அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இலுப்பைபட்டு, நாகப்பட்டினம்

கணவனை காத்த அம்பாள் :

  பாற்கடலை கடைந்தபோது, வாசுகி பாம்பு களைப்பில் விஷத்தை கக்கியது. தேவர்களை காப்பதற்காக விஷத்தை சிவன் விழுங்கினார். அவ்விஷம், சிவனின் உடம்பில் சேராமல் இருப்பதற்காக அம்பாள், சிவனுக்கு பின்புறமாக இருந்து அவரது கண்டத்தை (தொண்டைக்குழி) பிடித்து நிறுத்தினாள். விஷம் கழுத்திலேயே தங்கியது. இதன் அடிப்படையில் இத்தலத்தில் சிவன் சன்னதிக்கு பின்புறம் அமிர்தவல்லிக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அமிர்தத்தில் கலந்திருந்த விஷத்தை நிறுத்தியவள் என்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள். கணவனை காத்த அம்பாள் என்பதால் இவளிடம் வேண்டிக்கொண்டால் பெண்களுக்கு கணவன் மீது பாசம் அதிகரிக்கும், தீர்க்க சுமங்கலிகளாக வாழலாம் என்பது நம்பிக்கை. இவள் தன் இடது கையால் பாதத்தை காட்டியபடி அருளுவது சிறப்பு.

பஞ்சலிங்க தலம் :

  பொதுவாக சிவன் கோயில்களில் ஒரு மூலவர் மட்டுமே இருப்பார். அரிதாக சில தலங்களில் இரண்டு மூலவர்கள் இருப்பர். ஆனால், இங்கு ஐந்து சிவன் தனித்தனி சன்னதிகளில் இருக்கிறார். தர்மர் வழிபட்ட சிவன் நீலகண்டேஸ்வரர், அர்ஜுனன் வழிபட்ட சிவன் படிகரைநாதர், பீமனால் வழிபடப்பட்டவர் மகதீஸ்வரர், நகுலன் வழிபட்டவர் பரமேஸ்வரர், சகாதேவன் வழிபட்டவர் முத்துகிரீஸ்வரர் என்ற பெயர்களில் அருளுகின்றனர். இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. படிகரைநாதர் சன்னதியிலேயே மங்களாம்பிகை தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். பீமன் வழிபட்ட சிவன், சோடஷலிங்கமாக, 16 பட்டைகளுடன் இருக்கிறார். பதினாறு செல்வமும் பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

நளன் வழிபாடு :

  ஐந்து மூர்த்திகளும் மூலவராக இருந்தாலும், நீலகண்டேஸ்வரர், படிகரைநாதர் இருவரும் பிரதான மூர்த்திகளாக வணங்கப்படுகின்றனர். இவர்களுக்கு எதிரில் மட்டுமே நந்தி இருக்கிறது. சகாதேவன் வழிபட்ட முத்துகிரீஸ்வரர், தெற்கு நோக்கி இருக்கிறார். சாஸ்திரம், ஜோதிடம் கற்பவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கின்றனர். சனிபகவானால் பிடிக்கப்பட்ட நளமகாராஜன், ஏழரைச்சனியின் முடிவு காலத்தில் சிவதலங்களுக்கு சென்று தரிசித்து வந்தார். திருக்கடையூர் செல்லும் முன்பு அவர் இத்தலத்தில் பஞ்சலிங்கங்களை தரிசனம் செய்தார். அப்போதே தனக்கு சனியின் ஆதிக்கம் குறைந்திருப்பதை உணர்ந்து கொண்டாராம். எனவே, இங்கு வேண்டிக்கொண்டால் சனியின் ஆதிக்கம் குறையும் என்பது நம்பிக்கை.

சிறப்பம்சங்கள் :

★ இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

கல்யாண வெங்கடேச பெருமாள்

கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு மட்டைத் தேங்காய் வைத்து வழிபட்டால் மணவாழ்க்கை அமையும்!

திருவண்ணாமலை மாவட்டம் நார்த்தாம்பூண்டியில் பிரம்மா பூஜித்த திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் தனித்தனி கோவிலில் அருள்பாலிக்கின்றனர்.

நீராடிவிட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேசருக்கு மட்டைதேங்காய் வைத்து வழிபட்டு கோவிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

*தலவரலாறு*

ஒருமுறை வெள்ளம் காரணமாக ஏழு உலகங்களும் அழிந்தன. திருமால் குழந்தை வடிவில் ஆலிலை கண்ணனாக வெள்ளத்தில் மிதந்தார். மீண்டும் உலகத்தை படைக்க விரும்பி, தன் நாபிக் கமலத்தில் (தொப்புள்) பிரம்மாவை உருவாக்கினார்.

அவருக்கு படைக்கும் சக்தியை வழங்கினார். படைப்புத் தொழிலை ஏற்ற பிரம்மா, திருமாலுக்கு நன்றி செலுத்தும் விதமாக பூலோகத்தில் ஒரு கோவில் அமைத்தார். அவரே “திருவுந்தி பெருமான்’ என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் வீற்றிருக்கிறார்.

“உந்தி’ என்றால் “வயிறு’. வயிற்றிலுள்ள தொப்புளில் இருந்து பிறந்ததால், பிரம்மா பிறக்க காரணமான உறுப்பின் பெயரையே பெருமாளுக்கு சூட்டினர். புராண காலத்தில் பிரம்மாவின் பெயரால் இவ்வூர் “சதுர்முகன்புரி’ (நான்கு முகம் கொண்ட பிரம்மாவின் ஊர்) என அழைக்கப்பட்டது. தற்போது நார்த்தாம்பூண்டி எனப்படுகிறது.

