அழகான வரிகள்*

 

 

தெரிந்து மிதித்தாலும்  தெரியாமல் மிதித்தாலும்*  *மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்…!!*

*நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை*   *அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட  சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!*

*’சந்தோஷமா வாழறேன்’ னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது*

*உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை*

*நோய் வரும் வரை உண்பவன்,*   *உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!*

*பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல*  *ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!*

*பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?  செலவு செய்யுங்க…..!**உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!*

*பிச்சை போடுவது கூட சுயநலமே…* *புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்…*

*அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை*  *ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.*

*வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு*  *அதற்கு அவமானம் தெரியாது*    *விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!*

*வெட்டாதீர்கள் – மழை தருவேன் என்கிறது “மரம்”.**வெட்டுங்கள் – மழை நீரைசேமிப்பேன் என்கிறது “குளம்”*

*திருமணம் -* *ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்*

*ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!*

*முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்*  *பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்*   *அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.*

*மீண்டும் ஒரு முறை* *முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்*  *என்ற ஒரு காரணத்திற்காகவே*   *நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன*

*நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.*

*இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட*  *வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்…………..!*

*பகலில் தூக்கம் வந்தால்,*  *உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!!*  *இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்………..!*

*துரோகிகளிடம் ‘கோபம்’ இருக்காது*  *கோபப்படுபவர்களிடம் ‘துரோகம்’ நிச்சயமாக இருக்காது..*

*தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது*

 

 

 

 

Advertisements

கோபத்தை கட்டுப்படுத்த – ‘குப்பை வண்டி விதி’   (The Law of the Garbage Truck).

 

ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார். இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட… ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.

 

அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னாபின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.  அவர் செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.

 

அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார், பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம். அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்”

 

அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணுக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.  வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள். அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.

 

நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களை புறக்கணிப்போம். வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.

சந்தோஷமா இப்போ வேலையை ஆரம்பிங்க பார்க்கலாம்!!

 

– படித்ததில் பிடித்தது.

 

எதற்கும் உண்டு விதிவிலக்கு

எதற்கும் இரண்டு பக்கம் உண்டு  அன்றைக்கு சாஸ்திரம் சொன்ன ஒரு விஷயத்தை இன்றைக்கு அப்படியே எடுத்துக்கொள்ள முடியுமா/ இது பலரும் கேட்கின்ற கேள்விதான்.  காலம் மாறுகிறது.  கல்லுரல் போய் கிரைண்டர் வந்துவிட்டது. இயந்திரம் போய் மிக்ஸி வந்துவிட்டது  துவைக்கிற கல் போய் வாஷிங் மெஷின் வந்துவிட்டது  இத்தகைய காலத்தில் பழைய விஷயங்களை அப்படியே பொருத்தி பார்க்க முடியுமா?  நடந்து கொள்ள முடியுமா என்கிற வாதத்தையும் விட்டுவிட முடியாது.

கடல் தாண்டக் கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.  இன்றைக்கு நம்மூரில் இருக்கின்ற புராதன ஆலயங்களுக்கு திருப்பணி கும்பாபிஷேகம் என்றால் வெளி நாட்டுக்காசுதான் பிரதான இடம் வகிக்கிறது.   கிராம வளர்ச்சிகள் வேத பாடசாலைகள்  இவற்றுக்கெல்லாம் அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள்தான் உதவுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

என்றாலும் மஹா பெரியவர் சொன்னவற்றில் நம்மால் பின்பற்ற கூடியவற்றைச் சிரமேற்கொள்ள வேண்டும்.  சிறுகக் கட்டி பெருக வாழ்வது. என்கிற லட்சியம் போய்விட்டது.  எத்தனை சுக போக சாதனங்கள் இருந்தும் அதிருப்தியே படுகிற இப்போதைய மனப்பான்மை போய் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று எளிய வாழ்க்கை வாழ வேண்டும். அதிலேயே திருப்தி காணப்பழக்கிக் கொண்டுவிட்டால் போதும். நிறைவான குடும்பம் நடத்துவதற்கு மகா பெரியவா சொல்கிற உபாயம் இது.

