சுத்தம் போட்ட சோறு

 கந்தன் எதையுமே சுத்தமாக பேணுவான். இருக்கும் இடத்தை கச்சிதமாக பராமரிப்பான்.   நண்பர்களிடம் சுற்றுப்புற தூய்மை பற்றியும் எடுத்துக் கூறுவான். அதை சுத்தம் தான் சோறு போடுதாக்கும்…என்று கேலி பேசி அலட்சியம் செய்வர்.  அது மழைக்காலம் சுகாதரத் திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகளை முடுக்கி விட்டது அரசு.  வீடு வீடாக ஆய்வு செய்தனர் அதிகாரிகள் கந்தன் வீட்டுக்கும்  வந்தனர்.  அங்கு சுற்றுப்புறம் சுகாதாரமாகவும் கழிப்பறைகள் சுத்தமாகவும் இருந்தது. கண்டு ஆச்சரியமடைந்தனர்  அவனை பாராட்டினர்.  நாட்கள் நகர்ந்தன.  கந்தனின் அப்பா திடீர் என இறந்தார்.  துயரத்தில் மூழ்கியது குடும்பம்.   பட்டதாரியான கந்தன் வேலைக்கு விண்ணப்பித்தான்  எங்கும் கிடைக்கவில்லை.  சுத்தம் என்று உபதேசம் செய்தானே…………………. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வான்……………. என கிண்டல் செய்தனர் நண்பர்கள்.  அன்று அந்த ஊருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஒரு சுகாதார திட்டத்தை துவக்கி வைத்தார்.  நிகழ்ச்சி முடிந்ததும் கந்தனை தேடி வந்தனர் அதிகாரிகள்.  மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பதாக கூறினர். எதையும் புரியாமல் மாவட்ட ஆட்சியாளரை சந்தித்தான்.  சுத்தம் பேணும் அவன் பண்பை பாராட்டி உன்னைப் போல் ஒருவனால் தான் இந்த ஊரும் நாடும் முன்னேறும்.  உனக்கு உதவி செய்வது என் கடமை……பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தில் இணைந்து பணியாற்றலாம்….என அழைத்தார்.

நடந்தது கனவா நனவா என புரியாமல் கண்ணீர் மல்கினான் கந்தன். சுத்தம் கந்தனுக்கு சோறு போட்டது.

மூன்று வகையான செல்வங்கள்

1. லட்சுமி செல்வம்,

2. குபேர செல்வம்,

3. இந்திர செல்வம் எனப்படும்.

லட்சுமி செல்வம்

பாற்கடலை, மந்தார மலையை மத்தாகவும் வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் வாலையும் அசுரர்கள் தலையையும் பிடித்துக் கடைய, சந்திரன், ஐராவதம், காமதேனு, தன்வந்திரி இவர்களுடன் மகாலட்சுமியும் வெளிப்பட்டாள். இந்த மகாலட்சுமி தான் இந்திரன் இழந்த செல்வத்தை மீண்டும் அவனுக்குக் கொடுத்தாள்.

மேலும் குபேரனை அளகாபுரிக்கு அதிபதியாக ஆக்கினாள். கிருஷ்ணனின் நண்பனான குசேலனுக்கு அளவற்ற நிதியைக் கொடுத்தாள். இவளின் கடைக்கண் பார்வை தன்மேல் விழாதா என ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள் பல. இந்த மகாலட்சுமியின் அருளைப் பெற்றவர்களுக்கு பதினாறு வகையான பேறுகளும் வந்து சேரும்.

லட்சுமி செல்வத்தைப் பெற்றவர் களுக்கு மதி மயக்கம் தோன்றாது. இந்தச் செல்வத்தைப் பெற்றவர்கள் மற்ற மனிதர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். தர்ம வாழ்வை மேற்கொள்வார்கள். இந்த செல்வம் ஏழுதலை முறையையும் தாண்டி நிலைத்து நிற்கும். இந்த செல்வம் வளர்பிறை சந்திரனைப் போன்று ஓங்கி வளரும். இயல்பிலேயே கொடை உள்ளம் கொண்டவர்களின் மீது தான் லட்சுமியின் கடைக்கண் பார்வை படும்.

குபேர செல்வம்

குபேரனின் தகப்பனார் ஒரு ரிஷி. தாயாரோ அசுர குலத்தைச் சேர்ந்தவர். குபேரன் ராவணனுக்கு சகோதர முறை. அந்தச் சகோதரனாலேயே இவரது நகரம் கைப்பற்றப்பட்டு விட, லட்சுமியின் அருளால் தனி நகரத்தை ஏற்படுத்திக் கொண்டார். இவர் தவம் செய்து அந்தத் தவ பலத்தினால் சங்கநிதி, பதுமநிதி போன்ற நவநிதிகளுக்கும் அதிபதியானார்.

குபேரனை ஒருவர் மனமுருகிப் பிரார்த்தித்தால், குபேரன் வழங்கும் குபேர செல்வம் அந்த பக்தருக்கு திடீர் செல்வமாக வந்து சேரும். அதாவது லாட்டரி, அறக்கட்டளை களை ஏற்படுத்தி அடையும் சுய லாபம் போன்றவையே அச்செல்வங்கள். திடீரென இந்த செல்வம் எப்படி ஒருவருக்கு வந்ததோ அதைப் போன்றே விரைவில் மறைந்துவிடவும் செய்யும்.

எனவே இத்தகைய செல்வத்தை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு மரம் நடுதல், அன்னதானம், படிக்கும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குதல், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற பொதுக் காரியங்களுக்குச் செலவழிக்க வேண்டும். மூன்று தலை முறைகள் வரையிலாவது அந்த செல்வம் கீழிறங்காமல் நிலைத்திருக்கும்.

இந்திர செல்வம்

போகி என்ற பண்டிகையை இந்திரனை முன் வைத்தே கொண்டாடுகிறோம். கிழக்கு திக்கின் அதிபதியாகத் திகழும் இந்திரன், தேவர்களின் தலைவனும் கூட, இந்திரனைப் பிரார்த்திப்பவர்கள் வெகு சிலரே. பசு, வீடு, அரச போகம் மற்றும் பொன் பொருள் சேர்க்கை போன்றவை இந்திர சம்பத்தின் அடையாளங்கள்.

இந்திரன் அருளால் அடையும் செல்வம் மூன்று தலைமுறைகள் வரை வருவது அரிதிலும் அரிது. சிலருக்கு ஒரே தலை முறையில் கூட மறைந்துவிடும். இந்தச் செல்வம் நிலைக்க விரும்புபவர்கள் கிரிவலம் வருதல், குல தெய்வத்தைப் பூஜித்தல் போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் நலம் விளையும்.

