வாலீஸ்வரர்

திரேதாயுகத்தில் இந்திரனின் மகனாகத் தோன்றியவன் வாலி. அவன் மிகச் சிறந்த சிவபக்தன். நாளெல்லாம் நாதன் நமசிவாயனை பூஜிப்பதையே தன் பிறவிக் கடனாகக் கருதி, உதயகாலம் முதல் சந்தியாகாலம் வரை கடல் நீராடி, சிவ பெருமானை வழிபடுவது வாலியின் வழக்கம். ஒருமுறை, சிவ பூஜையில் திளைத்திருந்த போது, தன்னைப் பின்புறம் இருந்து தாக்க வந்த ராவணனைத் தன் விரல் இடுக்கில் பற்றிக்கொண்டு, (வாலில் சுற்றிக் கொண்டு என்றும் சொல்வதுண்டு) ராவணன் அலறித் துடிக்கும்படியாக எட்டு திசைகளையும் சுற்றி வந்து, ராவணன் மன்னிப்பு கேட்ட பிறகே, அவனை விடுவித்தான். அந்த அளவுக்கு வலிமை கொண்டிருந்தவன் வாலி.

வாலியின் சிவபக்தியைப் போற்றும் வகையில், அவனுக்கும் அவனைக் காரணமாகக் கொண்டு உலக மக்களாகிய நமக்கும் அருள்புரியும்பொருட்டு சிவ பெருமான் ஓர் அருளாடல் புரிந்தார். அந்த அருளாடல் நிகழ்ந்த திருத்தலம்தான், இதோ நாம் இப்போது தரிசித்துக் கொண்டிருக்கிறோமே, இந்த எச்சூர் திருத்தலம். ஆதியில், இந்த ஊருக்கு லக்ஷ்மிநிவாசபுரம் என்று பெயர்!

ஒருநாள், வழக்கம்போல் காலையில் கிழக்குக் கடலில் நீராடி சிவபெருமானை வழிபட்ட வாலி, மாலையில் மேற்குக் கடலில் நீராடி சிவபூஜை செய்வதற்காக வான் வழியே இந்த இடத்துக்கு மேலாக வந்த போது, அவன் பயணம் தடைப்பட்டது. தாம் அங்கே சுயம்புவாக பூமியில் புதைந்து இருப்பதாகவும், தம்மைக் கண்டெடுத்து வழிபடும்படியாகவும், அசரீரியாக ஈசனின் குரல் ஒலித்தது. அதன்படி, வாலி பூமியில் புதையுண்டிருந்த சிவலிங்கத்தை எடுத்து, முறைப்படி ஓர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். வாலி வழிபட்டதால் இந்த ஈசன் வாலீஸ்வரர் என்று திருப்பெயர் கொண்டார். பச்சை நிறக் கல்லால் ஆன அம்பிகையின் திருநாமம் – ஸ்ரீஅபீதகுசாம்பாள்.

 இங்கு வந்து ஸ்ரீவாலீஸ்வரரை வழிபட, வாழ்க்கையில் எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்றும், வழக்குகளில் வெற்றியே கிடைக்கும் என்றும் ஊர்மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.  

திருக்கோலக்கா

தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றானதும், சிவபெருமான் திருஞானசம்பந்தருக்கு பொற்றாளம் (பொன் தாளம்) கொடுத்த தலமான திருக்கோலக்கா

திருத்தாளமுடையார் என்ற தாளபுரீஸ்வரர் (சப்தபுரீஸ்வரர்) ஓசை_கொடுத்தநாயகி திருக்கோயில் வரலாறு:

திருக்கோலக்கா – சப்தபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். 

இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 15வது தலம் ஆகும்.கைகொட்டிப் பாடிய ஞானசம்பந்தருக்கு இறைவன், திருவைந்தெழுத்து பொறித்த தாளத்தையருள, அதற்குத் தெய்வீக ஓசையை இறைவி தந்து அருள் செய்த தலம். இதன்பொருட்டே இக்கோயில் “திருத்தாளமுடையார் கோயில் ” என்றழைக்கப்படுகிறது.

