மகுடேஸ்வரர் திருக்கோவில்

ராகு கேது தோஷமுடையவர்கள் செல்ல வேண்டிய இடம். அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி.

பிரம்மா வழிபட்டு, திருமால் பூஜை செய்து, கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததும், மேருமலையின் ஒரு துண்டுவைரக்கல்லாகி விழுந்த இடத்தை தென் கயிலாயம் என்று அழைக்கப்படுவதும், போன்ற பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் அமைந்துள்ளமகுடேஸ்வரர் கோவில்.

சிவஸ்தலம் பெயர் : திருப்பாண்டிக்கொடுமுடி.இறைவன் பெயர்: கொடுமுடிநாதர், மகுடேஸ்வரசுவாமி.இறைவி பெயர் : வடிவுடைநாயகி, சௌடாம்பிகை.அம்மனின் பெயர் : திரிபுர சுந்தரி, மதுரபாஷினி.தல விருட்சம் : வன்னி. தீர்த்தம் : தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவிரி.

முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யார்வலிமை மிக்கவர் என்ற போட்டியில், ஆதிசேஷன் மேருவை கட்டி அணைத்துக் கொள்ள, வாயு பகவான் தனது வேகத்தால் பலமாக சூறாவளி காற்றை வீசி ஆதிசேஷனை மேருவில் இருந்து கீழே தள்ள முயன்றார்.அப்போது மேரு மலை சிதறி ஐந்து துண்டுகளாக பூமியில் விழுந்தன.அவை ஒவ்வொன்றும் ரத்தினமாக மாறி லிங்கங்களாக ஆனது. இவற்றில்வைரக்கல் கொடுமுடியில் விழுந்தது.அதனால் வைரக்கல்லால் ஆன லிங்கமாக இறைவன் குடியிருப்பதாக ஐதீகம்.

மேருவில் இருந்து சிதறி வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர, வைரமடிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாக காட்சி தருவது கொடுமுடி தலத்தின் சிறப்பாகும்.மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்றும், தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம் கொண்டுள்ளார்.கொடு என்றால் மலை, முடி என்றால் சிகரம். மலை சிகரமேமூலஸ்தானமாக உள்ளதால், மூலவர் கொடுமுடிநாதர் என அழைக்கப்படுகிறார்.

தலச் சிறப்பு :

காவிரியின் மேல் கரையில் உள்ள இக்கோவில் பல தீர்த்தங்களைஉடையது. காவிரி மற்றும் தேவ தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும்,மகாவிஷ்ணுவையும் வழிபட பிணிகளும், பேய், பிசாசு, பில்லி, சூன்யம் போன்ற குற்றங்களும், மனநோயும் நீங்கும்,தரிசித்த மாத்திரத்தில்பிறவியை போக்கி முக்தியை தருவது, சுயம்பு மூர்த்தியாகிய மகுடலிங்கர் கோவிலாகும்.உலகை சமநிலைப்படுத்த செல்லும் போது கயிலையில் நடந்த பார்வதி, பரமேஸ்வரன் திருமணக் காட்சியை அகத்தியர் கண்டுகளித்த இடம்கொடுமுடி.இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனித்தனி கோபுரங்களும், தனித்தனி சன்னிதிகளும் அமைந்துள்ளன.

இக்கோவிலுக்கு மூன்று வாயில்கள் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளன. இக்கோவிலில் உள்ள பிரம்மாவும், பெருமாளும் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.ஆதிசேஷனால் உருவான கோவில் என்பதால் இங்கு நாகர் வழிபாடு விசேஷம். காவிரி நதி, வன்னிமரம் அருகிலுள்ள தேவ தீர்த்தம்,பாரத்வாஜ தீர்த்தம், மடப்பள்ளிக்கு அருகிலுள்ள பிரம்ம தீர்த்தம்ஆகியவை இக்கோவிலின் தீர்த்தங்களாகும்.மலையத்துவச பாண்டியனின் மகனுக்கு பிறவியிலேயே விரல்கள்சரியாக வளராமல் இருந்தன. கொடுமுடிநாதரிடம் வேண்டியபின்இக்குறை தீர்ந்தது.எனவே பாண்டியன் இக்கோவிலுக்கு மூன்று கோபுரங்களையும், மண்டபங்களும் கட்டி, மேலும் பல திருப்பணிகளைச் செய்தான்.பாண்டிய மன்னனால் திருப்பணிகள் செய்யப் பெற்றதால் இத்தலம் பாண்டிக்கொடுமுடி ஆயிற்று.

பிரார்த்தனை :

ராகு கேது தோஷம் உடையவர்கள் இக்கோவிலில் பரிகாரங்கள் செய்தால் திருமணத்தடை நீங்கும்.குழந்தைப்பேறு கிட்டவும் இக்கோவிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.  

இதுதான் உங்கள்  தீர்ப்பா?

*கஷ்டப்படுகிறவர்களுக்கு சாபமும் , செல்வச் செழிப்போடு இருப்பவனுக்கு வரமும் தந்துள்ளீர்களே* ? *இதுதான் உங்கள்  தீர்ப்பா? என கேட்ட பக்தன் …….  –   கிருஷ்ணர் வந்து மானிடர்களை பார்த்து விட்டு செல்லலாம் என எண்ணி நகர்வீதி உலா வந்தாராம்,

சாதாரண மனிதர் உருவில் வந்த ஸ்ரீ கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொண்ட பக்தர் ஒருவர் அப்பனே ! “பூலோகத்தில் வந்த உங்களை சந்தித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி “! என்றார் .அதற்கு பரவாயில்லை சாதாரண மனித உருவில் வந்தாலும் கண்டு கொண்டாய், சரி நான் பூலோகத்தில் சில மனிதர்களை சந்திக்க வேண்டி உள்ளது . என்னுடன் வாருங்கள் என அழைத்துச் சென்றார் .

