பிளாஸ்டிக் சர்ஜரி

முகத்தை விரும்பியபடி பொலிவாக்கும் சிகிச்சை முறைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி என்று பெயர்   இது பொதுவான வார்த்தை  பிளாஸ்டிக்கிற்கும் இந்த சிகிச்சை முறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  கிரேக்க சொல்லான பிளாஸ்டிக்கோஸ் என்பதற்கு  மோல்ட் செய்வது என்று பொருள்  இதிலிருந்து உருவானதுதான் பிளாஸ்டிக் என்ற சொல்.

இயற்கையாகவோ விபத்திலோ உடல் உறுப்புக்கள் சேதமடைந்தால் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்வதை தான் பிளாஸ்டிக் சர்ஜரி என்பர்.  மூக்கு சேதமடைந்தாலோ விரல் துண்டிக்கப்பட்டாலோ பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சீரமைத்து விடலாம்.  இதில் காஸ்மெட்டிக் சர்ஜரி என்பதும் ஒரு வகை.  இது முழுக்க முழுக்க உறுப்பில் பொலிவும் அழகும் ஏற்படுத்த செய்யப்படுகிறது.

காது பெரிதாக இருக்கிறது….. மூக்கு நீளமாக இருக்கிறது……………. நெற்றி தூக்கலாக இருக்கிறது………………இவ்வாறு எண்ணி வருந்துவோர் அவற்றை சீரமைக்க மேற்கொள்வது தான் காஸ்மெட்டிக் சர்ஜரி   இந்த சிகிச்சையால் பக்க விளைவு ஏதும் இல்லை.   ஆனால் மிக கவனமாக செய்ய வேண்டும்.  அறத்துடன் செய்ய வேண்டிய எத்திகல் சர்ஜரி என்றும் இதை சொல்வர்.

சிகிச்சை பெறப்போகிறவர் பற்றிய விபரம் அவருக்குள்ள நோய் பாதிப்பு எந்த மாதிரி மாத்திரை மருந்து எடுத்துக்கொள்கிறார் போன்ற விவரங்களை அறிந்த பின் தான் மருத்துவ நிபுணர்கள் இந்த வகை சிகிச்சை முறையை துவங்க வேண்டும்.

கவர்ச்சியற்ற முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரியால் விரும்பும் விதமாக மாற்றும் முறைக்கு ஸ்டீரியோ லித்தோ என்று பெயர்.  இந்த வகை சிகிச்சை முறை துவங்கிய காலத்தில் கால் அல்லது விலா எலும்புகளை எடுத்து பயன்படுத்தினர்.  இப்போது ஹைட்ராக்சி அபைடட் எனப்படும் ரசாயன பொருளை பயன்படுத்தி செயற்கை எலும்பு தயாரிக்கின்றனர்.  அதைப் பயன்படுத்தி தான் முகத்தை கவர்ச்சியாக மாற்றும்  ஸ்டீரியோ லித்தோ சர்ஜரி நடக்கிறது   உலகப்புகழ் பெற்ற பாடகர் மைக்கேல் ஜாக்சன்  இந்த முறையில் தான் முகத்தோற்றத்தை அடிக்கடி மாற்றியமைத்துக்கொண்டார்.

தகவல் நன்றி   சிறுவர் மலர். 

அக்னி பகவான்

முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது.  அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும். 

எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான்.அவ்வனத்தில் உள்ள அரக்கர்களும் கொடிய விலங்குகளும் தாவரங்களும் சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னி தேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன. “அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்’ என வருணன் கூறினான்.

இதையறிந்த அக்னி கிருஷ்ணரிடம் ஓடி, ஓ… கிருஷ்ணா…  “நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்’ என முறையிட்டான். கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான். 

