
திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்ட கோயில்
சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று, கடலுக்கடியில்
ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக உருவம்
தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து,
வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார்.
பிறகு மீன் உருவத்துடன் கடலுக்கடியில் சென்று மகிழ்ச்சியில்
கடலை கலக்கி விளையாடினார். இந்த செயலால் உலகம்
துன்பமடைந்தது.
அப்போது சிவபெருமான் பெரிய கொக்கு வடிவமெடுத்து திருமாலுக்கு தன் தவறை உணர்த்தினார். திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன் பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும், அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காண்கிறோம்.
திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் எனப்படுகிறார்.
கும்பகோணம் அருகிலுள்ள தேவராயன்பேட்டை என்ற ஸ்தலம் முன்னாளில் சேலூர் (சேல் – மீன்) என்று அழைக்கப்பட்டது.
அங்குள்ள சிவபெருமானையும் மீன் வடிவ திருமால் வணங்கியதால், இறைவன் மச்சேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.