திருச்சிற்றம்பலம்

நன்றி. ஓம் நமசிவாய

குருவாயூர்” ஏகாதசி


வைகுந்த” ஏகாதசி-ன்னு தானே எல்லா இடத்துலயும் சொல்லுவாங்க? #கேரளத்தில் மட்டும், அனைத்து ஆலயங்களிலும், ஏன் “#குருவாயூர்_ஏகாதசி”-ன்னு சொல்லணும்?
இத்தனைக்கும், குருவாயூர் பாடல் பெற்ற தலம் கூடக் கிடையாதே!
எல்லாத்துக்கும் காரணம் ஒரு வாரணம் = யானைதான் காரணம்!
அந்த யானையின் மனசு தான், மொத்த வைகுந்த ஏகாதசிக்கே, “குருவாயூர்” ஏகாதசி என்று பெயர் பெற்றுத் தந்தது!

1914 – வல்லிய ராஜா என்னும் நிலம்பூர் நாட்டு ராஜா! உள்நாட்டுக் கலகத்தில் அவஸ்தைப்பட்ட தன் குடும்பத்துக்காக வேண்டிக் கொண்டார்!தன்னிடம் இருந்த பல யானைகளில் ஒன்றை, குருவாயூர் ஸ்ரீகோயிலுக்கு, தானம் அளித்தார்!அந்த பத்து வயதுக் குட்டி_யானை கேசவன்! பின்னாளில் புகழ் பெற்ற கஜராஜன்_கேசவன்” ஆனது!யானை என்னமோ குட்டி தான்! இருந்தாலும் சுட்டி!அமைதியான துறுதுறுப்பான சுபாவம்,
சாப்பிடும் போதும், விளையாடும் போதும், ஸ்ரீகோயிலைப் பார்த்தவாறேதான் எதுவும் பண்ணும்!அங்கிருந்து தன் கண்ணை மட்டும் எடுக்கவே எடுக்காது! இத்தனையும் பத்தே வயசில்!
அவ்வப்போது ஊர்வலத்தில் கண்ணனை அதன் மேலும் ஏற்றுவார்கள்!சக யானைகளெல்லாம், விளையாடுவதும், முரண்டு பிடிப்பதும், குலைகுலையாய் நேந்திரம் பழம் உண்டு, ஜாலியாகக் கழிப்பதுமாய் இருக்க.இது மட்டும், ஏகாதசி நாளில் சாப்பிடாமல் இருக்க, எப்படியோ கற்றுக் கொண்டது!தியுலாவின் போது, வித்தியாசமாக நடந்து காட்டும்!முன்னும் பின்னும், வலமும் இடமும்,நேர் வாட்டிலும், குறுக்கு வாட்டிலும்,
அசைந்து அசைந்து செல்வது ஏதோ டான்ஸ் ஆடுவது போல இருக்கும்!குருவாயூரப்பன், திடீரென்று இதனால் அரங்கனைப் போல், நடையழகு உடையவன் ஆகி விட்டான்!
மக்களிடம், குறிப்பாகச் சின்னஞ் சிறார்களிடம் கேசவனுக்கு ஏக செல்வாக்கு கூடி விட்டது!ஆனால்.ஆனால்.
பக்கத்து ஊர்களில் நடக்கும் உற்சவங்களுக்கு இது செல்லாது! முரண்டு பிடிக்கும்!அங்குசத்தால் அடி வாங்கும்!
ஆனால் அலறாது! பிளிறாது! கண்ணீர் உகுக்கும்! நீர் பெருக்கும்! ஆனால் அப்பவும் குருவாயூரை விட்டு மட்டும் செல்லவே செல்லாது!குருவாயூரப்பனை, சும்மா ஒப்புக்குச் சுமக்காமல், மனசிலே சுமந்து விட்டது போலும்!குருவாயூரப்பன் ஊருலாச் சிலையை (உற்சவர்), #மலையாளத்தில், #திரு_வெளி என்பார்கள்!

ஸ்ரீவேளி, சீவேளி என்று பின்னாளில் திரிந்து விட்டது!
தட்டையான பலகையில், மாயோனின் உருவம் பொறித்து, அதன் கீழே சின்னூண்டு இருக்கும்! அதுக்கு “#திடம்பு”-ன்னு பேரு
நம்ம கேசவன், அந்தத் “திடம்பை” யார் வைத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே தன் முன்னங்காலை மடக்கும்!
மற்ற யாராய் இருந்தாலும், பின்னங்கால் வழியாக ஏறித் தான், யானை மேல் உட்கார வேண்டும்! எவ்வளவுதான் தேங்காய், பழம், கரும்பு இனாமாகக் கொடுத்தாலும், அவற்றை எல்லாம் ஒதுக்கி விடும்!தன் முன்னங் கால்களை மட்டும், வேறு யாருக்கும் மடக்கவே மடக்காது!உன் அந்தமில் சீர்க்கு அல்லால்,
வேறு எங்கும்,அகம் குழைய மாட்டேனேன்னு ஆழ்வார் பாசுரத்தை நாமே படிச்சதில்லை! ஆனா இந்த யானை, இதை எங்கே போயி படிச்சிது/பிடிச்சிதுன்னு தான் தெரியவில்லை!செந்தழலே வந்து அழலைச் செய்திடினும், செங்கமலம்அந்தரம் சேர் வெங் கதிரோற்கு அல்லால் அலர் ஆவால்!!வெந்துயர் வீட்டா விடினும் வித்துவக்கோட்டு அம்மானே-உன்அந்தம் இல் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே!கேசவனை, “திமிர் பிடித்த யானை” என்று பட்டம் கட்டி விட்டார்கள்!அது “நார்மலான” யானை இல்லை! “ஈகோ பிடிச்ச” யானை என்று பேர் வாங்கிக் கொண்டது!
முதலில் கரும்பைக் கொடுத்து ஆசை காட்டி யவர்கள், பிற்பாடு சாப்பாடு கூடச் சரியாகப் போடாமல் தண்டிக்கப் பார்த்தார்கள்!
அப்பவும் கேசவன் – “வேறெங்கும்” அகம் குழைய மாட்டேனே!
மற்ற யானைகளிடம் இருந்து ஒதுக்கி வைக்கப் பார்த்தார்கள்!
சரி யானையின் “ஈகோ”-வை அதன் வழியிலேயே அடக்குவோம் என்று நினைத்தார்கள்!


