கவிழ்ந்திருந்த செருப்பு

இன்று காலை நடைப்பயிற்சிக்கு போனபோது தெருவில் யாரோ விட்டுவிட்டு போயிருந்த ஒரு ஜோடி செருப்புக்கள் கவிழ்ந்திருந்ததை பார்த்தபோது சுமார் 50 வருடங்களுக்கு முன் என் வாழ்வில் நடந்த ஒரு சின்ன நிகழ்வு ஞாபகத்திற்கு வந்தது.   திருவாரூரிலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது இராதா நல்லூர் என்ற கிராமம்.  அதில் என் சித்தப்பா பெரிய மிராசுதாரராக இருந்தார்.  நிலம் நீச்சு மாடு கன்றுகள் என பெரிய பணக்காரர்.  இப்போது அங்கு ஒன்றுமே இல்லை என்பது தான் நிசர்சனம்  என் சித்தப்பாவும் அவர் குடும்பத்தில் அனைவரும் காலமாகிவிட்டனர்.  ஊரில் எதுவும் மிச்சமில்லை

அப்போது நாங்கள் பாண்டிச்சேரியில் படித்துக்கொண்டிருந்த காலம்   என் அப்பா ஒரு புகழ்பெற்ற மருத்துவர்.  நாங்கள் எல்லோரும் கோடை விடுமுறைக்கு திருவாரூரில் உள்ள எங்கள் மாமாவின் வீட்டிற்கு போவோம்   சில நாட்கள் அங்கு தங்கிய பிறகு  என் சித்தப்பாவின் வீட்டில் தான் நிறைய நாட்கள் தங்குவோம்.  எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று வயல்கள்.  குளிப்பதற்கு குளம்  ஓடியாடி விளையாட நிறைய இடமுள்ள பெரிய வீடு என எங்களுக்கு அங்கு சொர்க்கம்தான்.

நகரத்திலேயே இருந்து பழக்கமான எங்களுக்கு அந்த ஒரு மாதம் ரொம்ப நன்றாக கழிந்துவிடும்.   ஊருக்கு திரும்ப மனமில்லாமலே வருவோம்.  அங்கு அப்போது என் சித்தப்பாவின் வீட்டில் தங்கவேல் பிள்ளை என்பவர் எல்லா வேலைகளையும் கவனித்துக்கொள்வார்.  பட்டணத்து பிள்ளைகள் என எங்கள் எல்லோரிடமும் ரொம்ப பிரியமாக இருப்பார்.  இள நீர்   நுங்கு போன்றவைகளை மதிய நேரத்தில் வெட்டித்தந்து எங்களோடு மிகவும் அன்பாக பேசிக்கொண்டிருப்பார்.  அந்த காலத்தில் அந்த கிராமத்தில் மின்விளக்குகள் கிடையாது  மாலை 5 மணிக்கே லாந்தர் விளக்குகளையும்   பெட்ரமாஸ் விளக்குகளையும் துடைத்து சுத்தப்படுத்தி  6 மணிக்குள் எல்லாவற்றையும் ஏற்றி வீடெங்கும் ஒளி மயமாக்கிவிடுவார்.

அவர் போட்டுக்கொண்டு வரும் செருப்பை வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்திலேயே கழட்டி கவித்து  வைத்துவிட்டு வெறும் காலோடுதான் வீட்டிற்கு நடந்து வருவார்.  அது அவர்களுக்கு ஒரு மரியாதை என எனக்கு பிறகு தான் தெரியும்  மிராசுதாரர்களுக்கு முன்பு செருப்பணிந்து அவர்கள் நடக்க மாட்டார்களாம். 

ஒரு நாள் மதியம் நாங்கள் எல்லோரும் வீட்டின் பின்புறம் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தோம்.   வேலை செய்த அயர்ச்சியில் தங்கவேல் பிள்ளை ஒரு மரத்தடியில் கவிழ்த்து வைத்திருந்த அவரின் செருப்பு ஜோடிகளின் மீது தலைவைத்து உறங்கிக்கொண்டிருந்தார்.  தலையணை வைத்து உறங்கும் பழக்கம் கொண்ட எனக்கு அது ரொம்ப விசித்திரமாக இருந்தது.  நான் அப்போது 12 வயது பெண்.  உள்ளே போய் மெத்தென்ற எனது தலையணையைக் கொண்டுவந்து அவரது தூக்கம் கலையாமல்  அவரது தலையைத் தூக்கி தலையணையில் வைத்தேன்.  அவர் திடீரென எழுந்து விட்டார்.  நான் தலையணை வைத்ததைக் கண்டு திடுக்கிட்டு  “ என்ன பாப்பா? இப்படி செய்திட்டீங்களே? என்றார்.   நான் நீங்கள் ஏன் செருப்பை வைத்துக்கொண்டு தூங்கினீர்கள்?  அதை எனக்கு பார்க்க பிடிக்கவில்லை அதனால் தான் என் தலையணையைக் கொண்டுவந்து வைத்தேன் என்று சொன்னேன்.  தலைக்கு கொஞ்சம் உயரமாக இருந்தால்தான் என்னால் உறங்க முடியும்  அதற்காக உங்கள் தலையணையை தந்தீர்களே என வருந்தினார்.  அதைப் பார்த்துக்கொண்டே வந்த என் சித்தப்பா “ என்ன தங்கவேல் பிள்ளை   பட்டணத்து பெண்ணிற்கு உங்கள் மேல் என்ன இரக்ககுணம் பார்த்தீர்களா?  பரவாயில்லை அந்த தலையணையை நீங்களே மதியம் இங்கு தூங்க உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள்” என பெருமையாக சொல்லிவிட்டு சென்றார்.  தங்கவேல் பிள்ளைக்கு ரொம்ப சந்தோஷம். அன்று நானும் ஏதோ கர்ணனில் அளவில் தானம் செய்துவிட்ட மகிழ்ச்சியில் இருந்தேன்    இன்று காலை கவிழ்ந்த செருப்பு ஜோடியை பார்த்தபோது சின்ன வயதில் பசுமையாக இருந்த நினைவு வந்ததில் எனக்குள் நானே சிரித்துக்கொண்டு நடைபயிற்சியை முடித்துக்கொண்டு வந்தேன்  சில நினைவுகள் மனதில் என்றும் பசுமையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை

ஸ்ரீ வேணு கோபாலனின் திவ்ய தரிசனம்

கடந்த ஒன்றரை வருடங்களாக எங்கு பார்த்தாலும் கரோனா வைரஸ்  லாக்டவுன்  ஊரடங்கு உத்திரவு  கடைகள் அடைப்பு  என்ற வார்த்தைகளையே கேட்டு கேட்டு அலுத்து விட்டோம்.  வெளியே போக முடியாது.  தொலைக்காட்சியைத் திறந்தால் நீல நிற உடையில் மருத்துவர்களும் செவிலியர்களும் மனித உயிர்களைக் காப்பாற்ற நடக்கும் போராட்டம்.  செய்தித்தாளைப் பிரித்தால் வைரஸின் கோர தாண்டவம் அதனால் நடந்த உயிர் இழப்புக்கள்.  இதைத் தவிர வேறு செய்திகளில்லை.

திரையரங்குகளும் பொது இடங்களும் மனிதர்கள் நடமாட்டமில்லாமல் மூடப்பட்டன.  கடவுள்களும் கதவுகளை மூடிக்கொண்டுவிட்டனர்.  மனிதர்கள் பட்ட அல்லல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  உலகமே ஸ்தம்பித்து நின்றது.

தற்சமயம் எல்லாம் சற்றுக் கட்டுக்குள் வந்தது போல் தோன்றுகிறது.  அதனால் இங்கு எல்லாம் கொஞ்சம் திறக்கப்பட்டு மனிதர்கள் நடமாட்டம் காணப்படுகிறது.  நீண்ட நாட்கள் அடைப்பட்டுக் கிடந்த நாங்கள் நேற்று மாலை வெளியே கிளம்பினோம் என் வீட்டிலிருந்து சுமார் 9 கிமீ தூரத்தில் இருந்த அம்முகுடா என்ற இடத்தில் உள்ள பழைய கால ஸ்ரீ ராதா ருக்மிணி சமேத வேணுகோபால ஸ்வாமி தேவஸ்தானம் என்ற கோவிலுக்கு போனோம். 

1818ல் கட்டப்பட்ட கோவில் அது.  இராணுவ வீர்ர்களில் குடியிருப்புக்களின் மத்தியில் மிகப்பெரிய நிலத்தில் சுற்றிலும் பெரிய பெரிய மரங்களின் நிழலில் கட்டப்பட்டு நிற்கிறது.  உள்ளே எல்லா ஆழ்வார்களின் பெயர்களிலும் அந்தக் கால கல்தூண்கள் அந்தக் கோயிலைத் தாங்கி நிற்கின்றன.  உள்ளே பெரிய பாறையைக் குடைந்து அதையே கருவறையாகக் கொண்டு தனக்கு பிரியமான ராதை ருக்மணியுடன் குழலூதிக்கொண்டு வெகு கம்பீரமாக நிற்கிறான் ஸ்ரீ வேணு கோபால ஸ்வாமிஅதன் கீழேயே உற்சவ மூர்த்திகளும் வெகு நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. 

வெளியே தனி சன்னதியில் கைகூப்பி கம்பீரமாக நிற்கும் அனுமான்.  கடந்த 100 வருடங்களாக இந்த கோயிலை  ஒரே தமிழ் குடும்பம் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வருகின்றனர்.  அவர்களும் அந்த கோவில் வளாகத்திலேயே குடியிருக்கின்றனர். அதில் திருமதி மஞ்சுளா என்பவரை நான் சந்தித்து இந்த  விவரங்களைத் தெரிந்து கொண்டேன்.  பிரதி சனிக்கிழமை கிருஷ்ண பஜன் நடைபெறும் என்றும் பிறகு மஹாபிரசாதம் வினியோகிக்கப்படும் என்றும் சொன்னார்கள்.  கருவறையைச் சுற்றி பூச்செடிகளும் மரங்களும் மிக ரம்மியமான சூழலைக் கொடுக்கிறது  பிரட்சணம் பண்ணிவிட்டு ஆரத்தி பார்த்துவிட்டு மன நிறைவுடன் திரும்பினோம்.  ஸ்ரீ வேணுகோபலனின் குழலோசை இந்த விஷக்கிருமிகளை தொலைதூரத்திற்கு கண்டிப்பாக விரட்டிவிடும் என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பினோம்.

என் அப்பா

நான் எழுதும் தமிழ் கவிதையில்

நான் கண்ட சிறந்த மூன்று எழுத்துக்கள்

அப்பா

 சில நேரங்களில் பகைவன் போல தெரிந்தாலும்

உன் பாசத்தை மிஞ்சிட யாரும் இல்லை இவ்வுலகில்

உன் கடல் அளவு கோபம் கூட குறைந்து விடுகிறது

உன் பெண்ணில் கண்ணில் ஒரு துளி நீர் வந்தால்

பத்து மாதங்கள் சுமந்தவள் அம்மா என்றால்

காலமெல்லாம் என்னை நெஞ்சில் சுமந்தவர் என் அப்பா

அழகிய உறவாய் அன்பான துணையாய்

உயிர் கொடுக்கும் உறவாய்

குழந்தையின் வழிகாட்டியாய் இருப்பவரே அப்பா

அம்மாவின் பாசம் கருணையில் தெரியும்

அப்பாவின் பாசமோ கடமையில் தெரியும்

அப்பாவின் தோளில் சாய்ந்து

விளையாடியர்வர்களுக்குத்தான் தெரியும்

அதன் சுகம் என்னவென்று

தலைமீது வைத்து வளர்க்கும் அப்பாவை

என்றும் தலைகுனியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

அம்மா எனும் சொல் எனது முதல் மொழியானால்

அப்பா எனும் சொல் எனது முகவரியானதே

என் அப்பாவின் இடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது

எத்தனை உறவுகள் என்னோடு இருந்தாலும்

நான் தேடும் உறவு ஒரே உறவு நீ மட்டுமே

ஏனென்றால் நீ எனக்கு உறவு இல்லை

என் உயிர் அப்பா…………………………………….

