நரகாசுர சதுர்தசி

தீபாவளித் திருநாளில் மட்டுமல்ல எந்நாளும் நம் மனதில் இருக்கும் அசுர குணங்களை கைவிட்டு பரிபூரண வாழ்வை நோக்கி பயணிப்போம்” – கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் விதமாக தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது நரகாசுர சதுர்தசி என்பார்கள்.நம்முடைய பண்டிகைகளில் தீபத்திற்கு முக்கியத்துவம் உண்டு. தீபம் இல்லாத வழிபாடே இல்லை எனலாம். அதிலும் குறிப்பாக தீப ஒளி திருநாளாம் தீபாவளி அன்று வரிசையாய் விளக்கேற்றி வைக்கும் போது, புற இருள் மட்டுமின்றி, அக இருளும் அழிந்து போகும்.இதற்கு காரணம் தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து வருகின்றனர் என்ற நம் ஐதீகமே.

தசாவதாரத்தில் ஒன்றான வராக அவதாரத்தை மஹாவிஷ்ணுக்கும்,பூமாதேவிக்கும் மகனாக பிறந்தவன்  நரகாசுரன்.    ஆரம்பத்தில் மிக நல்லவனாகத் தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான்.அவன் வளர வளர தன்னுடைய அசுர குணதிற்கே உரித்தான அம்சத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான்.தவத்தில் சிறந்த மகரிஷிகள், குருமார்கள் போன்றவர்களை இகழவும் செய்தான்.ஈரேழு லோகங்களையும் வென்று விட வேண்டும் என்று எண்ணிய அவன், பிரம்மாவை நோக்கி கடுந்தவம் புரியத் தொடங்கினான். பிரம்மாவும் அவன் தவத்தை மெச்சி, “உன் தவத்திற்கு மெச்சினேன், என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார். “எனக்கு சாகா வரம் அருளுங்கள்” என்று கேட்டான்.அதற்கு பிரம்மா, உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள் அழியத்தான் வேண்டும். அது தர இயலாது ஆகையால் வேறு எதாவது கேள்”என்றார். ஸ்வாமி நான் என் தாயைத் தவிர வேறு யார்மூலமாகவும் மரணம் அடையக்கூடாது என்ற வரத்தை நரகாசுரன் கேட்டான்.நீ உன் தாய் அம்சத்தைத் தவிர வேறு எவராலும் மரணம் அடைய மாட்டாய் என்று பிரம்மாவும் வரம் அளித்தார். சாகா வரம் கிடைத்த நரகாசுரனின் அட்டகாசம் அதிகரித்தது. எல்லா லோகத்தையும் ஜெயிக்க ஆவல் கொண்டு தேவர்களைச் சிறையில் அடைத்தான்.

மிஞ்சிய சிலர் கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலைமையைக் கூறி காப்பாற்றும் படி கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு ஆறுதல் அளித்த கிருஷ்ணர், நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூறினார்.நரகாசுரன் அதற்கு செவி சாய்க்காததால்,போர் ஆரம்பித்தது. வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றவள் என்பதால், தனக்கு சாரதியாக சத்தியாபாமைவைக் கண்ணன் அழைத்தார்.கடும்போரில், நரகாசுரன் தன் கடாயுத்தை கிருஷ்ணணரை நோக்கி வீச, அதில் காயம்பட்டு மயங்கி விழுவது போல் மாயக் கண்ணன் நடித்தார்.

கிருஷ்ணன் மயங்கி விழுந்ததுப் பார்த்த சத்தியபாமா கோபத்தில், நரகாசுரன் மேல் சரமாரியாக அம்பை எய்ய அவனும் கீழே சாய்ந்தான்.அவன் கேட்டபடி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான்.அவனுக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணு காட்சி அளித்து, அவனுக்குத் தேவையான வரத்தைக் கொடுப்பதாகச் கூறினார்.இறக்கும் தருவாயில் அகங்காரம் அழிந்தது மட்டுமின்றி, கிடைத்தற்கரிய விஷ்ணுவின் அவதார கோலத்தைக் கண்டு மனம் திருந்திய நரகாசுரன், தான் இறக்கும் இந்த நாளை எல்லோரும் காலையில் எழுந்து குளித்து , புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.இதுவே  தீபாவளி கொண்டாடி  வருவதற்கு காரணம்.