குருவாயூர் அப்பனைத்தானே மனசால் சுமக்கிறாய்? அவனையே உனக்கு இல்லாமல் செய்து விட்டால்???அன்றில் இருந்து, கேசவன் மேல் மட்டும் குருவாயூரப்பன் “திடம்பை” ஏற்றுவதில்லை!
கேசவனின் முறையே வந்தாலும் கூட, “திடம்பை” அவன் மேல் ஏற்றுவதில்லை! அவனோடு பேசுவதையெல்லாம் குறைத்துக் கொண்டார்கள்!அவன் மிக அழகாக ஒதுக்கப்பட்டான்! ஒதுக்க ப்பட்டான்! உதாசீனம்! அப்போவாச்சும் அந்தக் கேசவன் “திருந்தினானா”?பிற யானைகளின் மேல் குருவாயூரப்பன் உலா வருவதைப் பார்க்கும் கேசவனுக்கு, தன்னை ஒதுக்குகிறார்கள் என்று நன்றாகத் தெரிந்து விட்டது!நேற்று வரை கண்ணனைச் சுமந்து வந்த கேசவன்,இன்று கட்டையை மட்டுமே சுமப்பவன் ஆக்கப்பட்டான்! ஆனால்..ஆனால்.யானை தனக்கென்று எந்த உரிமையும் கோரவில்லை!தன்னை மட்டும்தான் குருவாயூர் அப்பனின் உலாவுக்குப் பயன்படுத்த வேணும் என்று அடமும் பிடிக்கவில்லை! மதமும் பிடிக்கவில்லை!அதன் மனதில் ஒன்றே ஒன்று தான்:குருவாயூர் அப்பனுக்கு வளைந்த கால்கள், வேறு எங்கும் வளையாமல் இருக்க வேண்டும்!மற்றபடி, கண்ணன் யார் மீது வலம் வந்தால் என்ன? கண்ணன் ஆசைப்பட்டு வலம் வந்தால் போதாதா?மயிற் பீலி அசைய அசைய, அவன் வலம் வரும் அழகே அழகு!மானச சஞ்சரரே! மானச சஞ்சரரே!
அதை நானே கெடுப்பேனா? நானே கெடுப்பேனா?
கேசவன் பொறாமை பிடித்து, வீதியுலாவில் மற்ற யானைகளோடு, முரண்டும் பிடிக்கவில்லை! சண்டைக்கும் செல்லவில்லை!
மற்ற பளு தூக்கும் வேலைகளுக்குத் தயங்காது வந்து நிற்கும்! வேலை செய்யும்!ஆனால் அதன் கண்களில்? கண்களில்?..அது மட்டும் நிற்கவே இல்லை!


1970 மார்கழி மாசம் – குருவாயூர் ஸ்ரீகோயிலில் ஏகாதசி விளக்கு விழா!விளக்கு மாடம் முழுக்க சுடர்விடும் விளக்குகள்!
அம்மே நாராயணா, தேவீ நாராயணா என்ற கோஷங்கள்!
நம்ம கேசவன் மேல் மாயக் கண்ணன் உலா வர வேண்டிய முறை!
ஆனால் ஸ்ரீவேளி உற்சவத்தை இன்னொரு யானையைக் கொண்டு முடித்து விட்டார்கள்! கோயில் நடை சார்த்தப்பட்டது!
கோயிலுக்கு வெளியே கொட்டடியில் படுத்துக் கொண்டான் கேசவன்!ஈரமே வாழ்வாகிப் போன கேசவனின் தூங்கிய கண்களில் மெல்லிய ஈரம்.நீரில் இருந்து நெருப்பு வருமா என்ன?
அன்றைய ஏகாதசி இரவில் பற்றிக் கொண்டது! – தீ! தீ! தீ!
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்! – தீ! தீ! தீ!ற்குச் சுற்றம்பலத்தில் பிடித்துக் கொண்ட தீ, கூத்தம்பலத்துக்குப் பரவி, கிடு கிடுவென்று வளர்ந்து, நாலம்பல விளக்கு மாடங்களைப் பற்றிக் கொண்டது!ஏதோ புகைச்சல் வாசனை பார்த்து, யாரோ கூவ, ஒரு சிலர் மட்டும் விழித்துக் கொண்டு பதறினார்கள்!


