ஸ்ரீ கனக  துர்கா சமேத ஸ்ரீ மல்லேஸ்வரா ஸ்வாமி தேவஸ்தானம்

.

விஜயவாடா ஒருகாலத்தில் மலைகள் நிறைந்த பகுதியாக இருந்தது. கிருஷ்ணா நதியின் நீரினைக் கற்படுகைகள்  தடுத்துக் கொண்டிருந்தன. அங்கு விவசாயம், செய்ய முடியாமல் மக்கள்  மிகவும் அவதிக்குள்ளானார்கள். பல இடங்களில் வெள்ளம் புகுந்தது. மக்கள் துன்பம் அடைந்து. துர்க்கையிடம் முறையிட்டனர். இறைவனே, மக்களின் குறையை எற்று அந்த மலையைக் குடைந்து நதியிலுள்ள நீரை வெளியேறச் செய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குகை வழியே நதிநீர் வர ஆரம்பித்தது என தலபுராணம் கூறுகின்றது. அதனாலேயே இந்தப் பகுதி பெஜ்ஜவாடா என அழைக்கப்பட்டது. பெஜ்ஜ எனும் தெலுங்கு வார்த்தையின் பொருள் குகை என்பதாகும். பின்பு விஜயவாடா என திரிந்தது.

இந்திரகீலன் என்னும் பக்தன் ஸ்ரீ துர்கா தேவியிடம் அதீத பக்தி கொண்டிருந்தான். அவனுடைய பக்தியை மெச்சிய தேவி என்ன வரம் வேண்டும் என்று கேட்டாள்   ” என்றென்றும் என் இதய பீடத்தில் நீ இருக்க வேண்டும் ” என்றான் அவன். ” சரி கிருஷ்ணா நதி தீரத்தில் ஒரு மலையாக நீ அமர்ந்து விடு  உன் விருப்பம்போல் நான் அங்கு குடிகொள்வேன் ” என்று வாக்குக் கொடுத்தாள் . அவனும் கிருஷ்ணா நதி தீரத்தில் மலையாக மாறி தேவியின் வரவுக்காகக் காத்திருந்தான். அந்த மலைதான் இந்திரகீல பர்வதம்.

ஸ்ரீ துர்காதேவி மகிஷாசுரனை வதம் செய்துவிட்டு அந்த மலைக்கு வந்தாள்.  சூரிய கிரணங்களைப்போல் தகதகவென்று ஜொலித்த தேவி எட்டு கரங்களுடன் பொன்னிறமாகக்  காட்சியளித்தாள். தன் பக்தனின் வரத்தினைப் பூர்த்தி செய்யும் பொருட்டு அம்மலையின் மேல் நிரந்தரமாகக் குடியேறினாள் . கனக அகலம் என்கிற பெயரும் இதற்கு உண்டு. இந்த மலை அமைந்திருக்கும் இடம் விஜயவாடா.

பஞ்ச பாண்டவர்கள் ஒரு முறை தாருகாவனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஸ்ரீ வேத வியாசரைச் சந்தித்தனர். கௌரவர்களைப் போரில் வெற்றிகொள்ள வேண்டும் என்றால் ஸ்ரீ மகா தேவனைக் குறித்து தவம் செய்து பாசுபதாச்திரத்தைப் பெற வேண்டும். அதற்கு அர்ஜுனன் தான் உகந்தவன் என்று கூறி அவனை கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள இந்திரகீல பர்வதம் செல்ல வழிகாட்டினார்.

அவரின் கட்டளையை ஏற்ற அர்ஜுனன் இம்மலையின் மீது ஒற்றைக்காலில் நின்றவண்ணம் சிரசின் மேல் கூப்பிய கரங்களுடன் சிவனைக் குறித்து தவம் செய்தான். அவனது வலிமையைச் சோதிக்க விரும்பிய சிவபெருமான் ஒரு வேடுவனாக அந்த மலையினை வந்து அடைந்தார். அப்பொழுது மூகன் என்னும் அரக்கன் பன்றியின் வேடம் தாங்கி அர்ஜுனனின் தவத்துக்கு இடைஞ்சல்கள் பல புரிந்தான். அதனால் அர்ஜுனன் அந்தப் பன்றியின் மேல் அஸ்திரம் பிரயோகம் செய்த அதே தருணம் சிவபெருமானும் அதன்  மேல் அம்பை எய்தார். அம்புகள் பாய்ந்தவுடன் மூகன் உயிரற்று நிலத்தில் விழுந்தான். அடுத்த கணம் ஒரு கந்தர்வனாக மாறி சாப விமோசனம் பெற்று முக்கண்ணனை வணங்கி வானுலகம் சென்றான்.

அர்ஜுனன் தன அஸ்திரத்தை எடுப்பதற்காக முனைந்த போது அது தனது அஸ்திரம் என்று சொல்லி அர்ஜுனனை வம்புக்கு இழுத்தார் சிவபெருமான்.

ஒரு வேடனுக்கு எத்தனை அகம்பாவம் என்று நினைத்த அர்ஜுனன் மகேசனைத் தாக்கத் தொடங்கினான். இருவருக்கும் பலமான சண்டை. அர்ஜுனனின் வீரத்தை மெச்சிய உமைபாகன் அர்ஜுனனை மேலும் சோதிக்க விரும்பாமல் தன்னுடைய உண்மையான வடிவத்தைக் காட்டி அவன் விரும்பிய பாசுபதத்தைக்  கொடுத்து ஆசி  வழங்கினார்.

