
அரிஷ்டாசுரன் என்ற அரக்கன் பெருத்த உடலும் கொம்புகளுமுடைய மிகப் பெரிய எருதின் வடிவில் விருந்தாவன கிராமத்தினுள் நுழைந்து, குளம்புகளால் பூமியைக் கிளறியபடிக் குழப்பம் விளைவிக்கலானான்.பெரும் பூகம்பம் ஏற்பட்டதுபோல் நிலம் அதிர்ந்தது. அவன் பயங்கரமாக உறுமிக் கொண்டு நதிக்கரையில் பூமியைக் கிளறியபின் கிராமத்தினுள் நுழைந்தான்.அவனின் உறுமல் மிகவும் பயங்கரமாகவிருந்ததால் அதைக் கேட்ட கர்ப்பிணிப் பெண்கள் சிலருக்கும், சினையுற்றிருந்த சில பசுக்களுக்கும் கர்ப்பச் சேதம் ஏற்பட்டது. எருதின் உடல் மிகப் பெரியதாகவும், பலமுள்ளதாகவுமிருந்ததால், மலையின் முகட்டில் மேகங்கள் சூழ்திருப்பதுபோல் அவனின் உடல் மேலும் ஒரு மேகம் சுற்றி வந்தது. அரிஷ்டாசுரனின் பயங்கர உருவத்தைக் கண்டு ஆண், பெண் யாவரும் பெரும் அச்சம் கொண்டனர். பசுக்களும் மற்ற மிருகங்களும் கிராமத்தை விட்டு ஓடின.
நிலைமை மிகவும் பயங்கரமாயிற்று. விருந்தாவன வாசிகளெல்லோரும், “கிருஷ்ணா, எங்களைக் காப்பாற்றும்” என்று ஓலமிட்டனர். பசுக்களும் ஓடுவதைக் கண்ட கிருஷ்ணர் “பயப்படாதீர்கள்” என்று எல்லோருக்கும் அபயமளித்தார்.அரிஷ்டாசுரனைக் கிருஷ்ணர் விளித்துக் கூறினார்,, ஹே…மிருகமே கோகுலவாசிகளை ஏன் பயமுறுத்துகிறாய்? இதனால் உனக்கு ஏற்படும் நன்மையென்ன? என் அதிகாரத்திற்கு நீ சவால் விட எண்ணியிருந்தால் நான் உன்னோடு யுத்தம் செய்யத் தயார்.” இவ்வாறு கிருஷ்ணர் அசுரனுக்குச் சவால் விட்டார்.கிருஷ்ணரின் சொற்களைக் கேட்ட அசுரன் மிகவும் கோபமுற்றான். கிருஷ்ணர் ஒரு நண்பனின் தோளில் கைவைத்தபடி எருதின் முன் வந்து நின்றார். எருது மிகுந்த கோபத்துடன் கிருஷ்ணரை நோக்கி முன்னேறியது. நிலத்தைத் தன் குளம்புகளால் கிளறியபடி அரிஷ்டாசுரன் வாலை உயரத்தினான்.
வாலின் நுனியின் மேல் மேகம் ஒன்று சுற்றிவருவதுபோல் தோன்றியது. அவனின் கண்கள் சிவந்து கோபத்தால் சுழன்றன. கிருஷ்ணரை நோக்கிக் கொம்புகளை குறிவைத்தபடி இந்திரனின் வஜ்ராயுதம் போல் அசுரன் அவரைத் தாக்கினான். ஆனால் கிருஷ்ணர் உடனே அசுரனின் கொம்புகளைப் பிடித்து, பெரிய யானை ஒன்று சிறிய எதிரி யானையைத் தாக்குவதுபோல், அசுரனைத் தூக்கியெறிந்தார். அசுரன் மிகவும் களைப்படைந்தான்.அவனுக்கு வியர்த்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நிலத்திலிருந்து எழுந்து, மிகுந்த கோபத்துடனும் பலத்துடனும் மீண்டும் கிருஷ்ணரைத் தாக்கினான்.
கிருஷ்ணரைத் தாக்க விரைந்தபோது அவனுக்குக் கடுமையாக மூச்சு வாங்கியது. மீண்டும் கிருஷ்ணர் அவனின் கொம்புகளைப் பிடித்து அவனைத் தரையில் எறிந்தபோது, கொம்புகள் உடைந்தன.ஈரத்துணியைத் தரையில் துவைப்பதுபோல் கிருஷ்ணர் அசுரனைக் காலால் உதைத்தார்; உதைப்பட்ட அரிஷ்டாசுரன் ரத்தமும் மல மூத்திரமும் சிந்தி, விழிகள் பிதுங்கி மரணமடைந்தான்.கிருஷ்ணரின் வியத்தகு சாதனையைப் பாராட்டி தேவர்கள் மலர் மாரி பொழிந்தார்கள். ஏற்கனவே விருந்தாவன மக்களின் உயிராகவும் ஆத்மாவாகவும் விளங்கிய கிருஷ்ணர் எருது வடிவில் வந்த அசுரனைக் கொன்ற பிறகு எல்லோருக்கும் கண்ணின் மணியானார்.பலராமருடன் அவர் வெற்றிகரமாக விருந்தாவனத்துக்குள் பிரவேசித்தார். மக்கள் மிகுந்த ஆராவாரத்துடன் கிருஷ்ணரையும் பலராமரையும் போற்றிப் புகழ்ந்தார்கள்