அஷ்ட சிரஞ்சீவிகள்

.

ஒரு சிற்பமும் சில தேடல்களும் ……இணையத்தில் நேபாள நாட்டின் திருக்கோயில்களைப் பற்றிய தகவல்களை நுனிப்புல் மேய்ந்து கொண்டிருந்தேன்.காத்மண்டு அருங்காட்சியக இணையதளத்தில்,ஒரு வித்யாசமான சிற்பம் கண்ணில் பட்டது அதில் கீழ்வரும் குறிப்பினை இணைத்திருந்தனர்.

“Shri Ashta Ciranjiva,   Sri Bhagwati Bahal Temple,Naxal, Kathmandu, Nepal”

அடியேனின்,  காத்மண்டு,நக்சல, ஸ்ரீ பகவதி திருக்கோயில் பற்றிய பதிவு:ஸ்ரீ பகவதி திருக்கோயில், நக்சல,காத்மண்டு நவதுர்க்கா தேவியர் தரிசனம். 

இணையத்தில் முயன்று தேடியதில், ” ஸ்வாமி” அவர்கள் அஷ்ட சிரஞ்சீவிகள் பற்றி எழுதிய கட்டுரையொன்று கண்களில் பட்டது. அதனை அப்படியே அன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன்.

சிரஞ்சீவி என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு ‘நீண்ட ஆயுளை உடைய’ அல்லது ‘நிரந்தரமாக வாழும்’ ஒருவர் என்று அர்த்தம் கூறலாம். சனாதன தர்மம் என்னும் இந்தத் தொன்மையான கலாச்சாரத்திலுள்ள பல புராணங்கள் மற்றும் இதிஹாசங்களிலிருந்து, எட்டு சிரஞ்சீவிகள் இருப்பதாக அறிகிறோம். அவர்கள் மார்க்கண்டேயர், மஹாபலி, ஹனுமான், விபீஷணன், பரசுராமர், க்ருபாச்சாரியார், அஸ்வத்தாமன் மற்றும் வேத வியாசர் ஆகியோர். இவர்களில் மார்கண்டேயரைத் தவிர மற்ற அனைவருமே மஹாவிஷ்ணுவோடு தொடர்புடையவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்கண்டேயர் சிவபெருமானால் யமனிடமிருந்து காக்கப்பட்டதால் மரணமில்லாப் பெறுவாழ்வைப் பெற்றார். இது பக்தி யோகத்தின் உயர்ந்த நிலையான முழுமையான சரணாகதியின் விளைவு. சிரஞ்சீவி நிலையை அவர் வரமாகக் கேட்டுப் பெறவில்லை. சூழ்நிலை காரணமாக அவருக்கு அந்த நிலை தவிர்க்கமுடியாமல் ஏற்பட்டது என்றே தோன்றுகின்றது. இது காலாந்தகன் என்று போற்றப்படும் எந்தை ஈசனின் மற்றொரு திருவிளையாடலாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

பரசுராமர் மஹாவிஷ்ணுவின் தசாவதாரம் எனும் பத்து அவதாரங்களில் ஒன்று. பத்தில் உயர்ந்தது அந்த அவதாரமா எனில் நிச்சயமாக இல்லை. ராமரும், கிருஷ்ணரும் அவரை விடவும் அதிகப் புகழ் வாய்ந்த அவதாரங்கள் மட்டுமல்லாமல், இன்றளவும் கடவுளாக கோடிக்கணக்கான பக்தர்களால் வழிபடப்படுபவர்கள். நரசிம்மரும் அவ்வாறு வழிபடப்படுபவரே. ஆனால் பரசுராமரின் வாழ்க்கை தனித்துவம் வாய்ந்தது. அவர் முனிவரின் மகனாக இருந்தாலும் (பிறப்பு மற்றும் வளர்ப்பால் அந்தணர்), க்ஷத்ரிய குலத்தை வேரோடு அழிக்க மிக நீண்ட காலம் தனியொருவனாகப் போர் தொடுத்து வந்த அவர் க்ஷத்ரியனாகவே வாழ்ந்தார். தந்தையின் கட்டளையைை ஏற்றுத் தனது தாயாரின் தலையைக் கொய்தவர் (பின்னர் தாயை உயிர்ப்பிக்க வரம் பெற்றார்). கார்த்தவீர்யார்ஜுனனை அழித்தது தொடங்கி, கர்ணனின் குருவாக இருந்தது, தர்மம் சாஸ்தாவின் ஏழு திருக்கோவில்களை (சபரிமலை இதில் ஆறாவதாகும்) ஏழு சக்கரங்களுடன் தொடர்புடைய சக்தி மையங்களாகப் பிராணாப் பிரதிஷ்டை மூலம் நிறுவியது என்று இவரது அசாதாரணமான செயல்கள் புராணம் மற்றும் இதிகாசங்களில் பல இடங்களிலும் இருப்பது இவரது நீண்ட வாழ்வுக்குச் சான்று. ஆயின், ஏன் ராமபிரானோ, கிருஷ்ண பரமாத்மாவோ இன்றி பரசுராமர் மட்டும் சிரஞ்சீவி என்ற கேள்விக்கு விடை அறிவது அரிது. ‘மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார், கண்துஞ்சார், கருமமே கண்ணாயினார்’ என்ற முதுமொழிக்கு முன்னுதாரணமான கர்மயோகி பரசுராமர்.

