
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் யோக பைரவர் ஞானநிஷ்டையில் பைரவர் நினைத்த காரியம் கைகூடவும் எதிர்ப்புகளை பலமிழக்கச் செய்யவும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியில் யோக பைரவருக்கு யாகம் நடத்துகிறார்கள். சிவபெருமான், கௌரி தாண்டவம் ஆடியதைத் தரிசிப்பதற்காக மகாலட்சுமி தவமிருந்த இடம்தான், திருத்தளிநாதர் திருக்கோயிலாகத் திகழ்கிறது.சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில, திருத்தளிநாதர் சிவகாம சுந்தரியுடன் கோயில் கொண்டிருக்கிறார். திருப்புத்தூரின் ஆதிப்பெயர் கொன்றை வனம். அந்தக் காலத்தில் இந்தப் பகுதி சரக்கொன்றைகள் நிறைந்த வனமாக இருந்தது. அந்த வனத்துக்குள் முனிவர்களும் சாதுக்களும் ஆண்டுக்கணக்கில் தவமிருந்தார்கள். இப்படி தவமிருப்பவர்களைச் சுற்றிக் கரையான்கள் புற்று கட்டி விடுவதால், புற்றுகள் நிறைந்த வனமாகவும் இருந்தது. இதனால், கொன்றைவனம் ‘புற்றூர்’ ஆனது. பிறகு அதுவே திருப்புத்தூராக மருவியது.
காவல் தெய்வம்
தேவாரப் பாடல் பெற்ற 14 திருத்தலங்களில் திருத்தளிநாதர் கோயிலும் ஒன்று. சம்பந்தர், மங்கையர்கரசியார், குலச்சிறையார், நின்றசீர் நெடுமாறனார் இந்நால்வரும் ஒரே சமயத்தில் வந்து வழிபட்ட திருத்தலம். குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினத்திற்குச் சொந்தமான இத்திருக்கோயில் பற்றி அப்பரும் சம்பந்தரும் பாடி இருப்பதால் இது ஏழாம் நூற்றாண்டுக் கோயிலாக இருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது. ஈசன் தாண்டவமாடிய இடம் என்பதால், இத்திருத்தலத்தை தென் சிதம்பரம் என்றும் அழைக்கிறார்கள்.சிவாலயங்களில் காவல் தெய்வங்கள் பரிவார மூர்த்திகளாக இருப்பதுண்டு. இங்கேயும் கோயிலின் வடக்குப் பகுதியில் ஞான மூர்த்தியாக மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் யோக பைரவர்தான் காவல் தெய்வமாகத் திகழ்கிறார். ஒரு சில திருத்தலங்களில் மூலவர்களை விடவும் பரிவார மூர்த்திகள் பிரபலமாகப் பேசப்படுவதுண்டு.தடைகளையும் எதிர்ப்புகளையும் விலக்குவதிலும் காரியத் தடை நீக்குவதிலும் கண்கண்ட தெய்வமாக இருப்பதால் யோக பைரவரை மக்கள் போற்றித் துதிக்கிறார்கள்.
அர்த்தசாம பூஜை
பிள்ளையார்பட்டி மருதீசர் கோயில் எப்படிப் பிள்ளையாரைப் பிரதானமாகக் கொண்ட கோயிலாக மாறிப் போனதோ அதுபோல திருத்தளிநாதர் கோயிலும் இப்போது வைரவன் கோயிலாகிப் (பைரவர்) போனது. அர்த்தசாம பூஜையின் போது பக்தர்கள் பைரவர் சந்நிதிக்கு எதிரே நின்று பைரவரை வணங்குவதில்லை. சந்நிதியின் பின்பகுதியில் நின்றுதான் வணங்குகிறார்கள். ஞானநிஷ்டையில் இருக்கும் பைரவரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்ற ஐதீகத்தின்படி தான் சந்நிதிக்கு பின்னால் நின்று வணங்குகிறார்கள் என்று சொல்லப்படுகின்றது
வைகாசி விசாகத் திருவிழா
திருத்தளிநாதர் ஆலயத்தில் பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. விசாகத்திற்கு முந்தைய நாள் தேரோட்டமும் இங்கு நடைபெறுகிறது.நினைத்த காரியம் கைகூடவும் எதிர்ப்புகளை பலமிழக்கச் செய்யவும் தேய்பிறை அஷ்டமியில் யோக பைரவருக்கு யாகம் நடத்துகிறார்கள். தேவேந்திரனின் மகன் ஜெயந்தனுக்கு ஒரு ஆபத்து வந்தபோது அந்த ஆபத்திலிருந்து அவரைக் காப்பாற்றியவர் யோக பைரவர் என்று கூறப்படுகிறது. தேவேந்திரன் மகனையே காப்பாற்றிய பைரவர், தங்களை நிச்சயம் காத்தருள்வார் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் இருக்கிறது. அந்த நம்பிக்கையின்படி, சித்திரை மாதம், முதல் வெள்ளியில் இங்கே யோக பைரவருக்கு ஜெயந்தன் பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது.