பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் உங்களை பக்குவப்படுத்துகிறான்

 

தோல்வி என்று ஒன்று வந்து விட்டால் நாம் நிலை குலைந்து போய் விடுகிறோம்.எத்தனை முயற்சிகள், உழைப்புகள் எல்லாம் வீண் என்று நமக்குள்ளேயே களைத்துப் போகிறோம்.தோல்வியை வேறு கோணத்தில் சிந்திப்போமா…நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றிருந்தால் உங்கள் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட திசையில் பயணித்திருக்கும்.ஒரு தோல்வியின் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்  இதைவிட ஒரு சிறப்பான வாழ்க்கை அமைய உங்களுக்கு வழிகாட்ட நினைத்திருக்கலாம்.

ஒரு  நண்பர் பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மார்க்குகள் எடுக்க முடியாததால் இன்ஜினியரிங்கில் சேர முடியவில்லை. எல்லோரும் அவரை தோல்வியடைந்தவனாக பார்த்தார்கள்.ஆனால் அவர் கணிதம் படித்து, கணினி தொடர்பான வகுப்புகளில் சேர்ந்து தேர்ச்சி பெற்று இன்று 100 பேருக்கு மேல் அவர் கம்பெனியில் வேலை பார்க்கின்றனர்*ஒரு வேளை இன்ஜினியரிங் படித்திருந்தால் ஏதோ ஒரு கம்பெனியில் வேலைபார்த்துக் கொண்டிருப்பார்..

ஒரு நண்பர் ஆரம்ப கட்டத்தில் ஏதேதோ முயற்சி செய்தார். எல்லாம் தோல்வி அல்லது மனதுக்கு பிடிக்கவில்லை. யோகாவில் நுழைந்தார். எல்லோரும் திரும்பப் பார்க்கும்படி தன்னை உயர்த்திக் கொண்டார். உலகம் முழுவதும் அவருக்கு நண்பர்கள் வரவேற்பு.இலக்குகளை நிர்ணயம் செய்து தோல்வியடைந்தால் மனதை தளர விடாதீர்கள். இதைவிட சிறப்பான வாழ்க்கைக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் உங்களை பக்குவப் படுத்துகிறான் என்பதை உணர்வோம் …

நீங்கள் எதிர்பார்த்ததை விட பெரிய திட்டத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் உங்களுக்காக வைத்திருக்கிறார்.பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் உங்களுக்காக வைத்திருக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக உங்கள் பல திட்டங்களை தடம் புரட்டுகிறார்.உலகம் தோல்வி என்று அழைப்பதை நாம் திருப்புமுனை என்று அழைப்போம்…*எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் வானம் தொட்டுவிடும் தூரம் தான்.

அதிர்ஷ்ட தேவதையின் கணவர்

பகவான் ஸ்ரீகிருஷ்ணரோ யாருக்கும் துரதிர்ஷ்டத்தை கொடுப்பதில்லைஆட்சியில் இருக்கும் பொறுப்பான மனிதன் சாதுவின் குணங்களுடன் இருக்க வேண்டும் என்றபோதிலும், கோழையாக இருக்கக் கூடாது.

உதாரணமாக, பகவான் இராமரிடம் சாதுவின் குணங்கள் பொதிந்திருந்த காரணத்தினால், இன்றும் மக்கள் அவரது அரசாங்கத்தில் (இராம ராஜ்ஜியத்தில்) வாழ விரும்புகின்றனர். ஆனால் பகவான் இராமர் ஒருபோதும் கோழைத்தனத்தைக் காட்டவில்லை.இராமரின் மனைவி சீதையைக் கடத்திச் சென்ற இராவணன் அவருக்கு அக்கிரமம் இழைத்தவனாவான்.  அதனால் அவர் அவனுக்கு உலக சரித்திரத்தில் இணையற்ற, தேவையான பாடத்தை நன்கு கற்பித்தார்.