அதோடு ரொம்ப கட்டுப்பெட்டியாகவும் பெண்கள் இருக்கவேண்டாம்.  அவர்களே எல்லா தர்மங்களுக்கும் ஆணி வேர் என்கிறார் பெரியவர்.  ஒரு கல்யாணம் கார்த்திகை என்றால் அதிலே வேடிக்கையும் இருக்கவேண்டும். எனவே கேலிப் பாட்டுக்கள் கூட பாடலாம்.  வாழ்க்கையில் இதெல்லாமும் அதனதன் அளவுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உப்புச்சப்பே இருக்காது   ஒரே உம்மணாம் மூஞ்சி ஆகிவிடும்.

ஸ்த்ரீ மூலம் ஸர்வ தர்மா……………… எல்லா தர்மங்களுக்கும் பெண்களே ஆணி வேர் என்று சாஸ்திரம் சொல்கிறது.  அவர்கள் நிலை தடுமாறி போனால் லோகமே போனது போனதுதான்.  ஆண்கள் நிலை தடுமாறிப் போனால்கூட பெண்களின் தார்மிகப் பலம் அவனைக் காப்பாற்றி எழுப்பி விடும்.  பெண் விழுந்தால் சமுதாயத்துக்கே வீழ்ச்சி

 

நன்றி    மங்கையர் மலர்

 

சொல்ல நினைத்தது

ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.*

“இருவடை எடுத்து ஒருவடை என்பார்
திருவோடு ஏந்தி தெருவோடு போவார்.!”

மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு ஒரு வடைதான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.

இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும் இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.

*ஒரு ஆட்டோவில் எழுதப்பட்ட வாசகம், ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’*

டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப் பட்டிருந்தது இந்த வாசகம்… இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு.

அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம்.

*ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,*
*மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?*

வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில்தான் வெற்றி இருக்கிறது.

டீக்கடை வரியும் ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தினைத்தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம்தான் அதில் வித்தியாசம்.

*சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை.*
*நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல் அதை செம்மைபடுத்தி பேசிப்பாருங்கள் வெற்றி நிச்சயம்.*

ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்…
‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.

படித்ததில் பிடித்தது

 

வாழ்க்கை பயணம்

ஒரு  மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான்.  அது அவன் வாழ்க்கைப் பயணம்.  நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால் தடங்கள். அவனுக்கு ஆச்சரியம்.  சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை.  சத்தமாகக் கேட்டான். “என்னுடன் வருவது யார்?”   “நான் கடவுள்” என்று அசரீரியாகப் பதில் வந்தது. அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.    ‘கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்’. பயணம் தொடர்ந்தது. அவன் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை நாளாவட்டத்தில் மறந்தான்.   சுகமாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன.  சிறிய பிரச்சினைகள் பெரிதாயின. துன்பமும் துக்கமும் அதிகமாயின.
ஒரு கட்டத்தில் அவன் சமாளிக்க முடியாமல் தவித்த போது தான் அந்தக் கால் தடங்கள் நினைவு மறுபடி வந்தது.  ‘கூட கடவுள் இருக்கும் போதே இவ்வளவு துன்பமா’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டவன் கால் தடங்களைக் கவனித்தான்.   அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

அந்தப் பாதையில் ஒரே ஒரு ஜோடி கால் தடங்கள் மட்டுமே தெரிந்தன.
அவன் சுற்றி பின்னோக்கிப் பார்த்தான். அவன் கஷ்டகாலம் ஆரம்பித்த கணத்திலிருந்து     ஒரே ஒரு ஜோடிக் கால் தடம் மட்டுமே தெரிந்தது. அவனுக்கு அழுகையாய் வந்தது.   கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளை அழுகையினூடே கேட்டான்.  “கடவுளே என் இன்ப காலத்தில் உடன் வந்து கொண்டிருந்தீர்கள்,   துன்ப காலத்தில் என்னைக் கைவிட்டுக் காணாமல் போய் விட்டீர்களே இது நியாயமா?”   கடவுளிடமிருந்து பதில் வந்தது. “மகனே, நான் உன்னைக் கைவிடவில்லை.   உன் துன்ப காலத்தில் நீ பார்த்த காலடிச்சுவடுகள் உன்னுடையவை அல்ல. என்னுடையவை.   இந்தக் கடின யாத்திரையில் நடக்க முடியாத உன்னைத் தூக்கிக் கொண்டு நான் தான் நிறைய தூரம் வந்துள்ளேன்.   அதனால் தான் நீ உன்னுடைய காலடி சுவடுகளைக் காண முடியவில்லை….”   அந்த மனிதன் கண்களில் நன்றியுடன் வழிந்த கண்ணீர் நிற்க நிறைய நேரம் ஆயிற்று.

