் இங்கு கோபுரத்தை விட பெரிதாக விமானம் ஏழுபனை உயரத்திற்கு கட்டப்பட்டது. அதாவது 210 அடி.  அந்த உயரத்திற்கு கற்களை கொண்டு செல்ல கருவறையைச் சுற்றிலும் மண்ணால் வளைவாக பாதைகள் அமைக்கப்பட்டன.

கட்டடக் கலை அசுரவளர்ச்சி பெற்றுல்ள இக்காலத்திலும் கூட தஞ்சை பெரிய கோவில்   பெரிய அதிசயமாகவே உள்ளது   ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொழில் நுட்ப வசதி இல்லாத காலத்தில் போக்குவரத்து எப்படி நடந்திருக்கும் யார் என்னென்ன வேலைகள் செய்திருப்பார்கள் என்பதை சிந்தித்தால் தலை சுற்றும்.  இறுதியில் மாமன்னர் ராஜராஜசோழரின் திருவடியில் சரணடையும்.  கோயில் கட்டியதும் அதற்காக உழைத்த ஒவ்வொருவரின் பெயரும் கல்வெட்டில் பொறிக்க உத்தரவிட்டார்.  ஆனால் சாதனை படைத்த அவரோ  இக்கோயிலை கட்டியவன் நான் இல்லை. சிவன் தான் கட்டினான் என தலைக்கனம் இன்றி சிவனை அடிபணிந்தார்.  இதனால் சிவபாத சேகரன் என பெயர் பெற்றார்.

மக்கள் அவரை ராஜராஜராக எப்போதோ அங்கீகரித்தாலும் சிவன் அங்கீகரித்தது இந்த இடத்தில் தான்  காரணம் எல்லாம் எனை ஆளும் சிவன் செயல் என உணர்ந்து பணிவுடன் இருந்தவர் அல்லவா?…………… அது போல மாறி விட்டால் நீங்களும் ராஜ ராஜர் தான்.

மனம் குளிர்வாள் மஹாலட்சுமி

நவராத்திரி பூஜை நெருங்கும் நேரத்தில் சங்கர மடத்திற்கு வந்தார் பக்தர் ஒருவர்.  சுவாமி………………. பணக்கஷ்டத்தில் சிக்கித் தவிக்கிறேன்  வரும் நவராத்திரியின் போது எந்த சுலோகத்தை நான் பாராயணம் செய்யலாம்? எனக்கேட்டார்

நமக்கு கல்வி செல்வம் ஆரோக்கியம் எல்லாம் தேவைப்படுகிறது.  பணம் இருந்தால் தான் கல்வி பெற முடியும்.  உடல் நலம் பெற மருத்துவச் செலவுக்கும் பணம் தேவைப்படுகிறது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்கிறாரே  திருவள்ளுவர்?   அதற்காக அதர்ம வழியில் யாரும் பணம் சம்பாதிக்கக்கூடாது.  தர்ம வழிகளில் தான் சம்பாதிக்க வேண்டும் என்றார் சுவாமிகள்.

சற்று மவுனம் காத்த சுவாமிகள் மீண்டும் பேசத் தொடங்கினார்.  பவதி பிட்சாந்தேஹி என்று பிட்சைக்காக வாசலில் சங்கரர் நிற்பதைக் கண்ட ஏழைப்பெண் மனம் உருகிப் போனாள். கொடுக்க உணவு இல்லாத நிலையில் தயக்கத்துடன் வாடிய நெல்லிக்கனியை ஒன்றை எடுத்து வந்தாள்.  சங்கரரின் பிட்சா பாத்திரத்தில் வைத்துவிட்டு கண்ணீர் மல்க நின்றாள்.  வீட்டில் இருக்கும் ஒரே ஒரு நெல்லிக்கனியையுன் தானம் அளீத்த அவளது கருணை சங்கரரின் மனதை அசைத்து விட்டது. அவள் நலம் பெற லட்சுமி தேவி மீது கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். முன்வினைப் பயனால் அவள் ஏழ்மையில் வாடுகிறாள். பாவம் தொலையும் காலம் வரும் வரை இந்த நிலை மாறாது என வானில் அசரீரி ஒலித்தது.

இவளுக்கு என்னிடம் ஏற்பட்ட இரக்கம் லட்சுமிதேவியான உனக்கு இவளிடம் ஏற்பட கூடாதா?  கருணை எனும் காற்றால் அவளது முன்வினையை ஊதித் தள்ள விட்டு செல்வ மழையைப் பொழியச் செய்வாய் அம்மா என சங்கரர் மஹாலட்சுமிடம் வேண்டினார்.

அந்த வீட்டில் தங்க நெல்லிக்கனி மழையாகப் பொழிந்தது. சங்கரர் பாடிய கனதார ஸ்தோத்திரத்திற்கு மகிமை அதிகம். ஏனெனில் இதுவே ஆச்சார்யாள் ஆதிசங்கரர் அருளிய முதல் பாடல். கனகதாரா என்றால் பொன்மழை. இதிய நவராத்திரி பூஜையில் பாடினால் மஹாலட்சுமி மனம் குளிர்ந்து செல்வம் அருள்வாள். என்றார்.

