பள்ளிகொண்ட நரசிம்மர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலுள்ள திருவதிகை சர நாராயணப்பெருமாள்  கோயிலில் பள்ளி கொண்ட நரசிம்மர் சன்னதி உள்ளது.  பிரதோஷத்தன்று இவரை தரிசித்தால் நினைத்தது நிறைவேறும்.

அசுரர்களான தரகாட்சன் கமலாட்சன் வித்யுன்மாலியிடம் பறக்கும் கோட்டைகள் இருந்தன.  அவற்றில் பறந்து சென்று தேவர்களையும் முனிவர்களையும் தாக்கினர்.  சிவபெருமானிடம் முறையிடவே அவர் அசுரர்களுடன் போர் புரிய தயாரானார்.  அதற்காக தேர் ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் சூரியனும் சந்திரனும் சக்கரங்களாக மாறினர். பூமி தேரின் தட்டாக ஆக்கப்பட்டது. நான்கு வேதங்களும் குதிரைகளாக தேரில் பூட்டப்பட்டது. மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமான் ஆதிசேஷனை அதில் நாணாக பூட்டினார்.  பிரம்மா தேரின் சாரதியாக அமர்ந்தார்.  மகாவிஷ்ணுவே அம்பாக மாறி அசுரர்களின் அழிவுக்கு துணை நின்றார்  அவரே சர நாராயணப் பெருமாள் என்னும் பெயரில் இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார்.  சரம் என்ற சொல்லுக்கு அம்பு என்பது பொருள். பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் உள்ள மகாவிஷ்ணுவின் சிலை சாளக்கிராம கற்களால் ஆனது. பாரதப்போர் முடிந்ததும்  பிராயச்சித்தம் தேடிய அர்ஜூனன் இங்கு வழிபாடு செய்து பாவம் நீங்கப் பெற்றார்.

செங்கமலத்தாயார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.  மாதம் தோறும் உத்திர நட்சத்திரதன்று தாயாருக்கு திருமஞ்சனம் நடக்கிறது.  வழக்கமாக கைகூப்பி நிற்கும் கருடாழ்வார் இங்கு மட்டும் கைகட்டி சேவை செய்யும் நிலையில் உள்ளார்.  மார்க்கண்டேய மகரிஷியின் மகளான ஸ்ரீதேவியை மகாவிஷ்ணு இங்கு மணம் செய்தார். 

இத்தலத்தை தரிசித்தால் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்  மகாலட்சுமியின் அம்சமான வில்வம் தலவிருட்சமாக உள்ளது  இங்குள்ள நரசிம்மர் படுத்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.  அசுர்ரான வக்ரனை வதம் செய்த களைப்பு தீர நரசிம்மர் இங்கு தங்கியுள்ளார்.  பிரதோஷத்தன்று இவரை வழிபட்டால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.

எப்படி செல்வது

கடலூரில் இருந்து பண்ருட்டி  27 கிமீ

விசேஷ  நாட்கள்

சித்திரை திருமஞ்சனம்  கிருஷ்ண ஜெயந்தி  பங்குனி உத்திரம் 

ஸ்ரீ கங்கை வராக நதீஸ்வரர் கோவில்

‘சங்கரனுக்கு ஆபரணம் போன்றவள்’ என்ற பொருளில் ‘சங்கராபரணி’ என்ற பெயர் கொண்டு, செஞ்சி என்னும் இடத்தில் தோன்றி, விழுப்புரம் மாவட்டம் வழியாகத் தவழ்ந்தோடி, புதுச்சேரிக்கு அருகில் கடலில் சங்கமிக்கும் ஆறுதான் சங்கராபரணி.

 ‘செஞ்சியாறு’, ‘கிளிஞ்சளாறு’, ‘வராக நதி’ என்று பல பெயர்களில் அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் கரையில் எண்ணற்ற புராதனமான திருத்தலங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் திருக்காஞ்சி அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் திருக்கோவில்.

வடக்கு நோக்கி உத்தரவாகினியாக சங்கராபரணி பாய்வதால், இந்த ஆறு கங்கைக்கு நிகராகவும், இந்தத் தலம் காசிக்கு நிகரான தலமாகவும் போற்றப் படுகிறது.

அதன் காரணமாகவும் சங்கராபரணி என்னும் வராக நதியின் கரையில் கோவில் கொண்டிருப்பதாலும் இந்தத் திருத்தலத்து இறைவன் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார். மேலும் இந்த இறைவன் அகத்திய மகரிஷியால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பெற்றவர் என்பதால், இந்தக் கோவில் அகத்தீஸ்வரம் என்னும் பெயரிலும் போற்றப்படுகிறது.

இந்த ஆற்றின் கரையில் குபேர வர்மன், கேசவ வர்மன், நாகேந்திரன், கமலன், வியூக முனி, மங்கலன் முதலான நவசித்தர்களின் ஜீவசமாதிகள் இருந்ததாகவும், தலத்தின் ஈசான்ய மூலையில் சித்த புருஷர்களான ஸ்ரீ கங்காதர சுவாமிகளுக்கும் ஸ்ரீ சதாசிவ சுவாமிகளுக்கும் அதிஷ்டானங்கள் இருந்துள்ளதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆலயத்தில் இறைவன் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார். சகல வியாதிகளையும் போக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது இந்தத் தலம். மேலும், இத்தலம் காசிக்கு நிகராகப் போற்றப்படுவதன் பின்னணியில் வேறொரு சம்பவமும் சொல்லப்படுகிறது.

