மஹா பாரதத்தில் யாரும் அறிந்திராத விகர்ணன்

பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் மஹாபாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 18 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரின் 14 ஆம் நாள் போர் தொடங்க இருந்தது. அதற்காக பஞ்ச பாண்டவர்கள் ஐவரும், போர்க்களம் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணரும் அங்கே இருந்தார். அவரிடம் த்ரவுபதி ஒரு கேள்வியைக் கேட்டாள்.“கிருஷ்ணா.. நீ அனைத்தும் அறிந்தவன். உலகில் நடக்கும் செயல்களை மவுனமாக பார்த்துக் கொண்டிருப்பவன். இந்தப் போரில் வெற்றிபெறுபவனும் நீ.. வீழ்பவனும் நீயே.. எல்லாம் அறிந்த உன்னிடம் நான் ஒன்றை கேட்க வேண்டும். 

அது யாதெனில்.. இன்றையப் போரில் வெற்றி யார் பக்கம் இருக்கும்.?”அதைக் கேட்டு புன்னகைத்த கிருஷ்ணன், “எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் உனக்கு என்ன அவ்வளவு ஆர்வம் திரவுபதி.? இன்றையப் போரில் வெற்றி தோல்வி என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் ஒன்றை மட்டும் உனக்குச் சொல்வேன். இன்றையப் போரில் இந்த உலகத்திலேயே மிகவும் நல்லவன் ஒருவன் கொல்லப்படுவான்” என்றார். கிருஷ்ணன் அவ்வாறு சொன்னதும், பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வரும், தன் மூத்த சகோதரனான தர்மனை பார்த்தனர். அவர்களின் முகத்தில் சோகம் குடிகொண்டது. திரவுபதியின் கண்களும் கலங்கிப் போய், என்ன சொல்வதென்று அறியாமல் அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள்.

அனைவருக்கும் தெரியும். இந்த உலகத்திலேயே தர்மன் தான் மிகவும் நல்லவன் என்று பெயர் பெற்றவன். அதனால்தான் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்து போனார்கள். பின்னர் ஒருவாறாக சமாளித்தபடி பாண்டவர்கள் ஐவரும் மனம் நொந்தபடி போர்க்களம் சென்றனர். போர்க்களத்தில் துரியோதனனையும், துச்சாதனனையும் கொல்ல வேண்டும் என்பதே பீமனின் குறிக்கோளாக இருந்தது. அதனால் அவன் தன்னுடைய தேரை, அவர்கள் இருவரையும் நோக்கி செலுத்தினான். அப்போது அவனது தேருக்கு முன்பாக வந்து நின்றான், #விகர்ணன். இவன், துரியோதனனின் தம்பிகளில் ஒருவன். அவனைக் கண்டதும், பீமனின் முகத்தில் அன்பு படர்ந்தது. (பீமனுக்கும் தம்பி தானே)“என்ன பீமா. அவ்வளவு அவசரமாக எங்கே செல்கிறாய்.. உன்னுடன் போரிடத்தான் நான் வந்துள்ளேன்.” “விகர்ணா.. என் வழியை விடு.. நான் உன்னைக் கொல்வதற்காக களத்தில் இறங்கவில்லை. உன் இரு அண்ணன்களான துரியோதனன், துச்சாதனன் இருவரையும் கொல்ல வந்திருக்கிறேன்.”“ஏன் பீமா….என்னை வென்று விட்டு அவர்களை வெல்ல இயலாதா? இல்லை என்னை வெல்லவே முடியாது என்று எண்ணுகிறாயா?”விகர்ணனின் அந்த பேச்சைக் கேட்டதும் பீமன் வெகுண்டான். “விகர்ணா…. உன்னைக் கொல்ல என் மனம் இடம் கொடுக்கவில்லை. அது உன் மீதான அச்சம் அல்ல.. அன்பு. உன்னை நான் கொல்ல நினைத்தாலும், என் கதாயுதமே என்னை தடுத்துவிடுமோ என்ற பயம்தான் எனக்கு. ஏனெனில் அன்று திரவுபதியை துகிலுரித்தபோது, நீ திரவுபதிக்கு ஆதரவாக பேசியதை நான் மட்டுமின்றி, என் கதாயுதமும் அல்லவா கேட்டுக்கொண்டிருந்தது. அதனால்தான் உன்னைக் கொல்ல என் மனம் மறுக்கிறது. பிழைத்துப்போ.. இல்லையெனில் என்னிடம் இன்னொரு யோசனையும் உள்ளது” என்றான்.

“அது என்ன மற்றொரு யோசனை” என்று கேட்டான், விகர்ணன். “நீ எங்களுடன் சேர்ந்து விடு. பாண்டவர்கள் ஐவருடன் உன்னையும் ஆறாவதாக சேர்க்கிறோம். போருக்குப் பின் உனக்கு அரசு பதவி வழங்கி அரசனாக முடிசூட்டுகிறோம். திரவுபதியின் மானம் காக்க குரல் கொடுத்த உனக்கு முடிசூட்டி பார்க்க நினைக்கிறது என் மனம்.” விகர்ணன் நகைத்தான். “பீமா.. நான் அற வழியில் நிற்பவன். அன்று திரவுபதிக்கு நிகழ்ந்தது அநீதி. பெண்ணின் மானம் சூறையாடப்படும் நேரத்தில் அதனை எதிர்த்து குரல் கொடுப்பதுதான் அறம். அதைத்தான் அன்று நான் செய்தேன். இன்று யார் தரப்பில் நியாயம் இருந்தாலும், நான் சார்ந்திருக்கும் என் அண்ணனுக்காக போரிடுவதே அறம். அதைத்தான் இன்றும் செய்கிறேன். மகுட ஆசைக்காக என் அண்ணனை விட்டு விலகி விடுவேன் என்று நினைக்காதே.. என்னைத் தாண்டி தான் நீ துரியோதனனை அடைய முடியும். உன்னால் முடிந்தால் உன் கதாயுதத்தை என் மீது பிரயோகித்துப்பார்” என்று சவால் விட்டான்.அந்த துடுக்குப் பேச்சு பீமனை ஆவேசப் படுத்தியது. தேரை விட்டு இறங்கி, கதாயுதம் கொண்டு விகர்ணனுடன் போரிட்டான். அந்தப் போர் அவ்வளவு எளிதாக முடியவில்லை. விகர்ணனை அழிப்பது, தான் நினைத்ததுபோல் சுலபம் இல்லை என்பதை, அவனுடன் மோதிய பிறகே பீமன் அறிந்தான். ஒரு மாபெரும் வீரனுடன் போரிடுவதை அவன் மனம் உணர்ந்தது. அறத்தின் வழி வாழ்பவர்களை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்லவே. ஒரு கட்டத்தில் பீமன் வீசிய கதாயுதம், விகர்ணனின் நெஞ்சை தாக்கியது. அதை சிரித்த முகத்தோடு வாங்கிக்கொண்ட விகர்ணன் தரையில் சாய்ந்து இறந்தான். அதைப் பார்த்து பீமனின் மனம், இனம் புரியாத சோகத்தில் ஆழ்ந்தது.

சூரிய அஸ்தமனம் நிகழ்ந்ததும், போர் நிறுத்தப்பட்டது. தர்மனுக்கு என்ன ஆனதோ என்று கவலையில் ஆழ்ந்திருந்த திரவுபதி, பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் நலமுடன் வருவதைக் கண்டு ஆனந்தம் அடைந்தாள்.

இப்போது அவளுக்குள் பெரும் சந்தேகம். ‘இன்று எல்லாரைவிடவும் நல்லவன் ஒருவன் இறப்பான் என்று கிருஷ்ணர் சொன்னாரே.. என் கணவர் நலமுடன் தானே இருக்கிறார்’ என்று நினைத்தவள், தன் சந்தேகத்தை கிருஷ்ணரிடமே கேட்டாள். கண்ணன் புன்னகைத்தபடியே கூறினார். “திரவுபதி…. நல்லவர்களுக்கு மத்தியில் நல்லவர்களாக வாழ்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல.. ஆனால் விகர்ணன் கெட்டவர்களிடையே நல்லவனாக இருந்தவன். உன் மானத்தைக் காப்பதற்காக எதிர் அணியில் இருந்து குரல் கொடுத்தவன். இப்போது தன் அண்ணன் கெட்டவனே ஆனாலும், அவனுக்காக போரிட்டு தன் உயிரையே கொடுத்திருக்கிறான். அரச பதவி அளிப்பதாக, பீமன் காட்டிய ஆசை கூட அவன் மனதை மாற்றமுடியவில்லை. நான் எங்கு இருக்கிறேனோ அந்த இடத்தில் தர்மம் இருக்கும், நியாயம் இருக்கும் என்பதை விகர்ணன் அறிவான். ஆனாலும் கூட அறத்திற்காக தன் அண்ணனுக்காக போரிட்டான். தான் இறந்துபோவோம் என்று தெரிந்து தான் அவன் போர்க்களத்திற்கே வந்தான். இப்போது சொல், கெட்டவர்களிடையே நல்லவனாக இருந்த, விகர்ணன்தானே உலகத்திலேயே எல்லாரையும் விட நல்லவன்” அதுவரை அமைதியாக இருந்த தர்மன், “ஆமாம்.. விகர்ணன் தான் எல்லோரிலும் நல்லவன். என்னை அனைவரும் நல்லவன் என்கிறார்கள்.. அது உண்மையோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் விகர்ணன் என்னைவிடவும் நல்லவன் என்பது மட்டும் உண்மை. இந்தப் போரால் அந்த உத்தமனையும் கொல்ல நேர்ந்து விட்டதே..” என்றான்.பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் விகர்ணனுக்காக மனம் கலங்கி நின்றனர்.

