யாருடைய குடும்பத்தையும் நிந்தனை செய்யாதே. அது அம்பாளை நிந்தனை செய்வதற்குச் சமம்.

மஹா பெரியவா ளை சந்திக்க ஒரு அம்மையாரும் அவருடைய கணவரும் வந்திருந்தனர்.  பெரியவா நிஷ்டையில் இருந்ததால் அவர்களை மடத்திலுள்ளோர் காத்திருக்கும்படி சொன்னார்கள். தம்பதியினர் காத்திருந்தனர். கணவர் கர்ம சிரத்தையுடன் அங்கு விரிக்கப்பட்டிருந்த ஜமக்காளத்தில் சப்பளாங்கொட்டி உட்கார்ந்தார். அவர் மிகுந்த அமைதியுடன் காணப்பட்டார். ஆனால் அந்தப் பெண்மணி சற்றே சலிப்புடன் காணப்பட்டார். கொஞ்ச நேரம் குறுக்கும் நெடுக்கும் நடந்து விட்டு பிறகு தன் கணவருக்குச் சற்றுத் தள்ளி உட்கார்ந்தார். இருவரும் பேசிக்கொள்ளவில்லை.5 மணியைக் கடந்து சில நிமிடங்களில் தம்பதியினரிடம் வந்த மடத்து ஊழியர் ஒருவர் அந்தப் பெண்மணியை மட்டும் பெரியவா அழைப்பதாகச் சொன்னார். தன் கணவர் மீது பார்வையை வீசியவாறு அவரைத் தொடர்ந்து சென்றார், அந்தப் பெண்மணி.10 நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவர் முகத்தில் ஒரு சலனமும் இல்லை. மடத்து ஊழியர் அந்தப் பெண்மணியின் கணவரிடம் பெரியவா அழைப்பதாகக் கூறி அவரை அழைத்துச் சென்றார்.மேலும் 10 நிமிடங்கள் கழித்து மடத்து ஊழியர் வெளியே வந்து பெரியவா மீண்டும் அழைப்பதாகக் கூறி அந்தப் பெண்மணியை அழைத்துச் சென்றார்.அடுத்த சில நிமிடங்களில் இருவரும் வெளியே வந்தனர்
. இப்போது கணவர் மட்டுமில்லை. அந்தப் பெண்மணியின் முகத்திலும் பேரமைதி.நடந்ததை அந்தத் தம்பதியினர் ஒரு மண்டலத்துக்குப் பிறகு தனக்குத் தெரிந்தவர்களிடமும் சுற்றத்தாரிடமும் உவகையுடன் பகிர்ந்து கொண்டனர். அந்தத் தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள். மகளுக்குத் திருமணம் ஆகி அவள் தன் கணவனுடன் சௌக்கியமாக இருக்கிறாள். மகனுக்குச் சித்தப்பிரமை. தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் தன்னிலை மறந்த்தொரு சோகம். பட்டப்படிப்பு முடிக்கும் வரை சாதாரணமாக இருந்தவன் அதற்குப் பிறகு ஏதோ ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது அவன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. வைத்தியமும் மருத்துவமும் கை கொடுக்கவில்லை. நாளாக நாளாக அவன் மனக்கோளாறு அதிகரித்துக் கொண்டே வந்தது. எப்போதும் யாராவது உடனிருக்கவேண்டிய அவசியம். தனியாக விட்டால் ஏதும் விபரீதம் ஆகிவிடும் என்கிற அவலம். கணவருடைய நண்பர் ஒருவர் மஹாபெரியவாளைப் பற்றிச் சொல்லி, அவரைப் போய்ப் பார், ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பு கிட்டலாம் என்று சொல்ல, தன் அகமுடையாளை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து ஸ்ரீ மடத்துக்கு அழைத்து வந்தார். அன்று நடந்த்து இதுதான்: அந்தப் பெண்மணி உள்ளே வந்து பெரியவாளை சம்பிரதாயமாக நமஸ்கரித்து எழுந்தவுடன் ‘உன் அகமுடையான் குடும்பத்தார் அசமஞ்சங்கள் இல்லை. உன் பிள்ளையாண்டான் அவாளோட ஸ்வபாவத்தைக் கொண்டிருப்பதால்தான் இப்படி இருக்கான்னு நீ சொல்றதை அம்பாளும் பாத்துண்டு கேட்டுண்டுதான் இருக்கா’ என்றதும் அந்தப் பெண்மணி அதிர்ந்து போனார். தன் மனதில் உள்ளதையும் தனிமையில் தன் கணவரிடம் சொன்னதையும் பட்டவர்த்தனமாகச் சொல்கிறாரே என்று விதிர்த்தவர் அப்படியே சிலையாக நின்று கொண்டிருந்தார்.  ‘உக்காந்துக்கோ’ என்று சொன்ன மஹாபெரியவா, யாருடைய குடும்பத்தையும் நிந்தனை செய்யாதே. அது அம்பாளை நிந்தனை செய்வதற்குச் சமம்.