தீபாவளித் திருநாளில் மட்டுமல்ல எந்நாளும் நம் மனதில் இருக்கும் அசுர குணங்களை கைவிட்டு பரிபூரண  வாழ்வை நோக்கி பயணிப்போம் என்று இந்நன்னாளில் உறுதியேற்போம்.a

ஐப்பசி மாத சிறப்புக்கள்

:

ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பது பழமொழி. அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. இம்மாதத்தில் இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி கொண்டாடப்படுகிறது.காவிரியில் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வும் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதமான கந்த சஷ்டி திருவிழாவும் இம்மாதத்தில் நிகழ்கிறது.இம்மாத பௌர்ணமியில் சிவாலயங்களில் உலகின் பரம்பொருளான சிவபெருமானின் லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.கேதார கௌரி விரதம், முருகன் சுக்ரவார விரதம், தனத்திரயோதசி, யமதுவிதியை, கோவத்ச துவாதசி, பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி போன்ற நிகழ்வுகளும் ஐப்பசியில் நிகழ்கின்றன.

தீபாவளி பண்டிகை!

தீபாவளி இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடக்கூடிய பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தென்இந்தியாவிலும், ஐப்பசி அமாவாசையில் வடஇந்தியாவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.இப்பண்டிகை இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்களால் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை வடஇந்தியாவில் லட்சுமி பூஜை என்றும், வங்காளத்தில் காளி பூஜை என்றும் வழங்கப்படுகிறது.   இப்பண்டிகையின்போது நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் மக்கள் நீராடுகின்றனர். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். பின் புதிய ஆடைகள், பட்டாசுகள், இனிப்புக்கள், பட்சணங்கள் வைத்து வீட்டில் வழிபாடு நடத்துகின்றனர்.புதிய ஆடைகளை அணிந்து கோவில்களில் வழிபாடு நடத்துகின்றனர். உற்றார், உறவினர், நண்பர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள், பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்கின்றனர்.புதுமணத்தம்பதியர் தலைதீபாவளியை மணப்பெண்ணின் வீட்டில் கொண்டாடுகின்றனர். அன்பு, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றின் வெளிபாடாக தீபாவளி கொண்டாட்டம் அமைகிறது.

கந்த சஷ்டி திருவிழா !

இத்திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வது விரதமுறையைக் கடைப்பிடிப்பது ஆகும்.நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து வரபில்லா ஆற்றல், தன்வயமுடைமை, இயற்கை உணர்வு, பேரருள் ஆகிய நற்குணங்களைப் பெறும் நோக்கில் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.இந்தவிரதத்தினை ஒப்பரும் விரதம் என்று கந்த புராணம் குறிப்பிடுகிறது.எல்லா முருகன் கோவில்களிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விரதமுறையில் சிலர் ஆறுநாட்கள் உண்ணாமலும், ஒருவேளை உணவு உண்டும், சஷ்டி அன்று மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்கின்றனர்.ஒரு சிலர் ஆறு மிளகை வாயிலிட்டு ஆறு கை நீரருந்தியும், ஒரு சிலர் மௌன விரதம் இருந்தும் இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.இவ்விரத வழிபாட்டில் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி, கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் கலி வெண்பா, திருப்புகழ் போன்றவற்றை பாராணயம் செய்கின்றனர்.இவ்விரத முறையால் உடல் மற்றும் உள்ளத்தூய்மை கிடைக்கும். நோய்கள் நீங்கும். பிள்ளைப்பேறு கிட்டும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது கந்த சஷ்டி குறித்த பழமொழியாகும்.

அன்னாபிஷேகம் !

ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவாலயங்களில் உள்ள லிங்கத்திருமேனிக்கு அன்னத்தால் அபிசேகம் செய்யப்படுகிறது.தானங்களில் போதும் என்ற மனதிருப்தியை தருவது அன்னதானம் மட்டுமே. எனவே மனதுக்கு திருப்தி அளிப்பதும், உடல் இயக்கத்திற்கு காரணமானதுமான அன்னத்தை உலகுக்கெல்லாம் உணவளிக்கும் சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியில் அபிசேகம் செய்து நன்றி தெரிவிக்கப்படுகிறது.

