மானிட பிறவியின் அர்த்தம்

ஒரு கால் இல்லாத இளைஞன் பிரபு . அம்மாவுடன் வசித்து வந்தான்.கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை எப்பொழுதும் வாட்டும்.

ஒரு சமயம், பிரபு, தன் அம்மாவோடு பேருந்தில் போகும்போது பெண்கள் அமரும்  சீட்டில் உட்கார்ந்திருந்தான்  ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டினாள் அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் ‘மன்னிப்பு  கேட்டாள்.அது பிரபுக்குப் பெரிய துயரத்தைத் தந்தது ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடந்தான் ரயில் வருகிற நேரம்…ஒரு ‘குஷ்டரோகி’ பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விட்டான்  அந்த குஷ்டரோகி பிரபுவிடம் சொன்னான், “நான் ஒரு குஷ்டரோகி… எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா… இப்படிதான் ஒரு வாரத்துக்கு முன்னாடிகூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் நான் காப்பாத்தினேன்…

அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு எனக்கு நன்றி கூட  சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க… ஏனா நான் அவ்வளவு அருவருப்பா இருக்கேன்.  அப்படிப்பட்ட நானே உயிரோட இருக்கும் போது… உனக்கெல்லாம் என்னப்பா தம்பி? இந்த கால் ஊனம் என்ன பெரிய குறையா?…’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான்.தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு துவங்குகிறான் ஊனமுற்ற பிரபு காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பதை நினைத்து நம் மகன் பிரபுதான் செத்துப்போய் விட்டான் என பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா.

“அம்மா… நான் இருக்கிறேன் அம்மா…” என பிரபு  கத்திக்கொண்டே வருகிறான். ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடந்தான்.முந்தைய இரவு அந்த குஷ்டரோகி தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் “இப்படிப்பட்ட ஊனமானவனே  இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக்கிறான்…  நாம ஏன்  இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே…

” என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான் போல…செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான்,

***அம்மா…! அந்த குஷ்டரோகி எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்…****நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேனே …!”* என கதறி அழுதான் பிரபு .**ஆகவே நாம், நம்மால் முடிந்த வரைக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்  கூறிய  கீதை உபதேசங்களை படித்து, உணர்ந்து, வாழ்ந்து, வாழ வைத்து,  நம்மிடையே வாழும் சக மனிதர்களுக்கும்  மதிப்பு கொடுத்து,  நம் மானிட பிறவியின் அர்த்தம் உணர்வதே நம் வாழ்க்கையின் லட்சியம்  !

ஆஞ்சநேயர் கதை

ஹனுமானுக்கும் ராமருக்கும் நடந்த போட்டியில் வென்றது யார்?  !நாரதர் கலகம்

ஒரு முறை ஹனுமான் தன் அன்னை அஞ்சனா தேவியை தரிசிக்க ஆவலுற்று ராமரிடம் அனுமதி பெற்றுக் கிளம்பினார். அதே தருணத்தில் காசி மஹாராஜன் ராமரின் தரிசனத்திற்காகக் கிளம்பினான். வழியில் நாரதர் காசிராஜனைப் பார்த்து,” நீ எங்கே போகிறாய்?” என்று கேட்டார்.” நான் ராமசந்திர மஹாபிரபுவைத் தரிசிக்கச் சென்று கொண்டிருக்கிறேன்” என்றான் காசிராஜன். “எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டுமே!”என்றார் நாரதர்.

“தங்கள் கட்டளை என் பாக்கியம்” என்றான் காசி ராஜன்.அங்கு அரச சபையில் எல்லோருக்கும் வந்தனம் செய். ஆனால் அங்கு இருக்கும் விஸ்வாமித்திரருக்கு மட்டும் வந்தனம் செய்யாதே. அவரைக் கண்டு கொள்ளாதே!” என்றார் கலக நாரதர். காசிராஜனுக்குத் தூக்கி வாரிப் போட்ட்து. மஹாமுனிவரான விஸ்வாமித்திரரை நமஸ்கரிக்கக் கூடாதா! ஐயோ! இது என்ன கோரம்!! விக்கித்து நின்ற அவன் நாரதரை நோக்கி,”மஹரிஷி விஸ்வாமித்திரரை நமஸ்கரிக்கக் கூடாதா?ஏன், ஸ்வாமி” என்றான்.

 “ஏன் என்பது பின்னால் தெரியும். சொன்னதைச் செய்வாயா?” என்று கேட்டார் நாரதர். கலக்கமுற்ற காசிராஜன் இருதலைக் கொள்ளி எறும்பானான். நாரதரிடம் அவர் சொல்லியபடி செய்வதாக வாக்களித்து விட்டு, ராமரது அரச சபைக்குச் சென்று ராமரை ஆனந்தக் கண்ணீர் வழியக் கண்டு ஆனந்தமுற்று வணங்கினான்.அங்குள்ள வசிஷ்டர் உள்ளிட்ட அனைவரையும் வணங்கி ஆசி பெற்றான். ஆனால் விஸ்வாமித்திரரை மட்டும் வணங்கவில்லை. சபையில் இந்த அவமரியாதையை நன்கு கவனித்த விஸ்வாமித்திரர் அங்கு சும்மா இருந்தார்.பின்னர் ராமரைத் தனியே சந்தித்தார். “ராமா! உன்னை எல்லோரும் “மர்யாதா புருஷோத்தமன்” என்கின்றனர். மஹரிஷிகளை வணங்கும் மாண்பு மிக்க உன் அரச சபையில் எனக்கு இன்று மரியாதை கிடைக்கவில்லையே!” என்று வருத்தமுற்றுக் கூறினார். துணுக்குற்ற ராமர்,” என்ன விஷயம்?” என்றார். இன்று அரச சபைக்கு வந்த காசிராஜன் என்னைத் தவிர அனைவரையும் வணங்கினான்! வேண்டுமென்றே என்னை அவமானம் செய்து விட்டான்! இது சரியா?” என்றார் விஸ்வாமித்திரர்.

 ராம பிரதிக்ஞை

“ராம ராஜ்யத்தில் பெரும் முனிவரான தங்களுக்கு ஒரு அவமானம் என்றால் அது அனைவருக்குமே அவமானம் தான்! உங்களை இப்படி அவமதித்த காசி ராஜனை என் மூன்று பாணங்களால் இன்று மாலைக்குள் கொல்கிறேன்” என்று வாக்களித்தான் ராமன். ராமரின் இந்த சபதம் காட்டுத்தீ போல எங்கும் பரவி காசிராஜனையும் அடைந்தது. அவன் ஐயோ என்று அலறியவாறே நாரதரை நோக்கி ஓடினான். ”நீங்களே எனக்கு அபயம்! உங்களால் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுவிட்டது!” என்று அலறினான். நாரதரோ புன்முறுவலுடன் கூறினார்:” பிரதிக்ஞையை நானும் கேட்டேன். மூன்று பாணங்கள் சும்மா விடுமா, என்ன? ஆனாலும் நீ பயப்படாதே! உடனடியாக அஞ்சனா தேவியிடம் சென்று அவரின் காலைக் கெட்டியாகப் பற்றிக் கொள்! அவர் உனக்கு அபயம் அளிப்பதாகச் சொன்னாலும் விடாதே! மூன்று முறை அபயம் அளிக்குமாறு கேள்! மூன்று முறை அவர் அப்படி உறுதி அளித்ததும் காலை விடு; கவலையையும் விடு” என்றார் நாரதர்.

