ஸ்ரீ  சைதன்ய மகாபிரபு குருமகராஜ்

ஸ்ரீ கிருஷ்ணரின் மீது தூய பக்தி கொண்ட  ஹரிதாசின் தொடர்பால் இந்த சமுத்திரமே  தன்யமானது, மேலும் மகா பவித்திரமாகி விட்டது என கூறிய சைதன்ய மகாபிரபு   

” ஒரு மாலை வேளையில் சைதன்ய மகாபிரபு ஸ்ரீ கிருஷ்ண மஹா மந்திரமான ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்று தனது சீடர்களோடு அகண்ட நாம பஜனை செய்து கொண்டு இருந்தார்.அப்போது ஹரி தாஸ் தாகூர் சைதன்ய சைதன்ய என்று பஜனை செய்து கொண்டு சைதன்ய மகா பிரபுவை பார்த்து ஆனந்த கண்ணீரில் நனைந்தார்

அப்போது அவரின் உயிர் பிரிந்து மோட்சம் கிட்டியது சைதன்ய மகா பிரபுவோ அந்த ஹரி தாஸ் தாகூர் சரீரத்தை தன் கையால் ஏந்தி ஆனந்த நர்த்தனம் செய்து மிக பரவசமாக ஆடினார்.பின்னர் அந்த சரீரத்தை தன் கையால் சுமந்து கொண்டு பூரி சமுத்திரத்தில் குளிபாட்டினார் அப்போது சைதன்யர் கூறினார்.

ஸ்ரீ கிருஷ்ணரின் மீது தூய பக்தி கொண்ட  ஹரிதாசின் தொடர்பால் இந்த சமுத்திரமே  தன்யமானது, மேலும் மகா பவித்திரமாகி விட்டது என கூறி தமது கைகளாளே அவருக்கு சமாதி உண்டு பண்ணினார்  இப்போதும் அச்சமாதியை பூரி சென்றால் தரிசிக்கலாம் ஜெய் ஸ்ரீ  சைதன்ய மகாபிரபு குருமகராஜ் திருவடிக்கு  ஜெய்

திருமங்கையாழ்வார்

இவ்வாறு நம் பாரதத்தில் உள்ள வைணவத் தலங்களை தன் பாட்டால் பட்டியலிட்டவர் யார் தெரியுமா? -108 திவ்விய தேசங்களில் 86 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தார் -பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிரியதிருமடல், பெரியதிருமடல் என்கிற ஆறுபிரபந்தங்களையும் அருளிச்செய்துள்ளார் – 

அவர் ஒன்றும் பிறப்பால் பிராமணன் அல்ல -பிறப்பால் வைணவன் அல்ல -சத்திரிய குலத்தில் பிறந்து -சோழ மன்னனின் சேனாதிபதியாக அமர்ந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளின் எமன்) என்ற பெயர் பெற்றவன் -தேர், யானை, குதிரை, காலால் ஆகிய நால்வகைப் படைகளையும் தலைமை யேற்று பகைவர்களை வென்று _ சோழ மன்னருக்கு பெரும் வெற்றிகளை தேடித்தந்தவன் – சோழ மன்னர் அகமகிழ்ந்து நீலனை திருவாலி நாட்டிற்க்கு மன்னனாக்கி திருமங்கை என்னும் ஊரை தலைநகராக தந்தான் -அவன் தான் திருமங்கையாழ்வார் –

இளம் வயதில் வாலிபமும் வீரமும் பொருந்திய இளைஞராகத் திகழ்ந்தவரின் வாழ்க்கையை ஒரு பெண் திசை திருப்பினாள் -குளத்தில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்தார் -விசாரித்ததில் பெயர் குமுதவல்லி, திருவெள்ளக்குளத்தில் ஒரு வைணவ வைத்தியனின் வளர்ப்பு மகள் என்று தெரிந்தது -நீலன் இவளுடைய அழகால் கவரப்பட்டு வெள்ளக் குளத்திற்கு வந்து அவள் தந்தையிடம் ஆடை ஆபரணங்களைப் பரிசாக வைத்து இவளை எனக்குக் கட்டிக் கொடும் என்று கேட்டார் –

பெண்ணோ பிராமணப் பெண், இவர் கள்ளர் ஜாதி -இருந்தும் தந்தை, பெண்ணுக்கு சம்மதம் என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டார் – பெண்ணைக் கேட்டதில் நான் ஒரு வைணவனுக்குத்தான் வாழ்க்கைப்படுவேன் என்று சொல்லிவிட்டாள் -அவ்வளவுதானே நான் வைணவனாகி விடுகிறேன் என்று திருமங்கை மன்னன் திருநறையூர் நம்பியிடம் சென்று என்னை பரம வைணவனாக்கிவிடும் என்று வேண்டிக் கொள்ள, நம்பியிடமிருந்து வைணவர்கள் தீட்சையில் பெறும் பஞ்ச சம்ஸ்காரங்களான -சங்கு சக்கர முத்திரை, தாச நாமம், திருமந்திரம், நெற்றிக்கு திருமண் ஸ்ரீசூர்ணம், திருவாராதனை நியமங்கள் போன்றவற்றைப் பெற்றார் – திரு வெள்ளக் குளத்துக்கு வந்து இப்போது நான் பரம வைணவனாகிவிட்டேன்; என்னை மணம் செய்வாய் என்று குமுதவல்லியிடம் கேட்க, -அந்தப் பெண் இன்னொரு நிபந்தனை வைத்தாள். ஒரு வருஷம் தினம்தோறும் ஆயிரம் பேருக்கு சோறு போடச் சம்மதமா என்று கேட்டாள் -பரகாலன் விரும்பினதை அடைந்தே தீர்பவர்-

பின்விளைவுகளை யோசியாமல் அதற்கும் சம்மதம் தெரிவிக்க திருமணம் நடைபெற்றது – தினம் ஆயிரம் பேருக்கு சோறு போடும் செலவை சமாளிப்பது ஒரு குறுநில மன்னனுக்குக்கூட கஷ்டமாக இருந்தது -கடுமையான பணத்தட்டுப்பாடு -பரகாலன் ஒரு வினோதமான முடிவெடுத்தார் -வழிப்பறி! செல்வந்தர்களிடமிருந்து பணத்தைப் பறித்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்த அந்தக் காலத்து ராபின்ஹூட் அவர் _

நான்கு தேர்ந்த கூட்டாளிகளை உடன் வைத்துக் கொண்டு வழிப்பறி செய்தார் – அந்தப் பணத்தை வைத்து ஏழை வைணவர்களுக்கு சோறு போட்டார் –  இந்த விந்தையான பக்தனை திருமால் சந்திக்க விரும்பினார் -புதுமணத் தம்பதிகள் போல வேடமிட்டுக் கொண்டு ஆடை ஆபரணங்கள் பளபளக்க திருவாலிக்கு அருகே திருமணங் கொல்லை என்னும் இடத்தில் அரசமரத்தினருகில் பதுங்கியிருந்த திருமங்கை மன்னன் முன் அவர்கள் நடந்து சென்றார்கள் -இன்று நமக்கு பெரிய வேட்டை என்று அத்தம்பதியை சூழ்ந்து கொண்டு கழற்று எல்லா நகைகளையும் என்று கத்தியைக் காட்டி மிரட்டினார் -பகவான் எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்தார் – கால் விரலில் ஒரு ஆபரணத்தைக் கழற்ற முடியவில்லை – பரகாலன் இதையும் விடமாட்டேன் என்ற சொல்லி குனிந்து வாயால் கடித்து துண்டித்து எடுத்தார் –

