அதிதி தேவோ பவ :

ஓர் எதிரியை வீட்டிற்கு வரவேற்பதென்றாலும் அதை மரியாதையுடன் செய்யவேண்டுமென்பது நம் வேதக் கட்டளையாகும்.

எதிரியின் வீட்டிலிருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படாத வண்ணம் அவரை நன்கு உபசரிக்க வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுடனும், பீமனுடனும் மகத ராஜனான ஜராசந்தனை அணுகியபோது, மதிப்பிற்குரிய எதிரிகளை ஜராசந்தன் ராஜ மரியாதையுடன் வரவேற்றான்.

எதிரி விருந்தினராக இருந்த பீமன் ஜராசந்தனுடன் சண்டை செய்வதாக இருந்தது. இருப்பினும் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவில் அவர்கள் நண்பர்களைப் போலவும், விருந்தினர்களைப் போலவும் ஒன்றாக அமர்ந்திருப்பது வழக்கம்.

பகலிலோ வாழ்வா, சாவா என்ற ஆபத்தான சூழ்நிலையுடன் அவர்கள் போர் செய்தனர். அதுதான் உபசரணை விதியாகும்.

ஒருவன் பரம ஏழையாக இருந்தாலும், குறைந்தது  குடிப்பதற்கு சிறிது நீர் மற்றும் இனிய வார்த்தைகள் ஆகியவற்றையாவது தன் விருந்தினருக்கு அளிக்க வேண்டும் என்பது உபசரணை விதி.

எனவே ஒரு விருந்தினர் நண்பராகவோ அல்லது எதிரியாகவோ இருந்தாலும் அவரை வரவேற்று உபசரிப்பதில் எந்த எந்த  தயக்கம் கூடாது என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது, நாமும் நம்முடைய  விருந்தினர் எதிரியாக இருந்தாலும் அவரை வரவேற்று உபசரிப்பதில் எந்தவித  தயக்கம் காட்டாது  உபசரிப்போம் 

பாடல் 

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே

மூன்றாம் பிறை

இன்று சகல பாவம் போக்கும், செல்வம் பெருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்!இன்று சந்திர தரிசனம் செய்ய மறவாதீர் !இன்று ஜூன் 30-06-2022, சுபகிருது வருடம், ஆனி 16, வியாழக்கிழமை, சந்திர தரிசனம்!

இன்று மூன்றாம் பிறை, சந்திர தரிசனம் செய்வதால் மன நிம்மதி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி உண்டாகும். அமாவாசை முடிந்து மூன்றாம் பிறை தரிசனம் பார்த்து விட்டால் அந்த ஆண்டு இரண்டு மடங்கு வருமானம் செல்வ செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. மூன்றாம் பிறை பார்க்க முடியாவிட்டால் வீட்டில் சிவ வழிபாடு செய்வதும், சிவன் தலையில் இருக்கும் சந்திரனை இன்று மாலை தரிசனம் செய்வது சிறப்பு.வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, ‘பிறை காணுதல்’ என்கின்றனர். பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ‘சந்திர தரிசனம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காண வேண்டும் என்று கூறினார்கள்.

மூன்றாம் பிறை உருவான கதை :

ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். 

உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் . தட்சனோ தனது அறியாமை யால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். 

இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர்.  சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறுபெற்றார்.

சுறுசுறுப்போடு  அதேநேரம் சிறுகச் சிறுக வளர்ந்தால் முழுப்பலனையும் அடைய முடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது இந்த பிறை. இதை வைத்துத்தான் எண்பது வயது நிறைவுற்றவர்களை ‘ஆயிரம் பிறை கண்டவர்’ என்று அவருக்குச் சதாபிஷேகம் செய்து கொண்டாடுகின்றோம். 

பலன்கள் :

அமாவசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வரும் மூன்றாம் பிறை மிகவும் விசேஷமான ஒன்றாகும்.

குறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் இப்பிறையைக் கண்டால் ஓர் ஆண்டு சந்திர தரிசனம் செய்த பலன் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரும் மூன்றாம் பிறையைக் கண்டால் சகல பாவங்களும் தொலையும்.

நான்காம் பிறையை ஏன் பார்க்கக் கூடாது ? 

ஒரு முறை விநாயகப் பெருமான் சந்திரலோகத்துக்கு விஜயம் செய்தார். கையில் கொழுக்கட்டையுடன் வந்திருந்த விநாயகரைக் கண்டு ஏளனம் செய்த சந்திரன் மீது விநாயகர் மிகுந்த கோபம் அடைந்தார். அன்று பிள்ளையார் சதுர்த்தி வேறு. கோபமுற்ற கணபதி, ‘சதுர்த்தியில் உன்னைப் பார்ப்பவர்கள் வீண்பழிக்கு ஆளாவார்கள்!’ என்று சபித்தார். மனம் வருந்திய சந்திரனோ,  தான் அறியாது செய்த தவற்றை மன்னித்து சாப விமோசனம் தரும்படி கேட்டுக்கொண் டான். விநாயகர் சந்திரனை மன்னித்தார்,  ஆனால், மூன்றாம்பிறையைப் பார்ப்பவர்களுக்கு மட்டும் முழு மகிழ்ச்சி பொங்கும் என்று அருளினார்.

நான்காம்பிறையைப் பார்த்ததால் வரும் கெடுபலனை எப்படித் தவிர்க்கலாம்? இதற்கும் புராண காலத்தில் கிடைத்த ஒரு தீர்வைப் பார்ப்போம். 

ஒருமுறை சதுர்த்தியில் வரும் நான்காம் பிறையைப் பார்த்து வீண்பழிக்கு ஆளானார் கண்ணன்.  இதற்குப் பரிகாரமாக, அடுத்த திங்களில் (அடுத்த மாதத்தில்) அமாவாசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் செய்ததோடு கணபதியையும் வேண்டி பழியில் இருந்து விடுபட்டார்.காலை வேளை பிரம்ம முகூர்த்தமாகும். மாலை வேளை விஷ்ணு முகூர்த்தமாகும். எனவே, அந்த வேளையில் சந்திர தரிசனம் செய்து, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும்.திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராக சந்திர தரிசனம் செய்யலாம். திருமணம் ஆகாதவர்கள் பெற்றோருடன் சேர்ந்து மூன்றாம் பிறையை தரிசிக்கலாம். இதனால் குடும்ப ஒற்றுமை பெருகும்.

திருநீறு பூசுவதன் மகிமை

புராண காலத்தில் ஒருநாள் துர்வாச முனிவர் தன் காலை வேளை அனுஷ்டானங்களை முடித்து, சிவனை தியானித்து நெற்றியில் திருநீறு அணிந்து பித்ரு லோகம் புறப்பட்டார். மாபெரும் தவசீலரை எதிரில் கண்ட வானவர்கள் மரியாதை நிமித்தம் அவரை வணங்கி நகர்ந்தனர். துர்வாசர் செல்லும் வழியில் பெரிய கிணறு ஒன்று தென்பட்டது.இவ்வளவு பெரிய கிணறை நாம் பார்த்ததே இல்லையே என்கிற சிந்தனையுடன் அதனுள் ஒரு கணம் கண்களைச் சுருக்கி எட்டிப் பார்த்து விட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அந்தப் பெரிய கிணற்றினுள் நரகத்தின் ஒரு பகுதி இயங்கிக் கொண்டிருந்தது. கடும் தீயும், அமில மழையும், பாம்பு – தேள் போன்ற கடும் விஷ ஜந்துக்களும் அங்கே ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தன.பூலோகத்தில் பாவம் செய்த பலரும் அங்கே வதை பட்டுக்கொண்டிருந்தார்கள். சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