தொட்டிலின் கதை

குழந்தையை தொட்டிலில் போட்டு பெயர் சூட்டும் விழா நிகழ்த்தி வாயார அழைப்பது பண்பாடாக உள்ளது.  வண்ணமயமான குடும்ப விழாவாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.

தொட்டிலில் குழந்தையை போடுவதற்கான காரணத்தை அறிவோம்………….. பிறந்த குழந்தையை எந்த நேரமும் கவனிப்பது அரிது. கண்காணிப்பாக பார்த்துக்கொண்டிருந்த முடியாது.  கவனம் பிசகி விட வாய்ப்பு உண்டு.  துணியை விரித்து குழந்தையை தரையில் போட்டால் பூச்சி பூரான் எறும்பு போன்றவற்றால் பாதிப்பு வரக்கூடும்.  பாதிப்பு ஏற்பட்டால் குழந்தையால் கூற இயலாது.  இம்மாதிரி பிரச்னைகளை தவிர்க்கவே தொட்டில் அவசியம்.

குழந்தைக்கு தொட்டில் கதகதப்பை தரும்.  நல்ல வடிவத்தையும் உருவாக்கும். இதையெல்லாம் உத்தேசித்து தான் தொட்டில் அறிமுகமானது.  மரத்தொட்டில் தான் பிரபலமாக உள்ளது. இந்திய அளவில் மிக பிரபலமான மரத்தொட்டில்கள் கர்னாடகா மானிலம் தார்வாட் மாவட்டத்தில் கல்கட்சி கிராமத்தில் தயாராகிறது.  அங்கு உருவாகும் தொட்டில் எழில் மயமானது.  பார்த்தாலே பிடித்து விடும்.

பழங்காலத்தில் இந்த கிராமத்தில் சில குடும்பங்கள் அரச குடும்ப பயன்பாட்டுக்கு தொட்டில் செய்து கொடுத்து வந்தன.  இப்போது தேவை குறைந்ததால் இரண்டே குடும்பங்கள் தான் இதில் ஈடுபட்டுள்ளன. சில ஆண்டுகளாக தேவை மிகவும் குறைந்து விட்டது.  இதனால் இந்த குடும்பங்கள் பிழைப்புக்கே கஷ்டப்பட்டன. அப்போது மறைந்த நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினர் தொட்டில் செய்து தர கேட்டனர். அழகிய தொட்டிலை அவர்கள் வாங்கியபோது சமூக வலைத்தளங்களில் பிரபலமானது.

இதையடுத்து அரசியல் பிரபலங்கள் சினிமா நட்சத்திரங்கள் செல்வந்தர்கள் அந்த வகை தொட்டில் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். வண்ணமயமாக செய்ய சொல்லி வாங்கி வருகின்றனர். இதனால் தொட்டில் தேவை அதிகரித்து வருகிறது.  இங்கு தேக்கு மரத்தில் தொட்டில் உருவாக்கப்படுகிறது.  அதில் தூங்கும் குழந்தைக்கு அலர்ஜி போன்ற பாதிப்பு ஏற்படா வண்ணம் மிகவும் கவனமாக உருவாக்குகின்றனர். தொட்டிலில் அழகிய ஓவியங்களை வரைந்து மெருகேற்றுவர்.  முதலில் தொங்கும் வகை தொட்டிலை தான் உருவாக்கி வந்தனர்.  தற்போது தரையில் நிற்க வைக்கும் விதமாக உருவாக்க துவங்கியுள்ளனர். அரக்கு மெழுகு மஞ்சள் போன்றவற்றில் மூலிகை வண்ணங்களை குழைத்து கம்பீரமாக ஓவியங்களை உருவாக்குகின்றனர்  அலங்காரதொட்டில் தவிர்த்து சாதாரண வகை தொட்டில்களும் ஜென்மாஷ்டமி  மகாவீரர் ஜெயந்தி அனுமந்த் ஜெயந்தி விழாக்களில் பயன்படுத்தும் விதமாக எழில் மிகு ஊஞ்சல்களும் தயாரிக்கப்படுகின்றன.

தகவல் நன்றி    சிறுவர் மலர்.

ஸர்வதர்சனஹ

 ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதராஸ் மாகாணத்தின் கீழ் இருந்த சித்தூரில், முன்ரோ என்ற ஆங்கிலேயர்மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்தார். சித்தூர் மாவட்டத்தில் இருந்த திருமலை திருப்பதி கோயிலிலிருந்து அரசுக்கு நிறைய வருமானம் வந்தபடியால், மாவட்ட ஆட்சியர் முன்ரோ அடிக்கடி திருமலைக்கு வருவார்.அதிகார ஆணவம் மிகுந்தவரான அவர் திருப்பதியில் மொட்டை அடித்துக் கொண்டு வரும் பக்தர்களைப் பார்த்து,“ஏன் முடியை வெட்டுகிறீர்கள்? தலையையே வெட்டி இறைவனுக்குக் கொடுக்க வேண்டியது தானே?” என்று ஏளனம் செய்வார்.லட்டு பிரசாதம் பெற்றுச் செல்லும் பக்தர்களைப் பார்த்து, “இப்படிச் சுகாதாரம் இல்லாத உணவுகளை உட்கொள்வதால் தான்எல்லா வியாதிகளும் உண்டாகின்றன!” என்று சொல்வார்.

“கோவிந்தா! கோவிந்தா!” என்று கோஷம் செய்பவர்களைப் பார்த்து, “ஏன் இப்படி மது அருந்திய கரடி போலக் கத்துகிறீர்கள்?அந்தச் சிலை என்றாவது உங்கள் கோஷங்களுக்குச் செவி சாய்த்திருக்கிறதா?” என்று கேட்பார்.நெற்றியில் திருமண் இட்டுக் கொண்டு வருபவர்களைப் பார்த்து, “நீங்கள் ஏன் தினமும் ஹோலிப் பண்டிகை கொண்டாடுகிறீர்கள்?நெற்றியெல்லாம் சிவந்திருக்கிறதே!” என்பார்.அந்த ஆட்சியருக்கு வேதாந்த தேசிகர் என்ற உதவியாளர் ஒருவர் இருந்தார். வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த அவரை ஆட்சியர் அடிக்கடி ஏளனம் செய்வார்.“உங்கள் தெய்வம் உங்களைக் காக்க வேண்டும் என்பதற்காக உங்கள் உடம்பில் பன்னிரண்டு இடங்களில் நாமம் இட்டுக் கொள்கிறீர்கள். ஆனால் கால்களில் நீங்கள் இடுவதில்லையே.உங்கள் கால்களைத் தெய்வம் காப்பாற்ற வேண்டாமா?” என்று கேட்பார்.

ஒருநாள் திருமலையில் பெருமாள் அமுது செய்த கிச்சடியைப் பக்தர்கள் உண்டு கொண்டிருக்கையில் அங்கு வந்த ஆட்சியர்,“செப்பு பாத்திரத்தில் தயாரிக்கப்பட்ட சுகாதாரமற்ற உணவுகளை உண்டால் வயிற்றுப் போக்கு, வயிற்று வலி உள்ளிட்ட நோய்கள் ஏற்படும்என்பதை அறியாமல் இப்படி உண்கிறீர்களே!” என ஏளனம் செய்தார்.அன்று மாலை அலுவலகம் திரும்பிய முன்ரோ, “ஐயோ! ஐயோ!” என்று கத்தினார்.திடுக்கிட்டு அவரது அறைக்கு ஓடிய உதவியாளர் வேதாந்த தேசிகன், வயிற்று வலியால் ஆட்சியர் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.“உடனே மருத்துவரைக் கூப்பிடு!” என்றார் ஆட்சியர். மருத்துவர் ஊதா நிற மருந்தையும் சில மாத்திரைகளையும் கொடுத்து விட்டுச் சென்றார்.

ஆனால் வயிற்று வலி அதிகரித்துக் கொண்டே போனது. இன்னும் பற்பல மருத்துவர்கள் வந்து பலவிதமான ஊசிகளைப் போட்ட போதும்வயிற்று வலி மேலும் மேலும் அதிகரித்தது. ஆட்சியர் படும் பாட்டைக் கண்ட வேதாந்த தேசிகன்,இந்த நோய் திருமலையப்பனின் அருளால் மட்டுமே குணமாகும் என உணர்ந்தார்.ஆட்சியரிடம், “ஐயா! நீங்கள் சம்மதித்தால் நான் ஒரு மருந்து தருகிறேன்!” என்றார் வேதாந்த தேசிகன்.“எதை வேண்டுமானாலும் கொடு! வயிற்று வலி குணமானால் போதும்!” என்றார் ஆட்சியர்.“திருமலையப்பனுடைய துளசியையும் தீர்த்தத்தையும் தான் நான் தரப்போகிறேன். நீங்கள் பெற்றுக் கொள்வீர்களா?” என்று கேட்டார்.தான் அந்தப் பெருமாளையும் அவரது அடியார்களையும் ஏளனம் செய்ததே தனது துன்பத்துக்குக் காரணம் என உணர்ந்த ஆட்சியர், “கொண்டு வா!” என்றார்.“கோவிந்தா!” என உச்சரித்தபடி துளசியையும் தீர்த்தத்தையும் உட்கொண்டார். சில நிமிடங்களிலேயே வலி கொஞ்சம் குறையத் தொடங்கியது.தொடர்ந்து சில நாட்கள் அவற்றை உட்கொண்டவாறே ஆட்சியர் பூரணமாகக் குணமடைந்தார்.பெருமாளின் பிரசாதத்தின் மகிமையை உணர்ந்த அவர், அடிக்கடி கோயிலுக்குச் சென்று ஏழுமலையானைத் தரிசித்தார்.யாரேனும் திருமலையப்பனின் பிரசாதம் கொண்டு செல்வதைப் பார்த்தால், “எனக்கும் கொஞ்சம் தாருங்கள்!” எனக் கேட்கத் தொடங்கினார்.