பக்கதரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழைப்புக்காக உடன் சென்றார் . சிறிது தூரம் சென்றதும் ” பக்தா, எனக்கு தண்ணீர் தாகமாக உள்ளது. இந்த செல்வந்தர் வீட்டில் தண்ணீர் வாங்கி வா என கட்டளையிட்டார் . பக்தரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்த செல்வந்தர் வீட்டு கதவை தட்டினார் .வெளியே வந்த செல்வந்தரிடம் பக்தன் “பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வந்திருக்கிறார் உங்கள் வீட்டில் ஒரு சொம்பில் தண்ணீர் வாங்கி வரச்சொன்னார் எனச்சொல்ல அந்த செல்வந்தரோ ” யாராக இருந்தாலும் தண்ணீர் தர முடியாது.அப்படி கொடுத்தால் எங்கள் வீட்டில் செல்வம் தங்காது . தண்ணீர் இல்லை என்று சொல்லி விடு என திருப்பி அனுப்பினார் .

பக்தன் ஏமாற்றத்தோடு திரும்பி வந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தண்ணீர் தர முடியாது என அலட்சியமாக சொல்லி விட்டார் எனச் சொல்ல பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சிரித்தாவாறு “இந்த செல்வந்தனுக்கு மேலும் பொன்னும் பொருளும் வந்து சேரட்டும் எனச் சொல்லி விட்டு, ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் நடக்க ஆரம்பித்தார் . பக்தரும் குழம்பியவாறு அவர் பின்னே நடக்கலானார் .

அடுத்து அவர்கள் சென்றது ஓர் தனிக்குடிசை வீடு . அங்கு வறுமைகுடி கொண்டிருந்தது. அங்கு குழந்தைகள்,கணவர் ,தாய், தந்தையர் இல்லாமல் அனாதையாக ஒர் வயதான பெண்மணி மட்டும் வசித்து வந்தார் .ஒரே வயதான மாடு வளர்த்து பால் விற்று அந்த பணத்தில் தம் சுய தேவைகளை பூர்த்தி செய்து வந்தார். ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர்.அந்த பெண்மணி வீட்டின் முன்பு நின்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் “இந்த வயதான பெண்மணி வீட்டில் தண்ணீர் வாங்கி வா என பக்தரிடம் சொல்ல ” சரி என்றவாறு வயதான பெண்மணியிடம் சென்ற பக்தர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உங்கள் வீட்டின் முன்பு வந்து நிற்கின்றார் . தண்ணீர் தாகமாக உள்ளதாம் , தண்ணீர் கொடுங்கள் என்றதும் .

அந்த வயதான பெண்மணி “நான் அனு தினமும் தொழும் எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணரே வந்து இருக்கிறாரா ? என மிக்க மகிழ்ச்சியுடன் ஒர் பாத்திரத்தை சுத்தம் செய்து அதில் சுத்தமான நீர் கொண்டு சென்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து வணங்கி நின்றார் .தண்ணீர் பருகியவுடன் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்த பிரமிப்பில் நிற்க பகவான் சிரித்தவாறு போய் வருகிறேன் எனச் சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார் .

கொஞ்சம் தூரம் நடந்து சென்றதும் அந்த வயதான பெண்மணி வைத்திருந்த மாட்டை பார்த்து ஸ்ரீ கிருஷ்ணர் ” இந்த பசுமாடு இறந்து போகட்டும் ” எனச்சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் .ஸ்ரீ கிருஷ்ணருடன் வந்த பக்தனுக்கோ குழம்பிய வாறு கிருஷ்ணரிடம் ஓர் கேள்வி கேட்டான் ” பகவானே நான் குழப்பமாக உள்ளேன் .

முதலில் ஓர் செல்வந்தர் வீட்டிற்கு சென்றோம் . அவர் தண்ணீர் இல்லை என்றார் . அவருக்கு மேலும் செல்வம் சேரட்டும் என்றீர்கள் , இரண்டாவதாக ஒர் வயதானபெண்மணி தண்ணீர் தந்து தாகம் தீர்க்க உதவினார் . அவருக்கு மாடு செத்துப்போகட்டும் என்கிறீர்கள் .அய்யா கிருஷ்ணரே…. கஷ்டப்படுகிறவர்களுக்கு சாபமும் , செல்வச் செழிப்போடு இருப்பவனுக்கு வரமும் தந்துள்ளீர்களே ? இதுதான் உங்கள்  தீர்ப்பா? என கேட்க பகவான் கிருஷ்ணர் சொன்னார்

” பக்தா உனக்கு புரியம்படி சொல்கிறேன் கேள் என்றவாறு ” எவன் ஒருவன் அளவுக்கதிகமாக பொன்னையும் பொருளையும் தேடி அலைகிறானோ அவன் நிம்மதியை இழக்கிறான் . அதனால்தான் அவனுக்கு மேலும் பொன்னும் பொருளும் சேரட்டும் என சாபமிட்டேன் . அதை நீ வரமென நினைத்துக்கொண்டாய் !இரண்டாவதாக அனாதையாக இருந்த வயதான பெண்மணி என்னுடைய தீவிர பக்தை . அவளுக்கு இந்த பூலோகத்தில் இருக்கும் ஒரே பிடிப்பு இந்த வயதான பசு மாடுதான் . அதுவும் இறந்து விட்டாள் .

இந்த பெண்மணியும் இறந்துவிடுவாள் . அவளுக்கு மேலோகத்தில் என்னை அனு தினமும் வழிபாடு செய்ததற்காவும் ,நல்ல உள்ளத்திற்காகவும் சொர்க்கத்தை தயார் செய்து வைத்திருக்கிறேன் . அவள் மேலோகத்தில் சந்தோஷமாய் காத்துக்கொள்வேன் என்றவாறு கூறி நான் வந்த வேளை முடிந்தது. சென்று வருகிறேன் எனச்சொல்லி அந்த பக்தனை ஆசிர்வதித்து மாயமாய் மறைந்து போனார் .

