பொங்கலுக்கு மட்டுமே திறக்கும் பொதுவுடையார் கோவில்

கோவில் என்றால் காலையில் திறந்து இரவிலோ அல்லது மாலையிலோ நடை மூடுவதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வருடத்தில் ஒரே ஒரு நாள் அதுவும் தை மாதப் பிறப்பான பொங்கல் திரு நாள் மட்டும் கோயிலைத் திறந்து வழிபடும் வித்தியாசமான திருக்கோவில் ஒன்று உண்டு.  அது தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைலிருந்து முத்துப்பேட்டை செல்லும் வழியில் சுமார் 12 கிமீ தொலைவில் உள்ள பரக்கலக்கோட்டையில் அமைந்த பொது ஆவுடையார் திருக்கோயில்தான்.  இதை மத்தியபுரீஸ்வரர் கோயில் என்றும் கூறுவர். இந்த தலத்தின் புராண காலப் பெயர் பொய்கை நல்லூர்.

சிவன் கோயில் என்றால் பெரும்பாலும் கருவறையில் லிங்க மூர்த்தமாகவே சிவபெருமான் அருள் பாலிப்பார். ஆனால் இந்தக் கோயில் மூலஸ்தானத்தில் வெள்ளால மரமே கருவறை மூர்த்தமாக பக்தர்களால் வணங்கப்படுகிறது. இங்கே சிவபெருமானே பிரதானம் என்பதால் கருவறையில் அம்பிகையோ மற்ற பரிவார தெய்வங்களோ இல்லை.

கோயிலைப் போலவே இதன் தல வரலாறும் சுவாரசியமானதே. ஒரு சமயம் கார்த்திகை மாத சோம வார தினத்தில் இந்த ஊரில் வசித்து வந்தவர்களான வான்கோபர் மஹாகோபர் எனும் இர்ண்டு முனிவர்களுக்கிடையே இறைவனின் திருப்பாதத்தைச் சேர இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?  என்பதில் விவாதம் ஏற்பட்டது.  அவரவர் கருத்தில் அவரவர்கள் பிடிவாதமாக இருக்கவே ஆடல் வல்லானாம் சிதம்பரம் நடராஜரிடம் முறையிட்டு இதற்கு தீர்ப்பு கேட்டனர் முனிவர்கள்.

அவர்களின் கருத்தைச் செவிமடுத்த நடராஜர் சோமவார பூஜைகள்  முடிந்தவுடன் நள்ளிரவில் தாம் அங்கு வந்து தீர்ப்பு சொல்வதாக வாக்களித்தார். அதன்படி பரக்கலக்கோட்டைக்குச் சென்ற நடராஜர் வெள்ளால மரத்தின் அடியில் அமர்ந்து இல்லறமாயினும் துறவறமாயினும் வாழ்க்கையின் நெறி பிறழாமல் எவர் வாழ்ந்து முடித்தாலும் எனது பாதம் சேர்வது உறுதி என தீர்ப்பு வழங்கினார். நடு நிலையாக நின்ரு தீர்ப்பு கூரி மத்தியஸ்தம் செய்து வைத்ததால் மத்திய புரீஸ்வரர் என்றும் இருவருக்கும் பொதுவாக இருந்து வாதத்தை முடித்து வைத்ததால் பொதுவுடையார் என்றும் இத்தல ஈசன் அழைக்கப்பட்டார்.

பொதுவான தீர்ப்பை பெற்ற முனிவர்கள் இருவரும் சிவபெருமானைப் பணிந்து தாங்கள் எங்களுக்கு அருள் செய்ததை மக்களுக்கும் இந்த தலத்தில் அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்ட சிவனாரும் அந்த வெள்ளால மரத்திலேயே உறைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதாக தல வரலாறு.

வெள்ளால மரத்தின் அடிபாகத்தில் லிங்கம் போல் சந்தன அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.  இந்த மரத்தின் முன்பு சிவன் பாதம் உள்ளது.  வான்கோபரும் மஹாகோபரும் கருவறைக்கு வெளியே உள்ள ஒரு புளிய மரத்தின் கீழ் சிலை வடிவில் காட்சி தருகின்றனர்.