ஒருநாள் கோயிலில் ஆட்சியரைக் கண்ட ஒரு பக்தர், “செப்புப் பாத்திரத்தில் செய்த கிச்சடி சுகாதாரமற்றது என்றீர்களே!இப்போது உங்கள் வயிற்று வலியைக் குணப்படுத்திய பெருமாளுக்காக நீங்கள் ஒரு வெள்ளிப் பாத்திரம் வாங்கித் தரலாமே!அதில் சுகாதாரமான முறையில் பிரசாதம் தயாரிக்கலாமே!” என்றார்.அதைக் கேட்ட முன்ரோ தனது சொந்த செலவில் வெள்ளி கங்காளம் வாங்கிக் கொடுத்தார்.அது இன்றும் திருமலையில் ‘முன்ரோ கங்காளம்’ என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு இறை நம்பிக்கை இல்லாத முன்ரோ போன்றவர்களுக்கும் தனது மேன்மைகளைக் காட்டி அவர்களையும் வசீகரிப்பதால் திருமால் *‘ஸர்வதர்சனஹ’* என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 95-வது திருநாமம். *“ஸர்வதர்சனாய நம:”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு எம்பெருமான் தனது அனைத்து மேன்மைகளையும் நன்கு காட்டி அவர்கள் வாழ்வில் மேன்மை அடைய அருள்புரிவார்.

பிறப்பால். அனைவரும் சமம்

பிறப்பால். அனைவரும் சமம் என்று உலகின் மூத்த மற்றும் முன்னோடி வேதமான ரிக்வேதம் சொல்கிறது

இப்படி சொல்வது இந்து மதம் புருஷ சூத்திரத்தில் வரும் ஒரு செய்யுள்.சரியான அர்த்தம் தெரியாமல் ஒரு பிதற்றல் பலரால் சொல்லப்படுகிறது

பிராமணன்தலையில் பிறந்தான்;சத்திரியன் தோளில் பிறந்தான்;வைஷியன் தொடையில் பிறந்தான்; சூத்திரன் பாதத்தில் பிறந்தான் என்று!இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களை தூற்றுகின்றனர்பொய்யை பல முறை அதை உண்மை போல் உளருகிறார்கள்.ஆனால் உண்மை என்ன?

புருஷ சூக்த்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான்:‘

*”பிராமணஸ்ய முகமாஸீத், *பாஹூ ராஜன்ய: க்ருத:*

*ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:**பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத”**என்று புருஷ சூக்தத்திலும் உள்ளது.*

இந்த வரிகளுக்கு அர்த்தம் யாதெனில்,*பிராமனணுக்கு முகமே பலம்.வேதம் ஓதும் பிராமணன் முக லட்சணத்தோடு விளங்கவேண்டும். மேலும் வாயால் நல்லாசி வழங்கவும். நல் உபதேசம் செய்யவும், நல் மந்திரம் உச்சாடனம் செய்யவும் முகமே துணை. எனவே பிராமணணுக்கு முகபலம் தேவை. (பிராமணன் முகத்தில் பிறந்தான் என்பது தவறு.)

சத்திரியனுக்கு தோள் பலம் தேவை.சத்திரியன் வாள் கொண்டு எதிரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றவும், பாதுகாக்கவும், வறியவர்களுக்கு கொடை அளித்து ஆதரிக்கவும் தோள் பலம் கொண்ட கரங்கள் தேவை. (ஷத்திரியன் தோளில் பிறந்தான் என்பது தவறு.)

வைசியன் உட்கார்ந்த நிலையில் வியாபாரம் செய்பவன். எனவே வியாபாரம் செய்யவும், கணக்கு வழக்குகளை பார்க்கவும் வைசியனுக்கு தொடை பலம் மிக்கதாக விளங்க வேண்டும்.( வைசியன் இடுப்பில் பிறந்தான் என்பது தவறு.)

சூத்திரன் உழவு செய்பவன். உழவு செய்பவனுக்கு கால் பலம் தேவை. கால்கள் பலமாக இருந்தால் தான் பயிரிடவும் விவசாயத்தை பராமரிக்கவும் முடியும்.(சூத்திரன் காலில் பிறந்தான் என்பது தவறு.)

மேலே குறிப்பிட்ட ரிக் வேதத்தின் புருஷ சூக்த்தத்தில் ஜாதி என்பதே எங்குமே வரவில்லை! என்பதே உண்மை.

இதில் பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது?பிறப்பினால் யாரும் எதையும் அடையமுடியாது.மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பிறப்பு என்ற வார்த்தை எங்கே வந்தது?

வாய்க்கு வந்தார் போல் அர்த்தம் புகட்டிவிட்டு முட்டாள் மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரை குறை சொல்லி என்ன பயன்.பிறப்பால் வர்ணங்கள் இல்லை – மனு தர்மம்:பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மம் சொல்கிறது.அதற்கான ஸ்லோகம்,

ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதேஅதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே.

தொழிலினால் தான் இரு பிறப்பாளராகின் றனர் (துவீஜம்).இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது.இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது:

ஜன்மனா – பிறப்பால்;ஜாயதே – பிறந்த அனைவரும்;

சூத்ர – சூத்திரரே;கர்மணா – தான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜ – இரு பிறப்பாளனாக;ஜாயதே – பிறப்பாளன் ஆகிறான்.செய்யும் தொழில் தான் ஒருவரை அடையாளம் காண்கிறது.பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

இதையே *திருவள்ளுவர்,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

பொருள்: எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே.ஆயினும், செய்கின்ற தொழில்களின் வேறுபாடுகளால் சிறப்பியல்பு. (குணம்/character/வர்ணம்) ஒத்திருப்பதில்லை.

இரண்டு வரிகளுள்ள திருக்குறளையே சரியாகப் படித்து, பொருள் கூற இயலாதவர்கள், சமஸ்கிருதச் சுலோகங்களுக்குத் தங்கள் விருப்பப்படி, பொருள் கூறி, தானும் குழம்பிப் பிறரையும் குழப்புகின்றனர். நாத்திகவாதிகளால் காலம் காலமாக திரித்து சொல்லிவருவது நினைவில் கொள்க.உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது.

படித்ததில் பிடித்தது பகிர்கிறேன்.

விவாதம் என்பது அறிவின் பரிமாற்றம்.வாதம் என்பது அறியாமையின் பரிமாற்றம்….!

சரணாகதி

விபீஷணன் ராவணனிடம், ‘அண்ணா, ராமனோடு போரிடாதே! அந்த எண்ணத்தைக் கைவிட்டு விடு‘ என எவ்வளவோ கெஞ்சுகிறார். சும்மா கெஞ்சவில்லை.   ஹிரண்ய வதத்தைப் பற்றிய கதையை ராவணனுக்கு எடுத்துக் கூறுகிறார். ராமராக அவதரித்திருக்கும் நாராயணனின் பெருமைகளை, எடுத்துரைக்கிறார் விபீஷணர். ‘அண்ணா, யாகம் வளர்ப்பதால் வரக்கூடிய பலனை நாராயணா என்கிற ஒரு நாமமே தரும் என்பது ப்ரஹ்லாதன் கூற்று. நாம் சொல்லும் சொல்லில் இருக்கிறார், சின்ன சின்ன பொருட்களிலும் இருக்கிறார் நாராயணன் என்பதும் அவனின் கூற்று. நரசிம்மர் ஹிரண்யகசிபுவை வதம் செய்த பிறகு, ப்ரஹ்லாதனுக்கு என்ன வாக்கு தந்தார் தெரியுமா? உன் வம்சத்தில் இனி யாரையும் சம்ஹாரம் செய்யவே மாட்டேன்’ என்று. அந்த வாக்கை அவர் அப்படியே காப்பாற்றியும் வந்தார்.

நாராயண நாமம் அப்படி ப்ரஹ்லாதனையும், அவனது வம்சத்தையும் சேர்த்தே காப்பாற்றி இருக்கிறது.’“நாராயண நாமத்துக்கே அவ்வளவு மஹிமை என்றால், இதோ உன் எதிரே வந்திருக்கும் நாராயணர் அவதாரமான ராமருக்கு எவ்வளவு பராக்ரமம் இருக்கும் என எண்ணிப்பார். ராமரோடு வீணாக சண்டை செய்யாதே! விட்டு விடு‘’ என மீண்டும் மீண்டும் விபீஷணர் சொல்கிறார். அதனால் கோபம் கொண்ட ராவணன், ‘உன் உடம்பு தான் இங்கே இருக்கிறது.உன் உள்ளம் எல்லாம் ராமனிடம்தான் இருக்கிறது. உன்னைக் கொன்று விடுவேன்’ என கர்ஜிக்க, “அண்ணா… நான்  ‘உன் கையால் இறப்பதை விட ராகவனிடமே சென்று விடுகிறேன்‘ என்றபடியே போகிறார் விபீஷணர். அவர் சென்ற நேரம் இரவு நேரம். இரவு நேரத்தில் செல்வது சரியில்லை என்று எண்ணிய விபீஷணர், தனுஷ் கோடியிலேயே தங்கிவிட்டு மறுநாள் காலை ராமர் இருக்கும் இடம் நோக்கி செல்கிறார்.

