
.
நெற்றிக்கண்ணுடன் சிவனுக்கு மூன்று கண்கள் இருப்பது நமக்கு தெரியும். ஆனால் அவர் ஐந்து முகங்கள் கொண்டவர் என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த சிவனை தரிசிக்கா நேபாளத்தின் தலை நகர் காட்மாண்டில் உள்ள பசுபதி நாதர் கோயிலுக்குச் செல்வோம்.
பசுக்கள் என்றால் உயிர்கள் இந்த உயிர்களைப் படைத்து காத்து அழிக்கும் எஜமானராக இருப்பவர் சிவன். இதனால் அவருக்கு பசுபதி என்ற பெயருண்டு. திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களுடன் மேல் நோக்கிய ஒரு முகத்தையும் சேர்த்து ஐந்துமுகம் கொண்ட சிவன் உலக இயக்கம் அனைத்தையும் கவனமாகப் பார்க்கிறார். அவரது பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது. பசுபதி நாதர் என்னும் சிவனுக்கு நேபாள மன்னர் சுபஸ்பதேவர் கி பி 464 ல் கோயில் கட்டினார். பகோடா கட்டிடக்கலையால் ஆன இக்கோயில் முழுவதும் தாமிர மேற்கூரையுடன் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. நான்கு முதன்மை வாயில்களும் வெள்ளியால் ஆனவை. மூலவர் பசுபதி நாதர் ஆறடி உயரம் ஆறடி சுற்றளவு கொண்ட கருங்கல்லால் ஆனவர்.

சிவனின் நான்கு முகங்களுக்கு எதிரேயும் தனித்தனியாக நான்கு கதவுகள் கொண்ட நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றின் அருகிலும் பண்டாக்கள் எனப்படும் பூஜாரிகள் இருக்கின்றனர். பக்தர்கள் ருத்ர ஜபம் செய்கின்றனர். சிவன் எதிரில் பித்தளையால் செய்யப்பட்ட பெரிய நந்தி உள்ளது. இங்கு 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அவற்றை சுற்றி வருவதற்கு தனிப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் பின்புறம் பாசுமதி நதி ஓடுகிறது. ஆர்ய காட் படித்துறையில் இறந்தவர்களின் உடலை தீயிட்டு அஸ்தியை ஆற்றில் கரைக்கின்றனர். கங்கை கரையில் உள்ள மணிகர்ணிகா படித்துறை போல முன்னோர் சடங்குகள் இங்கு நடக்கிறது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களில் இக்கோயிலும் ஒன்று.
ஆதிசேஷன் மீது சங்கு சக்கரத்துடன் சயனக்கோலத்தில் இருக்கும் மகாவிஷ்ணு கோயில் அருகில் உள்ளது. விவசாயி ஒருவரின் கனவில் மகாவிஷ்ணு தோன்றி சிலைவடிவில் புதைந்து கிடப்பதாகவும் அதை பிரதிஷ்டை செய்யவும் உத்தரவிட்டதால் இக்கோயில் கட்டப்பட்டது.
எப்படி செல்வது
காட்மாண்டுவுக்கு பெங்களூரு புது டெல்லியிலிருந்து விமானம் உள்ளது.
விசேஷ நாட்கள்
மகர சங்கராந்தி மகாசிவராத்திரி ரக்ஷா பந்தன் மாத பவுர்ணமி