முனிவர்கள் இருவருக்கும் கார்த்திக மாத சோம வார தினத்தில் நடராஜ பெருமான் காட்சி தந்து அருள்பாலித்ததால் சோமவாரம் என்று கூறப்படும் அனைத்து திங்கட்கிழமைகளிலும் நள்ளிரவில் இக்கோயிலின் நடை திறந்து சிவபெருமானுக்கு வழிபாடுகல் நடத்தப்பட்டு அப்பொழுதே நடை அடைக்கப்படுகிறது. எக்காரணம் கொண்டும் பகலில் நடையைத் திறப்பதில்லை. கார்த்திகை மாத சோமவார தினங்கள் இக்கோயிலில் மிகவும் விசேஷமாக அனுசரிக்கப்படுகின்றன.  அன்றைய தினத்தில் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை புரிந்து சிவபெருமானை வழிபட்டு அருள்பெறுகின்றனர்.

இது இப்படியிருக்க தை மாத முதல் நாளான பொங்கல் அன்று மட்டும் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு அலங்காரம் அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.    காலை முதல் இரவு வரை பக்தர்கள் தரிசனத்துக்காக நடை திறந்து வைக்கப்படுகிறது.  அது ஏன் பொங்கல் தினத்தன்று மட்டும் கோயில் நடை திறக்க வேண்டும்? சூரிய பகவானின் உத்தராயணக் காலப் பயணத் தொடக்கம் தைமாதம் முதல் நாள் என்பதால் இன்று சூரியன் இந்த தலத்துக்கு வருகை தந்து ஈசனாம் பொது ஆவுடையாரை வழிபட்டுத் தமது பயணத்தைத் தொடங்குவதாக ஐதீகம். இதனை மெய்ப்பிக்கும் வகையில் பொங்கலன்று மட்டும் வெள்ளால மரத்தின் மீது சூரியக்கதிர்கள் படுகின்றன. அதற்காக அன்று மட்டும் அதிகாலை முதல் இரவு வரை கோவில் நடை திறக்கப்படுகிறது.  மற்ற நாட்களில் கோயிலின் கதவுகள் சாத்தப்பட்டே இருக்கும். சாத்திய கதவுக்கே பூஜகர்களும் பக்தர்களும் தீபாராதனை செய்து வழிபடுகின்றனர்.

நீண்ட கூந்தல் வேண்டும் பெண்கள் இத்தல ஈசனிடம் வேண்டுதல் வைத்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் அப்பெண்கள் நேர்த்திக் கடனாக விளக்குமாறு செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். விளக்குமாறு குச்சிகள் நீண்டிருப்பதுபோல் தங்கள் கூந்தலும் நீண்டிருக்கும் என்பது நம்பிக்கை. இது தவிர திருமணம் நிகழ குழந்தைப் பேறு வேண்டி வெளி நாட்டு வேலை குழந்தைகளின் கல்வி போன்றவற்றுக்காகவும் பக்தர்கள் இத்தல ஈசனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

வெள்ளால மரத்தின் அடியில் அமர்ந்து முனிவர்கள் இருவருக்கும் நீதி புகட்டியதால் இத்தல ஈசன் குரு தட்சிணாமூர்த்தி சொரூபமாகவும் வணங்கப்படுகிறார்.  எனவே இத்தலத்து இறைவனை வணங்க குருவருள் நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள்.

சுற்றுவட்டாரக் குடும்பங்கள் பலவற்றுக்கும் இக்கோயில் பொது ஆவுடையாரே குலதெய்வம் இவரை வேண்டிக்கொண்டு விவசாயம் வியாபாரம் செய்தால் லாபம் அமோகமாக கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் கருத்து. வேண்டுதல் கைகூடியவர்கள் நெல் கம்பு கேழ்வரகு போன்ற பல்வேறு பொருட்களைக் காணிக்கையாகத் தருகின்றனர். இந்தக் காணிக்கைப் பொருட்கள் பொங்கல் திரு நாளன்று  ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏலப் பொருட்களை ஏலம் எடுத்துச் சென்றால் குடும்பத்தில் நோய் நொடி  நீங்கும்  வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

மூலஸ்தானத்தில் வேரூன்றி சுற்றிலும் பரந்து விரிந்து விழுது பரப்பி நிற்கும் வெள்ளால மரத்தின் ஒரேயொரு இலையைப் பறித்துச் சென்று வீட்டு பூஜையறை பணப்பெட்டி தானியக்குதிர் ஆகியவற்றில் வைத்து வழிபட வளமான வாழ்வு நிறைவான நிம்மதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை பொங்கல் திரு நாளில் பொதுஆவுடையாரை வணங்கி வழிபட்டு வாழ்வில் சந்தோஷமும் அமைதியும் பெறுவோம்.