பக்தனும் பல வாழ்வியல் சூட்சமங்களை அறிந்தவனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சென்ற திசையை நோக்கி கை கூப்பி தொழுதார்

உலகில் மிகவும் தாழ்வானவர்கள் 

பீஷ்மர் சொன்னார்: யுதிஷ்டிரா, முன்னொரு காலத்தில் பல ரிஷிகள் புண்ணிய தீர்த்தங்களுக்கு யாத்திரை செய்தபோது, நடந்த நிகழ்ச்சியைக் கூறுகிறேன், கேள்…

பல ரிஷிகளும், புகழ் பெற்ற  மன்னர்களும், இந்திரனை அடுத்து புண்ணிய தீர்த்தங்களுக்கு யாத்திரை சென்றார்கள். பல புண்ணிய நதிகளில் நீராடிய பிறகு, மிகச்சிறந்த ‘பிரம்மஸிரஸ்’ என்ற நதியை அடைந்தார்கள். அங்கே அகஸ்தியரால் பறித்து வைக்கப்பட்ட தாமரை மலர் காணாமற் போயிற்று….காலப்போக்கில் தர்மம் குறைந்து வருவதால் இம்மாதிரி நிகழ்ச்சி நடக்கத் தொடங்கியிருப்பதாகக் கருதிய அகஸ்தியர், இனி பூவுலகில் இருப்பது தனக்கு உகந்ததல்ல என்றும், தர்மம் நசித்துப் போவதையே தாமரை மலரின் களவு நிரூபிப்பதாகவும் கூறி வருத்தப்பட்டார்.அகஸ்தியர் மனம் நொந்து பேசியதைக் கேட்ட மகரிஷிகளுக்கும், மன்னர்களுக்கும் மனவருத்தம் ஏற்பட்டது. அப்போது அவர்கள், யார் அந்த மலரை எடுத்திருந்தாலும், அவன் பெரும் பாவம் செய்தவன் என்று கூறி, பெரும் பாவங்கள் எவை என்பதைப் பட்டியலிட்டார்கள்.

1. தன்னைத் திட்டியவனைப் பதிலுக்குத் திட்டுகிறவனும், தன்னை அடித்தவனைப் பதிலுக்கு அடிக்கிறவனும் எவ்வளவு தாழ்ந்தவர்களோ, அவ்வளவு தாழ்ந்தவன்-இந்த மலரை எடுத்தவன், என்று ப்ருகு மகரிஷி கூறினார்.

2. நகரங்களில் திரிந்து பிச்சை எடுத்து வாழ்பவனுக்கு நிகரானவன் – அம்மலரை எடுத்தவன், என்று வசிஷ்டர் சொன்னார்.

3. தன்னிடம் பாதுகாப்பிற்காகப் பிறரால் கொடுத்து வைக்கப்பட்ட பொருளின் மீது ஆசை வைப்பவனுக்கு நிகரானவன்-அம்மலரை எடுத்தவன் என்று கச்யபர் சொன்னார்.

4. துந்து மகாராஜா, நண்பர்களிடம் நன்றி மறந்தவன், தான் மட்டும் தனியாக உணவு உட்கொள்பவன், ஆகியோருக்கு நிகரானவன் – அந்த மலரை எடுத்தவன் என்று சொன்னான்.

5. புரூரவன், மனைவியின் தயவிலும், மாமனார் தயவிலும் வாழ்கிறவனுக்கு நிகரானவன்-அம்மலரை எடுத்தவன் என்று சொன்னார்.

6. சுக்கிரன் கூறினார்: பகலில் மனைவியுடன் சேர்பவனுக்கு நிகரானவன் – அம்மலரை எடுத்தவன், என்றார்.

7. நாபாகன் என்னும் அரசன் சொன்னது:

பணத்தைப் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுப்பவனுக்கு நிகரானவன் – மலரை எடுத்தவன், என்றார்.

8. பரத்வாஜர் என்ற ரிஷி, பொய் பேசுபவனும், கொலை செய்பவனும் அடைகின்ற பாவங்களைப் பெறுவான்- அந்த மலரை எடுத்தவன், என்று சொன்னார்.

9. அநியாயமாக மனம் போன போக்கில் ஆட்சி நடத்தும் அரசன் பெறுகின்ற மோசமான கதியைப் பெறுவான், இந்த மலரை எடுத்தவன் என்று சொன்னார், அஷ்டகர் என்ற ரிஷி.

10. காவலர் என்பவர் சொன்னார்: தான் கொடுத்த தானத்தைப் பற்றி வெளியே பறை சாற்றிக் கொள்பவன் பெறுகின்ற பாவத்தை, அம்மலரை எடுத்தவன் பெறுவான்.

11. அருந்ததி கூறினாள்: மாமியாரை அவமதித்தும், கணவனை வெறுத்தும் நடந்து கொண்டும், நல்ல ஆகாரங்களைத் தான் மட்டும் உண்டும் வாழ்கிற பெண் அடைகிற பாவத்தை அடைவான் – அந்த மலரை எடுத்தவன்.

12. பசுஸகன் என்ற மன்னன் கூறினான்: வேதம் ஓதுவதை விட்டுச் சுகமாக வாழ நினைக்கும் பிராமணனும், இந்திரியங்களை அடக்காத சந்நியாசியும் என்ன உலகைப் பெறுவார்களோ, அதைப் பெறுவான் அம்மலரை எடுத்தவன்.

இப்படிப் பெரும் பாவம் செய்தவர்களுக்கு நிகராக அம்மலரை எடுத்தவனை அங்கு கூடியிருந்த ரிஷிகளும், மன்னர்களும் வர்ணித்தபோது இந்திரன் பேசினான்:….அம்மலரை எடுத்தவன் புண்ணிய லோகங்களை அடைவான் என்று ஆசீர்வாதம் செய்யுங்கள். ஏனென்றால் அம்மலரை எடுத்தவன் நான்தான். மலர் வேண்டுமென்றோ, அதன் மீது ஆசைப்பட்டோ, அதை நான் எடுக்கவில்லை…….உங்களுக்கெல்லாம் கோபம் வரவழைத்து, தர்மத்தை மீறி நடப்பவர்கள் பற்றி நீங்கள் கூறும் வாக்கியங்களைக் கேட்க நான் விரும்பினேன். என்றும் அழியாத வாக்கியங்களை இப்போது கேட்டேன். பாவம் செய்தவர்களின் பட்டியலை உங்கள் கோபத்தினால் நீங்கள் இப்போது வெளியிட்டீர்கள். இது என்றும் அழியாத தர்ம சாத்திரமாகட்டும்,’ என்றான் இந்திரன்.