அப்போது அக்னி தேவன் தன் ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க முற்பட்டான்.அப்போது கிருஷ்ணர், “21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். அதற்குள் உன் பசியைத் தீர்த்துக் கொள்’ என்றார். அதன்படி அக்னி காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன் பசி தணிந்த அந்த 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர தினம் என்றும் கத்திரி வெயில் என்றும் கூறுகின்றனர்.

அக்னி நட்சத்திர நாளில் முருகனையும், மீனாட்சி அம்மையையும் வழிபடுவது நல்லது. பரணிக்குரிய துர்க்கையையும், ரோகிணிக்குரிய பிரம்மனையும் வழிபடுவதுடன், கிருத்திகைக்குரிய தேவதை அக்னியையும் வழிபட்டால் நற்பலன் கிடைக்கும். அகமும் புறமும் குளிரும் வண்ணம் தர்மம் செய்து ஸ்ரீ கிருஷ்ணனை  வணங்கி வழிபாடு செய்து, கத்திரி வெயிலில் அவன்  அருள் பெறலாமே..

அபூர்வ நெல்குதிர்

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும்  தஞ்சையில் நாயக்க மன்னர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட மாபெரும் நெற்குதிர் நிமிர்ந்து நிற்கிறது.  கொடும் பஞ்சம் தலைவிரித்தாடிய காலக் கட்டங்களில் இது அமுதசுரபியாக இருந்து உதவி பசி பிணி போக்கியுள்ளது.  தஞ்சையை ஆண்ட மன்னர் ரகு நாத நாயக்கர்  கி பி  16ம் நூற்றாண்டில் கோவில்களில் திருப்பணி மேற்கொண்டார். அப்போது கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் விளைந்த நெல் தானியத்தை சேமிக்கும் வகையில் குதிர் ஒன்றை அமைக்க விரும்பினார்.  மன்னரின் விருப்பத்தை அவரது அமைச்சர் கோவிந்த தீட்சிதர் நிறைவேற்றி உள்ளார்.  வட்ட வடிவில் கொரையுடன் சுடுசெங்கல்லால் கட்டப்பட்டுள்ளது இந்த நெல் குதிர்.  இதன் உள் மற்றும் வெளிப்பகுதிகள் பூசப்படவில்லை.  இந்த குதிர் 36 அடி உயரம் உள்ளது.  சுற்றளவு 80 அடி   பலத்த மழை பெய்தாலும் இதற்குள் வெள்ள நீர் புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குதிர் அடிப்பகுதி மேற்பகுதி நடுப்பகுதி என மூன்றாக அமைக்கப்பட்டுள்ளது.  பகுதிக்கு ஒன்று என் மூன்று வாயில்கள் உள்ளன.  முதலில் அடிப்பகுதி வாயில் வழியாக நெல் கொட்டுவர்.  அது நிரம்பியவுடன் அடைத்து விட்டு அடுத்த வாயிலை திறப்பர்.  அதன் வழியாக நெல் கொட்டுவர்   அதுவும் நிரம்பியவுடன் மூன்றாவது வாயில் வழியாக கொட்டுவர்.  அது தானிய சேமிப்பாக இருக்கும்.  பஞ்சம் ஏற்படும் நேரத்தில் உதவும்  

தஞ்சாவூர் மாவட்டம்  பாப நாசம் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் பாலைவன நாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் விளைந்த நெல் இந்த குதிரில் சேமிக்கப்பட்டது. பஞ்சம் ஏற்பட்ட போது நெல் குதிரை திறந்து மக்களுக்கு வாரி வழங்கி பசிபிணி போக்கியுள்ளனர் மன்னர்.

இந்த அபூர்வ நெற்களஞ்சியம் தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் அருகே திருப்பாலியத்துறை பாலைவன நாதர் கோயில் வளாகத்தில் உள்ளது.  இப்போது தொல்பொருள் ஆய்வுத்துறையால் பாதுகாக்கப்படுகிறது  நம் பண்பாட்டு தொன்மையை பறை சாற்றும் அபூர்வ கருவூலம் இது.

தகவல் நன்றி    சிறுவர் மலர்.