இருப்பினும், அர்ஜுனனின் விஷயத்தில் அக்கிரமக்காரர்கள், வித்தியாசமானவர்கள்—சொந்த பாட்டனார், சொந்த ஆச்சாரியர், நண்பர்கள், மகன்கள், பேரன்கள் முதலியோர்—என்பதைக் கருத வேண்டும்.அதனால் அவர்களின் மீது சாதாரண அக்கிரமக்காரர்களின் மீது தீவிர நடவடிக்கை எடுப்பதைப் போல செயல்படக் கூடாது என்று அர்ஜுனன் எண்ணினான். அதற்கும் மேலாக, சாதுக்கள் மன்னிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.எந்த அரசியல் அவசர நிலைமையையும்விட சாதுக்களைப் பொறுத்தவரையில் இத்தகைய அறிவுரைகளே முக்கியமானவை. அரசியல் காரணங்களுக்காக சொந்த உறவினர்களைக் கொல்வதைக் காட்டிலும், நற்குணத்தையும் தர்மத்தையும் அடிப்படையாகக் கொண்டு அவர்களை மன்னித்துவிடுதல் சிறந்தது என்று எண்ணினான்.

அர்ஜுனன். தற்காலிகமான உடல் சுகத்திற்காகக் கொலை செய்வதை அவன் இலாபமென்று கருதவில்லை. ராஜ்யங்களும் அவற்றினால் பெறப்படும் சுகங்களும் நிலையானவை அல்ல. அவ்வாறிருக்க உறவினரைக் கொல்வதன் மூலம் தனது சுய வாழ்க்கைக்கும் நித்திய விடுதலைக்கும் ஏன் ஆபத்தை தேடிக்கொள்ள வேண்டும்?இவ்விஷயத்தில் “மாதவ” அல்லது ‘அதிர்ஷ்ட தேவதையின் கணவர்’ என்று கிருஷ்ணரை அர்ஜுனன் அழைப்பதும் மிக முக்கியமானதாகும். அதிர்ஷ்ட தேவதையின் கணவரான அவர், இறுதியில் துரதிர்ஷ்டத்தைக் கொடுக்ககூடிய செயலைச் செய்யும்படித் தன்னைத் தூண்டக் கூடாது என்று அர்ஜுனன் சுட்டிக் காட்ட விரும்புகிறான்.

ஸ்ரீ கிருஷ்ணரோ யாருக்குமே துரதிர்ஷ்டத்தைக் கொடுப்பவரல்ல என்பதால், அவரது பக்தர்கள் விஷயத்தில் சொல்ல வேண்டிய தேவையே இல்லை..

திருவருளும் குருவருளும்

அய்யா நான் மகா விஷ்ணுவைக்  கண்ணால் காண முடியுமா….?” என குரு ஒருவரிடம் கேட்டான் சுரேஷ் “தம்பீ……! நான் உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ….,உன்னிடம்  ஒரு கேள்வி கேட்கலாமா….?   இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா…?”அய்யா எனக்கென்ன கண் இல்லையா…….?இந்த உடம்பை நான் எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.” …!!

“தம்பீ……!  கண் இருந்தால் மட்டும் போதாது……!!கண்ணில் ஒளியிருக்க வேண்டும்……!! காது இருந்தால் மட்டும் போதுமா…..? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும்…..!!அறிவு இருந்தால் மட்டும் போதாது…….!!அதில் பரிபூரண ஸ்ரீ மகா விஷ்ணுவின் அன்பை உணரும்  நுட்பமும் திட்பமும் அமைந்திருக்க வேண்டும்…!! உடம்பை நீ பார்க்கின்றாய்….!!

  இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா….?””ஆம். நன்றாகத் தெரிகின்றது.” “தம்பீ…… …! அவசரப்படாதே…..!! எல்லாம் தெரிகின்றதா….?””என்ன ஐயா விளையாட்டு….! தெரிகின்றது…, தெரிகின்றது…, என்று எத்தனை முறை கூறுவது….?எல்லாம்தான் தெரிகின்றது….?”

 “தம்பீ….!   எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா…?” “ஆம்! தெரிகின்றன.”…..!! “முழுவதும் தெரிகின்றதா…?” அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில்,”முழுவதும் தெரிகின்றது” என்றான்….!! “தம்பீ…!   உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா….?” விழித்தான். சுரேஷ் “ஐயா…! பின்புறம் தெரியவில்லை.” “என்றான்.