இப்படிக் கூறிய இந்திரன், அந்த மலரை அகஸ்தியரிடம்  கொடுத்து, ‘இதைப் பெற்றுக் கொள்ளுங்கள். தர்மத்தை மீறுபவர்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதற்காக, நான் செய்த காரியத்தை பொறுத்துக் கொண்டு என்னை மன்னித்து விடுங்கள்.’ என்று கேட்டுக் கொண்டான். அகஸ்தியரும், மற்ற முனிவர்களும், மன்னர்களும் கோபம் நீங்கியவர்களானார்கள்.யுதிஷ்டிரா, இந்த வரலாற்றைப் படிப்பவன் நல்ல பிள்ளைகளைப் பெறுவான். புகழ் பெறுவான். ரிஷிகளால் கூறப்பட்ட இந்த உபதேசம் கேட்கிறவனுக்கு நல்ல கதியைக் கொடுக்கும், என்றார் பீஷ்மர்

குருக்ஷேத்ரா போரில்​​ வீணாகாதஉணவு

குருக்ஷேத்ரா வீரர்களுக்கு மன்னர் உடுப்பி உணவளித்தார்

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரானது போர்களுக்கெல்லாம் தாயாக இருந்தது. அனைத்து மன்னர்களும் நூற்றுவர்களோடோ அல்லது ஐவர்களோடோ இணைந்து போரில் ஈடுபட்டனர். அத்தகைய மாபெரும் போரில் நடுநிலையாக மன்னர் உடுப்பி இருந்தார். அவர் கிருஷ்ணரிடம் ‘போர்களில் ஈடுபடுவோர் உணவருந்த வேண்டும். எனவே அவர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பை நான் ஏற்கிறேன்” என்றார். இன்றும் உடுப்பி மக்களில் பலர் உணவளிக்கும் நபர்களாக உணவகங்களை நடத்துபவர்களாக இருக்கின்றனர்.

வீணாகாத உணவு

பதினெட்டு நாள்கள் அந்த போர் நீடித்தது, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வீரர்கள் இறந்துக் கொண்டுருந்தனர். அதனால் உடுப்பி மன்னர் குறைந்த அளவிலான உணவை சமைக்க வேண்டி இருந்தது, இல்லையென்றால் உணவு வீணாகும் சூழல் ஏற்படும். ஆச்சரியம் என்னவென்றால் எந்தவொரு நாளும் உணவு வீணாகவே இல்லை. இத்தனைக்கும் ஒரு நாளில் எத்தனை வீரர்கள் இறந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது‌. அப்படியிருந்தும் துல்லியமாக உணவை சமைத்து வீணாக்காமல் இருந்தது அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது.

கிருஷ்ணரின் மாயாஜாலம்

 உடுப்பி மன்னரிடம் “இதை எப்படி இவ்வளவு சரியாக நிர்வகிக்கிறீர்கள்?” என்று கேட்டபோது, ஒவ்வொரு இரவும் நான் கிருஷ்ணரின் கூடாரத்துக்குச் செல்வேன், கிருஷ்ணர் இரவில் வறுத்த நிலக்கடலை சாப்பிடுவார் எனவே அதை ஒரு கிண்ணத்தில் வைத்து கொடுப்பேன். அவர் எத்தனை கடலை சாப்பிடுகிறார் என்பதை வைத்து அடுத்த நாள் எவ்வளவு மரணங்கள் நிகழும் என்பதைக் கணக்கிட்டு கொள்வேன். உதாரணமாக அவர் 10 நிலக்கடலை சாப்பிட்டால் அடுத்த நாள் 10000 இறப்புகள் ஏற்படும் என்று பொருள். அவ்வாறு அடுத்த நாள் 10000 பேருக்கு குறைவானவர்களுக்குச் சமைப்பேன் என்றார்…

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும்

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை 

குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார். 

கிருஷ்ணர் – உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்…

நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையா சமைப்பது, அவரை பிரத்யேகமாக கவனிப்பது என வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.அரசருக்கு வித்தியாசமான சுவையை செய்துகொடுத்து பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து அரசருக்குப் பரிமாறினான். தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அச்சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி சமைக்குமாறு கட்டளையிட்டார். அதோடு அந்தச் சமையல்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார். 

திருதராஷ்டிரா இப்போது சொல் என்றார் கிருஷ்ணன்..அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார். வசிஷ்டரின் சமையல்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்துவிட்டார். ஆயினும் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார், அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! சமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான்.அதனால் அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான் என்றார் திருதராஷ்டிரன்.  புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது மன்னன் செய்ததே தவறு எனக் கூறினாய். அத்தகைய நீதிதான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது. 

ஆனால், நான்சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய். அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய். ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய். தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார். தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான். 

நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் சேரும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வோம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். 

மகாலட்சுமியின் அம்சமே.

காந்திமதி  தன் கணவனுக்குப்பிடித்த குழம்பு சமைத்தாள்.இன்று எப்படியும் பாராட்டு வாங்க வேண்டும் என்று காத்திருந்தாள்.தெரு முழுதும் குழம்பு வாசனை.கணவன் ராஜாராம் வந்ததும் வேகமாக சாப்பிடஅமரச் சொன்னாள்,மனைவி சாப்பாடு பரிமாறினாள்.

” மாம்ஸ்…. இன்னைக்கு நான் வைத்த  குழம்பு எப்படி இருக்கு? ” நல்லாதான்  இருக்கு ஆனாலும் எங்கம்மாகைப் பக்குவம் உனக்கு இல்ல…. ….எங்கம்மா வைப்பாங்க பாரு குழம்பு தெருவே மணக்கும்…அப்பப்பா…….ருசிசூப்பரா இருக்கும். அம்மா குழம்பின் ருசியை பாராட்டி  எழுந்தார் கணவன் ராஜாராம்.காந்திமதிக்கு மிகவும் கஷ்டமாக இருந்ததுதன் கணவன் குழம்பின் ருசியை பாராட்டததை நினைத்து.எப்ப பாரு “அம்மா…அம்மான்னு அவரு அம்மாவைத்தான் தூக்கி வச்சு பேசுவாரு என்று முணுமுணுத்தாள்.

