பண்ணாரி மாரியம்மன்

அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமான பராசக்தி பல்வேறு  பெயர்களுடன் பல்வேறு தலங்களில் குடிகொண்டிருக்கிறாள். அவள் பண்ணாரி காட்டில் மாரியம்மன் என்ற பெயருடன் சக்தி வாய்ந்த தெய்வமாக  விளங்குகிறாள். காட்டுக்குள்ளேயே இவளுக்கு விழா நடக்கிறது.  நவராத்திரியையொட்டி இவளை தரிசித்து வருவோம்.

தல வரலாறு

பண்ணாரியில் ஓடிய தோரணப்பள்ளம் என்ற காட்டாற்றங் கரையில் மக்கள் மாடு மேய்த்து வாழ்ந்தனர். ஒரு காராம்பசு ஒன்று தன் கன்றுக்கு கூட பால் கொடுக்காமல் காட்டுக்குள் அடிக்கடி ஓடி ஒளிந்தது. மடுநிறைய பாலுடன் செல்லும் பசு, திரும்பும் போது காலியான மடுவுடன் வரும். மாடு மேய்ப்பவர் ஒருநாள் பசுவை பின்தொடர்ந்து சென்று கவனித்தார். அந்தப்பசு, ஒரு வேங்கை மரத்தடியில்உள்ள புற்றில், பாலைப் பொழிவதைப் பார்த்தார். மறுநாள் கிராம மக்களிடம்  விபரத்தைக் கூறினார். மக்கள், அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்த போது, ஒரு அம்மன் திருவுருவம் இருப்பதை பார்த்தனர். பசு அந்த அம்மனுக்கே அபிஷேகம் செய்ததாகக் கருதினர். அப்போது, ஒருவருக்கு தெய்வ அருள் உண்டாகி, “”நான் வண்ணார்க்காடு (மண்ணார்க்காடு) என்ற ஊரிலிருந்து வருகிறேன் (இவ்வூர் கேரளாவில் உள்ளது). பொதிமாடுகளை ஒட்டிக் கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன். எழில் மிகுந்த இந்த இயற்கை சூழலில் தான் தங்க விரும்புகிறேன். என்னை “பண்ணாரி மாரியம்மன்’ எனப் பெயரிட்டு வணங்கி வாருங்கள்,” என்றார்.அந்த அருள்வாக்கின்படி அந்த இடத்தில் புற்களைக் கொண்டு குடில் அமைத்து அம்பாளை பிரதிஷ்டை செய்தனர். காலப்போக்கில், விமானத் துடன் சிறிய கோயில் கட்டப்பட்டது. அதில் அமைக்கப்பட்ட தாமரை பீடத்தில் தற்போது அம்பாள் அருள்பாலித்து வருகிறாள்.

*தல சிறப்பு*

இந்த அம்பாள் கால்நடை வளர்ப்போரின் காவல் தெய்வமாக விளங்குகிறாள். கால் நடைகள் கொண்டு தொழில் செய்பவர்கள், தங்கள் தொழில் விருத்தியடைய அம்பாளை வணங்குகின்றனர்.

இங்கு அம்மனுக்கு உயிர் பலி ஏதும் இல்லாமல், சைவ படையல் மட்டுமே செய்யப்படுகிறது.  திருநீறுக்கு பதிலாக காட்டிலிருந்து வெட்டி எடுக்கப் படும் புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்தால், திருட்டு மற்றும் தீங்கு போன்ற அபாய செயல்கள் நடக்காது என்பதும், கால் நடைகளுக்கு நோய் வராது என்பதும் நம்பிக்கை. மாறாக, மங்களகரமான செயல்கள் வீடுகளில் நடப்பதுடன், அம்மன் தங்களுக்கு பாதுகாப்பாகவும் இருப்பாள் என்கின்றனர் பக்தர்கள். ஆதரவற்ற சிறுவர்களை பராமரிப்பதற்கான கருணை இல்லம் ஒன்றும் கோயில் சார்பாக நடத்தப்படுகிறது.

கோயில் அமைப்பு

தாமரைப்பீடத்தில் அமர்ந்த நிலையில் பண்ணாரி மாரியம்மனின் கைகளில் கத்தி, கபாலம், டமாரம், கலசம் ஆகியவை உள்ளது. சாந்த நிலையில் முகம் இருக்கிறது. பிரகாரத்தில் மாதேசுவர திருமூர்த்தி, தெப்பக்கிணறு அருகில் சருகு மாரியம்மன், வண்டி முனியப்ப சுவாமி ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.

குண்டம் திருவிழா

இங்கு நடக்கும் குண்டம் திருவிழா சிறப்பு வாய்ந்தது. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே இந்த திருவிழா நடந்து வருகிறது. குண்டத்துக்கு தேவையான மரங்கள் குறிப்பிட்ட அளவு காடுகளில் வெட்டப்படுவது வழக்கம். இந்த சடங்கிற்கு “கரும்பு வெட்டுதல்’ என்று பெயர். தற்போது பங்குனி மாதம் நடக்கும் குண்டம் திருவிழா நடக்கிறது. இந்த குண்டத்தில் பருத்தி, மிளகாய், தானியங்கள், சூரைத்தேங்காய்களை போடுகின்றனர். இந்த குண்டத்தில் பக்தர்களுடன் கால்நடைகளும் இறங்குவது சிறப்பு.