வேத விற்பன்னர் ஒருவர், தன் தந்தைக்கு நீத்தார் கடன் செய்ய அஸ்தியைக் காசிக்குக்கொண்டு சென்றதாகவும், அவர் திருக்காஞ்சியை அடைந்த போது, மண் பானையில் இருந்த அஸ்தி பூக்களாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது.

முற்காலத்தில் காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் திருக்காஞ்சி தலத்துக்கும் வந்து வழிபாடுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்களாம். காசியில் ஸ்ரீ விசாலாட்சி, 

ஸ்ரீ அன்னபூரணி ஆகியோர் அருள்வது போலவே, காசிக்கு நிகரான திருக்காஞ்சி தலத்திலும் ஸ்ரீ காமாட்சி, ஸ்ரீ மீனாட்சி ஆகியோர் அருட்காட்சி தருகின்றனர்.

சுவாமி சந்நிதியின் வலப்புறம் அன்னை காமாட்சி, தெற்கு நோக்கி திருக்காட்சி தர அன்னை மீனாட்சி தனியாகக் கிழக்கு நோக்கி திருக்காட்சி தருகிறாள்.

மேலும், கோவிலில் பரிவார மூர்த்தங்களாக ஸ்ரீ விநாயகர், வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான், ஸ்ரீ விஷ்ணு துர்கை, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ பைரவர், ஸ்ரீ லட்சுமி வராகப் பெருமாள், ஸ்ரீ அகத்தியர், நவகிரகங்கள் ஆகியோரும் அமைந்திருக்கின்றனர். 

12-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கோவிலின் பெரும்பகுதி சேதம் அடைந்து நீரில் மூழ்கிவிட்டதாம். ஆற்று நீரில் பாதி அளவுக்கு மூழ்கியிருந்த ஈசனுக்குத் தினமும் அர்ச்சகர் ஒருவர் நீந்திச் சென்று நித்திய பூஜைகள் செய்து வந்ததாராம்.

பிற்காலத்தில் சுவாமியின் லிங்கத் திருமேனி மட்டும் இப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு, புதிதாகக் கோவில் கட்டி பிரதிஷ்டை செய்திருப்பதுடன் பரிவார மூர்த்தங்களையும் புதிதாகப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

இங்குள்ள கருவறையானது தஞ்சை பெரிய கோவிலின் கருவறையை ஒத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோவிலில் பௌர்ணமி தோறும் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், திருமுறை பாராயணங்களுடன் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

அமாவாசை நாள்களில் காலை வேளையில் இந்தக் கோவிலுக்கு வந்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து, சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபட்டால் பித்ரு தோஷம் விலகி, சுவாமியின் திருவருளோடு முன்னோரின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நவராத்திரி நாள்களில் அம்பிகை இருவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரங்களும், விஜயதசமி நாளில் அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாரிவேட்டைக்குச் செல்லும் வைபவமும் விமரிசையாக நடைபெறும்.

பாண்டிச்சேரி – விழுப்புரம் சாலையில் வில்லியனூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்காஞ்சி திருத்தலம்.

நன்றி.    ஓம் நமசிவாய

வித்தியாசமான கோலத்தில் பெருமாள் காட்சி தரும் கோவில்கள்

சிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காண, சிங்கபெருமாள் கோயில் செல்ல வேண்டும். இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.

திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்தமைத்த சிவன்-திருமால் கோயில் இதுமட்டும்தான்.

திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோயிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவரும் வேதநாராயணன் என்று பெயர்.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதர், அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தரும் இவரது தரிசனம் 2019ம் ஆண்டு கிடைத்தது.

திருக்கோவிலூரில் உள்ள மூலவர் இலுப்பை மரத்தால் ஆனவர். இவரது பெயர் திருவிக்ரசுவாமி.

கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழுதலைகள் இருப்பது வித்தியாசமானது.

திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன்கோயில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோயில்களிலும் தாயாருக்கு சன்னதி இல்லை.

பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீவைகுண்டத்தில் நத்தத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதிகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனகட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.

மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்து கொண்டு தரையில் சாய்வாக கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு, சக்கரம் இல்லை.

காஞ்சி உலகளந்த பெருமாள் திருக்கோயிலில் திருமழிசையாழ்வாராலும் , திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன. பேரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகியவையே அவை.

நன்றி.   ஓம் நமசிவாய

மாங்காடு காமாட்சி அம்மன்

காமாட்சி என்றதும் அனைவருக்கும் காஞ்சிபுரம் தான் நினைவுக்கு வரும். ஆனால் காமாட்சி அன்னை முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகே காஞ்சிபுரத்துக்கு எழுந்தருளினாள் என்று காஞ்சிப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஐந்து குண்டங்களில் தீ வளர்த்து நடுக்குண்டத்தில் தனது இடது காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி அக்னியில் படுமாறும், வலது காலை இடது காலின் தொடைக்கு மேற் புறமாக இடது கையை நாபிக் கமலத்திற்கு அருகிலும் வலது கையில் ஜபமாலையுடன் தனது சிரசிற்கு மேலும், கண்களை மூடிய நிலையில் கடும் தவம் புரிந்தார்.

அன்னை பார்வதி தேவி எத்தனையோ தவம் இருந்துள்ளாள். அதில் மிகக் கடுமையான தவமாக மாங்காட்டில் இருந்த தவம் கருதப்படுகிறது.