பறவைகளிடமிருந்து சில பாடங்கள்

1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை

2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை

3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன.

4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு  கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை.

5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.

6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை

7. தனது உடலில் வலுவுள்ளவரை உழைக்கின்றன. இரவு அல்லாது மற்ற நேரங்களில் ஓய்வு எடுப்பதில்லை.

8. நோய் வந்தால் உண்ணுவதில்லை. சுகமான பின் உணவு எடுத்துக்கொள்கிறது.

9. தன் குழந்தைகளுக்கு பரிபூரணமான அன்பை கொடுத்து வளர்க்கின்றன.

10. கடுமையான உழைப்பாளிகளாயிருப்பதால், இதயம், கல்லீரல், நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை.

11. இயற்கைக்கு எதிராக ஒருபோதும் செயலாற்றுவதில்லை. தனது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் இயற்க்கையிலிருந்து பெற்று கொள்கின்றன.

12. தனது கூடு மற்றும் சுற்று சுற்று சூழல்களை அனுசரனையோடு பாதுகாக்கின்றன.

13. ஒருபோதும் தனது மொழியினை மாற்றி வேற்று மொழி கலந்து பேசுவதில்லை.

இதில் சில படிப்பினைகளையாவது நாம் பாடமாக எடுத்துக்கொண்டால் வாழ்வு சிறப்பது திண்ணம்.

நெஞ்சம் மறப்பதில்லை

கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் ஒரு நாள் மலைச்சாரல் பக்கமாக நடந்து சென்றார். பாறையின் இடுக்கில் மலர்ச்செடி ஒன்றைக் கண்டார்.  சாட்டர்டன் நீ இங்கேயா இருக்கிறாய்?  என கண்ணீர் ததும்ப நின்றார்.  யார் அந்த சாட்டர்டன் தெரியுமா……பதினான்கு வயது கவிஞனான இவன் தத்துவக் கவிதைகள் புனைவதில் வல்லவன்.  அனாதையான அவன் வறுமையில் வாடியதால் தன் கவிதைகளை ரொட்டிக் கடைக்காரர் ஒருவரிடம் காட்டி பசி போக்க உதவும் படி வேண்டுவான்.  கடைக்காரரும் சில ரொட்டிகளைக் கொடுப்பார். அரைவயிறு தான் நிரம்பும்.  அருகிலுள்ள கழிவு நீர் கால்வாய் மீது படுத்து தூங்குவான்.

ஒரு நாள் கவிதை ஒன்றை எழுதினான்.  அதனடியில் புகழ் மிக்க கவிஞரான தாமஸ் கிரேயின் பெயரைக் குறிப்பிட்டு பத்திரிகையாளர் ஒருவரிடம் ஒப்படைத்தான். ஐயா…………தாமஸ் கிரே கொடுத்தனுப்பிய கவிதை இது. அவரால் வர முடியவில்லை. இதற்கான சன்மானத்தைக் கொடுங்கல் என வேண்டினான்.  பத்திரிகையாளரும் சன்மானம் அளித்தார்.

தனக்கு கிடைத்த பணத்தில் ரொட்டி வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தான்.  பத்திரிகையில் வெளிவந்த கவிதையைக் கண்ட தாமஸ் கிரே வியப்பில் ஆழ்ந்தார்.  பத்திரிகையாளரிடம் அவர் விசாரித்தபோது தாங்கள் அனுப்பியதாக சொல்லி சிறுவன் ஒருவன் இந்தக் கவிதை கிடைத்தது எனத் தெரிவித்தார்.

