இரண்டான இனிய கரும்பு

கிருஷ்ண பக்தரான துக்காராம் தனக்கென உள்ளதைப் பிறருக்கு கொடுத்து மகிழ்பவர். ஒரு நாள் அவருடைய மனைவி வண்டி நிறைய கரும்புகளை ஏற்றி சந்தையில் விற்று வரும்படி அனுப்பி வைத்தாள் ஏழை சிறுவன் ஒருவன் வண்டியைப் பின் தொடர்ந்தான். கரும்பு தின்ன வேண்டும் என்ற ஏக்கம் அவன் முகத்தில் வெளிப்பட்டது.  கையில் காசில்லை இதை உணர்ந்த துக்காராம் சிறுவனுக்கு ஒரு கரும்பை அன்புடன் கொடுத்தார். அதைக் கண்ட மற்ற சிறுவர்களும் துக்காராமை சூழ்ந்து விட்டனர்.  இப்படியே போவோர் வருவோரெல்லாம் ஆளுக்கொரு கரும்பாக வாங்கிச் செல்ல  மொத்தக் கரும்பும் காலியானது.  கடைசியில் ஒரே ஒரு கரும்பு மட்டும் மிச்சமிருந்தது.

துக்காராம் வீடு வந்து சேர்ந்தார்.  விஷயமறிந்து அவரது மனைவிக்கு கோபம் தலைக்கேறியது.  ஒற்றைக் கரும்பை கையில் எடுத்தாள்  கணவரை ஆத்திரம் தீர விளாசித் தள்ளினாள். அந்த தண்டனையையும் மனைவி அளித்த பரிசாக ஏற்றுக்கொண்டார் துக்காராம்.  அடித்ததில் கரும்பு இரண்டு துண்டாக ஒடிந்து விழுந்தது.

அதைக் கண்டதும் துக்காராம் என் அன்பே ஒற்றைக் கரும்பு ஒடிந்ததும் நன்மைக்காகத்தான்  இருவரும் ஆளுக்கொரு துண்டாக சுவைத்து மகிழலாம். என்று சொல்லி சிரித்தார்.  இதைக் கேட்ட மனைவியும் கோபம் தணிந்து சிரித்து விட்டாள்.

 

பாட்டியின் அறிவுரை

கணவன் – மனைவியாக அறுபது ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில், அவர்களினிடையே ஒரு ஒளிவு, மறைவு இருந்தது கிடையாது. ஆனாலும், மனைவி, கணவனிடம் ஒரே ஒரு கோரிக்கையை முன் வைத்திருந்தாள். அதாவது, அவள் பரண் மீது வைத்திருந்த ஒரு அட்டைப் பெட்டியில் அவள் என்ன வைத்திருக்கிறாள் என்பதைக் கணவன் பார்க்கவும் கூடாது, அதைப் பற்றி ஏதும் கேட்கவும் கூடாது. கணவனும் அதை மதித்து அதுபற்றி ஒன்றும் கேட்டதில்லை.

மரணப் படுக்கையில் மனைவி கிடக்கும்போது, கணவனிடம் சொல்லுகிறாள்: “உங்களிடம் அனைத்தையும் சொல்லிவிட விரும்புகிறேன். அந்தப் பரண் மீது நான் வைத்திருக்கும் அட்டைப் பெட்டியை தயவுசெய்து எடுத்து வாருங்கள்”. அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்குமாறு கணவனிடம் சொல்லுகிறாள். கணவன் திறந்து பார்க்கிறான். உள்ளே, அவள் கையால் உல்லன் நூலால் பின்னிய இரண்டு பொம்மைகளும், ஒரு லட்ச ரூபாயும் இருக்கின்றன. அதன் விவரம் என்னவென்று கணவன் கேட்கிறான்.

மனைவி விளக்கினாள்: “நான் உங்களைத் திருமணம் செய்துகொண்டு வரும்போது, என்னுடைய பாட்டி எனக்கு ஒரு அறிவுரை சொன்னாள். நல்ல மகிழ்வான திருமண வாழ்க்கை வாழ்வதற்கு, நான் எதற்காகவும் உங்களிடம் எந்த ஒரு விவாதத்தையும் தவிர்க்க வேண்டும் என்றாள். அந்தத் தருணங்களில் எனக்குக் கோபம் வந்தால், அதனை அடக்க, உல்லன் நூலையெடுத்து பொம்மை வடிக்கச் சொன்னாள். அதையே நான் கடைப்பிடித்து வந்தேன்”.

மகிழ்ந்து போனான் கணவன். ‘இரண்டே இரண்டு பொம்மைகள் மட்டுமே! அப்படியானால், அறுபது ஆண்டு மண வாழ்வில், மனைவி இரண்டு முறைகள் மட்டுமே கோபப்படும்படி நான் நடந்திருக்கிறேன்!’    கொஞ்சம் பெருமையுடன் மனைவியைப் பார்த்துக் கேட்டான். “அது சரி, இந்த ஒரு லட்ச ரூபாயைப் பற்றியும் கொஞ்சம் விளக்கிச் சொல்லுவாயா?” கணவன் கேட்டான்.