மூலஸ்தானத்தில் அம்பாளாக பாவித்து வணங்கப்படும் ஸ்ரீசக்ரம், அதற்கு பின்புறம் பஞ்சலோகத்தால் ஆன ஆதிகாமாட்சி மற்றும் முன் மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் செய்யும் காமாட்சி என இங்கு மூன்று அம்பாளை தரிசிக்கலாம். இதுமட்டுமின்றி ஆதிகாமாட்சி அருகில், சிறிய காமாட்சி விளக்கும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள்.ஒருகாலத்தில் மாமரங்கள் நிறைந்து மாமரக்காடாக விளங்கியதால் இத்தலம் மாங்காடு எனும் பெயர் பெற்றது.

மாங்காடு தலத்தில் பார்கவர், மார்க்கண்டேயர் ஆகிய மகரிஷிகள் தவம் இருந்து பலன் பெற்றுள்ளனர். கோவில் உள் பிரகாரத்தில் ஆதிசங்கரரின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மாங்காட்டில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு காமாட்சியம்மன் ஆலயத்தை சோழ மன்னர்கள் கட்டினார்கள், அவர்களால் கருவறை, அர்த்த மண்டபம் கட்டப்பட்டது.

விஜயநகர பேரரசு மன்னர்கள் இத்தலத்தில் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர். மகா மண்டபம், சபா மண்டபம் அவர்கள் கட்டியது தான்.ஒரு கண் பார்வையிழந்த அசுரகுரு சுக்ராச்சாரியார் மீண்டும் பார்வை வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார்.இவ்வாலயத்தில் காமிக ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மாங்காடுக்கு சூதவதனம், மாலை என்ற பெயர்களும் உண்டு.திருவேற்காடு கருமாரி அம்மன் மற்றும் வேதபுரிஸ்வரர் ஆலயம் அருகில் உள்ளது. பூந்தமல்லிக்கும், குன்றத்தூருக்கும் நடுவில் மாங்காடு உள்ளது. சென்னையில் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாநகர பஸ் வசதி உள்ளது.

இத்திருக்கோவிலில் “எலுமிச்சம்பழம் கொண்ட ஆறு வார வழிபாடு” பக்தர்களால் பெரிதும் கடைப்பிடிக்கப்படுகிறது. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.கோயிலிலிருந்து சற்றுதூரத்தில், வெள்ளீஸ்வரர் கோயில் உள்ளது. சுக்கிரனின் மற்றொரு பெயர் வெள்ளி. நவக்கிரக கோயிலான கஞ்சனூர் சுக்ரபுரீஸ்வரர் கோயில் போன்று சுக்கிரனுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கோயிலாகும்.காஞ்சிபுரத்தை போல, மாங்காட்டில் காமாட்சிக்கே முக்கியத்துவம் என்பதால், வெள்ளீஸ்வரர் கோயிலில் அம்பாள் இல்லை. அம்பாளின் பாதம் மட்டுமே இருக்கிறது.

வெள்ளீஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர், கைகளில் நெற்கதிரும், மாங்கனியும் வைத்திருக்கிறார். விவசாயிகள் இவருக்கு மாங்கனி மற்றும் நெல் நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இதனால், விவசாயம் செழிப்பதாக நம்பிக்கை.திருமாலும் தன் தங்கைக்கு திருமணச்சீர் கொண்டு வந்தார். ஆனால், சிவனின் கட்டளைப்படி அம்பாள் காஞ்சிபுரம் செல்லவே திருமாலும் கிளம்பினார்.

மார்க்கண்டேயர் இங்கேயே தங்கும்படி அவரிடம் வேண்டினார். எனவே திருமால், வைகுண்டப் பெருமாளாக இங்கு எழுந்தருளினார். பிரயோக சக்கரத்துடன் இருக்கும் இவர், சீர் கொண்டு கணையாழி கையில் வைத்திருக்கிறார்.மாங்காடு காமாட்சிக்கும் ஒற்றை மாமரத்துக்கும் தொடர்பு உண்டு. ஆனால் ஏனோ இத்தலத்தில் ஒற்றை மாமரம் இல்லை. மாங்காடு தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இங்கு அர்த்தமேரு ராஜ யந்திரமாகும். இதற்கு கூர்மம்(ஆமை) உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி அதற்கு மேல் 16 இதழ் தாமரை அதற்கும் மேல் 8 இதழ் தாமரை அமைத்து அதன்மேல் ஸ்ரீ சக்ர யந்திரம் வரையப்பட்டுள்ளது.இத்தலத்து தங்கரதம் 17.5 கிலோ எடை அளவு தங்கத்தால் செய்யப்பட்டதாகும். இது தமிழகத்தில் உயரமான தங்க ரதங்களில் ஒன்றாகும்.சிவபெருமானின் உத்தரவை ஏற்று பார்வதி தேவி, கன்னிப் பெண்ணாக மாங்காட்டில் எழுந்தருளியதால் இத்தலத்தில் கன்னிப்பெண்கள் மனம் உருகி அம்பாளை வழிபட்டு என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

இங்கு அர்த்தமேரு மிகப்பெரியது. இம்மாதிரி வேறு எங்குமே இல்லை. இதற்கு 18 முழப்புடவை அணிவிக்கிறார்கள். இத்தலத்தில் காமாட்சி அம்மன் விளக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.இக்கோயிலிலுள்ள அர்த்தமேரு ஸ்ரீசக்ரம் மிகவும் விசேஷமானது. 43 திரிகோணங்கள் கொண்ட இச்சக்ரம், “அஷ்டகந்தம்’ என்னும் எட்டு வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது.இத்தலத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு சக்கரம், சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடாமாஞ்சீ, கச்சோலம் ஆகிய 8 வகையான கந்தங்களைக் கொண்டது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது.சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர். இச்சக்ரத்திற்கு விஜயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. அன்று ஒருநாள் மட்டும் இதனை தங்க கவசத்தில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருக்கும்

நன்றி. ஓம் நமசிவாய

குச்சனூர் சனீஸ்வரர்

சனிதோஷத்தால் வரும் துன்பங்கள் குறைய தேனி மாவட்டத்தில் வீற்றிருக்கும் குச்சனூர் சனீஸ்வர பகவானை வழிபாடு செய்யலாம். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுரபி நதிக்கரையில் வீற்றிருக்கிறார் குச்சனூர் சனீஸ்வர பகவான். இங்கு ஆடிமாதத் திருவிழாவும், இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் சனிப் பெயர்ச்சி விழாவும் சிறப்பானதாகும்.