வடித்த அன்னத்தை லிங்கம் முழுவதும் பூசி வழிபாடு நடத்தப்படுகிறது. வழிபாட்டின் முடிவில் சிவலிங்கத்தின் பாண பகுதியில் இருக்கும் அன்னமானது தனியே எடுக்கப்பட்டு நீர்நிலைகளில் கரைத்து விடப்படுகிறது. ஆவுடைப்பகுதியில் இருக்கும் அன்னமானது தயிருடன் கலந்தோ, அல்லது தனியாகவோ அன்னதான உணவில் கலக்கப்படுகிறது.

அன்னாபிஷேகத்தைத் தரிசனம் செய்தால் நம்முடைய பாவங்கள் விலகும். புண்ணியம் கிட்டும். தாராள உணவு கிடைக்கும் பசிப்பிணி வராது என்று கருதப்படுகிறது.அன்னாபிஷேகம் எல்லா சிவாலயங்களிலும் உச்சிக்காலம் மற்றும் சாயாரட்சை காலங்களில் சிறப்பாக நடத்தப்படுகிறது.ஐப்பசி பௌர்ணமியில் விளக்கேற்றி வழிபட உணவு தானியங்கள் பெருகி பசிப்பிணி ஏற்படாது.

துலா ஸ்நானம் !

ஐப்பசி மாதத்தில் காவிரியில் ஏனைய புண்ணிய நதிகள் கலப்பதால் காவிரியில் இம்மாதத்தில் நீராடுவது துலா ஸ்நானம் என்றழைக்கப்படுகிறது.இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.    ஓம் நமசிவாய

குலசை தசரா திருவிழாவின் சிறப்புகள்

இந்தியாவில் மைசூருக்கு அடுத்த படியாகத் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி என்றாலே தூத்துக்குடி மாவட்ட மக்களுக்குக் குலசை தசரா திருவிழாதான்  சட்டென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பல ஊர்களிலுள்ள மக்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி 10 நாள்கள் விரதமிருந்து தசரா திருவிழாவில் கலந்துகொள்வார்கள். இதேபோல மாநிலம் முழுவதிலும் இருந்து, தசரா 10-ம் நாள் திருவிழாவான சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண குலசைக்குப் படையெடுப்பார்கள். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் 13 கி.மீ தொலைவில் உள்ளது குலசை. இத்திருக்கோயிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பிகை முத்தாரம்மனும் அருள்பாலிக்கிறார்கள்.

 கங்கையில் நீராடி காசி விசுவநாதரையும் விசாலாட்சியையும் வழிபட்ட பயன் இங்குள்ள கங்கை கலக்கும் வங்கக்கடலில்  நீராடி முத்தாரம்மனையும் ஞானமூர்த்தீஸ்வரரையும் வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தசரா நாள்களில் முதல் நாள் துர்க்கை அலங்காரத்திலும், 2-வது நாள்   விசுவகாமேஷ்வரர் அலங்காரத்திலும், 3-வது நாள் பார்வதி அலங்காரத்திலும், 4-வது நாள் பாலசுப்பிரமணியர் அலங்காரத்திலும், 5-வது நாள் நவநீதகிருஷ்ணன் அலங்காரத்திலும், 6-வது நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும், 7-வது நாள்  ஆனந்த நடராசர் அலங்காரத்திலும், 8-வது நாள் அலைமகள் அலங்காரத்திலும், 9-வது நாள் கலைமகள் அலங்காரத்திலும் காட்சியளித்து, திருச்சப்பரத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கும். 10-வது நாள் அம்பிகை மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருள, கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கும். “அம்மை நோய் என்றில்லை, சகல நோய் களையும் துன்பங்களையும் நீக்கி வரமருளுவதால்தான், குலசை முத்தாரம்மனுக்கு விரதமிருந்து வேடமிட்டு தசராவில் அம்மனின் அருளைப்பெற வரும் பக்தர்களின் கூட்டம் ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

குலசை தசராவின் சிறப்பம்சமே, திருவிழாவின் போது பலரும் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வேஷம் போட்டுக்கொண்டு ஊர்வலமாக வந்து அம்மனை வழிபடுவதுதான். பலர் பல வகையான வேஷங்களைப் போட்டுக்கொண்டு வந்தாலும், காளி வேஷம் போட்டுக்கொண்டு வருபவர்கள் தான் அதிகம்.