 அஞ்சனாதேவியும் ஆஞ்சநேயனும்

 காசிராஜன் கணம் கூடத் தாமதிக்கவில்லை.உயிர் பிரச்சினை ஆயிற்றே. ஓடினான், அஞ்சனா தேவியின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உயிர்ப் பிச்சை தருமாறு வேண்டினான். “காலை விடு! குழந்தாய்! அபயம் கேட்டு வந்த உன் உயிருக்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். என்ன விஷயம்? ஏன் இப்படி பயப்படுகிறாய்?என்றார் அஞ்சனாதேவி.

“மூன்று முறை அபயம் அளித்து வாக்குறுதி தாருங்கள்.அப்போது தான் கால்களை விடுவேன்” என்றான் காசி ராஜன். அஞ்சனாதேவியும் மூன்று முறை வாக்குறுதி அளித்தார். காசிராஜன் நடந்த விஷயம் அனைத்தையும் சொன்னான். அஞ்சனாதேவிக்கு தூக்கிவாரிப் போட்டது. ராமரின் மூன்று பாணங்கள் இன்று மாலைக்குள் உன்னைத் தாக்குமா!அதிலிருந்து உன்னை யார் காப்பாற்றுவது?” என்றார் அஞ்சனா. ஆனால் தான் அளித்த வாக்குறுதியை நினைத்துப் பார்த்து ஒரு கணம் மயங்கி நின்றார். அப்போது உற்சாகத்துடன் அனுமார் உள்ளே நுழைந்து.” அம்மா! “ என்று கூவி அவர் கால்களில் பணிந்து வணங்கினார். அஞ்சனாதேவியின் திடுக்கிட்ட முகத்தைப் பார்த்த அனுமன், “என்ன விஷயம் தாயே ! நான் வந்ததில் கூட உற்சாகம் காண்பிக்கவில்லையே!” என்று வினவினான்.அஞ்சனா காசிராஜனுக்குத் தான் அளித்த வாக்குறுதியைக் கூறி ராமரின் பிரதிக்ஞையையும்கூறி ,” இப்போது என்ன செய்வது? மகனே! நீ தான் காசிராஜனைக் காப்பாற்ற வேண்டும்.உன் அன்பான அம்மாவின் வேண்டுகோள் இது” என்றார்.

 அனுமன் பதறிப் போனான். பிரபுவின் பாணங்கள் ஒன்றல்ல இரண்டல்ல மூன்றிலிருந்து யாரேனும் பிழைப்பார்களா, என்ன? “ஆனால், தாயே! இது வரை என்னிடம் நீங்கள் ஒன்று கூடக் கேட்டதில்லையே! முதல் முறையாக ஒன்றைக் கேட்கிறீர்கள்! அதைச் செய்யாமல் இருந்தால் நான் உண்மையான மகன் அல்லவே! வருவது வரட்டும்! காசிராஜன் உயிருக்கு நான் உத்தரவாதம். ராமரின் பாணங்களே வந்தாலும் சரி தான்!”, என்றான் உறுதியான குரலில் அனுமன். அஞ்சனாதேவியும் காசிராஜனும் மகிழ்ந்தனர். “அம்மா! விஷயம் கஷ்டமான ஒன்று! உடனே போக எனக்கு அனுமதி கொடுங்கள்!”” என்று கூறிய அனுமன், காசிராஜனை நோக்கி,”உடனே நீங்கள் சரயு நதி சென்று கழுத்து வரை ஜலத்தில் மூழ்கி ராம ராம என்று ஜபிக்க ஆரம்பியுங்கள்! இன்று மாலை வரை நமக்கு நேரம் இருக்கிறதே!” என்று கூறினான்.

 மூன்று பாணங்கள்! மூன்று நாமங்கள்!!

காசிராஜன் சரயு நதிக்கு ஓடோடிச் சென்று கழுத்து வரை ஜலத்தில் மூழ்கி பயபக்தியுடன் ராம நாமத்தை ஜபிக்கலானான் விஷயம் வெகு சீக்கிரம் பரவி மக்கள் கூட்டம் சரயு நதிக் கரையில் கூடியது. இங்கே அனுமன் ராமரிடம் திரும்பி வந்து அவர் சரண கமலங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.”ஸ்வாமி! எனக்கு ஒரு வரம் அருள வேண்டும்” என்று பிரார்த்தித்தான்.