யானைகளை அவ்வளவு சீக்கிரம், அதுவும் தூக்கத்தில் இருந்து எழுப்ப முடியுமா என்ன?அம்பலத்தைத் தன் பார்வையில் இருந்து அகற்றாத கேசவன் மட்டும், நெருப்பைக் கண்டு, அலறி அடித்துக் கொண்டு, எழுந்து ஓடினான்!”ஐயோ! என் செல்வப் பிள்ளைக்கு என்ன ஆயிற்றோ? என் சின்னிக் கண்ணனுக்கு என்ன ஆயிற்றோ? “
அதிகம் பிளிறாத கேசவன், அன்று நள்ளிரவில் படு பயங்கரமாகப் பிளிறினான்! -“என்டே குருவாயூரப்பா”!
கேசவன் பிளிறலில் மொத்த குருவாயூரும் விழித்துக் கொண்டது! அவனோ நாலம்பல நடையைச் சுற்றிச் சுற்றி வருகிறான்!
புதிய மண்டபம் கட்டுவதற்காக வைக்கப் பட்டிருந்த மணல் மூட்டைகளை, ஒரே மொத்தமாய் தூக்கிக் கொண்டு வந்து, அவன் தொம் தொம் என்று போட.ஊரே திரண்டது! மணல் கொண்டு வீசியது! தீயணைப்புத் துறை சற்று நேரம் கழித்து வந்து நீரைப் பாய்ச்ச, மொத்த அம்பலமும் மொத்தமாய்க் குளிர்ந்தது!
அனைவரும் உள்ளே சென்று பார்க்க.இன்னும் மூனே மூனு அடி தான்! கருவறைச் சுவர்!அது வரை அத்தனையும் மொத்தமாய் கருகி இருக்க.ஸ்ரீகோயில் வாசல் மாலைகள் மட்டும் கருகாமல் இருக்க.
ஸ்ரீகோயில் தப்பியது!சின்னிக் கிருஷ்ணன் தப்பித்தான்!
துவாரகையில் கண்ணனே வழிபட்டு, பின்னர் உத்தவர் வழிபட்டு,
குருவும் வாயுவும் அந்த விக்ரகத்தைக் கொண்டு வந்து,
அம்மையப்பனான பார்வதி பரமேஸ்வரன் அருளால் பிரதிட்டை செய்யப்பட்ட அந்த…குருவாயூரப்பன் தப்பித்தான்! குருவாயூரப்பன் தப்பித்தான்!மக்கள், கேசவன் மனசைப் புரிந்து கொண்டார்கள்!
கேசவன் “ஈகோ” பிடித்த ஜீவன் அல்ல! “கண்ணனை”ப் பிடித்த ஜீவன் – என்பதை லேட்டாகப் புரிந்து கொண்டார்கள்…
என்ன பிரயோஜனம்?..அவனோ மனத்தளவில் மிகவும் தளர்ந்து போய் விட்டான்! – கேசவனைப் பாடவும், நீ கேட்டே, கிடத்தீயோ?
குருவாயூரப்பன் ஸ்ரீவேளியான “திடம்பு”, மீண்டும் கேசவன் மேல் ஏறியது!கேசவன் வெகு நாள் கழித்து, முன்னங் கால்களை மடித்தான்!ஸ்ரீவேளி பிடித்தவர், அவன் கால் மேல் ஏறி, அவன் மேல் ஏறினார்!பின்னங் கால்கள் வழியாகப் பலரும் ஏறினார்கள்!
குடை பிடிப்பவரும், சாமரம் ஆட்டுவரும், மயில்தோகை விசிறி வீசுவரும் ஏறினார்கள்!நெடுநாள் கழித்து நடையழகு!மீண்டும் கேசவன்-கண்ணன் உலா!வண்ண மாடங்கள் சூழ் “குரு வாயூர்”
“கண்ணன்-கேசவன்” நம்பி பிறந்தினில்எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிடகண்ணன் முற்றம் கலந்து அளர் ஆயிற்றே!
Dec-2.1976..! மோட்ச ஏகாதசி என்னும் வைகுந்த ஏகாதசி!
குருவாயூரப்பன் “திடம்பை”, கேசவன் மேல் ஏற்றுகிறார்கள்!
ஏற்றிய சில வினாடிகளிலேயே,கீழே, சரி சரி சரி எனச்…சரிந்து விழுகிறான் கேசவன்! ஐயோ!!!அவசரம் அவசரமாக, “திடம்பை”, இன்னொரு யானைக்கு மாற்றுகிறார்கள்!தொடங்கிய புறப்பாட்டை முடிக்கணுமே! சாஸ்திர விதி ஆயிற்றே!மூச்சு இழுக்க இழுக்க….
ஹோய் கேசவா…உனக்கா இந்த மரண அவஸ்தை?இன்னொரு யானையின் மேல், குருவாயூரப்பன் உலா வரும் அழகை,
இன்பமாகப் பார்த்து முடித்தான் கேசவன்!வீதியுலா முடிந்தது! ஸ்ரீவேளி முடிந்தது! மாறிலா அன்பும் முடிந்தது!வைத்த கண் வாங்கவில்லை! உயிரை மட்டும் வாங்கிக் கொண்டான்!
எம்பெருமான் ஸ்ரீவேளி முன்பாக,அந்த மயிலிறகின் முன்பாக,
அந்த மதி வதனம் முன்பாக,சிரித்த சிறு செவ்விதழ்கள் முன்பாக,
கலைத்த அந்த தலைமுடியின் முன்பாக,துதிக்கையை நீட்டி விரித்தபடி,துதிக்-“கையை” நீட்டி விரித்தபடி,சரணம்” என்று வாயால் சொல்லக் கூடத் தெரியாது.அனன்ய சரணஹ, த்வாம் சரணம், சரணம் அஹம் பிரபத்யே!ஸ்ரீமன் நாராயண சரணெள, சரணம் ப்ரபத்யே!ஸ்ரீமதே நாராயணாய நமஹ!புகல் ஒன்று இல்லா அடியேன்..மோட்ச ஏகாதசியான வைகுந்த ஏகாதசியும் அதுவுமாய்…
அகலகில்லேன், உன்னை அகலகில்லேன் என்று உன்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!தன் மேல் ஏற்றாவிட்டாலும் பரவாயில்லை, கண்ணன் வீதியுலா கண்டால் போதும் என்று இருந்த ஜீவன் அல்லவா? அதன் இயற்கையான கம்பீரம் குறைந்து, இப்படி மனத்தளவில் தளர்ந்து, அதன் கதி இப்படி முடிந்து விட்டதே!
தன் கால்களைத் தானே, வேறு யாருக்கும் மடக்காது இருந்தான்?
வேறு யாரும் கண்ணனிடம் செல்வதைத் தடுத்தானா என்ன?
மடக்காது இருத்தலுக்கும், தடுக்காது இருத்தலுக்கும் கூடவா, மாந்தர்க்கு வித்தியாசம் தெரியவில்லை?அவன் மனத்திலா பொறாமை? ஆணவம்?அவன் மனத்திலா “தனக்கு மட்டுமே” என்கிற ஒரு எண்ணம்?தனக்கு ஒத்து வரவில்லை என்பதால், அவனைத் தள்ளி வைக்கும் அளவுக்கா, ஒரு பாழும் வெறி?
அவனையா ஒதுக்கி வைக்க முடிந்தது? உதாசீனப் படுத்த முடிந்தது?
அவனுக்கா பசியைக் கொடுத்து, தனிமையைக் கொடுக்க முடிந்தது?
மாயங்கள் செய்யும் மாயோனிடம் மனதைக் கொடுத்து, இப்படி மண்ணில் இன்று விழுந்து விட்டதே

!கேரள அரசு, கேசவனைக் “#கஜராஜன்” என்று பிற்பாடு கொண்டாடி.குருவாயூர் வீதியிலே, பன்னிரெண்டு அடிச்சிலையாக எழுப்பியது!அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்!ஆனை பரிமேல் அழகர் வந்தார் வந்தார்!
கச்சி தன்னில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்!கருத வரம் தரும், வரதப் பெருமாள் வந்தார்!முக்தி மழை பொழியும் முகில் வண்ணன் வந்தார்!”மூமூமூலம்” என ஓஓஓலம் இட, வல்லார் வந்தார்!வாழைப்பந்தல் கிராமத்தின் கஜேந்திர வரதராஜப் பெருமாளே! ஆனைக்கு அருளிய அருளாளப் பெருமாளே!
ஹே பெருமானே,இந்த யானைக்கு முக்தி கொடு! உன்னைக் கொடு!