தகவல் நன்றி   கோ  காந்திமதி  மங்கையர் மலர்

 

பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் எங்களின் இனிய பொங்கல்  நல்வாழ்த்துக்கள்

முனியோதரன் பொங்கல்

 

பாரத தேசத்தில் வட மேற்கில் பஞ்ச துவாரகை என்று கூறப்படும் ஐந்து கிருஷ்ண க்ஷேத்திரங்கள் உள்ளன. அவற்றில் துவாரகா மட்டுமே மங்களா சாஸனம் செய்யப்பட்ட தலமாகும்.

தென்பகுதியில் அதே போல் ஐந்து கிருஷ்ண க்ஷேத்திரங்கள் உள்ளன.  அவை திருக்கண்ணங்குடி  திருக்கண்ணமங்கை  திருக்கண்ணபுரம்  கண்ணன் கவித்தலம் திருக்கோவிலூர் ஆகியவை ஆகும்.

இதில் திருக்கண்ணபுரம் க்ஷேத்ரம் மட்டும் ஐந்து ஆழ்வார்களால் மங்களாஸனம் செய்யப்பட்டிருக்கிறது.  இந்த புண்ணிய க்ஷேத்திரத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீசௌரிராஜ பெருமாளுக்கு அர்த்தஜாம வேளையில்  நைவேத்யம் செய்யப்படும் முனியோதரன் பொங்கல் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

மனிதனின் பெயர் கொண்ட ஒரு பொங்கலா என்று ஆச்சரியமாக உள்ளது அல்லவா? அதற்கு ஒரு பின்னணி கதை உண்டு.

முனியதரையர் என்னும் பெயர் கொண்ட பெருமாள் பக்தர் ஒருவர் சோழ மன்னனிடம் வேலை பார்த்து வந்தார். சோழ மன்னனுக்கு கப்பம் வசூல் செய்து கொடுக்கும் பணியில் அவர் இருந்தார்.  ஒரு சமயம் நாட்டில் கடும் பஞ்சம் வந்தது. தெய்வ ஆராதனை கூட சரியாக நடைபெற முடியாத அளவுக்கு பஞ்சம் தலைவிரித்தாடியது. பெருமாள் பக்தரன முனியதரையர் கப்பம் வசூல் செய்த பணத்தை எடுத்து தெய்வ ஆராதனைக்கு செலவழித்தார்.

கப்பம் வசூல் செய்த தொகையை மன்னன் கேட்டபோது அவரால் தர இயலவில்லை.  அதனால் அவர் பணத்தை கையால் செய்ததாக நினைத்து அவரை மன்னர் சிறையில் அடைத்தார்.  சிறையில் அவர் பெருமாள் நாமத்தை மட்டுமே ஸ்மரணை செய்து வந்தார். அவர் மனைவி சௌரிராஜப் பெருமாளிடம் நெக்குருகி வேண்டி நின்றாள்.  தம்பதியின் பக்திக்கு செவி சாய்த்த பெருமாள் மன்னருடைய கனவில் தோன்றி வசூல் செய்த பணம் ஆராதனைக்குத்தான் செலவழிக்கப்பட்டது  முனியதரையன் தன் செலவிற்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பதை விளக்கி அவரை விடுதலை செய்யுமாறு கூறி மறைந்தார்.