ஜோதிடத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரனின் வீட்டில் செவ்வாயும் இருந்தால் அதை `பரிவர்த்தனை யோகம்’ என்று சொல்வார்கள். அதே போல இங்கு சுவாமியின் சக்தியை அம்பாள் வாங்கியிருப்பதால்தான், அம்பாள் சிவமயமாகக் காட்சியளிக்கிறாள். அம்பாளின் சக்தியை சுவாமி வாங்கியிருக்கிறார். அதனால்தான் இங்கு சுவாமி சக்தி மயமாகக் காட்சியளிக்கிறார். இதை ’பரிவர்த்தனையோக நிலை’ என்பார்கள். இதனால்தான் இங்கு அம்பாளின் ஆட்சியே மேலோங்கி இருக்கிறது”.

நன்றி.     ஓம் நமசிவாய

கல்வி கடவுள் சரஸ்வதி தேவி

கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை. நாவிற்கரசி, கல்விக்கரசி, கலைவாணி எனப்பல பெயர்களில் போற்றப்படும் சரஸ்வதி தேவியின் மகிமையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பிரம்மனின் துணைவியாக இருப்பவள் சரஸ்வதி தான்.     சரஸ் என்றால், நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள். கல்வியை வற்றாத உற்றாகவும், ஞான ஒளியாகவும் அள்ளித்தருபவளே சரஸ்வதி. சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையின் பெயர் கச்சபி. சிவபெருமானால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது, வீணா தட்சிணாமூர்த்தியாக இருந்து, நாரதர் முதலானவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகு தனது சகோதரியான கலைவாணிக்கு அவர் அளித்ததாய் ஐதீகம்.

*ஆயுத பூஜை:*

ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள் புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள். இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

*அறுபத்து நான்கு கலைகள்:*

கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர்கள் ஆயகலைகள் அனைத்தினையும் அறிந்திட முடியும் என்பதே உண்மை. கலைமகள் குறித்து கம்பர் பாடிய பாடலான

“ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என்னம்மை – தூய

உருப்பளிங்கு போல்வாள் என” உள்ளத்தினுள்ளே

இருப்பளிங்கு வாராது இடர்”

என்றவாறு கலைமகள் வணக்க பாடலை பாடியுள்ளார். இதன் படி பார்க்கும் போது ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பதும். அதற்குரியவளான சரஸ்வதி தேவியை வணங்கிட அவை நமக்கு கிட்டிடும் என்பதும் புலனாகிறது.

சரஸ்வதிக்கு நாற்பதுக்கும் அதிகமான பெயர்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான பெயர்கள். கலைமகள், ஞானவாகினி, தூயாள், பிராமி, இசை மடந்தை, காயத்ரி, சாரதா, வெண்டாமரையாள், ஞானக்கொழுந்து, ஆதிகாரணி, சகலகலாவல்லி, வாணி, பனுவலாட்டி, பாமகள், பாமுதல்வி, பாரதி, நாமகள், பூரவாகினி, சாவித்ரி, ஞான அமிலி நாமகள், கலை மங்கை, வாணி, கலை வாணி, பார்கவி, சரஸ்வதி, பாரதி, சாரதா, சகலகலா வல்லி, பிரம்மதேவி, வேத நாயகி, ராஜ மாதங்கி, நீலதாரா, சித்ர தாரா, சியாமளா, ராஜ சியாமளா, வாக்வாதினி, வாகதீஸ்வரி, நயவுரை நாயகி, ஞான ரூபிணி, வித்யா வித்யா தாரணி ஆகியன ஆகும்.

நன்றி.     ஓம் நமசிவாய

புரட்டாசி மாத சிறப்புகள்

புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும், அங்கு உறையும் திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். முன்னோர்களின் ஆசியை பெற்றுத் தரும் மிக அற்புதமான மாதம் ஆகும்.