Every verse of the poem describes the boundless connection and the unconditional love a daughter and a dad hold for each other. The best gift any dad can get from a daughter. I am sure Thatha will be elated in whichever world he is with this scintillating poem of yours. Very thoughtfully penned Amma. Truly commendable

🙌

🏻

🙌

🏻

🙌

🏻

👏

🏻

மோர் குழம்பு

எங்க  பாட்டி,  அம்மா,  இப்போ ஆத்துகாரி இவா அத்தனை பேறும் ஒரு விஷயத்துல நல்ல எக்ஸ்பர்ட்.  எல்லா குழம்பும் போரடிச்சி போயாச்சினா கைகுடுக்கும் கை இது.  கல்யாணம்,  விசேஷம் எல்லாத்துலியும் மஞ்சள் குங்குமத்தோட மங்களகரமா நிக்கற பெண் மாதிரி  பாக்கரச்சேயே பளிச்சுனு வசீகரிக்கும். மத்த குழம்புக்கு எல்லாம் இல்லாத ஸ்பெஷலிடி இந்த குழம்புக்கு உண்டு.  இவர் பிரதம மந்திரி மாதிரி,  அகில பாரத சொத்து.இல்லையா பின்ன.  வடக்கே பஞ்சாப்ல மற்றும் மேற்க குஜராத்ல கடிங்கற பேர்ல, கிழக்க பீஹார்ல பாரி கடி, தெற்க புளிசேரி மோர்குழம்புனு பல பெயர வச்சிண்டு பெருமையா வலம் வரவன் ஆச்சே.

தமிழ்நாட்டுலியே, தஞ்சாவூர் மோர்குழம்பு, திருநெல்வேலி மோர்குழம்பு, உப்பு சாறு, மோர் சாத்துமதுனு பல வகைகள் இருக்கு.  வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாதிரி, மோர் குழம்ப பொறுத்த வரைக்கும் தான் (காய்) பத்தி கவலையே படவேண்டாம்.   பச்சை காய்கறி,  நீர் காய்கறி,  கிழங்கு காய்கறி, வத்தல், எத போட்டாலும், கல்யாணம் ஆகி 10 வருஷம் முடிஞ்சி போன மாமா மாதிரி எல்லாத்தையும் ஏத்துண்டு நல்ல ருசிய குடுக்கற மஹானுபாவன்.   ரொம்ப simple yet very tasty குழம்பு.   ரொம்ப stain பண்ணிக்காம பட்டுனு 5 நிமிஷத்துல ட்ரெஸ் செலக்ட் பண்ணற ஆண்கள் மாதிரினு சொல்லலாம்.  அடுப்புல வச்சி கொதிக்க வெச்சும் பண்ணலாம்,  பச்சை மோர்குழம்பாவும் பண்ணலாம் (அரைச்சிகலக்கி).  எப்படி பட்ட காய்கறிகள வேணாலும் சேக்கலாம்னு சொன்னாலும், வெண்டைக்காய், சேப்பங்கிழங்கு, இந்த ரெண்டும், எப்படி மகாவிஷ்ணுக்காகவே கோதை நாச்சியார் பிறவி எடுத்தாளோ, அந்த மாதிரி  மோர்குழம்புக்குனே பிறவி எடுத்த கறிகாய்கள்.  ரெண்டும் குழம்புல போட்டா கொழகொழத்து   பொயிடும்னு நெனைச்சா, அதுதான் இல்லை,  அத சேக்கற விதமா சேத்தா, கண்டவர் விண்டதில்லை,  விண்டவர்  கண்டதில்லைனு  சொல்லறா மாதிரி, அதை வார்த்தைகளால விவரிக்க முடியாது, ஆனந்தமா அனுபவிக்கத்தான் முடியும்.  அதுவும் மண் சட்டில பண்ணற மோர்குழம்பு, ஆஹா, நம்ம மண்ணுக்கு ஒரு ருசி இருக்குனு ரசிக்க வெக்கும்.  

நம்ப பருப்பு உருண்டை மோர் குழம்பு,  நார்த் இண்டியன் கடிய நம்ம முன்னாடி மண்டி போட்டு பிச்சை எடுக்க வைக்கும்.  மஞ்சள் கலர்ல, தேங்காய் எண்ணெய்,  பளபளக்க,  கடுகு,  கறிவேப்பிலை,  வரமிளகாய் எல்லாம் மிதக்கற மோர்குழம்புல,  அங்கயும் இங்கயும்,  சின்ன சின்ன எலுமிச்சம் பழங்கள் மாதிரி துள்ளி குதிக்கற உருண்டைகள, சூடான சாதத்துல, தேங்காய் எண்ணெய விட்டு பெசஞ்சி,  உருண்டைகள உதிர்த்து கலந்து,  மோர் குழம்ப விட்டு கலந்து சாப்பிட்டா, வடமதுரைல வெண்ணையும் தயிரையும் அள்ளி அள்ளி சாப்பிட்ட குட்டி க்ருஷ்ணனே அத மறந்து போயிடுவார்னா, அதோட ருசி எப்படி இருக்கும்னு பாத்துக்கோங்கோ.   