 ‘சரியான கலியனப்பா நீ’ என்று பகவான் அவனுக்கு கலியன் (பலமுடையவன்) என்று பெயரிட்டார் – பகவானின் நகைகளை மூட்டை கட்டி வைக்க அதை எடுத்துச் செல்ல முயன்றபோது மூட்டை கனமாக இருந்தது –  என்னதான் முயன்றாலும் தரையை விட்டு எடுக்க வரவில்லை -பரகாலன் ‘யாரப்பா நீ மந்திரவாதியோ? என்ன மந்திரம் பண்ணி இதை இத்தனை கனமாக்கினாய், சொல்’ என்று அதட்ட- நாராயணன் அவர் காதில் அஷ்டாக்ஷரம் எட்டு எழுத்துக்கள் கொண்ட ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்தைச் சொன்னார் – ஆழ்வார் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்க்க நாராயணன் தன் திரு உருவில் மனைவியுடன் கருடன் மேல் தரிசனம் தர அவருடைய அஞ்ஞான இருள் அகன்றது – உடனே அவர் பாடிய பாசுரம்

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துயர் இடும்பையில் பிறந்து கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர்தரும் கலவியே கருதி ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமமே 

திருமங்கை ஆழ்வார் பிரபந்தத்தில் – பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல் என்கிற வகைகளில் 1137 பாசுரங்கள் தந்துள்ளார் -திருவரங்கன் ஆலயத்திற்கு சுற்றுச்சுவர் கட்டியவனும் இவனே -எதற்கு இந்த நீண்ட பதிவு தெரிந்த வரலாறு தானே என்று நினைப்பவர்களுக்கு இது கிட்டடத்தட்ட 1200 ஆண்டுகளுக்கு முன்பு இம்மண்ணில் நிகழ்ந்த உண்மை வரலாறு -அவ்வரலாற்றின் சாட்சிகளான 1137 பாசுரங்களும் -84 வைணவத் தலங்களும் இன்றும் இந்த  மண்ணில் இருக்கின்றன – 

இளைய தலைமுறையினரே – காலம் காலமாக இது ஆன்மீக பூமி தான்… ஜீவகாருண்ய தர்மம்தான் இந்த மண்ணின் சொத்து -ஆகவே  இது பெரியாழ்வார் வாழ்ந்த மண் …என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

சந்தானக் குரவர்கள்

அகச் சந்தானக் குரவர்களாக திருநந்திதேவர்; சனற்குமாரர்; சத்ய ஞான தரிசிகள்; பரஞ்சோதி முனிவர் ஆகியோர் போற்றப் பெறுகின்றனர். இனி இப்பதிவில், 13; 14ஆம் நூற்றாண்டுகளில் அவதரித்த; புறச் சந்தானக் குறவர்களான மெய்கண்டார்; அருணந்தி சிவாச்சாரியார்; மறைஞான  சம்பந்தர் மற்றும் உமாபதி சிவாச்சாரியாரைப் பற்றிய சில முக்கியக் குறிப்புகளைச் சிந்திப்போம், 

(மெய்கண்ட தேவர்): 

அவதாரத் தலம் பெண்ணாகடம், திருவெண்காட்டு இறைவரின் அருளால் தோன்றியவர் ஆதலின் இவரின் இயற்பெயர் “சுவேதவனப் பெருமாள்” என்பதாக அமைந்தது. சிறு பிராயத்தில் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்து வருகையில்; பரஞ்சோதி முனிவரால் ஞான உபதேசம் பெற்று, 2ஆம் வயதிலேயே சிவஞானம் கைவரப் பெற்ற பரம குருநாதர். 14 சைவ சித்தாந்த சாத்திரங்களுள் தலையாய சிவஞானபோதத்தின் ஆசிரியர். முத்தித் தலம் திருவெண்ணெய் நல்லூர், குருபூஜைத் திருநாள் ஐப்பசி சுவாதி.

(அருணந்தி சிவாச்சாரியார்)

அவதாரத் தலம் திருத்துறையூர்.  சிறு பிராயத்தினரேயான மெய்கண்ட தேவரால் சிவஞானம் கைவரப் பெற்ற ஆச்சாரியர். ‘அருள்நந்தி சிவம்’ என்பது மெய்கண்டார் அளித்தருளிய தீட்சா நாமம். 14 சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ‘சிவஞானசித்தியார் மற்றும் இருபா இருபஃது’ ஆகிய இரு சாத்திரங்களின் ஆசிரியர். முத்தித் தலம் திருத்துறையூர். குருபூஜைத் திருநாள் புரட்டாசி பூரம். 

(மறைஞான சம்பந்தர்)

அவதாரத் தலம் பெண்ணாகடம், சாமவேத மரபினர். அருணந்தி சிவாச்சாரியாரினால் சிவஞானம் கைவரப் பெற்ற ஆச்சாரியர். தில்லைக்கு அருகிலுள்ள காளாஞ்சேரி எனும் சிற்றூரில் வாழ்ந்திருந்தார் (தற்கால வழக்கில் சிங்காரத் தோப்பு). காளாஞ்சேரியே இவரின் முத்தித் தலமாகவும் போற்றப் பெற்று வருகின்றது. உமாபதி சிவாச்சாரியாரின் ஞானாசிரியர். 

14 சைவ சித்தாந்த சாத்திரங்களுள் இவரின் நூல்கள் இடம்பெறவில்லை எனினும் உமாபதியார் அருளியுள்ள 8 சாத்திரங்களும் ‘குருநாதரான மறைஞான சம்பந்தரின் ஞானஉபதேசப் பிழிவே’ என்று சமயச் சான்றோர் தெளிவுறுத்துவர். குருபூஜைத் திருநாள் ஆவணி உத்திரம்.

(உமாபதி சிவாச்சாரியார்)

அவதாரத் தலம் தில்லை. தில்லை வாழ் அந்தணர் மரபில் தோன்றிய அருளாளர், பொன்னம்பலம் மேவும் சிற்சபேசப் பரம்பொருளைப் பூசிக்கும் பேறு பெற்றவர். மறைஞான சம்பந்தரினால் சிவஞானம் கைவரப் பெற்ற ஆச்சாரியர், குருநாதரின் மேன்மைகளைத் தம்முடைய நூல்களின் பல பகுதிகளில் பதிவு செய்து போற்றியுள்ளார். 

14 சைவ சித்தாந்த சாத்திர நூல்களுள் 8 சாத்திரங்களின் ஆசிரியர் (சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம்). முத்தித் தலம் தில்லை. குருபூஜைத் திருநாள் சித்திரை ஹஸ்தம். 

*நன்றிகள் திரு தேவராஜன் நடராஜன் ஜயா அவர்கள்*

ஹயக்ரீவ மட்டி

 ஸ்ரீ வாதிராஜரின் ஸ்ரீ மடத்தை ஒட்டி தனியார் ஒருவருக்குச் சொந்தமான பரந்த நிலப்பரப்பு இருந்தது.அதன் உரிமையாளர் கடலையை விதைத்திருந்தார். அது செழிப்பாக வளர்ந்திருந்தது,ஒரு நாள் காலையில், உரிமையாளர் நிலத்தைப் பார்வையிட வந்தபோது, ஒரு பகுதியில் வளர்ந்திருந்த பயிர்கள் சிதைவடைந்து அலங்கோலமாக இருந்தன.கவலையுடன் வீடு திரும்பிய உரிமையாளர், மறு நாள் காலையிலும் போய்ப் பார்த்தார்.அன்றும் மேலும் சில பகுதிகள் சேதம் அடைந்திருந்தன.