*நாரதர் பூண்டி*

ஒரு சமயம் சாபம் காரணமாக நாரதர் பூலோகத்தில் பிறக்க நேர்ந்தது. அவர் தன் சாபம் தீர திருவுந்தி பெருமாளை நந்தவனம் அமைத்து வழிபட்டார்.

12 ஆண்டுகள் வழிபட்ட பிறகு, திருமால் நாரதருக்கு காட்சியளித்து சாப விமோசனம் அளித்தார். நாரதர் தங்கி வழிபட்டதால் சதுர்முகன்புரிக்கு “நாரதர் பூண்டி’ என பெயர் ஏற்பட்டது. அதுவே “நார்த்தாம்பூண்டி’ என மருவி விட்டது.

12ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட மன்னர் சம்புவராயர் காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டது. 16ம் நூற்றாண்டில் அந்நிய படையெடுப்பின் போது கோவில் கோபுரம், மண்டபம், குளம் அழிந்தது.

பிறகு பெருமாளுக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி தாயாரோடு காட்சி தரும் இவர் “கல்யாண வெங்கடேசப் பெருமாள்’ எனப்படுகிறார்.

பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கு இங்கு சன்னிதிகள் உள்ளன. திருமணம் விரைவில் கைகூட பெருமாளுக்கு மட்டைத் தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதி சமேதராக வழிபடுகின்றனர்.

*இருப்பிடம்*

திருவண்ணாமலை – வேலூர் சாலையில் 18 கி.மீ., தூரத்தில் நாயுடு மங்கலம் அங்கிருந்து கூட்டுரோட்டில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

நன்றி. ஓம் நமசிவாய

ஸ்ரீ வேணு கோபாலனின் திவ்ய தரிசனம்

கடந்த ஒன்றரை வருடங்களாக எங்கு பார்த்தாலும் கரோனா வைரஸ்  லாக்டவுன்  ஊரடங்கு உத்திரவு  கடைகள் அடைப்பு  என்ற வார்த்தைகளையே கேட்டு கேட்டு அலுத்து விட்டோம்.  வெளியே போக முடியாது.  தொலைக்காட்சியைத் திறந்தால் நீல நிற உடையில் மருத்துவர்களும் செவிலியர்களும் மனித உயிர்களைக் காப்பாற்ற நடக்கும் போராட்டம்.  செய்தித்தாளைப் பிரித்தால் வைரஸின் கோர தாண்டவம் அதனால் நடந்த உயிர் இழப்புக்கள்.  இதைத் தவிர வேறு செய்திகளில்லை.

திரையரங்குகளும் பொது இடங்களும் மனிதர்கள் நடமாட்டமில்லாமல் மூடப்பட்டன.  கடவுள்களும் கதவுகளை மூடிக்கொண்டுவிட்டனர்.  மனிதர்கள் பட்ட அல்லல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  உலகமே ஸ்தம்பித்து நின்றது.

தற்சமயம் எல்லாம் சற்றுக் கட்டுக்குள் வந்தது போல் தோன்றுகிறது.  அதனால் இங்கு எல்லாம் கொஞ்சம் திறக்கப்பட்டு மனிதர்கள் நடமாட்டம் காணப்படுகிறது.  நீண்ட நாட்கள் அடைப்பட்டுக் கிடந்த நாங்கள் நேற்று மாலை வெளியே கிளம்பினோம் என் வீட்டிலிருந்து சுமார் 9 கிமீ தூரத்தில் இருந்த அம்முகுடா என்ற இடத்தில் உள்ள பழைய கால ஸ்ரீ ராதா ருக்மிணி சமேத வேணுகோபால ஸ்வாமி தேவஸ்தானம் என்ற கோவிலுக்கு போனோம். 

1818ல் கட்டப்பட்ட கோவில் அது.  இராணுவ வீர்ர்களில் குடியிருப்புக்களின் மத்தியில் மிகப்பெரிய நிலத்தில் சுற்றிலும் பெரிய பெரிய மரங்களின் நிழலில் கட்டப்பட்டு நிற்கிறது.  உள்ளே எல்லா ஆழ்வார்களின் பெயர்களிலும் அந்தக் கால கல்தூண்கள் அந்தக் கோயிலைத் தாங்கி நிற்கின்றன.  உள்ளே பெரிய பாறையைக் குடைந்து அதையே கருவறையாகக் கொண்டு தனக்கு பிரியமான ராதை ருக்மணியுடன் குழலூதிக்கொண்டு வெகு கம்பீரமாக நிற்கிறான் ஸ்ரீ வேணு கோபால ஸ்வாமிஅதன் கீழேயே உற்சவ மூர்த்திகளும் வெகு நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. 