துர்வாச முனிவர் குனிந்து அங்கே பார்த்துவிட்டு நகர்ந்த மறுகணமே திடீரென்று அங்கே நிலைமை தலைகீழாக மாறியது. அந்த நரகத்தில் அதிசயம் நடந்தது. பாம்புகளும் தேள்களும் மலர் மாலைகள் ஆயின. அமில மழையானது ஆனந்தம் தரும் நிஜ மழை ஆனது. சுட்டெரிக்கும் தீ, இதமான தென்றலாக அங்குள்ளோரை வருடியது. நரகம் முழுக்க சுகந்த நறுமணம் வீசியது. அங்கே இருந்த பாவ ஆத்மாக்கள் அனைவரும் ஆனந்தம் கொண்டனர். முகத்தில் பிரகாசம் வீசியது. இந்த நரகத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த கிங்கரர்கள் பயந்துபோய் எமனிடம் ஓடினார்கள்.திடீரென்று சொர்க்கமாக மாறிப் போன நரகம் பற்றிச் சொன்னார்கள். அதிர்ந்து போன எமனும் வந்து பார்த்து அதிசயி த்தான். தர்ம சாஸ்திர நெறிகள் ஒரு வேளை நமக்குத் தெரியாமல் மாற்றப் பட்டு விட்டனவா? அல்லல் பட வேண்டியவர்கள் ஆனந்தமாகத் திரிகிறார்ளே? என்று பதற்றத்துடன் இந்திரனிடம் ஓடினான். வந்து பார்த்த இந்திரனுக்கும் புரிய வில்லை. தேவாதி தேவர்கள் எவருக்கும் இதற்கான காரணம் புரியவில்லை.எனவே, எல்லோரும் சேர்ந்து கொண்டு சர்வேஸ்வரனிடம் போனார்கள். சிரித்தார் ஈசன். தன் நெற்றியைக் காட்டி, இந்தத் திருநீற்றை அகார, உகார, மகார (மோதிர விரல், நடுவிரல், ஆட்காட்டி விரல்) விரல்களால் எடுத்து நெற்றி நிறைய திரிபுரண்டர மாகவே (மூன்று கோடுகளாக) அணிய வேண்டும். இதுதான் முறை.

அகாரம் என்பது பிரம்மனையும், உகாரம் விஷ்ணுவையும், மகாரம் என்னையும் குறிக்கின்றன. எனவே சாஸ்திர நெறிப்படி திருநீறு அணிந்த தவசீலரான துர்வாசர் பித்ரு லோகக் கிணற்றைக் குனிந்து பார்க்கும்போது அவரது நெற்றியில் இருந்து ஒரு சிறு துளி திருநீறு உள்ளே விழுந்து விட்டது. அதனால்தான், சொர்க்கமாக மாறிப் போனது என்றாராம் சர்வேஸ்வரன்.ஒரு சிறிதளவு திருநீறு, பாவம் செய்தவர்கள் மீது பட்டதால் புண்ணியம் செய்தவர்கள் ஆகிப் போனார்கள். ஆகவே நாளும் பூசுவோம் திருநீறு

ஸ்ரீசிவ பெருமானின் பட்டாபிஷேக திருக்கோலம்

*எல்லோரும் ஸ்ரீராமர்* *பட்டாபிஷேகப்படத்தை* *பார்த்திருப்போம்*ஆனால் *ஸ்ரீ சிவ* *பெருமானின்* பட்டாபிஷேகம் படத்தை  அனேகம் பேர் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை.சிவபெருமான் தன்னுடைய திருவிளையாடல்கள் அனைத்தையும் நிகழ்த்திய இடம், மதுரை. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் புகழ் மிக்க தலம் மதுரை. இங்கு சிவபெருமான் தன் அடியார்களுக்கு அருள்புரிய 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார். பக்தர்களைக் காப்பதற்காக தமிழ்ப் புலவராக, சித்தராக, பிட்டுக்கு மண் சுமக்கும் தொழிலாளியாக, விறகு விற்பவராக பல வேடங்களைத் தாங்கி வந்தார். அவரே பாண்டிய நாட்டின் மன்னராகவும் வீற்றிருந்து ஆட்சி புரிந்தார்.இங்கு மீனாட்சியாக அவதரித்திருந்த பார்வதி தேவியைக் கூட, அவர் திருவிளையாடல் புரிந்தே திருமணம் செய்து கொண்டார். 

