கர்வம்……யார் அறிஞன்?


அறிஞன் ஒருவன் இருந்தான். தனக்கு எல்லாம் தெரியும் என்கிற கர்வம் அவனுக்குத் தலைக் கேறியிருந்தது. மற்றவர்களை முட்டாளாகக் கருதினான்…
ஒரு நாள் அவன் ஒரு கிராமத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தான். அந்தக் கிராமத்து மக்கள் நல்ல அனுபவ ஞானமுள்ளவர்கள் என்பதை அறிந்து அவர்களைச் சோதிக்க எண்ணிணான்…
மாடு மேய்க்கும் இளைஞன் ஒருவன் மரக்கிளையின் மேல் அமர்ந்து இருந்தான். அறிஞன் அவனிடம் போய் , “ உன்னிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன்.” என்றான்…
அவனும் மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து “கேளுங்கள்” என்றான். படித்திருக்கும் நம்மில் பலரும் யாராவது நம்மைக் கேள்வி கேட்கப் போகிறேன் என்றாலே சிறிய அச்சம் வந்து விடும்…
ஆனால் அந்த இளைஞன் தயக்கமின்றி “கேளுங்கள்” என்றதும் அதிர்ச்சியுற்று, “ஏனப்பா நான் கேள்வி கேட்பதாகச் சொன்னவுடன் உனக்குத் தயக்கமோ, அச்சமோ ஏற்படவில்லையா? என்று கேட்டான்…
இளைஞன்,    “உலகில் அனைத்தும் தெரிந்தவரும் இல்லை. ஓன்றுமே தெரியாதவரும் இல்லை. நீங்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் தெரிந்தால் சொல்லப் போகிறேன். தெரியாவிட்டால் உங்களிடமிருந்து தெரிந்து கொள்கிறேன். இதில் அச்சமோ, தயக்கமோ எதற்கு? என்றான்…
இளைஞனுடைய கலக்கமில்லாத மனநிலை அறிஞனுக்கு புதிராக இருந்தது. அறிஞன் அவனிடம் கேள்வி கேட்டான்,        “உலகில் உள்ள ஒளிகளில் சிறந்த ஒளி எது?
இளைஞன், “சூரிய ஒளி” அதற்கு மேற்பட்ட ஒளியே இல்லை என்றான்…
அறிஞனும் அதை ஏற்றான்…
உலகில் சிறந்த நீர் எது? என்று அடுத்த கேள்வியைக் கேட்டான்…
இளைஞனும், “கங்கை நீர்” சிவனின் சிரசிலிருந்தும் விஷ்னுவின் பாதத்திலிருந்தும் வந்து அதில் மூழ்கியவர்களுக்கு மோட்சம் அளிக்கும் கங்கை நீரை விடச் சிறந்த நீர் வேறு எது இருக்க முடியும்?…
அறிஞன் வியந்தான்…
உலகில் சிறந்த மலர் எது?
இளைஞன் சற்று யோசித்தபடி “தாமரை” என்றான். மலர்களில் அகன்று விரிந்த மலர். தேவ,தேவியர் வீற்றிருக்கும் பாக்கியம் பெற்ற மலர்…
அறிஞன் அந்த வாலிபனின் அறிவுத்திறனை மெச்சித் தன்னிடமிருந்த முத்துமாலையைப் பரிசளித்தான்…
ஆனால் அந்த இளைஞனோ அந்தப் பரிசை வாங்கிக் கொள்ளவில்லை…
அறிஞனின் கர்வத்தை நீக்கும் வகையில், “அய்யா” நான் சொன்ன விடைகள் மூன்றுமே தவறு. தவறான விடைகளையே பாராட்டி எனக்குப் பரிசு தர விரும்புகிறீர்களே, சரியான விடைகளுக்கு வேறு என்ன தருவீர்களோ?என்றான்…
தன் தலையில் சம்மட்டியால் ஓங்கி அடிப்பதாக உணர்ந்தான் அந்த அறிஞன்…


சுயநிலையடைந்த அறிஞன் சற்றுப் பணிந்தபடி,  நீ சொன்ன விடைகள் தவறு என்கிறாயே? சரியான விடைகளைச் சொல் பார்க்கலாம் என்றான்…
இளைஞன் தெளிவாகப் பேசினான்…
அய்யா, சூரியஒளி சிறந்தது என்றேன். நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். ஆனால் கண் ஒளி இல்லையென்றால் சூரிய ஒளியைப் பார்க்க முடியுமா? கண் ஒளி இல்லையென்றால் உலகமே இருட்டுதானேஆகவே எல்லா ஒளிகளையும் பார்த்து உணரக்கூடிய கண் ஒளியே சிறந்த ஒளி. இது இறைவன் நமக்களித்த வரப்பிரசாதம். இதற்காக நாம் இறைவனுக்குப் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறோம்…


இளைஞன் தொடர்ந்தான். “உங்களது இரண்டாவது கேள்விக்கு கங்கை நீரே சிறந்த நீர் என்ற போது நீங்கள் மறுக்கவில்லை. உலகில் உள்ள மற்ற நாட்டவர்கள், மற்ற மதத்தினர் இதை ஏற்பார்களா? ஆகவே பாலைவனத்தில் உள்ள சோலையில் அபூர்வமாகக் கிடைக்கும் நீரே சிறந்தது…


“தாமரை மலர் பெரியதாக இருக்கலாம்.அதனால் மக்களுக்கு என்ன பயன்? நீரிலிருந்து வெளியில் எடுத்தால் வாடிவிடும். உண்மையில் மலர்களில் சிறந்தது பருத்தி மலர்தான். அதன்மூலம் கிடைக்கும் நூலினால் துணி நெய்யப்படுகிறது. உலகிலுள்ள மக்கள் அனைவரது மானத்தைக் காக்கும் மலர் என்பதால் அதுவே சிறந்தது…
அறிஞன் அவனைப் பாராட்டியதோடு தன் கர்வத்தையும் அன்றோடு விட்டொழித்தான்…
கோபம் ஒருவரை நிதானமிழக்க செய்யும், கர்வம் வாழ்க்கையையே இழக்க செய்யும்..
*வாழ்க வளமுடன்.*   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s