‘எப்படியும் இன்று இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று நினைத்த உரிமையாளர், அன்று இரவு நேரத்தில் அங்கேயே ஒரு பக்கத்தில் மறைவாகக் காத்திருந்தார்.சற்று நேரத்தில்… ஸ்ரீ வாதிராஜரின் ஸ்ரீ மடத்தில் இருந்து, கண்ணைக் கவரும் வெள்ளை நிற குதிரை ஒன்று வெளிவந்தது.அது நேராக வயலை அடைந்தது. கடலைச் செடிகளைச் சேதப்படுத்தியது.இதைக் கவனித்த நிலத்தின் உரிமையாளர் குதிரையை விரட்டினார்.அந்தக் குதிரை அவரிடமிருந்து தப்பித்து ஓடி ஸ்ரீ மடத்துக்குள் புகுந்தது.வீடு திரும்பிய உரிமையாளர் மறு நாள் காலையில், ஸ்ரீ வாதிராஜரிடம் போய் நடந்ததை விவரித்து, நியாயம் கேட்டார்.‘‘மடத்தில் அப்படிப்பட்ட குதிரை எதுவும் கிடையாதே! நிஜமாகத்தான் சொல்கிறாயா?’’ எனக் கேட்டார் ஸ்ரீ வாதிராஜர்.

‘‘நானே, என் இரண்டு கண்களாலும் பார்த்தேன் ஸ்வாமி! எதற்கும், இன்று இரவு மறுபடியும் பார்த்து விட்டு, நாளை காலையில் வந்து சொல்கிறேன் ஸ்வாமி!’’ என்ற உரிமையாளர், ஸ்ரீ வாதிராஜரை வணங்கி விடை பெற்றார்.அன்று இரவும், அதே வெள்ளை குதிரை மடத்திலிருந்து வெளி வந்தது.வழக்கம் போல் நிலத்தில் புகுந்து கடலைச் செடிகளைத் தின்று சேதப்படுத்தியது.பிறகு முந்தைய நாள் போலவே ஸ்ரீ மடத்துக்குள் நுழைந்தது.ஸ்ரீ மடத்தின் வாயில் வரை அதை துரத்தி வந்த உரிமையாளரால் அன்றும் பிடிக்க முடியவில்லை.எனவே, மறு நாள் பொழுது விடிந்ததும் ஸ்ரீ வாதிராஜரின் முன்னால் வந்து நின்றார்‘‘ஸ்வாமி! நேற்றிரவும் என் கண்ணாரக் கண்டேன்.வெள்ளை வெளேர் என்ற குதிரை ஒன்று இந்த ஸ்ரீ மடத்தில் இருந்து வெளியே வந்தது.எனது நிலத்தில் புகுந்து செடிகளை நாசப்படுத்தியது. விடாமல் துரத்தி வந்த என் கைகளில் அகப்படாமல், அது ஸ்ரீ மடத்துக்குள் நுழைந்து விட்டது!’’ என்றார் உரிமையாளர்.ஸ்ரீ வாதிராஜர், ‘‘நான் நேற்றே சொன்னேன். ஸ்ரீ மடத்தில் குதிரை கிடையாது. ஆனால் நீயோ, இப்படி சொல்கிறாய். இதற்கு என்ன பதில் சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை!’’ என்றார்.

தான் சொன்னதையே மீண்டும் வலியுறுத்திய நில உரிமையாளர், ‘‘ஸ்வாமி! ஏற்கெனவே என் நிலத்தில் நிறையச் செடிகள் பாழாகிவிட்டன. இனிமேலும் இழப்பு வந்தால் என்னால் தாங்க முடியாது ஸ்வாமி!’’ என்று மன்றாடினார்.அவருக்கு ஆறுதல் சொன்ன ஸ்ரீ வாதிராஜர், ‘‘சரி… உனது வார்த்தையை நான் நம்புகிறேன். நீ போய் உனக்கு எவ்வளவு சேதமாகியுள்ளது என்று மதிப்பிட்டுச் சொல்.இங்கிருந்து குதிரை வருகிறது என்று நீ சொல்வதால், அந்த இழப்பை நானே ஈடு செய்கிறேன்.உண்மையில் என்ன நடக்கிறது என்பது ஸ்வாமிக்குத்தான் வெளிச்சம்!’’ என்றார்.‘நஷ்டத்தை ஈடுகட்ட ஒரு வழி பிறந்தது!’ என்ற ஆறுதலுடன், நிலத்தை நோக்கிப் போனார் உரிமையாளர்.ஆனால், போனதை விட வெகு வேகமாகத் திரும்பி ஓடி வந்தார் உரிமையாளர்.

ஸ்ரீ வாதிராஜரை வணங்கிய அவர், ‘‘ஸ்வாமி… ஸ்வாமி… என் கண்கள் கூசுகின்றன.எனது நிலத்தில் அற்புதம் விளைந்திருக்கிறது.சேதமாகியிருந்த பகுதியில் எல்லாம் இப்போது தங்கக் கடலைகள் இறைந்து கிடக்கின்றன.ஸ்வாமி! தங்கள் மடத்துக் குதிரை சாதாரணமானதல்ல, தெய்வீகமானது!’’ என்று ஆச்சரியத்துடன் கூறினார்.எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட ஸ்ரீ வாதிராஜர், பின்னர் தியானத்தில் அமர்ந்தார்.வெள்ளை குதிரையாக வந்தது ஸ்ரீ ஹயக்ரீவரே என்பதைப் புரிந்து கொண்டார்.அவரது தியானம் கலைந்தது.‘‘ஸ்வாமி! தெரியாத்தனமாக வெள்ளைக் குதிரையை விரட்டி விட்டேன்.அற்புதம் செய்த அந்தக் குதிரையை இன்று இரவில் மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறேன்!’’ என்றார் நில உரிமையாளர்.

‘‘இனிமேல் உன்னால் அந்தக் குதிரையைப் பார்க்க முடியாது. பார்க்க முயன்றால், உன் பார்வை போய்விடும்!’’ என்று எச்சரித்தார் ஸ்ரீ வாதிராஜர்.‘‘எனது பார்வை முற்றிலுமாகப் போனாலும் பரவாயில்லை. அந்த குதிரையை நான் பார்த்தே ஆக வேண்டும் ஸ்வாமி!’’ என்ற நில உரிமையாளர், ஸ்ரீ வாதிராஜரிடம் விடைபெற்று வீடு திரும்பினார்.இரவு நேரத்தில் தனது நிலத்துக்குப் போய், குதிரையின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார் நில உரிமையாளர்.வழக்கம் போல் குதிரை வந்தது. அதைப் பார்த்த சற்று நேரத்துக்குள் அவரது பார்வை பறிபோனது. அதற்காக அவர் கவலைப்படவில்லை.அதற்கு பதிலாக, ‘குதிரையாக தினமும் வந்தது தெய்வமே!’ என்பதை உணர்ந்து மெய்மறந்து அப்படியே உட்கார்ந்திருந்தார்

அவரது உன்னதமான பக்தியை கண்ட ஸ்ரீ வாதிராஜர், நில உரிமையாளருக்கு மீண்டும் பார்வை தருமாறு  ஸ்ரீ ஹயக்ரீவரிடம் வேண்டிக்கொண்டார்.ஸ்வாமியின் அருளால் உரிமையாளருக்கு கண் பார்வை திரும்ப கிடைத்தது.‘‘ஸ்ரீ மடத்தில் இருந்து வெளிப்பட்ட தெய்வக் குதிரையின் திருப்பாதங்கள் பதிந்த எனது நிலம், இனிமேல் ஸ்ரீ மடத்துக்கே சொந்தம்’’ என்று சொல்லி, தனது நிலத்தை ஸ்ரீ மடத்துக்கு தானமாக கொடுத்தார் அவர்.அன்று முதல், அந்த நிலத்தில் இருந்து விளையும் கடலையை வேக வைத்து வெல்லம், தேங்காய் துருவல் ஆகியவற்றை கலந்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்யும் பழக்கத்தை உண்டாக்கினார் ஸ்ரீ வாதிராஜர்.