லலிதா சகஸ்ரநாமம்

லலிதா ஸகஸ்ரநாமத்தில் கூறும் அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்….
சக்திதேவிக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அந்தப் பெயர்களால் அவளை அர்ச்சிக்கும் மந்திரங்கள் அடங்கிய நூலே லலிதா சகஸ்ரநாமம். இந்த நூலிலேயே தேவிக்கு பிடித்த நைவேத்ய வகைகள் சொல்லப்பட்டுள்ளன.
இந்த நூல் தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது.
பெருமாளின் அவதாரமாகக் கருதப்படுபவர் ஹயக்கிரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். கல்விக்கு அதிபதி. இவரது தரிசனம் ஒருமுறை அகத்திய முனிவருக்கு கிடைத்தது. கல்விக்கதிபதியான அவரை தன் குருவாகவே பார்த்தார் அகத்தியர். அதன் காரணமாக சக்தியின் வரலாற்றை அறிந்தார். சக்திக்கு “லலிதா’ என்ற திருநாமம் சூட்டி, அவளது கதையைக் கூறினார் ஹயக்கீரிவர்.
அதைக் கருத்துடன் கேட்டு மகிழ்ந்த அகத்தியர், “குருவே! தாங்கள் எனக்கு லலிதா தேவியின் சரித்திரத்தை மட்டும் கூறினீர்கள். அவளுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே! அதையும் சொல்லுங்கள்!’ என்றார்.
“அது மிக, மிக ரகசியம். தேவியின் அனுமதியின்றி யாருக்கும் சொல்லக் கூடாது. இருந்தாலும் தேவியின் அதிதீவிர இறைபக்தர்களுக்கு இதைச் சொல்வதில் தவறில்லை!’ என்று கூறிய ஹயக்கிரீவர், ஆயிரம் நாமங்களையும் கற்றுக் கொடுத்தார். அதில் வரும் 480வது ஸ்லோகமான, “பாயஸான்ன ப்ரியாயை’ என்பதற்கு, “பால் பாயசத்தை விரும்புபவள்’ எனப் பொருள்.
501வது ஸ்லோகமான, “குடான்ன ப்ரீத மானஸாயை’ என்பதற்கு, “அம்பிகை சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள்’ என்று அர்த்தம்.
526வது ஸ்லோகமான, “ஹரித் ரான்னைக ரஸியை’ என்ற ஸ்லோகத்திற்கு, “மஞ்சள் பொடி கலந்த எலுமிச்சை சாதத்தை ரசித்து உண்பவள்’ என பொருள் வருகிறது.
அம்பிகை குறித்த இன்னொரு ஸ்லோகமான, “தத்யான்ன ஸக்த ஹ்ருதயாயை’ என்ற ஸ்லோகத்திற்கு, “இவள் தயிர் சாதம் என்றால் இதயத்தையே கொடுப்பவள்!’ என்று பொருள்.
“முத் கௌத நாஸக்த…’ என்ற ஸ்லோகத்திற்கு, “பாசிப்பருப்பு, அரிசியில் சமைத்த வெண்பொங்கலை விரும்புபவள்!’ என்று அர்த்தம்.
“ஸர்வெளதன ப்ரீதசித்தா’ என்ற ஸ்லோகத்திற்கு, “அம்பிகை கதம்ப சாதம், தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றை உண்ணும் மனதைக் கொண்டவள்!’ எனப் பொருள்.
இதையெல்லாம் முடித்த பிறகு 559வது ஸ்லோகத்தில், “தாம்பூல பூரிதமுகிச்யை’ என்ற ஸ்லோகம் வருகிறது. இதற்கு, “தாம்பூலம் தரித்ததால் லட்சணமாக இருக்கும் முகத்தைக் கொண்டவள்!’ எனப் பொருள்.
“தாம்பூலம்’ என்பது வெற்றிலை, பாக்கைக் குறிக்கும். எனவே தான் கடவுளுக்கு நாம் நிவேதனம் படைத்து வழிபடுகிறோம். 
இதைத்தவிர அவரவருக்கு என்ன நைவேத்யமாக வைத்து பூஜிக்க முடியோமோ அதை வைத்து வணங்கலாம். அம்பாள் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான, ஆத்மார்த்தமான பக்தியே!
நாமும் நமக்கு தெரிந்த முறையில் அம்பாளை மனதார நினைத்து, துதித்து, தாயின்  அருளை  பெறுவோம்….

திருஅண்ணாமலையார் கோவில் பெரிய நந்தி

சிவன் கோவில்களில் அனைத்து நந்திகளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும் .ஆனால் திருஅண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருப்பதற்கான கதை:

இக்கதை திருஅண்ணாமலை வாசிகள் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.முகலாயர்கள் காலத்தில் திருஅண்ணாமலையார் கோவிலுக்கு பேராபத்து வந்தது.அதனை அண்ணாமலையாரே தன் பக்தனான வீரேகிய முனிவர் முனிவரின் வாயிலாக எதிர்கொண்டார். 

திருஅண்ணாமலையார் கோவில் பெரிய நந்தி கால்மாற்றி அமர்ந்த வரலாறு:முகலாயர் காலத்தில் திருவண்ணாமலை வந்த முகலாய அரசன் ஒருவன் கோவிலை சிதைக்க எண்ணினான். 

அப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்றனர்.

முகலாய அரசன் “நாங்கள் வெட்டி சாப்பிடும் காளைகளை நீங்கள் தலையில் வைத்து வணங்குவது ஏன் என கேட்டான்?”அதற்கு அந்த ஐவர் இந்த காளை எம் இறைவன் சிவபெருமானின் வாகனம். அவரை சுமப்பவரை நாங்கள் சுமப்பது பெரும்பாக்கியம்” என்றனர். அதற்கு அரசன் ” உம் சிவன் இந்த அண்ணாமலையார் உன்மையிலேயே சக்தி உடையவராக இருந்தால் நான் இந்த மாட்டை இரண்டாக வெட்டுகிறேன் ,வந்து சேர்த்து வைத்து உயிர் கொடுக்கச்சொல்” என்று கூறி வெட்டிவிட்டான்.  பதறிய ஐவரும் அண்ணாமலையாரிடம் முறையிட அண்ணாமலையார் அசரீரியாய் வடக்கே என் ஆத்ம பக்தன் ஒருவன் “நமசிவாய” எனஜபித்துக்கொண்டு இருக்கிறான்.அவனை தேடி இங்கு அழைத்து வாருங்கள்” என்றார்.

உடனே வடக்கே அந்த ஆத்ம பக்தனை தேடி சென்ற அந்த ஐவரும் “நமசிவாய” என்ற மந்திர சத்தத்தை கேட்டு அவ்விடம் சென்ற பார்த்த போது 15 வயது பாலகன் ஒருவனை கண்டனர். ஐவரும் “இச்சிறு பாலகனா பக்தன் ” என ஏளனம் செய்த போது அருகே காட்டிலிருந்து புலி ஒன்று ஐவரையும் தாக்க முற்பட்டது . அச்சிறுபாலகன் நமசிவாய மந்திரம் கூறி புலியை வென்று அவர்களை காப்பாற்றினான்.ஐவரும் நடந்ததை கூறி அச்சிறுபாலகனை அழைத்து சென்றனர். அண்ணாமலையார் கோவிலுக்கு ஐவருடன் வந்தடைந்த அந்த பாலகன் அரசனை கண்டு தான் அந்த மாட்டின் இரண்டு துண்டுகளையும் இணைத்து உயிர் கொடுப்பதாக கூறினான். 

