சிக்கலை தீர்க்கும் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன்

வடக்கு நோக்கிய காளி என்றால் மிக மிக விசேஷமானவள், ஆவேசமானவளும் கூட. தீமைகளை வேரறுக்கும் உக்கிரமான சக்திகளே வடக்கு நோக்கி வீற்றிருக்கும் என்பது ஆன்மிகம் சொல்லும் ரகசியம். அப்படி சுமார் ஈராயிரம் ஆண்டுகளாக ஆவேசத்தோடு எழுந்தருளி நம்மை எல்லாம் காத்துக் கொண்டிருக்கும் மகா சக்தியே சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன்.

மதுரகாளி என்றால் அமிர்த வர்ஷிணியாக வரங்களை அள்ளித் தருபவள், மதுரமாக மனங்களை குளிர்விப்பவள் என்றும் சொல்லலாம். ஆனால் இங்கு மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த காளி என்பதால் இவள் மதுரகாளி என்றானாளாம். ஆம், மதுரையை கடும் கோபம் கொண்டு எரித்த கண்ணகியே இங்கு கோயில் கொண்டு இருக்கிறாள் என்று ஒரு தகவல் இந்த ஊர் மக்களால் கூறப்படுகிறது. மதுரையில் இருந்து நிராதரவாக இங்கு வந்த கண்ணகி ஆவேசம் அடங்கி, இந்த மக்களைக் காக்க சிறுவாச்சூரிலேயே தங்கி விட்டாள் என்று தலவரலாறு கூறுகின்றது.

அதேபோல் வேறொரு கதையும் இங்கு கூறப்படுகிறது. மதுரையில் இருந்து நகர்வலமாக வந்த பாண்டி காளி இந்த ஊரை அடைந்தாளாம். ஊரெங்கும் மயான அமைதி. ஒருவரும் வெளியே தலை காட்டவில்லை. என்ன ஆச்சர்யம் என்று வியந்த காளி, அங்கிருந்த செல்லியம்மன் கோயிலுக்குச் சென்று, தான் வந்திருப்பதைத் தெரிவித்து அங்கே தங்கி இருக்க இடம் கேட்டாளாம். அப்போது செல்லியம்மன் ‘அம்மா காளி, நாங்களே இங்கு ஒரு மோசமான அசுரனுக்கு அஞ்சி அடைந்து கிடக்கிறோம். அவனுடைய அபரிமிதமான மந்திர சக்தி எங்கள் எல்லோரையும் கட்டுப்பட வைத்து பெரிதும் துயர் உண்டாக்கி வருகிறது. இதில் நீ வேறு இங்கு தங்கி அவதிப்பட வேண்டுமா, பேசாமல் கிளம்பி விடம்மா’ என்று சொல்லி விட்டாள். ஆயிரம் ஆயிரம் அசுர சக்திகளைக் கொன்று எலும்பு மாலையாக அணிந்த மகாகாளி இதற்கெல்லாம் அஞ்சுவாளா!

ஆங்காரச் சிரிப்போடு அன்னை சொன்னாள், ‘இதுதான் இந்த ஊர் அமைதியின் ரகசியமா, கவலையை விடு. இன்றோடு அந்த அசுர மந்திரவாதி ஒழிந்தான் பார்!’ என்றாள். அதே நேரம் அந்த மந்திரவாதி வந்தான். அன்னையிடம் வம்பு பேசினான். அவ்வளவுதான் அன்னையின் சூலத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் மண்ணோடு மண்ணானான். மதுரையில் இருந்து வந்த மதுரகாளியின் மகிமை உணர்ந்து செல்லியம்மன் வணங்கினாள். மதுரகாளியை அந்த ஊரிலேயே தங்கி இருந்து அந்த மக்களை பாதுகாக்கச் சொன்னாள். அதன்படி மதுரகாளி சிறுவாச்சூர் காளி என்றானாள்.

நான்கு அடி உயரத்தில் வடக்கு திசை பார்த்து அட்சய கிண்ணம், உடுக்கை, பாசம், சூலம் தாங்கி இடது திருவடியை மடித்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அருள் கோல வடிவில் சாந்தசொரூபியாக காளி இங்கு அரசாட்சி செய்கிறாள். ஆதிசங்கரரும், சதாசிவ பிரம்மேந்திரரும் வணங்கிய காளி இவள். வாரம் இரு நாள்கள் திறக்கப்படும் இந்த சந்நிதியில் உச்சிகால பூஜை மட்டுமே நடைபெறும். உக்கிரமான இந்த பூஜை நேரத்தில் இரண்டு கோடாங்கிகள் ஆலய மண்டபத்துக்கு வெளியே அருள் வந்து ஆடியபடி மதுரகாளி மற்றும் செல்லியம்மனின் கதையைப் பாட்டாகப் பாடுகிறார்கள். இவர்கள் பாடி முடித்த பிறகுதான் காளியம்மனுக்கு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

மதுரகாளியம்மன் கோயிலுக்கு எதிரே சோலை முத்தையா கோயிலும் உள்ளது. இவரே அம்மனின் காவல் அதிகாரி என்கிறார்கள். இங்கே வீரபத்திரர் சிலையும் உள்ளது. மதுரகாளியம்மன் கோயிலுக்கு எதிரே குழந்தைப்பேறு வேண்டி வருபவர்களுக்கு அருள்புரியும் சோலை கன்னியம்மன் கோயிலும் அமைந்திருக்கிறது. சித்திரை மாத அமாவாசையன்று நடக்கும் பூச்சொரிதல் விழா இங்கு விசேஷம். மதுரகாளி, செல்லியம்மன், பெரியசாமி போன்ற கடவுளர்களின் தேரோட்டமும் அப்போது நடைபெறும்.

இங்கு கூட்டம் கூட்டமாக பெண்கள் வந்து பல்வேறு நேர்த்திக்கடன்களைச் செய்கிறார்கள். மாவிளக்கு ஏற்றுவதும் பொங்கல் வைப்பதும் இங்கு விசேஷம். நோய்நொடியால் துன்பப்படுபவர்கள், தீராத கடன் கொண்டவர்கள், எதிரிகளால் துன்பப்படுபவர், தீய பழக்கங்களால் வீணானவர்கள் என துக்கப்படுபவர்கள் எல்லோரும் ஒன்று கூடி நன்மை பெரும் தலமாக சிறுவாச்சூர் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி போக்கிடம் ஏதுமற்ற ஏழை எளிய மக்களின் காவல் தேவியாகவும் கருணை மாரியாகவும் இந்த காளி இருந்து வருகிறாள். இவளை மனம் குளிர வழிபட்டு வேண்டுவோர்களுக்கு அமிர்த விருட்சமாக இருந்து அருள் மழை பொழியும் தேவியாகவும் மதுரகாளி இருந்து வருகின்றாள்.

சென்னை திருச்சி வழியில் பெரம்பலூரிலிருந்து தெற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிறுவாச்சூர். அந்த வழி செல்லும் எல்லா பேருந்துகளும் இவ்வூரில் நின்று செல்லும். திங்கள், வெள்ளிக்கிழமைகள், பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் மதுரகாளியம்மன் கோயில் திறந்திருக்கும்.

நன்றி.     ஓம் நமசிவாய

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s