
நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர், சிவபெருமானிடம் அவசரத் தேவைக்கு பொன் கேட்டார். இறைவனும் மறுப்பின்றி 12,000 பொன்களை கொடுத்தாராம். சுந்தரர் உடனே ஈசனிடம் ஸ்வாமி இவ்வளவு பொன்களையும் என்னால் சுமந்து செல்ல முடியாது. இதனை எனக்கு திருவாரூரில் கிடைக்குமாறு அருள் புரியுங்கள் எனக் கூறினார். ஈசன் உடனே சுந்தரரிடம் நீ இந்த பொன் மூட்டையை இங்குள்ள மணிமுத்தாறில் போட்டு விட்டு ஆரூரில் கமலாலயத்தில் எடுத்துக் கொள் எனக் கூறினாராம். சுந்தரரும் அவ்வாறே செய்து விட்டு திருவாரூக்கு சென்று விட்டார்.
சில நாட்கள் கழித்து சுந்தரரின் மனைவி பரவை நாச்சியார் அவரிடம் அவசரமாக பொன் தேவைப்படுகிறது எனக் கூறியதும், மனைவியை அழைத்துக் கொண்டு கமலாலயத்திற்கு அழைத்துச் சென்று ஈசன் பொன் அளித்த கதையை கூறினார். அதைக் கேட்டதும் பரவைக்கு வியப்பு தாளவில்லை. ஆற்றில் போட்டு விட்டு குளத்தில் எடுப்பதா என வினவினார்.

சுந்தரர் உடனே குளத்தில் இறங்கி சிவபெருமான் மேல் பதிகம் பாடியதும், இறைவன் அருளால் மணிமுத்தாற்றில் போட்ட பொன் கமலாலயத்தில் கிடைத்தது. அந்த பொன் உண்மையான பொன்னா என சோதிக்க த்யாகராஜ ஸ்வாமி ஆலயத்தில் வீற்றிருக்கும் விநாயகப் பெருமானிடம் சுந்தரர் பொன்னை உரைத்து தரச் சொன்னார். அதனால் அன்றிலிருந்து அந்த விநாயகர் மாற்றுரைத்த பிள்ளையார் என்றே அழைக்கப்பட்டார். ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் ஸ்ரீமஹா கணபதி ரவதுமாம் என்ற கௌளை ராக கீர்த்தனையில், ஸுவர்ணாகர்ஷண விக்னராஜோ என்று ஈசனின் திருவிளையாடல் சம்பவத்தை விவரிக்கிறார்.
சுந்தரர் பக்தி என்னும் கணக்கை (Account) சிவபெருமானிடம் தொடங்கி, அவன் நாமத்தை PIN நம்பராக உபயோகித்து பொருள் செல்வத்தை பெற்றிருக்கிறார்.