குற்றம் காண்பதில் மனிதன் சமர்த்தன். அவனுக்கு அதற்கு நிறைய நேரம் தேவைப் படுவதில்லை. கஷ்ட காலங்களில் உறவும் நட்பும் காணாமல் போவது போல    கடவுளின் அருளும் காணாமல் போவதாக அவன் என்ணுவதில் வியப்பில்லை. சுமைகள் கூடும் போது, இறக்கி வைக்க வழி தெரியாத போது இருக்கவே இருக்கிறார் கடவுள்,   அவனிடம் வசவுகள் வாங்கிக் கொள்ள.   வந்த கஷ்டங்கள் நமக்குத் தெரியும். எத்தனையோ  கஷ்டங்கள் வரவிருந்து,  அவை இறையருளால் வராமல் தவிர்க்கப் பட்டிருக்கலாம்.   அவை நம் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகிறது.
கடவுள் கணக்கு சொல்வதில்லை.  எனவே எத்தனையோ உண்மைகள் நமக்குத் தெரியாமலேயே போய் விடுகின்றன.  துன்பங்களும், சோதனைக் காலங்களும் வரும் போது நாம் ஒரு பெரிய உண்மையை மறந்து விடக் கூடாது.  எதுவுமே காரணம் இல்லாமல் நம்மிடம் வருவதில்லை. அவற்றில் சில நாம் சம்பாதித்தவை.    நம் முந்தைய செயல்களின் விளைவுகள். நாமே வர வழைத்தவற்றை நாம் சந்தித்தே ஆக வேண்டியுள்ளது.   மறுப்பதும் எதிர்ப்பதும் நியாயமல்ல. மற்றவை நாம் வளர, பக்குவப்படத் தேவையான அனுபவங்கள். நாம் கற்க வேண்டிய பாடங்கள். அவற்றைக் கற்றறிந்த பின்னரே,
அந்த சோதனைத் தீயில் பட்ட பின்னரே    நாம் புடம் போட்ட தங்கமாய் மிளிரப் போகிறோம். அவை நம் வாழ்வில் வரா விட்டால் நாம் சோபிப்பதுமில்லை. கையால் மென்மையாக தடவிக் கொடுத்தே கல்லை சிலையாக முடியாது.   இன்பங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தால் நாம் பக்குவம் அடைவதும் சாத்தியமல்ல.   உளிக்கு கல்லின் மீது பகையில்லை. உளியடிகளைத் தாங்காத கல் அழகிய சிலையாவதில்லை. 

கடவுள் என்ற சிற்பி நம்மைச் செதுக்கும் போது அழகிய சிலையாகப் போகிறோம் என்ற உணர்வுடன் தாங்கிக் கொண்டால், இது அர்த்தமில்லாததல்ல என்று புரிந்து கொண்டால் அந்த அடிகளும் நமக்கு ஆனந்தமே. இன்னொரு விதமாகவும் சொல்லலாம். மருந்து கசக்கிறது என்று குழந்தை கதறியழுதால் தாய் விட்டு விட மாட்டாள்.   குழந்தை குணமாக வேண்டும் என்று அக்கறை அவளுக்கு அதிகமுண்டு. பலவந்தமாக மருந்தை குழந்தை வாயில் திணிக்கையில்    குழந்தை தாயை ஒரு கொடுமைக்காரியாகக் கூட நினைக்கலாம்.   குழந்தை என்ன நினைக்கிறது என்பது தாயிற்கு முக்கியமல்ல.   குழந்தை குணமாக வேண்டும் என்பதே தாயிற்கு முக்கியம்.  குழந்தைக்கு எது நல்லது என்பதை குழந்தையை விடத் தாய் நன்றாக அறிவாள்.  கடவுளும் அந்தத் தாயைப் போல் தான்.
இனி கஷ்ட காலங்கள் வரும் போது   கடவுளை திட்டாதீர்கள்.
அவற்றைத் தாங்கும் சக்தியையும் அவற்றிலிருந்து கற்கும் புத்தியையும் மட்டுமே கடவுளிடம் வேண்டுங்கள்.  கஷ்ட காலங்களில் தைரியத்தையும் இழக்காதீர்கள்.   உங்களுக்கு நடக்க முடியாத போது சுமக்கத் தயாராய் கடவுள்    உங்களுடனேயே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும்.   முடிவு கண்டிப்பாக இனிமையாகும் ,,,