தீர்த்தம்: ஆனந்த தீர்த்தம், சூரிய புஷ்கரணி தல விருட்சம்: சரக்கொன்றை 

வழிபட்டோர்: சம்பந்தர், சுந்தரர், அப்பர் , நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், அகத்தியர், கண்வர் முதலியோர்.

பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், சுந்தரர்தேவாரப்பதிகம்:

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை என்மனக் கருத்தை ஆளும் பூதங்கள் பாடநின் றாடும் அங்கணன் தனை எண்கணம் இறைஞ்சும் கோளிலிப் பெருங்கோயில் உள்ளானைக் கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

-சுந்தரர்தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 15வது தலம்.

தல வரலாறு:

சீர்காழியில் பிறந்து வளர்ந்த திருஞானசம்பந்தர் திருக்கோலக்கா அல்லது திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கும் இத்தலத்தில் இருந்து தான் தன்னுடைய சிவஸ்தல யாத்திரையைத் தொடங்கினார்.சீர்காழியில் ஞானப்பாலுண்டு பதிகம் பாடத் தொடங்கிய சுமார் மூன்று வயதுடைய சம்பந்தர் தனது முதல் தல யாத்திரையாக சென்றது இத்தலத்திற்குத் தான். தனது சின்னஞ்சிறு கைகளால் தட்டி தாளம் போட்டுக்கொண்டு இத்தலத்தில் இறைவனைத் துதித்து பதிகம் பாடினார்.சம்பந்தருக்கு இறைவன் பொற்தாளம் கொடுத்து அருளிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). கைகள் வலிக்குமே என்று சம்பந்தருக்காக இரக்கப்பட்ட இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் கொடுத்து அருளினார்.

இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். ஆதலின் இத்தலத்து அம்பிகைக்கு ஓசை கொடுத்த நாயகி என்று பெயர். சம்பந்தருக்கு பொற்றாளம் தந்த இறைவனை சுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

“நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்

ஞான சமந்த னுக்குல கவர்முன்

தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும்

நன்மை  யாளனை என்மனக் கருத்தை

ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்

அங்க  ணன்றனை எண்கணம் இறைஞ்சும்

கோளி லிப்பெரும் கோயிலுள் ளானைக்

கோலக் காவினிற் கண்டு கொண்டேனே”

இசைக்கலையில் விருப்பமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால் இசையில் வல்லவராகலாம். கோயிலின் நுழைவு வாயிலிலேயே ஞானசம்பந்தருக்கு தாளம் கொடுக்கும் ஈசனும், ஓசை கொடுக்கும் நாயகியும் அருள்பாலிக்கிறார்கள். இந்திரனும் சூரியனும் இத்தலம் வந்து பூஜை செய்து பலனடைந்துள்ளனர்.

வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து ஆனந்த தீர்த்தத்தில் நீராடி, ஓசை நாயகியிடம், “”ஜடப்பொருளான தாளத்திற்கு ஓசை கொடுத்த நாயகியே, பேசும் சக்தியைக்கொடு,’ என வேண்டி, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும். 

மகாலட்சுமி தவம் இருந்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்த தலம் என்பதால், திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் பெண்கள் இங்குள்ள மகாலட்சுமிக்கு, தொடர்ந்து 6 வாரம் மஞ்சள் பொடியால் அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

தல சிறப்புகள்:

ஞானசம்பந்தரின் யாத்திரையில் இதுவே முதல் தலம்.

 பிற்காலத்தில் இப்பகுதியில் தன் ஊமை மகன் பேசும் ஆற்றலைப் பெறவேண்டும் என்று, பிரார்த்தித்துக் கொண்ட தாய் ஒருத்தி, அவ்வாறே இறையருளால் தன் மகன் பேசும் வல்லமை வெற, மகிழ்ந்து, கோயிலுக்குத் தன் காணிக்கையாகச் செய்து தந்துள்ள “பொற்றாளம்” கோயிலில் உள்ளது.சீர்காழியில் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறும்போது இங்குத் தாளம் வழங்கும் ஐதீகவிழா நடைபெறுகிறது.