*இது ஹயக்ரீவ மட்டி (Hayagriva Maddi) எனப்படும்.*ஸ்வாமிக்காக தயாரிக்கப்பட்ட அந்த நைவேத்தியத்தை ஒரு தட்டில் வைத்து, இரண்டு கைகளாலும் பிடித்து தன் தலைக்கு மேல் வைத்து கொள்வார் ஸ்ரீ வாதிராஜர்.அவருக்குப் பின்புறமாக  ஸ்ரீ ஹயக்ரீவர், வெண்மையான குதிரை வடிவில் வந்து, தனது முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி ஸ்ரீ வாதிராஜரின் தோள்களின் மீது வைத்தபடி நைவேத்யத்தை முழுவதுமாக உண்ணாமல் கொஞ்சம் மீதி வைப்பார்.அந்த மீதியை ஸ்ரீ வாதிராஜர் உண்பார்.இது அன்றாட நிகழ்ச்சி.

ஸ்ரீ வாதிராஜரிடம் பொறாமை கொண்ட ஒரு சிலர், ஒரு நாள் நைவேத்தியத்தில் விஷம் கலந்தனர்.‘வழக்கப்படி, மீதியை  ஸ்ரீ வாதிராஜர் உண்பார். அவர் கதை முடிந்து விடும்!’ என்று நம்பினர்.ஸ்வாமி, அன்று முழுவதுமாக உண்டு விட்டார். ‘ஏதோ நடந்திருக்கிறது!’ என்று ஸ்ரீ வாதிராஜர் நினைத்தார்.அப்போது குதிரை (ஸ்வாமி)யும் மயங்கிக் கீழே விழுந்தது.இறைவனை தியானித்த ஸ்ரீ வாதிராஜர், வாதிராஜகுள்ளா எனும் ஒரு வகைக் கத்தரிக் காயை வேக வைத்து குதிரைக்கு கொடுத்தார்.விஷம் நீங்கித் துள்ளிக் குதித்து எழுந்தது குதிரை.ஸ்ரீ வாதிராஜர் செய்த ‘ஹயக்ரீவ மட்டி ’  (Hayagriva Maddi or simply Hayagreeva) எனும் அந்த நைவேத்தியத்தைத் தயாரித்து  

ஸ்ரீ ஹயக்ரீவரின் அவதார நாளான ஆவணி மாத திருவோணத்தன்று  ஸ்ரீ ஹயக்ரீவருக்கு நைவேத்தியம் செய்து வழிபட்டால் ஆயுள், ஆரோக்கியம், கல்வி, செல்வம் ஆகியவற்றைப் பெற்று மேன்மை அடையலாம்.மாதந்தோறும் வரும் திருவோணத்தன்று   ஹயக்ரீவ மட்டியைத் தயாரித்து அவருக்கு நைவேத்தியம் செய்து வழிபடுபவர்கள், எல்லா வளங்களையும் பெற்று மேன்மை அடைவார்கள்.

இளையான்குடிமாறநாயனார் புராணம்

இளையான்குடியென்னும் ஊரிலே, வேளாளர் குலத்திலே, எத்தொழிலினும் சிறந்த வேளாண்மையால் வரும் குற்றமற்ற அளவிறந்த செல்வத்தையும், சிவனடியார்கண் மேலே முழுமையும் பதிந்த அன்பு கொண்ட சிந்தையையும் உடையவராகிய மாறனார் என்பவர் ஒருவரிருந்தார். அவர் தம்முடைய கிருகத்துக்கு வரும் சிவபத்தர்கள் எந்த வருணத்தாராயினும், மெய்யன்போடு அவர்களை எதிர்கொண்டு, அஞ்சலிசெய்து, இன்சொற்களைச் சொல்லி, வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்து, கரகநீர் கொண்டு அவர்கள் திருவடிகளை விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து, உள்ளும்பருகி, அத்திருவடிகளை மெல்லிய வஸ்திரத்தினாலொற்றி, ஆசனத்திலிருத்தி, சைவாகம விதிப்படி அருச்சித்து நமஸ்கரித்து, பின்பு கைப்பு, புளிப்பு, தித்திப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையையுடையனவாய், உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை அவரவர் பிரீதிப்படி திருவமுதுசெய்விப்பார். 

இப்படித் தினந்தோறும் மாகேசுரபூசை பண்ணுதலாகிய சிவபுண்ணியத்தினாலே செல்வம் அபிவிருத்தியாக, அவர் குபேரனை ஒத்து வாழ்ந்திருந்தார். அப்படியிருக்குங் காலத்திலே, சிவபெருமான், அவ்விளையான்குடிமாறநாயனார் இந்தச் செய்கையைச் செல்வம் வந்தகாலத்திலன்றி வறுமை வந்த காலத்தினும் தளராது செய்யவல்லவர் என்பதையும், தாம் நல்லோர்களுக்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின் பொருட்டே என்பதையும், அந்நயம் இறுதியிலேயே பலிக்கும் என்பதையும், அக்கருத்தறியாது அதற்குள்ளே புண்ணியஞ் செய்த நமக்குக் கடவுள் இடர்செய்தாரே என்று தம்மை நோதல் பழுதாம் என்பதையும், பிறர்க்குத் தெரிவித்து உய்விக்கும்பொருட்டுத் திருவுளங்கொண்டு, அந்நாயனாரிடத்திலே உள்ள செல்வமெல்லாம் நாடோறும் சுருங்கி வறுமை யெய்தும்படி அருள்செய்தார். 

அப்படிச் செல்வம் சுருங்கவும், நாயனார் மாகேசுரபூசையிலே பதிந்த தம்முடைய மனம் சிறிதும் சுருங்குதலின்றி, தம்மிடத்துள்ள நிலங்கள் முதலியவற்றை விற்றும், தம்மைக் கூட விற்று இறுக்கத்தக்க அவ்வளவு கடன்களை வாங்கியும், முன்போலவே தாஞ்செய்யும் திருப்பணியை விடாது செய்து வந்தார்.

அவர், மழைக்காலத்திலே மழைபெய்யும் ஒருநாள் இரவில் நெடுநேரம் எதிர்பார்த்திருந்தும், ஒருவருடைய உதவியும் இல்லாமல், பகன்முழுதும் போசனஞ்செய்யாமையால் பசி அதிகப்பட்டு; வீட்டுக்கதவைப் பூட்டிய பின்பு; திருக்கைலாசபதியானவர் சைவவேடங்கொண்டு எழுந்தருளிவந்து, கதவைத் தட்டி அழைக்க; நாயனார் கதவைத் திறந்து, அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய், மழையினால் நனைந்த அவருடைய திருமேனியை வஸ்திரம் கொண்டு துடைத்து, இருத்தற்கு இடங் கொடுத்து, அவருக்கு அமுதூட்டல் வேண்டும் என்னும் ஆசை மிகுதியால் தம்முடைய மனைவியாரை நோக்கி, “இந்தச் சைவர் மிக பசிகொண்டு வந்திருக்கின்றார். நமக்கு முன்னமே போசனத்துக்கு ஒன்றுமில்லை. 

ஆயினும், இவருக்கு எப்படியும் அன்னங்கொடுக்கவேண்டுமே; இதற்கு யாது செய்வோம்” என்றார். அதற்கு மனைவியார் “வீட்டிலே ஒரு பதார்த்தமும் இல்லை. அயலவர்க்கும் இனி உதவமாட்டார்கள். நெடுநேரம் ஆயிற்று. அரிசிக்கடன் கேட்கபோவதற்கு வேறிடமும் இல்லை. பாவியாகிய நான் இதற்கு யாது செய்வேன்” என்று சொல்லி, பின்பு “இன்று பகற்காலத்திலே வயலில் விதைக்கப்பட்ட ஈரத்தால் முன்னமே முளைகொண்டிருக்கின்ற நெல்லை வாரிக் கொண்டு வந்தால், இயன்றபடி அன்னஞ் சமைக்கலாம். இதுவேயன்றி, வேறொருவழியும் அறியேன்” என்று சொல்லித் துக்கித்தார். 