மனைவி சொன்னாள்: “ஓ, அதுவா? அது, நான் செய்த மற்ற பொம்மைகள் அனைத்தையும் விற்று வந்தப் பணம்!”

சண்டையை நிறுத்தும் மருந்து

 

சுசீலாவுக்கும் அவள் கணவருக்கும் அடிக்கடி சண்டை வரும்.  ஆனால் பக்கத்து வீட்டு மாலா குடும்பத்தில் சண்டை வந்ததில்லை.  இதற்கான காரணத்தை அறிய மாலா வீட்டுக்குப் போனாள் சுசீலா.  மாலா உன் வீட்டில் சண்டை வருவதில்லையே எப்படி என்று கேட்டாள். சண்டை வந்தால் அதை நிறுத்த மருந்து இருக்கிறது. அதை சாப்பிட்டால் என் கணவர் சண்டையை நிறுத்தி விடுவார் என்றாள் மாலா.

மருந்தை அவர் சாப்பிட மறுத்தால் என்ன செய்வாய்? என்றாள் சுசீலா. எனக்குத்தான் மருந்தே தவிர அவருக்கு இல்லை என்றாள் மாலா. அப்படியா  அது என்ன அதிசய மருந்து என்ற சுசீலாவிடம் மாலா உன் கணவர் சண்டைக்கு வந்தால் இந்த மருந்தை வாயில் ஊற்றிக் கொள்  அஞ்சே நிமிஷத்தில் சண்டை நின்றுவிடும் என்று ஒரு பாட்டிலை கொடுத்தாள்.

இதற்கிடையில் சுசீலாவின் கணவர் பணிக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்தார். கதவு பூட்டியிருப்பது கண்டு எரிச்சல்பட்டார்.  சிறிது நேரத்தில் வந்த சுசீலா வாசலில் கணவர் கோபத்துடன் நிற்க கண்டாள். கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்தவள் கணவருக்கு தெரியாமல் கொஞ்சம் மருந்தைக் குடித்தாள். வழக்கம்போல கணவர் திட்ட தொடங்கியும் சுசீலா வாய் திறக்கவில்லை. எதிர்த்து பேசாததால் கணவரும் சிறிது நேரத்தில் அமைதியானார்.

மருந்து பலன் அளித்ததை எண்ணி சுசீலா மகிழ்ந்தாள். மறு நாள் மாலாவிடம்  மாலா………………..சண்டையை நிறுத்தும் மருந்து எங்கு கிடைக்கும் என்று கேட்டாள் சுசீலா. அடியே அது சாதாரண தண்ணீர்தான்  அதைக் குடித்ததுமே அந்த மருந்து ஏதோ பலன் தருவதாக எண்ணி நீயே பேச்சை நிறுத்தி விட்டாய். மனம் தான் சண்டை போடச் சொல்கிறது.  யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து போனால் சண்டை வராது. அதை நாம் தான் செய்வோமே என்றாள் மாலா

பதவி தந்த இலை

சிவனும் பார்வதியும் ஒரு நாள் நந்தவனத்தில் உலாவி கொண்டிருந்தனர்.  அங்கு வில்வமரம் ஒன்று இருப்பதைக் கண்ட சிவன் அதன் அடியில் அமர்ந்தார்.  காற்று வீசியதால் இலைகள் தன் மீது உதிர்ந்து விழவே மகிழ்ச்சியில் திளைத்தார்.  அந்த சமயத்தில் மரத்தின் மீதேறிய ஆண் குரங்கு ஒன்ரும் விளையாட்டாக வில்வ இலைகளை வேகமாகப் பறித்துப் போட்டது.  பொல பொல என இலைகள் விழுவதைக் கண்ட பார்வதி நிமிர்ந்து பார்க்க குரங்கு நின்றிருந்தது.   அப்போது பார்வதியிடம்  சிவன் “  தேவி வேடிக்கையாக்ச் செய்தாலும் இக்குரங்கு புண்ணியத்தை தேடி விட்டது.  அதன் பயனாக இப்போதே இதற்கு நல்லறிவு உண்டாகட்டும் “ என்று அருளினார்.