கண்வியாதிக்கு தீர்த்தம்

காட்டு இலாகா  அதிகாரியாக பணியாற்றிய மற்றொரு ஆங்கிலேயர் , துப்பாக்கியால் பன்னாரி அம்மன் கோயில் சுவற்றில் குறிவைத்துச் சுட்டார். இதன்பிறகு அவரது கண்கள் ஒளி இழந்தன. தவறை உணர்ந்து அம்மனிடம் வேண்டி, கோயிலில் வழங்கப்பட்ட தீர்த்தத்தால் கண் ஒளி பெற்றார். இதனால் தற்போதும் கண்வியாதி  உள்ளவர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படுகிறது.

இது கண் வியாதியை குணப்படுத்துவதாக  நம்பப்படுகிறது.திருவிழா காலத்தில் தென்படாத மிருகங்கள்: பண்ணாரி அம்மன் கோயில் சத்தியமங்கலம் காட்டில் உள்ளது. இங்கு யானைகள், காட்டுப் பன்றிகள், மான்கள், செந்நாய்கள், கரடிகள் உள்ளிட்ட மிருகங்கள் உள்ளன. கோயில் தெப்பக்கிணறு அருகில் காட்டு யானைகள் தண்ணீர் குடிக்க தொட்டிகளும் கட்டப் பட்டுள்ளன. திருவிழா காலங்களில் இந்த மிருகங்கள் பக்தர்கள் கண்களில் தென்படுவதில்லை.

பூச்சாற்று சிறப்பு

பங்குனி மாதம் அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூச்சாற்று நடக்கிறது. மறுநாள் அம்மன் சப்பரத்தில்  சுற்றுவட்டாரப்பகுதிக்கு வீதி உலா வருகிறாள். சோளகர் என்ற மலைவாசிகள் வாத்தியங்ளும், அருந்ததி இனத்தார் தாரை, தப்பட்டை வாத்தியங்களும் முழங்க சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. பூச்சாற்று விழாவின் ஒன்பதாம் நாள் இரவில் அக்கினி கம்பம் அமைக்கப்பட்டு கம்பத்தருகில் மேளதாளத்துடன் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. 15ம் நாள் திருவிழாவில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து அக்கினிக் கரகம் ஏந்தியும், வேல், சூலம் தாங்கியும் மேளதாளங்கள் முழங்க அம்மனை வழிபடுகின்றனர்.

நன்றி.      ஓம் நமசிவாய🙏

நீங்கள் கைலாயம் போக முடியவில்லையா?

?எல்லோராலும் கைலாயத்திற்கு சென்று சிவனை தரிசிக்க முடியாது.வாருங்கள், கைலாயத்திற்க்கு சமமான தென்கைலாயம் என்று போற்றப்படும் கோவை வெள்ளிங்கிரி மலைக்கு!இந்தியாவில், இந்து மத நூல்களின்படி மூன்று புனித கைலாசங்கள் உள்ளன;


 முதல் கைலாசம் வடக்கு துருவத்தில் கடலுக்கு நடுவே உள்ளதினால் பத்தர்களால் செல்ல இயலவில்லை. இதுவே வட கைலாசம் ஆகும். மத்திய கைலாசம் எனப்படும் இரண்டாவது கைலாசம், இமயமலையில் உள்ளது.


 இந்த காரணத்தால், பல தென்னிந்திய பக்தர்களால் இரண்டாவது கைலாசத்திக்கும் செல்ல இயலவில்லை. மூன்றாவது கைலாசம் என அழைக்கப்படுவது நம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைகளை குறிக்கிறது. இந்த கோவிலில் உள்ள சிவ தரிசனம் இமயமலையில் உள்ள சிவ தரிசனத்திற்கு சமம் என்று நம்பப்படுகிறது

