ஒரு வீட்டில் :ட்ரெண்டி மருமகளும்..அப்ரசெண்டி மகனும்…ஏண்டா பாலாஜி! டேபிள் மேல போளி வச்சிருந்தேனே.. நன்னாருந்துதோ….சூப்பராருந்தது… ஆமா நீ பண்ணினியா?இல்லடா! என் ப்ரெண்ட் ஜானுவாத்தில கொடுத்தா.. உனக்குப் பிடிக்குமேன்னு எடுத்துண்டு வந்தேன்…. வந்ததும் சூடு பண்ணி நெய் தடவிக் கொடுக்கலாம்னு நினைச்சுண்டிருந்தேன்…நீ வெறுமயே சாப்பிட்டுட்ட போல.அதெல்லாம் காயத்ரி சூடு பண்ணிக் கொடுத்துட்டா…. நான் பாதி , அவ பாதி எடுத்துண்டோம்…ம்… அதானே பாத்தேன்… அம்மாக்கு துளி வைக்கணும்னு தோணித்தா.. வண்ணாத்திக்கு வண்ணான் மேல ஆசை . வண்ணானுக்கு கழுதை மேல ஆசை….
இப்ப யாரை கழுதைன்றேள்?…வந்துட்டா கழுகுக்கு மூக்குல வேர்த்தா மாதிரி….ஆமா… மொதல்ல கழுதைன்னேள், இப்ப கழுகுன்றேள், ஆக மொத்தம் என்னை மனுஷியாவே மதிக்கல….அம்மா தாயே! ஆரம்பிச்சுடாதே… நா யதார்த்தமாத்தான் சொன்னேன்…என்ன யதார்த்தம்? ஒரு பதார்த்தம் சாப்பிட்டதுக்கு என்னைக் கழுதையாக்கியாச்சே…!காயு! என்னதிது… ! ஏதோ அம்மா வாய் தவறிச் சொல்லிட்டா… அதுக்குப் போய் எதுக்கு இப்படி வால் வால்னு கத்தற?பாத்தேளா பாத்தேளா… வால் வால்னு கத்தறேனாம்.. அப்ப நானென்ன நாயா? மாடாட்டம் உழைச்சுக் கொட்டறேன்… ஆனா என்னை நாயாட்டமாத்தானே நடத்தறேள். சதா உங்க காலை சுத்திண்டு இந்த வீட்டையே சுத்திண்டு…..சரி சரி விடு….. வந்ததும் வராததுமா மல்லுக்கு நிக்காதே…. ஏதோ காக்காக்கு போடற மாதிரி எனக்கு ஒரு விள்ளல் வைக்கப்படாதான்னு கேட்டுட்டேன்.. அதுக்குக் கூட ஒரு கொடுப்பினை வேணும்… எறும்பாட்டமா சிந்தினது சிதறினதை சாப்டு வாழ வேண்டியிருக்கு….

அடடா! ஆரம்பிச்சுட்டேளா உங்க ட்ராமாவை… கார்த்தால ஆறு இட்டிலி தேங்காய் சட்னியோட, நாலு இட்லி நல்லெண்ணெயை குழைச்சு மிளகாய் பொடியோடன்னு… எந்த ஊர்ல எறும்பு இப்படி சாப்பிடறது? அத்தோட விட்டுதா,, கெட்டித்தயிர்ல ஒண்ணு, அதுக்கப்புறம் ஒரு ஸ்ட்ராங் காப்பி வேற…பாத்தியாடா.. நான் சாப்பிட்டதுக்கெல்லாம் கணக்கு வச்சுண்டிருக்கா, உன் பொண்டாட்டி… எனக்கும் உனக்கும் இட்டிலியை போட்டு அனுப்பிட்டு, சமையலறைக் கதவைச் சாத்திண்டு பூனையாட்டமா சத்தமே போடாம நன்னா நாலு நெய் ரோஸ்ட் சாப்பிடறாளே.. இன்னிக்கு வரைக்கும் ஏன்னு கேட்டிருக்கேனா சொல்லு….ஓஹோ… என்னை வேவு பார்த்தாறதோ…. …இந்த முதலைக்கண்ணீர் வடிக்கறதை நிறுத்துங்கோ… எங்க பாட்டி அப்பவே சொன்னா, உன் மாமியாருக்கு பாம்புக்காதுடி…ஆந்தைக்கண்ணுடி எல்லாப் பக்கமும் பாக்கறா.. எல்லாத்தையும் ஒட்டுக்கேக்கறான்னு… நான் நம்பல… இப்பன்னா தெரியறது…
ஏது… அந்த மூஞ்சுறாட்டம் முழிச்சிண்டு நின்னாளே அந்த பாட்டிதானே.. அப்பமே எனக்கு டவுட்டுதான்… அரபி ஒட்டகமாட்டம் எல்லாத்துலயும் வந்து தலைய விட்டாளேன்னு…..ஆமாமா… எங்க பாட்டி அரபி ஒட்டகம்னா… உங்கக்காவை என்ன சொல்றது? குள்ளநரியாட்டமா என்னென்ன வேலை செஞ்சான்னு சொல்லணுமான்ன?ஆமா… அப்பத்தானே நீங்கள்ளாம் என்னென்ன ஏமாத்து வேலை செஞ்சேன்னு தெரிஞ்சது… பொண்ணு கிளி கொஞ்சறதுன்னு சொன்னா, அப்புறம் தான் தெரிஞ்சது பொண்ணுக்கு மூக்கும் நீளம், நாக்கும் நீளம்னு…ஆமாமா… நீங்க பெரிய பஞ்சவர்ணக்கிளி பாருங்கோ…. குயில் குரல்னா.. ஆனா வாயத் தொறந்தா யானை பிளிறல் தான்…..அடியே.. யானைக்கு மதம் பிடிச்சா என்னாகும் தெரியும்ல….ஏறி மிதிச்சா,,,,,இந்த சிங்கம் டயலாக்கெல்லாம் என்கிட்ட வேணாம்…. அப்புறம் எனக்குள்ள தூங்கிட்டிருக்கற மிருகத்தையெல்லாம் உசுப்பி விட்ராதீங்கோ…. வீடு தாங்காது….