கவிதையோ அற்புதமாக இருந்தது.  சிறந்த கவிஞனான அச்சிறுவனை சந்திக்க வந்தார்  தாமஸ் கிரே.  விசாரித்தபோது ரொட்டிக்கடைக்காரருக்கு தான் அவனைத் தெரியும் எனக் கேள்விப்பட்டார். ரொட்டிக் கடைக்காரர் அதோ பாருங்கள் அந்த கால்வாய் மீது தூங்குகிறான் என கைகாட்டினார்.  எழுப்பிய போது அவன் எழுந்திருக்கவில்லை. சில மணி நேரத்திற்கு முன்பு தான் இறந்திருப்பது தெரிந்தது.  இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட வேர்ட்ஸ் வொர்த் அழகிய மலர்களைக் காணும்போதெல்லாம் சாட்டர்டனை எண்ணி குழந்தை போல கண்ணீர் சிந்துவார்.  ஆண்டவனின் அன்புக் குழந்தைகளை நல்ல நெஞ்சங்கள் ஒரு போதும் மறப்பதில்லை.  

கரப்பான் பூச்சி மருந்து

கரப்பான் பூச்சி நோய் தீர்க்கும் அரிய மருந்து தயாரிக்க உதவுகிறது.  ஆச்சரியமாக உள்ளதா?  உண்மை தான் முக்கியமாக பிராங்கியல் ஆஸ்துமா என்ற நோய்க்கு மருந்தாகிறது. இடைவிடாத மூச்சுத் திணறலால் அவதிப்படும் நோயாளியின் இன்னலியத் தீர்க்க இந்த மருந்து உதவுகிறது.

ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்தவர் டாக்டர் கிர்ஸ்டியன் பிரட்ரிக் சாமுவேல் ஹானிமன்.  அலோபதி மருத்துவத்தில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்.  மருத்துவத்தில் தீவிரமாக ஆராய்ச்சி செய்து ஹோமியோபதி என்ற மருத்துவ முறையை அறிமுகம் செய்தார். இந்த மருத்துவ முறையில் பிராங்கியல் ஆஸ்துமா நோய்க்கு பிளாட்டா ஒரியன்டாலிஸ் என்ற மருந்து உள்ளது.  இது கரப்பான் பூச்சியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட நோயாளி மூச்சுத் திணறலால் திக்குமுக்காடும் போது பிளாட்டா ஒரியன்டாலிஸ் என்ற மருந்து திரவத்தை உரிய முறையில் மருத்துவரின் ஆலோசனைப்படி வழங்கலாம்.  அலோபதி மருத்துவத்தில் ஊசி மூலம் மருந்து செலுத்தி மட்டுமே தடுக்க முடியும் என்ற நிலையிலுள்ள நோயாளியின் மூச்சுத்திணறலைக் கூட கரப்பான் பூச்சி மருந்தால் எளிதாக தணிக்கலாம்.

ஒரு கரப்பான் பூச்சியின் தலையை உடலில் இருந்து மிகச்சரியாக அறுத்து அகற்றி விட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழும் திறன் கொண்டது.   பின் உணவு உட்கொள்ள முடியாமல் தான் அது இறக்கிறது. அதாவது பசியால் தான் மரணமடைகிறது.

தகவல் நன்றி   சிறுவர் மலர்.

குள்ள முதலை

முதலைகள் அதிக பட்சம் 17 அடி நீளம் வரை வளரும். அவற்றின் சராசை நீளமே ஒன்பது அடி.   ஆனால் வடக்கு ஆப்பிரிக்க கடற்கரையோரம் காணப்படும் ஒரு வகை முதலை. அதிக பட்சம் ஐந்து அடி நீளம் தான் வளரும்.  இவற்றுக்கு குள்ள முதலைகள் என்றே பெயர்.  இதில் ஆச்சரியமான விஷயம் என்ன்வென்றால் முதலை இனங்கள் எல்லாம் மனிதர்களை தாக்க கூடியவை. ஆனால் குள்ள முதலைகள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.