வெளியே தனி சன்னதியில் கைகூப்பி கம்பீரமாக நிற்கும் அனுமான்.  கடந்த 100 வருடங்களாக இந்த கோயிலை  ஒரே தமிழ் குடும்பம் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வருகின்றனர்.  அவர்களும் அந்த கோவில் வளாகத்திலேயே குடியிருக்கின்றனர். அதில் திருமதி மஞ்சுளா என்பவரை நான் சந்தித்து இந்த  விவரங்களைத் தெரிந்து கொண்டேன்.  பிரதி சனிக்கிழமை கிருஷ்ண பஜன் நடைபெறும் என்றும் பிறகு மஹாபிரசாதம் வினியோகிக்கப்படும் என்றும் சொன்னார்கள்.  கருவறையைச் சுற்றி பூச்செடிகளும் மரங்களும் மிக ரம்மியமான சூழலைக் கொடுக்கிறது  பிரட்சணம் பண்ணிவிட்டு ஆரத்தி பார்த்துவிட்டு மன நிறைவுடன் திரும்பினோம்.  ஸ்ரீ வேணுகோபலனின் குழலோசை இந்த விஷக்கிருமிகளை தொலைதூரத்திற்கு கண்டிப்பாக விரட்டிவிடும் என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பினோம்.

தடையை உடைக்கும் பழவங்காடி மகாகணபதி கோவில்

தடையை உடைக்கும் பழவங்காடி மகாகணபதி கோவில்

நம் செயல்பாடுகளில் எந்தத் தடையுமில்லாமல் வெற்றியடைய உதவும் தலமாகக் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பழவங்காடி மகாகணபதி கோவில் இருக்கிறது.

நம் செயல்பாடுகளில் எந்தத் தடையுமில்லாமல் வெற்றியடைய உதவும் தலமாகக் கேரள மாநிலம், திருவனந்தபுரம், கிழக்குக் கோட்டைப் பகுதியில் அமைந்திருக்கும் பழவங்காடி மகாகணபதி கோவில் இருக்கிறது.

திருவாங்கூர் சமஸ்தான மன்னன் ராமவர்ம மகாராஜா தனது அரண் மனையைப் பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்ற முடிவு செய்தான். அதனால் தனது படைவீரர்கள் மற்றும் மக்களுடன் பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இடம் பெயர்ந்தான்.

அப்போது மன்னன் வழிபட்டு வந்த விநாயகர் சிலை ஒன்றையும், படை வீரர்கள் தங்களுடன் எடுத்துச் சென்றனர். அவர்கள் எடுத்துச் சென்ற சிலையை அங்கிருந்த கோட்டைக்கு அருகில் வைத்தனர். அரண்மனை பாதுகாப்புப் பணியிலிருந்த படை வீரர்கள் அந்த விநாயகரை வழிபட்டுத் தங்கள் பணிக்குச் செல்லத் தொடங்கினர்.

படைவீரர்கள் தாங்கள் போருக்குச் செல்லும் காலங்களில், அந்த விநாயகர் சிலையையும் தங்களுடன் எடுத்துச் சென்று போர்க்களத்தில் நிறுவி வழிபட்டு, அதன் பிறகு போரிடச் சென்றனர். இதனால் அவர்கள் சண்டையிட்ட போர்களிலெல்லாம் வெற்றி கிடைத்தது. படை வீரர்களின் வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

பிற்காலத்தில் படைவீரர்கள், அந்த விநாயகர் சிலையை ஓரிடத்தில் நிலையாக நிறுவி வழிபாடுச் செய்வதென முடிவு செய்தனர். அதனைத் தொடந்து, சிறிய அளவிலான கோவில் ஒன்று கட்டப்பட்டு அதில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்ததாக தல வரலாறு சொல்கிறது.

திருவாங்கூர் சமஸ்தானப் படைவீரர்கள் அனைவரும் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்பு, படை வீரர்கள் பராமரிப்பில் இருந்து வந்த விநாயகர் கோவிலும் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. ராணுவப் பராமரிப்பில் இருக்கும் விநாயகரை அன்றிலிருந்து ராணுவப் பிள்ளையார் (மிலிட்டரிப் பிள்ளையார்) என்று அங்குள்ளவர்கள் அழைக்கத் தொடங்கி விட்டனர்.

திருவனந்தபுரம் கிழக்குக் கோட்டைப் பகுதியில் பழவங்காடியில் இருக்கும் இக்கோவிலில் மகாகணபதி கிழக்கு நோக்கிப் பார்த்தபடி, வலது காலை மடித்து வைத்து அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலுக்குள் விநாயகரின் முப்பத்திரண்டு திருவுருவங்கள் அழகிய ஓவியங்களாக வரைந்து வைக்கப்பட்டிருக்கின்றன. கோவில் வளாகத்தில் தர்மசாஸ்தா, துர்க்கை அம்மன், நாகராஜா ஆகியோருக்கான சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

ஆலயம் காலை 4.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கு தேங்காய் உடைத்து (விடலை) வழிபாடு செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. சபரிமலைக்கு அடுத்ததாக இங்குதான் அதிக அளவில் தேங்காய் உடைத்து வழிபாடு நடக்கிறதாம். தேங்காய் உடைத்து வழிபட்டால், நம் செயல்பாடுகளில் எந்தத் தடையுமில்லாமல் வெற்றியடைய முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

*அமைவிடம் :*

திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருவனந்தபுரம் கிழக்குக் கோட்டைப்பகுதியில் அமைந்திருக்கும் இத்தலத்திற்குச் செல்ல நகரின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

நன்றி.    ஓம் நமசிவாய*

நோய் நொடி இல்லாமல் வளர்க

கேரளாவிலுள்ள ஆலப்புழா மாவட்டம் மருத்தோர் வட்டம் சேர்த்தலாவில் தன்வந்திரி கோயில் உள்ளது.  இங்கு வழிபட்டால் நோய் நொடி இல்லாத நல்வாழ்வு அமையும். 