‘தினகரன் மான்மியம்’ என்கிற பழமையான நூல் வாயிலாகவே, குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் பற்றிய தல வரலாற்றை அறிய முடிகிறது.அதன்படி முன்பொரு காலத்தில் தினகரன் என்ற மன்னன், திருமணம் முடிந்து பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாது இருந்திருக்கிறான். கடவுளிடம் மனமுருகி வேண்டிக்கொண்ட மன்னனின் கனவில் ஒரு முறை அசரீரி ஒலித்தது.‘உன் வீட்டுக்கு ஒரு அந்தணச் சிறுவன் வருவான். அவனை வளர்த்து வந்தால் குழந்தை பிறக்கும்’ என்றது அந்தக் குரல்.

அதன்படி ஒரு சிறுவன், மன்னரிடம் வந்து சேருகிறான். அவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வரும் வேளையில், அரசிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அவனுக்கு ‘சதாகன்’ என்று பெயர் சூட்டினர். காலங்கள் உருண்டோட சந்திரவதனன் ஒரு மன்னனுக்கு உரிய வீரம், திறமை, விவேகத்துடன் இருந்ததால், அவனுக்கே முடிசூட்டினான் மன்னன். இந்தநிலையில் தினகரனுக்கு சனி தோஷம் பிடித்தது. இதனால் பல சோதனைகளையும், துன்பங்களையும் அவன் சந்தித்தான்.

தனது வளர்ப்பு தந்தை அடையும் துன்பத்தை கண்டு மனமுடைந்த சந்திரவதனன், தந்தையின் துன்பம் நீங்க, சுரபி நதிக்கரைக்குச் சென்று சனியின் உருவத்தை நிறுவி வழிபடத் தொடங்கினான். அந்த வழிபாட்டில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான், அவன் முன்தோன்றி, ‘முற்பிறவியில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்பவே இப்பிறவியில் சனி தோஷம் பிடிக்கிறது. இதன் காலம் ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள். உன் தந்தை முற்பிறவியில் செய்த பாவ வினைகளின் விளைவே இது’ என்றார். ஆனால் சந்திரவதனன், “என் தந்தைக்கு வரும் துன்பங்களை எனக்கு கொடுங்கள். நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று சனி பகவானிடம் கோரிக்கை வைத்தான். ஒப்புக்கொண்ட சனீஸ்வர பகவான், சந்திரவதனனுக்கு கடுமையான பல துன்பங்களையும், சோதனைகளையும் கொடுத்தார்.

அப்போதும் சந்திரவதனன், சனீஸ்வர வழிபாட்டை நிறுத்தவில்லை. சுரபி நதிக்கரையில் தீவிர வழிபாட்டில் இறங்கினான். ஒரு கட்டத்தில் மனம் இரங்கிய சனீஸ்வரபகவான் சந்திரவதனன் முன் தோன்றி, அவனது துன்பங்களை களைந்ததுடன் ‘பக்தர்கள் தங்களது குறைகளை உணர்ந்து இவ்விடத்துக்கு வந்து என்னை வணங்கினால், அவர்களுக்கு சனிதோஷத்தால் வரும் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பேன்’ என்று சொல்லி மறைந்தார். மேலும் அவ்விடத்தில் சுயம்புவாகவும் எழுந்தருளினார்.

சுயம்பு சனீஸ்வரருக்கு, குச்சுப்புல்லினால், ஒரு கூரை வேய்ந்தான் சந்திரவதனன். குச்சுப்புல் கூரை என்பதே நாளடைவில் குச்சனூர் என்றானது.குச்சனூர் சனீஸ்வரபகவான் திருக்கோவிலில் ஆடி மாதம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. அதனை ஆடிப்பெருந்திருவிழா என்பர். சிறப்பாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவில், உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுயம்பு சனீஸ்வரபகவானை தரிசனம் செய்வர். ஆடி மாதம் முழுவதும் வருகிற சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

கோவிலில் ‘விடத்தை மரம்’ தல மரமாகவும், ‘கருங்குவளை மலர்’ தல மலராகவும், ‘வன்னி இலை’ தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு காகம் வாகனமாகவும், ‘எள்’ தானியமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போடுவதும், கருப்பு வஸ்திரம் சாத்தி, காகங்களுக்கு எள்ளு சாதம் பிரசாதமாக படைத்து சனீஸ்வரரை வழிபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

*அமைவிடம்*

தேனியில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் குச்சனூர் உள்ளது. இதற்கு வீரபாண்டி வழியாகவும், சின்னமனூர் வழியாகவும் செல்லலாம். சின்னமனூரில் இருந்து உப்புக்கோட்டை செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் கோவிலை அடையலாம்.

.