அவற்றை சீண்ட நினைத்தால் மட்டுமே மனிதர்களை தாக்க முற்படும்.  முட்டைகளை அடை காக்கும் போது சில மாதங்கள் வரை இந்த ரக முதலை இரை தின்னுவதில்லை.  டைனோசர் என்ற உயிரினம் வாழ்ந்த காலத்தில் இருந்த முதலை அதிக பட்சம் 50 அடி நீளம் வரை இருந்துள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். இது டைனோசரை கூட வேட்டையாடும் ஆற்றல் பெற்றிருந்தது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வட  நெம்மேலி என்ற இடத்தில் முதலைப் பண்ணை உள்ளது.  உலகில் உள்ள அனைத்து வகை முதலைகளும் இங்கு உள்ளன.  திருவண்ணாமலை மாவட்டம் சரத்தனூர் அணை பகுதியிலும் முதலைப் பண்ணை உள்ளது.

தகவல் நன்றி    சிறுவர் மலர்

தவக்களை புராணம்

 மழை பெய்த உடன் கொட்ட கொட்ட விழித்து கரக் முரக் என ஒலி எழுப்பி வந்து விடும் தவளை.  தவளையும் தேரையும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை  தவளையால் ஈரப்பதம் இல்லாமல்  வாழ முடியாது. ஆனால் ஈரம் இல்லாத இடத்திலும் தாக்குப்பிடிக்கும் தேரை.  அந்த உயிரினம் பற்றி தெரிந்து கொள்வோம்.

தவளை இரு வாழ்வி உயிரினம்.  குளிர் ரத்த பிராணி. உலகில் 7370 வகை இனங்கள் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அண்டார்டிகா தவிர அனைத்து பகுதியிலும் வாழ்கிறது.  தவளை நீரில் முட்டை இடும். அது கூட்டமாக ஒட்டியிருக்கும். முட்டையில் இருந்து வெளிவருவது தலைப்பிரட்டை. இதற்கு நுரையீரல் கிடையாது. செவில்களால் சுவாசிக்கும்.   நுரையீரல் வளர்ந்த பின் தவளையாக மாறும்.  தவளை தண்ணீர் குடிக்காமல் உயிர்வாழும்.  தண்ணீரில் வசிக்கும்போது இதன் தோல் தேவையான ஈரப்பதத்தை ஈர்த்துக்கொள்ளும். மூக்கால் மட்டுமல்லாது தோல் மூலமும் சுவாசிக்கும்.  தோல் ஈரப்பதத்தை இழந்தால் இறந்து போகும்.

ஆண் தவளை தாடையின் கீழ் உள்ள பை போன்ற அமைப்பை பலூன் போல ஊதி பெருக்கி ஒலியெழுப்பி இணையை ஈர்க்கும். அப்போது வாயை திறப்பதில்லை.  கரகரப்பான் ஒலியெழுப்பி மற்ற தவளையுடன் தொடர்பு கொள்ளும்  இந்த ஒலி கிராக் எனப்படுகிறது. இனப்பெருக்கத்திற்காக மட்டும் குரல் எழுப்புவதில்லை. இரை ஆபத்து கால எச்சரிக்கை பாதுகாப்பு போன்ற 20 செயல்களுக்காக ஒலி எழுப்பி தகவல் பரிமாறிக்கொள்ளும்.

நாக்கில் உள்ள ஒட்டும் பசை உதவியால் இரைகளைப் பிடித்து உண்ணும். பூச்சிகள் தான் மிக முக்கிய உணவு. இரையை விழுங்க அதன் கண்களும் உதவுகின்றன.  கண்மணிகளை கீழ் நோக்கி உருட்டுவதன் மூலம் இரையை தொண்டைக்குள் தள்ளிவிடும்.  தவளையின் கண்கள் 360 டிகிரி கோணத்திற்கு சுழலும் திறன் கொண்டது. இதுவே உணவு தேடவும் ஆபத்தை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.  குளிர்காலத்தில் அசைவற்று உடல் செயல்களை நிறுத்தி மாதக்கணக்கில் தூங்கும். அப்போது அதன் உடலில் 65 சதவீதம் ரத்தம் உறைந்து விடுவதாக  அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். சில இனங்கள் மட்டும் குளிர் குறைந்த இடம் நோக்கி பெயரும்