பின்னர் அவர் தன்னுடைய மனைவி மீனாட்சியோடு மதுரையம்பதியின் அரசராக முடிசூடிக் கொண்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன. மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை மீனாட்சி அம்மன் ஆட்சி. சித்திரைத் திருவிழாவின் 8ம்நாள் விழாவில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. ஆவணி மூலத்திருவிழாவின் 7ம் நாளில், அம்மனிடமிருந்து சுவாமிக்கு ஆட்சி அதிகாரம் மாறும் வகையில்அம்மனிடமிருந்து செங்கோலை வாங்கி சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு, அதுவரையான அம்மன் ஆட்சி நிறைவுற, சுவாமியின் ஆட்சி அரங்கேறுவதாக பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது. ஆவணி முதல் சித்திரை மாதம் வரை எட்டு மாதத்துக்கு சுந்தரேசுவரரின் ஆட்சி நடக்கும் என்பது ஐதீகம். ஆணும், பெண்ணும் சமம் என்பதையும், அவர்கள் சேர்ந்து வாழ்ந்தால் தான் உலகத்தில் நற்பலன்கள் நடக்கும் என்பதையும் உணர்த்தும் விதத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.*ஸ்ரீசிவ பெருமானின்* *பட்டாபிஷேக. திருக்கோலம்*

சிம்மாசனத்தில் நான்கு கரங்களுடன் வீற்றிருக்கும் சிவபெருமான், இரு கரங்களில் மழு,மான் தாங்கியும், ஒரு கரத்தால் அருளாசி வழங்கியபடியும், ஒரு கரத்தால் தனது இடது பக்கம் மடி மீது வீற்றிருக்கும் மீனாட்சி தேவியை அணைத்தபடியும் அருள்கிறார். இடது காலை மடக்கி, வலது காலை தொங்க விட்டிருக்கிறார். வலது காலை, சிம்மாசனத்தின் கீழே வீற்றிருந்து நந்தியம்பெருமானும், காரைக்கால் அம்மையாரும் தாங்குகின்றனர். சிம்மாசனத்தைச் சுற்றிலும் விநாயகர், ஆறுமுகப்பெருமான் மற்றும் முனிவர்களும், ரிஷிகளும் வீற்றிருப்பதே, ‘சிவ பட்டாபிஷேக’ திருக்கோலம் ஆகும்.

சமித்து

சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்.ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன.

வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது

துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது

அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது

நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது

பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது

அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது

வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது

அருகம் புல் :விநாயகருக்கும்,ராகுவுக்கும் பிடித்தது

மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்

பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி

தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும்

 சரஸ்வதிக்கும் பிடித்தமானது

மாதுளை மரம் : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்

சமித்துகுச்சிகளும் பலன்களும்

அத்திக் குச்சி : மக்கட்பேறு.

நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்

எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை

அரசங்குச்சி : அரசாங்க நன்மை

கருங்காலிக்கட்டை:ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும் .

வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.

புரசங் குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி

வில்வக் குச்சி : செல்வம் சேரும்

அருகம்புல் : விஷபயம் நீங்கும்.

ஆலங் குச்சி :புகழைச் சேர்க்கும்.