நன்றி.     ஓம் நமசிவாய

தம்பதியர் குறை தீர்க்கும் விஜயராகவப் பெருமாள் கோவில்

பொன்மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது விஜயராகவப் பெருமாள் திருக்கோவில்.  நாகார்ஜூன முனிவர் என்பவர், இந்திரன் சபையில் இருந்தார். அவர் சிறந்த காளி பக்தர். விதி யாரை தான் விட்டு வைத்திருக்கிறது.ஒரு நாள் ரதிதேவியைக் கண்ட முனிவர், அவளது அழகில் மயங்கினார். எந்நேரமும் அவள் நினைவிலேயே திளைத்தார். ஒருநாள் பார்வதி தேவி முனிவரை அழைக்க, அந்த அழைப்பு ரதியின் மயக்கத்தில் இருந்த முனிவரின் செவிகளில் விழவில்லை. கோபம் கொண்ட தேவி, ‘நீ பூலோகத்தில் மனிதனாகப் பிறப்பாயாக’ என சபித்தாள்.

சாபத்தின்படி இமயமலை அடிவாரத்தில் இருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார் முனிவர். தனக்கு இடப்பட்ட சாபம் பற்றி அறிந்த முனிவர், அதில் இருந்து மீள்வதற்காக தவம் செய்யத் தொடங்கினார். அப்போது ‘தென்கயிலையை அடுத்துள்ள மலையில் தவம் செய். சாப விமோசனம் கிடைக்கும்’ என அசரீரி ஒலித்தது.  அதன் படி முனிவர் இந்த மலைக்கு வந்தார். தவம் செய்யத் தொடங்கினார். யாகம் நடத்த அவருக்கு பொன் தேவைப்படவே, மகாலட்சுமியை வேண்டினார். 

மகாலட்சுமியும் தருவதாகக் கூறினாள். ஆனால் பொன் கிடைக்க தாமதமானது.என்ன செய்வது என்று புரியாத முனிவர் குழம்பினார், வேதனைப்பட்டார். வேறு வழி ஏதும் தெரியாததால், தான் தவம் செய்த மலையில் மோதி உயிரை விட முடிவு செய்தார். மலையில் தலையை மோதியபோது பார்வதிதேவி காட்சி தந்தாள்.‘எனக்கு ஏன் இந்த சோதனை? யாகத்திற்கு பொன் இல்லையே. நான் என்ன செய்ய ?’ என்று அன்னையிடம் வேதனையுடன் கேட்டார் முனிவர்.

‘கவலை வேண்டாம் முனிவரே. நீ தவமிருக்கும் இந்த மலையில் உனக்கு தேவையான அளவு பெயர்த்து எடுத்துக்கொள். 

அதுவே பொன்னாக மாறிவிடும்’ என அருளிவிட்டு அன்னை மறைந்தாள். முனிவரும் மலையில் இருந்து தேவையான அளவு பெயர்த்து எடுத்து யாகத்தில் போட்டார். அவர் பெயர்த்துப் போட்ட பாறைகள் பொன்னாக மாறியது. யாகத்தை வெற்றிகரமாக முடித்த முனிவர், சாப விமோசனம் பெற்றார்.முனிவர் தவம் செய்து பொன்னாக மாறிய அந்த மலையே இப்போதைய ‘பொன்மலை’ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் பொன் போன்று ஜொலித்துக் கொண்டு திருச்சியின் பெருமையை உலகம் முழுவதும் பறை சாற்றிக்கொண்டிருக்கிறது.

இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது விஜயராகவப் பெருமாள் திருக்கோவில். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அழகான முன் முகப்பை தாண்டியதும் நீண்ட நடைபாதையும் வலதுபுறம் தலவிருட்சமான பவழ மல்லிகை மரமும் உள்ளன. அடுத்து சிறிய ராஜகோபுரம். நுழைவுவாசலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் ஆதிசேஷனும் அருள்பாலிக்கின்றனர். உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் இருக்கிறது. மத்தியில் பீடமும் கருடாழ்வார் சன்னிதியும் உள்ளன. கருடாழ்வார் மூலவரை பார்த்த நிலையில் வீற்றிருக்கிறார்.அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவுவாசலில் விகனசர், தாபசர் இருவரும் காவல் காக்கின்றனர். இவர்கள் தங்கள் நான்கு கரங்களில் சங்கு சக்கரம், கதை தாங்கி நின்ற கோலத்தில் உள்ளனர். கருவறையில் ராமபிரான், ‘விஜயராகவப் பெருமாள்’ என்ற திருநாமத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாளின் இடது கரத்தில் வில்லும், வலது கரத்தில் அம்பும் உள்ளன. ராமபிரானின் வலதுபுறம் சீதா பிராட்டியாரும், இடதுபுறம் லட்சுமணனும், ராமரின் காலடி அருகே கரம் குவித்த நிலையில் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர்.

ராமநவமியின் போது மூன்று நாட்கள் ஆலயம் திருவிழா கோலம் பூண்டிருக்கும். மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இங்கு பெருமாள் சீதா தேவியுடன் குடும்ப சகிதமாய் சேவை சாதிக்கிறார். இவரை வணங்கும் பக்தர்களுக்கு, குடும்ப பிரச்சினைகள் யாவும் விரைந்து தீர்ந்துவிடும் என்கின்றனர் பக்தர்கள். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், தம்பதிகளின் பிணக்குகள் நீங்கி மன ஒற்றுமை நிலவவும், தாமதமாகும் திருமணங்கள் தடையின்றி நடந்தேறவும், கிரகக் கோளாறுகள் நீங்கி மன மகிழ்வுடன் வாழவும் இத்தல இறைவன் அருள்புரிகிறார்.மூலவர் அருகிலேயே உற்சவர் திருமேனிகளும் உள்ளன. இத்தலத்தில் வைகானச ஆகம முறைப்படி ஆராதனைகள் நடைபெறுகிறது. மகாமண்டபத்தின் இடதுபுறம் மூன்று நாகர் சிலைகள் உள்ளன. இந்த சிலைகள் மூலமாக பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் அருள்பாலிப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. தொடக்கத்தில் அனுமன் திருமேனி மட்டுமே இங்கு இருந்ததாம். பக்தர் ஒருவர் கனவில் வந்த ராமர் தன்னையும் இங்கு பிரதிஷ்டை செய்யும்படி கூற அதன்படி ராமபிரான் சீதா பிராட்டி திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.அனுமன் சன்னிதிக்கு அடுத்து நவநீத கிருஷ்ணன் சன்னிதி உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி மற்றும் மாதாந்திர ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. 

