கிருஷ்ணா கிருஷ்ணா

ஒரு ஊரில் ஒரு ஆதரவற்ற ஏழைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு என்று சொந்தம் அவள் வளர்க்கும் சில மாடுகள் தான். அந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள்.ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம்.ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை. அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொள்ளும் அவர் அந்த பெண்ணிடம் கடிந்துகொள்கிறார்.

“ஏன்மா… உன்னாலே ஒழுங்கா சரியான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா? உன்னாலே எனக்கு எல்லாமே தாமதமாகுது”“மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்…. நான் வீட்டை விட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன். ஆனால், இங்கே வர்றதுக்க்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.”“என்னது ஆத்தை கடக்குறதுக்கு படகுக்கு காத்திருக்கியா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே “கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொல்லிகிட்டே தாண்டிடுறான். நீ என்னடான்னா ஆத்தை கடக்குறதை போய் ஒரு பெரிய விஷயமா சொல்லிகிட்டிருக்கியே…. என்னமோ போ…. இனிமே சீக்கிரம் வரணும் இல்லேன்னா எனக்கு பால் வேண்டாம்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார்.அவர் என்ன நினைச்சு சொன்னாரோ…. ஆனால் அந்த பெண் அதை மிகவும் தீவிரமாக பயபக்தியுடன் கேட்டுக்கொண்டாள்.

மறுநாளிலிருந்து சரியாக குறித்த நேரத்துக்கு பால் கொண்டு வர ஆரம்பித்துவிடுகிறாள்.சந்நியாசிக்கோ திடீர் சந்தேகம் வந்துவிடுகிறது.“என்னமா இது அதிசயமா இருக்கு? இப்போல்லாம் சரியான நேரத்துக்கு வந்துடுறியே?”“எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த மந்திரம் தான் ஐயா…. அது மூலமா நான் ஆத்தை சுலபமா தாண்டிடுறேன். படகுக்காக இப்போல்லாம் காத்திருக்கிறதில்லை”“என்ன நான் சொல்லிக் கொடுத்த மந்திரமா? அதை வெச்சு ஆத்தை தாண்டிடுறியா? நம்பமுடியலியே…. ” என்று கூறும் சந்நியாசி அவள் ஆத்தை தாண்டுவதை தான் நேரில் பார்க்க வேண்டும் என்கிறார்.ஆற்றின் கரைக்கு சென்றவுடன், “எங்கே தாண்டு பார்க்கலாம்” என்கிறார் அந்த பெண்ணிடம். பால்காரப் பெண், கை இரண்டும் கூப்பியபடி “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்துவிடுகிறாள்.

நடந்ததை நம்ப முடியாது பார்க்கும் சன்னியாசிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி மறுபக்கம் தயக்கம். “ஆறு எவ்வளவு ஆழம்னு தெரியலையே…. தவிர கால் உள்ளே போய்ட்டா என்ன செய்றது? ஆடை  நனைந்துவிடுமே…? என்று அவருக்கு பலவாறாக தோன்றியது. ஒரு சில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று கூறியபடி தண்ணீரில் காலை வைக்க முயற்சிக்கிறார். ஆனால் கால் உள்ளே செல்கிறது. சன்னியாசி திடுக்கிடுகிறார்.“அம்மா உன்னாலே முடியுது என்னால ஏன் முடியலே….?” என்கிறார் அந்த பெண்ணை பார்த்து. அந்த பெண் பணிவுடன், “ஐயா…. உங்க உதடு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொன்னாலும் உங்க கை ரெண்டும் உங்க உடுப்பு நனையக்கூடாதுன்னு தூக்கி பிடிச்சிருக்கே….? தவிர ஆத்தோட ஆழத்தை பரீட்சித்து பார்க்கும் உங்க முயற்சி அந்த ஆண்டவனையே ஆழம் பார்க்கிறது போலல்ல இருக்கு!” என்கிறாள்.சந்நியாசி வெட்கி தலைகுனிகிறார்.

கடவுள் மேல் நமது நம்பிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை விளக்க பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய கதை இது.பிரார்த்தனை செய்கிறவர் மனநிலை அந்த பெண்ணின் மனநிலை போலத் தான் இருக்கவேண்டும். அந்த சன்னியாசியை போல அல்ல.

“ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம் “

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s