நொச்சி : காரியத்தடை விலகும்

சப்தவிடங்கதலங்கள்

சப்தவிடங்கத்தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும். இவற்றின் தலைமையிடம் திருவாரூர் ஆகும். பிற விடங்கத்தலங்கள் திருநள்ளாறு, நாகபட்டினம் எனப்படும் நாகைக்காரோணம், திருக்காராயில், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம் ஆகியனவாகும்.

சப்தவிடங்கத் தலங்களில் ஆறு ஷேத்திரத்தில் உள்ள 

தியாக மகாராஜாக்கள் (திருவாய்மூர் தவிர்த்து)

திருஆரூர் – வீதி விடங்கர்

திருநாகை – சுந்தர விடங்கர்

திருநள்ளாறு –  நாக விடங்கர்

திருக்கரவாசல் – ஆதி விடங்கர்

வேதாரண்யம் -புவனி விடங்கர்

திருக்குவளை -அவனி விடங்கர்

இந்த ஏழு ஊர்களிலுமுள்ள சிவன் கோவில்களில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள தியாகராஜர் சன்னதிகளில் “விடங்கர்” என அழைக்கப்படும் இலிங்கங்கள் பூசிக்கப்படுகின்றன. விடங்கர் என்பது “உளியால் செதுக்கப்படாத மூர்த்தி” எனப் பொருள்படும். இந்திரனிடம் முசுகுந்தச் சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட ஏழு சிலைகள் இந்த ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்பது மரபு வரலாறு  இவை உளியால் செதுக்கப்படாத மூலவரை உடைய ஏழு சிவதலங்களாகும். வடமொழி சொல்லான சப்த என்பது ஏழு என்ற பொருளினையும், விடங்க என்பது உளியால் செதுக்கப்படாத எனும் பொருளையும் தருகிறது.

சப்தவிடங்கத்தலங்கள் குறித்து தனிப்பாடல் ஒன்று உள்ளது.

“சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு

காரார் மறைக்காடு காராயில்-பேரான

ஒத்த திருவாய்மூர் உவந்த திருக்கோளிலி

சத்த விடங்கத் தலம்”

‘டங்கம்‘ என்றால் உளியால் பொளிதல், உளியால் பொள்ளாத சுயம்புமூர்த்தியாக, தானே தோன்றியதாகக் கொள்ளப்படுகிறது. மேற்குறிய அனைத்துக் கோயில்களிலும் ‘விடங்கர்‘ என அழைக்கப்படும் பளிங்குக்கல்லில் செய்யப்பட்ட சிறிய லிங்கத்திற்கு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெறுகின்றன. விடங்கர் என்ற சொல் ஆடவல்லான் பெருமானைக் குறிக்கும்போது ‘பேரழகன்‘ என்ற பொருளில் வரும்.

சப்தவிடங்க நடனங்கள்:

ஒவ்வொரு தலத்திலும் இறைவன் ஆடும் ஆட்டத்திற்கு ஒவ்வொரு பெயர் உள்ளது.

1.திருவாரூர் தியாகராசப்பெருமான் – உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய்வரும் உன்னத இயக்கத்தை உணர்த்தும் அஜபா நடனம்

2.திருநள்ளாறு – பித்தன் ஆடுவது போன்ற உன்மத்த நடனம்

3.நாகைக்காரோணம் – கடல் அலைகள் எழுவது போன்று உள்ள தரங்க நடனம்

4.திருக்காராயில் – கோழியைப் போல் ஆடும் குக்குட நடனம்

5.திருக்குவளை – வண்டு மலருக்கும் குடைந்து குடைந்து ஆடுதல் போன்று உள்ள பிருங்க நடனம்

6.திருவாய்மூர் – தாமரை மலர் அசைவது போன்றுள்ள கமல நடனம்

7.வேதாரண்யம் – அன்னப்பறவை அடியெடுத்து வைத்தாற்போலுள்ள ஹம்சபாத நடனம்

இத்தலங்களில் சிவபெருமான் ஆடும் தாண்டவங்கள் சப்த விடங்க தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

ஸ்ரீகுருவே நமஹ

”சிவா  தன் குருவிடம் கேட்டார் குருநாரே என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள்.நான் என்ன செய்வது..?