தலபெருமை:

இசைக்கலையில் விருப்பமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால் இசையில் வல்லவராகலாம். கோயிலின் நுழைவு வாயிலிலேயே ஞானசம்பந்தருக்கு தாளம் கொடுக்கும் ஈசனும், ஓசை கொடுக்கும் நாயகியும் அருள்பாலிக்கிறார்கள். இந்திரனும் சூரியனும் இத்தலம் வந்து பூஜை செய்து பலனடைந்துள்ளனர். இங்குள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லா செல்வங்களும் அருளக்கூடியவள்.திருமகள் தவம் செய்து திருமாலுடன் இணைந்த தலம் என்பதால் இத்தலம் திருக்கோலக்கா எனப்பட்டது. ஓசை நாயகியின் சன்னதியில் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள், இன்னிசை நிகழ்த்துபவர்கள் மாபெரும் புகழை அடைவார்கள் என்பது கண்கூடான உண்மை. தற்போது திருத்தாளமுடையார் கோவில் என அழைக்கப்படுகிறது.

கோயில் அமைப்பு:

மக்கள் வழக்கில் தாளமுடையார் கோவில் என்று அறியப்படும் கிழக்கு நோக்கி உள்ள இவ்வாலயத்திறகு கோபுரம் இல்லை. முகப்பு வாயிலுக்கு எதிரே திருக்குளம் ஆனந்ததீர்த்தம் உள்ளது.சோழர் காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலை, பின்னர் நகரத்தாரால் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டது. இத்திருக்கோயில் 230 அடி நீளமும் 155 அடி அகலமும் கொண்டது. மூலவருக்கும் அம்பாளுக்கும் தனித் தனியே கோயில்கள் உள்ளன. அம்பாள் ஓசை நாயகி சுமார் நான்கு அடி உயரத்தில் நின்ற கோலத்தில் திருக் காட்சி தருகிறார். இவற்றுடன் பெரிய பிள்ளையார், மகாலட்சுமி, வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, சூரிய சந்திரர்கள் போன்ற உப தெய்வங்களுக்கும் உள்ளனர். மேலும் சனி பகவானுக்கு தனிக் கோயில் உள்ளது. பஞ்சலிங்கங்களும் உண்டு. இக்கோயிலின் திருக்குளமானது சூரிய பகவானால் உண்டாக்கப்பட்டதாக நம்பிக்கை நிலவுகிறது. கோயிலின் தென்கிழக்கில் தல விருட்சமான கொன்றை மரம் ஒரே வேரில் மூன்று மரமாக வளர்ந்துள்ளது.

முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுதையில் ரிஷபாரூடர் தரிசனம் தருகிளார். கிழக்கு நோக்கி இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. முதல் நுழைவு வாயிலைக் கடந்தவுடன் திறந்த வெளிமுற்றம் உள்ளது.இரண்டாவது நுழைவு வாயில் வழியாக உட்புகுந்தவுடன் நேர் எதிரே பலிபீடம், நந்தி இவற்றைக் கடந்தால் இறைவன் சந்நிதி உள்ளது. உள்ளே சம்பந்தருக்கு பொற்தாளம் கொடுத்த இறைவன் தாளபுரீஸ்வரர் லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார்.இந்திரன் மற்றும் சூரியன் இத்தலத்தில் இறைவன் சப்தபுரீஸ்வரரை வணங்கி வழிபட்டுள்ளனர்.

மேலும் சனி பகவானுக்கு தனிக் கோயில் உள்ளது. பஞ்சலிங்கங்களும் உண்டு. இக்கோயிலின் திருக்குளமானது சூரிய பகவானால் உண்டாக்கப்பட்டதாக நம்பிக்கை நிலவுகிறது.கோயிலின் தென்கிழக்கில் தல விருட்சமான கொன்றை மரம் ஒரே வேரில் மூன்று மரமாக வளர்ந்துள்ளது.

கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைப் பிரகாரத்தின் மேற்குச் சுற்றில் கிழக்கு நோக்கிய வள்ளி தேவசேனாவுடன் இருக்கும் முருகர் சந்நிதி இருக்கிறது. மேற்குச் சுற்றில் முருகர் சந்நிதியை அடுத்து மகாலட்சுமி சந்நிதி உள்ளது. இத்தலத்தில் உள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள்.மகாலட்சுமி இங்கு சிவபெருமானை தவம் செய்து அதன் பயனாக மகாவிஷ்னுவை திருமணம் செய்து கொண்டாள்.திருமகள் திருமணம் செய்து கொண்ட தலம் ஆதலால் திருகோலக்கா என்று இத்தலம் பெயர் பெற்றது.திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் இங்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்தால் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்பது ஐதீகம்.