இந்த வார்த்தை செவிப்புலப்படுதற்குமுன், இளையான்குடிமாறநாயனார் மிக மனமகிழ்ந்து, அதற்கு உடன்பட்டு மிக மழைபொழிகின்ற மகா அந்தகாரமயமாகிய அத்தராத்திரியிலே ஒரு பெரிய இறைகூடையைத் தலையிலே கவிழ்த்துக்கொண்டு, காலினாலே தடவிக் குறிவழியே தம்முடைய வயலிற்சென்று, அதிலே அதிக மழையினால் நீர்மேலே மிதக்கின்ற நென் முளைகளைக் கையினாலே கோலி வாரி, இறை கூடை நிறைய இட்டு, தலையிலே வைத்துச் சுமந்துகொண்டு சீக்கிரம் திரும்பி வந்தார். 

அவரை எதிர்ப்பார்த்துக்கொண்டு வாயிலிலே நின்ற மனைவியார் மனமகிழ்ச்சியோடு அந்த நென்முளையை வாங்கி, சேறு போம்படி நீரினாலே கழுவியூற்றி, பின்பு தம்முடைய பிராணநாயகரை நோக்கி, “அடுப்பிலே நெருப்பு மூட்டுதற்கு விறகு இல்லையே” என்று சொல்ல, அவர் கிலமாயிருக்கின்ற வீட்டின் மேற்கூரையிலுள்ள வரிச்சுக்களை அறுத்து விழுத்தினார். மனைவியார் அவைகளை முறித்து, அடுப்பிலே மாட்டி, நென்முளையை ஈரம் போய்ப் பதமாகும்படி வறுத்து, பின் அரிசியாக்கி, நீர் வார்த்துக் காய்ந்திருக்கின்ற உலையில் அதையிட்டு, சோறாக்கி, தம்முடைய நாயகரைப் பார்த்து, “இனிக் கறிக்கு யாதுசெய்வோம்” என்றார்.

உடனே நாயனார் புறக்கடைத் தோட்டத்திற்குச் சென்று, குழியினின்றும் மேற்படாத சிறுபயிர்களைக் கையினாலே தடவிப் பிடுங்கிக் கொண்டு வந்து, கறி சமைக்கும்படி கொடுக்க; மனைவியார் அவைகளை வாங்கி ஆய்ந்து, நீரினாலே கழுவி, தமது சாமர்த்தியத்தினால் வெவ்வேறு கறியமுது செய்து முடித்து, நாயகருக்கு அமுதும் கறியும் பாகம் பண்ணப்பட்டமையைத் தெரிவித்து, “சைவரை அமுதுசெய்விப்போம்” என்று சொன்னார். நாயகர், நித்திரை செய்பவர்போலக் காட்டிய ஐயருக்குச் சமீபத்திற்சென்று, “சுவாமீ! அமுதுசெய்ய எழுந்தருளும்” என்று சொல்லி அழைக்க; அவர் ஒரு சோதிவடிவமாய் எழுந்து தோன்றினார். 

அதைக் கண்ட இளையான்குடிமாறநாயனாரும் மனைவியாரும் திகைத்து நின்றார்கள். பின்பு பரமசிவன் பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றி, இளையான்குடிமாறநாயனாரை நோக்கி, “அன்பனே! நம்முடைய அடியார்களை அமுதுசெய்வித்த நீ உன்மனைவியோடும் நம்முடைய பதத்தை அடைந்து, பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிரு” என்று திருவாய்மலர்ந்தருளி அந்தர்த்தானமாயினார்.

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ அரவிந்தர் சகாப்தம்

ஸ்ரீ அரவிந்தர் பிறந்து 150 ஆண்டுகள் இன்று பூர்த்தியாகிறது.  இதைக் கொண்டாடும் வகையில் அவருடைய பக்தர்கள் பல்வேறு நிர்மாணத் திட்டங்களை வகுத்து அவற்றை செயல்படுத்தி வருகிறார்கள்.  பகவான் ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும் அதிமானஸ உணர்வை விண்ணிலிருந்து மண்ணிற்கு கொண்டு வருவதற்காக வாழ் நாள் முழுதும் தவமியற்றி வந்தார்கள்.  பொய்மையை விலக்கி வாய்மையைப் புவியில் நிலை நாட்டுவது அந்தத் தவத்தின் முக்கியக் குறிக்கோள்.

இதன் மூலம் மனித குலத்தைச் சூழ்ந்திருக்கும் அசுர இயல்புகள் மங்கி மடிந்து போய் பல புதிய இயல்புகள் உருவெடுத்து மனித குலத்தை தெய்வீக வாழ்க்கையை நோக்கி இட்டுச்செல்லும் என்பது தா ஸ்ரீ அரவிந்தரின் அகோர தவத்தின் நோக்கம்  ஸ்ரீ அன்னை சொல்கிறார்.  உலக வ்ரலாற்றில் ஸ்ரீ அரவிந்தர் கொனுட் வந்தது ஓர் உபதேசமோ மறை ஞான வெளிப்பாடோ அல்ல.  அது இறைவனிடமிருந்து நேரடியாக வந்து இறங்கிய செயற்பாடு

முதன்முதலில் பாண்டிச்சேரியில் 1916 ல் அவரை தரிசித்த பிறகு ஸ்ரீ அன்னை சொன்னது    “ ஆயிரக்கணக்கான மனிதர்கள் அடர்த்தியான இருளில் அழுந்திக் கிடப்பது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.   நேற்று நாங்கள் தரிசித்தவர் புவியில் அவதரிதுள்ள மகான்.   இருள் விலகி அது ஞான ஒளியாக மாறி பரமனுடைய ராஜ்ஜியம் நிச்சயம் புவியில் நிறுவப்படும் என்பது அவர் மூலம்   நிரூபிக்கப்படும் இது திண்ணம்.”

அன்னை மேலும் கூறுகிறார்    “ அதிமானஸ உலகத்தை புவிக்குக் கொண்டு வருவதில்  அவர் வெற்றி அடைந்தார்.  அதை வெளிப்படுத்துவதில் வெற்றியும் பெற்றார்.  அவருடைய உபதேசங்களை ஆழ்ந்து படித்து அவற்றைக் கடைப்பிடிப்பதின் மூலம் அதிமானஸ உலகம் வருவதற்கு நாம் துணை நிற்க வேண்டும்.  “    பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்த பிறகு தாம் தவம் இயற்றுவதற்கு ப்ரென்ச் இந்தியாவில் உள்ள பாண்டிச்சேரிதான் பாதுகாப்பான இடம் என்று உணர்ந்து  ஸ்ரீ அரவிந்தர் கல்கத்தாவில் கப்பல் ஏறியது ஆண்டின் 4 வது மாதமான ஏப்ரல் மாதம்   அவர் பாண்டிச்சேரி துறைமுகத்தை அடைந்து கரை இறங்கியது மாலை 4 மணி.

மறை ஞானத்தில் 4 என்ற எண்ணிற்கு நிறைய தத்துவ குணங்கள் சொல்லப்பட்டுள்ளன   அறம் பொருள் இன்பம் வீடு என்பன   பிரம்மச்சரியம்  இல்லறம் வானப்ரஸ்தம்  சன்யாசம்  என்ற 4 வாழ்வு நிலைகள்.  4 வேதங்கள்  4 அடிப்படைத் தொழில்கல்   4 திசைகள்  இப்படி எத்தனையோ மறை ஞானக் குறியீடுகள் இருப்பதை 4 ம் தேதி வந்து இறங்கிய அவருடைய பாண்டிச்சேரிப் பயணம் வெளிப்படுத்துவதாக அவரது பக்தர்கள் சொல்லுகிறார்கள்.