குரு சொன்னார்,  அவற்றைப் பொருட் படுத்தாதீர்கள். என்னால் முடியவில்லையே.அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள். அதுவும் முடியவில்லையே சரி. அப்படியென்றால் அவற்றைக் கண்டு சிரித்து விடுங்கள்.

குருவே அதுவும் முடியவில்லை.குரு சொன்னார்,அவமானங்களை உங்களால் நிராகரிக்க முடியவில்லை,கடக்க முடியவில்லை,கண்டு சிரிக்க முடியவில்லை என்றால் சீடரே….நீங்கள் அந்த அவமானங்களுக்கு  தகுதியுடையவர்தான்  என்று அர்த்தம்*..இப்ப என்ன பண்ணலாம் நீங்களே முடிவு பண்ணுங்கள்.

குரு பிரம்மா குரு விஷ்ணு

குரு தேவோ மகேஸ்வர;

குரு சாஷாத் பரப்பிரம்மா

தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

முருகப் பெருமானுக்கு ஆட்டுக்கடா வாகனமா?

முருகப் பெருமானுக்கு ஆட்டுக்கடா வாகனமா? (கந்தபுராண நுட்பங்கள்): நாரத முனிவர் நிலவுலகில், எண்ணிறந்த தவமுனிவர்களும் அந்தணர்களும் சூழ்ந்திருக்கச் சிறந்ததொரு சிவவேள்வியினைப் புரியத் துவங்குகின்றார். எதிர்பாராத விதமாக அவ்வேள்வியினின்றும் சிவந்த நிறமுடைய ஆட்டுக்கடாவொன்று வெளிப்பட்டு, விண்ணிலும் மண்ணிலும் எண்திசைகளிலும் எதிர்ப்படுவோர் அனைவரையும் அழித்தொழிக்கத் துவங்குகின்றது. எவரொருவராலும் அதனைத் தடுக்க இயலாத நிலையில் அனைவரும் திருக்கயிலை மலைக்கு அபயம் வேண்டி விரைகின்றனர்.

அங்கு திருவாயிலுக்கருகில் லட்சத்து ஒன்பது வீரர்களுக்கு நடுவில் திருவிளையாடல்கள் புரிந்து மகிழ்ந்திருக்கும் ஆறுமுகக் கடவுளைத் தரிசிக்கின்றனர். கந்தவேளிடமே இதுகுறித்து முறையிடுவோம் என்று கருதி சிவகுமரனின் திருமுன்பு சென்று முறைமையாகப் பணிந்து, ‘ஐயனே, மறைவழி நின்று வேள்வியொன்றினைப் புரிந்து வருகையில் அதனின்று ஒரு ஆட்டுக்கடா தோன்றி காண்பவரையெல்லாம் கடும் சீற்றத்துடன் கொன்று குவித்து வருகின்றது. இன்னமும் ஒரு நாழிகை நேரம் தாமதித்தால் இப்படைப்பிலுள்ள உயிர்கள் யாவையுமே அது அழித்து விடும், நீங்களே காத்தருள வேண்டும்’ என்று விண்ணப்பிக்கின்றனர்.  முருகப் பெருமான் ‘அஞ்சேல்’ என்று அவர்களுக்கு அபயமளித்து வீரவாகுவிடம், ‘அந்த ஆட்டுக்கடாவினை இவ்விடம் கொணர்க’ என்று கட்டளையிட்டு அருள் புரிகின்றான். வீரவாகுவும் விரைந்து சென்று கந்தப் பெருமானின் திருவருளால் அக்கடாவினை அடக்கி அதனுடன் குகக் கடவுளின் சன்னிதிக்கு மீள்கின்றார். அது கண்டு திருவுள்ளம் மகிழும் வேலவன் விண்ணோர்களை நோக்கி, இனி நீங்கள் இது குறித்து அஞ்சாமல் நிலவுலகு சென்று உங்கள் வேள்வியைத் தொடர்வீர்’ என்றருளிச் செய்கின்றான்.