கடி, மலையாள மோர்குழம்பு, தஞ்சாவூர் மோர்குழம்பு, இதுல  எல்லாம் வெறும் திக்கான மோர் சேர்த்து பண்ணுவா.  ஆனா திருநெல்வேலி மோர்குழம்பு பாதி புளி ஐலம் பாதி மோர் விட்டு பண்ணற பழக்கம்.   மத்த மோர்குழம்புக்கு, தேங்காய்,  பச்சை மிளகாய்,  இஞ்சி,  ஜீரகம்,  இல்லைனா துவரம்பருப்பு,  தேங்காய்,  பச்சை மிளகாய்,  ஜீரகம் அரைச்சு விடுவா. திருநெல்வேலி மோர்குழம்புல தனியா, கடலை பருப்பு,  வரமிளகாய், தேங்காய்,  கொஞ்சம் வெந்தியம்,  கொஞ்சம் உளுத்தம் பருப்பு வறுத்து அரைச்சு சேக்கணும் (தேங்காய் பச்சையா அரைக்கணும்).  தான (காய்), தேங்காய் எண்ணெல நன்னா வதக்கி,  கொஞ்சம் நீர்க்க கரைச்ச புளி ஜலத்த விட்டு கொதிக்க விட்டு,  அதுல அரைச்சு வெச்சத விட்டு கொதிக்க விடணும்.  தேங்காய்,  உளுத்தம் பருப்பு இருக்றதால உடனே கெட்டியாயிடும்.  கடைசியாக தயிர கெட்டி மோரா சிலுப்பி சேத்து,  அடுப்ப சிம்ல வெச்சி நுரைச்சி வந்ததும் (கொதிக்க கூடாது) இறக்கிடணும். மோர்குழம்புக்கு தேங்காய் எண்ணெய் சரியான ஜோடி (வரதராஜ பெருமாளும், காஞ்சிபுரம் இட்லியும் மாதிரி).  தேங்காய் எண்ணெய்ல கடுகு, கறிவேப்பிலை திருமாறினா மணக்க மணக்க திருநெல்வேலிலேந்தே மனுஷால வண்டி புடிச்சி வரவெச்சிடும்.  எங்க அம்மாக்கு கீழநத்தம் ஆத்துல இருக்கற பீல் வந்துடும். 

மோர்குழம்ப பண்ணறது  ஒரு கலைனா அத சாப்பிடறது அதவிட அழகான கலை.  வாழையிலைல சூடா சாதத்த சாதிச்சிண்டு தேங்காய் எண்ணெய விட்டு  மோர்குழம்ப விட்டுக்கணும்.  நன்னா கொழவா வெண்ணெய் மாதிரி பிசிஞ்ச குழம்பு சாதத்துக்கு, எப்படி மஹாலக்ஷ்மி தாயார், பூதேவி தாயார், நீளா தேவி தாயார்னு 3 பிராட்டிகளோட பெருமாள் ஸேவை ஸாதிக்கறாரோ அந்த மாதிரி,  ஒரு பருப்பு உசிலி,  ஒரு கார கரமது,  ஒரு பருப்பு கூட்டு இருந்தா போறும், பல்லாண்டு பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் பிறப்பெடுத்தாலும் சந்தோஷமா  சாப்பிடலாம்.

சாதத்துக்கு மட்டும் இல்லை,  ஸேவைக்கு திருநெல்வேலி மோர்குழம்பு ஒரு perfect combination.   நான் முன்னாடி சொன்னா மாதிரி  அரிசி உப்புமாவுக்கு இத தொட்டுண்டு சாப்பிட்டா, அடாஅடா,  தேவாம்ருதம்.  அதெல்லாம் ரசிச்சி சாப்பிடற மனுஷாளுக்கு மட்டும் தான் தெரியும். 

Bharadhwaaj…….

பகிர்தல்: பட்டு சாஸ்திரிகள்

எது நல்ல நாள்?…..எது கெட்ட நாள்?

அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’ என்று கேட்டாள்*எது நல்ல நாள்?…..எது கெட்ட நாள்?அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?

“சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள். ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார்.நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட்டேன்.அதற்கு என் சகோதரி போங்க அண்ணா, நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான், இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.

நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்று கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது? அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டேன். சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர். இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.

நான் மேலும் கூறினேன். அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள். க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.

மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம். பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம்.”

“A Good One For Superstitious People” என்ற தலைப்பில் இன்று எனக்கு வந்த மின் அஞசல் செய்தி இது.அதோடு மேலும் சில செய்திகளும் சொல்லப்பட்டிருந்தன.“செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம், கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. (நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்).இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.வாரத்தில் செவ்வாய், சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது (10 நாட்கள்).மாதத்தின் அஷ்டமி, நவமி நன்மைக்கு உகந்தது அல்ல (4 நாட்கள்).பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை (2 நாட்கள்).ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம், குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட…எப்படி முன்னேற…?என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்?”

அஷ்டமி, நவமி பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதுபற்றி அதிகமாகத் தெரியாது. மேற்கண்ட மின் அஞ்சல் செய்தியைப் படிதுவிட்டு இரண்டு பெண்களிடம் “அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?” என்று கேட்டேன். ‘கெட்ட நாட்கள் என சட்டென பதில் சொன்னார்கள். அப்பொழுதுதான் புரிந்தது எல்லா சகோதரிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று. மேற்கண்ட செய்தியை பிரதி எடுத்துக் கொடுத்தேன். முழுமையாகப் படித்தார்கள். பிறகு மீண்டும் கேட்டேன் “அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?” என்று. அவர்களால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை. மௌனமானார்கள். ஆனால் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது மட்டும் தெரிந்தது.

அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படாவிட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என் று எதுவும் இல்லை’’ என்றார். 

அறியாமை நீங்க…. பகிரவும்.

படித்ததில் பிடித்தது

பகாடி ஹனுமான் கோவில்

கொரானா கொடுமை ஆரம்பம் ஆன நாளிலிருந்து சுமார் கடந்த 9 மாதங்களாக எங்கும் போக முடியவில்லை.  அதன் கொடுமை சற்று குறைந்திருக்கும் இந்த வேளையில் இன்று மாலை நாங்கள் கிளம்பி எங்கள் வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் மகேந்திரா ஹில்ஸ் என்ற இடத்திலுள்ள சில கோவில்களை தரிசிக்க சென்றோம்.