சிலருக்கு ஜனனத்துலியே அனுக்ரஹம் கிடைச்சுடறது. அது பூர்வ ஜென்ம பலன். பலருக்குப் பிறந்தப்புறம் ஏதோ ஒரு கால அவகாசத்துல அனுக்ரஹம் கிடைக்கறது. அதுவும் அவா அவா கர்ம பலன். இன்னும் பல பேர் பலவிதமான சுக துக்கங்களையும் சோதனைகளையும் வேதனைகளையும் அனுபவிக்கறா, தவிக்கறா. அது அவா அவா கர்ம வினை. சிலர் ஏதோ ஒரு கட்டத்துல பகவானை சரணாகதி அடையறா. அதுவுன் கர்ம பலன்தான். நீ பக்தி பூர்வமா இருக்கறதும் ஸ்லோகம் சொல்றதும் உன் கர்ம பலன்தான். அதை ஒரு பெருமையா நினைக்காம ஒரு கொடுப்பினையா ஏத்துக்கோ. உன் பிள்ளையாண்டான் நிலைமைக்கும் உங்க ரெண்டு பேரோட கர்மவினைதான் காரணம். உன் அகமுடையானையும் அவா குடும்பத்தையும் வம்சாவழியையும் நிந்திப்பது மஹாபாவம். யாரையும் நிந்திக்காமல் சிவனேன்னு இருக்கிறவாளுக்குத்தான் அம்பாள் அனுக்ரஹம் பண்ணுவா. சரி, சித்த நேரம் வெளியில உக்காரு’ என்றவர் மடத்து ஊழியரை அழைத்து ‘இவாளோட அகமுடையானை அழைச்சுண்டு வா’ என்றார்.அந்தப் பெண்மணி வெளியே வந்து உட்கார்ந்தார். முகத்தில் குழப்பம் தென்பட்ட்து. பெண்மணியின் கணவர் பெரியவாளைக் கண்டதும் சாஷ்ட்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார். கை கூப்பி நின்றார். ‘அம்பாள் பாத்துப்பா, கவலைப்படாதே’ என்று சொல்லி அவரை உட்காரச் சொன்னவர் பத்து நிமிடம் மௌனம் காத்தார். பிறகு மடத்து ஊழியரை அழைத்து ‘இவரோட அகமுடையாளை அழைச்சுண்டு வா’ என்றார். அந்தப் பெண்மணி உள்ளே வந்ததும் தம்பதியினர் இருவரும் மீண்டும் நமஸ்கரித்தனர். ‘சாமி படங்களை வரிசைப்படுத்தறதும் பூஜை புனஸ்காரங்களும் விளக்கேத்தறதும் கோலம் போடறதும் மனசு திருப்திக்காகவும் மங்களத்துக்காகவும் பண்ற நித்யகர்மானுஷ்டானங்கள். ஆசாரம், அனுஷ்டானம், பவித்ரம்கிறதெல்லாம் மனசு சம்பந்தப்பட்டது. அகத்துல நிந்தனை இருந்தால் அம்பாள் இருக்கமாட்டா. என் படத்தையும் ஒசரக்க ஹால்ல மாட்டியிருக்கேளே, எதுக்கு?’ என்றவர் அந்தப் பெண்மணியின் கணவரை ஒரு பார்வை பார்த்தார். அதில் பொதிந்திருந்த ஒளியும் கருணையும் அவரை என்னவோ செய்தது. கண்களில் கண்ணீர் ததும்பியது. ‘பிள்ளையாண்டானை ஒரு மண்டலம் கழிச்சு அழைச்சுண்டு வாங்கோ, சந்தோஷமா வருவான்’ என்றார் மஹாபெரியவா. என்னே பேரருள்! அன்றிலிருந்து அந்தத் தம்பதியினரின் மகனுக்குப் படிப்படியாக சொஸ்தமாகி சரியாக ஒரு மண்டலத்திற்குள் பூரணமாகத் தன்னிலை அடைந்திருந்தான்.உடனே ஒரு நல்ல நாள் பார்த்து மஹாபெரியவாளை தரிசிக்க அவனை அழைத்து வந்தார்கள், அவன் பெற்றோர். அந்தப் பையன் பெரியவாளைக் கண்டதும் பார்வையிலும் புன்னகையிலும் நன்றியுணர்வும் பயபக்தியும் இழைந்தோட அந்த மகானை சாஷ்டோபாங்கமாக நமஸ்கரித்தான். அவன் பெற்றோரும் நமஸ்கரித்தனர். கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தார் மஹாபெரியவா.
மனப்பூர்வமாக வந்தனை செய்யவும் புனிதமாகச் சிந்தனை செய்யவும் கொடுப்பினை உடையோர் ஏனையோரை நிந்தனை செய்யார் எக்காலும்.

 மஹாபெரியவா திருவடி சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s