திருவிழா:

சித்திரை திருவாதிரையில் சீர்காழி சட்டை நாதர் கோயிலில் திருவிழா கொண்டாடப்படும். இரண்டாம் நாளன்று பால் உற்சவம் நடக்கும். அதன்பின் திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளுவார். அன்று இரவு சிவபெருமான் சம்பந்தருக்கு பொன்தாளம் தருவார். மறுநாள் காலை பூப்பல்லக்கில் சம்பந்தர் திரும்புவது இங்கு நடக்கும் சம்பிரதாய திருவிழா. கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக் கிழமை தோறும் தீர்த்தவாரி நடக்கிறது.

பிரார்த்தனை:

வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து ஆனந்த தீர்த்தத்தில் நீராடி, ஓசை நாயகியிடம், “”ஜடப்பொருளான தாளத்திற்கு ஓசை கொடுத்த நாயகியே, பேசும் சக்தியைக்கொடு,’ என வேண்டி, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும். மகாலட்சுமி தவம் இருந்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்த தலம் என்பதால், திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் பெண்கள் இங்குள்ள மகாலட்சுமிக்கு, தொடர்ந்து 6 வாரம் மஞ்சள் பொடியால் அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

பேசும் சக்தி வந்தவுடன் தங்கத்தாலான தாளத்தை வாங்கி காணிக்கை செலுத்துகிறார்கள்.அமைவிடம் :மாநிலம் : தமிழ் நாடு சீர்காழிக்குப் பக்கத்தில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். 

திருச்சிற்றம்பலம்

பாவங்களை போக்கும் பாபஹரேஸ்வரர்

மிக கம்பீரமான கோபுரங்களுடன் தோற்றமளிக்கிறது கோயில். பெரிய உருவம் கொண்ட பாபஹரேஸ்வரருக்கு  அருகே, சிறிய அளவிலான சிவலிங்கம் ஒன்றும் இருக்கிறது.  இந்த சிறிய சிவலிங்கத்தை பற்றி பின்வருபவையில் காண்போம். 

   கோவிந்தபட்டரும் சிவலிங்கமும்: 

   இந்த கோயில், மகான் ராமானுஜர் காலத்தில் கட்டப்பட்டதாகும். ராமானுஜரின் பெரியம்மா மகன் கோவிந்தபட்டர். இவர் வைணவராக இருந்தாலும், இஷ்ட தெய்வமான சிவனின் மீது அதிதீவிர பக்தி கொண்டார்.இதன் காரணமாக, சிவபூஜை செய்தும், ஒவ்வொரு சிவஸ்தலங்களுக்கு சென்றும் வழிபாடு செய்துவந்துள்ளார்.இப்படி ஒருமுறை காசிக்கு சென்றார் கோவிந்தபட்டர். அங்குள்ள கங்கை நதியில் நீராடினார். நீராடி எழுந்தவுடன் அவரின் உள்ளங்கையில் ஒட்டியவாறு சிறியளவிலான சிவலிங்கம் ஒன்று இருந்தது. இதனை கண்டு ஆச்சரியப்பட்ட கோவிந்தபட்டர், 