முதலில் நாங்கள் போன கோவில் ஸ்ரீ கிருஷ்ண மட்  உடுப்பி கிருஷ்ணர் கோயில்   இன்று கோபாஷ்டமி  எனக்கு மிகவும் இஷ்டமான உடுப்பி கிருஷ்ணனை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது.  அது மிகவும் சின்ன கோவில் தான் ஆனால் கிருஷ்ணனோ ரொம்ப அழகு  

அங்கிருந்து பின் நாங்கள் சிறிதே தூரத்தில் இருந்த பகாடி சாய் ஹனுமான் கோவிலுக்கு சென்றோம்.  மிக அழகான வினாயகர் தரிசனம்.  அங்கு எல்லா சன்னதிகளுக்கும் படியேறித்தான் போகவேண்டும்   தரை மட்டத்தைவிட மிக அதிக உயரத்தில் அந்த கோவில்கள் இருந்தன.  கார்த்திகை மாதமானதால் சீக்கிரமாகவே இருட்டிவிட்டது.  அந்த உயரத்தில் இருந்து நகரத்தைப் பார்த்து வியந்து தான் போனோம்.  நகரம் முழுவதுமே தீப அலங்காரம் செய்தது போல் மிக அழகாக தெரிந்த்து  கோவிலின் உள்ளேயும் அனைந்து சன்னதிகளின்  தீப அலங்காரம் கண்ணுக்கு விருந்தாக அமைந்தன.  அதனுள்ளே  சிரிடி சாயிபாபா  ஹனுமான்  அம்பாள் சிவன் சன்னதிகள் மிக அழகாக அலங்காரத்தில் கண்ணுக்கு அற்புதமாக அமைந்துள்ளன. வெண் பளிங்கு சிலைகளுக்கு மிக அழகான புடவைகள் கட்டி நகைகள் போட்டிருந்தனர்.  அந்த அம்பாளே இறங்கி வந்து உட்கார்ந்திருப்பதுபோல் இருந்தது. . நீண்ட நாட்களுக்குப் பிறகு திவ்ய தரிசனம் செய்து கொண்டு சுமார் 7 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.

உள்ளே – வெளியே

:ஒரு  மத்யான வேளை. மும்பை லோக்கல் ட்ரைன். அப்போ தான் கூட்டம் கொறச்சலா இருக்கும். மட்டுங்கா போகணும். திரு திருன்னு முழிச்சுண்டு எனக்கு தெரிஞ்ச ஹிந்திலே நாலு பேரு கிட்டே விசாரிச்சுண்டு ஒரு ட்ரைன்ல ஏறினேன். உள்ளே கொஞ்சம் இடம் இருந்தது. போய் நின்னுண்டு பக்கத்துலே இருந்தவன் கிட்டே, எ காடி மட்டுங்கா ஜாயேகி என்று கேட்டேன். அவ்வளவு தான். அவன் என்னமோ ஷாக் அடிச்சபோல பாத்துட்டு, ஹரே, தேரே கோ மாலும் நஹி ? எ fast ஹை, fast ட்ரைன். ஹூஹும், யே காடி நஹி ருகேகான்னு சொல்லிட்டு ஸ்வாரஸ்யமா காது குடைய ஆரம்பிச்சான்.நான் பாவமா நிக்கறேன். நாலு பேர் கிட்ட விசாரிச்சோம். அத்தனை பேருமா தப்பா? இல்லே நம்ம ஹிந்தி தான் தப்பா.? ட்ரைனோ ஸ்பீட் எடுத்து ஓடுது.அப்போ பக்கத்திலே இன்னொரு ஆள் பையில் இருந்து ஜூனியர் விகடனை உருவ, அப்பாடா, நம்மாள் ஒருத்தன் கிடைச்சான்னு பாஞ்சு போய், சார் இந்த ட்ரைன் மட்டுங்கா போகும்ல்லே என்று கேட்க, அவர் கண்ணாடியின் கீழ் வழியாக பார்த்து  விட்டு,  வடிவேலு ஸ்டைலில் இது மட்டுங்கா போகும்  ஆனா ….. நிக்காது. இது fast டு.நீங்க மட்டுங்கா போகனுமா? அப்போ ஒன்னு சொல்றேன் கேளுங்கோ. நான் அஞ்சு ஆறு வருஷமா இந்த ட்ரைன்ல தான் போறேன். தெனமும் இது மட்டுங்கா ஸ்டேஷன் வந்தவுடன் ஸ்லோவா தான் போகும். அதனாலே நான் சொல்ற போது டபக்குன்னு  இறங்கிடுங்கோ. ஒண்ணும் ப்ரச்சனை இல்லே. ஆனாக்க கிழே விழாம இருக்க ஒண்ணு செய்யணும். எறங்கின உடனே ட்ரைனோட கூடவே கொஞ்ச தூரம் ஓடுங்கோ, சரியாய் போய்டும் ன்னு சொல்லிட்டு நியூட்டன் லா ஆப் மோஷனை பத்தி ஒரு சின்ன க்ளாஸ் எடுத்தார். எனக்கோ எப்பிடிடா மட்டுங்காவில் எறங்க போறோம்னுட்டு கிலி பிடிச்சி ஆட்டுது. ஆச்சு, மட்டுங்கா ஸ்டேஷன் வந்துடுத்து.ஹ்ம்ம்.. எறங்குங்கோன்னு அவர் பிடித்து தள்ள தரையில் கால் பட்டதும் எடுத்தேன் ஒரு ஓட்டம். என் lifeலே அந்த மாதிரி ஒரு ஓட்டம் ஓடினதே இல்லை.ட்ரைன் ஸ்லோவா ஆய்டுத்து. ஆனா என் வேகம் அதிகம். அடுத்த compartment வந்துடுத்து.அதிலே இருக்கிறவா நான் இந்த ட்ரைன் லே ஏற ட்ரை பண்றேண்ணு நினச்சு என் கையை பிடிச்சு அலேக்கா ட்ரைன் உள்ளே இழுத்து விட்டுட்டாங்க.அரே வாஹ். ஆப்கோ கித்னா ஹிம்மத். யே fast ட்ரைன் ஹை. து க்யோன் ஐசே கர்தே ஹோ?(உனக்கு எவ்ளோவ் தைரியம்?,இந்த fast ட்ரைன்லெ ஏன் இந்த மாதிரி பண்றே.)மூச்சிரைக்க என்ன நடந்தது என்று தெரியாமல் திருவிழாவில் தொலைந்த குழந்தை போல ‘ஞே’ ன்னு நான் நிற்கிறேன்.அவர்களிடம்  நான் என்னத்தை சொல்ல.எறக்கி விட்டவன் ஒருவன். ஏத்தி விட்டவன் இன்னொருதன்னா ?

