மகிஷ சம்ஹாரத்திற்குப் பின் சாந்த சொரூபியாய் திரிபங்க நிலையில் மகிஷாசுரமர்த்தனி சிற்பம்..!!

இக்குகைக் கோயிலிலுள்ள இறைவியை துர்க்கை, கொற்றவை, மகிஷாசுரமர்த்தினி என்று போற்றி மக்கள் வழிபடுகிறார்கள். அன்னை தலையில் ராஜகிரீடம் புனைந்து, எட்டுத் திக்குகளையும் எட்டுக் கரங்களாகக் கொண்டு, இடது மேல் கரத்தில் தண்டம் (வில்) பிடிக்க, மற்ற கைகள் சங்கம், கேடயம் ஏந்தியும், நான்காவது கை தண்டத்தை அணைத்தவாறு அன்னையின் இடது தொடைமீது படிந்துள்ளது. சிம்மத்தின் மீது தன் இடதுகாலைத் தூக்கி வைத்தும், வலது காலைத் தரையில் ஊன்றியும், வெற்றிக்களிப்புடன் காட்சியளிக்கிறாள். அம்மனின் வலது மேற்கைகள் சக்கரம், பெருவாள் பிடித்தும், ஒரு கை கடக முத்திரையோடும், மற்றொரு கையைத் தன் இடைமீது கடிகஸ்தமாகவும் வைத்திருக்கிறாள். காதுகளில் தடித்த குழைகளும், கழுத்தில் மங்கல அணியும், மேற்கையில் தோள்வளையும், மார்பில் மேலிருந்து கீழாக நூலாடையும், முன்கையில் கைவளையும், இடையில் கச்சையும், இடையின் முன் இடைவாரும், பக்கங்களில் ஆடையும், காலில் பாதசரமும் கொண்டிருக்கிறாள். அம்மனைத் தாங்கும் சிம்மம், முன்பக்க இடது காலைத் தரையில் ஊன்றி, முன் வலது காலை மேலே தூக்கிச் சற்றே சாய்ந்த நிலையில், கம்பீரமாகச் சிலிர்த்தெழுவதுபோலக் காட்சியளிக்கின்றது..!!
அமைவிடம்:
பனைமலை தாளகிரீஸ்வரர் கோவில்,
விழுப்புரம் மாவட்டம்.