மன்னரும் தெய்வ வாக்கிற்கிணங்க முனியதரையரை விடுதலை செய்தான். சிறையிலிருந்த அவர் விடுதலையாகி இல்லம் வந்து சேர இரவாகிவிட்டது. கணவன் வீடு திரும்பியவுடன் ஆண்டவனுக்கு நன்றி கூறும் விதத்தில் அவர் மனைவி ஐந்து பங்கு அரிசி மூன்று பங்கு தோலுடன் கூடிய பயத்தம் பருப்பு இரண்டு பங்கு நெய் இவற்றைக் கொண்டு பொங்கல் சமைத்து சௌரிராஜ பெருமாளை மனதில் நிறுத்தி ஆராதனை செய்து  நைவேத்யம் செய்தாள்.  மறு நாள் காலை திருக்கோயிலை திறந்த பட்டர் பெருமான் விக்ரஹம் மேனி முழுவதும் பொங்கலும் நெய்யுமாக இருப்பதைப் பார்த்து துணுக்குற்றார்.  பின்பு நடந்த விஷயங்களை அறிந்து கொண்டார்.

மன்னரும் முனியதரையரின் பக்தியை மெச்சினார். அன்று முதல் இன்றும் முனியதரையரின் ஆணைப்படி கோயிலில் அர்த்தஜாம பூஜை நைவேத்தியத்திற்கு ஐந்து பங்கு அரிசி மூன்று பங்கு தோலுடன் கூடிய பயத்தம் பருப்பு சேர்த்து பொங்கல் சமைக்கிறார்கள். பெருமாள் சன்ந்திக்கு முன்பு இரண்டு பங்கு நெய்யைப் பெருமாளை சாட்சியாக வைத்துக்கொண்டு அதற்குப் பிறகுதான் பொங்கலில் சேர்க்கிறார்கள்.  இந்தப் பொங்கல் கோயிலுக்குள் சாப்பிடும்போது அலாதி ருசியாக இருக்கும். கோயிலை விட்டு வெளியே வந்து சாப்பிட்டால் சுவை குறைந்து விடும் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்தப் பொங்கலைப் பெற முன் கூட்டியே பணம் கட்டி சொல்லி வைக்க வேண்டும்  அதற்கு ஒரே போட்டா போட்டியாக இருக்கும்.

முனியதரையன் பொங்கல் என்பது மருவி பேச்சுவழக்கில் முனியோதரன் பொங்கல் என்று மாறிவிட்டது.  திருக்கண்ணபுரம் செல்பவர்கள் அவசியம் சௌரிராஜப் பெருமாளை தரிசனம் செய்து முனியோதரன் பொங்கலையும் அதாவது பிரசாதத்தையும்  சுவைத்துப் பாருங்கள்

தகவல் நன்றி    மாலதி சந்திரசேகரன்   மங்கையர் மலர்

திதி கொடுக்க திருபுட்குழி போங்க

ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த ராமர் காஞ்சிபுரம் அருகிலுள்ள திருபுட்குழியில் விஜயராகவர் என்னும் பெயரில் ஆசி அளிக்கிறார்.

சீதையைக் கடத்திச் சென்ற ராவணனை பறவை அரசனான ஜடாயு தடுக்க முயற்சித்தது. ஆனால் அதன் இறக்கைகளை ராவணன் வெட்ட கீழே விழுந்தது ஜடாயு.  உயிருக்குப் போராடிய அதை அந்த வழியாக வந்த ராம லட்சுமணர் கண்டனர்.    அவர்களிடம் சீதை கடத்தப்பட்டதை தெரிவித்ததோடு தனக்கு ஈமக்கிரியை செய்யவும் கேட்டுக்கொண்டு உயிர் விட்டது. அதனடிப்படையில் இங்கு  மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்த கோலத்தில் இருக்கிறார்.

திரு என்றால் உயர்ந்த புள் என்றால் பறவை  அதாவது ஜடாயு.  குழி என்றால் ஈமக்கிரியைக்கு வெட்டும் குழி  இதனால் இத்தலம் திருப்புட்குழி என பெயர் பெற்றது.  அம்பினால் ராமர் உருவாக்கிய தீர்த்தமாக ஜடாயு புஷ்கரணி உள்ளது.  தனி சன்னதியில் இருக்கும் மரகவல்லித்தாயார் குழந்தைவரம் அருள்பவர்.