தம்பீ…! முதலில் தெரிகின்றது.. தெரிகின்றது.. என்று பலமுறை சொன்னாய்….!! இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே….!!சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா…?”  “முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.’…!!நிதானித்துக் கூறு….!!.””எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன்….!!எல்லாம் தெரிகின்றது.’…!!'”தம்பீ…! முன்புறத்தின் முக்கியமான, ” முகம் தெரிகின்றதா”…..?சுரேஷ்  துணுக்குற்றான்.பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன்,”ஐயனே…! முகம் தெரியவில்லை….!” என்றான்.

 “குழந்தாய்…!    இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை…..!!முன்புறம் முகம் தெரியவில்லை……!!நீ இந்த உடம்பில் சிறிது தான் கண்டிருக்கிறாய்…..!!இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்….!!

 அன்பனே…!   இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால்,இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.” …!!இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு, இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல்,ஞானமே வடிவாய் உள்ள ஸ்ரீ மஹா விஷ்ணுவை  காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.”ஒரு கண்ணாடி…..    திருவருள்….!!

மற்றொன்று….       குருவருள்…….!!  திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால்,   “ஞானமே வடிவான ஸ்ரீ மகாவிஷ்ணுவை  காணலாம்”….!!

“தம்பீ…..!       “ஸ்ரீ மகாவிஷ்ணுவைதிருவருள் எங்கும் நிறைந்திருப்பினும்”……,அதனைக் “குருவருள் மூலமே பெறமுடியும்”…..!!” திருவருளும் குருவருளும் ஸ்ரீ மகாவிஷ்ணுவை காண இன்றியமையாதவை.”…..!!!சுரேஷ்  தன் தவறை உணர்ந்து குருவின் காலில் விழுந்து பணிந்தான்…

ஆன்மீக வஸ்து

ஒரு முறை ஒரு பெரிய தேனீ, கண்ணாடி குடுவையில் வைத்திருந்த தேனை பார்த்தது. அந்த தேனை ருசிக்க வேண்டும் என்று எண்ணியது.தேன் குடுவைக்குள் இருப்பதை உணராத தேனீ, வெகு நேரம் அந்த குடுவையை ருசித்துக்கொண்டிருந்தது. தேனை தொட்டு கூட பார்க்காத தேனீ, சிறிது நேரம் கழித்து, தேனை சுவைத்து விட்டதாக நினைத்து தன்னை தானே ஏமாற்றிக்கொண்டது.

அதே போல் பௌதிகவாதிகள் மற்றும் பெயரளவு பக்தர்கள், சிறிது ஆன்மீக புத்தகங்களை படித்து விட்டு  பக்தியின் சுவையை உணர்ந்து விட்டதாக நினைக்கின்றனர் என கூறுகிறார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.ஆனால் பக்தியின் ஆரம்பத்தை கூட அவர்கள் ஆராய்ந்து கண்டுபிடிக்கவில்லை. பக்தியின் ஆரம்பம் பகவான் கிருஷ்ணர் என்பது அவர்களுக்கு தெரியாது  இந்த காலத்தில் மக்கள் பலர், சண்டிதாஸர் மற்றும் வித்யாபதி போன்ற பக்தர்களின் கீர்த்தனைகளை கேட்பதாலும் அவர்கள் பகவானின் நாமத்தை கூறுவதை கேட்பதாலும் பக்தி பரவசத்தை அடைந்து விட்டதாக எண்ணுகின்றனர். ஆனால் அவர்கள் பகவான் கிருஷ்ணரின் லீலைகளின் சுவையை அறிந்திருக்கவில்லை.வேறு சிலர், “மத போதகர்கள்” என்ற பெயர் கொண்டு ஆணவத்துடன் செயல்பட்டு பகவத் கீதையிலும் ஸ்ரீமத் பாகவதத்திலும் தவறுகளை கண்டுபிடிக்கின்றனர். 