அர்ஜுனன் ஸ்ரீ துர்காவை வணங்கி அவளின் ஆசியோடு பாசுபதாஸ்திரம் பெற்றதால் தேவியை அஸ்திரேஸ்வரி  என்கிற பெயரால் வழிபட்டான்.சிவப்பரம்பொருளின் இவ் வேடம் கிராத மூர்த்தி என்று அழைக்கப்படும்.[கருநிற மேனியும் வில்லம்புகள் விளங்கும் இருகரமும் கொண்டவராக சிவவேடன் திகழ்வார். புலித்தோலாடை இடையில் துலங்க, திருமுடியைப் பறவை இறகுகள் அலங்கரித்து நிற்கும்]

அர்ஜுனன் என்ற விஜயன் தன்னுடைய காரியத்தில் வெற்றி பெற்றதால் இதற்கு விஜயவாடா என்கிற பெயர் உண்டாயிற்று. ” பல்குணி ஷேத்திரம் ” என்றும் பெயருண்டு. இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ கனக துர்கா சுமார் நான்கு அடி உயரம் கொண்ட சுயம்பு. இந்தக் கோவில் அர்ஜுனன் கட்டியது என்பர். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது.

ஸ்ரீ சங்கர பகவத் பாதாள் இங்கு விஜயம் செய்து ஸ்ரீ சக்ரம் ஒன்றை ஸ்ரீ துர்காவின் பாதத்தின் கீழ் பிரதிஷ்டை செய்திருக்கிறார். பிரம்மா இந்த ஸ்தலத்தில் மல்லிகைப் பூவைக் கொண்டு சிவபெருமானை வழிபட்டு இந்தத் தலத்திலேயே உறையும்படி வேண்டிக் கொண்டாராம். பிரம்மா பூஜித்த லிங்கம் மல்லிகேச்வரன் என்னும் திருநாமத்துடன் வழிபாடு செய்யப் படுகிறது.

இங்கிருக்கும் தல விருட்சத்தினை  குங்குமத்தால் அர்ச்சித்தால் வேண்டிய வரம் கிட்டும் என நம்பிக்கை. காளிகா புராணத்திலும் துர்கா சப்தசதியிலும் இந்தத் தலத்தின் பெருமை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பிரம்மா, விஷ்ணு  இந்திரன் ராமர் கிருஷ்ணர்  ருத்திரன் பரத்வாஜ முனிவர் மார்க்கண்டேயர் ஆகியோரின் பாதம் பட்ட புண்ணிய பூமி இது.

கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள சக்தி பீடங்களில் ஒன்றான இந்த சந்நதியில் நவராத்திரி முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ துர்காதேவி, ஸ்ரீஅன்னபூரணி தேவி, ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீலலிதா,ஸ்ரீ  திரிபுரசுந்தரி, ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ  பாலசுந்தரி,ஸ்ரீ சரஸ்வதி என ஒன்பது விதமாக அலங்காரம் செய்யப்படுகிறாள். ஒவ்வொரு நாளும் அன்றைய தினத்தின் நட்சத்திரத்துக்கு ஏற்ப அலங்காரம் செய்யப்படுகிறது. தேவி பொன்னொளி வீசுகின்றாள். சரஸ்வதி பூஜை, தெப்போற்சவம் இரண்டும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இரவில் கோயில் கோபுரம் வண்ணமயமாக அழகுடன் பிரகாசிப்பதைக் காணலாம், நவராத்திரி அன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து கிருஷ்ணா நதிக்கரையில் நீராடி தேவியைத் தரிசிக்கின்றார்கள். மலையருவியில் இந்திரகீல முனிவர் தேவிக்காக காத்திருந்தார். தேவி மகிஷாசுரனை வதம் செய்து அஷ்டகரங்களுடன் மலையில் நான்கடி உயரத்தில் மகிஷாசுரன் மேல் நின்ற கோலத்தில் மகிஷாசுரமர்த்தினியாக காட்சி அளித்து தனிபெருங்குறை நீக்கி அருளினாள். இந்த மலைக்கு எல்லா தெய்வங்களும் வந்து வருகை தந்து வணங்கி தரிசனம் செய்ததாக வரலாறு கூறுகின்றது.

இத்தலத்தில் தசரா திருவிழா, மஹா சிவராத்திரி, பிரதோஷம், சிரவண மாதம், 30 நாட்கள் விழா மிகச் சிறப்பாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. அன்னை கனகதுர்காவைத் தரிசனம் செய்து, வணங்கி வந்தால் அவளது பேரருளால் வாழ்வு வளம் பெருகும். அம்பாளுக்குத் தங்கநிற அரளிப் பூமாலை அணிவித்து வழிபாடு செய்கின்றனர்.

செவ்வாய். வெள்ளியில் பெருந்திரளாக பக்தர்கள் வருகிறார்கள்.  ஆந்திர பிரதேசத்தில் உள்ள கோவில்களில் மிகவும் கீர்த்தி வாய்ந்தது இந்த கனக துர்கா ஆலயம்.

நன்றி:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s