திருவீதி புறப்பாட்டின் போது ஜடாயுவுக்கு முதல் மரியாதை நடக்கிறது.  புரட்டாசி மஹாளய அமாவாசையன்று இத்தலத்தில் முன்னோருக்கு திதி தர்ப்பணம் கொடுப்பர்/

எப்படி செல்வது

சென்னை வேலூர் செல்லும் வழியில் 80 கிமீ

விசேஷ நாட்கள்

ஆவணி பவித்ர உற்சவம்    தை அமாவாசை  தெப்பம்    மாசியில் பிரம்மோற்சவம்  நவராத்திரி  திருகார்த்திகை

 

ஆடி மாதம் கல்யாணம்

அம்பிகைக்கு உரிய ஆடியில் யாரும் சுப நிகழ்ச்சி நடத்துவதில்லை.  ஆனால் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடியில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்கிறது.

இத்தலத்தில் ராமர் வழிபட்ட சிவனே ராம நாத சுவாமியாக கோயில் கொண்டிருக்கிறார்.  பர்வதவர்த்தினி என்னும் பெயரில் அம்மன் இருக்கிறாள். தெய்வத் திருமணங்களுக்கு மாதம் தடையல்ல என்பதால் ஆடியில் திருக்கல்யானம் நடத்தும் வழக்கம் இங்குள்ளது. பிதுர் தலமான இங்கு ஆடியில் பக்தர்கள் தீர்த்தமாட வருவர்.  அவர்கள் திருக்கல்யாணத்தையும் தரிசிக்கட்டும் என்ற நோக்கத்தில் ஆடியில் நடப்பதாகவும் சொல்வர்.

சீதை மீட்டு வரும் வழியில் ராமர் இங்கு தங்கினார். சிவ பக்தரான ராவணனைக் கொன்ற பாவம் தீர சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட எண்ணினார்.  வடக்கே சென்று இமயமலையில் சிவலிங்கம் எடுத்து வர் ஆஞ்சனேயரை அனுப்பினார்.  அவர் வர தாமதமானதால் கடற்கரை மணலில் சிவலிங்கம் வடித்தாள் சீதை  அதை ராமர் வழிபடத் தொடங்கினார்.  இந்த நிலையில் சிவலிங்கத்துடன் வந்த ஆஞ்சனேயர் மணலால் ஆன லிங்கத்தை வாலால் அடித்தார்.  ஆனால் அது உடையவில்லை.  வாலால் கட்டி இழுக்க முயற்சித்தும் நகரவில்லை. ராமர் வழிபட்ட லிங்கம் ராமலிங்கம் என்றும் அனுமன் கொண்டுவந்த லிங்கம் அனுமலிங்கம் என்றும் அழைக்கப்பட்டது. இத்தலத்தில் அனுமலிங்கத்தை வழிபட்ட பின்பே ராமலிங்கத்தை பூஜிக்கவேண்டும் என்னும் விதிமுறை உள்ளது.  பிரகாரத்தில் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன. கோயிலுக்கு நேர் எதிரில் அக்னி தீர்த்தம் என்னும் கடல் உள்ளது.

ஆடியில் பர்வதவர்த்தினிக்கு ராம நாத சுவாமி திருக்கல்யான விழா 17 நாட்கள் நடக்கும்.

எப்படி செல்வது

மதுரையில் இருந்து 200 கிமீ

விசேஷ நாட்கள்

மஹாசிவராத்திரி    ஆடி அமாவாசை   தை அமாவாசை  ஆடி திருக்கல்யாணம்

தம்பிக்கு இந்த ஊரு

 

கேரளாவிலுள்ள திருச்சூர் அருகே இருஞ்ஞாலக்குடாவில் ராமபிரானின் தம்பியான பரதனுக்கு கோயில் உள்ளது.  ஒரு  முறை விஷ்ணு பக்தரான வாக்கை கைமன் என்பவருக்கு மலபார் கடற்கரையில் குறிப்பிட்ட இடத்தில் சுவாமி சிலைகள் இருப்பதாக கனவில் வந்தது அங்கு சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு ஜொலித்தபடி நான்கு சிலைகள் கிடைத்தன.  ராம சகோதர்களான அச்சிலைகள் துவாபர யுகத்தில் பகவான் கிருஷ்ணரால் பூஜை செய்யப்பட்டவை.