“இது என்ன அதிசயம்! காலம் காலமாக நான் வரம் தருகிறேன் என்று சொல்வது வழக்கம்! நீ மறுப்பதும் வழக்கம். இன்று நீயே கேட்கிறாயே. வரத்தைத் தந்து விட்டேன். கேள் எது வேண்டுமானாலும்” என்றார் ராமர்.“ஸ்வாமி! தங்கள் நாமம் பாவனமானது. அதைச் சொல்லும் எந்த பக்தனுக்கும் எப்படிப்பட்ட தீங்கும் வராமல் நான் காக்க வேண்டும்.அதில் எப்போதும் வெற்றி பெற வேண்டும். இந்த வரத்தை அருளுங்கள்” என்றான் அனுமன். “வரம் தந்தோம். நீ ராம நாமத்தை ஜபிப்பவனை எப்போதும் காக்க முடியும்! இதில் தோல்வியே உனக்கு ஏற்படாது!”என்று வரத்தை ஈந்தார் ராமர்.ஒரே பாய்ச்சலில் அங்கிருந்து சரயுவுக்குத் தாவிய அனுமன் காசிராஜனிடம்,”விடாதே! தொடர்ந்து ராம நாமத்தை ஜபி! நான் உன் பக்கத்தில் இருக்கிறேன்!” என்றான்.விஷயம் விபரீதமானதை மக்கள் அனைவரும் உணர்ந்து விட்டனர்.சரயுவில் முழு ஜனத்திரளும் திரண்டு விட்டது. ராமர் காசிராஜன் சரயு நதியில் இருப்பதை அறிந்து கொண்டார். “எதுவானாலும் சரி! என் பிரதிக்ஞையை நிறைவேற்றுவேன்! இதோ, எனது முதல் பாணத்தைத் தொடுக்கிறேன்” என்று தன் முதல் அம்பை எடுத்து காசிராஜனை நோக்கி விட்டார். அம்பு காசிராஜனை நோக்கி வந்தது. ஆனால் காசிராஜன் ராம நாமம் ஜபிக்க அனுமான் அருகில் நிற்க செய்வதறியாது திகைத்த ராமபாணம் இருவரையும் வலம் வந்து வணங்கி ராமரிடமே திரும்பியது. திடுக்கிட்ட ராமர்,” என்ன ஆயிற்று?” என்று வினவினார். “ என்ன ஆயிற்றா! அங்கு காசிராஜன் உங்கள் நாமத்தை ஜபித்தவாறே இருக்க அனுமனோ அவன் அருகில் நிற்கிறார். இருவரையும் வலம் வந்து வணங்கி வந்து விட்டேன்” என்றது பாணம். ராமர் சினந்தார். தனது அடுத்த பாணத்தை எடுத்து ஏவினார். அது காசிராஜனை நோக்கி வந்தது. இப்போது அனுமன் காசிராஜனை நோக்கி, “ இதோ பார்! இப்போதிலிருந்து சீதாராம்! சீதாராம் என்று ஜபிக்க ஆரம்பி” என்றார். காசிராஜனும் சீதாராம் சீதாராம் என்று மனமுருகி ஜபிக்க ஆரம்பித்தான்.வேகமாக வந்த இரண்டாவது பாணம் மலைத்து நின்றது. அன்னையின் பெயரைக் கேட்டவுடன் காசிராஜனை வலம் வந்து வணங்கித் திரும்பியது. “ ஏன் திரும்பி வந்தாய்?”என்று கேட்ட ராமரிடம் அன்னையின் பெயரையும் தங்களின் பெயரையும் உச்சரிப்பவரை வணங்குவது அன்றி வதை செய்வது முடியுமா?” என்று பதில் சொன்னது பாணம். கோபமடைந்த ராமர், “நானே நேரில் வந்து காசிராஜனை வதம் செய்கிறேன்” என்று மூன்றாவது பாணத்துடன் சரயு நதிக்கு வந்தார்.

 ராமரே வேகமாக வரவிருப்பதை அறிந்த அனுமன் காசிராஜனை நோக்கி, “ ராமருக்கு ஜயம்! சீதைக்கு ஜயம்! ராம பக்த ஹனுமானுக்கு ஜயம்!” என்று ஜபிக்க ஆரம்பி என்றார். காசிராஜனும்,”ஜய ராம் ஜயஜய சீதா ஜயஜயஜய ஹனுமான்!” என்று ஜபிக்க ஆரம்பித்தான். ஆனால் களைத்திருந்த அவனது குரல் கம்மியது. உடனே அனுமன் தன் ஒரு அம்சத்தை அவன் குரலில் புகுத்தினார். இப்போது கம்பீரமாக அவன் குரல் ஒலித்தது. இதையெல்லாம் பார்த்த வசிஷ்டர் பெரும் கவலை அடைந்தார்.ஒரு புறம் ராமர், மறு புறம் அவரது பக்தனான அனுமன்! வேகமாக அனுமனிடம் வந்த அவர்,” ஹே! அனுமன்! ராமரின் பிரதிக்ஞையைப் பற்றி உன்னை விட வேறு யார் நன்கு அறிந்திருக்க முடியும். இந்த காசிராஜனை விட்டு விடு. ராம பாணத்தால் அவன் பெறப் போவது யாருக்கும் கிடைக்க முடியாத மோக்ஷமே!” என்று அறிவுரை பகர்ந்தார்.

 அனுமனின் விரதம்

அனுமனோ அவரை நோக்கி,” மா முனிவரே! நமஸ்காரம்! ராம நாமத்தை ஜபிப்பவனைக் காப்பது என் விரதம்! இதில் என் உயிர் போனால் தான் என்ன! காசிராஜனைக் காப்பது என் தர்மம்” என்றான். ராமர் பாணத்துடன் அருகில் வந்து கொண்டிருந்த அந்த சமயத்தில் விஸ்வாமித்திரர் நடக்கும் அனைத்து லீலையையும் பார்த்துக் கொண்டிருந்தார். வசிஷ்டர் காசிராஜனை நோக்கி, “மன்னா! இதோ இருக்கிறார் விஸ்வாமித்திரர். இவரை வணங்கு!” என்றார். காசிராஜன் ராமசீதா ஹனுமானுக்கு ஜயம் என்று கூறியவாறே விஸ்வாமித்திர்ரை அடிபணிந்து வணங்கினான். விஸ்வாமித்திர்ர் மனமகிழ்ச்சியுடன் காசிராஜனுக்கு ஆசி அளித்து “நீடூழி வாழ்வாயாக” என்றார். அருகில் வந்த ராமரை நோக்கி,” இதோ, காசி ராஜன் என்னை வணங்கி ஆசி பெற்று விட்டான்! என் மனம் குளிர்ந்தது. உன் அம்பை விட வேண்டாம்!” என்று கட்டளை இட்டார். குருதேவரை வணங்கிய ராமர் தன் மூன்றாம் அம்பை அம்பராதூணியில் வைத்தார். ராமருடன் நடந்த போட்டியில் பக்த ஹனுமான் வென்றதைக் கண்ட மக்கள் அனைவரும் ராமருக்கும் ஜயம்! ராம பக்த ஹனுமானுக்கு ஜயம் என்று கோஷமிட்டனர். நாரதர் உணர்த்திய ராம பக்தனின் மஹிமைநடந்ததை எல்லாம் பார்த்த அஞ்சனா தேவி ஆஞ்சனேயனை உச்சி முகர்ந்து ஆசீர்வதித்தார். கலக நாரதரோ ராம நாம மஹிமையையும் பக்த ஹனுமானின் சிறப்பையும் அனுமனின் அன்னை மீதான பக்தியையும் விஸ்வாமித்திரரின் மஹிமையையும் உலகிற்கு உணர்த்திய வெற்றியில் புன்முறுவல் பூத்தார்.

ஹனுமன் ஆர் கே சாமி 

  ஞான ஆலயம் ஏப்ரல் 2014 இதழில் வெளிவந்த கட்டுரை   

 வடநாட்டில் பிரஸித்தமாக வழங்கி வரும் ஹனுமத் புராணத்திலிருந்து ஒரு கதை

எம்பார்

 ராமானுஜரின் சீடர் எம்பார். திருவரங்கத்தின் வீதியில் ஒரு வீட்டிலிருந்து வந்த பெண் குரலிலே இழைந்த கீதம் அவருடைய செவிகளில் பாய்ந்து. மறுகணம் சுலோகத்திலே தோய்ந்திருந்த அவருடைய நெஞ்சு பாட்டின் லயத்திலே ஒன்றியது. வாய் சுலோகங்களைச் சொல்வதை விட்டது. அவரது கால்கள் இசை வந்த திசையில் அந்த வீட்டின் வாயிலில் அவரை நிறுத்தின. தன்னை மறந்தார். தான் ஒரு சன்னியாசி என்பதையும் மறந்தார். தான் யார் வீட்டின் முன்னால் நிற்கிறோம் என்ற சிந்தனையும் இல்லை.கண்களில் நீர் பெருக நின்றார். தான் எவ்வளவு நேரம் நின்றோம் என்பதும் அவருக்குத் தெரியாது. ஆனால், அந்தத் தெருவில் வந்து போவோருக்கு அது தெரியும்.