ஸ்ரீ சைதன்ய தேவர் கூறுகிறார்:

அப்ரக்ரித வஸ்து நாஹீ ப்ரக்ரித கோசர் 

வேதே புராணேதே யே கஹே நிரந்தர்

“ஆன்மீக வஸ்து என்றும் பௌதிக எல்லைக்குள் வருவதில்லை.  இந்த ஸ்ரீ கிருஷ்ண பக்தியின் சுவையினை  வார்த்தைகளால் விவரிக்க முடியாது என அணைத்து வேதங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது”.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் உணர்த்தியுள்ள ஸ்ரீ கிருஷ்ணர். 

ஸ்ரீ கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் “அஷ்டமி ரோகிணி” என்றழைக்கிறார்கள்.

 கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை “ராசலீலா” என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் இன்றும்  பழக்கத்தில் உள்ளது.ஸ்ரீ கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.

கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற “கீதகோவிந்தம்”, “ஸ்ரீமந் நாராயணீயம்”, “கிருஷ்ண கர்ணாம்ருதம்” ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும். கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்ம சிலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

.

கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணர் பார்வைபடும்.

ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா தலத்தில் அருள்புரியும் கிருஷ்ணரான ஸ்ரீநாத்ஜீக்கு என்னென்ன நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர்.பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, லட்டு, இனிப்பு பூரிகள், மோர்க்குழம்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள்.மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் உணர்த்தியுள்ளார் எம்பெருமான்  ஸ்ரீ கிருஷ்ணர்.

ஸ்ரீகுருவே நமஹ

”சிவா  தன் குருவிடம் கேட்டார் குருநாரே என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள்.நான் என்ன செய்வது..?

குரு சொன்னார்,  அவற்றைப் பொருட் படுத்தாதீர்கள். என்னால் முடியவில்லையே.அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள். அதுவும் முடியவில்லையே சரி. அப்படியென்றால் அவற்றைக் கண்டு சிரித்து விடுங்கள்.

குருவே அதுவும் முடியவில்லை.குரு சொன்னார்,அவமானங்களை உங்களால் நிராகரிக்க முடியவில்லை,கடக்க முடியவில்லை,கண்டு சிரிக்க முடியவில்லை என்றால் சீடரே….நீங்கள் அந்த அவமானங்களுக்கு  தகுதியுடையவர்தான்  என்று அர்த்தம்*..இப்ப என்ன பண்ணலாம் நீங்களே முடிவு பண்ணுங்கள்.

குரு பிரம்மா குரு விஷ்ணு

குரு தேவோ மகேஸ்வர;

குரு சாஷாத் பரப்பிரம்மா

தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

அவசியம் படிக்கவேண்டிய சத்தியங்கள்

காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.

மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா?. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு!’ என்று கூறி விட்டு போய்விட்டார். மன்னன் நடுங்கி விட்டான். தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான்.தான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான். அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பிவைத்தான். இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.

அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். ‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர். இப்படியாக பல விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள். அந்த கணவன், ‘நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?’ எனக் கேட்டான்.‘அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு’ என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.அதற்கு அவளது கணவன், ‘ஓ! தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?’ என்றான். அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத்தொடங்கினாள். ‘சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரிய வரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான்.

ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசி கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள். மேலும் அடுத்தப் பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்’ என்று கூறினாள். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன்.தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும். உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக்கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக்கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.

ஜாக்ரதையாக இருக்க வேண்டாமா?

*மேடை ஏறியாச்சு* , *வேஷம் கலையும் வரை, வேளை வரும் வரை ஆடு பாடு* . *இதை உணர விழித்துக் கொள், ஜாக்ரதை… ஜாக்ரதை* … *என்ற பண்டிதன் சண்முகம்* 

-”காவல்காரன் முனியாண்டி. வழக்கம்போல் தப்பட்டை அடித்துக்கொண்டு நடுநிசியில் ”ஜாக்ரதை” என்று கத்திக்கொண்டே போவான். ஒருநாள் அவசரமாக முனியாண்டி வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் பிள்ளை சண்முகம்  செய்யவேண்டியதாயிற்று. அவன் பிள்ளை சண்முகம் முன் ஜன்மத்தில் ஒரு வேதமறிந்த பண்டிதனாக இருந்தவன். 