வயலார் கிராமத்தை சேர்ந்த தம்பான் இனத்தை சேர்ந்த ஒருவர் நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டார்.  வைக்கத்திலுள்ள வைக்கத்தப்பன் சுவாமியிடம் முறையிட்டார். வலி குறைந்தது.  அன்றிரவு கனவில் தோன்றிய சிவன் பக்தனே  இத்தலத்தை விட்டு சென்றால் மறுபடியும் வலி ஏற்படும். சேர்த்தலைக்கு செல் அங்குள்ள கேளம் குளத்தில் முழுகு   நீருக்கடியில் மூன்று சிலைகள் கிடைக்கும்.  முதலில் கிடைக்கும் சிலை சக்தி வாய்ந்த்தால் குளத்திலேயே விட்டுவிடு.  இரண்டாவது சிலையை அந்தணருக்கு தானம் கொடு.  மூன்றாவது சிலையை பிரதிஷ்டை செய்  அப்போது நோய் தீர பெறுவாய் என்றார்   அதன்படி இரண்டாவது சிலையை வெள்ளூடு என்னும் பகுதியை சேர்ந்த நம்பூதிரிக்கு தானமளித்தார்.  அவர் அதை தன் வீட்டிலேயே வைத்து வழிபட்டார்.  சில ஆண்டுகளுக்கு பிறகு மண்முக என்பவரின் உதவியுடன் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினார்.  இரண்டு குடும்பத்தினரும் நிர்வகித்தனர். .

பிற்காலத்தில் கோயில் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை எழுந்தது.  இதில் மன்முக குடும்பத்தினர் சிலையின் கையை உடைத்தனர். நம்பூதிரியின் குடும்பத்தினர் கை உடைந்த சிலையை மருத்தோர் வட்டத்தில் பிரதிஷ்டை செய்தனர்.  உடைந்த கையை வெள்ளியினால் செய்து பொருத்தினர் அங்கு சுவாமி மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.  அக்காலத்தில் காயமடைந்தவர்களௌக்கு அட்டை பூச்சியை வைத்து சிகிச்சை செய்யும் முறை இருந்தது. இதனால் சுவாமியின் இடது கையில் வெள்ளியினால் ஆன அட்டைப்பூச்சி உள்ளது.

 இக்கோயிலில் முக்குடி என்னும் மருந்தை தயிரில் கலந்து தயாரிக்கின்றனர்.  பூஜையின் போது மருந்து சுவாமியின் கையிலுள்ள தங்கக் குடத்தில் வைக்கப்படும்.  இதைப் பருகினால் நோய்கள் விலகும்.  குணம் அடைந்தவர்கள் சுவாமிக்கு வெண்ணெய் சந்தனக்காப்பும் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.  ஆஸ்துமா  வாத நோய் தீரவும் நினைத்தது நிறைவேறவும் கயற்றேல் வானம் என்னும் பூஜை நடத்துகின்றனர். அமாவாசையன்று நடக்கும் பிதுர் வழிபாட்டில் காட்டு சேப்பங்கிழங்கில் தயாராகும் தாள்கறி நிவேதனம் செய்வர்.  இந்த கிழங்கை தொட்டவருக்கு கையில் அரிப்பு ஏற்படும்.  அப்படிப்பட்ட இக்கிழங்குடன் மூலிகைகளைச் சேர்த்து தயாரிக்கும் மருந்து பூஜையில் இடம் பெறும்  இதைச் சாப்பிட நீண்ட கால நோயும் தீரும்.

எப்படி செல்வது

எர்ணாகுளத்திலிருந்து சேர்த்தலா 40 கிமீ  அங்கிருந்து 2 கிமீ

விசேஷ நாட்கள்

ஆவணி திருவோனம்   மாதந்தோறும் திருவோணத்தன்று பால் பாயச வழிபாடு.  சித்திரை உத்திரத்தன்று பிரதிஷ்டா தினம்  ஐப்பசி தேய்பிறை துவாதசி  தன்வந்திரி ஜெயந்தி.

  அருகிலுள்ள தலம்.

வைக்கம்  மகாதேவர் கோயில் 24 கிமீ

வரகூர் வெங்கடேசப் பெருமாள் கோவில்

.

திருவையாறுக்கு அருகில் கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் திருப்பூந்துருத்தி எனும் திருத்தலம் உள்ளது. இங்கிருந்து 7 கி.மீ. தொலைவு பயணித்தால், வரகூர் எனும் கிராமத்தையும் வெங்கடேசப் பெருமாள் கோயிலையும் அடையலாம்.

ஒருகாலத்தில், பூபதிராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் வரகூர் என்றானது. அதாவது நாராயண தீர்த்தர் எனும் அடியவர், பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று தரிசித்து வந்தார். அப்போது இந்த ஊருக்கு வரும் போது அவருக்கு வழி தெரியவில்லை. 

அந்த சமயத்தில், பெருமாள், வெண்பன் றியாக வந்து வழிகாட்டியதுடன் தன்னுடைய திருக்கோலத்தையும் காட்டியருளினார். வராகம் என்றால் பன்றி. இதையடுத்து இந்த ஊர், வராகூர் என்று அழைக்கப்பட்டு, பின்னர் வரகூர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் நாராயண தீர்த்தர். இசையில் பாண்டித்யம் பெற்றிருந்தார். அதேபோல், நாட்டியத்தையும் அறிந்தவராக இருந்தார். ஸ்ரீமத் பாகவத்தை எல்லோருக்கும் போதித்து வந்தார்.