உலகிலேயே உயரமான ஐம்பொன் நடராஜர் திருஉருவத் தரிசனம்


*அருள்மிகு அழகிய திருச்சிற்றம்பலம் உடையான் திருக்கோயில், சிவபுரம், நெய்வேலி, கடலூர் மாவட்டம்.**நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பதினாறாவது வட்டத்தில் அமைந்துள்ள நடராஜப் பெருமானுக்கு “அழகிய திருச்சிற்றம்பலமுடையான்” என்று பெயர்.**நடராஜர் திருமேனியின் உயரம் பத்து அடி,ஒரு அங்குலம்.அகலம் எட்டடி நான்கு அங்குலம்.எடை* *2420 கிலோ.சிவகாமி அம்பிகையின் திருமேனி ஏழு அடி உயரமும் 750 கிலோ எடையும் கொண்டது.மற்றத் தலங்களில் நடராஜரின் கீழ் மாணிக்கவாசகர் இருப்பார்;இங்கு திருமூலர் உள்ளார் உலகிலேயே இந்த நடராஜர் தான் ஒரே வார்ப்பில் ஐம்பொன்னாலான* *மிகப்பெரிய நடராச மூர்த்திஎன்ற பெருமை உடையவர்**மாணிக்கவாசகர் சொல்ல திருவாசகமும் திருக்கோவையாரும் தனது கைப்பட எழுதிய சிவப்பரம்பொருள்,”மாணிக்கவாசகர்* *சொல்லச் சொல்ல எழுதியது திருச்சிற்றம்பலமுடையான் ”எனக் கையெழுத்து இட்டு தில்லை நடராஜர் சன்னதியில்* *வைத்தார்.இதன் அடிப்படையில் இத்தலத்து நடராஜப் பெருமானுக்கு ”அழகிய திருச்சிற்றம்பலம் உடையான்”என்பது திருநாமம்.நடராஜர் இடதுகாலைத் தூக்கி நடனமாட, அன்னை சிவகாமி கையில் தாளத்துடன் ஓசை கொடுக்கிறார்.ஆதலால் அன்னையின் திருநாமம்”ஓசை கொடுத்த நாயகி”ஆகும்.*
*இதுவே உலகிலேயே, ஒரே வார்ப்பில் ஐம்பொன்னாலான மிகப்பெரிய நடராச மூர்த்தியாகும். இந்த அழகியதிருவுருவச்சிலை சிவபுரவளாகத்திற்குக் கொண்டுவரப்பட்டு, ”ஜடிமந்திரம்” செய்யப்பட்டு, ஆருத்ரா தரிசனத்தன்று தில்லை கொண்டு செல்லப்பட்டது. பின் இங்கு நெய்வேலிக்குத் திரும்பிக் கொண்டு வரப்பட்டு ஒரு மாத காலம் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் வைக்கப்படது. பிரதிஷ்டை செய்வதற்காக, ஆலயத்திற்குள் கொண்டு செல்வதற்கு முன்பாக நெய்வேலியுள்ள அனைத்துக் கோயில்கட்கும் இத்திருமேனி “கரிவலம்” சென்று வந்தது சிறப்புக்குரியதாகும். கரிவலம்யானையின் மீது அம்பாரியில்  வைத்து  வலம்* *அழகிய திருச்சிற்றம்பலமுடையானின் திருமேனி பிரதிஷ்டை செய்யும் முன்பு ஒரு மாத காலம் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் வைக்கப்பட்டிருந்தது. அப்புனித இடத்தில் தலவிருட்சமாகக் ”காசி வில்வம்”* *[மகாவில்வம்]வளர்க்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கின் போது சிவாலயத்தின் தென்மேற்கு மூலையில், கிடைத்தற்கரிய, சிவனுக்கு உகந்த, ராஜமூலிகையாகிய” மகாவில்வம்” வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. ”பதி்ன்மூன்று தளங்களை ”கொண்டுவிளங்குவது இதன் சிறப்பாகும்.**நெய்வேலி சிவபுரத்தில் திருத்தொண்டர்களுக்கென்று தனியே திருக்கோயில், 63 நாயன்மார்கட்கும், 9 தொகையாடியார்கட்கும், மணிவாசகர்கட்கும், சேக்கிழார்க்குமாக 74 பஞ்சலோகத் திருமேனியுடன் உலகிலேயே இங்குதான் முதன்முதலாக அமைக்கப்பட்டுள்ளது.**இத்திருத்தலத்தின் பளிங்கு மண்டபத்தின் மேற்கே அழகிய சிவாலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விழா நாள்களில் இத்தல சிவ லிங்கத்திற்கு நர்மதை ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.*
*இந்த சிவலிங்கத்தின் நெற்றியில் இயற்கையாகவே விபூதி ரேகைகள் அமைந்துள்ளன. இது ஓர் அதிசயம்தான்.* 
*இத்திருக்கோயிலில் தினமும் ஆறு கால பூஜையும் ஸ்படிக லிங்கத்துக்கு அன்னம் அபிஷேகமும் நிகழ்த்தப்படுகிறது.**இத் திருக்கோயிலில் நிழைவு வாயிலில் ஆராய்ச்சி மணி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அதன் அருகே மனுநீதி முறைப் பெட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.*
*பக்தர்கள் தங்கள் மனக்குறைகளை, ஆசைகளை, நியாயமான விருப்பங்களை தனித்தாளில் எழுதி இந்த பெட்டியில் இட்டு மணியை மூன்று முறை ஒலித்து இத்தல இறைவனை வேண்டினால் அவர் தம் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது கண்கூடு.*

*அன்புடன்* *சோழ.அர.வானவரம்பன்*.


*கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பதினாறாவது வட்டத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.* *சென்னையிலிருந்தும் மற்ற பிற ஊர்களிலிருந்தும் பேருந்து மற்றும் ரயில்வண்டி போக்குவரத்து உள்ளன. நெய்வேலியிலிருந்து ஆட்டோக்களும் செல்கின்றன.*

சூட்சுமங்கள் நிறைந்த ஸ்ரீ தேனுபுரீஸ்வரர்


சென்னை மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தேனுபுரீஸ்வரர்  கோவில்  மிக பழமையான ஒரு அற்புதமான கோவில்.கபில  முனிவர் சிவனை இடது கையால் ஆராதனை செய்ததற்காக  பசுவாக (தேனுவாக) பிறந்து சிவனை வழிபட்டு  இங்கே சாபவிமோச்சனம் அடைந்ததாகவும் ,சோழப்பேரரசர் தம் கனவில்இங்குள்ள ஏரியில்  சுயம்பு லிங்கம் இருப்பதை கண்டு ,இந்த அழகிய கோவிலை கட்டியதாகவும், அருணகிரிநாதர் இத்திருத்தலத்தை “தோடுறுங் குழையாலே….” என பாடியுள்ளதாகவும் வரலாறு சொல்கிறது .இப்படி நீண்ட நெடிய வரலாறு தொடர்கிறது.


ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் சிறிய சுயம்பு லிங்கமாய் மிக அழகாக  காட்சிதருகிறார்.கருவறை முழுவதும் நல்ல தூய வெண்மையானஆற்றல் நிறைந்த அலைகள் நிறைந்து,தம்மை வந்து வணங்குவோரின் ஆக்னாசக்கரத்தை தொட்டு உரசிச்செல்கிறது.கஜபிருஷ்ட வடிவில் உள்ள கருவறை என்கிறார்கள்.எல்லாம் சிவனின் தார்மீக அலைகள் ஆட்சிசெய்கிறது. கருவறைவிட்டு வெளியே வந்து ஸ்ரீ தேனுகாம்பாள் தாயாரை வணங்கி வெளியே வர ,ஸ்ரீ பைரவர் அற்புதமாக காட்சி தருகிறார்.இங்குள்ள தூண் மண்டபம் மிக அழகிய வேலைப்பாடுடைய சிற்பங்கள் நிறைந்துள்ளது .அதில் ஒரு தூணில் சரபேஸ்வரர் சிலை உள்ளது.உடம்பே புல்லரிக்கிறது இந்த சிலை பற்றி நினைக்கும் போதே.ஏனெனில் இந்த நொடி பொழுதுகூட இங்கே  சரபேஸ்வரர் அலைகள் சூழ்ந்துள்ளது.அது மட்டுமல்ல சூட்சுமமாக வெண்ணிற அலைவடிவில் குரங்கு முகமும் சிங்கமுகமும் சேர்ந்த ஒரு முக வடிவும் ,அழகான வெண்மை நிறைந்த  வண்ணத்தால் ஆன ரோமஉடம்பும் உடைய, மனிதனை போன்ற தோற்றமும், விலங்கு போல உருவமும், கொண்ட  பல சூட்சும உருவங்கள் இந்த தூண் மண்டபத்தில் ஆங்காங்கே அமர்ந்துள்ளது. ஒரு பத்து பதினைந்து வெண்ணிற சூட்சும தேக உருவங்கள்மிக சாத்வீகமான குணம் கொண்டுள்ளது .இறைவனால்  தாம் எப்பொழுதோ படைக்கபட்டு ,தமது செயல் யாமும் வெற்றிகரமாக செய்து முடித்து,இவை தற்பொழுது இங்கே அமர்ந்து கொண்டு மிக அமைதியாக அருள்அலைகளை வாரிவழங்கிக்கொண்டிருக்கிறது.வருபவர் செல்பவர் என அனைவரும் இந்த வெண்ணிற அலை வடிவ  உருவங்களை தொடாமல்இங்கே செல்ல இயலாது. அப்படி ஒரு தன்மை இங்கே இறைவனால் வகுக்கப்பட்டுள்ளது.

உள்ளே சிவனின் அலைகள்.அருகிலே பைரவபெருமானின் அற்புத அலைகள். தூண்மண்டபத்தில் ஸ்ரீ சரபேஸ்வரின் அலைகள், மிக  அற்புதமாகஉள்ளது.
சரபேஸ்வரர்  எப்பொழுதுமே மிக  உக்கிரம் நிறைந்த சக்திஉடையவர் .இங்கேயும் மிக அதீத சக்தி அலைகள் இருக்கிறது  .மிக கொடிய கடன்  சுமையால் வாடுபவர்கள் ,தீய சக்தியால் பாதிக்கப்பட்டு துயரப்படுபவர்கள் இங்குள்ள ஸ்ரீ சரபேஸ்வரர்  சன்னதி அருகே அமர்ந்து ,உள்ளன்போடு கீழே  உள்ள ஸ்லோகத்தை சொல்ல துயரத்திலிருந்து மீழ வழிபிறக்கும் விரைவில்


ஸ்ரீ சரபேஸ்வரர் மூல மந்திரம்:
ஓம் கேம் காம் பட் ப்ராணக்ர ஹாஸி ஹாஸி, பிராணக்ர ஹாஸிஹூம் பட் ஸர்வ சத்துரு சம்ஹாரணாய சரப ஸாலுவாய பக்ஷி ராஜாய ஹூம்பட் ஸ்வாஹா.
ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்ரீ மந்திரம்:
ஓம் சாலுவேசாய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹி தந்நோ சரப ப்ரசோதயாத்.

ஆவியை நைவேத்தியம் செய்யும் வினோத கோவில்


 பொதுவாக கோவில்கள் என்றாலே அர்ச்சனை அபிஷேகம் நைவேத்தியம் என பல வகையான சிறப்பு ஆராதனைகள் செய்யப்படும். அதில் கடவுளுக்கு நைவேத்தியமாக பழங்கள் உணவை படைப்பது நம்முடைய வழக்கம்.
ஆனால் இந்த ஒரு கோவிலில் மட்டும் உணவு பழங்களையெல்லாம் தாண்டி ஆவியை நைவேத்தியமாக படைக்கின்றனர். அப்படி இந்த கோவிலில் என்னென்ன சிறப்புகள் இருக்கிறது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டத்தில் வெள்ளாற்றங்கரையில் ஆவுடையார் கோவில் எனும் திருப்பெருந்துறை திருத்தலம் அமைந்திருக்கிறது. புதுக்கோட்டையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது. இக்கோவிலில் மூலவராக ஆத்மநாதசுவாமி ஆவுடையாரும் தாயாராக யோகாம்பாளும் அருள்பாலித்து வருகின்றனர்.