எனவே பூர்வ ஜன்ம வாசனை ஞானம் இருந்தது. இரவில் மகன்  சண்முகம் தப்பட்டை அடித்துக்கொண்டு ஜாக்ரதை சொல்லிக்கொண்டு அப்பன் முனியாண்டி வேலையை செய்தான்.அடுத்த நாள் ராஜாவே அந்த காவல்காரன் வீட்டு வாசலில் நின்றான். அந்த பையனைப் பார்க்கத்தான் வந்தான். ”ஐயோ ராஜாவே வந்திருக்கிறார், என் பிள்ளை என்ன பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ, இங்கேயே ஏதாவது தண்டனையை கொடுத்து நிறைவேற்றுவானோ ?” காவல்காரன் முனியாண்டி  நடுங்கினான்.ஆனால் ராஜா அந்த பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தான்? எதற்காக? முதல் நாள் இரவு பையன் சண்முகம் ” ஜாக்ரதை. ஜாக்ரதை” என்று அப்பா  முனியாண்டிபோல் சும்மா கத்திக்கொண்டு போகவில்லை. ஸ்லோகமாக சில வார்த்தைகள் சொன்னதுதான் ராஜாவை மயக்கியது. அந்த நீதி வாக்யங்களை பார்ப்போமா. ஜாக்ரதையாக இருக்க வேண்டாமா?ஆதி சங்கரர் அருளிய இந்த வைராக்ய ஸ்லோகங்களில் சிலவற்றை மட்டும் இங்கே ருசிப்போமா?

“மாதா நாஸ்தி பிதா நாஸ்தி பந்து ஸஹோதரா

அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத்

ஜாக்ரதா ஜாக்ரதா”

அடே தூங்குமூஞ்சி விழித்துக் கொள்ளடா. அப்பன் என்னடா , தாயுமென்னடா, அண்ணனென்னடா தம்பியென்னடா,காசும் பொய் வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் காற்றடைத்த பை, இதையெல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள் ஜாக்ரதை ஜாக்ரதை,“ஜன்மதுக்கம் ஜராதுக்கம் ஜாயாதுக்கம் புந;புந: சம்ஸார ஸாகரதுக்கம் தஸ்மாத் ஜாக்ரதா: ஜாக்ரதா”பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், கட்டின மனையாளோ நடக்கும் துயரம், வாழ்வே சோகம்,மாயம்,விழித்துக்கொள் ஜாக்ரதை.

“காம; குரோதச்ச லோபச்ச தேஹே நிஷ்டந்தி தஸ்கரா;

ஞான ரத்நாப ஹாராய தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா!”

ஆசையும் பாசமும், கோபமும், பேராசையும் திருடர்களப்பா .உன் உள்ளே இருக்கும் ஞானமெனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தை திருடுபவர்கள். விளக்கு எடுத்துக்கொண்டு வெளியே திருடர்களை தேடாதே,உள்ளே, உனக்கு உள்ளே ஒளிந்திருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை.

“ஆசாயா பத்யதே ஜந்து : கர்மணா பஹு சிந்தயா: ஆயுக்ஷீணம் ந ஜாநாதி தஸ்மாத் ஜாக்ரதாஜாக்ரதா”

ஆசையெல்லாம் தோசை தான் மனித மிருகமே, எதிர்பார்த்து ஏமாறுவதே வழக்கமா? நாம், மனக்கோட்டை மன்னார்சாமிகள், அழிவதை சாஸ்வதம் என்று மனப்பால் குடிப்பவர்கள், விழித்துக் கொள்ளவேண்டாமா, ஜாக்ரதை ஜாக்ரதை.“நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள், இளமை வாலிபம் நிரந்தரமல்ல தம்பி, நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிபோய் எறிந்தாகி விட்டது. மின்னல் போலாகும் இந்த வாழ்க்கை, இதில் நீ என்ன நான் என்ன, விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை,.