இல்லறத்தை விட்டார். துறவறம் மேற்கொண்டார். ஒருமுறை நாராயண தீர்த்தருக்கு தீராத வயிற்றுவலி வந்தது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் சென்றார். அங்கே, திருப்பதி தலத்தில், ‘திருவையாறுக்கு அருகில் பூபதிராஜபுரத்துக்குச் செல்வாயாக. உன் வயிற்று வலி தீரும்’ என அசரீரி கேட்டது.

இதன் பின்னர், நடுக்காவிரி எனும் பகுதியை அடைந்தார். இனி எந்தப் பக்கம் செல்வது, எப்படிச் செல்வது என்று தெரியவில்லை அவருக்கு. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என அங்கே மரத்தடியில் இளைப்பாறினார்.

சிறிது நேர இளைப்பாறலுக்குப் பின்னர், ஒரு அசரீரி கேட்டது. ‘விடியும்போது வெண்பன்றி ஒன்று உனக்கு முன்னே வரும். வழிகாட்டும்’ என கேட்டது. அதன்படி மறுநாள். விடிந்தது. வெண்பன்றி வந்தது. அந்தப் பன்றி செல்லும் வழியில், பன்றியைப் பின் தொடர்ந்து பயணித்தார் நாராயண தீர்த்தர்.

ஒவ்வொரு கிராமமாகக் கடந்து வந்து, ஓரிடத்தில் பெருமாள் கோயிலுக்குள் சென்றது. அவரும் சென்றார். அங்கே அந்த வெண்பன்றி, சந்நிதிக்குள் சென்றது. மறைந்தது. அங்கே பெருமாள் தன் திருக்கோலத்தைக் காட்டியருளினார். நாராயண தீர்த்தரின் வயிற்று வலி காணாமல் போனது.சிலிர்த்துப் போன நாராயண தீர்த்தர், அங்கேயே, அந்தத் தலத்திலேயே தங்கினார். கிருஷ்ண பகவானின் லீலைகளை விவரிக்கும் வகையிலான ‘ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி’ எனும் இசையும் நாட்டியமும் கலந்த நாடகத்தை அரங்கேற்றினார்.அதுமட்டுமா? இந்தத் தலத்தில் உறியடி உத்ஸவம் நடைபெறச் செய்தார்.

வரகூர் எனும் அற்புதமான திருத்தலத்தில், கிருஷ்ண ஜயந்தியின் போது, இன்றைக்கும் கோலாகலமாக நடைபெறுகிறது உறியடி உத்ஸவம். அப்போது பத்துநாள் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு விதமான கோலத்தில் காட்சி தருவார். உறியடி உத்ஸவத் திருநாளன்று, வெண்ணெய்த்தாழிக் கோலத்தில் பவனி வருவார். அருகில் உள்ள கடுங்கலாற்றங்கரையில் எழுந்தருள்வார். மூலவரின் திருநாமம் ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள்.அப்படி உறியடிக் கண்ணனாக பெருமாள் வீதியுலா வரும் வேளையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், அங்கப்பிரதட்சணம் செய்துகொண்டே கோயிலை அடைவார்கள். 

சுற்றுவட்டார கிராம மக்களும் தஞ்சை, திருவையாறு, கண்டியூர் முதலான ஊர்களைச் சேர்ந்த மக்களும் வந்து விழாவில் கலந்துகொண்டு தரிசித்துச் செல்வார்கள்.

வரகூரில் குடிகொண்டிருக்கும் பெருமாளின் திருநாமம் – ஸ்ரீவெங்கடேசப் பெருமாள். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்தவர். வரகூர் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டவர்கள் ஏராளம். உலகில் எங்கிருந்தெல்லாமோ வரகூர் பெருமாளை வந்து ஸேவித்தவண்ணம் உள்ளனர்.தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள், எவ்வளவு மருந்து சாப்பிட்டும் குணமாகவில்லையே என்று வருந்துவோர், வரகூர் பெருமாளை வந்து தரிசித்துச் சென்றால், விரைவில் குணமாகிவிடுவார்கள். கல்யாணக் கவலையால் கண்ணீர் விடுபவர்களுக்கு விரைவிலேயே திருமண பாக்கியத்தைத் தந்தருள்வார் வரகூர் பெருமாள்.இங்கே, பெருமாள் சந்நிதியில், வெள்ளிக்காப்பு வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

திருச்சி கல்லணையில் வழியாகவும் வரகூர் திருத்தலத்தை அடையலாம்.

.

பள்ளிகொண்ட நரசிம்மர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலுள்ள திருவதிகை சர நாராயணப்பெருமாள்  கோயிலில் பள்ளி கொண்ட நரசிம்மர் சன்னதி உள்ளது.  பிரதோஷத்தன்று இவரை தரிசித்தால் நினைத்தது நிறைவேறும்.

