
முதலில் பிறந்தது மூத்தது என்று அழைக்கப்படும். போட்டி தேர்வுகளில் முதலில் வருபவர்களுக்கே வெற்றி என்ற மரியாதை பரிசு கிடைக்கும். அரச குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்தவருக்கு மட்டுமே அரியணை ஏறும் தகுதி அளிக்கப்பட்டது.
தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்த போது முதலில் வெளிவந்த விஷத்தை, மும்மூர்த்திகளில் மூத்தவரும் முதல்வருமான சிவ பெருமானே எடுத்து உண்டு எல்லோரையும் காப்பாற்றினார்.
அதே திருப்பாற்கடலில் இருந்து மஹாலட்சுமிக்கு முன்பாக முதலில் வெளிவந்த தேவியே மூத்த தேவி என்ற ஜேஷ்டா தேவி ஆகிறார்.
வடமொழியில் ஜேஷ்ட என்ற மூத்த என்று பொருள். ஜேஷ்ட புத்ரன் என்றால் மூத்த மகன் ஜேஷ்ட புத்ரி என்றால் மூத்த மகள் என்று பொருள்.
மூத்த தேவி என்ற தவ்வை தாயின் கைகளில் இருப்பது முறமும் துடைப்பமும் தாயின் தேரில் பறக்கும் கொடியில் இருப்பது காகம்.
அன்றும் இன்றும் என்றும் ஒரு வீட்டில் காலை வேளையிலும் மாலை வேளையிலும் வீட்டில் உள்ள குப்பைகளை வெளியேற்றி முதல் மரியாதையை பெறுவது அங்குள்ள துடைப்பமும் முறமும் மட்டுமே!
அது மட்டுமல்லாமல் எல்லா வீடுகளிலும் நெல் மணிகளில் உள்ள பதர்களை (வெற்று நெல்) முறத்தில் இட்டு நீக்கிய பிறகே களஞ்சியத்தில் சேர்ப்பார்கள். உணவுக்கு தேவையான அரிசியை சமைப்பதற்கு முன்பு முதலில் முறத்தில் இட்டு புடைத்து அதில் உள்ள கற்கள், குருணைகளை நீக்கிய பிறகே உலையில் இட்டு சமைப்பார்கள். அப்படி சமைத்த உணவை உண்பதற்கு முன்பு அதில் ஒரு பிடி உணவை காகத்திற்கு வைத்து விட்டுதான் எல்லோரும் உண்பார்கள்.
காகங்கள் என்பது முன்னோர்கள் என்ற மூத்தோர்களின் தூதுவர்களாக செயல்படுகின்றவை. மூத்தவரான சனி பகவானின் வாகனமும் இவையே.
இப்படி துடைப்பம், முறம், காகம் இவை அனைத்தும் ஒரு வீட்டின் சுத்தம் சுகாதாரம் ஆரோக்யம் அனைத்திலும் முதல் மரியாதை பெறுவது என்பதன் மூலமாக இவைற்றை தன் அடையாளமாக கொண்ட மூத்த தேவி என்ற ஜேஷ்டா தேவிதான் முதல் மரியாதை பெறுகிறாள் என்பதை தெளிவாக காணலாம்.
எனவே எந்த வீட்டில் துடைப்பம்,முறம், காகம்,இவற்றிற்கு முதல் மரியாதை கிடைக்கவில்லையோ அந்த வீட்டில் மூத்தவள் என்ற தவ்வை தாய்க்கு ஜேஷ்ட தேவிக்கு மதிப்பில்லாமல் போய்விடும். மூத்தவளுக்கு மதிப்பில்லாத இடத்தில் இளையவள் என்ற லட்சுமி தேவி நுழைய மாட்டாள்.
உறைவிடம் என்ற வீட்டில் சுத்தமும் ஆரோக்யமும் இருந்தால் மட்டுமே தனமும் தான்யமும் நிறைந்து விளங்கும். ஏனென்றால் தூய்மை இல்லாத தானியத்தை உண்டால் உடல் ஆரோக்யம் நன்றாக இருக்காது.உடல் ஆரோக்யம் கெட்டால் நோயின் காரணமாக தனத்தை இழந்து வறுமை கடனுக்கு ஆளாகும் நிலை வரும்.மூத்தோர்களின் தூதுவரான காகத்திற்கு முதல் மரியாதை கொடுத்து உண்ணும் வீட்டில் முன்னோர்கள் ஆசி குடிகொள்ளும்.
எனவே ஜேஷ்டா தேவி என்ற தவ்வை தாயின் உண்மை பொருளை உணர்ந்து ஒவ்வொரு வீட்டிலும் மூத்தவள் என்ற மூதேவி அன்னைக்கு உரிய மரியாதையை கொடுத்தால் அந்த வீட்டில் இளையவள் என்ற லட்சுமி தேவி வாசம் செய்வாள்.
கை விரல்களில் உயர்ந்து நிற்பது அதாவது மூத்து நிற்பது நடுவிரல் மட்டுமே. அந்த மூத்தவிரல் என்பது மூத்தவரான சனிகிரகத்திற்கு உரியது. சனிக்கு நீதி தேவன் என்ற தகுதியும் உண்டு. நீதியை வழங்குவதற்கு நடுநிலை என்பது முதன்மையானது. அதன் அடையாளமாகவே 5 விரல்களில் சனி தேவனின் விரல் நடுவில் இடம்பெறுகிறது. அது மட்டுமல்லாமல் மஹா லட்சுமியை குறிக்கும் சுக்ரனின் துலாம் என்ற தராசு இராசியில் தான் நீதிதேவன் சனி பகவான் உச்சம் பெற்று அமர்கிறார். அதாவது சனி எங்கே உச்சமோ அங்கே தவ்வை என்ற ஜேஷ்டா தேவியும் உச்சம்.
அது மட்டுமல்லாமல் மனித உடலில் கால் பாதங்களை குறிப்பது மீன ராசி ஆகும் அதிலும் சூட்சுமமாக கால் பாதங்களை குறிக்கும் நட்சத்திரமாக இடம்பெறுவது ரேவதி நட்சத்திரமாகும். அந்த ரேவதி நட்சத்திர தேவதையாக வீற்றிருப்பது சனி பகவான் தான். அதே ரேவதி நட்சத்திரத்தில் தான் மஹாலட்சுமியை குறிக்கும் சுக்ரனும் உச்ச பலத்தை அடைகிறார். எந்த ஒரு மனிதனும் வீட்டை விட்டு வெளியில் சென்று வீடு திரும்பும் போது தன் கால்பாதங்களை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்த பிறகே வீட்டின் உள்ளே நுழைகிறான். அப்படி கால்களை கழுவும் போது அங்கே முதல் மரியாதை பெறுவது சனிபகவானும் ஜேஷ்டா தேவியும் தான். இதை ஆழ்ந்து கவனித்தால் இங்கேயும் மூத்தவள் என்ற ஜேஷ்டா தேவி முதல் மரியாதை பெறும் இடத்தில் தான் இளையவள் என்ற லட்சுமியும் தன் அக்காளை தொடந்து அங்கே நுழைகிறாள் என்பதை புரிந்து கொள்ள இயலும்.