அறிவு உண்டானதும் குரங்கு சிவபார்வதியை கை கூப்பி வணங்கியது.  அப்போது சிவன் “ வில்வத்தால் அர்ச்சிக்கும் பேறு பெற்ற நீ பூலோகத்தில் பிறந்து மன்னராகப் பிறக்கும் பேறு பெறுவாய் “ என வாழ்த்தினார்.  பூலோகத்தில் மன்னராகப் பிறந்தாலும் தனக்கு இறையருளைப் பெற்றுத் தந்த குரங்கு பிறப்பை மறக்க அதற்கு மனமில்லை. அதனால் எப்போதும் குரங்கு முகத்துடன் இருக்க இறைவனிடம் வரம் கேட்டது.   அதன்படி குரங்கு முகமும் மனித உடலுமாக பூலோகத்தில் பிறப்பெடுத்தது.  சோழ வம்சத்தில் கருவூரைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த முக்குந்த சக்ரவர்த்தியே இந்த குரங்கு. முசுகுந்தன் என்றால் குரங்கு முகம் கொண்டவன் என்று பொருள்.

அன்னதானத்தின் மகிமை

அடியாருக்கு நல்லான் என்னும் பக்தரும் அவரது மனைவியும் சிவபக்தர்கள். விவசாயியான  அவர்கல் சிவ பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வந்தனர். அவர்களின் புகழ் நாடெங்கும் பரவியது. இந்த நிலையில் அவர்கள் வாழ்வில் சோதனை உருவானது.

வயலில் விளைச்சல் குறைந்தது.  சிவனடியார்களுக்கு தானம் செய்ய முடியாமல் போனது. வறுமையில் சிக்கிய அவர்கள் கடன் வாங்கி அன்னதானப் பணியைத் தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில்  யாரும் கடன் தர முன்வரவில்லை.  நல்லானும் அவரது மனைவியும் கூட பட்டினியில் வாடினர்.

உயிர் துறப்பதே மேல் என்று முடிவெடுத்து மதுரை சொக்க நாதன் முன் சென்று உங்கள் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்க இயலாமல் வாடும் எங்கள் உயிரை உம்மிடம் அர்ப்பணிக்கிறோம் என்றனர்.

அப்போது சிவன் அசரீரியாக தோன்றி  உங்கள் பக்தியின் மகிமையால் உங்கள் இல்லத்தில் உள்ள உலவாக்கோட்டை எப்போதும் நிரம்பி வழியும்  தர்மத்தை தொடருங்கள்  என்றது.  மகிழ்ந்த அவர்கள் தங்கள் வாழ் நாள் முழுவதும் குறைவின்றி அன்னதானம் செய்தனர்.

 

 

கிழவிக்கு_பயந்துகொண்டு போகும்_பெருமாள் 

திருப்பதி அருகிலுள்ள மங்காபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி இருந்தாள். அவளது பெயர் கங்கம்மா. சுண்டல் விற்பது அவளுக்குத் தொழில். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தினாள். கணவர் போய்விட்டார். பிள்ளைகளும் இல்லை.

“ஏண்டா பிறந்தோம்” என்று அடிக்கடி புலம்புவாள். அந்தக் காலத்தில், காட்டுப்பாதையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்துதான் திருமலைக்குச் செல்வார்கள். அப்படி ஒருநாள் பக்தர்கள் கூட்டம் அதிகாலைப் பொழுதில் மலையேறிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தை மலை அடிவாரத்தில் கண்ட பாட்டி, மலையேறுபவர்களிடம் சென்று, “ஐயா! நீங்க எல்லாரும் மலைக்கு எதற்காகச் செல்கிறீர்கள்?” என்று ஒன்றும் அறியாதவளாய்க் கேட்டாள்.

அவளுடையஅப்பாவித்தனமான கேள்வியைக் கேட்டதும் அவர்கள் சிரித்து விட்டனர். “என்ன பாட்டி இது கேள்வி? திருமலையின் அடிவாரத்தில் இப்படியும் ஒருத்தி இருக்கியே! மேலே பெருமாள் கோயில் இருப்பது திருப்பதிகாரியான உனக்கே தெரியாதா?” என்று கோபித்துக் கொண்டனர்.

உண்மையில், மலையில் கோயில் இருப்பதைக் கூட அறியாமல் இருந்தாள் அவள். ஒரு பக்தர் மட்டும் அவள் மீது இரக்கம் கொண்டு, “அம்மா! மலை மேல் ஒரு சுவாமி இருக்கிறார். அவனைப் போய் தரிசித்தால் இனிமேல் இப்படி பிறந்து சுண்டல் விற்கும் நிலை இருக்காது. அவனை “கோவிந்தா” எனச் சொல்லி கும்பிட வேண்டும். அப்படி செய்தால் நீ செய்த பாவங்களெல்லாம் தீர்ந்து விடும்,” என்று அவளுக்குப் புரியும் வகையில் எளிமையாக எடுத்துச் சொன்னார்.

இதைக் கேட்டாளோ இல்லையோ! சுண்டல் கூடையோடு திருமலைக்கு ஏறினாள். ஏழுமலையப்பனைக் கண்குளிரக் கண்டாள். “அப்பனே! கோவிந்தா, உன்னை வணங்கினால் இனி பிறக்கவே மாட்டேனாமே! அந்த பக்தர் சொன்னாரே! எனக்கும் இனி பிறவி வேண்டாமையா” என்று மனம் உருகிச் சொன்னாள். தரிசிக்க வந்த பக்தர்கள் மலையை விட்டுக் கிளம்பினார்கள். 

அவள் மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள். அப்போது, ஒரு வயோதிகர் அங்கு வந்தார். “அம்மா! சுண்டல் கொடு” என்று கேட்டார். அவளும் கொடுக்க, சாப்பிட்டு விட்டு நடையைக் கட்டினார்.”ஐயா! சுண்டலுக்கு காசு கொடுத்துட்டு போங்க,” என்றாள் பாட்டி.”அம்மா! நான் ஒரு கடன்காரன், கல்யாணத்துக்குக் கடன் வாங்கிவிட்டு, வருமானத்தையெல்லாம் வட்டியாகக் கட்டிவிட்டு கஷ்டப்படுகிறேன். சுண்டலுக்கு கூட பணமில்லை. நாளை இங்கே வருவேன். அப்போது காசு தருகிறேனே!” என்றார் கெஞ்சலாக.

“சரி, நாளை கொண்டு வாங்க,” என விட்டுவிட்டாள் மூதாட்டி. தன் முன்னால் வந்து நின்றது உலகிற்கே படியளக்கும் ஏழுமலையான் என்பதைப் பாமரப் பெண்ணான கங்கம்மா எப்படி அறிவாள்!      மறுநாள், சொன்னபடி அந்த வயோதிகர் வரவில்லை. “இப்படி ஏமாற்றி விட்டாரே கிழவர்” என அவள் பொருமிக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் இறந்தும் போய்விட்டாள். பாட்டிக்கு பணத்துக்கு பதிலாக, மேலான வைகுண்டத்தையே கொடுத்து விட்டார் பரந்தாமன். ஆனாலும், அவர் மானிடப்பிறப்பெடுத்து சீனிவாசனாக பூமிக்கு வந்தவர் இல்லையா! பாட்டிக்கு மறுநாள் காசு கொடுப்பதாக வாக்களித்து விட்டு, கொடுக்கவில்லையே! 

இதனால் தெற்குமாடவீதியிலுள்ள அசுவ சாலையில், இப்போதும் விழாக்காலங்களில் அவர் பவனியாக வரும் போது, பாட்டிக்கு பயந்து கொண்டு மேளதாளம் இல்லாமல் ஒளிந்து கொண்டு செல்கிறார். இந்தக் கதையைப் படித்தவர்களெல்லாம், தீர்க்காயுளுடன் வாழ்ந்து, பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்

படித்தால் தானே பயன்

வீட்டுக்கு வந்த தந்தை பொருட்கள் அங்குமிங்கும் வாரி இறைந்து கிடப்பது கண்டு அம்மாவிடம் சத்தம் போட்டார். இதுதான் வீடு வச்சிருக்கிற அழகா வீட்டை சுத்தமா வச்சாதானே லட்சுமி தங்குவா  வீட்டிலே எத்தனை பேர் இருக்கீங்க  எங்க உன் புத்திர சிகாமணி  அவன்கிட்டே சொன்னா கூட ஒழுங்குபடுத்த மாட்டானா?   என்று கத்தி தீர்த்தார்.

சற்று நேரத்தில் மகன் வந்தான்.  அப்பாவின் கோபத்திற்கான காரணத்தை அறிந்தான்  வேகமாக வேலை நடந்தது. பழைய பொருட்களை எல்லாம் ஓரம் கட்டினான். புதுசை ஒழுங்காக அடுக்கினான்.  வீடு சுத்தமானது  பழைய பேப்பர்களுடன் ஒரு பகவத்கீதை புத்தகமும் இருந்த்து.  அதை தந்தை பார்த்து விட்டார்.

ஏன்டா  முட்டாள்  நாம்  உயிராய் மதிக்கிறது  இந்த புத்தகம்.  இதைப் போய் பழைய பேப்பரோட சேத்துட்டியே என்று கத்தினார்.

அப்பா  நீங்க சொல்றது சரி தான்.  இதை நீங்களோ அம்மாவோ வீட்டிலே இருக்கிறே மத்தவங்களோ ஒரு நாளாச்சம் புரட்டி பார்த்த்துண்டா   படிக்காத புத்தகம் பழை புத்தகக்கடைக்கு தானே லாயக்கு……………….. என்றதும் பகீரென்றது தந்தைக்கு.  மகனின் சொல்லில் இருந்த உண்மையை உணர்ந்தார். அன்று முதல் தினமும் ஆளுக்கொரு ஸ்லோகம் படித்து விளக்கம் அறிந்து கொண்டனர்.