அப்போது அவளுடைய மகன் சாய்  சாப்பிட வந்தான். மகன் ஒருவாய் சாப்பிட்டு விட்டு அம்மாவை பாராட்ட ஆரம்பித்தான். அம்மா “சூப்பர்மா ” எப்படிம்மா இப்படி சமைக்கறீங்க ? தெருவே மணக்குது.உங்க அளவுக்கு யாராலயும் குழம்பு வைக்க முடியாதும்மா ” என பாராட்டினான்.காந்திமதிக்கு அப்பொழுது தான் புரிந்தது… ஒரு மகன் யார் கையில் சாப்பிட்டாலும் தன் தாயின் சமையலைத் தான் அதிகம் பாராட்டுவான் என்று. நம் மகனும் அம்மா.. அம்மா என்றுதானே உயர்த்திப் பேசுகிறான். மகன் பேசுவது தவறில்லை என்றால் கணவன் பேசியதும் தவறில்லை தான். என்று புரிந்து கொண்டாள்.

எத்தனையோ வீடுகள் இரண்டாக பிரிய அம்மா மருமகள் புரிதல் இல்லாமையே முக்கிய காரணம்… கணவனை புரிந்து கொள்ளும் ஒவ்வொரு  மனைவியும் மகாலட்சுமியின் அம்சமே.ஒவ்வொரு கணவனின் முதல் உலகமே தன் அம்மாதான்… இதை உணர்ந்தால்/உணரும் வருங்கால/எதிர்கால மகாலட்சுமிகளின் வாழ்வு என்றென்றும் வசந்தமே

மஹாதபாய நம

 கைலாயத்திலிருந்த மால்யவான், புஷ்பதந்தன் என்ற இரண்டு சிவ கணங்கள், சிவன் தந்த சாபத்தால் திருவானைக்காவில் சிலந்தியாகவும் யானையாகவும் பிறந்தார்கள்.

சிலந்தியாகப் பிறந்த மால்யவான்தனது மறுபிறவியில் கோச்செங்கட் சோழ நாயன்மாராகப் பிறந்தான். கோச்செங்கட் சோழன் எழுபது சிவன் கோயில்கள் கட்டியபின் எழுபத்தொன்றாவதாக நாச்சியார்கோயிலில்ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு மணிமாடக் கோணில் கட்டி அவரைத் தொழுது அவரது அருளால் முக்தியடைந்தான்.

யானையாகப் பிறந்தானே புஷ்பதந்தன், அவன்யானை வடிவத்தோடே புஷ்பதந்தன் கைலாயத்தை அடைந்தான்.மால்யவான் ஸ்ரீநிவாசப் பெருமாளைத் தொழுது முக்தியடைந்ததைப் போலத் தானும் முக்தியடைய விரும்புவதாக அவன் பார்வதி தேவியிடம் கூறினான்.

“அப்படியா? மிக்க மகிழ்ச்சி! நீயும் நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசனை வழிபட்டு முக்தியடைவாயாக!” என ஆசீர்வதித்தாள் பார்வதி.“அங்கே தான் ஒரு சிறிய பிரச்னை!” என்றான் புஷ்பதந்தன். “என்ன?” என்று கேட்டாள் பார்வதி.“திருவானைக்காவில் சிலந்தியாய் இருந்த மால்யவான் பின்னிய வலைகளை யானையாக இருந்த நான் கலைத்துவிட்டேன் அல்லவா?அதனால் இப்போது கோச்செங்கட் சோழனாகப் பிறந்த அவன், யானையின் மேலுள்ள அந்தக் கோபத்தின் எதிரொலியாகத்தான் கட்டிய அனைத்துக் கோயில்களையும் யானை உள்ளே நுழைய முடியாதபடி மணி மாடக் கோவில்களாகக் கட்டிவிட்டான்.அவன் கட்டிய ஸ்ரீநிவாசனின் திருக்கோவிலுக்குள் யானை வடிவில் இருக்கும் நான் எவ்வாறு சென்றுபெருமாளை வழிபடுவேன்?” என்று கேட்டான்.

பரமசிவனிடம் இவ்விஷயத்தைப் பார்வதி கூறினாள். “இதற்கான வழியை நாம் ஸ்ரீநிவாசனிடமே கேட்போம்!” என்றார் பரமசிவன்.நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும் வஞ்ஜுளவல்லித் தாயாருக்கும் வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள்தெப்ப உற்சவம் நடைபெறுகையில், அருகிலுள்ள சிவன்கோயிலில் இருந்து சித்தநாதேஸ்வரரும்,சௌந்தர்ய நாயகி அம்மனும் ரிஷப வாகனத்தில் அங்கே வந்து புஷ்பதந்தனுக்கு அருள்புரியுமாறு பெருமாளிடம் கோரினார்கள்.

அவர்களிடம் வஞ்ஜுளவல்லித் தாயார், “புஷ்பதந்தனுக்கு என் கணவர் அருள்புரிவதற்கு நான் வேறு வழி வைத்திருக்கிறேன்.வரும் பங்குனி மாதம் பிரம்மோற்சவத்தின் ஆறாம் திருநாள் அன்று வந்து பாருங்கள்! உங்களுக்கே புரியும்!” என்றாள்.மகிழ்ச்சியுடன் சௌந்தர்ய நாயகியும் சித்தநாதேஸ்வரரும் தங்கள் கோயிலுக்குத் திரும்பினார்கள்.பங்குனி மாத பிரம்மோற்சவம் வந்தது. புஷ்பதந்தனுக்கு ஸ்ரீநிவாசனும் வஞ்ஜுளவல்லியும் எவ்வாறு அருள்புரியப் போகிறார்கள் என்பதைக் காணும் ஆவலுடன் பார்வதியும் பரமசிவனும் நாச்சியார் கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு அந்த உற்சவத்தின் ஆறாம் திருநாள் அன்று வந்தார்கள்.