தேரையால் நீர்வளம் குறைந்த பாறை பகுதியிலும் வாழ முடியும். துள்ளிக்குதிக்காமல் மெதுவாக நடந்தே பயணிக்கும். இதன் கண்களுக்குப் பின் பகுதியில் விஷச்சுரப்பிகள் உள்ளன.  தவளை நான்கு முதல் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழும். உலகில் மிகப்பெரியது  கோலியாத் தவளை . இரண்டு அடி நீளமும் நான்கு கிலோ எடையும் இருக்கும்.  உருவில் மிகச் சிறியது பில்லோபேட்ச் டெர்ரிபில்லிஸ் எனப்படும்.  பொன்னிற தவளை இது விஷம் மிக்க இனம்.  பாம்பு  முதலை பறவைகள் முள்ளெலி என பல உயிரினங்கள் தவளையக் இரையாக கொள்கின்றன. நீருக்குள் சில மீன் இனங்கள் நீந்தும் பாலூட்டிகள் நீர்மூழ்கி பறவைகளும் தவளையை வேட்டையாடும்.  அதிகம் பசித்தால் சிறு தவளையை பெரியவை உண்பதும் உண்டு. மனிதனும் தவளைக்கு முக்கிய எதிரிதான். சுற்றுச்சூழலில் மாறுபாடு ஏற்படுத்துவதால் அழிகிறது தவளை இனம்.  மனிதன் என்ற பெரிய உயிரின் வளர்ச்சியால் மற்ற உயிரினங்களின் இருப்பு கேள்விக்குரியாகி வருகிறது. 

தகவல் நன்றி    சிறுவர் மலர்.

ஹவா மகால்

வரலாற்று புகழ்பெற்ற ஹவா மாளிகை ராஜஸ்தான் மானிலத்திலுள்ள ஜெய்ப்பூர் அரண்மனை வளாகத்தில் கம்பீரமாக அமைந்துள்ளது. ஜெய்ப்பூர் நகரின் எழிலை பரை சாற்றுகிறது என்றால்  மிகையாகாது.   ஏழு வாயில்களைக் கொண்டது. கோட்டை கொத்தளம் வாள் அம்பு சேனை அகழிகள் என அமர்க்களமாக உள்ளது. அன்றைய நாளில் மகாராணியார்  தங்கியிருந்த இடமே ஹவா மகால்.

ஐந்து அடுக்குகளை உடையது.  எங்கு நோக்கினாலும் வித்தியாசமான ஜன்னல்கள் காணப்படுகின்றன. வெளியே இருந்து பார்த்தால் உள்ளே நிற்பவரை காண முடியாது. ஆனால் உள்ளெ இருப்பவர்கள் வெளியே நடப்பதை முழுமையாக காண இயலும்.  இந்த மகாலைக் கட்டியது மன்னர் பிரதாப் சிங். கி பி 1875ல் ஐரோப்ப்பிய நாடான இங்கிலாந்து ராணி விக்டோரியா இந்த நகருக்கு வருகை தந்தார். இதை ஓட்டி நகரில் அனைத்துகட்டடங்களுக்கும் சிவப்பு வண்ணம் பூசப்பட்டது. இதனால் ஹவா மகால் செந்நிற வண்ணத்தில் ஜொலிக்கிறது.

ஹவா மாளிகையில் எப்போதும் சிலுசிலுவென இளங்காற்று வீசிக்கொண்டிருக்கும். இதை காற்று மாளிகை என அழைப்பதும் உண்டு. ஜெய்ப்பூர் நகருக்கு பெருமை சேர்க்கிறது.

  தகவல் நன்றி   ஜி ராஜா  சிறுவர் மலர்.

தெய்வீகத்தன்மை. ..தாமரை மலர்.