உடனே அண்ணாமலையார் முலஸ்தானம் சென்று “நமசிவாய” மந்திரம் கூறி அந்த மாட்டினை இணைத்து உயிர்பெறச்செய்தான்.

அதை நம்ப மறுத்த முகலாய அரசன்”நீ ஏதோ சித்து வேலை செய்கிறாய் ” எனக் கூறி நம்ப மறுத்தான்.”சரி உனக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்கின்றேன்,இதில் நீ வென்றால் இந்த கோவிலை நான் ஒன்றும் செய்ய மாட்டேன்,நான் வென்றால் இடித்து விடுவேன் ” என கூறினான். அதற்கும் சளைக்காத அச்சிவபாலகன் அண்ணாமலையார் மேல் வைத்த நம்பிக்கையில் போட்டிக்கு சம்மதித்தான்.அரசன் தற்போது ஒரு தட்டு நிறைய மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள் ,அவருக்கு சக்தி இருந்தால் அந்த மாமிசத்தை பூவாக மாற்றட்டும் எனக் கூறினான். அவன் ஆணைப்படி வீரர்கள் மாமிசத்தை படைக்க முற்பட்டனர்.அண்ணாமலையார் அருகே மாமிசத்தை வைத்ததும் மாமிசம் பூக்களாக மாறியது. அதில் பல ரக பூக்களும் தட்டு முழுவதும் நிரம்பி வழிந்தது.

 இதனை கண்ட ஐவரும் பாலகனும் “ஓம் நமசிவாய” “அண்ணாமலைக்கு அரோகரா” எனப் போற்றி பேரானந்தம் அடைந்தனர். இதனையும் நம்பாத அந்த அரசன் கடைசியாக ஒரு போட்டியை அறிவித்தான்.அண்ணாமலையார் கோவில் பெரிய நந்தியை பார்த்து ” இந்த உயிரில்லாத நந்தி சிலைக்கு உயிர் கொடுத்து, காலை மாற்றி மடித்து வைத்து உட்கார வைத்து விட்டால் உங்கள் அண்ணாமலையாரை வணங்கி இக்கோயிலை சிதைக்கும் முயற்சியையும் ,கொள்ளை அடித்த நகைகளையும் அண்ணாமலையாரிடமே ஒப்படைத்து விட்டு செல்கிறேன் என்றான். 

உடனே நமசிவாய மந்திரம் கூறிய அப்பாலகனும் ஐவரும் அண்ணாமலையாரிடம் பெரியநந்திக்கு உயிரூட்டுமாறு வேண்டினர். 

கருணைக்கடலான நம் அண்ணாமலையார் உடனே பெரிய நந்திக்கு உயிர் கொடுத்து வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமருமாறு உத்தரவிட்டார். அன்று முதல் அண்ணாமலையார் கோவிலின் பெரிய நந்தி மட்டும் வலது காலை மடித்து இடது காலை முன் வைத்து அண்ணாமலையாரை வணங்கி வருகிறார். அரசனும் அண்ணாமலையானை வணங்கி அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டான்அன்று அங்கு வந்த பாலகன் தான் இன்று வீரேகிய முனிவர் என அழைக்கப்படுகிறார். 

அவர் வாழ்ந்த ஊர் சீநந்தல் எனும் கிராமம் அண்ணாமலையார் கோவிலுக்கு வடக்கே இருப்பதாலேயே,பெரிய நந்தியின் முகம் வடக்கு பக்கம் லேசாக திரும்பி காணப்படுகிறது.  வீரேகிய முனிவர் நினைவாக இங்கு அவருக்கு கோவில் எழுப்பப்பட்டு மடமும் செயல்பட்டு வருகிறது. இக்கதைக்கான ஆதாரங்களை இக்கிராமத்திற்கு சென்றால் காணலாம். ஆனால் இக்கதையை அடியேன் இணையத்தில் படித்து தெரிந்து கொண்டேன். பர்வதமலை அருகே தற்சமயம் சீலப்பந்தல் என்று அழைக்கபடும் சீநந்தல் எனும் கிராமத்தில் இந்த வீரேகிய முனிவரது ஜீவ சமாதி அமைந்துள்ளது.

நன்றி.    ஓம் நமசிவாய

வாயிலார் நாயனார்

தொண்டைவள நாட்டிலுள்ள சிறப்புமிக்கப் பழம் பெரும் பதியாகிய மயிலாபுரி  கடல் வளத்தோடு கடவுள் வளத்தையும் பெற்றுச் செல்வச் சிறப்போடு ஓங்கிஉயர்ந்து பொலிவு பெற்றிருந்தது. இத்திருநகரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு கபாலீசுவரர் என்றும், உமையம்மைக்குக் கற்பகவல்லி என்னும்  திருநாமம் உண்டு. இந்நகரிலே கபாலீசுவரர் கமல மலர் பாதம் போற்றும்  அருந்தவத்தினராய் வேளாளர் மரபிலே அவதரித்தவர் தான் வாயிலார் நாயனார்  என்பவர்.இவர் எம்பெருமானின் திருநாமத்தை உள்ளத்தால் பூஜை புரிந்து  வந்தார். இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில்  இருத்தினார். உணர்வு என்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும்

இன்பம் என்னும் திருவமுதத்தால் வழிபட்டு வந்த வாயிலார் நாயனார்

சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வு பெற்றார்.

குருபூஜை

வாயிலார் நாயனாரின் குருபூஜை மார்கழி மாதம் ரேவதி நட்சத்திரத்தில்  கொண்டாடப்படுகிறது.

நன்றி.  ஓம் நமசிவாய

புண்ணிய_கணக்கு_இதுதான்.

ரயில் நிலையத்தை விட்டு  சுமைகளுடன்   வெளியே  வந்தேன். வீட்டுக்கு போக   ஆட்டோ பேசினேன் ஆட்டோக்காரரிடம்’ எவ்வளவு..? என்று  கேட்டேன் …”600-ரூபாய்” என்றார் ஆட்டோகாரர்…”400-ரூபாய்க்கு வருமா ???என்றேன்,..சற்று யோசித்த அவர்’சரி  450-ரூபாய் கொடுங்க…  வண்டி ஏறுங்க சார்” என்றார். ஆட்டோ பறந்தது… ”ஏம்பா   இந்த வழியா சவாரி போனா நீங்க  டிபன் எங்கே  சாப்பிடுவிங்க…? என்றேன்… ரோட்டுக்கடை தான்  சார் என்றார் ”அப்ப  நீங்க  சாப்பிடும் கடை எதுவோ அங்கே வண்டியை நிறுத்துங்க . இருவரும்டிபன் சாப்பிட்டு விட்டு போவோம்” என்றேன்…இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு வண்டிகிட்ட  ஆட்டோ நின்றது..ஒரு நடுத்தரவயது அம்மா..அவர்கள் கணவர் துணையற்றவர் என சொல்லியது தோற்றம்..