வஞ்ஜுளவல்லித் தாயாரும் ஸ்ரீநிவாசப் பெருமாளும் அன்று யானை வாகனத்தில் காட்சியளித்தார்கள்.அதில் வியப்பு என்னவென்றால், யானையை ஓட்டும் அங்குசத்தைத் தாயார் தன் கையில் ஏந்தி ஓட்டுநராக அமர்ந்திருக்கப்பெருமாள் தாயாருக்குப் பின்னால் பின்னிருக்கைப் பயணியாக அமர்ந்திருந்தார். (இதை நாச்சியார்கோவில் பங்குனி பிரம்மோற்சவத்தில் இன்றும் தரிசிக்கலாம்.)வஞ்ஜுளவல்லி பார்வதியைப் பார்த்து, “புஷ்பதந்தனுக்கு அருள்புரிந்து விட்டேன் பார்த்தாயா?” என்று கேட்டாள்.“புரியவில்லையே! எங்கே புஷ்பதந்தன்?” என்று கேட்டாள் பார்வதி. “கீழே வாகனத்தைப் பார்!” என்றாள் வஞ்ஜுளவல்லி. புஷ்பதந்தனே யானை வாகனமாக இருந்து, பெருமாள்-தாயாரைத் தாங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள் பார்வதி.“இக்கோயிலுக்குள் யானை நுழையத் தயங்குவதால், புஷ்பதந்தனைக் கோயிலின் வெளிப்புறத்திலேயே வாகனமாக அமர்த்தி,பெருமாளும் தாயாரும் அவனைத்தேடி வந்து அவன் மீது அமர்ந்து அவனுக்கு அருள்புரிந்து விட்டார்கள் பார்த்தாயா?” என்றார் பரமசிவன். *‘மஹாதப:’* என்றுவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 123-வது திருநாமத்தால் திருமால் போற்றப்படுகிறார்.

*“மஹாதபாய நம:”* என்று சொல்லித் திருமாலைத் தினமும் போற்றும் அன்பர்களுக்கு நன்கு சிந்திக்கும் ஆற்றலைத் திருமால் அருளுவார். 

மூங்கிலணை காமாட்சி அம்மன்

தல வரலாறு

முன்பொரு காலத்தில்,காஞ்சனா எனும் காட்டுப் பகுதியை,சூலபாணி எனும் அசுர மன்னன் வங்கிசபுரி எனும் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான்.இவன் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் புரிந்து பல அரிய வரங்களைப் பெற்றிருந்தான்.அதில் தனக்குத் தன்னைக்காட்டிலும் அதிக வலிமையுடன்,தான் பெற்ற அரிய சக்திகளுடன் ஆண் மகன் ஒருவன் பிறக்க வேண்டும் என்பதும் ஒன்று.

இந்த தவத்தின் பலனால் அவனுக்கு வலிமையான ஆண்மகன் பிறந்தான்.அவனுக்கு வச்சிரதந்தன் எனும் பெயரிட்டு வளர்த்து,அவனை அப்பகுதியின் அரசனாக்கினான்.அவனுக்கு மாங்குசானன் என்பவன் அமைச்சராகவும்,துட்டபுத்தி என்பவன் தளபதியாகவும் இருந்தனர்.இவர்களிருவரின் ஆலோசனைப்படி காட்டுப் பகுதியிலிருந்த தவசிரேஷ்டர்களையும்,வேத விற்பன்னர்களையும் கொடுமைப்படுத்தத் தொடங்கினான்.பிறப்பிலேயே பல்வேறு சக்திகளைப் பெற்றிருந்ததால் அவனை யாராலும் எதிர்க்க முடியவில்லை.பாதிக்கப்பட்டவர்கள் அவனுடைய தொல்லைகள் பற்றி பிரம்மனிடம் சென்று முறையிட்டனர்.அவரும் வச்சிரதந்தனை அழிக்க தேவேந்திரனை அனுப்பி வைத்தார்.

தேவேந்திரன் வச்சிரதந்தனின் தளபதியான துட்டபுத்தியின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தனது படையையும் இழந்து போர்க்களத்திலிருந்து ஓடிவிட்டான்.இப்படி ஓடிய தேவேந்திரன் வச்சிரதந்தனை பராசக்தியால் தான் அழிக்க முடியும் என்று கருதி பிற தேவர்களுடன் #பராசக்தி காமாட்சியம்மனாக எழுந்தருளியுள்ள காஞ்சிபுரம் சென்று அன்னையிடம் வேண்டினர்.அவர்களின் வேண்டுகோளை ஏற்ற #காமாட்சியம்மன் அவனை அழிக்கப் புறப்பட்டார்.வங்கிசபுரி வரும் வழியில் பன்றி மலை என்ற வராக மலையில் இறங்கி துர்க்கையை வச்சிரதந்தனுடன் போரிட அனுப்பி வைத்தார்.துர்க்கை அங்கிருந்து புறப்பட்டு வங்கிசபுரி வந்து வச்சிரதந்தனுடன் போர் புரிந்தார்.

அவனுடைய தலையைத் துண்டித்தார்.மீண்டெழுந்து சிங்கத்தலையுடன் நின்றான்.அதையும் துண்டித்தார்.பின்னர் புலி,கரடி,காட்டெருமை என ஒவ்வொரு தலையுடன் தோன்ற அனைத்தையும் துண்டித்தார் துர்க்கை.இவனை ஒழிக்க காமாட்சியம்மனாலேயே முடியும் என்ற நோக்குடன் துர்க்கை அங்கிருந்து திரும்பினார்.துர்க்கை தோல்வியுடன் திரும்பியது கண்டு காமாட்சியம்மன் கோபத்துடன் துர்க்கா தேவியையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வங்கிசபுரி வந்தார்.வச்சிரதந்தன் ஏவிய ஆயுதங்கள் காமாட்சியம்மனை மூன்று முறை வலம் வந்து அவனிடமே திரும்பிச் சென்றது.வச்சிரதந்தனும் அந்த அம்மனை வணங்கினான்.பின்னர் அம்மனுடன் போரிடத் தொடங்கினான்.

துர்க்கையுடன் போரிட்டது போல் பல்வேறு தலைகளுக்கு மாறினான்.காமாட்சியம்மன் துர்க்கையிடம் வச்சிரதந்தன் தலை துண்டிக்கப்பட்டு தரையில் விழுந்தவுடன் அதைக் காலால் நசுக்கி அழித்து விடும்படி கூறி வச்சிரதந்தனின் தலையைத் துண்டித்தார்.துர்க்கையும் அந்தத் தலையைக் காலால் நசுக்கி அழித்தார்.அசுரன் மறுதலை எடுக்க முடியாமல் அழிந்தான்.தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

அசுரனது தலையை மிதித்த இடம் தலையாறு எனவும்,மூளை சிதறிப் போய் விழுந்த இடம் மூளையாறு எனவும்,குலைகாய் ஈரல் விழுந்த இடம் குலையூத்து எனவும்உடல் குறுக்காக விழுந்த இடம் குறுக்குமலை எனவும் பெயர் பெற்றன.இன்றும் இந்தப் பகுதியில் இந்தப் பெயர்கள் வழக்கத்திலுள்ளன.