ஒரு முறை துவாரகை நகரம் கடலில் மூழ்கியபோது இச்சிலைகள் கடலில் அடித்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.  இதில் ராமருக்கு திர்பிறையாறு பரதருக்கு இரிஞ்ஞாலக்குடா சத்ருகனருக்கு மூளிக்குளம் லட்சுமணருக்கு பாயம்மன் ஆகிய இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டன.  15 கிமீ சுற்றளவில் உள்ள இக்கோயில்களை ராமாயண மாதம் என்னும் ஆடியில் தரிசித்தால் கோடி புண்ணியம் உண்டாகும்.

பதினான்கு ஆண்டு வனவாசம் முடித்து அயோத்தி திரும்பிய ராமரைக் கண்டதும் பரதன் அடைந்த மகிழ்ச்சியை இரிஞ்ஞாலக்குடாவில் சுவாமியின் முகத்தில் காணலாம்.  கூடல் மாணிக்கப்பெருமாள் என்றும் சங்கமேசன் என்றும் இவருக்குப் பெயருண்டு.   பல நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு திருப்பணி செய்த போது சுவாமியின் நெற்றியில் அபூர்வ ஒளி தோன்றியது.  பார்ப்பதற்கு மாணிக்க கல்லின் ஒளி போல  இருந்தது.  காயங்குளம் மன்னரிடம் இருந்த மாணிக்க கல்லை இந்த ஒளியுடன் ஒப்பிட்ட போது இரண்டும் ஒன்றாக இருப்பதைக் கண்டனர்.  இதனடிப்படையில் சுவாமிக்கு மாணிக்கப்பெருமாள் என பெயர் வந்தது. சித்திரை  மாதம் நடக்கும் பிரம்மோற்சவத்தில் தினமும் 17 யானைகளுடன் சுவாமி எழுந்தருளால் நடக்கும்  நூறு வாத்திய கலைஞர்கள் பங்கேற்பர்.

.  திருமணம் தடையின்றி நடக்கவும் ஐஸ்வர்யம் பெருகவும் சுவாமிக்கு 101 தாமரைப்பூக்களால் ஆன மாலை அணிவிக்கின்றனர்.  சுவாமிக்கு கத்தரிக்காய் நைவேத்யம் செய்ய வயிற்று கோளாறுகள் மறையும்.

எப்படி செல்வது

திருச்சூரில் இருந்து 23 கிமீ  சாலக்குடியில் இருந்து 19 கிமீ கொடுங்கல்லூரில் இருந்து 16 கிமீ

விசேஷ நாட்கள்

சித்திரை பிரம்மோற்சவம்   ஆடி நாலம்பல தரிசனம்

 

விருப்பம் நிறைவேற்றும் பூ விழுங்கி

 

பட்டுக்கோட்டையில் அருள்புரியும் பூவிழுங்கி வினாயகரை வழிபட்டால் உங்களது விருப்பம் நிறைவேறும்.

இளமையில் பிரம்மச்சாரியாக இருப்பவன் பின் திருமணம் செய்து குடும்பஸ்தனாக வாழ்கிறான்.  ஒப்படைத்துவிட்டு தவத்தில் ஈடுபட காட்டுக்குச் செல்லவேண்டும். தற்போது திருத்தல யாத்திரை செல்கின்றனர்.  இல்லறம் போல துறவறமும் அவசியம் என்பதை உணர்த்த சிவனும் பார்வதியும் இப்பகுதியில் தங்கியிருந்தனர். இப்பகுதி புராதனமான வனம் என்பதால் சுவாமிக்கு புராதனவனேஸ்வரர் எனப் பெயர் வந்தது.