ரகசியம்………………பரம ரகசியம்

ஓம் என்னும் பிரணவத்தின் வடிவமான மயில் மீது முருகன் காட்சியளிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் மயிலை  மந்திர மயில் என அழைப்பர்.  மயில் மீது முருகனை தரிசிப்பதை குக ரகசியம் என்றும் தகராலய ரகசியம் என்றும்  ஞானிகள் குறிப்பிடுவர்.  பாம்பன் சுவாமிகள் மயில் மீது முருகன் எழுந்தருள வேண்டும் என்னும் பொருளில் பத்து பாடல் பாடியுள்ளார்.  ஸ்ரீமத் குமார சுவாமியம் என்னும் நூலில் பகை கடிதல் என்னும் தலைப்பில் இப்பாடல்கள் உள்ளன இதை பக்தியுடன் படித்தால் முருகனை தரிசிக்கும் பேறு கிடைக்கும் என சுவாமிகளின் குறிப்பும் இதில் உள்ளது.

கால் பந்தா   புல்லாங்குழலா?

எல்லா உலகத்திலும், எல்லாக் காலத்திலும் சஞ்சரிக்கும் ஆற்றல் பெற்றவரான நாரதர், ஒரு சமயம் பூலோகத்திற்கு வந்திருந்தார். ஒவ்வொரு இடமாக சுற்றிப் பார்த்துக்கொண்டே வந்தவர், கால் பந்தாட்ட மைதானம் ஒன்றில் பலர் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். இரண்டு பக்கத்திலும் இருந்தவர்களுக்கு இடையே ஒரு பந்து மாறி மாறி உதைபட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த அவருக்கு வேடிக்கையாக இருந்தது.

கால் பந்துக்குள் அடைப்பட்டிருந்த கால் அதாவது காற்று இங்கும் அங்கும் அடிபட்டுக் கதறுவதாகத் தோன்றியது நாரதருக்கு. கொஞ்ச நேரம் விளையாட்டை ரசித்துவிட்டு வேறு இடத்துக்குப் போனார். அங்கே புல்லாங்குழல் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. மேடையில் இருந்த இசைக்கலைஞர் ஆழ்ந்து வாசிக்க, குழலில் இருந்து வெளிப்பட்ட இசையை பெரும் கூட்டம் மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தது.

இப்போது நாரதருக்கு ஒரு சந்தேகம் வந்தது. முதலில் பார்த்த கால்பந்தாட்டத்தில் பந்துக்குள் இருந்ததும் காற்றுதான். இங்கே புல்லாக்குழலில் இருந்து வெளிப்படுவதும் காற்றுதான். ஆனால் அங்கே அது உதைபடுகிறது. இங்கே ரசிக்கப்படுகிறது. ஏன் இந்த நிலை? நாரதருக்கு சந்தேகம் வந்தால் எங்கே போவார்? வேறு எங்கே, வைகுந்தம்தான். அங்கே போய் திருமாலைப் பார்த்தார். திருமகளும் அவள் நாயகனும் என்ன என்பதுபோல் பார்க்க, திருதிரு என்று விழித்தபடியே தன் சந்தேகத்தைச் சொன்னார், நாரதர். புன்னகைத்தார்

, புருஷோத்தமன். நாரதா, கால்பந்து, காற்றைத் தனக்கு மட்டுமே சொந்தமாக உள்ளேயே அடைத்து வைத்துக்கொண்டது. அதனால் அது உதைபடுகிறது. ஆனால், புல்லாங்குழல் தனக்குள் வரும் காற்றை, சுயநலமாகத் தானே வைத்துக்கொள்ளாமல் பிறருடன் பகிர்ந்து கொள்கிறது. அதனால் அது ரசிக்கப்படுகிறது! புரிந்ததா? என்று சொல்லிச் சிரித்தார். நாதா, சுயநலத்தோடு சேர்ப்பவை வெறுக்கப்படும், கிடைப்பதை பிறரோடு பங்கிட்டுக் கொள்வது ரசிக்கப்படும் என்ற நீதியை உங்கள் திருவாயால் கூறவேண்டும்; அது மக்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காகவே நாரதன் இப்படி ஒரு சந்தேகத்தை உங்களிடம் கேட்டிருக்கிறான்! அப்படித்தானே நாரதா? கேட்ட மகாலட்சுமியைப் பார்த்து ஆம் தாயே என்பதுபோல் தலையசைத்துவிட்டு நகர்ந்தார், நாரதர்.

*நன்றாக படித்துபாற்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன் இப்பொழு உங்கள் முடிவு என்ன கால்பந்தாக இருப்பதா புல்லாங்குழல் போல செயல்படுவதா*