ஸ்ரீ அரவிந்தரின் நினைவை நெஞ்சில் நிறுத்தி அவருடைய உபதேசங்களை ஊன்றிப் படித்து இயன்ற வரை அவற்றை நம் வாழ்வில் கடைப்பிடிப்பது தான் இந்த 150 வது நினைவு நாளில் பகவானுக்கு நாம் தரும் காணிக்கை.  

ஓம் ஆனந்த மயீ    சைதன்ய மயீ  சத்யமயீ பரமே.  

நன்றி   அமுதசுரபி  

மடப்புரம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள்

ஸ்ரீ குருப்யோ நமஹ!!மடப்புரம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள்!!

 நாம் அனைவரும் பரப்பிரம்மத்தின் சிறிய அணுக்களே.  உயிரினங்களிலே மிகவும் அதிர்ஷ்டமானது மானுடப் பிறவி. மனிதனால் மட்டுமே தெய்வ நிலையை உணர்ந்து அதனுள்ளே அடங்க வாய்ப்பு அதிகம். அதனாலே தேவர்களும் மனிதர்களை நினைத்து பொறாமை படுவதாக பல இதிகாச புராணங்கள் விளக்குகிறது . ஆயினும் மாயையில் சிக்கி பிறப்பு – இறப்பு சுழற்சியில்  தவிக்கும் நமக்கு சில அவதாரத்தின் மூலம் பரப்பிரம்மம் மானிடப் பிறவியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது . 

நம் பாரத தேசத்தில் எண்ணற்ற யோகிகள், சித்தர்கள்,  மகான்கள் சாதுக்கள் , ஞானிகள் தோன்றி நம் தேசத்தை ஆன்ம பூமியாக வைத்திருக்கின்றனர். பலரை நாம் பார்த்தும்,  சிலரை நாம் கேள்வியுற்றும் இருக்கிறோம்.  மகான்களுடன் நேரடித் தொடர்பு கிடைக்கும் பேறு பெற்றவர்கள் மிகவும் பாக்கியசாலிகள் . தொடர்பு கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் மூலம் நம்முள்  இருக்கும் இறை நிலையையும் நாம் உணர வேண்டும்.  இன்று பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய இளவயதிலேயே ஞானத்தை கைவரப்பெற்ற அருணாச்சலம் எனும் மடப்புரம்                                  ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளைப் பற்றி  நாம் அறிந்து கொள்வோம்.

 தோற்றம்:

 திருச்சிராப்பள்ளி மாவட்டம் கீழ் ஆலத்தூர் என்னும் சிற்றூரில் சிவ பக்தர்களான சிவ சிதம்பரம் பிள்ளை -மீனாம்பிகை  தம்பதியர் வாழ்ந்தனர். இவர்கள் மக்கட்பேறு வேண்டி திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் – அருள்மிகு உண்ணாமுலை அம்மனை  தரிசித்து வேண்டினர். அன்று இரவு அவர்களின் கனவில் ஈசன் தானே அவர்களின் பிள்ளையாக பிறப்பதாக கூறினார்.  அதேபோல் பத்து மாதத்தில் ஆண் மகன்  அந்த தம்பதிகளுக்கு பிறந்தான். அருணாச்சலம் என்ற பெயர் வைத்து அன்புடன் வளர்த்தனர்.   இயல்பு நிலைக்கு சற்று மாறுபட்டார்போல் குழந்தை எப்பொழுதும் மௌனமாகவும், தியானத்திலும்  இருப்பதைப் பார்த்து அன்னை-தந்தைக்கு கவலை அதிகமாயிற்று .  குழந்தையின் நிலையை எண்ணி மீண்டும் அருணாச்சலேஸ்வரரை    வேண்டினர். ஒருநாள் ஈசன்  சன்னியாசி தோற்றத்தில் அவர்கள் வீட்டுக்கு வந்து குழந்தையிடம் பேசலானார். சாது அன்னை – தந்தையை  குழந்தையிடம் பேச சொன்னார். அருணாச்சலத்தின் தந்தை ” என்ன செய்து கொண்டிருக்கிறாய்” என்று சிறுவனிடம் கேட்க  ” சும்மா இருக்கிறேன்” என்ற பதிலை முதன்முதலாக அருணாச்சலம் திருவாய்மொழிந்திருக்கிறார்.  துறவி இப்பொழுது நேரடியாக சிறுவனைப் பார்த்து “நீ யார்?” என்ற  வினா எழுப்ப அதற்கு “நீயே நான் , நானே நீ!” என்ற உண்மையை உரைத்தார் . ஈசனே மகனாக இருப்பதை அன்னை தந்தையர்  புரிந்துகொண்டனர் . அவர்களுக்கு ஆசி வழங்கி அக்கணமே சன்னியாசி வடிவில் இருந்த ஈசன் அங்கிருந்து மறைந்தார். 

 அந்த நாள் முதற்கொண்டு அருணாச்சலத்தை அவரின் அன்னை தந்தை தெய்வக் குழந்தையாக பார்க்கத் தொடங்கினர்.   தங்களின் இளைய மகனை பள்ளிக்கு அனுப்ப ஆயத்தமான தந்தையிடம் ,  தன்னையும் பள்ளியில் சேர்க்கும் படி அருணாச்சலம் கேட்டார். அவரின் திரு உள்ளத்தை அறிந்து அருணாச்சலத்தை பள்ளியில் சேர்த்தனர்.

சுவாமிகளின் அற்புதங்களில் சில:

பள்ளியில் படிக்க சேர்ந்த அருணாச்சலம்  தனக்கு முன் சுவடிகளை வைத்துக் கொண்டு, கண்களை மூடி தியானத்தில் இருந்தார். அப்போது அவரது ஆசிரியர்   சிறுவன் தூங்குவதாக எண்ணிக்கொண்டு  அருணாச்சலத்திடம் கேள்வி  கேட்டார், “படித்ததைச் சொல், கேட்கிறேன்” என்று கேட்க.  தன் முன்னால் இருக்கும் சுவடிகளை  பார்க்காமலேயே பாடங்கள் அனைத்தையும் கடகடவென ஒப்புவித்தார் அருணாச்சலம். ஒருமுறை ஆசிரியரின் மகன் கீழே விழுந்து கை முறிந்ததை தன் ஞான திருஷ்டியால் அறிந்து, அவர்களை உடனே தங்கள் வீட்டுக்கு செல்லுமாறு பணித்தார். அதைப்போல் விழுந்த சிறுவனையும்  நலம் பெறச் செய்து அருளியுள்ளார். அது முதற்கொண்டு ஆசிரியர்களுக்கும் அருணாச்சலத்தின் மீது  நன் மதிப்பு உண்டாயிற்று. மூன்று மாத காலமே  தன் பள்ளிப் படிப்பை தொடர்ந்தார். இவரின் அருளாற்றலை  பார்த்த மக்கள் ‘ தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள்’ என்று  அழைக்க ஆரம்பித்தனர்.