*படித்தேன் ரசித்தேன். நீங்களும் மகிழ பகிர்ந்தேன்*VR

அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்


ஆஃபீசர் ஆனாலும் , அப்போதெல்லாம் அப்பாவுக்குஅவ்வளவு சம்பளம் கிடையாது ; வீட்டில்  ஐந்தாறு பசங்கள் உண்டு .ஆம்பிள்ளைப் பசங்களுக்கு அடியும், பொம்பளைப் பிள்ளைகளுக்கு வசவும் தாராளமாய்க் கிடைத்த காலங்கள். பெரியவர்களிடம், மரியாதைகளும், பயமும் வீடுகளில் எப்போதும்  கொஞ்சமாகப் பற்றாக்குறைகள் இருந்தன , யாரோ படிச்சுக் கிழிச்ச பழைய பாட புஸ்தகங்களை வாங்கி Bind பண்ணி படிகிற பழக்கங்கள் பத்தின தயக்கங்கள் எதுவுமே இல்லாத எளிய காலங்கள். இங்க் நிரப்புவது,  ஒழுகுகிற பேனாவின் கழுத்து மரையில்   நூல் சுத்தி , லீக்கை நிறுத்துவம்,   நிப்பு மாற்றுவவதும்,   வேறு  பேனாவின்  பொருத்தமான முடிகளை மாற்றும் எளிய பேனா ரிப்பேர்  டெக்னிக்குகளை,  அனைத்து மாணவர்களும் அறிந்திருந்தனர்!  ‘கிருஷ்வேணி’ பிராண்டு இங்க்தான் விலைசகாயம். துணிமணிகளைத் தோய்ச்சு , இஸ்த்ரி போடுவதிலும், Darning -என்கிற ஓட்டைத் தையல் கலையிலும், வீட்டின் அனைவரும் எக்ஸ்பர்ட்.      ஆனாலும் பாருங்கள் …

..  அனைத்து நாள் கிழமைகளிலும் சர்க்கரைப் பொங்கலோ,  கேசரியோ , இனிப்பு அவலோ, வெல்லப் பாயஸமோ , கொத்துக்கடலை – பட்டாணி சுண்டல் நேய்-வேத்தியங்கள் கட்டாயம் , உண்டு!  பண்டிகைகள் என்றால் …. அம்மாதான் பக்ஷணம் பண்ணுவாள் :  நெய்/  தேங்கா எண்ணை/  நல்லெண்ணை, மற்றும் கடலெண்ணைப் பலகாரங்களின் வாசனைகள் வீடு முச்சூடும் கமழும் !    பாத்திரங்களில் தண்ணீர் பிடிச்சு வைத்தல், வெல்லம் இடிச்சுத் தரல், அவ்வப்போது,  ஊதாங்குழலில் ஊதி,  [லிக்னைட்] கரிக் கும்மட்டியை அணையாமல் பாதுகாத்தல்…..  பண்ணி முடிச்ச பக்ஷண மிக்ஸர் வடை , வகையறாக்களை எண்ணை வடிய – பழைய ஹிண்டு பேப்பரைத் தரையில்  பரப்பிப் பாதுகாத்தல் – இன்ன பிற பணிகளனைத்தும்,  இல்லத்தின் கடைக்குட்டியின் [என்] உபயம் ! 
தெரிஞ்ச மந்திரங்களை வெச்சு ஒப்பேத்தும்  -அப்பாதான் அன்றைய ஆத்து வாத்யார்…. ஸ்வாமியின் முன்னாடி   …ச்சப்பளாங்கோல் போட்டு அமர்ந்து தொடையில் தாளம் தட்டிப் பாடும் அக்காக்களின் குரல்களில்  ஒலிக்கும்  Standard குடும்பப்பாட்டு    நாயகா….நின்னு- வினா ப்ரோ ச்சுடகு” – பாடி முடிச்சபுறம், துளசி கிள்ளிப்போட்டிருந்த பக்ஷணப் பாத்திரங்ளைக் கர்ம சிரத்தையுடன் உத்ரிணீ தீர்தங்களுடன் சுத்தி- ஒத்தியெடுத்து, மொத்தமாய் ஸ்வாமி படங்களுக்கு அப்பிவிட்டு….. ஊதுவத்தி சாம்பிராணி வாசனைகள் கமழும் அடுக்களையின்  தரையில் , மரப் பலகை போட்டு நீர் தெளிச்ச  இலையைத் துடைச்சுண்டு முன் அமரும் புருஷாளுக்கு – அம்மாவும்  அக்காக்களும் , கேட்டுக் கேட்டுப் பரிமாறின ஆவல் நிறைந்த – என் பால்ய காலங்களை நான் நினைத்துக் கொள்கிறேன்


தீபாவளிக்குத்தான்,  அந்த வருஷத்துக்கான. கோடித்துணி பாக்கியங்கள் !  டெய்லரிடம் அதட்டிப்பேச அப்போது யாருக்கும் தைரியம் இருந்ததில்லை….மறுதாள் முதல் ,  அடுத்த மூணு நாட்களுக்கு ,  தபால்காரர்- தெரு பெருக்கற கார்போரேஷன் குப்பை மாட்டு வண்டிக்காரன்-  முதல் …பூம்பூம் மாட்டுக்காரன்- கக்கூஸ் க்ளீனர் பெண்மணிகள்- MES எலெக்ட்ரிக் Fuse போடுகிறவன்-  எனக் க்யூவில் நிற்காத குறையாக அதட்டி இனாம் வாங்கிண்டு போன – திருப்பி அதட்ட இயலாத -இன்றியமையாத கும்பல்….
எதிர்பார்ப்பும், ஆவலும், ஆசையும் , அஹங்காரமே இல்லாத திருப்தியும், சந்தோஷமும் அடுத்த வார முச்சூடும், தினமும் சாய்ங்காலத்தில் : கிழித்த சின்ன வாழையிலையில்  சிற்றுண்டிகளாக- மீந்த பலகாரங்களும்,  பண்டிகைக்கு வந்து போனவர்களின் ஞாபகங்களுமாய்க் கழிந்து விடும்  !
எளிமையான குடும்பச்சூழலில்…. எதிர்பார்ப்பும் ….  பிரமிப்புமாய் …..வளர்ந்த காலங்களின் , எளிமையான  இனிய குதூஹலங்களை…… 

 
………….இப்போதைய உயர் கல்வியும்,  உத்யோக பதவிகளும், உசந்த வருமானங்களும் …. கிராண்டு ஸ்வீட்ஸும்   …. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸும் ,பீட்டர் இங்லாண்டும் …..   ஆலன் சோலியும் …. களவாடிச் சென்றன !!
அப்போது குடும்பத்தில் வருமானம் குறைவு, சந்தோஷம் நிறைய !!
அதுவே எங்கள் பொற்காலம் !