அதேபோல், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை நினைத்து சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவதும், லட்சுமி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவதும் விசேஷமானது. நீண்டகால கடன் தொல்லையில் இருந்து விடுபட மகாலட்சுமி வழிபாடு சிறந்தது.புரட்டாசி வெள்ளிக்கிழமையில், மகாலட்சுமியை வழிபடுவதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.*மகாலட்சுமியின் அருள் பெற வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை :*ஒவ்வொரு வெள்ளி அன்று லட்சுமிதேவியை வணங்குவதோடு சில விஷயங்களை பின்பற்றினால் துன்பங்கள் விலகி அவரின் அருள் கிடைப்பதோடு, பணமும், தானியமும் குறையாத அருளை பெறலாம்*இதேபோல் புரட்டாசியில் கடைபிடிக்க வேண்டிய சில விரதங்கள்:*

*சித்தி விநாயக விரதம்:*

புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகருக்காக இருக்கும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டால் காரிய சித்தி உண்டாகும்.

*சஷ்டி – லலிதா விரதம்:*

புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை நினைத்து கடைபிடிக்கப்படும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பரமேஸ்வரி சர்வ மங்களங்களையும் அருள்வாள்.

*அனந்த விரதம்:*

புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி அன்று கடைபிடிக்க வேண்டிய விரதம் இது. பக்தியுடன் இந்த விரதத்தை கடைபிடித்தால், தீராத வினைகள் எல்லாம் தீரும். ஐஸ்வர்யங்கள் கிடைக்கும்.

*அமுக்தாபரண விரதம்:*

புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமா – மகேஸ்வரரின் அருள் கிடைக்க இருக்கும் விரதம் இது. இவ்விரத வழிபாட்டால் சந்ததி செழிக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

*ஜேஷ்டா விரதம்:*

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் இருக்கும் விரதம் இது. இந்த விரத நாளில், அருகம்புல்லை கொண்டு சிவனையும், விநாயகரையும் வழிபட்டால் குடும்பம் செழிக்கும்.

*மஹாலட்சுமி விரதம்:*

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியை பிரார்த்தித்து இருக்கும் விரதம் இது. ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

*கபிலா சஷ்டி விரதம்:*

புரட்டாசி மாத தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு வண்ணம் உடைய பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. இவ்விரதம் சித்திகளை தரும்.

நன்றி     ஓம் நமசிவாய

ஆடிப்பூரம்


ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். 

*அம்மன் பிறந்தநாள் :*


ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்.
ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திர நாள் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். சித்தர்களும், முனிவர்களும் இந்த நாளில்தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன.


எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.


நன்றி. 

அற்புதம் தரும் ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். நதியை பெண்ணாக வணங்கும் நாள்! ஆடிப்பெருக்கன்று நதிகளை வழிபடுவதன் மூலம் நீர்வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

புத்தாடை அணிந்து, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம் மற்றும் வடகம் முதலான பதார்த்தங்களை எடுத்துச்சென்று, நதிக்கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாக கருதி, பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள். இந்த தினத்தில் செய்யப்படும் மங்கள காரியங்கள் பன்மடங்கு பலன் தரும் என்பது ஐதீகம்.

அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு, அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து, அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவார்கள்.

ஆற்றங்கரைக்குப் போகும் பொழுதே, ஒரு முறத்தில் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், பூ, ரவிக்கைத்துணி, காதோலை கருகமணி, திருமாங்கல்ய சரடு என்று ஒரு பெண் விரும்பி ஏற்கும் அனைத்தையும் வைத்து, மற்றொரு முறத்தில் மூடி எடுத்துச் செல்வர். ஆற்றங்கரையில் இவற்றை வைத்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்குவர்.

இந்த நன்னாளில் கணவனின் நலனுக்காக பிரார்த்திக்கும் ஒரு நாளாகவும் சொல்லலாம். காதோலை கருகமணி, காப்பரிசி வைத்து பூஜை செய்யும் கன்னிப்பெண் சீக்கிரமே நல்ல கணவனை அடைவாள் என்பது நம்பிக்கை.