இறைவனை கோவிலில் தரிசப்பதை தவிர, தியானத்திலோ அல்லது தீவிர பக்தியிலோ மனதில் தரிசிக்கலாம். இவற்றை தவிர்த்து கடவுளர்களை திருவுருவப்படங்கள் மற்றும் திருவுருவச்சிலையின் மூலம் வழிபடுவது வழக்கம்.
இந்து மரபில் பெரும்பாலான தெய்வங்களிடம் ஒரு பொதுவான அம்சத்தை நாம் கவனிக்க முடியும். அது தாமரை மலருடன் தொடர்புடையது ஆகும்.
அதாவது பெரும்பாலான தெய்வங்கள் தாமரை மலரின் மீது நின்றிருப்பதை போலவோ, அமர்ந்திருப்பதை போலவோ அல்லது கைகளில் ஏந்தியிருப்பதையோ நாம் காண முடியும். இத்தனை தெய்வீகத்தன்மை தாமரை மலருக்கு இருப்பதற்கான காரணம் என்ன?…..
மஹா விஷ்ணு அவர் கரங்களில் தாமரையை ஏந்தியிருப்பதை நாம் காண முடியும். அவருடைய தொப்புள் கொடியிலிருந்து தாமரை மலர்வதையும் அதில் பிரம்ம தேவர் அமர்ந்திருப்பதும் கண் கொள்ளா காட்சி.
தாமரை மலர் என்பது பரிசுத்தத்தின் அடையாளம். அசுத்தம் நிறைந்த பகுதியிலும் தன்னுடைய பரிசுத்தத்தை நிலைநிறுத்தும் தன்மை தாமரைக்கு உண்டு. சேற்றில் வளர்ந்தாலும் செந்தாமரை என்பார்கள். அதை போலவே தன்னுடைய சுற்று சூழல் எப்படியிருந்தாலும் தன்னுடைய தன்மையை, பண்பை விட்டுக்கொடுக்காத ஆச்சர்ய பண்பு தாமரைக்கு உண்டு. 
மேலும் தன்னுடைய மூலாதாரம் தண்ணீர் என்றாலும். அந்த தண்ணீருடன் ஒட்டாத அந்த பண்பு ஆன்மீகத்தில் ஆழங்கால் பட்டவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் நிலை.
இந்த சிறப்பான வாழ்வு நமக்கு வாய்த்திருந்தாலும், அதிலிருக்கும் கடமைகளை நாம் செய்கிற போது அங்குள்ள சுகம், செளகரியம், உறவுகளுடன் நாம் அதீத பற்று கொள்ள கூடாது. வாழும் இடம் தண்ணீராகவே இருந்தாலும் எவ்வாறு அதிலிருந்து ஒட்டாமல் தாமரை தனித்து வாழ்கிறதோ. அவ்வாறே இந்த உலக வாழ்விலிருந்து பற்றற்று நாம் விலகியிருத்தல் வேண்டும் என்பதை தாமரை உணர்த்துகிறது.
தாமரையின் மொட்டு மலராக மலர்வது பார்ப்பதற்கு பேரானந்தத்தை தரக்கூடியதாகும். ஒவ்வொரு படிநிலையாக அதன் மலர்தல் வளர்வதை போலவே ஒருவர் ஆன்மீக பாதையில் முக்தியை நோக்கி செல்கிறார். எனவே அதன் தன் செயல்களின் மூலம் புனிதத்தையும், தன் வாழ்தலின் மூலம் வாழ்வின் நிதர்சனத்தையும் மற்றும் பற்றற்று வாழும் முறையையும் இந்த தாமரை நமக்கு உணர்த்துகிறது.
மேலும் தாமரை மலர் மகாலட்சுமி தேவியை குறிப்பதாகும். அது செளபாக்கியத்தின் அம்சம். 
தாமரைக்கு பத்மம் என்ற பெயர் உண்டு. அதனாலேயே மஹா விஷ்ணுவை பத்மநாபன் என்றும் அன்னை மகாலட்சுமி தேவியை பத்மாவதி என்றும் அழைக்கின்றனர்.