ஒரு முறை ஆராவமுதன் என்னும் வைணவர் தன் மனைவி லட்சுமியுடன் தரிசிக்க வந்தார்.  திருமணமாகி பல வருடங்களாகியும் மக்கட் செல்வத்திற்காக காத்துக்கொண்டிருந்தனர். இத்தம்பதியினரின் கனவில் ஸ்ரீ அரங்கநாதர் பெருமாள் தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளின்  உருவ அடையாளத்தை கூறி, இவரை சென்று தரிசித்தால் குழந்தை பிறக்கும் என்று  வழிகாட்டினார். அவ்வாறே தம்பதியர் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளைத் தரிசித்து ஆசி பெற்றனர். ஒரு வருடத்தில் அழகான ஆண் மகவு பிறந்தது. அக்குழந்தையையும் ஒருமுறை ஒரு பேராபத்திலிருந்து (தீவிபத்தில் இருந்து) ஸ்ரீ தஷிணாமூர்த்தி சுவாமிகள்  காப்பாற்றியுள்ளார். 

ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி சுவாமிகள்  நடைபயணமாக பல ஊர்களுக்கு, (திருப்பதி, சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை) சென்று  பல அற்புதங்களை நிகழ்த்தினார். திருப்பதியில் இருந்து புறப்பட்டு சென்னையை அடைந்தவர் திருவொற்றியூரில் பட்டினத்தாரின் சமாதி அருகே தங்கினார். அங்கும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டும் வரத்தை அருளினார். புத்தி ஸ்வாதீனம் இல்லாத ஒரு பெண்ணுக்கு மன நோயை போக்கி அருள் புரிந்தார். 

திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டவர் , நாகப் பட்டினத்தில் சில காலம் தங்கினார்.  அங்கே வசித்த அன்பர் ஒருவர், ஸ்வாமிகளுக்குத் தினமும் தன் வீட்டில் இருந்து உணவு உபசரித்தார். தான் கொடுக்க முடியாத ஒரு நாளில் தன் மகனிடம் சுவாமிகளுக்கு உணவு கொடுத்து அனுப்பினார். அந்தச் சிறுவன் உணவை எடுத்துக் கொண்டு வரும்போது கருநாகம் தீண்டியது. மூர்ச்சித்ததான். தன் அகக் கண்ணால் இக்காட்சியை  கண்ட ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் அவ்விடத்திற்கு கீரியை அனுப்பி நாகத்தை துரத்த செய்தார். அவனின் பெற்றோர்கள் சிறுவனை அவரிடம் கொண்டு வர   அந்தப் பையனின் தலையை தடவி உயிர்த்தெழச் செய்தார். 

இப்படி பல இடங்களிலும் தன்னை நாடி வந்த அன்பர்களுக்கு,  அற்புதங்கள் பல செய்து அருளிய சுவாமிகள், திருவாரூரை வந்தடைந்தார். அங்கே மடப்புரம் பகுதியில், ஓடம்போக்கி ஆற்றின் கரையில் அமர்ந்து, பல நாட்கள் நிஷ்டையில் இருந்தார். ஶ்ரீதட்சிணாமூா்த்தி ஸ்வாமிகள் நிஷ்டையில் அமா்ந்த எட்டாம் நாள், அதாவது 1837ம் வருடம் ஆவணி மாதம் 12 ஆம் நாள் புதன்கிழமை உத்திரம் நட்சத்திரத்தன்று  பகல் 12.00 மணிக்கு பரபிரம்மத்துடன்  இரண்டறக் கலந்தாா். அப்போது அமிா்தவா்ஷம் போல சந்தன மழைத் துளிகள் சுவாமிகளின் மீது விழுந்த அதிசயம் நடந்தது.  இன்றும் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிகள் அரூபமாக இருந்து தன்னை நாடி வரும் பக்தர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி வரும் அதிசயம் நடக்கிறது.

ஒருவரின் ஜாதகத்தில் குரு வலுவிழந்து காணப்பட்டால் (நீசம் , அஸ்தங்கதம் ஆகியிருந்தால்)/ குரு-கேது சேர்க்கை இருந்தால்,  குரு வடிவமாகிய ஞானிகள், மகான்கள் சித்தர்களை, தரிசித்து வந்தால்  வாழ்வில் நலம் பயக்கும் . குருவாகி  வழிநடத்துவர். 

 ஜாதகத்தில் சனி-கேது சேர்க்கை இருந்தால் , சித்தர்களையும் அவர்களின் ஜீவ சமாதியையும் வழிபட்டு வந்தால், வாழ்வில் ஏற்றத்தைத் தரும்.

குறிப்பு

ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி சுவாமிகளின் மடாலயம் இருக்கும் இடம்:

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் மடப்புரம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளின் ஜீவசமாதி உள்ளது. 

பட்டினத்தார்

பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்றும் கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர்.

இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர்கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர்.பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது.

பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர்.தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.

பட்டினத்தடிகளின் பாடல்

இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே

ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே;

பருத்த தொந்தி

நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு

தம்மதென்று தாமிருக்கும் தாம்

மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து

வேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப்

பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை

பித்தானால் என்செய்வாள்

பின்

ஓன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம்

அன்றென்றிரு பசித்தோர் முகம்பார்

நல்லறமும் நட்பும்

நன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கு இட்டபடி

என்றென்றிரு மனமே உனக்கு உபதேசம் இதே

நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு

பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை

அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை

அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு

சுற்றத்தை

வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு

வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு

நெஞ்சே உனக்குபதேசம் இதே…

நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி

நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்

பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போலப்

புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்

கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே

தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன்  விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இன்றும்  காணலாம் 

வேங்கடகவி

வேங்கடசுப்பையரே! யாரைக் காண வேண்டுமென இத்துணைக் காலம் பாடினாயோ! அவன் நான் தான்’’  என்ற கண்ணன்   நான்  கண்ணனைப் பார்க்காமல் அன்னம் உண்ணமாட்டேன் என்று சில காலங்களாகவே ஆகாரம் உண்பதையே  முற்றுலுமாக தவிர்த்து வந்தார் ஊத்துக்காடு வேங்கடகவி.

இதன் காரணமாக உடல் மெலிந்து கண்கள் சொருகி பார்வை மங்க ஆரம்பித்தது. பிரதிக்க்ஷனம் செய்யக் கூட அவரால் முடியவில்லை.

தன் முழங்கால் வாயிலாகவே மிகவும் சிரமப்பட்டு ஒரு பிரதிக் பிரதிக்க்ஷனம் செய்து முடித்தார். அடுத்த பிரதிக்க்ஷனம் செய்ய முடியவில்லை.

தன் பிராணன் இன்றுடன் பிரியப் போவதை உணர்ந்தார். இன்று எப்படியாவது பாடி கண்ணனை வரவழைத்துவிடலாம் என்றெண்ணி என்ன பாடலாம் என சிறிது யோசித்து பின் தாமதமில்லாமல் ‘அலைபாயுதே கண்ணா!’ என்று பாட ஆரம்பித்துவிட்டார்.

அந்த பாடல் முழுநிறைவு தருவாயை நெருங்கிவிட்டது. (நீங்கள் இனி எப்பொழுது இந்த பாடலைக் கேட்டாலும் இந்த உணர்வுடனே அந்த பாட்டில் வரும் வார்த்தைகளைக் கேளுங்கள். உயிர் பிரியும் தருவாயில் தான் பாடினார் என்று உங்களுக்கு புரிய வரும்.) 

ஆனாலும் கண்ணன் வரவில்லை. மெய்மறந்து தன் தொடைகளில் தாளம் போட்டுக்கொண்டே பாடிக் கொண்டிருந்தார் வேங்கடகவி.

திடீரென்று ஜவ்வாது மனமும், நாகலிங்க பூ வாசனையும், குளிர்ந்த காற்றும் அவர் மேனியில் பட ஆரம்பித்தது. அச்சமயத்தில் அவர் பார்வை முற்றிலுமாக பறிபோய்விட்டது. ஆனாலும் தான் பாடுவதை நிறுத்தவில்லை.