தேவர்கள் அகமிக மகிழ்ந்து நன்றிப் பெருக்குடன், ‘பெருமானே, இன்று நீங்கள் எங்களைக் காத்து அருள் புரிந்துள்ள தன்மையினை யாவரும் உணருமாறு இந்த ஆட்டுக்கடாவினை உங்களது வாகனமாக ஏற்று அதன் மீது எழுந்தருளி வருதல் வேண்டும்’ என்று விண்ணப்பித்துப் பணிகின்றனர். குமாரக் கடவுளும் அதற்கு இசைந்தருளி அன்று முதல் அக்கடாவின் மீது பெருவிருப்புடன் ஆரோகணித்து வலம் வருகின்றான், 

(உற்பத்தி காண்டம்: தகரேறு படலம் – திருப்பாடல் 25) நவையில்சீர் முனிவர் தேவர் நயப்ப நாரதன் என்றுள்ளோன்புவிதனில் வந்து முற்றப் புரிந்தனன் முன்னர் வேள்விஅவர்புரி தவத்தின் நீரால் அன்றுதொட்(டு) அமல மூர்த்திஉவகையால் அனைய மேடம் ஊர்ந்தனன் ஊர்தியாக (சொற்பொருள்: மேடம் – ஆட்டுக்கடா)

நன்றிகள் திரு தேவராஜன் நடராஜன் ஜயா அவர்கள்.   

பன்னிரெண்டு  திருநாமங்கள்

ஆழ்வார்கள்  மிக முக்கியமாகக் கருதும் பன்னிரெண்டு  திருநாமங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. அத்திவ்ய நாமங்களும் அவற்றின்விளக்கங்களும்

1. *கேசவ* – துன்பத்தைத் தீர்ப்பவன்

2. *நாராயண*– உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்

3. *மாதவ* – திருமகள் மணாளனாக இருப்பவன்

4. *கோவிந்த* – பூமியைப் பிரளயத்திலிருந்து காத்தவன் (அ) பசுக்களை மேய்த்தவன்

5. *விஷ்ணு*– அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்

6. *மதுசூதனன்*  – புலன்களாகிய இந்திரியங்களை ஈர்ப்பவன் (அ) *மது* என்னும் *அரக்கனை* *வென்றவன்*

7. *த்ரிவிக்ரம்*– மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்

8. *வாமன* – குள்ளமான உருவம் உடையவன்

9. *ஸ்ரீதர* – ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்

10. *ஹ்ருஷிகேச* – தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்

11. *பத்மநாப* – தனது நாபியிலே தாமரையை உடையவன்

12. *தாமோத*– உரலில் கயிற்றால் கட்டப்பட்ட அடையாளம் கொண்ட வயிறு உடையவன்.

 *பாடல்* 

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டுபலகோடி நூறாயிரம்மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்செவ்வடி செவ்விதிருக் காப்பு

ஓம் நமோ நாராயணாய 

தத்தாத்ரேயர்

” *சுவாமி* ! *ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க ”தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.’எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்…’ என்றார் தத்தாத்ரேயர்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அரசன், “சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே…’ என்றான்.அவனிடம், “பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று,“சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு,“தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்புஆகியவையும்,“நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன்,சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்…“ என்றார் தத்தாத்ரேயர்.

மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்…”மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;“தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.“எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு) உணர்த்தியது.

“பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் – தெரிவித்தது.”ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.”வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது.இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

“எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன். “பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.“பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது. “எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

“பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.“இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

“புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்… “என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.

தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை” பகவான் ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.‌நல்ல சீடனுக்கு எல்லாமே குருதான்.