உள்ளங்கையில் ஒட்டியிருந்த சிவலிங்கத்தை பலமுறை உதறினார். ஆனால், சிவலிங்கம் அவரின் கையைவிட்டு விலகவில்லை. இதனாலேயே “உள்ளங்கை லிங்கம் கொணர்ந்த நாயனார்’’ என்கின்ற பெயரும் கோவிந்தபட்டருக்கு உண்டு. சிவலிங்கத்தை சிறிது காலம் பூஜை செய்துவந்தார் கோவிந்த பட்டர். அதன் பின், கூடுதலாக வைணவ நிர்வாக பொறுப்புகளை கோவிந்தபட்டருக்கு, ராமானுஜர் வழங்க, அவர் வைத்திருந்த சிவலிங்கத்தை சரிவர பூஜிக்க முடியாமல் போகிறது.ன்னன் கட்டித்தேவன் யாதவராயன்: ஆதலால், `கட்டித்தேவன் யாதவராயன்’ என்னும் சோழ மன்னனை தொடர்புக்கொண்டு விவரங்களை மன்னனிடம் தெரிவித்து, தான் வைத்திருந்த சிறிய அளவிலான சிவலிங்கத்தை வழங்கி, கோயில் ஒன்றை கட்ட வேண்டினார். அதன் படி மன்னன், கோவிந்தபட்டர் வழங்கிய சிறிய சிவலிங்கத்தோடு ஒரு பெரிய சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்கிறார். இதுவே இக்கோயில் உருவான காரணமாகும். சுமார் 1000 ஆண்டுகளாக சிதிலமடைந்துள்ள இந்த ஆலயத்தின் மூலவர், அருள் மிகு பாபஹரேஸ்வரர். இவரை ஒரு முறை தரிசித்தாலே நம் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்பது ஐதீகம். 

மேலும், இங்கு விசேஷமாக கோயிலின் உள்ளே அஷ்ட கைகளை (எட்டு) கொண்ட பைரவர் இருக்கிறார். மரகதவல்லி என்னும் தாயார் சந்நதி உள்ளது. வெளிப்பிரகாரத்தில் விநாயகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, மஹாவிஷ்ணு, பால முருகன், என தனித்தனியே சந்நதிகள் உள்ளன. இவ்வாலயத்தின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது.பக்தர்களுக்கு அருளிய பாபஹரேஸ்வரர்:  மீள முடியாத கடன் பிரச்னைகளில் இருப்பவர்கள்  பாபஹரேஸ்வரரை அனுதினமும் தரிசித்து தனது துயரங்களை நீக்க வேண்டினால். சிறிது நாட்களிலே  வேண்டுதலின் படி கடன் பிரச்னை தீர்த்து, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்.

அதே போல், திருமணமாகாத பலரும் பாபஹரேஸ்வரரை வேண்டிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு மிக விரைவாகவே திருமணம் கைகூடி, திருமணம் நடைபெறுகிறது. திருமணம் நடந்த பின்னர் திருமணக்கோலத்துலேயே வந்து பாபஹரேஸ்வரரை தரிசித்து செல்கிறார்கள்.விசேஷ பூஜைகள்: சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. முதல்காலமாக காலை 6.00 மணி முதல் 9.00 மணிவரை பஞ்சகவ்ய அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகமானது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அபிஷேகம் முடிந்த பின், பாபஹரேஸ்வர ருக்கு வெண்பொங்கல் நைவேத்தியம் செய்யப் படுகிறது. இரண்டாம் காலமாக காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்யப்படுகிறது. அடுத்ததாக மூன்றாம் காலத்தில், பிற்பகல் 12.00 மணி முதல் 3.00 மணி வரை, 108 முறை சங்கினால் தேனாபிஷேகம் செய்யப்படுகிறது. கடைசியாக, நான்காம் காலத்தில் பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கருப்பஞ்சாறு அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்பொழுது நைவேத்தியமாக சக்கரைப்பொங்கல் செய்யப்படுகிறது. 

அதே போல், கார்த்திகை சோமவாரம்(திங்கள்கிழமை) இக்கோயிலில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், கார்த்திகை தீபம், ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம், ஐப்பசி பவுர்ணமி போன்ற விசேஷ தினங்களில் சிறப்பு பூஜைகளும், அலங்காரங்களும் நடைபெறுகின்றன.சென்னையில் இருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள “அருள் மிகு மரகதவல்லி சமேத பாபஹரேஸ்வரர்’’ சுவாமி திருக்கோயிலாகும். இக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், வடதில்லை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.

ஓம் சிவாய‌ நம

திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம்

யானை ஏற முடியாதபடி, 70 சிவன் கோவில்கள் கட்டிய சோழன்…!..

jambukeswarar temple thiruvanaikaval history in tamil

திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும், நான்கு திசைகளில் கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களையும் கொண்டது.திருவானைக்கா எனப்படும், திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும்சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர்.இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான #நீருக்கு உரியது. காவேரி வடகரை சிவத்தலங்களில் இது அறுபதாவதாக அமைந்துள்ளது. 