குழந்தை இல்லா தம்பதியினர் ஒரு சிறு கிருஷ்ணன் சிலையோடு இங்கு வருகின்றனர். அர்ச்சகர் அந்தச் சிலையை ஒரு தொட்டிலில் வைத்து தாலாட்டி விட்டு கிருஷ்ணனுக்கு அர்ச்சனை செய்தபின், அந்தச் சிலையை அந்த தம்பதியிடமே தந்து விடுகிறார். அவர்கள் அந்தச் சிலையை வீட்டிற்கு கொண்டு சென்று தினசரி அந்தச் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து உலர்ந்த பழங்களை நைவேத்தியம் செய்கின்றனர். அவர்கள் பிரார்த்தனை பலிக்கிறது. அவர்களுக்கு குழந்தை பேறும் உண்டாகிறது. பின்னர் ஆலயம் வந்து கிருஷ்ண பரமாத்மாவுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர்.

*ஆஞ்சநேயர் வழிபாடு*

இந்த ஆலயத்தில் ஜெயவீர ஆஞ்சநேயரின் சன்னிதி உள்ளது. அனுமன் ஜெயந்தியின் போது இந்த ஆஞ்சேநயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தவிர அனைத்து சனிக்கிழமை களிலும் சிறப்பு ஆராதனைகளும் உண்டு. பகை அகலவும், விரைந்து திருமணம் நடக்கவும் அனுமனுக்கு தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். கிரகக் கோளாறுகள் நீங்க அனுமனுக்கு வடைமாலை சாத்தியும், திருமணம் அனுகூலமாக வெற்றிலை மாலை சாத்தியும், குழந்தைபேறு உண்டாக வாைழப்பழ மாலை சாத்தியும், எதிரிகளிடமிருந்து பகை உணர்வு நீங்க எலுமிச்சை பழ மாலை சாத்தியும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்களது பிரார்த்தனைகள் நிறைவேறுவது கண்கூடான உண்மையே. 

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது பொன்மலை. மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து 14, 15, 16, 34 ஆகிய வழித்தட எண் கொண்ட பேருந்துகளில் சென்றால் ஆலயம் அருகே இறங்கிக் கொள்ளலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

இந்த ஆலயத்திற்கு அருகே அன்னை பொன்னேஸ்வரி ஆலயம் உள்ளது. விஜயராகவப் பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள், அருகே உள்ள இந்த அன்னையையும் தரிசித்து பயன்பெறலாம்.

நன்றி : சரஸ்வதி

சிலந்தி வலை சாஸ்தா

 வானத்தையே எல்லையாக்க் கொண்டு கூரை இன்றி திருவனந்தபுரம் கரமலையில் தர்மசாஸ்தா கோயில் கொண்டிருக்கிறார். இக்கோயில் திருவனந்தபுரத்தில் சபரிமலை என அழைக்கப்படுகிறது.

திருவனந்தபுரம் பகுதி முழுவதும் ஒரு காலத்தில் காடாக இருந்தது. இதை அனந்தன் காடு என்பர்.  இப்பகுதியை ஆண்ட கரமனை மகாராஜா ஒரு  நாள் வேட்டைக்காக காட்டு வழியே சென்ற போது ஓரிடத்தில் சிலந்திகள் வலை பின்னியிருப்பதையும் அதனடியில் சாஸ்தா சிலை புதைந்திருப்பதையும் கண்டார்.  அதை ஊருக்குள் கொண்டு வந்து கோயில் கட்ட முடிவு செய்தார். ஆனால் அன்றிரவு கனவில் சாஸ்தா என்னை எடுத்துச் செல்ல வேண்டாம்  காட்டில் இருப்பதையே விரும்புகிறேன்.  சிலந்திகள் வலை கட்டியுள்ள இந்த இடத்திலேயே கோயில் எழுப்பு.  கூரை இல்லாமல் வானமே எல்லையாக இருக்கட்டும் என உத்தரவிட்டார்.  அதன்பின் சிலை கண்டெடுத்த இடத்திலேயே கோயில் கட்டப்பட்டது.

இக்கோயிலில் சிலந்தி வலை போல மேற்கூரை கூம்பு வடிவில் உள்ளது.  கருவறையின் நான்கு பக்கமும் பலகணி வழியாகவும் சுவாமியை தரிசிக்கலாம்.  திருவனந்தபுரத்தில் உள்ள கோயில்களில் பழமையானது இது என்பதால் ஆதிசாஸ்தா கோயில் எனப்படுகிறது.  திருவனந்தபுரம் கரமனையைச் சேர்ந்தவர்கள் இக்கோயிலை சபரிமலைக்கு ஈடானதாக கருதுகின்றனர். ஒரு மண்டலம் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து வழிபடுகின்றனர்.

  மாதப்பிறப்பு நாட்களிலும் சுவாமிக்கு நெய் அபிஷேகம் நடக்கிறது.  குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு இங்கு முதல் பத்திரிக்கை வைக்கின்றனர். அரசமரத்தடியில் சிவலிங்கம் நாகர் சிலைகள் உள்ளன. 