முழு பலத்தைக் கூட்டி சங்கீதத்தைக் கூட பாட முடியவில்லை. தொடையில் தாளம் போட முடியாதபடி கை இடறியது. ஏதோ ஒரு குழந்தை மடியில் படுத்திருப்பது போன்று உணர்வு தோன்றியது. அப்பா யாரது?

நான் கண்ணனைக் காண வேண்டுமென்று வேகத்துடன் பாடிக் கொண்டிருக்கின்றேன். அந்தக் குழந்தையிடமிருந்து பதில் இல்லை, மீண்டும் மீண்டும் கேட்டார், பதில் இல்லாத காரணத்தினால் சற்றே சினம் வந்து அந்தக் குழந்தையைக் கீழே தள்ளிவிட்டார்.

உடனே அந்தக் குழந்தை இதழ்களை பிரித்து பேசத் தொடங்கியது. வேங்கடசுப்பையரே! யாரைக் காண வேண்டுமென இத்துணைக் காலம் பாடினாயோ! அவன் நான் தான் என்னை நன்றாகப் பார்! என்றார்.

கண்ணா! என்று விழவும் சக்தியில்லாமல் கண்ணனைப் பார்த்து, என்னுடைய உடலுறுப்புகள் அனைத்தும் சரியாக இயங்கக் கூடிய காலகட்டத்தில் நீ காட்சி தரவில்லை. இப்பொழுது என் பலமும் மனபலமும் சோர்ந்தபிறகு வந்திருக்கிறாயே கண்ணா!

உன்னை கையெடுத்துக் கூட வணங்க முடியவில்லை என்று கூறிக் கொண்டிருக்கும் போது வேங்கடகவியின் உடலிலிருந்து உயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிந்து கொண்டிருந்தது. 

அந்த உயிரை முழுவதும் பிரியவிடாமல் கிருஷ்ணன் அனுக்கிரகித்து, பக்தா! உன் வாழ்நாள் முழுவதையும் நான் வருவேன் என்று என் பொருட்டு உன் காலங்களைக் கழித்தாய்.

அப்படிப்பட்ட உயர்ந்த பக்தனாகிய உன்னை பூலோகத்தில் இறக்கவிடமட்டேன் என்று தன்னுடன் வேங்கடகவியை அழைத்து தன் இருப்பிடமான பிருந்தாவனத்திற்கு சென்றார்.

பாடல் 

அலைபாயுதே கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே

உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்

அலைபாயுதே கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே

உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்

நிலை பெயராது சிலை போலவே நின்று

நிலை பெயராது சிலை போலவே நின்று

நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா

என் மனம் (அலைபாயுதே)

ஸ்ரீ அடிமுடி சித்தர்

திருஅண்ணாமலை கிரிவலப்பாதையில் மகான் ஒருவர் குடில் அமைத்து தமதுசீடர்களுடன் தவம் செய்துவந்தார். இவரின் சீடர்களில் அடிமுடி சித்தரும்  ஒருவர். இவர் எளிமையான தோற்றம் கொண்டவர், சிவனடியார்களுக்கு  உதவுவதையே பணியாக கொண்டவர்.பக்தர்களின் வசதிக்காக அடிமுடி சித்தர் தனது குருவிற்கு பணிவிடை செய்த காலம் தவிர மற்றநேரங்களில் பக்தர்களுக்காக கிரிவலப்பாதையை துப்புரவு செய்து வந்தார். இதனை கண்ட அருகில் உள்ளகுடில்களில் இருந்த சிவனடியார்களும், சில தொழிலாளர்களும் தாமாக முன்வந்து இந்த ஆன்மீகபணியை செய்துவந்தனர். ஆனால், தன்னுடன் இணைந்து பணியாற்றும் தொழிலளர்களுக்கு துப்புரவு பணிசெய்தஇடங்களில் இருந்து குப்பையை தன கரங்களில் எடுத்து அளிப்பார், கைவிரித்து அவர்கள் பார்க்கும் பொழுது பணமாக இருக்கும். இவ்வாறாக சித்தர் பெருமானின் அற்புதங்கள் ஏராளம்.

திருஅண்ணாமலையில் உள்ள அரியவகை மூலிகைகளை கொண்டு தன்னை நாடி வரும் அன்பர்களின் நோய்களை குணமாக்கினார். தான் ஜீவசமாதி அடையும் காலம் வந்துவிட்டதை உணர்ந்த அவர் தனசீடர்களை அழைத்து “நான் தவத்தில் ஆழ்ந்தவுடன் என் உடலை தொடாமல் கால் பெருவிரல்இரண்டிலும் வைக்கோல் கயிற்றால் கட்டி இழுத்து செல்லுங்கள் எவ்விடத்தில் இக்கயிறு அறுந்துவிடுகிறதோ அங்கேஎன்னை அடக்கம் செய்யுங்கள்” என்று கூறி ஜீவசமாதி அடைந்தார்.பின்பு அவர் கூறியவாறு , வைக்கோல் கயிற்றால் கட்டி கிரிவலப்பாதையில் அவர் உடலை இழுத்துசெல்லும்போது  அடிஅண்ணாமலை கவுதம மகரிஷியின் ஆசிரமத்திற்கு எதிரில் கயிறு அறுந்ததால் சித்தரை அவ்விடத்திலேயே அடக்கம் செய்தனர். சிலநாட்களுக்கு பின்பு சித்தரின் ஜீவசமாதி உரிய பராமரிப்பு இல்லாமல் பாம்பு புற்றாக மாறியது.இந்நிலையில் கிரிவலம் வந்த சிவனடியார் ஒருவருக்கு சற்று தூரத்தில் ஜோதி வடிவில் ஓர் ஒளிப்பிழம்பு தென்ப்பட்டது. அவ்விடத்தை நோக்கி சென்றபோது அங்கே மிகப்பெரிய பாம்பு புற்று ஒன்றுஇருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தார். மேலும் அடிமுடி சித்தரின் மகிமைகளை அறிந்துகொண்ட அவர்அங்கேயே தனது இறைபணியை மேற்கொண்டார். சில நாட்களுக்கு பிறகு இடியுடன் கூடிய பலத்த மழைபெய்தது.இதுநாள் வரை இதுபோன்ற மழையில் கரையாத புற்று அன்று சிறிது சிறிதாககரைந்துகொண்டிருக்கும்போது அப்புற்றில் இருந்து சுயம்பு லிங்கம்ஒன்று தோன்றியது. அச்சிவலிங்கத்தினை மூலவராக கொண்டு அங்கு சிறியகோவில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. அன்றிலிருந்து கிரிவலப்பாதை அடி அண்ணாமலையில் கவுதம மகரிஷியின் ஆசிரமத்திற்கு எதிரில் உள்ள இக்கோவிலுக்கு வந்து அன்பின் உருவான அடிமுடி சித்தரின் அருள் பெற்று தங்களின் கர்மவினைப் பயனைபோக்கி நல்வாழ்வு பெற்றவர்கள் எண்ணிலடங்காது. இன்னும் இங்கு வரும் பக்தர்கள் அடிமுடி சித்தரை நினைத்து தியானம் செய்வதால் மன அமைதியும் நிம்மதியும் பெறுகின்றனர்.

ஜீவ சமாதி உள்ள இடம் ஆற்றல் நிரம்பிய இடமாகும்.அவர்களை பூரணமாய் வணங்கி  பழங்கள், அச்சுவெல்லம், அவல், தாம்பூலம், வாசனை உடைய மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வழிபடுவது சிறப்பு. பொதுவாக குருவை தேடுபவர்கள் மகான்கள் மற்றும் சித்தர்களின் ஜீவ சமாதியில் வழிபாடு செய்தால் குருவருள் கிட்டும். அவர்களே வழி காட்டுவர்.