சூரியன் வருமுன் ஜொலிக்கும் இலையின் மேல் உள்ள பனித்துளி நம் வாழ்வு, சாஸ்வதம் என்று மயங்காதே. சொத்து சுதந்திரம், டாம்பிகம், பேர் புகழ் எல்லாமே, கண்மூடி கண் திறக்கும் வரை தான். கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரமில்லாதவன் அந்த யமன் . ஜாக்ரதை ஜாக்ரதைசாவி கொடுத்தால் அது வேலை செய்யும் வரை தான் இந்த குரங்கு பொம்மை டமாரம் தட்டும்.தலை ஆட்டும் நடக்கும். கர்மா அளிக்கும் நேரம் வரை தான் வேலையே இங்கு.அப்புறம்? வேறென்னஇதில் என்ன யோசிக்க இருக்கிறது. மேடையில் ஏறியாச்சு, வேஷம் கலையும் வரை, வேளை வரும் வரை ஆடு பாடு. இதை உணர விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை என்று கூறி சென்றான் பண்டிதன் சண்முகம்..

நாம் ஆபரணமாகிக் கொண்டிருக்கிறோம்

இளைஞன் மாரி  ஒரு வெள்ளிக்கட்டியைக் கொண்டு வந்து அதை அழகிய வேலைப்பாடுடன் கூடிய ஒரு ஆபரணமாகச் செய்யச் சொல்லி கொல்லனிடம் பணித்திருந்தான். அவனுக்கு அந்தக் கொல்லன் எப்படி அதைச் செய்கிறான் என்று பார்க்கவும் ஆவல் இருந்ததால் ஆரம்பத்தில் இருந்தே கொல்லன் வேலை செய்வதை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தபடியே அங்கு அமர்ந்திருந்தான். கொல்லன் மிகுந்த கவனத்துடன் வெள்ளியை உருக்கிக் கொண்டிருந்தான். அதையே பார்த்துக் கொண்டிருந்த மாரிக்கு இந்த வேலைக்கு பொறுமையும், கவனமும் நிறைய வேண்டும் என்று தோன்றியது.  அந்த இரண்டும் கொல்லனிடம் நிறைய இருந்தன.

”அய்யா… இந்த வெள்ளியை  எவ்வளவு நேரம் சூடுபடுத்த வேண்டும்?” இளைஞன் மாரி  கேட்டான்.”இது உருக ஆரம்பித்து இதன் அழுக்குகள் நீங்கும் வரை இதை உருக்க வேண்டும். வெள்ளி சுத்தமானவுடன் உடனடியாக சூடுபடுத்துவதை நிறுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் வெள்ளி இந்த தீயில் கருகி விடும்” என்று அதிலிருந்து பார்வையை எடுக்காமல் கொல்லன் சொன்னான்.’ஓ இந்த வேலையில் இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறதா’ என்று எண்ணிய அந்த இளைஞனுக்கு உடனே ஒரு சந்தேகம் வந்தது. “அது சுத்தமாகி விட்டது, சூடு செய்வதை நிறுத்த வேண்டும்என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?” 

”எப்போது என் முகம் தெளிவாக வெள்ளியில் பிரதிபலிக்கிறதோ அப்போது வெள்ளி முழுமையாகத் தூய்மையாகி விட்டது என்று தெரிந்து விடும். உடனடியாக நிறுத்தி விடுவேன்” என்றான் கொல்லன்.ஸ்ரீ கிருஷ்ணனாகிய கொல்லனிடம் நம் வாழ்க்கையை ஒப்படைத்து  மிக அழகான நிலைமைக்கு மாற்றச் சொல்லி நாம் இடைவிடா பிரார்த்தனை செய்ய  வேண்டும்.நம் வாழ்வின் பொருளே அது தான். இந்த உலகில் நாம் ஜென்மம் எடுப்பதே ஒரு உயர்வான நிலைக்கு மாறத் தான். வந்த படியே உலகில் ருந்து விடை பெற்றால் அப்படிப்பட்ட வாழ்வில் என்ன அர்த்தம் இருக்கிறது?

இதையே அல்லவா திருவள்ளுவரும் ஒரு குறளில் அழகாகச் சொல்கிறார். 