தானிய அபிவிருத்தி (பயிர்கள் செழிக்க) அருளும் அம்பிகையை, பெண்கள் வம்ச அபிவிருத்தி (நற்குழந்தைப் பேறு) வேண்டி வழிபாடுகள் நடத்துவார்கள். குலம் விளங்க, நல்வாரிசுகள் அமைய அம்பிகையை மனமுருகிப் பிரார்த்தனை செய்வார்கள்.

ஆடிப்பெருக்கன்று பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை. மேலும், புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். ஆடிப்பெருக்கு தினத்தன்று மறக்காமல் விரதமிருந்து வீட்டிலும் பூஜை செய்யுங்கள். வீட்டில் நாம் செய்யும் பூஜை செல்வத்தையும், அமைதியையும் பலமடங்கு பெருக அருள்புரியும். பூஜையை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

ஆடிப்பெருக்கிற்கு வீட்டில் பூஜை செய்வது எப்படி?

நிறைக்குடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சேர்க்க வேண்டும். இந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைத்து, சர்க்கரை பொங்கல் படைக்க வேண்டும்.பூக்கள் தூவி அம்மனை போற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு தீபாராதனை செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய நதிகளை மனதார நினைத்து வழிபட வேண்டும்.அம்பிகை ஆசீர்வாதத்துடன் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுங்கள். இதனால், புதிய வாழ்க்கை மலர்வதுடன் கோடி பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நன்றி.     ஓம் நமசிவாய

ஆடி கிருத்திகை சிறப்பு


 முருகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில், தைப்பூசம், தை கிருத்திகை, பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி விரதம் ஆகியவை முக்கியமான நாட்களாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம், முருகனுக்கு மிகவும் உகந்த நட்சத்திரமாகும்.
 கார்த்திகை என்பது முருகனின் பெயர்களுள் ஒன்றான கார்த்திகேயன் என்ற பெயரை குறிக்கும். அதுவே காலப்போக்கில் கிருத்திகை என்று மருவியுள்ளது. எல்லா மாதங்களிலும் கிருத்திகை வரும். ஆனால் ஆடி கிருத்திகை போன்ற சிறப்பு தை மாதக் கிருத்திகையில் கூட இருக்காது.
 உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப்பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த அறுபடை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடி கிருத்திகை விழாவும் ஒன்று.
 உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோவில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமர்சையாக நடக்கும்.
 தை மாத கார்த்திகையை விட ஆடி மாத கார்த்திகை சிறப்பானதாகும். இது தேவர்களின் மாலைக் காலம் ஆகும். இக்காலத்தில் உப்பில்லா உணவை உண்டு கார்த்திகை விரதம் இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. பலரும், ஆடி மாதத்தில் இருந்து துவங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாத கார்த்திகையில் விரதத்தை முடிப்பார்கள்.
 நட்சத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு வாய்ந்தவையாகும். முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலு}ட்டி, சீராட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. 
நாளை ஆடி கிருத்திகை என்பதால் முருகனை மனமுருக வழிபட்டு அருளை பெறுவோமாக..!

ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவதன் காரணம்

புராண வரலாறு

தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்கமுடியாமல் ஐமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரை விட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார்அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தார். தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார்.

 ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார். அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாக கொடுத்தனர். இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவருந்தினார்.அப்போது சிவபெருமான் தோன்றி ரேணுகாதேவியிடம், உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால் காய்ச்சல், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர்.

*ஆடிக்கஞ்சி :*

அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் ஆகியவற்றை லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அரிசியைக் கஞ்சியாக வேகவைத்து அதில் இந்தத் துணியில் உள்ள மருந்துகளைப் பிழிய வேண்டும்; அல்லது கஞ்சிக்குள் அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துவிட வேண்டும். அதன்பிறகே ஆடிக்கஞ்சியைப் பரிமாற வேண்டும்.

நன்றி. ஓம் நமசிவாய

குரு பூர்ணிமா

புராணங்களின்படி, ஆடி மாதத்திற்கு முன் வரும் முழு நிலவு அதாவது, பௌர்ணமி தினத்தன்று, குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இது ஆசிரியர்களுக்கும், வழிகாட்டிகளுக்கும் நன்றி செலுத்தும் நாளாகும்.