”வாங்க சார்” என்றார்””இங்கதான் சார்…….வயித்துக்கு ஒன்னும் பண்ணாது” என்றார் ….ஆட்டோ டிரைவர்இட்லி… வடை… பொங்கல்… பூரி… என சாப்பிட்டோம்…”எவ்ளோம்மா?” என்றேன்.”60-ரூபாய் சார்” என்றார்  100-ரூபாய் கொடுத்தேன்…மீதியை.., சில்லரையாக பொருக்கியது அந்த அம்மா…”இன்னக்கி  வியாபாரம்  டல் சார்” அதன் சில்லரை கஷ்டம் என்றார்…”சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா வருவேன்…அப்போ வாங்கிக்கிறேன்”என்று கூறி புறப்பட்டோம்…

”சார் நீங்க இன்னைக்கே  ஊருக்கு போறீங்க…. நாளைக்கு வருவேன்னு சொல்லிட்டு,40-ரூபாய அந்த அம்மாகிட்ட விட்டுட்டு வர்ரீங்க?” என்றார்  ஆட்டோக்காரர்’தம்பி  இப்ப நாம சாப்பிட்டத ஒரு பெரிய ஹோட்டல்ல  சாப்பிட்டிருந்தா  நிச்சயம் 250 -ரூபாய்க்கு மேல்தான் ஆகி இருக்கும். அப்புறம் டிப்ஸ், வரி என 300-ரூபாய்கொடுத்திருப்போம்…  இல்லையா….?”எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம உதவணும் தம்பி” என்றேன்.சங்கம் அமைப்பது.. வசூல்செய்வது… அதன்மூலம் பொதுசேவை செய்வது.. புண்ணிய தலங்கள் செல்வது, நன்கொடை கொடுப்பது.. உண்டியல் குலுக்குவது… என இப்படித்தான் புண்ணியம் தேட வேண்டும் என்பதில்லை நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்”என்றேன்..ஆட்டோ வீடு வந்து சேர்ந்தது..

”இந்தாங்க தம்பி நீங்க  கேட்ட 450-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்..”400-ரூபாய் போதும்” சார் என்றார்….!”ஏன் என்னாச்சு தம்பி.? என்றேன்…”அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும் புண்ணியம் கிடைக்குமே சார்” என்றார் …!ஒருகணம் மூச்சு நின்றதுநான் போடும்  புண்ணிய கணக்கை விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின் புண்ணிய கணக்கு…!

படித்தேன்.. பிடித்தது.. பகிர்ந்துள்ளேன்.

 

நட்சத்திர அந்தஸ்து

 

காவிரிபூம்பட்டினத்தில் சாதுவன் என்ற வியாபாரி இருந்தான். அவனது மனைவி ஆதிரை. ஒரு நாள் ஊரில் நடந்த நாடகத்திற்கு சென்றான்.  நாடக அழகியிடம் மயக்கம் கொண்டான்.  மனைவியை கைவிட்டு விட்டு நடிகையுடன் குடும்பம் நடத்தினான். சாதுவனின் பணத்தின் மீது குறியாக இருந்தாள் நடிகை.  பொருள் கரைந்ததும் சாதுவனை விட்டு விலகினாள். ஆதிரைக்கு செய்த துரோகத்தால் இந்த நிலை வந்ததை எண்ணிய சாதுவன் மீண்டும் பொருள் தேட விரும்பினான்.

அப்போது வங்க தேசத்து வியாபாரிகள் சிலர் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர். அவர்களை சந்தித்த சாதுவன் தனக்கு தெரிந்த வியாபார நுட்பங்களை எடுத்துரைத்தான்   அதைக்கேட்ட அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. தங்களுடன் பாய்மரக் கப்பலில் அழைத்துச் சென்றனர். இழந்த பணத்தை மீட்டபின் மனைவியை சந்திக்கலாம் என்ற எண்ணத்துடன் சாதுவனும் புறப்பட்டான்.

நடுக்கடலில் புயல் குறுக்கிடவே கப்பல் கவிழும் என்ற நிலை ஏற்பட்டது. அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். வியாபாரிகள் கடலில் மூழ்கி இறந்தனர். ஆனால் சாதுவன் மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் உடைந்த பலகை ஒன்றின் மீதேறி படுத்துக்கொண்டான்.  துரோகமே செய்தாலும் கூட தாலி கட்டிய கணவர் நலமுடன் வாழ வேண்டும் என தினமும் சிவனை வழிபடுவது ஆதிரையின் வழக்கம். அவளது பிரார்த்தனையால் சாதுவன் பத்திரமாக ஒரு தீவின் கரையில் ஒதுங்கினான்.

கப்பல் மூழ்கிய செய்தி ஆதிரையை எட்டியது. உயிர் துறக்க முடிவெடுத்தாள். சிவபெருமானே அடுத்த பிறவியிலும் சாதுவனே கணவராக அமைய வேண்டும் என தீயில் குதித்தாள்.  ஆனால் நெருப்பு அவளை சுடாமல் கற்புத்தீ அக்னிதேவனை சுட்டது   உயிருடனே வெளியே வந்தாள்.  ஆதிரையே கவலை வேண்டாம். உன் கணவர் உன்னை வந்தடைவார். என அசரீரி கேட்டது. ஆதிரையும் மகிழ்ச்சியுடன் காத்திருந்தாள்.

இதனிடையே கரை ஒதுங்கிய சாதுவன் தீவின் மன்னரை சந்தித்தான். நடந்ததை மன்னரிடம் விவரித்தான். உண்ண மது மாமிசத்தை மன்னர் வழங்கினார். சாதுவன் ஏற்கவில்லை. மன்னா தீய பழக்கத்தால் நான் பட்ட கஷ்டங்கள் போதும்.  மது மாது மாமிசம் வேண்டாம் என மறுத்தான்.

சாதுவனை காவிரிபூம்பட்டினத்திற்கு அனுப்பினார் மன்னர்.  ஆதிரையுடன் இணைந்த சாதுவன் இல்லறத்தில் ஈடுபட்டான். கற்புக்கரசியான ஆதிரை வான மண்டலத்தில் திருவாதிரை நட்சத்திர அந்தஸ்து பெற்றாள். அம்மையப்பனாகிய சிவனும் ஆதிரைக்கு பெருமை சேர்க்கும் விதமாக அதை தன் ஜன்ம நட்சத்திரமாக ஏற்றார்.