பாத்தியாடா… என்ன பேச்சு பேசறான்னு…நீயானா அவ போட்றா ராமான்னா, இந்தா எண்ணிக்கோன்னு… குரங்காட்டமா தோப்புக்கரணம் போட்டுண்டிருக்க….அய்யோ அய்யோ…. ஒரே ஒரு போளி… அதுக்கு போய் கொஞ்ச நேரத்துல இங்க ஒரு போர்க்களமே வந்துருத்து…எனக்கே வீட்டுல இருக்கோமா இல்ல வண்டலூர் ஜூவுல இருக்கோமான்னு டவுட்டே வந்துருத்து…இரு இரு ஜூன்னு சொன்னவுடனே ஞாபகம் வருது… அச்சச்சோ மணி எட்டாச்சே… ஏண்டிம்மா காயு… எட்டரைக்கு நாம ஜூம்ல லாகின் பண்ண வேணாமோ…அது ஜூமில்ல… ஸ்ட்ரீம்யார்ட்…ஏதோ ஒண்ணு. ரெண்டு பேரும் மேட்சா ட்ரெண்டியா ட்ரெஸ் பண்ணிக்கணுமே… சீக்கிரமா வா… நீ போன வாரம் வாங்கினியே அந்த காஞ்சிபுரத்தைக் கட்டிக்கோ, என்னோட ரெட்டை வட அட்டிகை அதுக்கு மேட்சா இருக்கும்… எனக்கு உன்னோட முத்து செட்டைக் கொடு…ஆமா… நாம என்னென்ன பாட்டெல்லாம் பாடப்போறோம்?…..
மொதல்ல… அம்மா என்றழைக்காத உயிரில்லையேன்னு நான் ஆரம்பிக்கறேன்… நீங்க மருமகளே மணமகளே வா வான்னு பாடணும். உடனே நான் அம்மாவை வாங்க முடியுமான்னு பாடுவேன்.. நீங்க கண்ணான கண்ணே பாடணும்… அப்புறம் நான் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைன்னு பாடணும். கடைசில ரெண்டு பேருமா சேர்ந்து நல்லதொரு குடும்பம்னு பாடி முடிக்கணும்… புரிஞ்சதா…ஏண்டா இப்படி பேந்த பேந்த கோட்டானாட்டம் முழிச்சிண்டிருக்க. .சட்டுபுட்டுனு அந்த கம்ப்யூட்டரை ஆன் பண்ணி மெசஞ்சர்ல ஸ்ட்ரீம்யார்ட் லிங்க் கொடுத்திருப்பா. அதை க்ளிக் பண்ணி வை… அவா அவா வெட்டிண்டு வான்னா கட்டிண்டு வர்றா… நமக்குத்தான் எருமை மாடாட்டம் அசமஞ்சமா வந்து நிக்கறது.விடுங்கோம்மா… அதெல்லாம் நாம வாங்கிண்டு வந்த வரம். தெருவெல்லாம் தேனாறா ஓடினாலும், கேன்ல புடிச்சு வைக்க கரடிக்குத் தெரியுமோ… பல்லி மாதிரி எப்பப்பாரு மோட்டுவளைய பாத்துண்டு உக்காந்திருக்கத்தான் தெரியறது… இருங்கோ பல்லின்ன ஒடனே ஞாபகம் வருது… அங்க சபா மெம்பர்ஸை பாத்தவுடனே ஈன்னு கொரில்லா மாதிரி பல்லிளிக்காம, பதவிசா நடந்துக்கோங்க… கெக்கேபிக்கேன்னு ஏதாச்சும் ஜோக் அடிக்கறேன்னு ஒளறினேள்….
Contributed by Kannan Venkatakrishnan.