 இவருடைய கோலத்தினையும், அந்த வீட்டுக்கு உரியவளையும், அவர் நின்ற நிலைøயும் தொடர்புப்படுத்தி சிலர் முகம் சுழித்தனர். சிலர், கருமம் கருமம்…. இப்படியும் ஒரு வெளிவேஷமோ? என்று கூறிச் சென்றனர்.சில வைணவ அடியார்கள் இக்காட்சிக்கண்டு துணுக்குற்று, காவிரிக்கு நீராடப் போவதையும் விட்டு, ராமானுஜருடைய மடத்துக்குச் சென்றனர். ஆம், ஒரு அபச்சாரச் செயல் நிகழ்ந்துவிட்டது. உம்முடைய பிரிய சீடர் எம்பார், குளித்து மடியாக ஒரு தாசியினுடைய வீட்டின் முன் கண்ணீர் பெருக நின்று தவம் கிடக்கிறார் என்று ஒருவர் சொல்ல, உடன் வந்தவர்களும் எம்பாரைப் பற்றி பலவாறு இகழ்ந்து பேசினர்.இவ்வாறு அவர்கள் சொல்லியும் ராமானுஜர் சஞ்சலம் அடையவில்லை. எம்பாரா? ஒருக்காலும் இருக்கவே இருக்காது என்றது அவர் மனம்.

 எம்பாரின் உலகியல் வாழ்க்கையில் சிறிதும் நாட்டமில்லாத தன்மையை உணர்ந்த ராமானுஜர் கோவிந்தருக்கு காஷாயமும் திரிதண்டமும் தந்து சன்னியாசி ஆக்கினார்.    சன்னியாசம் கொள்ளுகின்ற பொழுது இடப்படும் பெயராக. தம்முடைய பெயராகிய எம்பெருமானார் என்பதையே எம்பார் என்று சுருக்கி கோவிந்தருக்கு இட்டார்.விரக்தியே வடிவான எம்பார் இன்று இந்நிலைக்கு ஆளானார் என்று அடியார்கள் சொல்லியதை ஏற்க மறுத்தது ராமானுஜர் உள்ளம்.மடத்துக்குள் நீராடி வருகின்ற எம்பாரின் பக்தியில் தோய்ந்த சுலோகங்களின் முணுமுணுப்பு ராமானுஜரின் சிந்தனையைக் கலைத்தது.எம்பாரே! இங்கே வாரும்.சொல்லுங்கள் ஸ்வாமி?

இன்று நீராடிவர இவ்வளவு நேரம் ஏன்?ஸ்வாமி! வருகின்ற வழியில் ஒரு வீட்டில் இருந்த வந்த பாட்டின் லயத்திலே ஈர்க்கப்பட்டேன். நேரம் போனதே தெரியவில்லை.ஓகோ! சிருங்காரப் பாடல் லயத்திலே தோய்ந்தீரோ? சற்று காரமாகவே கேட்டார்.ஸ்வாமி! அதனினும் உயர்ந்தது அப்பாடல். அதற்கு இணை எவ்வுலகிலும் இல்லை. அதுவோ தாலாட்டுப் பாடல். அவ்வீட்டுக்குரியவள் தன் குழந்தையைத் தூங்க வைக்க எத்தனையோ கதைகளைத் தாலாட்டுப் பாடலாகப் பாடியிருக்கலாம்.எல்லாவற்றையும் விட்டு, உம்முடைய பெருமைகளையே பாடல் பொருளாக அமைத்துப் பாடினாள். அப்பாட்டு என்னை ஈர்க்காமல் என்ன செய்யும்? என்று அவள் பாடிய ஒரு பாடலை உணர்ச்சிப் பெருக்கோடு பாடிக் காட்டினார்.

சித்திரையில் ஆதிரைநாள்

சிறப்புறவே பிறந்தவனே

இத்தரையில் நான்மறையும்

விளங்க வைத்தாய்! மாறனடி

பக்தியுடன் பணிந்துய்ந்தாய்!

பெரும் புதூர்ப் புண்ணியனே

முத்திதரும் மழைமுகிலே!

மாமணியே! தாலேலோ!

எம்பாரே! என் மீது கொண்ட பற்றினால் – பக்தியினால் – என்னைப் பற்றிய பாடல் உம்மை ஈர்த்து என்றீர். அது ஒருபுறம் இருக்கட்டும். நீர் நின்று பாட்டுக் கேட்ட வீடோ ஒரு தாசிக்குரியது. உம்முடைய கோலமோ சன்னியாசிக்குரியது. இந்நிலையில் பார்ப்பவர்கள் என்ன நினைப்பர்?குருவே யார் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும். எந்தப் பிறப்பினராக இருப்பினும், எக்குற்றம் புரிந்தவராக இருப்பினும், எத்தகைய இயல்பினரானாலும் உம்முடைய பெயரை ஒதுபவர்களே எனக்கு நல்லவர்கள்; என்னால் வணங்கத் தக்கவர்கள் என்று கூறி, குருவினை நமஸ்கரித்து மடத்தின் உள்ளே சென்று விட்டார் எம்பார்.ராமானுஜர், குறைகூறி வந்தவர்கள் நின்ற இடத்தைப் பார்த்தார். அது வெற்றிடமாக இருந்தது.

ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள்

 ஶ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் தம்முடைய ஶ்ரீமடத்தில் தினந்தோறும் பகவத் ஆராதனை செய்யும் போது ஸ்ரீகிருஷ்ணனை நினைத்து பாசுரங்கள்,கீர்த்தனைகள்  பாடுவாதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அப்படி பாசுரங்கள் பாடும் போது ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகளின் கண்களில் கண்ணீர் மல்க பாடுவார். இதை தினமும் பக்தர்கள் பார்த்து கொண்டே இருந்தனர்.அப்படி ஓர் நாள் ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள் கண்களில் கண்ணீர் வருவதை யாரோ துடைப்பது போல் கண்களில் கண்ணீர் வந்தால் உடனே காணாமல் போனது. இதை ஓர் பக்தர் ஆச்சர்யமாக கவனித்து கொண்டே இருந்தார்.  இந்த அதிசயத்தை பல பக்தர்கள் பார்த்து கொண்டே ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகளிடம் இதை பற்றி ஏதும் கேட்காமல் இருந்தனர். இதை பற்றி பல பக்தர்கள் ஆச்சரியம் அடைந்து ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள் பாசுரங்கள் பாடும் போது பார்க்க வந்து கொண்டே இருந்தனர்.