எப்படி செல்வது

திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை பஸ் ஸ்டாண்டிலிருந்து 5 கிமீ

விசேஷ நாட்கள்

கார்த்திகை முதல் தேதி துவங்கி 41 நாள் மண்டல பூஜை   கரமனை ஆற்றில் ஆராட்டு.

பஞ்சநதன நடராஜர் கோவில்

திருச்சி அருகே உள்ளது பஞ்சநதன நடராஜர் கோவில். இந்த கோவிலில் உள்ள நடராஜர் ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி. இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது என்று கூறப்படுகிறது.

*பாறைகளின் சிறப்புகள் :*

ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக்கலை வல்லுநரால் கூறப்பட்டுள்ளது. நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சிறப்பு பெறுகின்றன. சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் இவ்வூர் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த கோவில் பஞ்சநத நடராஜர் கோவில் என அழைக்கப்படுகிறது.

*அழகே வடிவான இறைவி சிவகாமி அம்மை :*

இந்த கோவிலில் இறைவி சிவகாம சுந்தரியின் உருவ அமைப்பு வணங்குவதற்கு மட்டுமில்லாமல் ரசனைக்குரியதாகவும் இருப்பது தனிச்சிறப்பு. அந்த அன்னை தன் முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் காட்சியளிக்கிறார். இது காண்போரை மெய்மறக்க செய்கிறது.

*பஞ்சநதன நடராஜர் ஸ்தல வரலாறு :*

பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. 

ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு.

*தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் :*

oottathur aburva panchanthana natarajar temple

ஒருமுறை அவரது வருகையையட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது.

அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார்.

*நோய் நீக்கும் நடராஜர் :*

சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.

*இந்திரன் மீண்டும் பதவி பெற்ற திருத்தலம் :*

ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர். இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.

இக்கோவிலில் சுத்தரத்தினேஸ்வரர், அகிலாண்டேசுவரி, பரிவாரங்கள், விநாயகர், சூரியன், தட்சிணாமூர்த்தி, ஐந்து நந்திகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், 63 நாயன்மார்கள், கோடி விநாயகர், இரட்டை லிங்கம், அதிகார நந்தி, கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, கோரப்பல்லுடன் கூடிய துர்க்கை, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, வீரபத்திரர், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் மிக அழகான தோற்றம் உள்ள பல தெய்வங்களின் சிலைகளும் மிக சிறப்பாக அமைந்துள்ளது.

*மாற்று திசையில் நந்தி தேவர் :*

மற்ற சிவ தலங்களில் இல்லாத விசேஷமாக இங்கு நந்திதேவர் கிழக்கு முகமாக படுத்து உள்ளார். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, துங்கப்பத்திரா ஆகிய நதிகளில் யார் பெரியவர்? என்ற தகராறு ஏற்பட்டு இங்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டனர்.அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி சிவ பெருமான் நந்திதேவருக்கு கட்டளையிட்டார்.

அதன்படி நந்திதேவர் 7 நதிகளையும் விழுங்கி விட்டு கிழக்கு நோக்கி படுத்து இருந்ததாகவும் அப்போது கங்கை மட்டும் வெளியே வந்ததாகவும், கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. இதனால் கோவில் அருகே ஓடும் சிறிய ஆறு நந்தியாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் வடக்கு பகுதியில் இந்த நந்தியாறு கடலுடன் கலக்கிறது.

*அமைவிடம் :*

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்து பாடாலூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள திருஊற்றத்தூர் (தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது).

நன்றி. ஓம் நமசிவாய

ஐஸ்வர்ய கணபதி திருக்கோவில்

அருள்மிகு ஐஸ்வர்ய கணபதி திருக்கோவில், அவஞ்சா, தெலுங்கானா,           

 

பாரதத்திலேயே பெரிய ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த  ஒற்றைக்கல் ஸ்ரீ கணபதி சிற்பம் !”ஐஸ்வர்ய கணபதி” என்று பிரபலமாக அழைக்கப்படும் ஒரு பெரிய கிரானைட் கற்பாறை மீது செதுக்கப்பட்ட   பாரதத்தின் மிக உயரமான ஒற்றைக்கல்  விநாயக மூர்த்தி சிலை தெலுங்கானா மாநிலம் அவஞ்சாவில் அமைந்துள்ளது.தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள திம்மாஜிபேட்டை மண்டல் அவஞ்சாவில் இந்த ஒற்றைக்கல் பிரமாண்டமான  விநாயகமூர்த்தி சிலை மிகவும் புகழ் வாய்ந்தது.இந்த கணபதி நம் நாட்டின் மிகப்பெரிய ஒற்றைக்கல் சிலை ஆகும்.” ஐஸ்வர்ய கணபதி” என்று பக்தர்களால் அழைக்கப்படும்  இந்த கணநாதரின் உயரம் 30 அடி. நாட்டில் இவ்வளவு உயரமான ஒரு சிலை இல்லை. இந்த அரிய கணபதியைக் காண பக்தர்கள் பாரதத்தின் பல பாகங்களிலிருந்து வருகிறார்கள்.இந்த அரிய ஒற்றைக்கல் சிலை பதினொன்றாவது நூற்றாண்டினது என்று வரலாறு கூறுகிறது.