மஹாபலி ஒரு அசுரர் குலப் பேரரசன். வாமன அவதாரத்தில் மஹாவிஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டபோது, நிலம் மற்றும் வான் போக மூன்றாவதற்குத் தனது தலையையே சமர்ப்பித்து அதன் மூலம் தர்மத்தை நிலை நாட்டிய பெருமை உடையவர். பாதாள லோகத்தை என்றும் ஆள்வதாகக் கருதப்படும் இவரது புற உலக வருகை (வருடம் ஒரு நாள் மட்டும்) ஓணம் பண்டிகையாக இன்றளவும் கொண்டாடப்படுகின்றது. புராணங்களில் தீயோராகச் சித்தரிக்கப்படும் அசுரர்களிலிருந்து இவர் நிச்சயம் மாறுபட்டவர்.

ஹனுமானும், விபீஷணனும் இராமாயண காலத்தவர். இருவருமே ராமபிரானுக்குத் தன்னலமின்றி உதவியதன் மூலம் சிரஞ்சீவி ஆனவர்கள். ஹனுமான் தன்னிகரற்ற வலிமை மற்றும் திறனுடையவராக இருந்தாலும், சுக்ரீவனுக்கு அமைச்சராகவும், ராமபிரானுக்கு அடியவராகவும் இருந்ததன் மூலம் ‘நான்’ என்ற அகந்தையை முற்றிலும் கடந்த, பணிவின் பெருமையை உலகிற்கு உணர்த்திய பெருமான். இன்றளவிலும் திருக்கோயில்களில் இறைவனாக வழிபடப்படுபவர். ராமாயண காலத்தவரான ஹனுமான் மஹாபாரதத்திலும் ஓரிரு இடங்களில் வருகிறார். பீமன் (வாயுவின் மகன் ஆதலால் ஹனுமானுடைய சகோதரன் முறை) மற்றும் அர்ஜுனன் ஆகியோர் இவரைச் சந்தித்து ஆசி பெறுகின்றனர். உண்மையான பக்தி என்றால் என்ன என்பதற்கு உதாரண புருஷராக விளங்கும் ஹனுமான், ராமாயண உபன்யாசம் நிகழும் இடங்களில் எல்லாம் இன்றும் இருந்து ராம பக்தியில் திளைப்பதாக ஒரு நம்பிக்கை.

விபீஷணன் அசுரனாக இருந்தாலும், பராக்கிரமம் வாய்ந்தவனாக அறியப்படாமல், நீதி, தருமம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து நெறியுடன் வாழ்ந்து, ராமபிரானின் அருளைப் பெறுகிறார்.

வேத வியாசர், க்ருபாச்சாரியார், அஸ்வத்தாமன் ஆகியோர் மஹாபாரத காலத்தவர்.

வியாசர் மாமேதை. நான்கு வேதங்களைத் தொகுத்ததோடு, மஹாபாரதம், பாகவதம், பதினெண் புராணங்கள் ஆகியவற்றை இயற்றி உலகிற்கு அளித்தவர் (இவர் ராமாயண காலத்திற்குப் பிந்தையவர், ஆகையால் அதை மட்டும் இவர் இயற்றவில்லை). பாண்டவர் மற்றும் கௌரவர் ஆகியோருக்கு மூதாதையர். வெறும் பிறப்பு (அந்தணராகிய முனிவருக்கும் மீனவப் பெண்ணிற்கும் பிறந்தவர் அவர்) மட்டுமே ஒருவரது வாழ்வை நிர்ணயிப்பதில்லை என்பதற்குச் சிறந்த உதாரணம் அவருடைய வாழ்வு.

க்ருபாச்சாரியார் துரோணாச்சாரியாரைப் போன்ற குலகுரு. ஏட்டுக் கல்வி மற்றும் போர்த்திறனைப் பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு கற்பித்தவர். மஹாபாரதப் போரில் கௌரவ சேனையிலிருந்து போரிட்டாலும், நடுநிலை தவறாதவர் என்று அறியப்பட்டவர். அதைத் தாண்டி சிரஞ்சீவி ஆகும் அளவிற்கு இவருடைய சிறப்பென்ன என்பது கேள்விக்குறியே.

இறுதியாக உள்ள அஸ்வத்தாமன் மட்டுமே, முன்பு குறிப்பிடப்பட்ட ஏழு பேரிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சிரஞ்சீவியாக உள்ளார். துரோணாச்சாரியாரின் மகனான இவர், பிறப்பிலேயே மிகுந்த வலிமையைப் பெற்றிருந்தார் (சிரஞ்சீவியாகவே இவர் பிறந்தார் என்றும் குறிப்பிடுவர்). ஆனால், கண்மூடித்தனமான கோபத்தால் போர் முடிந்த பின்னர் செய்த பழிச்செயல் (பாண்டவர்களின் குழந்தைகளை, இரவில் அவர்கள் உறங்கும்போது கொன்றது) காரணமாக, கிருஷ்ணரால் சபிக்கப்பட்டு, தனியாகத் திரிந்து நீங்காத துன்பம் அனுபவிக்கும் பொருட்டு சிரஞ்சீவித்துவம் ஒரு சாபமாக அளிக்கப்பட்ட இழுக்கை உடையவர் இவர் ஒருவரே.