அங்கு ஓர் பக்தர் இந்த வைபவத்தை பார்த்து ஏன் இப்படி நடக்கிறது யார் தான் இப்படி செய்கிறார்கள் என்று தம்முடைய மனதில் பகவானை எண்ணி தியானித்து பார்த்தார்.பார்த்தவுடன் அவர் கண்களிலும் கண்ணீர் அப்படி என்னதான் நடந்தது. ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள் கிருஷ்ணனை எண்ணி பாசுரங்கள் பாடும்போது. அந்த கிருஷ்ணனே ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள் மடியிலே அமர்ந்து கேட்டு கொண்டே  பக்தியில் கண்களில் கண்ணீர் வந்தால் உடனே மடியில் அமர்ந்து இருக்கும் கிருஷ்ணன் துடைப்பாராம்  இப்படியே தினமும் நடைபெற்றது. இந்த வைபவத்தை பார்த்த அந்த பக்தர் மற்ற பக்தர்கள், சிஷ்யர்களிடம் சொல்ல அனைவரும் பக்தியில் ஆச்சரியம் அடைந்து இந்த வைபவத்தை எங்களுக்கு தெரியவில்லையே என்று வருந்தினார்.

மறுநாள் ஶ்ரீமடத்தில் பகவத் ஆராதனையில் ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள் பாசுரங்கள் பாடும் போது ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகளின் நாயகி பக்தியின் ஏற்றத்தை அனைவரும் அறிய வேண்டும் என்று அன்றை தினம் பகவான் திரு உள்ளம் கொண்டு அனைத்து பக்தர்களும் இந்த அற்புத வைபவத்தை  பார்க்கும் பாக்கியத்தை அருளினார்.ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள் வீனை வாசித்த படி பாசுரங்கள் பாட. மடியில் கிருஷ்ணன் அமர்ந்து கீர்த்தனைகள் கேட்டு கொண்டே இருக்க ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள் மறு கையால் கிருஷ்ணனை வாரி அனைத்த படி  இருப்பதை பார்த்தனர்.

பக்தனுக்கும் பகவானுக்கும் இடையே உள்ள பாசம் இதுதான். என்னை எண்ணி பக்தியில் கண்ணீர் வந்தால் அதை நானே வந்து துடைப்பேன் என்று உனக்காக நான் எப்போதும் இருப்பேன் என்று பகவான் இந்த வைபவத்தில் காட்டி கொடுத்தார். இந்த அற்புதமான வைபவத்தை அறிந்த பல பக்தர்கள், ஶ்ரீவைஷ்ணவர்கள் ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகளுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் உள்ள நாயகி  பக்தியின் பெருமையை அறிந்து ஆனந்தம் கொண்டனர். ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள் இருந்த காலத்தில் இது போன்ற பல வைபவங்கள் நடைபெற்றது. இது போன்ற வைபவங்கள் பார்த்து பல பேர் பக்தியில் லயித்து இருந்தனர். ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள் பகவானின் கருனையை உபதேசம் செய்து தம்முடைய பக்தியில் அதை காண்பித்து கொடுத்தார்

கிரிவலமும் பிரகலாதனும்

திருவண்ணாமலையைக் கிரிவலம் வரும் போது மழை வந்தால் ஒதுங்கக் கூடாது என்பார்கள். அதற்குப் புராணம் கூறும் காரணம்.  இறைவனிடம் வரங்கள் பெற இரண்யகசிபு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான்.  அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத் தல்மாகத் தேடினாள் லீலாவதி. அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி.

 அவளின் நிலையை அறிந்த நாரதர் அண்ணாமலிக்குச் சென்று காய்த்ரீ மந்திரம் ஜபித்தபடி கிரிவலம் வந்தால் நல்வழி கிட்டும் என்று உபதேசித்தார். அதன்படி லீலாவதி அண்ணாமலி தலத்துக்கு வந்து காயத்ரீ மந்திரம் ஜபித்தபடி கிரிவலம் வந்தாள். அப்போது திடீரென்று அழுத புஷ்ப மழை பொழிந்தது.

பூமியில் நடக்கும் அக்கிரமச் செயல்கள் அனைத்தையும் மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள்  பூமாதேவி.  அவளைச் சாந்தப்படுத்த இப்படிப்பட்ட மழை பொழியுமாம். இந்த மழைப் பொழிவு இறைத் தன்மையுடையது. ஒரு கோடி மழைத்துளிகளுக்குப் பின் அழுதத் துளி ஒன்று கீழே இறங்கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோ அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர்.  விவசாயம் செழித்து வளரும்  அமைதி நிலவும்.  மட்டுமின்ரி அங்கு அழுத புஷ்ப மூலிகை என்கிற அரிய வகைத் தாவரம் தோன்றும் என்கின்றன சில ஞான நூல்கள்.  அண்ணாமலையிலும் அழுத புஷ்ப மழை பொழிந்தது. மழைத் துளிகள் கனமாக விழவே பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி. எனினும் விடாமல் காயத்ரி மந்திரம் ஜபித்தாள். அப்போது அமுதத் துளி பாறையில் பட்டு முத புஷ்ப மூலிகை தோன்றியது.  அந்த  நேரத்தில் கிரிவலம் வந்த சித்தர்கள் உரிய மந்திரம் சொல்லியழுத புஷ்ப மூலிகையைப் பறித்து லீலாவதியிடம்கொடுத்து ஆசி வழங்கினார்கள். அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை அவர்கள் உணர்ந்தார்களாம்.

அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக்கொண்டாடள் லீலாவதி.  அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்தது.  அது தான் பின்னாளில் ஸ்ரீ நரசிம்மரின் உக்கிரகத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கியது என்பர்.  அன்ரு பாறை ஓரத்தில் ஒதுங்கியதால் அழுத புஷ்ப மழையின் சிறு துளியின் கடாட்சத்தையே பெற்றாள் லீலாவதி. அதுவே மகிமையைத் தந்தது எனில் பூரணப் பலன் கிடைத்தால்? அண்ணாமலையாரின் பூரணப் பலனை நாம் பெறுவோம்.

  தகவல் நன்றி    கே  ஹரி  சென்னை 4   சக்திவிகடன்

ஸ்ரீமந் நாராயணன்.

 ஒரு நாள் சீடன் சீனு வீட்டுக்கு பரந்தாமன் ஸ்ரீமந் நாராயணனும் சீனுவின் குருவும் வருகை தந்தனர்.         