” செல்பி ” சிவன்

பாட்டும் நானே  பாவமும் நானே என்று சிவன் பாடலைக் கேட்டிருப்பீர்கள்.  பார்ப்பவனும் நானே  பார்க்கப்படுபவனும் நானே என்ற கோலத்தில் சிவனை பார்த்திருக்கிறீர்களா……..? அவர் தான் இம்மையிலும் நன்மை தருவார் எனப்படும் செல்பி சிவன்.

பாண்டிய மன்னர் மலையத்துவஜனுக்கு குழந்தைபேறு இல்லை.  புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்த யாகத்தீயில் இருந்து மூன்று வயது குழந்தையாக பார்வதி அவதரித்தாள்.  தடாதகைப் பிராட்டி எனப் பெயரிட்டு வளர்த்தார் மன்னர்.  இளவரசியான அவள் மீன் போல தூங்காமல் நல்லாட்சி புரிந்ததால்  மீனாட்சி எனப்பட்டாள்.  உலகமே அவள் அழகைக் கண்டு சொக்க அவளோ கயிலை நாதரான சிவனைக் கண்டு சொக்கினாள். அதனால் சிவனுக்கு சொக்க நாதர் எனப் பெயர் ஏற்பட்டது.

மீனாட்சி சொக்க நாதரின் மணவிழா மதுரையில் விமரிசையாக நடந்தது.  அதன் பின் மதுரையின் மன்னராக சொக்க நாதருக்கு பட்டம் கட்ட ஏற்பாடு நடந்தது.  அரியணையேறும் மன்னர்கள் முதலில் சிவ பூஜை செய்வது வழக்கம். அதன்படி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சொக்க நாதரும் மீனாக்ஷியும் வழிபட்டனர். இதனடிப்படையில் எழுந்ததே மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயில்   இப்பிறப்பிலேயே நமக்கு நன்மை தருபவர் என்பது பொருள்.  தன்னைத்தானே படம் பிடிப்பது போல தனக்குத் தானே பூஜை செய்ததால் இவர் செல்பி சிவன் என செல்லமாக அழைக்கப்படுகிறார்.   மதுரை ஆவணித்திருவிழாவில் மீனாட்சியம்மனுடன் சொக்க நாதர் இக்கோயிலுக்கு வந்து பூஜை நடத்துவார்.  கருவறையில் மீனாட்சி சொக்க நாதர் மேற்கு நோக்கியும் நன்மை தருவார் கிழக்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.

மத்தியபுரி நாயகியம்மன் தனி சன்னதியில் தெற்கு நோக்கி இருக்கிறாள்.  திருமணத்தடை அகலவும் குழந்தைப்பேறு வாய்க்கவும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு விளக்கேற்றுகின்றனர்.  காலபைரவருக்கு காரப்புளியோதரை படைத்தால் எதிரிபயம் மனக்குழப்பம் நீங்கும்.  எல்லாம் வல்ல சித்தருக்கு பூக்கூடை சாத்தினால் எதிர்பார்ப்பு நிரைவேறும். நினைத்தது நடந்தேற முருகனுக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

இத்தலத்தை தரிசித்து மனதிற்குள் சிவனை செல்பி எடுங்கள்  வாழ்வில் ஏற்றம் பெறுங்கள்.

எப்படி செல்வது

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில்

விசேஷ நாட்கள்

மாசியில் பிரம்மோற்சவம்   சனி பிரதோஷம்  மஹா சிவராத்திரி

அருகிலுள்ள தலம்

ஒரு கி மீ தூரத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில்

குந்தியும் கிருஷ்ணனும்

ஒரு சமயம் குந்தி தேவி ஸ்ரீகிருஷ்ணனை காண சென்றார். அப்போது ஸ்ரீகிருஷ்ணன் பூஜை அறையில் பூஜை செய்துவிட்டு தியானத்தில் இருப்பதாக  ஸ்ரீருக்மிணி கூறினார்.  சிலநேரம் கழித்து ஸ்ரீகிருஷ்ணர் வெளியே வந்தார்.  அவரிடம் குந்திதேவி அண்டசராசரமும் உன்னை பூஜிக்கையில் நீ யாரை பூஜிக்கிறாய் ?  தியானிக்கிறாய் ? என்று கேட்டார்.     அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறியது.

*ஸ்ரீகிருஷ்ணர் வணங்கும் ஆறு பேர்.*

நித்யான்ன தாதா

தருணாக்னிஹோத்ரி

வேதாந்தவித்

சந்திர சஹஸ்ர தர்சீ

மாஸோபாவாசீச

பதிவ்ரதா ச

ஷட் வந்தனீயா

மம ஜீவ லோகே:

*பொருள்:*     இந்த மனிதர்கள் வாழும் பூமியில் நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்: அவர்கள்

*தினமும் அன்னதானம் செய்வோர்,*

*தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர்,*

*வேதம் அறிந்தவர்கள்,*

*சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து*    *சதாபிஷேகம் செய்துகொண்டோர்*

 

*மாதா மாதம் உபவாசம் இருப்போர்,*

 

*பதிவ்ரதையான பெண்கள் ஆகியோர.*

 

@@@@@@

 

*சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பனமஸ்து!!*