கிட்டத்தட்ட 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் அன்னத்தின் ஆவியே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இக்கோவில் திருப்புகழ் பெற்ற ஆலயம் என ஈடு இணையில்லாப் பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது.
பெரிய பாத்திரம் ஒன்றில் சாதத்தை சுடச் சுட சமைத்து பின் அந்த சாதத்தை மூலஸ்தானத்தில் உள்ள அமுது மண்டபத்தில் இருக்கும் ஒரு பெரிய திட்டுக்கல் (அமுத படைக்கல்) மீது கொட்டிவிட்டு அதனுடன் முளைக்கீரை பாகற்காயும் அதைச்சுற்றி தேன்குழல் அதிரசம் அப்பம் வடை முதலானவை வைத்து கதவை மூடி நைவேத்தியம் செய்யப்படுகிறது. இங்கு ஆறுகால பூஜைகளும் நேர்த்தியாக நடைபெறுகிறது.
அந்த அன்னத்தில் இருந்து வரும் ஆவியே நைவேத்தியமாக கருதப்படுவதாக கூறப்படுகிறது. சுமார் 3 அடி உயரம் 7 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட அமுத படைக்கல்லில் புழுங்கல் சாதம் படைக்கப்படுகிறது.
பொதுவாக மற்ற கோவில்களில் பச்சரிசி கொண்டே அன்னம் சமைத்து இறைவனுக்கு படைப்பது வழக்கம். ஆனால் இங்கு மட்டுமே புழுங்கல் அரிசி கொண்டு அன்னம் சமைத்து இறைவனுக்கு படைக்கப்படுகிறது.


இங்குள்ள இறைவனுக்கு தினமும் 6 கால பூஜைக்கு அமுதம் படைப்பதால் அன்னத்தை சமைக்க பயன்படும் அடுப்பானது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அணைந்ததே இல்லை என்று கூறப்படுகிறது.
ஆவுடையார் கோவிலின் கருவறை விதானத்தில் 21600 செப்பு ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன. இது ஒரு நாளைக்கு ஒரு மனிதன் 21600 முறை மூச்சு விடுவதை குறிப்பதாக உள்ளது.திருச்சிற்றம்பலம்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


நன்றி. ஓம் நமசிவாய

அறுபடை வீடுகள் உணர்த்தும் உண்மைகள்

மனிதன் இந்த பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆரோக்கியம், உறவுகள், பொருளாதாரம்,  அபயம் (பாதுகாப்பு) ஆளுமை, ஞானம் ஆகியவை நிறைவாக இருக்க வேண்டும் என சித்தர்கள் சொல்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் சக்தியுள்ள இடங்களில் ஆறுமுகன் ஆலயங்கள் அறுபடை வீடாக எழுப்பப்பட்டுள்ளன.

ஆரோக்கியத்திற்கு #சுவாமிமலை,

உறவுக்கு #திருப்பரங்குன்றம்,

பொருளாதார வசதிக்கு #சோலைமலை,

பாதுகாப்புக்கு #திருச்செந்தூர்,

ஆளுமை திறனுக்கு #திருத்தணி,

ஞானம் பெற #பழநி.

திருப்பரங்குன்றம்

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் திருப்பரங்குன்றம் எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூர்

இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இத்தலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் தங்கிய இடம். இவரது திருவடிகளை படகிற்கு சமமாக சொல்கிறார்கள். அதனால் தான் கடலின் முன்புள்ள இத்தலத்திலுள்ள முருகனின் திருவடிகளை வணங்கி பிறவிப் பெருங்கடலை கடப்பதாக நம்பிக்கையுள்ளது.

பழநி

சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால் வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும்.      12 ஆண்டுகளுக்கு தொடர்ந்து காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் அனைத்தும் ஒன்றே என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறுவதுடன், வாழ்க்கை என்றால் இன்னதென்று உணரும் ஞான ஒளியையும் பெறலாம். அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய் தீரும். ஒரு கோவிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள மூர்த்தி(சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகியவை. பழநி கோவிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது சிலை. போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.

சுவாமி மலை

சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமி மலையில் சுவாமி நாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். “தன்னை விட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது இப்பரந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நன்மையைத் தரும்” என்கிறார் வள்ளுவர். அந்த வழியில் தன் பிள்ளையின் வாயால் மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன். அதுவும் தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்டார். அதனால் “”சிவகுருநாதன்” என்ற பெயரை முருகப்பெருமான் பெற்றார்.

திருத்தணி

அழகே உருவாக பொலிவுடன் காட்சி தரும் முருகன், திருத்தணியில் மார்பில் காயம் பட்ட தடத்துடன் இருக்கிறார். இதனை சூரனுடன் போரிட்ட போது ஏற்பட்ட காயம் என்கிறார்கள். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் “தணிகை” என இவ்வூர் பெயர் பெற்றது. அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாக தரப்படுகிறது. இதனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். இதனால்,நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

சோலை மலை

அறுபடை வீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது சோலை மலை. மதுரையிலிருந்து 20 கி.மீ.,தொலைவில் உள்ளது. அவ்வைக் கிழவியிடம்,” சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?,”என்று சாதுர்யத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோவில் கொண்டிருக்கிறார். உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாச, பந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப் போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப் பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தவர் இவர். தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார்.

“அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே” என்று அருணகிரிநாதர் இவரைப் போற்றியுள்ளார்.

யாமிருக்க #பயமேன்

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இலுப்பைபட்டு, நாகப்பட்டினம்

கணவனை காத்த அம்பாள் :

  பாற்கடலை கடைந்தபோது, வாசுகி பாம்பு களைப்பில் விஷத்தை கக்கியது. தேவர்களை காப்பதற்காக விஷத்தை சிவன் விழுங்கினார். அவ்விஷம், சிவனின் உடம்பில் சேராமல் இருப்பதற்காக அம்பாள், சிவனுக்கு பின்புறமாக இருந்து அவரது கண்டத்தை (தொண்டைக்குழி) பிடித்து நிறுத்தினாள். விஷம் கழுத்திலேயே தங்கியது. இதன் அடிப்படையில் இத்தலத்தில் சிவன் சன்னதிக்கு பின்புறம் அமிர்தவல்லிக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அமிர்தத்தில் கலந்திருந்த விஷத்தை நிறுத்தியவள் என்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள். கணவனை காத்த அம்பாள் என்பதால் இவளிடம் வேண்டிக்கொண்டால் பெண்களுக்கு கணவன் மீது பாசம் அதிகரிக்கும், தீர்க்க சுமங்கலிகளாக வாழலாம் என்பது நம்பிக்கை. இவள் தன் இடது கையால் பாதத்தை காட்டியபடி அருளுவது சிறப்பு.

பஞ்சலிங்க தலம் :

  பொதுவாக சிவன் கோயில்களில் ஒரு மூலவர் மட்டுமே இருப்பார். அரிதாக சில தலங்களில் இரண்டு மூலவர்கள் இருப்பர். ஆனால், இங்கு ஐந்து சிவன் தனித்தனி சன்னதிகளில் இருக்கிறார். தர்மர் வழிபட்ட சிவன் நீலகண்டேஸ்வரர், அர்ஜுனன் வழிபட்ட சிவன் படிகரைநாதர், பீமனால் வழிபடப்பட்டவர் மகதீஸ்வரர், நகுலன் வழிபட்டவர் பரமேஸ்வரர், சகாதேவன் வழிபட்டவர் முத்துகிரீஸ்வரர் என்ற பெயர்களில் அருளுகின்றனர். இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. படிகரைநாதர் சன்னதியிலேயே மங்களாம்பிகை தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். பீமன் வழிபட்ட சிவன், சோடஷலிங்கமாக, 16 பட்டைகளுடன் இருக்கிறார். பதினாறு செல்வமும் பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

நளன் வழிபாடு :

  ஐந்து மூர்த்திகளும் மூலவராக இருந்தாலும், நீலகண்டேஸ்வரர், படிகரைநாதர் இருவரும் பிரதான மூர்த்திகளாக வணங்கப்படுகின்றனர். இவர்களுக்கு எதிரில் மட்டுமே நந்தி இருக்கிறது. சகாதேவன் வழிபட்ட முத்துகிரீஸ்வரர், தெற்கு நோக்கி இருக்கிறார். சாஸ்திரம், ஜோதிடம் கற்பவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கின்றனர். சனிபகவானால் பிடிக்கப்பட்ட நளமகாராஜன், ஏழரைச்சனியின் முடிவு காலத்தில் சிவதலங்களுக்கு சென்று தரிசித்து வந்தார். திருக்கடையூர் செல்லும் முன்பு அவர் இத்தலத்தில் பஞ்சலிங்கங்களை தரிசனம் செய்தார். அப்போதே தனக்கு சனியின் ஆதிக்கம் குறைந்திருப்பதை உணர்ந்து கொண்டாராம். எனவே, இங்கு வேண்டிக்கொண்டால் சனியின் ஆதிக்கம் குறையும் என்பது நம்பிக்கை.

சிறப்பம்சங்கள் :

★ இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

கல்யாண வெங்கடேச பெருமாள்

கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு மட்டைத் தேங்காய் வைத்து வழிபட்டால் மணவாழ்க்கை அமையும்!

திருவண்ணாமலை மாவட்டம் நார்த்தாம்பூண்டியில் பிரம்மா பூஜித்த திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் தனித்தனி கோவிலில் அருள்பாலிக்கின்றனர்.

நீராடிவிட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேசருக்கு மட்டைதேங்காய் வைத்து வழிபட்டு கோவிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

*தலவரலாறு*

ஒருமுறை வெள்ளம் காரணமாக ஏழு உலகங்களும் அழிந்தன. திருமால் குழந்தை வடிவில் ஆலிலை கண்ணனாக வெள்ளத்தில் மிதந்தார். மீண்டும் உலகத்தை படைக்க விரும்பி, தன் நாபிக் கமலத்தில் (தொப்புள்) பிரம்மாவை உருவாக்கினார்.

அவருக்கு படைக்கும் சக்தியை வழங்கினார். படைப்புத் தொழிலை ஏற்ற பிரம்மா, திருமாலுக்கு நன்றி செலுத்தும் விதமாக பூலோகத்தில் ஒரு கோவில் அமைத்தார். அவரே “திருவுந்தி பெருமான்’ என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் வீற்றிருக்கிறார்.