முன்னொரு காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது.சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.

சிவ பக்தர்களாக யானையும் சிலந்தியும் சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது.யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும்.

சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன.இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான்.அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.

திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும். வடமொழியில் அப்பு என்பதன் பொருள் நீர். மூலவரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.கடும் கோடை காலத்திலும், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம், நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது.அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி என்னும் அகிலம் ஆண்ட நாயகி காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார்.  

வாழ்க வையகம்   வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 

வைகுண்டநாதர் கோவில்

தன் பக்தனது ஆயுளை நீட்டித்தால் மட்டுமே தான் எழுந்திருப்பதாககூறிய மகாவிஷ்ணு 108 திவ்ய தேசங்களுள் ..!!56 வது திவ்ய தேசம்   *வைகுண்டநாதர் கோவில்* : 1000-2000 வருடங்களுக்கு முன் திறக்கப்பட்டது 

ஒருமுறை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியர்களும் ஒன்றாக பூலோகத்திற்கு வந்து தவம் செய்தனர். அவர்களது தவத்திற்கு அத்திரி, பிருகு, காசிபன், கவுண்டில்யன், திரியோரிஷேயன், பரத்வாஜர் ஆகிய ரிஷிகள் உதவி செய்தனர். மூன்று தேவியர்களையும் தேவலோகத்திற்கு அழைத்துச் செல்ல சிவன், மகாவிஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் பூலோகம் வந்தனர். ரிஷிகளின் தவ வலிமையால் தேவியர்களை நெருங்க முடியாத மூவரும், ஒரு கந்தர்வ கன்னியை அனுப்பினர்.

அவளை கண்ட பரத்வாஜர் காமுற, ஒரு குழந்தை பிறந்தது. வேடுவ வடிவமெடுத்த மகாவிஷ்ணு, அக்குழந்தைக்கு “பரமேச்சுரவர்மன்’ என பெயரிட்டு வளர்த்தார். பிறப்பிலேயே திருமால் பக்தனாக இருந்த பரமேச்சுரனுக்கு ஆய கலைகளையும் கற்றுக்கொடுத்தார். கலைகள் அனைத்தையும் கற்று முடிப்பதற்குள் அவனுக்கு இறுதி காலமும் நெருங்கிவிட்டது.அவனது ஆயுளை அதிகரிக்க விரும்பிய விஷ்ணு ஒரு சூசகம் செய்தார்.

எமன் வரும் நேரம் பார்த்து வடக்கு பக்கம் தலைவைத்து படுத்துக் கொண்டார். பொதுவாக வடக்கே தலைவைத்து படுத்தால் ஆயுள் குறையும் என்று சொல்வர்.மனிதர்களுக்கே இந்த விதி இருக்கும்போது உலகை காக்கும் விஷ்ணு இவ்வாறு படுத்திருக்கிறார் என்றால் என்ன ஆகும்?. அவரது நிலையைக் கண்ட எமன் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என எண்ணி அவரருகே வந்து எழுந்திருக்கும்படி வேண்டினான்.அவரோ மறுத்தார். காரணம் புரியாமல் அவன் விழித்தபோது, தன் பக்தனது ஆயுளை நீட்டித்தால், தான் எழுந்திருப்பதாககூறினார். பக்தனுக்கு இரங்கும் விஷ்ணுவின் கோரிக்கையை ஏற்ற எமன், பரமேச்சுரனின் உயிரை எடுக்காமல் தீர்க்காயுள் கொடுத்து சென்றுவிட்டான்.

கார்த்திகையில் கண் திறக்கும் ஸ்ரீ நரசிம்ம பெருமாள்

ஒரு நாழிகை இந்தத் திருத்தலத்தில் நாம் தங்கி இருந்தாலே இத்தலம்  நமக்கு முக்தியை அளிக்க வல்லது.ஆழ்வார்கள் பாடிய நூற்றிஎட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளசிம்மபுரம் எனப்படும் சோளிங்கர்திருக்கடிகை என்ற திருப்பெயரில் இவ்வூரை ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள். கடிகை என்பது ஒரு நாழிகைப் பொழுதைக் குறிக்கும். ஒரு நாழிகை இந்தத் திருத்தலத்தில் தங்கி இருந்தாலே, இத்தலம் முக்தியை அளிக்க வல்லது. அதனால் தான் திருக்கடிகை என்று இதனை ஆழ்வார்கள் அழைத்துள்ளார்கள்

நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்பிய சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்கள், சோளிங்கர் மலைக்கு மேல் நரசிம்மர் யோக நிலையில் தவம் புரிவதை அறிந்து கொண்டார்கள். 750 அடி உயரம் கொண்ட அந்த மலைக்கு மேல் சென்ற முனிவர்கள், யோகத்தில் இருக்கும் நரசிம்மர் தங்கள் முன்னே வந்து காட்சி அளிக்கவேண்டும் என்று வேண்டி ஒரு நாழிகை தவம் புரிந்தார்கள். ஒரு நாழிகை என்பது இருபத்து நான்கு நிமிடங்கள் ஆகும். 

அந்த இருபத்து நான்கே நிமிடங்கள் செய்த தவத்துக்காக விரைவில் மனம் உகந்து, யோக நரசிம்மப்பெருமாள் அவர்களுக்குக் காட்சி அளித்தார். அந்த யோக நரசிம்மரை அங்கேயே அவர்கள் பிரதிஷ்டை செய்தார்கள்.மேலும், வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்க விழைந்த விசுவாமித்திரர், இந்த சோளிங்கர் மலைக்கு மேல் இருப்பத்து நான்கு நிமிடங்கள் தவம் புரியவே, வசிஷ்டர் அவரைத்தேடி வந்து பிரம்மரிஷி பட்டத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார் என்றும் இவ்வூரின் தலவரலாறு சொல்கிறது.

மலைக்கு மேல் அம்ருதவல்லித் தாயாரோடு யோக நரசிம்மராகத் திகழும் திருமால், அந்த மலையின் அடிவாரத்தில் பக்தவத்சலப் பெருமாளாகக் காட்சி அளிக்கிறார். மேலும் திருக்கடிகை மலைக்கு அருகிலேயே 350-அடி உயரத்தில் சிறிய மலை ஒன்று உள்ளது. அந்த மலையிலே யோக ஆஞ்சநேயர் யோகம் செய்யும் நிலையில் எழுந்தருளியிருந்து அருள்பாலிக்கிறார்

திருக்கடிகை யோக நரசிம்மப் பெருமாளை அக்காரக்கனி என்று ஆழ்வார்கள் அழைக்கிறார்கள்

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்

புக்கானைப் புகழ்சேர்ப் பொலிகின்ற பொன்மலையைத்

தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த

அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே

என்று பாடினார் திருமங்கை ஆழ்வார்

யோகத்தில் கண்மூடி இருக்கும் நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண்திறந்து பார்த்து அடியார்களுக்கு அருள்புரிவதாக ஐதிகம் உள்ளது. குறிப்பாக, கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தப் பெருமாளைத் தரிசிப்பது மிகவும் விசேஷமாகும். இறைவனின் திருமேனி அவயவங்களுக்குள் ஒரு போட்டி வந்ததாம். அவரது திருவடி, என்னிடம் தான் பக்தர்கள் சரணாகதி செய்கிறார்கள், நான்தான் பெரியவன் என்றதாம். 

திருக்கரம், நான்தான் சரண் அடைபவர்களுக்கு அபயம் அளிக்கிறேன், நானே பெரியவன் என்றதாம். இதுபோல் ஒவ்வொரு அவயவமும் போட்டி போட்ட நிலையில், திருமால் தீர்ப்பு தந்தாராம், என் கண்கள் கடாட்சம் புரிவதால் தான் பக்தன் வந்து சரணாகதியே செய்கிறான், எனவே கண்ணே மற்ற அவயவங்களை விட உயர்ந்தது என்று.திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் என்று ஆண்டாள் பாடியபடி நரசிம்மப் பெருமாளின் திருக்கண் நோக்குக்கு இலக்காகும் பேற்றினை இந்த ஆண்டு நாமும் பெறுவோமாக.ஸ்ரீ அமிர்தவல்லி சமேத ஸ்ரீ யோக நரசிம்மர் ஸ்வாமி திருவடிகளே சரணம்.