
ராமானுஜர் கீழ்திருப்பதியில் தங்கி திருமலை நம்பியிடம் ராமாயணத்தின் தத்துவார்த்த ரகசியங்களை கற்றுக் கொண்டிருந்தார். கோவிந்தன் என்னும் சீடர் திருமலை நம்பிக்கு பணிவிடை செய்து வந்தார். இவர் ராமானுஜரின் உறவினரும் கூட. பூஜைக்காக கோவிந்தன் காலையில் பூப்பறிக்கச் செல்வது வழக்கம். ஒரு நாள் நந்தவன் சென்ற கோவிந்தன் நீண்ட நேரமாக வரவில்லை. ராமானுஜர் அவரைத் தேடி புறப்பட்டார். அங்கே கண்ட காட்சி அதிர்ச்சி அளித்தது. விஷப்பாம்பு ஒன்றைப் பிடித்து அதன் வாயில் கை வைத்துக் கொண்டிருந்தார். கோவிந்தா என்று கத்தியபடி ஓடி வந்தார் ராமானுஜர். அவர் வருவதற்கும் கோவிந்தன் பாம்பை கீழே விடுவதற்கும் சரியாக இருந்தது. கோவிந்தா பாம்போடு ஏன் இந்த விபரீத விளையாட்டு எனக் கேட்டார். அவரோ சிறிதும் அஞ்சாமல் ஊர்ந்து சென்ற பாம்பைப் பார்த்தபடி நின்றார். பின்னர் ராமானுஜரே சற்று நேரத்திற்கு முன்பு இந்த பாம்பு நாக்கை நீட்டியபடி நின்றது. என்னவென அரிய முயன்ற போது முள் அதன் நாக்கில் குத்தியிருக்கக் கண்டேன். அதற்கு உதவி செய்த போது தான் தாங்கள் இங்கு வந்தீர்கள் என்றார். எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டும் நீயே உத்தமன். சிறந்த வைஷ்ணவன் என்பதையும் நிரூபித்து விட்டாய். உன்னைக் கண்டு பெருமை கொள்கிறேன் எனத் தழுவிக்கொண்டார் ராமானுஜர்.