படித்து ரசித்து பழைய ஞாபகங்களை அசைபோட்டு பிடித்ததை பகிர்கிறேன்

காமராஜர்

கர்மவீரர் காமராசரின் அன்னை சிவகாமி அம்மையார், உடல் நலமின்றிப் படுத்தப் படுக்கையாக இருக்கிறார். தன் தாயைக் காண காமராசர் வருகிறார்.*
காமராசரின் சகோதரி நாகம்மாள், கண் மூடிப் படுத்திருக்கும் தன் தாயின் காதருகே குனிந்து, அம்மா, அண்ணன் வந்து விட்டார்.
அடுத்த நொடி திடுக்கிட்டுக் கண் விழிக்கிறார் சிவகாமி அம்மையார். முகத்தில் ஓர் மகிழ்ச்சி, கண்களில் ஓர் புதிய ஒளி பரவுகிறது.
தனது அருமைப் புதல்வனைத் தான் பார்ப்பது, இதுவே இறுதி முறை என்பது அந்தத் தாய்க்குப் புரிகிறது.
அந்தத் தாயின் வாயில் இருந்து, குழறிக் குழறிச் சில வார்த்தைகள் வெளிவருகின்றன.
ஒரு வாய் சாப்பிட்டு விட்டுப் போ.
வேண்டாம், நான் மதுரைக்குப் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்ற காமராசர், அப்பொழுது தான் கவனிக்கிறார், தன் தாயின் விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிவதை.
சரி, எடுத்து வை.
மறுபடியும், தாய் குழறியவாறே பேசுகிறார்.
அடுக்களையில் போய் சாப்பிடப்பா.
அடுக்களையில் நுழைகிறார்.சகோதரி உணவு பரிமாற, பேருக்கு சாப்பிட்டு விட்டு வெளியே வருகிறார்.
அப்போ, நான் வரட்டுமா
கடைசி முறையாகத் தன் மகனைப் பார்க்கிறார் தாய். தன் மகன், தன் வீட்டில் சாப்பிட்டிருக்கிறான் என்னும் மகிழ்ச்சி முகமெங்கும் பரவ,
மகராசனாய்ப் போய் வா.
ஏதேதோ நினைவுகளில் மூழ்கியவாறே, காரில் ஏறிப் பயணிக்கிறார் காமரசர். அருகில் அமர்ந்திருந்த பழ.நெடுமாறன் அவர்கள், மெதுவாக ஒருவிதத் தயக்கத்துடன் கேட்கிறார்.
ஐயா, நீங்கள் வீட்டில் சாப்பிட்டு, எவ்வளவு காலம் ஆகியிருக்கும்.
என்ன, ஒரு 25 அல்லது 30 வருடமாகியிருக்கும்.
இவர் தான் காமராசர்.
சமுதாய நலனுக்காக, சகலத்தையும் துறந்த துறவி.
நன்றி    யாரோ   வாட்ஸ அப்பில் வந்தது    படித்ததில் பிடித்தது  பகிர்ந்தேன்

சைக்கிள் புராணம்

அப்போதெல்லாம்    வீட்டில் சைக்கிள் இருந்தாலே கெளரவமாகப் பார்க்கப்பட்டது.அதிலும் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் பசங்க வந்தால்,அவர்கள் பணக்கார வீட்டுப் பையன்கள் என்று எல்லோருமே சொல்லுவார்கள்.இப்போது லோன் கிடைக்கிறது என்பதற்காக கார் வாங்கிவிட்டு, பிறகுதான் கற்றுக்கொள்கிறார்கள்.ஆனால் அப்போதுசைக்கிள் ஓட்டத் தெரியாமல்,அப்பாக்கள் சைக்கிள் வாங்கித் தரமாட்டார்கள்.’முதல்ல சைக்கிள் ஓட்டக் கத்துக்கோ. அப்புறம் பாக்கலாம்’ என்று பதில் வரும்.

சைக்கிளே இல்லாமல் எப்படி ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்வது?அதற்குத்தான் வாடகை சைக்கிள் கடைகள் இருந்தன.இப்போதும்  உலக அதிசயமாக ஏதோவொரு ஊரில், இருக்கின்றன.ஒருமணி நேரத்துக்கு அப்போதெல்லாம் 20 பைசா என்றிருக்கும்.அதிலும் சின்ன சைக்கிள் கூட உண்டு.கேரியர் வைத்த சைக்கிள்,கேரியர்இல்லாத சைக்கிள்,டைனமோ வைத்த சைக்கிள் என்று வாடகைக்கு விடுவார்கள்.‘நோட்ல பேரும் டைமும் எழுதிக்கிட்டு எடுத்துட்டுப் போ’ என்று விசிறிக்கொண்டே,தாத்தாவோ பாட்டியம்மாவோ சொல்லுவார்கள்.உடனே வாடகை சைக்கிள் எடுக்க வந்த சின்னப்பசங்க முதல் பலரும்10.20 மணிக்கு சைக்கிள் எடுத்தால், 10.30 என்று எழுதுவார்கள்.அந்த ஒரு பத்து நிமிஷம்,இன்னும் கொஞ்சம் ஓட்டலாமே என்கிற ஆசையின் வெளிப்பாடுதான் அது!