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்*

*சுடச்சுட நோற்கிற் பவர்க்கு*

(நெருப்பிலே இட்டுச் சுடச் சுடத் தங்கம் ஒளி விடுவது போல துன்பம் வருத்த வருத்த தவம் செய்பவரின் மெய்யறிவு மிகும்)

எனவே வாழ்க்கையின் வெப்பம்,  கஷ்டம் தாளாமல் வருத்தப்படும் போதெல்லாம் இந்த உவமையை நீங்கள் நன்றாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.நம் வாழ்க்கையின்  ஒவ்வொரு நிமிடமும்  ஸ்ரீ கிருஷ்ணன்  கண்காணிப்பில் இருக்கிறது. இந்த வெப்பம் நம் வாழ்க்கையை அழிப்பதற்காக அல்ல, ஒரு அழகான ஆபரணமாக்குவதற்காகத் தான்.இது புரியும் போது வெப்பத்தில்/கஷ்டத்தில்  சுருண்டு விட மாட்டோம். நாம் ஆபரணமாகிக் கொண்டிருக்கிறோம் என்று புரிதலுடனும், நம்பிக்கையுடனும் அதை ஏற்றுக் கொள்வோம்.

புத்திசாலி எலிகள்

அமெரிக்கா ஹார்வார்டு பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ராபர்ட் ரோசந்தால் ஓர் ஆய்வு நடத்தினார்.  அதற்காக மாணவர்களை மூன்று குழுக்களாக பிரித்தார்.  முதல் குழுவிடம் சில எலிகளை கொடுத்து இவை மிகவும் புத்திசாலிகள்  எதைச் செய்ய சொன்னாலும் புரிந்து செய்யும் திறன் பெற்றவை.  சிக்கலான் சூழல்களில் கூட எளிதில் வழி கண்டு  வெற்றி பெறும் என்றார்.  இரண்டாவது குழுவிடம் ஓரளவு புத்திசாலி எலிகள் இவை   ஒன்றுக்கு இரண்டு முறை எதை சொன்னாலும் புரிந்து செயல்படக் கூடியவை.  சிறிது சிரமத்துடன் முயற்சி செய்தால் ஓரளவு ஒத்துழைக்கும் என சில எலிகளைக் கொடுத்தார்.  .

மூன்றாவது குழுவிடம் சில எலிகளை கொடுத்து இவை மிகவும் மந்த புத்தி உடையவை  எந்த வகை பயிற்சி  கொடுத்தாலும் நிறைவேற்றும் திறனற்றவை.  இவற்றிடம் எவ்வித திறனையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது.  என்றார். தங்களிடம் உள்ள எலிகளுக்கு சில பயிற்சிகள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.  

முதல் குழுவினர் தங்க உற்சாகத்தால் நல்ல செயல் சார்ந்த பயிற்சிகளை எளிதாக கற்றுக்கொண்டன எலிகள்.  இரண்டாவது குழுவினர் எலிகளை பயிற்றுவிக்க சிறிது சிரமம் இருப்பதாக கூறினர்.  மூன்றாவது குழுவினர் இந்த எலிகள் மிகவும் மோசம்   பேராசிரியர் கூறியது போல இவற்றால் எந்த முன்னேற்றமும் அடைய முடியாது.  …….. என்றனர்.

    ஆராய்ச்சி முடிவு நாளன்று அனைத்து குழுவும் கூடியது.   அவர்களிடையே பேசிய பேராசிரியர்  மூன்று குழுவுக்கும் ஒரே இடத்திலிருந்து பிடித்த எலிகள்  தான் தரப்பட்டன. எவ்வித பயிற்சியும் தரப்படவில்லை. இப்போது மூன்று விதமாக செயல்படுகின்றன எலிகள்.  ஒவ்வொரு குழுவின் எண்ண அடிப்படையிலே அவை செயல்படுகின்றன.  இதற்கு காரணம் பயிற்சி அளித்தவர்கள் கொண்டிருந்த மனோபாவத்தால் தான்.  நல்ல எண்ணத்துடன் அணுகினால் சிறப்பானதை மட்டுமே காண முடியும்.  அதே நோக்கத்தில் அளிக்கும் பயிற்சி நல்ல பண்புகளை மட்டும் மேலோங்க வைக்கும் என்றார்.