அசுரர்களான தரகாட்சன் கமலாட்சன் வித்யுன்மாலியிடம் பறக்கும் கோட்டைகள் இருந்தன.  அவற்றில் பறந்து சென்று தேவர்களையும் முனிவர்களையும் தாக்கினர்.  சிவபெருமானிடம் முறையிடவே அவர் அசுரர்களுடன் போர் புரிய தயாரானார்.  அதற்காக தேர் ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் சூரியனும் சந்திரனும் சக்கரங்களாக மாறினர். பூமி தேரின் தட்டாக ஆக்கப்பட்டது. நான்கு வேதங்களும் குதிரைகளாக தேரில் பூட்டப்பட்டது. மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமான் ஆதிசேஷனை அதில் நாணாக பூட்டினார்.  பிரம்மா தேரின் சாரதியாக அமர்ந்தார்.  மகாவிஷ்ணுவே அம்பாக மாறி அசுரர்களின் அழிவுக்கு துணை நின்றார்  அவரே சர நாராயணப் பெருமாள் என்னும் பெயரில் இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார்.  சரம் என்ற சொல்லுக்கு அம்பு என்பது பொருள். பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் உள்ள மகாவிஷ்ணுவின் சிலை சாளக்கிராம கற்களால் ஆனது. பாரதப்போர் முடிந்ததும்  பிராயச்சித்தம் தேடிய அர்ஜூனன் இங்கு வழிபாடு செய்து பாவம் நீங்கப் பெற்றார்.

செங்கமலத்தாயார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.  மாதம் தோறும் உத்திர நட்சத்திரதன்று தாயாருக்கு திருமஞ்சனம் நடக்கிறது.  வழக்கமாக கைகூப்பி நிற்கும் கருடாழ்வார் இங்கு மட்டும் கைகட்டி சேவை செய்யும் நிலையில் உள்ளார்.  மார்க்கண்டேய மகரிஷியின் மகளான ஸ்ரீதேவியை மகாவிஷ்ணு இங்கு மணம் செய்தார். 

இத்தலத்தை தரிசித்தால் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்  மகாலட்சுமியின் அம்சமான வில்வம் தலவிருட்சமாக உள்ளது  இங்குள்ள நரசிம்மர் படுத்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.  அசுர்ரான வக்ரனை வதம் செய்த களைப்பு தீர நரசிம்மர் இங்கு தங்கியுள்ளார்.  பிரதோஷத்தன்று இவரை வழிபட்டால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.

எப்படி செல்வது

கடலூரில் இருந்து பண்ருட்டி  27 கிமீ

விசேஷ  நாட்கள்

சித்திரை திருமஞ்சனம்  கிருஷ்ண ஜெயந்தி  பங்குனி உத்திரம் 

ஸ்ரீ கங்கை வராக நதீஸ்வரர் கோவில்

‘சங்கரனுக்கு ஆபரணம் போன்றவள்’ என்ற பொருளில் ‘சங்கராபரணி’ என்ற பெயர் கொண்டு, செஞ்சி என்னும் இடத்தில் தோன்றி, விழுப்புரம் மாவட்டம் வழியாகத் தவழ்ந்தோடி, புதுச்சேரிக்கு அருகில் கடலில் சங்கமிக்கும் ஆறுதான் சங்கராபரணி.

 ‘செஞ்சியாறு’, ‘கிளிஞ்சளாறு’, ‘வராக நதி’ என்று பல பெயர்களில் அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் கரையில் எண்ணற்ற புராதனமான திருத்தலங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் திருக்காஞ்சி அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் திருக்கோவில்.

வடக்கு நோக்கி உத்தரவாகினியாக சங்கராபரணி பாய்வதால், இந்த ஆறு கங்கைக்கு நிகராகவும், இந்தத் தலம் காசிக்கு நிகரான தலமாகவும் போற்றப் படுகிறது.

அதன் காரணமாகவும் சங்கராபரணி என்னும் வராக நதியின் கரையில் கோவில் கொண்டிருப்பதாலும் இந்தத் திருத்தலத்து இறைவன் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார். மேலும் இந்த இறைவன் அகத்திய மகரிஷியால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பெற்றவர் என்பதால், இந்தக் கோவில் அகத்தீஸ்வரம் என்னும் பெயரிலும் போற்றப்படுகிறது.

இந்த ஆற்றின் கரையில் குபேர வர்மன், கேசவ வர்மன், நாகேந்திரன், கமலன், வியூக முனி, மங்கலன் முதலான நவசித்தர்களின் ஜீவசமாதிகள் இருந்ததாகவும், தலத்தின் ஈசான்ய மூலையில் சித்த புருஷர்களான ஸ்ரீ கங்காதர சுவாமிகளுக்கும் ஸ்ரீ சதாசிவ சுவாமிகளுக்கும் அதிஷ்டானங்கள் இருந்துள்ளதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆலயத்தில் இறைவன் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார். சகல வியாதிகளையும் போக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது இந்தத் தலம். மேலும், இத்தலம் காசிக்கு நிகராகப் போற்றப்படுவதன் பின்னணியில் வேறொரு சம்பவமும் சொல்லப்படுகிறது.

வேத விற்பன்னர் ஒருவர், தன் தந்தைக்கு நீத்தார் கடன் செய்ய அஸ்தியைக் காசிக்குக்கொண்டு சென்றதாகவும், அவர் திருக்காஞ்சியை அடைந்த போது, மண் பானையில் இருந்த அஸ்தி பூக்களாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது.

முற்காலத்தில் காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் திருக்காஞ்சி தலத்துக்கும் வந்து வழிபாடுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்களாம். காசியில் ஸ்ரீ விசாலாட்சி, 

ஸ்ரீ அன்னபூரணி ஆகியோர் அருள்வது போலவே, காசிக்கு நிகரான திருக்காஞ்சி தலத்திலும் ஸ்ரீ காமாட்சி, ஸ்ரீ மீனாட்சி ஆகியோர் அருட்காட்சி தருகின்றனர்.