அங்கே சுக்ரீவன் எதிர்ப்பட, அவரிடம் தாம் ராமரிடம் சரணாகதி செய்ய வந்திருப்பதாக விபீஷணர் தெரிவிக்கிறார். சுக்ரீவன் ராமரிடம் சென்று, ‘அண்ணனே வேண்டாம் எனச் சொல்லி வந்திருக்கிறான். அதனால் அவனைச் சேர்க்கக் கூடாது’ என்கிறான்.சாம்பன் ராமரிடம், ‘அவன் எவ்வளவு கெட்டிக்காரனாக இருந்தாலும் சேர்க்காதீர்கள்’ என்கிறான். நீலன், ‘விரோதியைச் சேர்க்காதீர்கள்‘ என்கிறான். அதுவரை பேசாமல் இருந்த ஹனுமார், ஒருத்தன் நல்லவனா, கெட்டவனா என்பதை அவன் முகமே சொல்லும். ஆக, முகம் பார்த்துத்தான் எதையும் முடிவு செய்யணும். ராமா, நீ கடல் வெள்ளம் மாதிரி; விபீஷணன் கிணற்றுத் தண்ணீர் மாதிரி. கிணற்று நீர் என்றாவது கடல் பரப்பைத் தாங்க முடியுமா? இலங்கையில் நான் பார்த்தவரையில், இவன் ஒருவன் வீடுதான் அந்தணர் வீடு போலவே இருந்தது.

இவன் ஒருவன்தான் நல்லவன். ஆபத்தில் வந்திருக்கிறான். அடைக்கலம் என்று வந்த இவனை எப்படி ஏற்க முடியாது என்று மறுப்பது? அது சரியாக இருக்காது என்கிறார்.உடனே ராமர், ‘ஆம் மாருதி சொன்னது சரிதான். விபீஷணனைச் சேர்த்துக் கொள்வதால் தோல்வி வந்தாலும் சரி, அவனைச் சேர்த்துக் கொள்வோம். நம்மிடம் அடைக்கலம் என்று வந்துவிட்டவரை கைவிடக் கூடாது. சுக்ரீவா! நீ போய் அவனை அழைத்து வா‘ என்கிறார்.அங்கேதான் ஆரம்பமானது விபீஷணர் சரணாகதி. அதாவது, சரணாகதி என்றால் பரிபூர்ணமாக அவனிடம் அடைக்கலமாகிவிட வேண்டும். அப்போது, பகவானின் அருள் பிரவாகம் நம்மைச் சூழ்ந்து காத்து நிற்கும்

நாச்சியார் திருமொழி

“காயுடை நெல்லொடு கரும்பு அமைத்துக்

கட்டி அரிசி அவல் அமைத்து

வாயுடை மறையவர் மந்திரத்தால்

மன்மதனே உன்னை வணங்குகின்றேன்

தேய முன் அளந்தவன் திரிவிக்கிரமன்

திருக்கைகளால் என்னைத் தீண்டும்வண்ணம்

சாயுடை வயிறும் என் தடமுலையும்

தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே”

ஆண்டாள் தொடர்ந்து தன் திருமொழியினை பாடி தொழுகின்றாள், “காய்ந்த நெல்லோடு விளைந்த செங்கரும்போடு, வெல்லமும்,  நல்ல அரிசியில் செய்த அவலோடும் உனக்கு படையலிட்டு வேதியர் சொன்ன நல்ல மந்திரங்களால் உன்னை வணங்குகின்றன்  உலகலளந்த திருமாலின் திருகைகளால் என் வயிறும் மார்பகமும் தீண்டபெறும் அந்த பாக்கியத்தை எனக்கு நீ தருவாயாக” என பாடுகின்றாள்இப்பாடலை பாடிமுடித்ததும் ஆண்டாள் அந்த அணங்கதேவன் சிலையினையும் அந்த நெல் கரும்பு வெல்லம் அவலையும் பார்த்து கொண்டே இருக்கும் பொழுது ஒரு மூதாட்டியின் குரல் வாசலில் கேட்டதுயாரோ யாசககாரி என நினைத்து ஆண்டாள் தானம் செய்ய முயன்றபொழுது ஆண்டாள் பாடிய பாடலினை திரும்ப பாடி குலுங்கி சிரித்தாள் யாசககாரிஆண்டாளுக்கு நாணம் கூடிற்று, முகத்தை மூடி கொண்டாள் ஆனால் யாசககாரி விடவில்லை தொடர்ந்து கேட்டாள், “கண்ணன் மேல் இவ்வளவு காதலா?”கையினை முகத்தில் இருந்து எடுக்காமலே தலையினை மேலும் கீழும் ஆட்டினாள் ஆண்டாள்”அவனோ மாயன், இன்னும் எத்தனை எத்தனை லீலைகளோ அவனுக்கு உண்டு, அவன் உன்னை வந்து மணப்ப்பான் ” என எண்ணுகின்றாயா என கேட்டாள் யாசககாரி”அவன் வருவான் என காத்திருக்கின்றேன், இந்த பிறவி முடிந்தாலும் பிறவி பிறவியாய் அவனுக்காய் காத்திருப்பேன்” என தழுத்தழுத்த குரலில் சொன்னாள் ஆண்டாள்”நீ பைத்தியகாரியடி, அவனாவது வருவதாவது, வீணாக காலம் கடத்தாமல் வேறு திருமணம் செய்து கொள்” என்றாள் யாசகாரி”யாசகம் பெற வந்தவளுக்கு என் கண்ணனை பற்றி பேச அருகதை இல்லை” என்றாள் ஆண்டாள்”இப்படி உன்னை ஏமாற்றி கொண்டிருப்பவன் நல்லவனோ, அந்த மாய ஏமாற்றுவித்தைகாரனை சொன்னால் உனக்கேன் கோபம் வருகின்றது, அவன் உனக்கு மட்டுமா சொந்தம்” என்றாள் யாசககாரி

“இல்லை, அவன் எனக்கும் சொந்தமாக வேண்டும் என்பதுதான் என் ஆசை, அவனை பழிக்காதே” என குரலை உயர்த்தினாள் ஆண்டாள்”முட்டாள்தனமான ஆசை, அந்த கண்ணன் ஏமாற்றுக்காரன்” என யாசகாரி சொல்ல “அவன் யாராய் இருந்தாலும் என் மணாளன், உனக்கு யாசகமுமில்லை ஒன்றுமில்லை” கிளம்பு என விரட்டினாள் ஆண்டாள்”ஆண்டாளே, என்னையா விரட்டுகின்றாய்” என யாசககாரி சொல்லும் பொழுதே அவள் குரல் மாறிற்று, ஆண்டாள் ஏறேடுத்து பார்த்தால் அங்கே கண்ணன் நின்று கொண்டிருந்தான்அவனை கண்டதும் வெட்க சிரிப்போடு வீட்டுக்குள் ஓடி ஒரு தூணின் மறைவில் நின்று கொண்டாள், கண்ணன் வந்து ஊஞ்சலில் அமர்ந்து கொண்டான்ஆண்டாளுக்கு நாணம் கூடிற்று

ஆண்டாளே என்றபடி அவளை நோக்கி சென்றான் கண்ணன், ஆண்டாள் நகர முற்பட்டாள் அவளின் கையினை பிடித்து கொண்டான் கண்ணன்அவன் முகத்தை ஏறேடுத்து பார்த்தாள் ஆண்டாள், கண்ணன் சிரித்தான், அந்த பாடல் வரிகளை சொல்லி அவ்வளவு ஆசையா என்றான்அவள் சிரித்து கொண்டே விலகினாள் கண்ணன் விடவில்லைஅவன் மேலும் நெருங்கினான், அவள் இம்முறை விலகவில்லை கைகளை விடுவித்து கொண்டாள், கண்ணன் செல்ல கோபம் கொண்டு முகத்தை திருப்பி கொண்டான்

“என்னாயிற்று” என கேட்டாள் ஆண்டாள், “பின் எதற்காக பாடினாயாம்” என அலுத்து கொண்டான் கண்ணன்கண்ணா இப்பாடலின் பொருள் உனக்குமா புரியவில்லை என்றாள் ஆண்டாள், “ஆமாம் புரியவில்லை” என போலி கோபம் காட்டினான் கண்ணன்”கண்ணா நாற்றாக நடபட்ட நெல் விளைந்து வீட்டுக்குவந்தாயிற்று, நடபட்ட கரும்பும் வெட்டபட்டாயிற்று அது அது விளைந்து இருக்க வேண்டிய இடத்துக்கு செல்ல நான் மட்டும் இன்னும் விளைந்தும் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லவில்லையே கண்ணாபார் நெல் அவலாக மாறிற்று, கரும்பு வெல்லமாக மாறிற்று, எல்லாம் அதன் அதன் பலனை கொடுக்க தொடங்கிவிட்டது ஆனால் நான் இன்னும் உன்னை எண்ணி அப்படியே இருக்கின்றேனே” இது உனக்கு புரியவில்லையா கண்ணா என்றாள்புரிந்துதான் நீபாடிய அடுத்த வரிக்காக ஓடிவந்தேன் என சிரித்தான் கண்ணன்

கண்ணா, எல்லாம் புரிந்த உனக்குமா அந்த வரி புரியாது? அது என்ன லவுகீக சிற்றின்ப ஏக்கம் என்றாய் நினைத்தாய்?இந்த பூமி எவ்வளவு உயிர்களை அனுதினமும் பிறப்பித்து கொண்டு அவற்றுக்கு தாய் குழந்தைக்கு தாய் பாலூட்டி வளர்ப்பது போல் வளர்க்கின்றது, இதற்கு என்ன காரணம் கண்ணா?

என்ன காரணம்? என தெரியாமல் கேட்டான் கண்ணன்?நீ மூன்று மண்டலங்களையும் உன் காலால் அளந்தாய் அல்லவா? அதனால்தான் வானம் கொட்டுகின்றது, பூமி விளைகின்றது, பாதாளம் இன்னும் அள்ளி அள்ளி கொடுக்கின்றதுகண்ணன் புன்னகைத்தான்ஆண்டாள் தொடர்ந்தாள் “கண்ணா நீ மாபெரும் தெய்வம் இந்த பிரபஞ்சத்தையே இயக்குபவன், மூவுலகமும் உன் கால்பட்டே இவ்வளவு அள்ளி கொடுக்கின்றது என்றால் உன் கைபட்டால் நானும்  ஒரு பூமாதேவி ஆகிவிடுவேன் அல்லவா? அப்பொழுது நானும் எவ்வளவு உயிர்களை பிறபிப்பேன், நானும் நதி, மழை, மேகம், நீரூற்று என உயிர்களுக்கு பாலூட்டி வாழவைப்பேன், அதை நினைத்து கொண்டுதான் பாடினேன்கண்ணா நீ இயக்குபவன் என்றால் நான் இயக்கபடுபவள், மூவுலகை அளந்த நீ என்னையும் ஒரு உலகமாக்கு, அந்த உலகம் உன் கையால் படைக்கபட்டதென்று பெயர் வரட்டும், ஆயிரமாயிரம் ஆயிரமாயிரம் உயிர்கள் அதில் ஜனிக்கட்டும் எல்லாம் உன்னால் என உலகம் சொல்லட்டும், உன்னால் வாழ்கின்றது இந்த பூமி என பெயர் நிலைக்கட்டும்

கண்ணா இந்த பூமி உன்னால் இயங்குகின்றது, அப்படி நானும் உன்னால் பெரும் அடையாளமாகி உன் பெயரை பெருமைபடுத்த எனக்கு வரமருள்வாயா? என சொன்னபடி அவன் நெஞ்சில் புதைந்தாள்கண்ணன் புன்னகைத்தான், அவளின் மிக பெரிய பரோபகார மனமும், பூமிக்கே தாயாகும் அந்த தயாள குணமும் அவனை அவளின் பூர்வீகத்தை சொல்ல வைத்தன‌”ஆண்டாளே, நீ பூமாதேவியின் அம்சம் என்பதால் உனக்கு அந்த வாசனையும் ஆசையும் வருவதில் ஆச்சரியமென்ன, இந்த பூமிக்கு நான் சொந்தம் என்பது போல் நீ எனக்கு சொந்தம் என உலகம் உணரும் காலம் வரும்” என சொல்லி மெல்ல மறைந்தான்ஆன்டாளுக்கு மனமெல்லாம் சந்தோஷத்தில் நிறைந்தது, அடுத்த நாள் பூஜைக்கு அப்பொழுதே தயாரானாள்

(இப்பாடலின் பொருள் இதுதான்

இந்த நிலத்தில் விளைவிக்கபடுபவை எல்லாம் விளைந்தவுடன் வீடு சேர்வது போல, மானிட ஆத்மா பக்குவம் பெற்றபின் கடவுளை அடைய வேண்டும் அதற்கு அவல் இடிபடுவது போலவும், கரும்பு பிழியபட்டு காய்ச்சபடுவது போலவும் மிக இன்னல் பட்டு இறைவனை அடைய பக்குவபடுகின்றதுஅப்படி பக்குவபடும் ஆன்மா இறைவனில் கலந்துவிடுகின்றது பக்குவபடாத ஆன்மா மறுபடியும் குழந்தையாய் தாய் வயிற்றில் பிறந்து பால் குடித்து வளர்கின்றது”அந்த ஆன்மா வாழ்வினை முடித்து நன்மை தீமை பலன்களுக்காக மறுபடியும் பிறக்கும், அதன் ஆன்மா ஞானத்தை உணருமட்டும் இச்சுழற்சி நடந்து கொண்டே இருக்கும்

அந்த ஆன்மாக்கள் இறைவனை உணரவேண்டும் என்பதால் இந்த பூமி உயிர்தன்மை கொண்டதாய் அவனால் படைக்கபட்டு உயிர்கள் ஞானம் பெற ஆன்மாக்களுக்கு இடமளித்து உடலுக்கு உணவளித்து வளர்க்கின்றதுமூவுலகமும் அவன் அருளால் நிறைந்திருகின்றது, இந்த பூமியும் அதன் உயிர்தன்மையும் அவன் அருளால் நடந்து கொண்டிருப்பது அவன் பெயரால் இயங்கி கொண்டிருக்கின்றது )

‘நவதுவார பதி’

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில், சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த பிரமாண்ட ஆலயமாகும். இங்கு நான்குபுறமும் பெரிய கோபுரங்கள் மற்றும் உள்கோபுரங்கள் என மொத்தம் 9 கோபுரங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது கோபுரங்களும், ஒன்பது நுழைவாசல்களாக பார்க்கப்படுகின்றன. இதனால் திருவண்ணாமலையை ‘நவதுவார பதி’ என்றும் சொல்வார்கள். இந்த கோபுரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

1. ராஜகோபுரம் (கிழக்கு)

திருவண்ணாமலை ஆலயத்தின் பிரதான ராஜகோபுரம் இதுதான். இந்த கோபுரம் கட்டுவதற்கான அடித்தளத்தை அமைத்தவர், கிருஷ்ணதேவராயர். ராஜராஜசோழன், தஞ்சை பெரிய கோவிலின் விமானத்தை, 216 அடியாக நிர்மாணித்தார். அதை விட ஒரு அடியாவது பெரியதாக திருவண்ணாமலை ராஜகோபுரத்தை அமைக்க வேண்டும் என எண்ணினார், கிருஷ்ண தேவராயர். இதற்கான பணியை 1550-களில் தொடங்கினார். 135 அடி நீளம், 98 அடி அகலத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டு, ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் அந்தப் பணி நிறைவடைவதற்கு முன்பாகவே, கிருஷ்ணதேவராயர் இறந்துவிட்டார். இதையடுத்து சில ஆன்மிகப் பெரியவர்கள், தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம், இந்தப் பணியை முடிக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதற்கிணங்க, திருவண்ணாமலை கிழக்கு ராஜகோபுரத்தை, கிருஷ்ணதேவராயரின் விருப்பப்படியே, தஞ்சை பெரிய கோவில் விமானத்தை விட, ஒரு அடி அதிகமாக வைத்து 217 அடியுடன் கட்டி முடித்தார். இந்தக் கோபுரம், தமிழ்நாட்டில் 2-வது பெரிய ராஜகோபுரமாக விளங்குகிறது. 11 நிலைகள் கொண்ட இந்த ராஜகோபுரத்தில் விஜயநகர மன்னர்களின் கட்டிடக் கலை அம்சங்களை அதிகமாக காணலாம்.

2. பேய்க்கோபுரம்

இது கிழக்கு ராஜகோபுரத்தின் நேராக மேற்கு பகுதியில் உள்ளது. கிழக்கு ராஜகோபுரத்திற்கான பணியை தொடங்கியபோதே, மேற்கு கோபுரத்திற்கான பணியையும் கிருஷ்ண தேவராயர் தான் தொடங்கினார். ஆனால் இதனை கட்டி முடித்ததும், தஞ்சை செவ்வப்ப நாயக்கர்தான். 160 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம், தொடக்க காலத்தில் ‘மேற்கு கோபுரம்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. அது பேச்சு வழக்கில் ‘மேக்கோபுரம்’ என்றாகி, பிறகு மருவி ‘பேக்கோபுரம்’ என்றாகிப்போனது. பேக்கோபுரம் என்று பேசிப் பேசியே, இது ‘பேய்க்கோபுரம்’ என்ற பெயரைப் பெற்றுவிட்டது. 9 நிலை கொண்ட இந்த கோபுரத்திலும் ஏராளமான சிற்பங்கள் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன.

கார்த்திகைத் தீபத் திருநாளின் போது மட்டும்தான் இந்த கோபுர வாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் மூடப் பட்டு இருக்கும்.

