வரகூர் வெங்கடேசப் பெருமாள் கோவில்

.

திருவையாறுக்கு அருகில் கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் திருப்பூந்துருத்தி எனும் திருத்தலம் உள்ளது. இங்கிருந்து 7 கி.மீ. தொலைவு பயணித்தால், வரகூர் எனும் கிராமத்தையும் வெங்கடேசப் பெருமாள் கோயிலையும் அடையலாம்.

ஒருகாலத்தில், பூபதிராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் வரகூர் என்றானது. அதாவது நாராயண தீர்த்தர் எனும் அடியவர், பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று தரிசித்து வந்தார். அப்போது இந்த ஊருக்கு வரும் போது அவருக்கு வழி தெரியவில்லை. 

அந்த சமயத்தில், பெருமாள், வெண்பன் றியாக வந்து வழிகாட்டியதுடன் தன்னுடைய திருக்கோலத்தையும் காட்டியருளினார். வராகம் என்றால் பன்றி. இதையடுத்து இந்த ஊர், வராகூர் என்று அழைக்கப்பட்டு, பின்னர் வரகூர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் நாராயண தீர்த்தர். இசையில் பாண்டித்யம் பெற்றிருந்தார். அதேபோல், நாட்டியத்தையும் அறிந்தவராக இருந்தார். ஸ்ரீமத் பாகவத்தை எல்லோருக்கும் போதித்து வந்தார்.

இல்லறத்தை விட்டார். துறவறம் மேற்கொண்டார். ஒருமுறை நாராயண தீர்த்தருக்கு தீராத வயிற்றுவலி வந்தது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் சென்றார். அங்கே, திருப்பதி தலத்தில், ‘திருவையாறுக்கு அருகில் பூபதிராஜபுரத்துக்குச் செல்வாயாக. உன் வயிற்று வலி தீரும்’ என அசரீரி கேட்டது.

இதன் பின்னர், நடுக்காவிரி எனும் பகுதியை அடைந்தார். இனி எந்தப் பக்கம் செல்வது, எப்படிச் செல்வது என்று தெரியவில்லை அவருக்கு. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என அங்கே மரத்தடியில் இளைப்பாறினார்.

சிறிது நேர இளைப்பாறலுக்குப் பின்னர், ஒரு அசரீரி கேட்டது. ‘விடியும்போது வெண்பன்றி ஒன்று உனக்கு முன்னே வரும். வழிகாட்டும்’ என கேட்டது. அதன்படி மறுநாள். விடிந்தது. வெண்பன்றி வந்தது. அந்தப் பன்றி செல்லும் வழியில், பன்றியைப் பின் தொடர்ந்து பயணித்தார் நாராயண தீர்த்தர்.

ஒவ்வொரு கிராமமாகக் கடந்து வந்து, ஓரிடத்தில் பெருமாள் கோயிலுக்குள் சென்றது. அவரும் சென்றார். அங்கே அந்த வெண்பன்றி, சந்நிதிக்குள் சென்றது. மறைந்தது. அங்கே பெருமாள் தன் திருக்கோலத்தைக் காட்டியருளினார். நாராயண தீர்த்தரின் வயிற்று வலி காணாமல் போனது.சிலிர்த்துப் போன நாராயண தீர்த்தர், அங்கேயே, அந்தத் தலத்திலேயே தங்கினார். கிருஷ்ண பகவானின் லீலைகளை விவரிக்கும் வகையிலான ‘ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி’ எனும் இசையும் நாட்டியமும் கலந்த நாடகத்தை அரங்கேற்றினார்.அதுமட்டுமா? இந்தத் தலத்தில் உறியடி உத்ஸவம் நடைபெறச் செய்தார்.

வரகூர் எனும் அற்புதமான திருத்தலத்தில், கிருஷ்ண ஜயந்தியின் போது, இன்றைக்கும் கோலாகலமாக நடைபெறுகிறது உறியடி உத்ஸவம். அப்போது பத்துநாள் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு விதமான கோலத்தில் காட்சி தருவார். உறியடி உத்ஸவத் திருநாளன்று, வெண்ணெய்த்தாழிக் கோலத்தில் பவனி வருவார். அருகில் உள்ள கடுங்கலாற்றங்கரையில் எழுந்தருள்வார். மூலவரின் திருநாமம் ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள்.அப்படி உறியடிக் கண்ணனாக பெருமாள் வீதியுலா வரும் வேளையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், அங்கப்பிரதட்சணம் செய்துகொண்டே கோயிலை அடைவார்கள். 

சுற்றுவட்டார கிராம மக்களும் தஞ்சை, திருவையாறு, கண்டியூர் முதலான ஊர்களைச் சேர்ந்த மக்களும் வந்து விழாவில் கலந்துகொண்டு தரிசித்துச் செல்வார்கள்.

வரகூரில் குடிகொண்டிருக்கும் பெருமாளின் திருநாமம் – ஸ்ரீவெங்கடேசப் பெருமாள். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்தவர். வரகூர் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டவர்கள் ஏராளம். உலகில் எங்கிருந்தெல்லாமோ வரகூர் பெருமாளை வந்து ஸேவித்தவண்ணம் உள்ளனர்.தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள், எவ்வளவு மருந்து சாப்பிட்டும் குணமாகவில்லையே என்று வருந்துவோர், வரகூர் பெருமாளை வந்து தரிசித்துச் சென்றால், விரைவில் குணமாகிவிடுவார்கள். கல்யாணக் கவலையால் கண்ணீர் விடுபவர்களுக்கு விரைவிலேயே திருமண பாக்கியத்தைத் தந்தருள்வார் வரகூர் பெருமாள்.இங்கே, பெருமாள் சந்நிதியில், வெள்ளிக்காப்பு வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

திருச்சி கல்லணையில் வழியாகவும் வரகூர் திருத்தலத்தை அடையலாம்.

.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s