 வங்கிசபுரிக்கு அருகில் வேகவதி என்ற ஆறு ஓடிக் கொண்டிருந்தது.இந்த ஆறு மாணிக்கமலைத் தொடரிலிருக்கும் தலையாறு எனுமிடத்தில் மூங்கில் காடுகளுக்கிடையே பாய்கிறது.அசுரனைக் கொன்ற அம்மன் யௌவன வடிவம் கொண்டு இந்நதி அருகில் தவமிருந்தாள்.அசுரனைக் கொன்ற பாவம் அம்மனுக்கு நீங்குவதற்காக சப்த கன்னியர்கள்,தெய்வப் பெண்கள்,துர்க்கை அனைவரும் சேர்ந்து ஆயிரத்தெட்டு தங்கக் குடங்களில் நீரெடுத்து வாசனைத் திரவியங்களுடன் மஞ்சளும் கலந்து அபிசேகம் செய்தனர்.கன்னித் தெய்வமாய் பொலிவுறும் காமாட்சியம்மனுக்கு அபிஷேகம் செய்த மஞ்சள் நீர் ஆற்றில் கலந்ததால் வேகவதி ஆறாக இருந்த ஆறு #மஞ்சளாறு எனப் பெயர் மாற்றமடைந்தது.அம்மன் தலையாற்றின் மூங்கில் காடுகளில் தவமிருந்த இடத்தில் சிறிய கோவில் கட்டப்பட்டுள்ளது.இது“அம்மா மச்சு”என்று அழைக்கப்படுகிறது.

சிறப்புகள்

கோவிலில் அடைத்த கதவிற்கு முன்பாகவே பூஜை செய்யப்படுகிறது.கோவிலின் குச்சுவீடு கலசம் (கர்ப்பகிருக கலசம்) தரிசனம் சிறப்பான ஒன்றாக உள்ளது.அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் தேங்காய் உடைக்கப்படுவதில்லை.பழம் உரிக்கப்படுவதில்லை.அன்ன நைவேத்தியம் செய்யப்படுவதில்லை.கோவிலில் நெய் விளக்கு தீபம் மட்டுமே ஏற்றப்படுகிறது.விளக்குக்காகப் பக்தர்களிடம் காணிக்கையாகப் பெறப்படும் நெய் இங்குள்ள மண்பானைகளில் ஊற்றி வைக்கப்படுகின்றன.இந்த நெய்யிற்கு எறும்பு,ஈ,வண்டு என்று எதுவும் வருவதுமில்லை, மொய்ப்பதும் இல்லை.

திருவிழாக் காலத்தில் கோவிலில் அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்படும் நெய் சேகரிப்புக்காக சுமார் ஐம்பது மண்பானைகள் வைக்கப்படுகின்றன.இவையனைத்தும் எட்டு நாட்கள் திருவிழாவில் நிரம்பி விடுகின்றன.தேவதானப்பட்டியைச் சுற்றிலுமுள்ள சில கோவில்களுக்கு இங்கிருந்து நெய் மற்றும் நைவேத்தியப் பொருட்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.

வருடத்திற்கு ஒருமுறை கோவிலின் குச்சு வீடு கலசத்திற்குக் கூரை வேயப்படும் போது ராஜகம்பளம் சாதியினர் தங்கள் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டு தான் காமாட்சிப் புல்லால் கூரை வேய்கின்றனர். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் போன்றே இங்கும் பூஜை மண்டபத்தின் முன்பு கௌளி சின்னம் (பல்லியின் சின்னம்) பொறிக்கப்பட்டுள்ளது.இங்கும் கௌளி குறி கேட்டல் முக்கியமான ஒன்றாக உள்ளது.ராஜகம்பளம் சாதியைச் சேர்ந்தவர்கள் இங்கு பரம்பரை அறங்காவலர்களாக சுழற்சி முறையில் இருந்து வருகின்றனர்.மூங்கில் அணையிட்டு நிறுத்தியதால் இந்த அம்மன் மூங்கிலணைக் #காமாட்சி என்று அழைக்கப்படுகிறார்.

கோவில் கதவிற்குப் பூஜை

கோவில் பூஜை செய்யும் பொறுப்பு மலை மேல் குடியிருக்கும் மன்னாடியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.அவர்களும் பூஜைப் பணிகளைச் செய்து வந்தனர்.இந்நிலையில் மன்னாடியருக்கும், ஜமீந்தாரருக்கும் அவர்களது நிலங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இந்தக் கருத்து வேறுபாட்டில் கோபம் கொண்ட மன்னாடியார் கோவில் கதவைப் பூட்டியதுடன்“நான் அடைத்த கதவு என்றும் திறக்கக் கூடாது”என்று சொல்லிவிட்டுச் சென்றார்.அன்றிலிருந்து இன்று வரை பூட்டிய கதவு திறக்கப்படுவதில்லை.மேலும்,அடைத்த கதவிற்கு முன்பாகத் தான் பூஜை செய்யப்படுகிறது.தற்போது அந்த அடைத்த கதவின் முன்பாக நாக பீடம் அமைக்கப்பட்டு காமாட்சியம்மனுக்கு வழிபாடு செய்யப்படுகிறது.

பிறர் பொருளை அபகரிக்காதே

உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன் வீரசேனன். இவனுக்கு அழகும், அறிவும், பணிவும், கண்டிப்பும் கலந்த நற்குண மனைவி வாய்த்தாள். ஒருநாள் இரவில் மன்னன் தன்னந்தனியாக நகர்வலத்துக்கு மாறுவேடத்தில் புறப்பட்டான். அன்றிரவு ஏதோ காரணத்தால் அவன் சாப்பிடவில்லை. சாப்பிடாமலே கிளம்பிய அவனுக்கு நள்ளிரவு வேளையில் பசித்தது. சற்றுநேரத்தில் பசி அதிகமாகவே, அரண்மனைக்குத் திரும்பி ஏதாவது சாப்பிடலாம் என எண்ணியிருந்த வேளையில் பெருமழை பிடித்துக் கொண்டது. அவன் ஒரு வீட்டின் ஓரமாக ஒதுங்கினான். 