சுவாமி சந்நிதியின் வலப்புறம் அன்னை காமாட்சி, தெற்கு நோக்கி திருக்காட்சி தர அன்னை மீனாட்சி தனியாகக் கிழக்கு நோக்கி திருக்காட்சி தருகிறாள்.

மேலும், கோவிலில் பரிவார மூர்த்தங்களாக ஸ்ரீ விநாயகர், வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான், ஸ்ரீ விஷ்ணு துர்கை, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ பைரவர், ஸ்ரீ லட்சுமி வராகப் பெருமாள், ஸ்ரீ அகத்தியர், நவகிரகங்கள் ஆகியோரும் அமைந்திருக்கின்றனர். 

12-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கோவிலின் பெரும்பகுதி சேதம் அடைந்து நீரில் மூழ்கிவிட்டதாம். ஆற்று நீரில் பாதி அளவுக்கு மூழ்கியிருந்த ஈசனுக்குத் தினமும் அர்ச்சகர் ஒருவர் நீந்திச் சென்று நித்திய பூஜைகள் செய்து வந்ததாராம்.

பிற்காலத்தில் சுவாமியின் லிங்கத் திருமேனி மட்டும் இப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு, புதிதாகக் கோவில் கட்டி பிரதிஷ்டை செய்திருப்பதுடன் பரிவார மூர்த்தங்களையும் புதிதாகப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

இங்குள்ள கருவறையானது தஞ்சை பெரிய கோவிலின் கருவறையை ஒத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோவிலில் பௌர்ணமி தோறும் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், திருமுறை பாராயணங்களுடன் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

அமாவாசை நாள்களில் காலை வேளையில் இந்தக் கோவிலுக்கு வந்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து, சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபட்டால் பித்ரு தோஷம் விலகி, சுவாமியின் திருவருளோடு முன்னோரின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நவராத்திரி நாள்களில் அம்பிகை இருவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரங்களும், விஜயதசமி நாளில் அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாரிவேட்டைக்குச் செல்லும் வைபவமும் விமரிசையாக நடைபெறும்.

பாண்டிச்சேரி – விழுப்புரம் சாலையில் வில்லியனூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்காஞ்சி திருத்தலம்.

நன்றி.    ஓம் நமசிவாய

வித்தியாசமான கோலத்தில் பெருமாள் காட்சி தரும் கோவில்கள்

சிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காண, சிங்கபெருமாள் கோயில் செல்ல வேண்டும். இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.

திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்தமைத்த சிவன்-திருமால் கோயில் இதுமட்டும்தான்.

திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோயிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவரும் வேதநாராயணன் என்று பெயர்.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதர், அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தரும் இவரது தரிசனம் 2019ம் ஆண்டு கிடைத்தது.

திருக்கோவிலூரில் உள்ள மூலவர் இலுப்பை மரத்தால் ஆனவர். இவரது பெயர் திருவிக்ரசுவாமி.

கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழுதலைகள் இருப்பது வித்தியாசமானது.

திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன்கோயில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோயில்களிலும் தாயாருக்கு சன்னதி இல்லை.

பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீவைகுண்டத்தில் நத்தத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதிகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனகட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.

மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்து கொண்டு தரையில் சாய்வாக கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு, சக்கரம் இல்லை.

காஞ்சி உலகளந்த பெருமாள் திருக்கோயிலில் திருமழிசையாழ்வாராலும் , திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன. பேரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகியவையே அவை.

நன்றி.   ஓம் நமசிவாய

மாங்காடு காமாட்சி அம்மன்

காமாட்சி என்றதும் அனைவருக்கும் காஞ்சிபுரம் தான் நினைவுக்கு வரும். ஆனால் காமாட்சி அன்னை முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகே காஞ்சிபுரத்துக்கு எழுந்தருளினாள் என்று காஞ்சிப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஐந்து குண்டங்களில் தீ வளர்த்து நடுக்குண்டத்தில் தனது இடது காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி அக்னியில் படுமாறும், வலது காலை இடது காலின் தொடைக்கு மேற் புறமாக இடது கையை நாபிக் கமலத்திற்கு அருகிலும் வலது கையில் ஜபமாலையுடன் தனது சிரசிற்கு மேலும், கண்களை மூடிய நிலையில் கடும் தவம் புரிந்தார்.

அன்னை பார்வதி தேவி எத்தனையோ தவம் இருந்துள்ளாள். அதில் மிகக் கடுமையான தவமாக மாங்காட்டில் இருந்த தவம் கருதப்படுகிறது.

மூலஸ்தானத்தில் அம்பாளாக பாவித்து வணங்கப்படும் ஸ்ரீசக்ரம், அதற்கு பின்புறம் பஞ்சலோகத்தால் ஆன ஆதிகாமாட்சி மற்றும் முன் மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் செய்யும் காமாட்சி என இங்கு மூன்று அம்பாளை தரிசிக்கலாம். இதுமட்டுமின்றி ஆதிகாமாட்சி அருகில், சிறிய காமாட்சி விளக்கும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள்.ஒருகாலத்தில் மாமரங்கள் நிறைந்து மாமரக்காடாக விளங்கியதால் இத்தலம் மாங்காடு எனும் பெயர் பெற்றது.