3. திருமஞ்சன கோபுரம்

திருவண்ணாமலை ஆலயத்தின் தெற்கு பகுதியில் உள்ள பெரிய கோபுரம் இது. 157 அடி உயரத்தில் அமைந்த இந்த ஆலயத்தை கட்டியவர் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பதும் தெரியவில்லை. இது ஒரு சிறப்புக்குரிய நுழைவு வாசல் ஆகும். ஏனெனில் ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனம், மார்கழி மாதம் நடைபெறும் ஆரூத்ரா தரிசனம் ஆகிய இரண்டு விழாக்களின் போதும், இந்த கோபுரத்தின் வழியாகத்தான், நடராஜர் வெளியே வந்து திருவீதி உலா செல்வார். திருவீதி உலா முடிந்தும், கோவிலுக்குள் செல்வதும் இந்த வழியாகத்தான். முன் காலத்தில் இறைவனுக்கு திருமஞ்சனம் செய்வதற்கான புனித நீரை, இந்த வாசல் வழியாகத்தான் யானை மீது வைத்து உள்ளே எடுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. இதனாலேயே இந்த வாசல் கோபுரத்திற்கு ‘திருமஞ்சன கோபுரம்’ என்று பெயர் வந்ததாம்.

4. அம்மணி அம்மாள் கோபுரம்

திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு பகுதியில் அமைந்த பெரிய கோபுரம் இது. திருவண்ணாமலை பகுதியில் வாழ்ந்த ஒரு பெண் சித்தரின் முயற்சியால் கட்டப்பட்டதாகும். சிவபெருமானே இவரது கனவில் வந்து, வடக்கு ராஜகோபுரத்தைக் கட்டும்படி உத்தரவிட்டார். இதனால் பலரிடம் நன்கொடை பெற்று இந்தப் பணியை அம்மணி அம்மாள் செய்து வந்தார். 5 நிலைகள் கட்டப்பட்ட நிலையில் பணம் தேவைப்பட்டது. அப்போது சிவபெருமானே, பணம் கிடைக்க அருளினார். மீண்டும் சித்தரின் கனவில் வந்து, ‘பணியாட்களுக்கு விபூதியை ஊதியமாகக் கொடு, மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார்.அதன்படியே கட்டிட வேலையைத் தொடங்கிய அம்மணி அம்மாள், அதில் பணியாற்றியவர்களுக்கு, ஊதியமாக விபூதியை வழங்கினார். விபூதியை பெற்றவர்கள் வீட்டிற்குச் சென்று பிரித்து பார்த்தபோது, அன்று அவர்கள் வேலை பார்த்ததற்கான ஊதியத் தொகை சரியாக இருந்தது. இப்படி முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட இந்த வடக்கு ராஜகோபுரத்தின் உயரம் 171 அடி ஆகும். கிழக்கு பிரதான ராஜகோபுரத்தைப் போலவே 11 நிலைகளுடன், 13 கலங்களுடன் அமைக்கப்பட்ட கோபுரம் இது. அம்மணி அம்மாளின் பெரு முயற்சியால் நிறைவேறிய காரணத்தால், இந்த கோபுரத்திற்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.

5. வல்லாள மகாராஜா கோபுரம்

1318-ம் ஆண்டு தொடங்கி 1340-ம் ஆண்டு வரை, இந்த கோபுரத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளதாக கல்வெட்டு குறிப்புகள் சொல்கின்றன. இதனை கட்டியவர், வீர வல்லாள மகாராஜா. கிழக்கு ராஜகோபுரத்தைத் தாண்டியதும் வருவது இந்த கோபுரம்தான். இந்த கோபுரத்தின் கீழ் பகுதி தூண் ஒன்றில் வல்லாள மகாராஜாவின் சிற்பம் கை கூப்பிய நிலையில் இருப்பதைக் காணலாம். இந்த மன்னனுக்கு பிள்ளைகள் இல்லை. இதனால் வருந்திய மன்னனின் கனவில் வந்த சிவபெருமான், தானே மகனாக இருந்து அனைத்து காரியங்களையும் செய்வதாக வாக்களித்தார். அதன்படியே, வல்லாள மகாராஜா இறந்த வேளையில், அவருக்கு சிவபெருமானே இறுதிச் சடங்கை செய்ததாக ஐதீகம். இன்றும் மாசி மாதம் நடைபெறும் நிகழ்வில், மன்னனுக்கு ஈசன் திதி கொடுக்கும் வைபவம் நடத்தப்படுகிறது.

6. கிளி கோபுரம்

திருவண்ணாமலை கோவிலில் உள்ள கோபுரங்களிலேயே மிகவும் பழமையானதாக இந்த கோபுரம் கருதப்படுகிறது. இதனை 1053-ம் ஆண்டு, ராஜேந்திரச் சோழன் கட்டியுள்ளார். சுமார் 81 அடி உயரம் கொண்டது இந்த கோபுரம். வல்லாள மகாராஜா கோபுரத்திற்கு அடுத்தபடியாக இருக்கிறது. முருகப்பெருமானின் புகழைப்பாடிய அருணகிரிநாதா் பிறந்த திருத்தலம் இது. இவர் ஆரம்ப காலத்தில் பெண் பித்தராக இருந்தார். ஒரு கட்டத்தில் தன் தவறை உணர்ந்த அவர், இந்த கோபுரத்தின் மீது இருந்து குதித்து தற்கொலை செய்ய துணிந்தார். அப்போது முருகப்பெருமானால் ஆட்கொள்ளப்பட்டார். இப்பகுதியை ஆண்ட மன்னனுக்கு ஏற்பட்ட நோயைத் தீர்க்க தேவலோகத்தில் உள்ள மலர் தேவை என்றும், அதனைக்கொண்டு வர அருணகிரிநாதரால்தான் முடியும் என்றும், மன்னனின் ஆலோசகராக இருந்த சம்பந்தாண்டான் கூறினான். இதனை நம்பி, கூடுவிட்டு கூடு பாயும் வித்தையால், தன்னுடைய ஆன்மாவை, இறந்து போன ஒரு கிளியின் உடலுக்குள் செலுத்திக்கொண்டு, தேவலோகம் சென்றார், அருண கிரியார். அதற்குள் அருணகிரியார் மீது பொறாமை கொண்டிருந்த சம்பந்தாண்டான், அவரது உடலை எரித்துவிட்டான். இதனால் கிளி உருவத்திலேயே அந்த கோபுரத்தில் தங்கினார் அருணகிரியார். இதனால் இது ‘கிளி கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது.

7. தெற்கு கட்டை கோபுரம்

திருமஞ்சன கோபுரம் அருகே 5 நிலைகளுடன் உள்ள சிறிய கோபுரம் ‘தெற்கு கட்டை கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது. 70 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ளன.

8. மேற்கு கட்டை கோபுரம்

பேய் கோபுரத்திற்கு அடுத்தபடியாக அமைந்துள்ள சிறிய கோபுரமாகும்.

5 நிலைகளை கொண்ட இந்த கோபுரம் 70 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் திசை காவல் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன.

9. வடக்கு கட்டை கோபுரம்

அம்மணியம்மன் கோபுரத்தை அடுத்து இந்த சிறிய கோபுரம் உள்ளது. 70 அடி உயரம் உள்ள இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இந்த கோபுரத்தில் உள்ள நடன பெண்மணிகளின் சிற்பங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

ராதாஷ்டமி

ராதிகா, ராதாராணி மற்றும் ராதிகாராணி என்றும் அழைக்கப்பட்டவர், பகவத புராணத்திலும், இந்து மதத்தின் வைஷ்ணவ பரம்பரையின் கீத கோவிந்தத்திலும் கிருஷ்ணரின் முதன்மையான பக்தை ஆவார்.[1] ராதா எப்போதும் கிருஷ்ணரின் பக்கத்தில் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவதுடன், இன்றைய கௌடிய வைஷ்ணவ மத சாஸ்திரத்தில் முதன்மைபடுத்தி சிறப்பிக்கப்படும், புராதனமான பெண் தெய்வம் அல்லது சக்தியாகக் கருதப்படுகிறார். பிரம்ம வைவர்த புராணம், கார்கா சம்ஹித்தா மற்றும் பிரைஹாட் கௌதமிய தந்திரம் போன்ற நூல்களைப் போல, இந்த நூலிலும் கிருஷ்ணர் உடனான ராதாவின் உறவுமுறை பற்றி விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நிம்பர்க்கர் சம்பிரதாயத்தில் ராதா வணங்குவதற்கு உரிய முதன்மையான காட்சிப் பொருளாவார், நிம்பர்காவைப் போல, ராதா மற்றும் கிருஷ்ணர் இருவரும் ஒன்று சேர்ந்து இருந்தது முற்றிலும் உண்மையாகக் கருதப்படுவதாக, இந்தப் பரம்பரையை நிறுவியவர் அறிவித்தார்.[2]

பேச்சின் போது ராதாராணி அல்லது ராதிகா என்று ராதா அடிக்கடி அழைக்கப்படுவதுடன், அவர் பெயருக்கு முன்னால் மதிப்பளிக்கும் வார்த்தையான “ஸ்ரீமதி” என்று கடவுளைப் பின்பற்றுபவர்களால் குறிப்பிடப்படுகிறார். ராதா பெண் தெய்வம் லட்சுமியின் மிக முக்கிய அவதாரங்களில் ஒருவர் ஆவார்.

