
உணவில் எண்ணெய்க்கு தனித்துவம் உண்டு. சமையல் எண்ணெயில் பல ரகங்கள் உள்ளன. அவற்றில் ரைஸ்பிரான் எண்ணெயும் ஒன்று. நெல்லில் இருந்து அரிசியை பிரிக்கும் போது அரிசி உமி இடையே அதிக சத்து மிக்க பொருள் படிந்து இருக்கும். கைக்குத்தல் முறையில் பிரித்தால் அரிசியில் இந்த பொருள் சேர்ந்துஇருக்கும். இயந்திர முறையில் பிரித்தால் உமியுடன் அகன்றுவிடும்.
இதன் பெயர் தவிடு. ஆங்கிலத்ஹ்டில் ரைஸ்பிரான் என்பர். தவிட்டில் 21 சதவீதம் உள்ள எண்ணெய் சத்து உடல் நலனுக்கு உகந்தது.
உடல் நலனுக்கு ஏற்றதாக மூன்று வகை எண்ணெயை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. அவற்றில் ஒன்று ரைஸ்பிரான் எண்ணெய் மற்றவை ஆலிவ் மற்றும் கார்ன் எண்ணெய். இவற்றில் ஆலிவ் எண்ணெய் விலை மிக அதிகம். பொதுவாக பளிச் வெண்மை நிறத்துக்கு மக்களிடையே வரவேற்பு அதிகம். இந்த மன நிலையை அறிந்த உணவுப்பொருள் வணிக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புக்களை வேதியியல் முறையில் பிளீச் செய்கின்றன. இதனால் சமையல் எண்ணெய் இயற்கை நிறம் நுண்ணூட்டச் சத்துக்களும் காணாமல் போய்விடும். ரைஸ்பிரான் எண்ணெயில் ஒரைசனால் என்ற அன்டி ஆக்ஸ்டன்ட் உள்ளது. உடலில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதை உணவாகக் கொண்டால் இதயம் சம்பந்தமான நோய் பாதிக்கும் வாய்ப்பு குறையும். கிழக்காசிய நாடான ஜப்பானில் இதை ஹார்ட் ஆயில் என்றும் அமெரிக்காவில் ஹெல்த் ஆயில் என்றும் அழைக்கின்றனர். ரைஸ்பிரான் எண்ணெயில் உள்ள லைப்போயிக் என்ற அமிலச்சத்து ரத்தத்தில் சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. தோலில் சுருக்கம் விழுவதை தடுக்கிறது.
மாதவிடாய் காலங்களில் பெண்களின் வலியைப் போக்க உதவுகிறது. தேவையான வலிமை மற்றும் ஆற்றலை தருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த எண்ணெயில் உறிஞ்சும் திறன் குறைவு. இதை பயன்படுத்தி தயாரிக்கும் உணவில் பிசுபிசுப்பு தன்மை அதிகம் இருக்காது. செரிமான சக்தியும் அதிகம். ரைஸ்பிரான் எண்ணெய்க்கு தனி மணமோ சுவையோ கிடையாது. சமைக்கும் பொருட்களின் மணத்தையும் சுவையையும் கொண்டிருக்கும். தரமான உணவுப்பொருட்கலை உண்டு உடல் நலம் பேணுவோம்.
தகவல் நன்றி சிறுவர் மலர்