குல்பர்காவினைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மேலை சாளுக்கிய மன்னர் தைலாம்பு என்பவரால் இந்த சிலை நிறுவப்பட்டது. அவஞ்சா கிராமத்தில் அமைந்திருந்த ஒற்றைப்பாறையை விநாயகரின் அழகிய சிலையாக மாற்ற சிறப்பு சிற்பி ஒருவர் நியமிக்கப்பட்டு  வேலை நடந்து கொண்டிருந்தபோது, அவருக்கு கல்லின் உள்ளிருந்து விநாயகர், நானே சுயம்புவாக வெளிப்படுவேன், இந்த கல்லை செதுக்க வேண்டாம் என்று உத்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது, இதை அடுத்து அந்த சிற்பி வேலையை நிறுத்திவிட்டு மன்னரிடம் நடந்ததை கூறிவிட்டு தனது ஊருக்கு தனது குழுவினருடன் சென்று விட்டார். இதை அடுத்து அந்த கல்லில் இருந்து சுயம்புவாக விநாயகர் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட ஆரம்பித்தார்.  இன்றளவும் அந்த விநாயகர் மேலும் மேலும் முழு உருவம் பெறுவதாக மக்கள் கூறுகிறார்கள்.

இவருக்கு கோவில் கட்ட உள்ளூர் மக்களும், அந்த கால அரசர்களும் முயன்றனர், ஆனால் ஒவ்வொரு தடவையும் மேற்கூரை இடிந்து விழுந்தது அல்லது எரிந்தது, அதனால் மக்கள் கோவிலோ, மேற்கூரையோ கட்டாமலேயே விட்டுவிட்டனர். இவர் வெயிலில் அமர்ந்து கொண்டும், மழையில் நனைந்து கொண்டும் இந்த ஊரையும், மக்களையும் காத்து வருவதாக பக்தர்கள் திடமாக நம்புகிறாரரகள்.இவரை வேண்டிக்கொண்டால் விவசாயம் செழித்து வியாபாரம் பெருகி, செல்வ வளம் கொழிக்கும் என்று பக்தர்கள் கூறுகின்றனர். அதனாலேயே இவர் ஐஸ்வர்ய கணபதி என்று அழைக்கப்படுகிறார்.விநாயகர் சதுர்த்தி விழா இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இது ஆன்மீக பூமி,சித்தர்களும்,மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஸ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

சிவனுக்கு வென்னீர் அபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் பெரிய நாயகி சமேத கனகரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்த வென்னீர் நோய் தீர்க்கும் பிரசாதமாக தரப்படுகிறது.

ஒரு முறை பிருங்கி முனிவர் கைலாய மலைக்கு வந்திருந்தார்.  அப்போது சிவனும் பார்வதியும் உரையாடிக் கொண்டிருந்தனர். பார்வதியை பொருட்படுத்தாத முனிவர் சிவனை மட்டும் வணங்கினார்.  இதனை கண்டு வருந்திய பார்வதி சுவாமி உங்கள் உடலில் எனக்கு பாதியை தாருங்கள்  இதனால் உங்களை வணங்குவோர்  என்னையும் வணங்குவர் என்றாள்.  அதற்கு சிவன் நீ பூலோகம் சென்று காஞ்சிபுரத்தில் காமாட்சி என்ற பெயரில் தவமிரு  உரிய காலத்தில் உன்னை மணப்பேன்  பின்பு திருவண்ணாமலைக்கு வந்து என்னை வழிபடு   அப்போது என் உடம்பில் இடப்பாகத்தை அளிக்கிறேன் என உறுதியளித்தார்.

அதன்படி பார்வதி காஞ்சிபுரத்தில் காமாட்சியாக தவம் செய்து ஏகாம்பரேஸ்வரரை மண்ந்தாள்.  பின்பு திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ள இத்தலத்தில் 40 நாட்கள் தங்கினாள். தேவி தங்கியதால் தேவிகாபுரம் எனப் பெயர் பெற்றது. 

காஞ்சிபுரத்தில் காமாட்சிக்கு தனி கோயில் இருப்பது போல இங்கும் அம்மன் பெரிய நாயகி என்ற பெயரில் தனிக்கோயிலில் வீற்றிருக்கிறாள். கோயிலின் பின்புறம் 500 அடி  உயரமும் 5 கிமீ சுற்றளவும் 302 படிகளும் கொண்ட கனககிரி என்னும் மலை உள்ளது.  இதன் உச்சியில் சுயம்பு மூர்த்தியாக கனக கிரீஸ்வரர் என்னும் பெயரில் சிவன் இருக்கிறார். கருவறையில் சுவாமிக்கு அருகில் காசி விஸ்வ நாதர் இருக்கிறார்.

ஒரு முறை வேடன் ஒருவன் மலையில் கிழங்கு தோண்ட முயன்ற போது ரத்தம் பீறிட்டது. அங்கு சிவலிங்கம் இருப்பதைக் கண்டான்.  சுவாமிக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு வென்னீரால் அபிஷேகம் செய்து பிராயச்சித்தம் தேடினான்.  இதனடிப்படையில் திங்கட்கிழமை தோறும் சுவாமிக்கு வென்னீர்  அபிஷேகம் நடக்கிறது.  இத்தீர்த்தத்தை அருந்தினால் நாள்பட்ட நோயும் பறந்தோடும்.  மலையில் 48 நாட்கள் தங்கியிருந்து பார்வதி தவம் செய்ததன் அடையாளமாக மலை மீது அம்மனின் திருவடி உள்ளது. 

எப்படி செல்வது

திருவண்ணாமலையிலிருந்து ஆரணி செல்லும் வழியில் 51 கிமீ  சென்னையில் இருந்து 160 கிமீ

விசேஷ நாட்கள்

பங்குனி உத்திரம்  பௌர்ணமி கிரிவலம்   மஹாசிவராத்திரி நவராத்திரி