“உந்தி’ என்றால் “வயிறு’. வயிற்றிலுள்ள தொப்புளில் இருந்து பிறந்ததால், பிரம்மா பிறக்க காரணமான உறுப்பின் பெயரையே பெருமாளுக்கு சூட்டினர். புராண காலத்தில் பிரம்மாவின் பெயரால் இவ்வூர் “சதுர்முகன்புரி’ (நான்கு முகம் கொண்ட பிரம்மாவின் ஊர்) என அழைக்கப்பட்டது. தற்போது நார்த்தாம்பூண்டி எனப்படுகிறது.

*நாரதர் பூண்டி*

ஒரு சமயம் சாபம் காரணமாக நாரதர் பூலோகத்தில் பிறக்க நேர்ந்தது. அவர் தன் சாபம் தீர திருவுந்தி பெருமாளை நந்தவனம் அமைத்து வழிபட்டார்.

12 ஆண்டுகள் வழிபட்ட பிறகு, திருமால் நாரதருக்கு காட்சியளித்து சாப விமோசனம் அளித்தார். நாரதர் தங்கி வழிபட்டதால் சதுர்முகன்புரிக்கு “நாரதர் பூண்டி’ என பெயர் ஏற்பட்டது. அதுவே “நார்த்தாம்பூண்டி’ என மருவி விட்டது.

12ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட மன்னர் சம்புவராயர் காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டது. 16ம் நூற்றாண்டில் அந்நிய படையெடுப்பின் போது கோவில் கோபுரம், மண்டபம், குளம் அழிந்தது.

பிறகு பெருமாளுக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி தாயாரோடு காட்சி தரும் இவர் “கல்யாண வெங்கடேசப் பெருமாள்’ எனப்படுகிறார்.

பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கு இங்கு சன்னிதிகள் உள்ளன. திருமணம் விரைவில் கைகூட பெருமாளுக்கு மட்டைத் தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதி சமேதராக வழிபடுகின்றனர்.

*இருப்பிடம்*

திருவண்ணாமலை – வேலூர் சாலையில் 18 கி.மீ., தூரத்தில் நாயுடு மங்கலம் அங்கிருந்து கூட்டுரோட்டில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

நன்றி. ஓம் நமசிவாய

ஸ்ரீ வேணு கோபாலனின் திவ்ய தரிசனம்

கடந்த ஒன்றரை வருடங்களாக எங்கு பார்த்தாலும் கரோனா வைரஸ்  லாக்டவுன்  ஊரடங்கு உத்திரவு  கடைகள் அடைப்பு  என்ற வார்த்தைகளையே கேட்டு கேட்டு அலுத்து விட்டோம்.  வெளியே போக முடியாது.  தொலைக்காட்சியைத் திறந்தால் நீல நிற உடையில் மருத்துவர்களும் செவிலியர்களும் மனித உயிர்களைக் காப்பாற்ற நடக்கும் போராட்டம்.  செய்தித்தாளைப் பிரித்தால் வைரஸின் கோர தாண்டவம் அதனால் நடந்த உயிர் இழப்புக்கள்.  இதைத் தவிர வேறு செய்திகளில்லை.

திரையரங்குகளும் பொது இடங்களும் மனிதர்கள் நடமாட்டமில்லாமல் மூடப்பட்டன.  கடவுள்களும் கதவுகளை மூடிக்கொண்டுவிட்டனர்.  மனிதர்கள் பட்ட அல்லல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  உலகமே ஸ்தம்பித்து நின்றது.

தற்சமயம் எல்லாம் சற்றுக் கட்டுக்குள் வந்தது போல் தோன்றுகிறது.  அதனால் இங்கு எல்லாம் கொஞ்சம் திறக்கப்பட்டு மனிதர்கள் நடமாட்டம் காணப்படுகிறது.  நீண்ட நாட்கள் அடைப்பட்டுக் கிடந்த நாங்கள் நேற்று மாலை வெளியே கிளம்பினோம் என் வீட்டிலிருந்து சுமார் 9 கிமீ தூரத்தில் இருந்த அம்முகுடா என்ற இடத்தில் உள்ள பழைய கால ஸ்ரீ ராதா ருக்மிணி சமேத வேணுகோபால ஸ்வாமி தேவஸ்தானம் என்ற கோவிலுக்கு போனோம். 

1818ல் கட்டப்பட்ட கோவில் அது.  இராணுவ வீர்ர்களில் குடியிருப்புக்களின் மத்தியில் மிகப்பெரிய நிலத்தில் சுற்றிலும் பெரிய பெரிய மரங்களின் நிழலில் கட்டப்பட்டு நிற்கிறது.  உள்ளே எல்லா ஆழ்வார்களின் பெயர்களிலும் அந்தக் கால கல்தூண்கள் அந்தக் கோயிலைத் தாங்கி நிற்கின்றன.  உள்ளே பெரிய பாறையைக் குடைந்து அதையே கருவறையாகக் கொண்டு தனக்கு பிரியமான ராதை ருக்மணியுடன் குழலூதிக்கொண்டு வெகு கம்பீரமாக நிற்கிறான் ஸ்ரீ வேணு கோபால ஸ்வாமிஅதன் கீழேயே உற்சவ மூர்த்திகளும் வெகு நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. 