கோபியர் ராதா

ராதையை கிருஷ்ணருக்கு அறிமுகப்படுத்தல்: ராஜா ரவிவர்மாவின் ஓவியம்

மகாபாரதம் மற்றும் பாகவத புராணம், பிரம்ம வைவர்த்த புராணம் போன்றவற்றில் சொல்லப்பட்ட கதையில், கிருஷ்ணர், பிருந்தாவனம் கிராமத்தில் கோபியர்கள் என்று அழைக்கப்பட்ட இடையர் இன இளம் பெண்களின் தோழமையில், தன் அதிகப்படியான இளமைப் பருவத்தைச் செலவழித்தார். மகாபாரதம் பிருந்தாவனத்தில் கிருஷ்ணரின் முந்தைய வாழ்க்கையை சற்று விரிவாக விவரிக்கவில்லை, மாறாக அதற்குப் பிறகான குருச்சேத்திரப் போரில் அதிக கவனம் செலுத்தியது, ஆனால் பாகவத புராணத்தில் கிருஷ்ணரின் கடந்த காலக் குழந்தைப் பருவத்தைப் பற்றி மிகவும் தெளிவாக விவரிக்கப்படுகிறது. பாகவத புராணத்தில், ராதாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அந்த நூலின் பத்தாவது அத்தியாயத்தில் கிருஷ்ணர் தான் இளைஞராக வளர்ந்து வரும் சமயத்தில், கோபியர்களுள் ஒருவருடன் விளையாடியதாக மறைமுகமாக அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகவத புராணத்தின் கூற்றின்படி, கிருஷ்ணர் தனது 10 வது வயது, 7வது மாதத்தில், பிருந்தாவனத்தை விட்டு வெளியேறி மதுராவிற்குச் சென்றார்.[6] கிருஷ்ணன் பிருந்தாவனை விட்டு வெளியேறிய சமயத்தில், ராதாவும் பத்து வயதுடையவராகவோ அல்லது அதற்குக் குறைவாகவோ இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் பின்னர் வெளிவந்த கீத கோவிந்தம் என்ற நூலில் ராதாவைப் பற்றி சற்று விளக்கமாகத் தரப்பட்டுள்ள விவரங்களை நாம் தெரிந்துகொள்ள முடியும்.

வைஷ்ணவத்தில்

கிருஷ்ணருடன் ராதா இருப்பதைப் போன்ற ராஜா ரவி வர்மாவின் ஓவியங்கள்

ராதையுடன் சதுரங்கம் விளையாடும் கிருட்டிணன்

வைஷ்ணவ சமயம் அல்லது இந்து மத பக்திப் பாரம்பரியத்தில் கிருஷ்ணர் மையப்படுத்தப்படுகிறார், ராதா, கிருஷ்ணனின் பெண் நண்பர் மற்றும் ஆலோசகர் ஆவார். இந்தப் பாரம்பரியங்களின் சில ஆதரவாளர்களுக்காக, கிருஷ்ணரைப் போன்றோ அல்லது அவரை விட அதிகமாகவோ ராதா முக்கியத்துவம் பெறுகிறார். கிருஷ்ணரின் புராதன சக்தியாக ராதா இருக்கலாம் என்று கருதப்படுவதுடன், நிம்பர்கர் சம்பிரதாயம் மற்றும் அதைப் பின் தொடர்ந்து வரும் கௌடிய வைஷ்ணவப் பாரம்பரியத்தின் அங்கமான சைதன்ய மஹாபிரபு ஆகிய இரண்டிலும் ராதா மிகப் பெரிய பெண் தெய்வமாகக் கருதப்படுகிறார். மற்ற கோபியர்கள் அனைவரும் வழக்கமாக ராதாவின் பணிப் பெண்களாகக் கருதப்படுகின்றனர். அதோடு ராதா, கிருஷ்ணரின் விருப்பத்தில் முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளார்.

கிருஷ்ணருடனான அவர் உறவு முறையின் இரண்டு வகைகள்: ஸ்வாக்ய-ரஸா (திருமணமான உறவுமுறை) மற்றும் பராகியா-ரஸா (முடிவற்ற மனப்பூர்வமான “அன்பைக்” குறிப்பிடும் உறவுமுறை).

நிம்பர்க்கர் சம்பிரதாயத்தில், கிருஷ்ணருடனான ராதாவின் உறவுமுறை ஸ்வாக்கிய-ரஸா என்று சிறப்பிக்கப்படுவதுடன், பிரம்ம வைவர்த பூரணம் மற்றும் கர்கா சம்ஹித்தா போன்ற நூல்கள் அடிப்படையில் ராதா மற்றும் கிருஷ்ணர் ஆகியோரின் திருமணத்தை விவரிக்கிறது. கௌடிய பாரம்பரியம் காதலின் உயர்ந்த நிலையை பராகியா-ரஸா வில் மையப்படுத்துகிறது, அத்துடன் ராதாவும், கிருஷ்ணனும் பிரிந்திருந்தாலும் நினைவுகளைப் பரிமாறிக் கொள்கின்றனர். இவ்வுலகைச் சார்ந்த பாலுணர்வைப் போலன்றி, அடிப்படையில் உயர்ந்த, கடவுளைப் பற்றிய இயல்பான காதலைப் போல, கிருஷ்ணனை எண்ணிய கோபியர்களின் காதல் மறைபொருளின் மூலம் விவரிக்கப்படுகிறது.

இயற்கையில் கிருஷ்ணருடனான ராதாவின் உறவுமுறை பற்றிய உயர்ந்த இரகசியத்தை ஏன் மற்ற புராண நூல்களில் ராதாவைப் பற்றிய கதையில் விரிவாகக் குறிப்பிடவில்லை என்று கௌடிய மற்றும் நிம்பர்க வைஷ்ணவப் பள்ளிகளின் சார்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.[7]

பிறப்பு

கடவுள் கிருஷ்ணரின் காதலியான ராதா ஒரு கூர்ஜரியாவார் (இடையர் குலப்பெண்)[8], அத்துடன் இந்தியாவின் இன்றைய புது டெல்லிக்கு அருகாமையிலுள்ள பிருந்தாவனத்தில் இருந்து 8 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பார்சனா அல்லது ராவல் ஆகிய இரண்டு கிரமங்களில் ஒன்றில் பிறந்தார்.[9] அவர் பாரம்பரியத்தில் பல்வேறு விவரணைகள் உள்ளன. விர்சபானு என்பவர் இடையர்களின் தலைவராக இருந்தார் என்பதுடன், ராதாவின் தந்தையும் ஆவார். விர்சபானு கடவுள் நாராயணனின் அவதாரத்தின் ஒரு பகுதியாக இருந்தார், அதே சமயம் அவர் தாய் கலாவதி பெண் தெய்வம் லட்சுமியின் அவதாரத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.

கிருஷ்ணர் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் பிருந்தாவனில் ராதாவின் இறைவழிபாடு சிறப்புமிக்கது. அங்கு அவரின் முக்கியத்துவம் கிருஷ்ணரின் முக்கியத்துவத்தை விஞ்சக்கூடியதாக இருக்கிறது. கௌடிய வைஷ்ணவத்தில் கிருஷ்ணரிடத்தில் ராதாவின் அன்பு மிகவும் உயர்ந்ததாக முதன்மைபடுத்தப்படுகிறது, ஏனெனில் அது முடிவற்றதுடன், நிபந்தனையற்ற தன்மையைக் கொண்டது. ஆகவே ராதா, கிருஷ்ணருக்கு ‘அவரின் இதயம் மற்றும் ஆன்மா’, மற்றும் அவரின் ‘ஹிலாந்தி-சக்தி’ (மன வலிமைத் தோழமை) ஆகிய அளவுகளில் மிக முக்கியமான நண்பராக இருக்கிறார்.

பிரிஹட்-கௌதமிய தந்திரத்தில், ராதாராணி பின்வருமாறு வரையறுக்கப்படுகிறார்: “இயற்கைக்கு அப்பாற்பட்ட பெண் தெய்வம் ஸ்ரீமதி ராதாராணி, கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் நேரடியான சரிநேர் படிவமாவார். அவர் எல்லா நற்பேறுடைய பெண்தெய்வத்தின் மையத் தோற்றம் ஆவார். அவர் கடவுள் தன்மையுடைய அனைத்து-கவர்ச்சிமிக்க ஆளுமையை ஈர்ப்பதற்கான முழுமையான வசீகரத்தை சொந்தமாய்க் கொண்டுள்ளார். அவர் புராதனமான கடவுளின் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டிருக்கிறார்.”