கடவுளையும், குருவினையும் ஒன்றாகப் பார்த்த சீடன் சீனு உடனடியாக பரந்தாமன் அருகில் சென்று அவரின் பாதத்தை தொட்டு வணங்கச் சென்றான்.    உடனே பரந்தாமன் அவனைத் தடுத்து, “முதலில் நீ உன் குருவை வணங்கு” என்றுச் சொன்னார்.சீடன் சீனு குருவினை பணியச் சென்ற போது, “சீடனே, நான் உன் வீட்டுக்கு ஸ்ரீமந் நாராயணனை  அழைத்து வந்திருக்கிறேன், அதனால் நீ   அவரைத்தான் முதலில் வணங்க வேண்டும்” என்றுச் சொன்னார்.குருவின் உபதேசத்தைக் கேட்ட சீடன் சீனு மீண்டும் கடவுளின் அருகில் சென்று அவர் பாதம் பணிய முயன்றான்.

அப்பனே, உன் வாழ்க்கையில் கடவுளை கொண்டு வந்தவர் உன் குரு தான். அவர் தான் என்னை அடைவதற்கு உரிய வழியைக் காட்டி உனக்கு அருளினார், ஆகையால் அவரையே நீ முதலில் வணங்க வேண்டும்.  ஆகவே நீ அவரிடம் சென்று அவரின் ஆசியைப் பெறுவாயாக “ என்றார் கடவுள்.சீடன் சீனு மீண்டும் குருவிடம் சென்றான்.“சீடனே ! நான் தான் கடவுளை அடைய வழி காட்டினேன் என்றாலும், அவர் தான் அனைத்துக்கும் பொறுப்பானவர்.  ஆகவே நீ முதலில் கடவுளிடம் ஆசி பெறுவதுதான் சிறந்தது” என்றார் குரு.

மீண்டும் கடவுளிடம் சென்றான் சீடன் சீனு “அப்பனே, அவர் சொல்வது எல்லாம் சரிதான். கடவுள் யார்? குரு என்பவர் யார்? என்று உனக்குச் சொல்ல விரும்புகிறேன்.ஒவ்வொருவர் செய்யும் செயலுக்கேற்ற கர்ம வினைகளைப் பொறுத்து எந்த வித பாரபட்சமும் இல்லாமல் நான் மனிதர்களுக்கு சந்தோஷத்தையோ துக்கத்தையோ அளிக்கிறேன். நான் யாருக்கும் தீமையோ அல்லது நன்மையோ செய்வதில்லை. அவரவர் செய்யும் கர்ம பலனைத் தான் அவரவர்களுக்கு வழங்குவேன்.

ஆனால் குரு என்பவர் அப்படியல்ல. அவர் தூய்மையானவர். எளிமையானவர். அன்பானவர். குருவினைத்தேடிச் செல்லும் சீடனை அவர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார். என்னை அடைய அவனுக்கு வழி காட்டி அருள்வார். அவன் எப்படி இருந்தாலும் அவனை அவர் நெறிப் படுத்தி விடுவார். சீடனின் கர்ம பலன் அவனைப் பாதிக்காமல் காப்பார். அவனுடன் கூடவே இருந்து அவனுக்கு வழிகாட்டி அருள்வார்.ஆனால் நான் அதைச் செய்வதே இல்லை. ஆகவே என்னை  விட உன்  குருவே உயர்வானவர்” என்று முடித்தார் பரந்தாமன் ஸ்ரீமந் நாராயணன்.

நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல.

வியாபாரி சுப்பிரமணி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் வாங்க ஒட்டக சந்தைக்கு போனான்.மற்றொரு ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கி கொண்டு ஓட்டி வந்தான் சுப்பிரமணி.ஒட்டகம் வாங்கிய சுப்பிரமணிக்கோ மகிழ்ச்சி. நியாயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று. வீட்டுக்கு வந்ததும் தன் வேலையாள் ரவியை  அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான் சுப்பிரமணி  .அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான். அவனால் முடியவில்லை.தன் வேலையாள் ரவியை அழைத்து ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்க சொன்னான்  சுப்பிரமணி..ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள் ரவி , பொத் என ஏதோ கீழே விழுவதை கண்டு எடுத்து பார்த்தான்.அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தது. விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள். தகதகவென மின்னியது.அதை எடுத்து கொண்டு முதலாளி சுப்பிரமணியிடம் ஓடி காண்பித்தான்.உடனே சுப்பிரமணி, அந்த பையை இப்படி கொடு, உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் கொடுக்கணும்னு சொல்லி புறப்பட்டான்.

பணியாள் ரவியோ, ஐயா இந்த புதையல்  யாருக்கும் தெரியப் போவதில்லை. இது இறைவனின் பரிசு. நீங்களே வைத்து கொண்டால் என்ன என வற்புறுத்தினான்.சுப்பிரமணியோ ஒத்து கொள்ளாமல் புறப்பட்டு போனான். ஒட்டக வியாபாரியிடம் சேணத்தை அவிழ்த்த போது கிடைத்த பொக்கிஷப் பையை கொடுத்ததும் நன்றியோடு வாங்கி கொண்டவன், அந்த பொக்கிஷப் பையை வியாபாரியிடம் கொடுத்து, உங்கள் நேர்மையை நான் மெச்சுகிறேன்.  தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன். இதிலிருந்து உங்களுக்கு பிடித்தமான கற்களை சிலவற்றை எடுத்து கொள்ளுங்கள் என்று நீட்டினான்.

அதற்கு அந்த சுப்பிரமணியோ சிரித்து கொண்டே உங்களிடம் இந்த பொக்கிஷத்தை தரும் முன்பே இரண்டு விலையுயர்ந்த ரத்தினங்களை நான் வைத்து கொண்டேன் என்றான்.உடனே ஒட்டக வியாபாரியோ கற்களை எண்ணி பார்க்க எதுவுமே குறையவில்லை. சரியாக இருந்தது கண்டு குழம்பினான்.உடனே சுப்பிரமணி நான் சொன்ன இரண்டு ரத்தினங்கள் என்பது ஸ்ரீமத் பாகவதத்தில் கூறிய   …

*1.  நேர்மை.*

*2.  சுயமரியாதை என்றான் கம்பீரமாக.*

நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல. தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பமும், வாய்ப்பும், வாய்த்தாலும் நேர்மையாக வாழ வேண்டும்   வாழ்வில் ஒரு நாள் நேர்மையையாய் வாழ்ந்து பார்த்தால் அதன் ருசி  உணர்ந்து விட்டால், நாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம். தினம் தினம் ஸ்ரீமத் பாகவதம் படிப்போம், உயர்ந்த கருத்துகளை நம் வாழ்வின் லட்சியமாக கொள்வோம் 🌹🌺

எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்.

ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.*கப்பல் கவிழும் ஓர் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் மட்டுமே தப்பிக்கவுள்ள மர பலகையில் , மனைவியைப் பின்னே தள்ளி விட்டுக் , கணவன் மட்டும்  தப்பிச் செல்கிறார்.கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு , தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக  “நம்ம கொழந்தையப் பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லி மூழ்கினாள் மனைவி,தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்திற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து அந்தப் பெண் தன் தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது.தாய்க்கு உயிர்க்கொல்லி நோய் ஒன்று இருந்திருப்பது அப்போது தான் அவளுக்குத் தெரிய வந்தது.கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார் :

உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும் … நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது ? நமது பெண்ணை வளர்த்தெடுக்க உன் குறிக்கோள் நிறைவேற  நான் மட்டுமாவது உயிர் தப்பியாக வேண்டுமே ?வாழ்க்கையில நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். ஆனா சில நேரங்களில் அதை நம்மால் புரிஞ்சிக்க முடியாமப் போகலாம். அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ, யாரைப் பத்தியும் எந்த ஒரு தவறான முடிவுக்கும் வந்துவிடக் கூடாது.எத்தனை எத்தனையோ ஸ்ரீ கிருஷ்ணர்களும் ராமர்களும் தங்கள் ராதையின் /சீதையின் நோக்கம் நிறைவேற நம்முடனே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்

“மழையே வா!”

ஒரு சமயம் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் ஒன்றில் புனரமைப்புப் பணி நடந்து கொண்டிருந்தது. அதற்கான எல்லா விஷயங்களையும் காஞ்சி மகானின் ஆலோசனை கேட்டுக் கேட்டே செய்து கொண்டிருந்தார்கள், அந்தத் திருப்பணியைச் செய்து கொண்டிருந்த ஸ்தபதிகள்.அந்த சமயத்தில் ஒரு நாள், அந்தக் கோயிலின் அமைப்பில் சில மாற்றங்களைச் செய்யலாமா? என்று கேட்டுச் செல்வதற்காக வந்திருந்தார், தலைமை ஸ்தபதி. அவர் செய்யலாம் என்று சொன்ன மாற்றங்களை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்ட மகாபெரியவா, “நீ சொல்றதையெல்லாம் இப்படி வார்த்தைகளா இருக்கறதைவிட படமா இருந்தா தீர்மானம் செய்யறதுக்கு சுலபமா இருக்கும்.  நீ ஒண்ணு செய். அந்தக் கோயிலோட புராதன அமைப்பு எப்படி இருக்கு என்பதை ஒரு வரைபடமா வரைஞ்சு எடுத்துக்கோ.  அதோட, இப்போ நீ சொல்ற மாற்றங்களை எப்படிச் செய்யப் போறே? அதை செய்த பிறகு அமைப்பு எப்படி இருக்கும்? என்பதை இன்னொரு படமா வரைஞ்சுக்கோ.  ரெண்டு படத்தையும் பார்த்து மாற்றம் செய்யலாமா? வேண்டாமான்னு தீர்மானிக்கறது சுலபமா இருக்கும்!” என்று சொன்னார்.அப்படியே வரைந்து எடுத்து வருவதாகச் சொன்ன ஸ்தபதி, நாலைந்து நாட்களுக்குப் பிறகு மறுபடியும் வந்தார்.அவர் வந்த நேரம், மகாபெரியவா புனரமைப்புப் பணி நடந்துகொண்டிருந்த கோயிலுக்குப் பக்கத்தில், ஒரு அரசமரத்தின் நிழலில் அமர்ந்திருந்தார்.வரைபடங்களை எடுத்து வந்த ஸ்தபதி, அதை மகாபெரியவாளிடம் கொடுத்தார். தமக்கு முன்னால் ஒரு வஸ்திரத்தை விரித்துப் போடச் சொல்லி அதில் அந்தப் படங்களை விரித்து வைக்கச் சொன்னார், மகான்.

அப்படியே ஒரு தூய்மையான துணி விரிக்கப்பட்டு, அதன் மேல், வரைபடத்தைப் பிரித்து வைத்தார், ஸ்தபதி.  சரியாக அதே நேரம், பொட் என்று ஒரு நீர்த்துளி ஸ்தபதி மேல் விழுந்தது.  மேலே நிமிர்ந்து பார்த்த ஸ்தபதி, மழைத் தூறல் அது என்பதை புரிந்து கொண்டார். அதற்குள் மேலும் இரண்டு மூன்று துளிகள் மழை விழுந்தது.  சட்டென்று வரைபடத்தைச் சுருட்ட ஆரம்பித்தார், ஸ்தபதி.  அதற்குள் இன்னும் கொஞ்சம் வேகமாக மழைத்துளிகள் விழ ஆரம்பித்தன. “என்ன, ஏன் வரை படத்தைச் சுருட்டறே. பிரிச்சு வை!” ஒன்றுமே தெரியாதவர்போல் சொன்னார், பெரியவா.”இல்லை…சுவாமி…மழை வருது…படம் நனைஞ்சுட்டா, வீணாகிடும். அதான்…இதை உள்ளே கொண்டுபோய்ப் பார்க்கலாம்னு…!” இழுத்தார், ஸ்தபதி.  இப்போது மழை இன்னும் கொஞ்சம் பெரிதாகப் பெய்யத் தொடங்கியிருந்தது.

“ஓ…அப்படியா சொல்றே? இப்போ இங்கே இந்த வரைபடத்தைப் பார்க்க முடியாதபடி மழை தடுக்கறதாச் சொல்றே…ஆனா, சுவாமியோட திருப்பணிக்கான காரியங்கள் எதுவும் இயற்கையால எந்தத் தடையும் வராதுன்னுதான் எனக்குத் தோணறது!” சொன்ன மகாபெரியவா, மெதுவாகத் தலையை உயர்த்தி, வானத்தைப் பார்த்தார்.  திருக்கரத்தை உயர்த்தி ஒருமுறை அசைத்தார்.    அவ்வளவுதான் சட்டென்று நின்று போனது மழை.  “இப்போ வரைபடத்தைப் பார்க்கறதுல எதுவும் பிரச்னை இல்லையே…!” மென்மையாகப் புன்னகைத்தார், மகான்.அடுத்து சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக, அந்த வரைபடங்களைப் பார்த்து, என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம், எவையெல்லாம் வேண்டாம் என்றெல்லாம் அறிவுரைகள் தந்த மகான், ஒரு கனியைக் கொடுத்து ஸ்தபதியை ஆசிர்வதித்தார்.  பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, வரைபடங்களை பாத்திரமாகப் பையில் வைத்துக்கொண்டு ஸ்தபதி புறப்பட்டார்.  அவர் சென்ற கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, இதுவரை தடுத்து நிறுத்தியதுபோல் நின்றிருந்த மழை, சரசர என்று பெய்யத் தொடங்கியது.