மாங்காடு தலத்தில் பார்கவர், மார்க்கண்டேயர் ஆகிய மகரிஷிகள் தவம் இருந்து பலன் பெற்றுள்ளனர். கோவில் உள் பிரகாரத்தில் ஆதிசங்கரரின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மாங்காட்டில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு காமாட்சியம்மன் ஆலயத்தை சோழ மன்னர்கள் கட்டினார்கள், அவர்களால் கருவறை, அர்த்த மண்டபம் கட்டப்பட்டது.

விஜயநகர பேரரசு மன்னர்கள் இத்தலத்தில் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர். மகா மண்டபம், சபா மண்டபம் அவர்கள் கட்டியது தான்.ஒரு கண் பார்வையிழந்த அசுரகுரு சுக்ராச்சாரியார் மீண்டும் பார்வை வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார்.இவ்வாலயத்தில் காமிக ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மாங்காடுக்கு சூதவதனம், மாலை என்ற பெயர்களும் உண்டு.திருவேற்காடு கருமாரி அம்மன் மற்றும் வேதபுரிஸ்வரர் ஆலயம் அருகில் உள்ளது. பூந்தமல்லிக்கும், குன்றத்தூருக்கும் நடுவில் மாங்காடு உள்ளது. சென்னையில் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாநகர பஸ் வசதி உள்ளது.

இத்திருக்கோவிலில் “எலுமிச்சம்பழம் கொண்ட ஆறு வார வழிபாடு” பக்தர்களால் பெரிதும் கடைப்பிடிக்கப்படுகிறது. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.கோயிலிலிருந்து சற்றுதூரத்தில், வெள்ளீஸ்வரர் கோயில் உள்ளது. சுக்கிரனின் மற்றொரு பெயர் வெள்ளி. நவக்கிரக கோயிலான கஞ்சனூர் சுக்ரபுரீஸ்வரர் கோயில் போன்று சுக்கிரனுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கோயிலாகும்.காஞ்சிபுரத்தை போல, மாங்காட்டில் காமாட்சிக்கே முக்கியத்துவம் என்பதால், வெள்ளீஸ்வரர் கோயிலில் அம்பாள் இல்லை. அம்பாளின் பாதம் மட்டுமே இருக்கிறது.

வெள்ளீஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர், கைகளில் நெற்கதிரும், மாங்கனியும் வைத்திருக்கிறார். விவசாயிகள் இவருக்கு மாங்கனி மற்றும் நெல் நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இதனால், விவசாயம் செழிப்பதாக நம்பிக்கை.திருமாலும் தன் தங்கைக்கு திருமணச்சீர் கொண்டு வந்தார். ஆனால், சிவனின் கட்டளைப்படி அம்பாள் காஞ்சிபுரம் செல்லவே திருமாலும் கிளம்பினார்.

மார்க்கண்டேயர் இங்கேயே தங்கும்படி அவரிடம் வேண்டினார். எனவே திருமால், வைகுண்டப் பெருமாளாக இங்கு எழுந்தருளினார். பிரயோக சக்கரத்துடன் இருக்கும் இவர், சீர் கொண்டு கணையாழி கையில் வைத்திருக்கிறார்.மாங்காடு காமாட்சிக்கும் ஒற்றை மாமரத்துக்கும் தொடர்பு உண்டு. ஆனால் ஏனோ இத்தலத்தில் ஒற்றை மாமரம் இல்லை. மாங்காடு தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இங்கு அர்த்தமேரு ராஜ யந்திரமாகும். இதற்கு கூர்மம்(ஆமை) உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி அதற்கு மேல் 16 இதழ் தாமரை அதற்கும் மேல் 8 இதழ் தாமரை அமைத்து அதன்மேல் ஸ்ரீ சக்ர யந்திரம் வரையப்பட்டுள்ளது.இத்தலத்து தங்கரதம் 17.5 கிலோ எடை அளவு தங்கத்தால் செய்யப்பட்டதாகும். இது தமிழகத்தில் உயரமான தங்க ரதங்களில் ஒன்றாகும்.சிவபெருமானின் உத்தரவை ஏற்று பார்வதி தேவி, கன்னிப் பெண்ணாக மாங்காட்டில் எழுந்தருளியதால் இத்தலத்தில் கன்னிப்பெண்கள் மனம் உருகி அம்பாளை வழிபட்டு என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

இங்கு அர்த்தமேரு மிகப்பெரியது. இம்மாதிரி வேறு எங்குமே இல்லை. இதற்கு 18 முழப்புடவை அணிவிக்கிறார்கள். இத்தலத்தில் காமாட்சி அம்மன் விளக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.இக்கோயிலிலுள்ள அர்த்தமேரு ஸ்ரீசக்ரம் மிகவும் விசேஷமானது. 43 திரிகோணங்கள் கொண்ட இச்சக்ரம், “அஷ்டகந்தம்’ என்னும் எட்டு வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது.இத்தலத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு சக்கரம், சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடாமாஞ்சீ, கச்சோலம் ஆகிய 8 வகையான கந்தங்களைக் கொண்டது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது.சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர். இச்சக்ரத்திற்கு விஜயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. அன்று ஒருநாள் மட்டும் இதனை தங்க கவசத்தில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருக்கும்

நன்றி. ஓம் நமசிவாய