நிம்பர்க்கர்

நிம்பர்க்கர் என்பவர் ராதாவைப் பற்றிய கொள்கைகளை எங்கும் பரவச் செய்த முதல் வைஷ்ணவ ஆச்சார்யர் ஆவார்.[10][11]

சைதன்ய மகாபிரபு

ராதா மற்றும் கிருஷ்ணர் ஆகிய இருவரின் அவதாரங்கள் ஒரே வடிவத்திலானவை (நவீன கால இஸ்கான் இயக்கம்) என, வங்காளத் துறவியான சைதன்ய மஹாபிரபு (1486 – 1534) முற்றிலும் நம்புகிறார். சைதன்யர் தன் வாழ்க்கை முழுவதும், வைஷ்ணவப் பாரம்பரியத்தின் பக்தராகவே வாழ்ந்தார், மேலும் அவர் எந்த அவதாரத்தின் வடிவத்தையும் வெளிப்படையாகக் கோரவில்லை, ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாற்றில் தனக்கு நெருங்கிய சம்பந்தமுள்ள தெய்வீக வடிவத்தை அவர் வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[12]

சூரிய பகவானின் வரலாறு


சூரியனின் பிறப்பு குறித்து இரு வேறு கதைகளைப் புராணம் சொல்கிறது. 
மகாவிஷ்ணு தமது உந்தி கமலத்தில் இருந்து பிரம்மாவை படைத்தார். திருமாலின் ஆணை ப்படி பிரம்மா பல உலகங்களைப் படைத்தார். அவை அனைத்தும் இருள் மயமாக இருந்தது. அந்த இருளைப் போக்க ஓம் என்ற பேரொலியை உண்டாக்கினார் விஷ்ணு.
அந்தஒலியில் இருந்து பிரகாசமான ஒளியுடன் சூரியன் தோன்றினார் என்பது ஒரு கதை. மார்க்கண்டேய புராணத்தில் இந்த கதை சொல்லப்பட்டுள்ளது. 
சூரியன் பற்றிமற்றொரு வரலாறு வருமாறு ..
பிரம்மா தன் படைப்புத் தொழிலை விரிவுப்படுத்த சப்தரிஷிகளை உண்டாக்கினார் அவர்க ளில் மரீசி என்பவரும் ஒருவர். அவருக்கு காசியபர் என்னும் மகன் பிறந்தார். அவருக்கு 13 மனைவிகள். அவர்களில் மூத்த மனைவி. யான அதிதி பெற்ற மகனே சூரியதேவன் என்பது மற்றொரு கதை. சூரிய புராணத்தில் இந்தக் கதை சொல்லப்பட்டுள்ளது.
உலகை பாதுகாக்கும் பொருட்டு நவக்கிரக குழு அமைக்கப்பட்டு, சூரியனுக்குத் தலைமை பதவி தரப்பட்டது. ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு சக்கரமுள்ள ரதத்தில் சூரியன் மேருமலை யைச் சுற்றி வலம் வருகின்றார். அவருக்குச் சாரதி அருணன் ஆவான்.
சூரியனுக்கு சமுங்கை, பிரபை, ரைவத இளவ ரசி, சாயாதேவி ஆகிய நான்கு மனைவிகள் உள்ளனர். அவர்களுள், சுவர்கலா தேவிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். மகன்களுக்கு வைவஸ்தமனு, யம தர்மராசன் என்றும், மகளுக்கு யமுனை என்றும் பெயர் சூட்டினர்.
சூரியனுடன் சுவர்க்கலா தேவி இல்லறம் இனிது நடத்தினாலும் அவளுக்கு சூரியனுடன் தொடர்ந்து இல்லறம் நடத்த போதிய சக்தி இல்லை. அவளுக்கு சக்தி குறைந்து கொண் டே வந்தது. இதனால் அவள் தவம் செய்ய யோக கானகம் புறப்பட்டாள்.
சுவர்க்கலா தேவி தவம் செய்ய புறப்படுமுன்; தன்னிடம் இருந்த சிவசக்தியினால், தான் இல்லாத நேரத்தில் சூரியனுக்கு ஏற்படும் மோகத்தை தணிக்க, தன் நிழலையே தன்னை போன்ற ஒரு பெண்ணாக மாற்றி, அதற்கு “சாயாதேவி” என்று பெயர் சூட்டினாள்.
தான் இழந்த சக்தியை பெற தவம் மேற்கொ ள்ள தயாரான அவள், சாயாதேவியிடம், “நீ என்னை போன்றே சூரியனுக்கு மனைவியாக இருந்து என் மூன்று குழந்தைகளையும் கண் போல் வளர்க்க வேண்டும்“ என்று கூறினாள்.
அவளது வேண்டுகோளை ஏற்ற சாயாதேவி, “சூரியனுக்கு மனைவியாக தங்கள் சொற்ப  டியே நடக்கின்றேன். ஆனால் சூரிய பகவானு க்கு உண்மை தெரிய வேண்டிய நிலை ஏற்பட்டால் நான் உண்மையை உரைப்பதை தவிர வேறு வழியில்லை” என்று கூறினாள். அதற்கு சுவர்க்கலா தேவி உடன்பட்டாள்.
தொடர்ந்து, அவள் தன்னை யார் என்று அறியாத வண்ணம் குதிரை வடிவம் கொண்டு தவம் செய்ய தொடங்கினாள். அதேநேரத்தில் சாயா தேவி, சுவர்க்கலா தேவி போன்று சூரியனுடன் இல்லறம் நடத்த தொடங்கினாள்.
அப்போது சூரியனுக்கு சாயாதேவி முலமாக மூன்று குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் கிருதத்வாசி, கிருதவர்மா ஆகிய இரண்டு மகன்களும், தபதி என்ற மகளும் ஆவார்கள். இதில் கிருதவர்மா என்ற பெயருடைய ஆண்மகன் பின்னாளில் சனீஸ்வரபகவானாக மாறினார். அவரது சகோதரி தபதி, நதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள்.
சூரியன் மும்மூர்த்திகளின் அம்சமாக விளங்கு கிறார். பிருகுமுனிவர், வால்மீகி, அகத்தியர், வசிஷ்டர், கர்ணன், சுக்ரீவன் ஆகியோர் சூரிய தேவனின் அருளால் பிறந்தவர்கள் என்று ராமாயணமும், மகாபாரதமும் கூறுகின்றன.

நன்றி. ஓம் நமசிவாய

பெண் டாக்டருக்கு கிடைத்த பூசணிக்காய் பரிசு

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் ஜூலை 30 1996ல் பிறந்தார். தந்தை நாராயணசாமி  தாய் சந்திராம்மாள். நான்கு வயதில் திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.  நன்றாகப் படித்ததால் உயர் நிலையில் படிப்பைத் தொடர்ந்தார். அவருடன் மெட்ரிகுலேஷன் தேர்வை 100 பேர் எழுதினார். இதில் பத்து பேரே தேர்ச்சி பெற்றனர். அதில் முதன்மை மதிப்பெண் பெற்றார் முத்துலட்சுமி.

சென்னை மருத்துவ கல்லூரியில் 20 வயதில் சேர்ந்தார். மருத்துவப்படிப்பை 1912ல் முடித்தார். அறுவை சிகிச்சை மருத்துவ தேர்வில் மூழ்மையான மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.  மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார். அவரது ஆற்றலை அறிந்த அரசு பெண்கள் சிகிச்சையில் சிறப்பு பயிர்சி பெற ஐரோப்பிய நாடான இங்கிலாந்துக்கு அனுப்பியது. அங்கு 11 மாதம் பயிற்சி பெற்றார். பின் இந்தியா திரும்பி மருத்துவ சேவைகள் செய்தார்.

சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தெடுக்கப்பட்டார்  சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழக பெண் என்ற பெருமையும் பெற்றார். சட்ட சபையில் துணைத் தலைவரானார். இந்தப் பதவி வகித்த ஐந்து ஆண்டுகளில் புரட்சிகரமான சட்டங்களாய் நிறைவேற்றினார். அவற்றில் தேவதாசி முறை ஒழிப்பு இருதார தடைச் சட்டம் பால்ய விவாக தடை சட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஆதவற்ற குழந்தைகளை வளர்த்து நல்ல எதிர்காலத்தை உருவாக்க நினைத்தார். இதற்காக சென்னை அடையாறில் அவ்வை இல்லத்தை உருவாக்கினார். இதை நிர்வகிக்க ஏராளமான பௌர்ள் உதவி தேவைப்பட்டது.  கருணை உள்ளம் கொண்ட சிலர் வேண்டிய உதவிகளை செய்தனர். ஒரு முறை அவ்வை இல்ல செலவுக்கு நிதி கேட்டு ஒரு பணக்காரார் வீட்டுக்கு சென்றார் முத்துலட்சுமி. அந்த வீட்டு வாசலில் ஒரு பூசணிக்காய் இருந்தது.  நிதி கேட்டு வந்தது கண்டு எரிச்சல் அடைந்த பணக்காரர் என்னிடம் பணம் இல்லை  வேண்டுமென்றால் இந்தப் பூசணிக்காயை கொண்டு போங்க…………என அலட்சியமாக உருட்டிவிட்டார்.  முத்து லட்சுமி வருந்தவில்லை.  புன்சிரிப்புடன் அந்தப் பூசணிக்காயை எடுத்து தலையில் வைத்தபடி ரொம்ப சந்தோஷம் இதையாவது கொடுத்தீங்களே  எங்கள் இல்ல குழந்தைகளுக்கு சாம்பார் வைக்க உதவும். அவங்க வயிறும் நிரம்புவதால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்…. என்றார்.

இது போல் தளராத மனமும் சேர்வற்ற உழைப்பும் ஒருங்கே பெற்றவர்.  முத்துலட்சுமியின் தங்கை புற்று நோயால் பாதிக்கப்பட்டார். தகுந்த சிகிச்சை கிடைக்காததால் இளம் வயதிலேயே இறந்தார்  இந்த கதி மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்ற நோக்கில் சென்னை அடையாறில் புற்று நோய் மருத்துவமனையை 1952ல் துவங்கினார். இன்ரு புற்று நோயாளிகளுக்கு மாபெரும் புகலிடமாக அது விளங்குகிறது.  அவரது சேவைகளை பாராட்டி பத்மபூஷன் விருது கொடுத்து கவுரவித்துள்ளது மத்திய அரசு.  பல சாதனைகளை நிகழ்த்திய முத்துலட்சுமி ஜூலை 22 1968ல் 82ம் வயதில் மறைந்தார்.  உலகில் அவர் புகழ் என்றும் நிலைத்துள்ளது.

தகவல் நன்றி   சிறுவர் மலர்.