ஆயிரம் கலம் நைவேத்யம்


கற்பனை செய்து பார்க்க முடியாத நிகழ்வுகளை நிகழ்த்தி, அதன் மூலம் மக்களுக்கு ஆத்ம ஞானத்தை அருள்பவர் தான் இறைவன்.
குருவாயூரில் உள்ள பெரும்பலச்சோரி எனும் இடத்தில் நடைபெறும் விழாவிற்கு, சமையல் வேலை செய்வதற்காக சென்றிருந்தனர், நான்கு முதியவர்கள். அவர்களை பார்த்ததும், ஏளனமாக சிரித்த நிகழ்ச்சி பொறுப்பாளர், ‘வயதான நீங்கள் தான் சமையல்காரர்களா… நாளை, ஆயிரம் கலம் சாதம், குழம்பு, கூட்டு, பொறியல் என எல்லாம் செய்யணுமே… வயதான உங்களால் முடியுமா… இத்தனை வயதாகியும் பணத்தின் மேல் உள்ள ஆசையால், வேலை செய்ய வந்திருக்கீங்களே…’ என்றார், ஆணவத்தோடு!
கிருஷ்ண பக்தர்களான அம்முதியவர்களோ, பள்ளிவேட்டை உற்சவத்தின் போது, குருவாயூரப்பன் சன்னிதியில் நின்று, ‘குருவாயூரப்பா… உன் அருளை அடைய முடியாத எங்களை, இக்கர்வம் பிடித்தவர் முன், காப்பாற்று…’ என்று பிரார்த்தனை செய்து, தங்கள் இருப்பிடத்தை அடைந்தனர்.
மறுநாள் அதிகாலை, 3:00 மணிக்கு, நால்வரும், குளத்திற்கு நீராட சென்றனர். அப்போது, அவர்களுக்கு பழக்கமான நாகோரி எனும் சிறுவன், பல் விளக்குவதைப் பார்த்து, ஆச்சரியமடைந்து, ‘நாகோரி… நீ எப்ப வந்த…’ எனக் கேட்டனர்.அச்சிறுவனோ, ‘நீங்க இங்க சமையல் வேலைக்கு வந்திருப்பது, நேத்து ராத்திரி தான் தெரிஞ்சது; வயசான உங்களுக்கு உதவியாக இருக்கலாமேன்னு தான் வந்தேன்…’ என்றான்.
அம்முதிய அடியவர்களுக்கு சற்று திருப்தியாக இருந்தது; அனைவரும் நீராடி திரும்பினர்.சமையல் வேலை துவங்கியது; நால்வரும், ஏதோ செய்தனரே தவிர, பெரும்பாலான வேலைகளை நாகோரியே, ‘பரபர’வென செய்து முடித்தான். காலை, 9:00 மணிக்குள், இறைவனுக்கு படைக்க வேண்டிய திருவமுது, பால் பாயசம், தேங்காய் பாயசம் மற்றும் கறி வகைகள் என, எல்லாவற்றையும் செய்து முடித்தான்.
அனைவரும் வியந்தனர்; எகத்தாளம் பேசி, அவமானப்படுத்திய நிகழ்ச்சிப் பொறுப்பாளர், முதியவர்களை பாராட்டி, அவர்களுக்கு ஏராளமான வெகுமதியும் அளித்தார்.அப்போது, ‘நான் அவசரமாக குருவாயூர் போக வேண்டும்…’ என்று கூறி, உணவுக்கு முன் புறப்பட்டான் சிறுவன் நாகோரி. 
முதியவர்கள் நால்வரும் உணவை முடித்து, குருவாயூர் சென்றனர். அவர்களுக்கு நாகோரியின் நினைப்பே வரவில்லை.குருவாயூரில் தரிசனத்தை முடித்து, இருப்பிடம் திரும்பியவர்களின் கனவில், குருவாயூரப்பன் காட்சி கொடுத்து, ‘அடியவர்களே… நாகோரியாக வந்து, உங்களுக்கு சமையலில் உதவி செய்த எனக்கு கூலி தராமல் வந்துவிட்டீர்களே… உழைப்பை வாங்கி, ஊதியம் தராமல் இருக்கலாமா…’ என்றார்.
அடியார்கள் திடுக்கிட்டு, ‘குருவாயூரப்பா… எங்களை காப்பாற்றுவதற்காக, சமையல்காரனாக வந்த உன் கருணையை என்னவென்று சொல்வது…’ என, கண்ணீர் மல்க துதித்தனர்.இதன் காரணமாகவே, ஆயிரம் கலம் நைவேத்யம் செய்து, குருவாயூரப்பனுக்கு படைக்கும் திருநாளில், சமையல்காரர்கள் தங்களுக்கு கிடைக்கும் கூலியில் ஒரு பங்கை, பகவானுக்கு சமர்ப்பணம் செய்யும் வழக்கம் வந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s