வாடகை சைக்கிள் எடுப்பவர்கள், நியூமரலாஜிப்படி அந்த எண் கொண்ட சைக்கிளை எடுப்பார்கள்.’ஏழாம் நம்பர் வண்டி வெளியே போயிருக்குப்பா’ என்று சொன்னால், அந்த சைக்கிள் வரும்வரைக்கும் காத்திருப்பார்கள்.இன்னும் சில காமெடிகளும் நடக்கும்.சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு,தெரிந்தவரிடம் அல்லது நண்பரிடம் அல்லது உறவினரிடம் பணம் கேட்கச் செல்வார்கள்.பணம் கிடைக்காத நிலையில், சைக்கிளை விடவும் பணமிருக்காது. அதற்காக, நான்கைந்து நாட்கள் சைக்கிளை வைத்துக்கொண்டு சுற்றுபவர்களும் உண்டு.பிறகு பணம் வந்ததும் சைக்கிளை ஒப்படைப்பார்கள்.‘செகண்ட் ஹேண்ட்’ சைக்கிள் வாங்கிவிட்டாலே பசங்களுக்கு தலைகால் புரியாது.அந்த வண்டியைத் துடைப்பது என்ன, தேங்காய் எண்ணெய் தொட்டு பாலீஷ் போடுவதென்ன,உப்புத்தாள் கொண்டு,வீல்கள் இரண்டையும் தேய்த்து பளிச்சென்று ஆக்குவதென்ன…என எப்போதும் சைக்கிள் பற்றிய நினைவுகளுடனேயே இருப்பார்கள்.

எண்பதுகளில் ராலே சைக்கிள்தான் கதாநாயகன்.ராலே சைக்கிள் கமல் என்றால் ஹெர்குலிஸ் சைக்கிள் ரஜினி.நடுவே, விஜயகாந்த், சத்யராஜ், மோகன் மாதிரி அட்லஸ், ஹீரோ என்றெல்லாம் சைக்கிள்கள் இருந்தன.‘ராபின்ஹூட்’ என்றொரு சைக்கிள். அந்த ஹேண்டில்பாரில் இருந்து சீட் வரை உள்ள தூரம், கம்பீரம் காட்டும்.பத்துமுறை பெடல் செய்தால்,ஒரு கி.மீ. தூரத்தை சுலபமாகத் தொடலாம் என்றுஅந்த சைக்கிள் வைத்திருப்பவர்கள் பந்தா காட்டுவார்கள்.ஆனால் அந்த சைக்கிள் பாண்டிச்சேரியில்தான் கிடைக்குமாம். சொல்லிச் சொல்லி அலட்டிக்கொள்வார்கள்.டைனமோ இல்லையெனில்போலீஸ் பிடித்த காலமும் உண்டு. அபராதம் கட்டவேண்டும்.அதேபோல்,சைக்கிள் செயின் அடிக்கடி கழன்றுகொள்ளும் போது,அதை மாட்டுவதற்கு முயற்சிக்கும் போது, கையெல்லாம் மையாகியிருக்கும்.‘இந்த சைக்கிளுக்கு ஒரு விமோசனம் வரமாட்டேங்கிது’ என்று அலுப்பும்சலிப்புமாக அந்த சைக்கிளுடனே பயணிப்பார்கள்.‘ஓவராயிலிங்’. சைக்கிள் மருத்துவத்துக்கு இதுதான் பெயர்.அக்குவேறு ஆணிவேறு என கழற்றி ஆயிலில் ஊறப்போட்டு,அதைத் தேய்த்து, சுத்தம் செய்து, திரும்பவும் பொருத்தி,ஹேண்டில் பார் கைப்பிடி,சீட்டுக்கு முன்னே இருக்கும்பார் பகுதிக்கு ஒரு கவர்,சீட்டுக்கு குஷன் கவர்,இரண்டு வீல்களுக்கும் நடுவே கலர்கலராய் வளையம் என சைக்கிளுக்கு அழகுப்படுத்துவதுஒரு கலை.

இன்னும் சிலர்,சின்னச்சின்ன மணிகளை,வீல் ஸ்போக்ஸ் கம்பிகளுக்குள் வரிசையாக கோர்த்துவிடுவார்கள்.டைனமோவுக்கு மஞ்சள் துண்டுஅல்லது மொத்தமாக மெத்மெத்தென்று ஒரு கவர் என்று மாட்டுவார்கள்.இப்போது எதற்கெடுத்தாலும் பைக்கை எடுக்கிறோம்.கறிவேப்பிலை வாங்கவே,டூவீலரை எடுத்துக்கொண்டுதான் செல்கிறோம்.அப்போது சைக்கிளில் சிட்டாகப் பறந்து, எட்டெல்லாம் போட்டு,கெத்துக் காட்டுவோம்.சைக்கிளின் ரெண்டுபக்கமும்பெல் வைத்து,வித்தியாச ஒலி ழுப்புவார்கள்.மாற்றங்கள். வேகங்கள்.சைக்கிளின் மதிப்பும் மரியாதையும் டூவீலர்களால் குறைந்துவிட்டன.

‘என்னடா மாப்ளே…இன்னமும் சைக்கிளை ஓட்டிக்கிட்டிருக்கே.இப்ப ஒரு சைக்கிள் நாலாயிரம் ரூபா.இதுக்கு செகண்ட் ஹேண்ட்ல எக்ஸ் எல் சூப்பரே வாங்கிடலாம்’ என்றார்கள்.அப்பா ஓட்டிய சைக்கிள்,முதன்முதலில் வேலைக்குச் சென்ற போது வாங்கிய சைக்கிள் என்பதெல்லாம்மியூஸியம் போல் வீட்டில் வைக்கப்பட்டு, பிறகு அவற்றுக்கு இடமில்லை என்று காயலான் கடைக்குப் போடப்பட்டன.இப்போதெல்லாம் ஒரு வீட்டில்,ரண்டு அல்லது மூன்று டூவீலர்கள் இருக்கின்றன.அப்பாவுக்கு பைக்,மனைவிக்கு ஆக்டீவா,மகளுக்கு ஸ்கூட்டி என்று உள்ளதுகொடுத்து வைத்த தலைமுறை  ஆனாலும்  *அந்த ஆனந்தம் இன்று யாருக்கும் கிடையாது* என்பதே உண்மை.

 

படித்ததில் பிடித்தது.