எதிரிக்கும் அருளும் துர்கா தேவி

மதுராபுரி சிறைச்சாலையில் வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது மகனாக ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்தார்.  அதே வேளையில் ஆயர்பாடியில்  நந்தகோபருக்கும் யதோசைக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.   கிருஷ்ணாவதாரத்துக்கு உதவும் பொருட்டு பகவான் மஹாவிஷ்ணுவே அப்பெண்ணை உருவாக்கியதாக ஐதீகம். வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தையாலேயே தமக்கு அழிவு என்பதை அறிந்திருந்த கம்சன் அக்குழந்தையை அழிக்க ஆவலோடு எதிர்பாத்திருந்தான்.  ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத்தின்போது சிறைச்சாலையில் வசுதேவர் தேவகி ஆண் குழந்தையை ஆயர் பாடிக்கும் நந்தகோபர்   யசோதை பெண் குழந்தையை சிறைச்சாலைக்கும் மாற்றும்படி அசரீரி ஒலித்தது. அந்தக் கட்டளை வசுதேவரால உடனே நிறைவேற்றப்பட்டது.

மறு நாள் காலை சிறைச்சாலைக்கு வந்த கம்சன் வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்தது பெண் குழந்தை என அறிந்து குழப்பமுற்றான்.  இருப்பினும் ஆணோ பெண்ணஒ வசுதேவர் தேவகிக்குப் பிறந்த எட்டாவது குழந்தையைக் கொல்வதென முடிவெடுத்து அக்குழந்தையின் இரு கால்களையும் பிடித்து தூக்கி ஆகாயத்தில் வீசி எறிந்தான். அப்போது அந்தக் குழந்தை எட்டு கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் ஆகாயத்தில் காட்சி தந்தது.

மாயாசக்தியாக விளங்கிய அக்குழந்தை கம்சனே உன்னக் கொல்லப் பிறந்த ஆண் குழந்தை வேறு இடத்தில் உள்ளது. நான் மாயா சக்தி  என்னாலேயே உன்னைக் கொல்ல முடியும். ஆனாலும் நீ எனது கால்களைப் பற்றி தூக்கி எறிந்தாய். எனது திருவடிகளை பற்றுபவர். எனக்கு எதிரியாகவே இருந்தாலும் அவருக்கு அருள் வழங்குவது எனது குணம். அதனால் பிழைத்துப்போ எனக்கூறிவிட்டு மறைந்தாள்.

அந்த சக்தியைத்தான் துர்கை  என்றும் காளி என்றும் கோயில் கருவறை சுவற்றின் வடபாகத்தில் சங்கு சக்கரத்தோடு கூடிய விஷ்ணு துர்க்காவாக தரிசிக்கின்றோம்.  இவள் எருமைத் தலை கொண்ட மகிஷனை காலில் மிதித்திருப்பாள். எதிரிக்கும் கருணை செய்யும் இரக்கமுள்ளவள். துர்கா என்ற சொல்லுக்கு அரண் எனவும் பொருள். தம்மை அடிபணியும் பக்தர்களை அரண்போல் நின்று காப்பதால் இவளுக்கு இப்பெயர்.

நிம்மதி நிலைக்கட்டும்

0

செல்வந்தர் ஒருவர் யாருக்காகவும் எதற்காகவும் ஒரு ரூபாய் கூட தர மனம் இல்லாதவர்.  தர்மம் என்ற சொல்லை மறந்தும் கூட நினைத்ததில்லை.  நோயின் பிடியில் சிக்கிய அவர் ஒரு நால் காஞ்சிப்பெரியவரை தரிசிக்க வந்தார்.  சுவாமி ரத்த அழுத்தம் சர்க்கரை வியாதி புற்று நோய் என வியாதிகளால் ரொம்ப அவஸ்தைப்படறேன்  நோயில் இருந்து விடுபட நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும் என்று சொல்லி வருந்தினார்.

உற்று நோக்கிய சுவாமிகள் பரிகாரம் இருக்கு  ஆனா உன்னால் செய்ய முடியுமா என்பது தான் தெரியவில்லை. கொஞ்சம் கஷ்டமான பரிகாரம் அது என்றார்.  நீங்கள் சொன்னால் எதுவும் செய்வேன் எனக்கு குணமானால் போதும்  அப்படியா சரி    முன் ஜன்ம பாவத்தால் தான் வியாதிகள் வருகின்றன. அதிலிருந்து விடுபட ஏழைகளுக்கு உதவுவது ஒன்றே வழி  மரத்தில் பழம் பழுக்கிறது  என் மரத்தில் பழுத்ததால் நானே அதை சாப்பிடுவேன் என எந்த மரமும் சொல்வதில்லை.  தன்னிடம் இருக்கும் தண்ணீரைக் கிணறு தானே குடிப்பதில்லை.  மற்ற உயிர்களுக்காகத் தானே தாவரங்கள் பூக்கின்றன  காய்க்கின்றன  கனிகளைத் தருகின்றன.  தன் கன்றுக்குட்டி குடித்தது போவ மீதிப்பாலை மற்றவர்களுக்கு கொடுத்து உதவுகிறதே பசு   இப்படி தாவரம் மிருகத்திற்கு இருக்கிற நல்ல புத்தி நமக்கு வேண்டாமா? உன்னிடம் பணம் இருக்கிறது  அதை தர்மம் செய்வதில் சந்தோஷப்பட வேண்டாமா?  குளம் வெட்டலாம்  கோயில் திருப்பணி செய்யலாம்  அன்னதானம் செய்யலாம்  கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவலாம்.  உன்னிடம் பணம் இருப்பதால் வியாதி தீர மருந்து வாங்குகிறாயே. எத்தனையோ ஏழைகள் வியாதியால் சிரமப்படுகிறார்கள்.  ஆனால் மருந்து வாங்க அவர்களிடம் பணமில்லை.  நீ அவர்களுக்கு உதவலாமே?

சேமித்த பணத்தை உயிரை விடும் போது யாரும் கொண்டு போக முடியுமா?  மற்றவர்களுக்கு உதவினால் அந்தப் பணம் சரியான வழியில் செலவானதாக அர்த்தம்.  அப்போது மனதில் நிம்மதி நிலைத்திருக்கும்  வியாதிகள் நீங்கி நலமுடன் வாழ்வாய் என்றார் சுவாமிகள்.  தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்குச் செய்வதாக உறுதியளித்தார் செல்வந்தர்