வேகமாக தண்ணீர் வரும் குழாயை, அழுத்தமாகத் திருகி மூடினால்கூட இரண்டொரு துளி நீராவது வந்து பிறகுதான் நிற்கும்.  ஆனால், இங்கே இயற்கையாகப் பெய்து கொண்டிருந்த மழையை, ஒரே ஒரு கை அசைவில் நிறுத்திவிட்டார், மகான்.  அதுபோலவே ஸ்தபதி வரைபடத்தை பத்திரமாக எடுத்துக் கொண்டு நகர்ந்ததும், தடுத்து நிறுத்திய மழையை மறுபடியும் பெய்ய வைத்திருக்கிறார்.       இயற்கையைக் கட்டுப்படுத்துபவன் இறைவன் என்றால், அந்தஇறைவனுக்குச் சமமாக இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்த (செய்கிற) மகாபெரியவாளை அந்த தெய்வத்தின் அம்சம் என்றே பக்தர்கள் கொண்டாடுவதில் சந்தேகத்திற்கு இடமே இல்லைதானே!      

ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

ஸ்ரீகிருஷ்ண லீலை.

ஸ்ரீகிருஷ்ணரின் கதையைக் கேட்பதால் என்ன லாபம்?’ என்ற சந்தேகம் ஒரு ராஜாவுக்கு ஏற்பட்டது. மந்திரியிடம் இதுபற்றி கேட்டார்.””என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்! பரீட்சித்து மகாராஜாவுக்கு சுகப்பிரம்ம முனிவர் கண்ணனின் கதையை சொன்னார். அதைக் கேட்டு ராஜா ஆத்மஞானம் (உலக வாழ்வில் இருந்து விடுதலை பெறுதல்) பெற்றார். அந்தக்கதைகளின் தொகுப்பே “ஸ்ரீமத் பாகவதம்’ என்னும் புகழ் பெற்ற நூலாக இருக்கிறது. இது உங்களுக்கு தெரியாதா?” என்றார் மந்திரி.””அப்படியா! அப்படியானால், நானும் உடனடியாக ஆத்மஞானம் பெற்றாக வேண்டும். பாகவதம் தெரிந்த பண்டிதர் ஒருவரை அரண்மனைக்கு வரச்சொல்லுங்கள். அவருக்கு தகுந்த சன்மானம் கொடுங்கள்,” என்று உத்தரவு போட்டார்.அந்த ஊரிலேயே சிறந்த ஒரு பண்டிதரை அரண்மனைக்கு வரவழைத்தனர். அவருக்கு பாகவதம் அத்துப்படி. வரிக்கு வரி அருமையான வியாக்கியானம் தருவார். அவர், தனக்கு நிறைய சன்மானம் கிடைக்கும் ஆசையில், அரண்மனைக்கு சந்தோஷமாக வந்தார்.

தன் திறமையையெல்லாம் காட்டி, ராஜாவுக்கு கதை சொன்னார். தினமும் கை நிறைய அல்ல பை நிறைய தங்கக்காசுகளை அள்ளிச் சென்றார்.இரண்டு மாதம் கழிந்தது. ராஜாவுக்கு ஆத்மஞானம் வரும் வழியைக் காணவில்லை. அவன் பண்டிதரிடம்,””யோவ் பண்டிதரே! என்னிடம் தினமும் பை நிறைய தங்கம் வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறீரா! இந்தக் கதையைக் கேட்டால், ஆத்மஞானம் வரும் என்றார்கள். எனக்கு இதுவரை வரவில்லையே! இதற்கான காரணத்தை நாளைக்குள் எனக்கு சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், உம்மை…” என்று உறுமினான். பண்டிதர் நடுங்கிப்போய் விட்டார்.வீட்டுக்கு கவலையுடன் வந்த பண்டிதரை அவரது பத்து வயது மகள் பார்த்தாள். நடந்ததை அறிந்தாள்.

“”அப்பா! இந்த சின்ன விஷயத்துக்குப் போயா கவலைப்படுகிறீர்கள்? என்னை நாளை அரண்மனைக்கு அழைத்துச் செல்லுங்கள். இதை நானே சமாளித்து விடுவேன். நிம்மதியாக போய் உறங்குங்கள். அந்தக் கண்ணன் இதற்கு ஒரு வழி காட்டுவான்,” என்றாள்.”இவள் என்ன உளறுகிறாள்?’ என்று எண்ணியபடியே பண்டிதர் படுக்கப் போனார்.

கஷ்டம் வந்ததும் கண்ணனின் நினைப்பும் அவருக்கு வந்துவிட்டது. கனவில் கண்ணன் வந்து, “”பயப்படாதே! நானிருக்கிறேன்” என்று சொல்வது போல் இருந்தது.  மறுநாள், மகளுடன் அரண்மனைக்கு சென்றார்.

மன்னனிடம் அந்தச்சிறுமி,””மன்னா! நேற்று என் தந்தையிடம் தாங்கள் கேட்ட கேள்விக்குரிய பதிலைச் சொல்லவே வந்துள்ளேன்,” என்றதும், “”சிறுமியான நீ இந்த பெரிய விஷயத்துக்கு எப்படி பதில் சொல்வாய்?” என்றான் மன்னன் ஆச்சரியமாக.””மன்னா! நான் சொல்வதைச் செய்யுங்கள். இரண்டு கயிறுகளை எடுத்து வரச்சொல்லுங்கள்.நம் இருவரையும் இந்த தூண்களில் கட்டி வைக்கச் சொல்லுங்கள்,” என்றாள். அரசன் அதிர்ந்தான். இருப்பினும் அவள் சொன்னபடி இருவரையும் காவலர்கள் தூணில் கட்டினர்.””மன்னா! இப்போது நீங்களே வந்து என்னை அவிழ்த்துவிடுங்கள்,” என்றாள்.””உனக்கு பைத்தியமா! கட்டப்பட்டிருக்கும் என்னால் உன்னை எப்படி அவிழ்த்து விட முடியும்?” என்ற மன்னனிடம்,””நீங்கள் சொன்னது போல், இருவரும் கட்டப்பட்டிருந்தால் ஒருவரை ஒருவர் விடுவிக்க முடியாது. அதுபோல், என் தந்தையும் குடும்பம் என்ற தழையால் கட்டப்பட்டிருக்கிறார். நீங்களும் ஆட்சி, அதிகாரம், சுகபோகம் என்ற பந்தத்தால் கட்டப்பட்டுள்ளீர்கள்.

பந்தங்களில் இருந்து விடுபட்ட ஒருவரிடம், பந்தத்தை அறுத்த ஒருவன் பாகவதம் கேட்டால் தான் ஆத்மஞானம் பெற முடியும்.கண்ணனின் கதையைப் படித்தால் போதாது. அவனை அடைய கோபியர்கள் எல்லாவற்றையும் துறந்தார்களோ, அப்படி நீங்களும் எல்லாவற்றையும் துறக்க வேண்டும் புரிகிறதா!” என்றாள்.மன்னன் தன் தவறை உணர்ந்தான். தனக்கு உண்மைநிலையை உணர்த்திய சிறுமியை வாழ்த்தினான்.

நீதி

சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு கிருஷ்ணரிடம் பூரண சரணாகதி அடைந்தால் மட்டுமே அவரை உங்களால் நெருங்க முடியும்.