பசியோடு, மழை பெய்ததால் குளிரும் சேர்ந்து கொள்ள சற்று சிரமத்துடன் ஒதுங்கி நின்றான். தற்செயலாக அந்த வீட்டுக்குள் எட்டிப் பார்த்தான். உள்ளே ஒரு அந்தணர், அவரது மனைவி மக்களுடன் உறங்கிக் கொண்டிருந்தார். பசி தாளாத மன்னன், வீட்டுக்கதவைத் தட்டவே, அந்தணர் குடும்பத்தினர் திடுக்கிட்டு விழித்தனர். கதவைத் திற என மன்னன் அதிகாரமாகவே கூறவே, அந்த தொனியிலேயே மாறுவேடத்தில் இருப்பது மன்னன் என்பதை அந்தணர் புரிந்து கொண்டு கதவைத் திறந்தார். தாங்கள் மன்னர் தானே! என்றதும், ஆச்சரியமடைந்த மன்னன், எப்படி அதைக் கண்டுபிடித்தீர்? என்று அந்தணரிடம் கேட்டான். 

 பேச்சின் தோரணையிலேயே கண்டுபிடித்தேன், என்ற அந்தணரிடம், சரி! போகட்டும், எனக்கு பசிக்கிறது. ஏதாவது கொடும், என்றான் மன்னன். அந்தணர் வீட்டில் ஏதுமில்லை. மன்னா! இப்போதைக்கு உணவேதும் இல்லையே, என்றதும், பொய்யா சொல்கிறீர், என்ற மன்னன், அதோ! அங்கே சில பழங்கள் வைத்திருக்கிறீரே! அது யாருக்கு? மன்னனையே ஏமாற்றப் பார்க்கிறீரா? என்று மிரட்டினான். பழங்களைப் பார்த்ததும், அவனுக்கு பசி இன்னும் அதிகமானது போல் இருந்தது. இல்லை மன்னா! நேற்று வருமானம் ஏதும் கிடைக்காததால் நாங்கள் பட்டினியாக கிடக்கிறோம். அந்தப் பழங்களை சிரார்த்தத்துக்காக வாங்கி வைத்துள்ளோம். 

அது_முன்னோர் தெய்வமான விஸ்வதேவரைச் சேர வேண்டும். அவருக்கு படைக்கவே அதை வைத்துள்ளேன். அதைச் சாப்பிடுவது பெரும்பாவம், என்றார் அந்தணர். அதைச் சற்றும் கேட்காத மன்னன் அந்தணரை மிரட்டவே, பயந்து போன அவர் பழங்களைக் கொடுத்துவிட்டார். பசியுடன் இருந்த மன்னன் அவற்றைக் காலி செய்துவிட்டு, ஏதும் சொல்லாமல் கிளம்பிவிட்டான். வீட்டுக்கு வந்ததும் தீராத வயிற்றுவலி ஏற்பட்டது. வீட்டுக்கு வந்த அவனைக் கண்ட மனைவி, அவன் முகத்தில் ஏதோ மாறுதல் இருப்பதைக் கவனித்தாள். பிறர் பொருளை அபகரித்தவர் போல் விழிக்கிறீர்களே! என்ன விஷயம்? என்றாள். நடந்ததைச் சொன்னான் மன்னன். அவள் அவனைத் திட்டினாள். மந்திரிகளை வரவழைத்துக் கேட்டதில் பல தலங்களுக்கும் செல்லுமாறு அவர்கள் கூறினர். 

கோயில் கோயிலாக அலைந்த மன்னன், இறுதியாக அகத்தியர் வணங்கிய சங்கரன்கோவில் என்னும் தலத்துக்கு வந்தான். அங்கு ஒரு பிராமணரைச் சந்தித்தான். அத்தலத்து தீர்த்தத்தில் நீராடினால் தீராத பாவமெல்லாம் தீரும் என்றார் அவர். மன்னனும் நீராடி, சிவனை வணங்கினான். அவனது நோய் நீங்கியது. பசிக்காக பிறர் பொருளை சாப்பிடக்கூடாது. யாரேனும், பிறர் பொருளை அபகரித்ததற்காக சிரமப் பட்டால், இனி அவ்வாறு செய்வதில்லை என உறுதியெடுத்து, சங்கரன்கோவிலுக்கு வந்தால் பாவம் தொலையும் என்பது நம்பிக்கை. மதுரையில் இருந்து 110 கி.மீ., தொலைவில் சங்கரன் கோவில் உள்ளது.

ஆள் பாதி……………ஆடை பாதி………………..

அவசர வேலையாக வெளியூருக்கு புறப்பட்டார் முல்லா. காலைக் கடனை முடிக்க எண்ணிய அவர் பொது குளியல் அறைக்குச் சென்றார்.  அழுக்கான ஆடை உடுத்திய முல்லாவைக் கண்ட பணியாளர்கள் சிலர் சீக்கிரமாக குளித்து விட்டு போகும்படி விரட்டினர்   ஆனால் அவர்களுக்கு ஆளுக்கொரு தங்கக்காசு கொடுத்தால் முல்லா.   

மறு நாள் காலையில் மீண்டும் குளிக்கச் சென்றார்.  தங்கக்காசு கிடைக்கும் என எண்ணி தங்களால் முடிந்தளவு பணியாளர்கள் அவரை உபசரித்தனர். கடைசியில் பரிசுக்காக காத்திருந்தனர்.  வெளியே வந்த முல்லா ஆளுக்கொரு செப்பு காசு கொடுத்தார்.  இன்று  நாங்கல் உங்களை சிறப்பாக கவனித்திருக்கிறோம்  அதற்கு பரிசு இதுதானா?  எனக் கேட்டனர்.

நேற்று செய்த பணிக்கு செப்புக்காசு   இன்று செய்த பணிக்கு தங்கக்காசு.  எனச் சிரித்தார்.  இனியாவது அனைவரையும் சமமாக கருதுங்கள்  யார் மீதும் அலட்சியம் காட்டாதீர்கள் என்றார்.