குரு பூர்ணிமா என்பது முனிவர் வேத வியாசருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாகும். இந்த நன்னாளில் தான் வேத வியாசர் பிறந்ததாக நம்பப்படுகிறது, மேலும், இந்த திருநாள் வியாச பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. வேத வியாசர் ஒரு சிறந்த குருவாகக் கருதப்பட்டவர். மேலும், அவர் வேதங்களை 4 வகைகளாக பிரித்தவர். அதாவது, வேதங்களை, ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தியவர். உலகின் மிக நீளமான பிரம்மாண்ட காவியமான மகாபாரதத்தை எழுதியவரும் இவரே.

*சமஸ்கிருத வார்த்தை*

குரு பூர்ணிமா தினமானது, ஆசிரியர்களையும், ஆன்மீகத் தலைவர்களையும் கௌரவிக்கும் நாளாகும். சமஸ்கிருத வார்த்தையான ‘குரு’ இரண்டு வேர்களைக் கொண்டுள்ளது. அதாவது ‘கு’என்பது ‘இருள்’என்று பொருள் மற்றும் ‘ரு’ என்பதன் அர்த்தம் ‘இருளை அல்லது அறியாமையை நீக்குதல்.’ அதாவது, குருவானவர் நம்மை அறியாமையிலிருந்து விடுபட்டு நல்வழியை நமக்குக் காட்டுகிறார். புத்தர்களுக்கும் குரு பூர்ணிமா மிகவும் முக்கியமான தினமாகும். இந்த நாளில், புத்தர் தனது முதல் பிரசங்கத்தை சார்நாத்தில் வழங்கினார். சமணர்களுக்கும் இந்த நாள் முக்கியமானது.

*குரு பூர்ணிமாவின் முக்கியத்துவம்:*

மிகப் பெரிய முனிவரும், மகாபாரதத்தின் ஆசிரியருமான வேத வியாசரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் குரு பூர்ணிமா விழா சரிக்கப்படுகிறது. மகாபாரத காவியத்திலும் அவர் ஒரு முக்கிய நபராக விளங்கினார்.

மகாபாரதம் தவிர, இவர் 18 இந்து புராணங்களையும் எழுதியுள்ளார். மேலும்,வேதங்கள் நான்கையும் திருத்தியுள்ளார்.வேத வியாசரின் பிறந்த நாளை குரு பூர்ணிமாவாக மக்கள் கொண்டாடுவதற்கான காரணம் என்னவென்றால், வியாசர் பெரிய முனிவர் மட்டுமின்றி, மிகச்சிறந்த ஆசிரியராகவும் திகழ்ந்தவர். அவரது குரு குலத்தில் படிக்கவும், அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளவும் ஏராளமான மாணவர்கள் அங்கு சேர்ந்தனர்.  இந்த நாளில் மக்கள், அறிவு மற்றும் வழிகாட்டுதலை வழங்கியதற்காக அவர்களின் ஆசிரியர்களுக்கும், வழிகாட்டிகளுக்கும் மரியாதை செலுத்துகின்றனர்.

புத்தர் இந்த புனித நாளில் தனது முதல் பிரசங்கத்தை வழங்கினார் என்று புத்தர்கள் நம்புகின்றனர். புத்தர் ஒரு இளவரசராக பிறந்தவர். ஆனால், அவர் ஆன்மீகத்தின் பாதையில் சென்று ஞானம் பெற வேண்டும் என்பதற்காக தனது ராஜ்யத்தை துறந்தவர் ஆவார்.புத்தரின் பக்தர்கள், அவரை வழிபடுவதற்கும், அவருடைய போதனைகளிலிருந்து ஞானத்தை பெறுவதற்காகவும் இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர்.அதுமட்டுமின்றி, சிவபெருமானின் பக்தர்கள், ஆடிக்கு முன் வரும் பௌர்ணமியான இந்த நாளில் சப்தரிஷிக்கு யோகா மற்றும் பிற முக்கிய வாழ்க்கைப்பாடங்களைப் பற்றி கற்பித்ததாக நம்புகின்றனர்.

நன்றி.    ஓம் நமசிவாய