தவம் கலைந்த சிவன் நெற்றிகண்ணைத் திறக்கவே மன்மதன் சாம்பல் ஆனான். இந்த இடம் மதன் பட்டவூர் என்றானது.   மன்மதனுக்கு உயிர் பிச்சை தர வேண்டும் என தேவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.  சிவன் அனுமதியுடன் சாம்பல் மீது பால் தெளிக்க அவன் உயிர் பெற்றான்.  இந்த இடம் பாலத்தளி எனப்படுகிறது.  இங்குள்ள காமன் பொட்டலில் ஆண்டுதோறும் பங்குனியில் காமன் பண்டிகை நடக்கிறது.  இங்குள்ள அம்மன் பெரிய நாயகி எனப்படுகிறாள்.  அவளை வழிபட்டால் மணவாழ்வு சிறக்கும் குழந்தைபேறு கிடைக்கும் நோய் தீரும் வயதானவர்கள் புராதன் வனேஸ்வரர் பெரிய நாயகியை தரிசித்தால் நிம்மதி நிலைக்கும்  இங்குள்ள வினாயகரின் காதிலுள்ள துவாரங்களில் வேண்டுதல்களை நினைத்து பக்தர்கள் பூக்களை வைப்பர்.  அவற்றை வினாயகர் உள்ளே இழுத்துக்கொண்டால் வேண்டுதல் நிறைவேறும்  இவரை பூவிழுங்கி  வினாயகர் என்கின்றனர்.

எப்படி செல்வது

தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை  5 கிமீ

விசேஷ நாட்கள்

நவராத்திரி   மஹாசிவராத்திரி  மஹா பிரதோஷம்

 

 

தசரதர் வழிபட்ட ஆதி ஜெகன்னாதர்

ராம நாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் ஆதி ஜெகன்னாதப் பெருமாள் கோயில் உள்ளது.  இங்கு ராமரின் தந்தையான தசரதர் வழிபாடு செய்துள்ளார்.   முன்பொரு காலத்தில் புல்லவர்  காலவர் கண்ணவர் என்னும் மகரிஷிகள் தர்ப்பை புல் நிறைந்த காட்டில் தவமிருந்தனர்.  அவர்களுக்கு அரசமரமாக காட்சியளித்தார் மஹாவிஷ்ணு. அவரின் உண்மையான வடிவத்தைக் காண விரும்பிய மகரிஷிகள் தவத்தை தொடர்ந்தனர்.   அதன் பயனாக ஆதிஜெகன்னாத பெருமாளாக காட்சியளித்தார்.  இந்த் ஐடம் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயிலாக விளங்குகிறது.

இக்கோயிலில் வழிபட்ட தசரதர் அயோத்தியில் புத்திரப்பேறுக்கான யாகம் ஒன்றை நடத்தினார்.  அதில் கிடைத்த பாயசத்தை மனைவியருக்கு கொடுத்தார்.  கருவுற்ற அவர்கள் ராமர் பரதர்  லட்சுமணர் சத்ருக்கனர் என நான்கு குழந்தைகளைப் பெற்றனர்.  புத்திர தோஷம் உள்ள தம்பதியர் இங்குள்ள சேதுக்கரை தீர்த்தத்தில் நீராடி கோயில் அளீக்கப்படும் பாயசத்தை குடித்தால் குழந்தை வரம் கிடைக்கும்.  ராவணனை அழிக்க இலங்கை செல்லும் முன் பாலம் அமைக்க கடலரசனின் அனுமதிக்காக காத்திருந்தார் ராமர்.  அப்போது தர்ப்பிய புல்லை பாயாக விரித்து ஓய்வெடுத்தார்  அதனால் இத்தலம் திருப்புல்லணை எனப் பெயர் பெற்றது.  தற்போது இதனை திருப்புல்லாணி என அழைக்கின்றனர்.

ராமருக்கு பிரம்மோற்சவம் சித்திரை மாதம் நடக்கிறது.  சன்னதியின் பின்புறம் உள்ள அரசமரத்தை மஹாவிஷ்ணுவாக கருதி வழிபடுகின்றனர்.  4 கிமீ தூரத்தில் உள்ள சேதுக்கரை தீர்த்தத்தில் அமாவாசையன்று பிதுர் வழிபாடு செய்கின்றனர்.

எப்படி செல்வது

ராம நாதபுரத்திலிருந்து 10கிமீ  ராமேஸ்வரத்திலிருந்து 75கிமீ

விசேஷ நாட்கள்

சித்திரை பிரம்மோற்சவம்   வைகுண்ட ஏகாதசி   அனுமன் ஜெயந்தி  ஸ்ரீ ராம நவமி