சிரஞ்சீவித்துவம் எனும் நீண்ட ஆயுள் என்பது, படைப்பில் (big bang எனும் பெருவெடிப்பு) தொடங்கி, ஊழிக்காலம் எனும் பேரழிவு (extinction) வரையுள்ள காலங்களான நான்கு யுகங்களிலும், எடுத்த பிறவியிலேயே மரணமின்றித் தொடர்ந்து வாழ்வதைக் குறிக்கின்றது. இந்த நான்கு யுகச் சுழற்சியானது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தற்போது நாம் 84வது படைப்புச் சுழற்சியில் உள்ளோம் என்று யோக வழிமுறையில் குறிப்பிடுவதுண்டு. இச்சுழற்சி 114 முறை நிகழும் என்பர். அதன் பின்னர் என்னவாகும் என்று யோகிகளே அறியார். நமது உடலிலுள்ள 114 சக்கரங்கள் (112 உடலுக்குள், 2 உடலுக்கு வெளியே, 112ல் 108 மட்டுமே யோகத்தின் மூலம் ஆளுமைக்கு உட்படுபவை) இதன் குறியீடே ஆகும். அகத்தியர், பதஞ்சலி போன்ற உயர்ந்த யோகிகள் பல யுகங்கள் வாழ்ந்தால், அவர்களையும் சிரஞ்சீவியாகக் கருதலாாமா கூடாதா என்று கேள்வி கேட்போரும் உளர்.

சிரஞ்சீவி என்ற ஒரே பிறவியாக நீண்ட காலம் வாழும் நிலையானது அவ்வாறு உள்ள அனைவருக்கும் இறையருளால் வழங்கப்பட்டது. ஆனால், மார்க்கண்டேயர், ஹனுமான் மற்றும் பரசுராமர் போன்று பிரம்மச்சாரியாக (இல்லற வாழ்வைத் துறந்தோர்) இல்லாதோர், தமது சந்ததியினர் அனைவரும் தொடர்ந்து பிறந்து மடிவதைக் காண்பது இந்நிலையில் தவிர்க்க முடியாதது. ஞானோதயம் அடையாத மனிதர்களுக்கு இவ்வாறு வாழ்வது என்பது மிகக் கொடுமையான நிலையே.

அமரத்துவம் என்ற நிலையை அடையப் பல செல்வந்தர்கள் பல்வேறு காலங்களிலும் முயன்று வந்தது மற்றும் வருவதைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். மரபணுவில் மாற்றம் ஏற்படுத்துவதன் (gene editing) மூலம் நோயற்ற தன்மையை ஏற்படுத்தி ஒருவரது ஆயுளை நீட்டிக்க நிகழும் முயற்சிகள் இவ்வகையானவையே. இவை சரியா, தவறா என்ற விவாதங்கள் எப்போதும் தொடரும். ஆனால் இத்தகைய முயற்சிகள் உடலின் வாழ்நாளை நீட்டிக்க முயல்வதாகவே உள்ளன.

முக்தி அல்லது வீடுபேறு என்ற நிலை, பிறப்பு-இறப்பு என்ற சுழலிலிருந்து முற்றிலுமாக விடுபட்ட மரணமில்லாப் பெருவாழ்வு என்று ஆன்மீகத்தில் அறியப்படுகின்றது. இதுவும் ஒருவகையில் சிரஞ்சீவித்துவமே. ஆனால், இந்நிலையை அடையும் யோகி மற்றும் ஞானியர், ‘நான் உடல் அல்ல, நான் மனமும் அல்ல,’ என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து, அழியக்கூடிய தங்களது உடல் மற்றும் மனத்திலிருந்து விலகியிருக்கும் வித்தையை அறிந்தோர். எனவே, ஞானோதயம் அடைந்தோர், படைப்பு மற்றும் படைத்தவன் தனி என்ற இருமை நிலையைக் கடந்து, தங்களது உடல் (மற்றும் மனம்) ஆகிய தளைகளைக் கடந்து, நிர்குண பிரம்மாகிய இறையுடன் ஒன்றி, சிரஞ்சீவியாகவே வாழ்கின்றனர். எனவே, யோகியர் மற்றும் சித்தர்களின் ஜீவ சமாதிகள் சிரஞ்சீவிகளின் இருப்பிடங்களே. பிறப்பு-இறப்பு அற்ற இப்பேரானந்த நிலையானது, மனிதராகப் பிறந்த எல்லோருக்குமே சாத்தியம்.எனவே, ஒருவர் சிரஞ்சீவி ஆவதற்கான காரண காரியங்களை ஆராய்வதை விட, சிரஞ்சீவிகளின் செயல்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் என்ன என்பதை அறிவது, செம்மையான வாழ்விற்கு வழிகாட்டலாம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s