வெளியே தனி சன்னதியில் கைகூப்பி கம்பீரமாக நிற்கும் அனுமான்.  கடந்த 100 வருடங்களாக இந்த கோயிலை  ஒரே தமிழ் குடும்பம் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வருகின்றனர்.  அவர்களும் அந்த கோவில் வளாகத்திலேயே குடியிருக்கின்றனர். அதில் திருமதி மஞ்சுளா என்பவரை நான் சந்தித்து இந்த  விவரங்களைத் தெரிந்து கொண்டேன்.  பிரதி சனிக்கிழமை கிருஷ்ண பஜன் நடைபெறும் என்றும் பிறகு மஹாபிரசாதம் வினியோகிக்கப்படும் என்றும் சொன்னார்கள்.  கருவறையைச் சுற்றி பூச்செடிகளும் மரங்களும் மிக ரம்மியமான சூழலைக் கொடுக்கிறது  பிரட்சணம் பண்ணிவிட்டு ஆரத்தி பார்த்துவிட்டு மன நிறைவுடன் திரும்பினோம்.  ஸ்ரீ வேணுகோபலனின் குழலோசை இந்த விஷக்கிருமிகளை தொலைதூரத்திற்கு கண்டிப்பாக விரட்டிவிடும் என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பினோம்.

தடையை உடைக்கும் பழவங்காடி மகாகணபதி கோவில்

தடையை உடைக்கும் பழவங்காடி மகாகணபதி கோவில்

நம் செயல்பாடுகளில் எந்தத் தடையுமில்லாமல் வெற்றியடைய உதவும் தலமாகக் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பழவங்காடி மகாகணபதி கோவில் இருக்கிறது.

நம் செயல்பாடுகளில் எந்தத் தடையுமில்லாமல் வெற்றியடைய உதவும் தலமாகக் கேரள மாநிலம், திருவனந்தபுரம், கிழக்குக் கோட்டைப் பகுதியில் அமைந்திருக்கும் பழவங்காடி மகாகணபதி கோவில் இருக்கிறது.

திருவாங்கூர் சமஸ்தான மன்னன் ராமவர்ம மகாராஜா தனது அரண் மனையைப் பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்ற முடிவு செய்தான். அதனால் தனது படைவீரர்கள் மற்றும் மக்களுடன் பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இடம் பெயர்ந்தான்.

அப்போது மன்னன் வழிபட்டு வந்த விநாயகர் சிலை ஒன்றையும், படை வீரர்கள் தங்களுடன் எடுத்துச் சென்றனர். அவர்கள் எடுத்துச் சென்ற சிலையை அங்கிருந்த கோட்டைக்கு அருகில் வைத்தனர். அரண்மனை பாதுகாப்புப் பணியிலிருந்த படை வீரர்கள் அந்த விநாயகரை வழிபட்டுத் தங்கள் பணிக்குச் செல்லத் தொடங்கினர்.

படைவீரர்கள் தாங்கள் போருக்குச் செல்லும் காலங்களில், அந்த விநாயகர் சிலையையும் தங்களுடன் எடுத்துச் சென்று போர்க்களத்தில் நிறுவி வழிபட்டு, அதன் பிறகு போரிடச் சென்றனர். இதனால் அவர்கள் சண்டையிட்ட போர்களிலெல்லாம் வெற்றி கிடைத்தது. படை வீரர்களின் வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

பிற்காலத்தில் படைவீரர்கள், அந்த விநாயகர் சிலையை ஓரிடத்தில் நிலையாக நிறுவி வழிபாடுச் செய்வதென முடிவு செய்தனர். அதனைத் தொடந்து, சிறிய அளவிலான கோவில் ஒன்று கட்டப்பட்டு அதில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்ததாக தல வரலாறு சொல்கிறது.

திருவாங்கூர் சமஸ்தானப் படைவீரர்கள் அனைவரும் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்பு, படை வீரர்கள் பராமரிப்பில் இருந்து வந்த விநாயகர் கோவிலும் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. ராணுவப் பராமரிப்பில் இருக்கும் விநாயகரை அன்றிலிருந்து ராணுவப் பிள்ளையார் (மிலிட்டரிப் பிள்ளையார்) என்று அங்குள்ளவர்கள் அழைக்கத் தொடங்கி விட்டனர்.

திருவனந்தபுரம் கிழக்குக் கோட்டைப் பகுதியில் பழவங்காடியில் இருக்கும் இக்கோவிலில் மகாகணபதி கிழக்கு நோக்கிப் பார்த்தபடி, வலது காலை மடித்து வைத்து அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலுக்குள் விநாயகரின் முப்பத்திரண்டு திருவுருவங்கள் அழகிய ஓவியங்களாக வரைந்து வைக்கப்பட்டிருக்கின்றன. கோவில் வளாகத்தில் தர்மசாஸ்தா, துர்க்கை அம்மன், நாகராஜா ஆகியோருக்கான சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

ஆலயம் காலை 4.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கு தேங்காய் உடைத்து (விடலை) வழிபாடு செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. சபரிமலைக்கு அடுத்ததாக இங்குதான் அதிக அளவில் தேங்காய் உடைத்து வழிபாடு நடக்கிறதாம். தேங்காய் உடைத்து வழிபட்டால், நம் செயல்பாடுகளில் எந்தத் தடையுமில்லாமல் வெற்றியடைய முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

*அமைவிடம் :*

திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருவனந்தபுரம் கிழக்குக் கோட்டைப்பகுதியில் அமைந்திருக்கும் இத்தலத்திற்குச் செல்ல நகரின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

நன்றி.    ஓம் நமசிவாய*