உலகில் மிகவும் தாழ்வானவர்கள் 

பீஷ்மர் சொன்னார்: யுதிஷ்டிரா, முன்னொரு காலத்தில் பல ரிஷிகள் புண்ணிய தீர்த்தங்களுக்கு யாத்திரை செய்தபோது, நடந்த நிகழ்ச்சியைக் கூறுகிறேன், கேள்…

பல ரிஷிகளும், புகழ் பெற்ற  மன்னர்களும், இந்திரனை அடுத்து புண்ணிய தீர்த்தங்களுக்கு யாத்திரை சென்றார்கள். பல புண்ணிய நதிகளில் நீராடிய பிறகு, மிகச்சிறந்த ‘பிரம்மஸிரஸ்’ என்ற நதியை அடைந்தார்கள். அங்கே அகஸ்தியரால் பறித்து வைக்கப்பட்ட தாமரை மலர் காணாமற் போயிற்று….காலப்போக்கில் தர்மம் குறைந்து வருவதால் இம்மாதிரி நிகழ்ச்சி நடக்கத் தொடங்கியிருப்பதாகக் கருதிய அகஸ்தியர், இனி பூவுலகில் இருப்பது தனக்கு உகந்ததல்ல என்றும், தர்மம் நசித்துப் போவதையே தாமரை மலரின் களவு நிரூபிப்பதாகவும் கூறி வருத்தப்பட்டார்.அகஸ்தியர் மனம் நொந்து பேசியதைக் கேட்ட மகரிஷிகளுக்கும், மன்னர்களுக்கும் மனவருத்தம் ஏற்பட்டது. அப்போது அவர்கள், யார் அந்த மலரை எடுத்திருந்தாலும், அவன் பெரும் பாவம் செய்தவன் என்று கூறி, பெரும் பாவங்கள் எவை என்பதைப் பட்டியலிட்டார்கள்.

1. தன்னைத் திட்டியவனைப் பதிலுக்குத் திட்டுகிறவனும், தன்னை அடித்தவனைப் பதிலுக்கு அடிக்கிறவனும் எவ்வளவு தாழ்ந்தவர்களோ, அவ்வளவு தாழ்ந்தவன்-இந்த மலரை எடுத்தவன், என்று ப்ருகு மகரிஷி கூறினார்.

2. நகரங்களில் திரிந்து பிச்சை எடுத்து வாழ்பவனுக்கு நிகரானவன் – அம்மலரை எடுத்தவன், என்று வசிஷ்டர் சொன்னார்.

3. தன்னிடம் பாதுகாப்பிற்காகப் பிறரால் கொடுத்து வைக்கப்பட்ட பொருளின் மீது ஆசை வைப்பவனுக்கு நிகரானவன்-அம்மலரை எடுத்தவன் என்று கச்யபர் சொன்னார்.

4. துந்து மகாராஜா, நண்பர்களிடம் நன்றி மறந்தவன், தான் மட்டும் தனியாக உணவு உட்கொள்பவன், ஆகியோருக்கு நிகரானவன் – அந்த மலரை எடுத்தவன் என்று சொன்னான்.

5. புரூரவன், மனைவியின் தயவிலும், மாமனார் தயவிலும் வாழ்கிறவனுக்கு நிகரானவன்-அம்மலரை எடுத்தவன் என்று சொன்னார்.

6. சுக்கிரன் கூறினார்: பகலில் மனைவியுடன் சேர்பவனுக்கு நிகரானவன் – அம்மலரை எடுத்தவன், என்றார்.

7. நாபாகன் என்னும் அரசன் சொன்னது:

பணத்தைப் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுப்பவனுக்கு நிகரானவன் – மலரை எடுத்தவன், என்றார்.

8. பரத்வாஜர் என்ற ரிஷி, பொய் பேசுபவனும், கொலை செய்பவனும் அடைகின்ற பாவங்களைப் பெறுவான்- அந்த மலரை எடுத்தவன், என்று சொன்னார்.

9. அநியாயமாக மனம் போன போக்கில் ஆட்சி நடத்தும் அரசன் பெறுகின்ற மோசமான கதியைப் பெறுவான், இந்த மலரை எடுத்தவன் என்று சொன்னார், அஷ்டகர் என்ற ரிஷி.

10. காவலர் என்பவர் சொன்னார்: தான் கொடுத்த தானத்தைப் பற்றி வெளியே பறை சாற்றிக் கொள்பவன் பெறுகின்ற பாவத்தை, அம்மலரை எடுத்தவன் பெறுவான்.

11. அருந்ததி கூறினாள்: மாமியாரை அவமதித்தும், கணவனை வெறுத்தும் நடந்து கொண்டும், நல்ல ஆகாரங்களைத் தான் மட்டும் உண்டும் வாழ்கிற பெண் அடைகிற பாவத்தை அடைவான் – அந்த மலரை எடுத்தவன்.

12. பசுஸகன் என்ற மன்னன் கூறினான்: வேதம் ஓதுவதை விட்டுச் சுகமாக வாழ நினைக்கும் பிராமணனும், இந்திரியங்களை அடக்காத சந்நியாசியும் என்ன உலகைப் பெறுவார்களோ, அதைப் பெறுவான் அம்மலரை எடுத்தவன்.

இப்படிப் பெரும் பாவம் செய்தவர்களுக்கு நிகராக அம்மலரை எடுத்தவனை அங்கு கூடியிருந்த ரிஷிகளும், மன்னர்களும் வர்ணித்தபோது இந்திரன் பேசினான்:….அம்மலரை எடுத்தவன் புண்ணிய லோகங்களை அடைவான் என்று ஆசீர்வாதம் செய்யுங்கள். ஏனென்றால் அம்மலரை எடுத்தவன் நான்தான். மலர் வேண்டுமென்றோ, அதன் மீது ஆசைப்பட்டோ, அதை நான் எடுக்கவில்லை…….உங்களுக்கெல்லாம் கோபம் வரவழைத்து, தர்மத்தை மீறி நடப்பவர்கள் பற்றி நீங்கள் கூறும் வாக்கியங்களைக் கேட்க நான் விரும்பினேன். என்றும் அழியாத வாக்கியங்களை இப்போது கேட்டேன். பாவம் செய்தவர்களின் பட்டியலை உங்கள் கோபத்தினால் நீங்கள் இப்போது வெளியிட்டீர்கள். இது என்றும் அழியாத தர்ம சாத்திரமாகட்டும்,’ என்றான் இந்திரன்.

இப்படிக் கூறிய இந்திரன், அந்த மலரை அகஸ்தியரிடம்  கொடுத்து, ‘இதைப் பெற்றுக் கொள்ளுங்கள். தர்மத்தை மீறுபவர்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதற்காக, நான் செய்த காரியத்தை பொறுத்துக் கொண்டு என்னை மன்னித்து விடுங்கள்.’ என்று கேட்டுக் கொண்டான். அகஸ்தியரும், மற்ற முனிவர்களும், மன்னர்களும் கோபம் நீங்கியவர்களானார்கள்.யுதிஷ்டிரா, இந்த வரலாற்றைப் படிப்பவன் நல்ல பிள்ளைகளைப் பெறுவான். புகழ் பெறுவான். ரிஷிகளால் கூறப்பட்ட இந்த உபதேசம் கேட்கிறவனுக்கு நல்ல கதியைக் கொடுக்கும், என்றார் பீஷ்மர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s